ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

රාවය සංවත්සරය: අර්බුදග‍්‍රස්ත ආන්ඩුව රැකීමේ ක්ෂමාලාපී වේදිකාවක්

ராவய ஆண்டு விழா: நெருக்கடிமிக்க அரசாங்கத்தை காக்கும் வக்காலத்து அரங்கு

By Saman Gunadasa 
25 November 2016

ராவய வாரந்த பத்திரிகையின் முப்பதாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் முகமாக நவம்பர் 15 அன்று கொழும்பில் நடத்தப்பட்ட கூட்டம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்காவின் அரசாங்கத்துக்கு எதிராக வளர்ச்சி கண்டுவரும் வெகுஜன கோபத்தை கரைத்துவிடுவதை இலக்காகக் கொண்டு வக்காலத்து வாங்கும் அரங்காகவும், அப்பத்திரிகை பிரதிநிதித்துவம் செய்யும் மத்தியதர வர்க்க சமூகத் தட்டின் தேவையை பிரதிபலிப்பதாகவும் விளங்கியது.

மிகவும் குறுகிய காலத்தில் மக்களது வெறுப்புக்கு உள்ளாகிய அரசாங்கத்தை பாதுகாக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) ஐக்கிய தேசியக் கட்சி (ஐ.தே.க.) தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) போன்ற கட்சிகளின் தலைவர்களை ஒரு அரங்கத்தில் அமர வைத்த இந்த கூட்டத்தில், நவ சம சமாஜக் கட்சி தலைவர் உட்பட போலி இடது தலைமைகளும் மத்தியதர வர்க்க சிவில் அமைப்பு பிரதிநிதிகளும் பங்குபற்றினர்.

அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்க மேற்கொள்ளும் முயற்சி பற்றி பேசிய சிறிசேனவும் விக்கிரமசிங்கவும், பிரமாண்டமான பணத்தை செலவிட்டு இந்த அரசியல் திட்டம் முன்னெடுக்கப்படுவதாக கூறிக்கொண்டனர். ஊடகங்களில் பிரபலமான குழு ஒன்று, அரசாங்கத்தை ஸ்திரமற்றதாக்கும் இத்தகைய திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டிய விக்கிரமசிங்க, அச்சு ஊடகங்கள் மீதும் அதேபோல் சமூக வலைத் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்து, “மக்களை திசைதிருப்பும் போலிப் பிரச்சாரத்தில்’ இந்த ஊடகங்கள் ஈடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். “ஊடகங்கள் விநியோகத்தை அதிகரிக்கும் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதற்காக எதை வேண்டுமென்றாலும் போடுகின்றனர்,” என அவர் கூறினார். ஜனாதிபதியின் உரையை திரிபுபடுத்தியதாக தனியார் ஊடகமான தெரன அலைவரிசைக்கு எதிராக அரசாங்கம் விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

ஊடகங்கள் தமது சமூக-அரசியல் தேவைக்காகவும் இலாபம் ஈட்டுவதற்காகவும் செயற்படுவது சாதாரன விடயம் என்றாலும், ஒருதொகை அச்சு, இலத்திரனியல் மற்றும் இணையவழி ஊடகங்களை தமது தேவைகளுக்காக நடாத்திவருவதன் பின்னணியில், அரசாங்கம் இவ்வாறு ஊடகங்களுக்கு எதிராக பாய்வதன் நோக்கம், அரசாங்கத்துக்கு எதிராக மக்களின் வெறுப்பு அதிகரித்து வரும் நிலையில், தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் வளர்ச்சி காணும் போராளிக் குணத்தை அடக்கி ஒடுக்குவதற்கு அவசியமான பின்னணியை தேடிக்கொள்வதே ஆகும்.

சிங்கள, முஸ்லீம் மற்றும் தமிழ் மக்களிடையே பிரிவினையை உருவாக்கி, நாட்டில் அராஜக நிலையை உருவாக்கிவிடுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் தமது உரைகளில் குறிப்பிட்டனர். “இன்று நாட்டில் சிங்கள முஸ்லீம் மக்களை பிளவுபடுத்தி வைக்கும் தேவையுள்ளது. அபிவிருத்தியை நோக்கிய பாதையை தடுத்துவிட மிகப்பெருமளவில் பணம் செலவழித்து அமைப்பு ரீதியில் திரளவும் தெளிவான ஒரு அரசியல் சதி காணப்படுகிறது,” என சிறிசேன குறிப்பிட்டார்.

அரசாங்கமே இத்தகைய ஒரு பின்விளைவை உருவாக்கி விடுவதில் பிரதானமாக ஈடுபட்டுள்ளது. வடக்கு, கிழக்கு மக்களுக்கு எதிராக இராணுவ மற்றும் பொலிஸ் அடக்கு முறையை தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் அரசாங்கம், தமிழ் அரசியல் கைதிகளை தான்தோன்றித்தனமாக சிறைப்படுத்தி வைத்துள்ளதுடன், சிங்கள இனவாதத்தின் கைப்பொம்மையாகவும் செயற்படுகின்றது. அரசாங்கத்தின் இச்செயல் திட்டம், ஏனைய சிங்கள இனவாத குழுக்களுக்கு மட்டுமன்றி தமிழ் பிரிவினைவாதத்துக்கும் ஊக்கமளிப்பதாகும்.

முஸ்லீம் மக்களிடையே “பயங்கரவாத நாட்டம்” பற்றி விரல் நீட்டியவாறு அன்மையில் பௌத்த சாசன மற்றும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இலங்கையில் முஸ்லீம் பாடசாலைகளில் கற்பிப்பதற்காக, வெளிநாட்டு தீவிரவாத முஸ்லீம் தலைவர்கள் உல்லாசப் பயண விசாக்களில் வந்துள்ளதாகவும் இலங்கையில் 32 முஸ்லீம்கள் தற்போது சிரியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் இனைந்து போராட்டம் நடத்துவதாகவும் குறிப்பிட்டார். இதுபற்றி எந்தவித சாட்சியங்களையோ பின்னணியையோ அமைச்சர் முன்வைக்கவில்லை.

இங்ஙனம் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் தொழிலாளர்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் பிளவுபடுத்தி அரசாங்கத்துக்கு விரோதமாக வளர்ச்சியடையும் எதிர்ப்பை அடக்கி வைப்பதே அரசாங்கத்தின் குறிக்கோளாகும். அரசாங்கம் எந்தவொரு அரசியல் நடவடிக்கையையும் பயங்கரவாதத்தின் கீழ் தண்டனை வழங்கவல்ல குற்றமென சித்தரிக்கக் கூடிய புதிய பயங்கரவாத தடை சட்டமொன்றினை உருவாக்குவதற்கு அமைச்சரவையின் அனுமதியையும் தற்போது பெற்றுள்ளது. இராணுவம் மற்றும் பொலிசுக்காக பிரமாண்டமான பணத்தை வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கியுள்ளதுடன், யுத்த காலத்தில் காணப்பட்ட நிலையிலும் பார்க்க வலிமையுடன் பொதுமக்களுக்கு எதிராக பாயக்கூடிய அளவுக்கு இராணுவ பொலிஸ் பலத்தை மேம்படுத்தியுள்ளது. நாடுபூராவும் புதிய பொலிஸ் நிலையங்களை நிறுவியுள்ளதுடன், அடக்குமுறைக்கான பொலிஸ் அதிகாரிகளை பெருமளவில் பயிற்றுவித்தும் ஆயுத உபகரணங்களை இறக்குமதி செய்தும் வரும் அரசாங்கம், பயங்கரவாதத்தை தடுக்கும் பயங்கரவாதத்தை புலனாய்வு செய்யும் பொறுப்புள்ள விசேட பயங்கரவாத தடுப்பு பிரிவு ஒன்றிணையும் உருவாக்க தயாராகி வருகின்றது. அரசாங்கத்துக்கு எதிராக தீவிரமடைந்து வரும் தொழிலாள வர்க்கம் மற்றும் வறிய மக்கள் பிரிவினரை அடக்குவதற்கே இத்தயாரிப்புகள் இடம்பெறுவதை காணலாம்.

கொடிய வலதுசாரி அடக்குமுறை அரசாங்கத்தினூடாக தொழிலாள வர்க்கம் உள்ளடங்கலாக உழைக்கும் மக்களை அடக்கி வைக்கும் தேவையை எடுத்துக் காட்டிய விக்கிரமசிங்க, சட்டத்தை அமல்ப்படுத்த வேண்டுமென்றால் “புரட்சி ஒன்றை கொண்டு வரவேண்டும், இல்லையேல் டொனால் ட்ரம்ப் போன்ற ஒருவர் வேண்டும்” எனக் குறிப்பிட்டார். பாசிச போக்குள்ள கொடிய வலதுசாரி வேலைத்திட்டத்தை அமெரிக்காவில் முன்னெடுக்கத் தயாராகும் ட்ரம்ப் பற்றி, அமெரிக்க சார்பு ஐக்கிய தேசிய கட்சி தலைவரது இந்தக் கருத்து, அடக்குமுறையையும் ஜனநாயக விரோத அரசியலையும் நியாயப்படுத்துவதாகும்.

ராவய பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான விக்டர் ஐவன், தான் தோள் கொடுத்து கொண்டுவந்த “அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவந்த மக்களுக்கு மகிழ்ச்சிக்கு பதிலாக வெறுப்பே ஏற்பட்டுள்ளது,” என்றார்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தை புகழ்வதற்கு சற்றும் சளையாத ஐவன், “இதன் அர்த்தம் நல்லாட்சி அரசாங்கம் ஒன்றையும் செய்யாத அரசாங்கம் என்பதல்ல. பெறுமதியானவற்றை செய்திருந்தாலும் அது போதுமானதல்ல. இலங்கை எதிர்கொள்வது சிறிய நெருக்கடியை அல்ல, அது பாரிய நெருக்கடி ஆகும்,” என்று அறிவித்தார்.

“பலவீனமான நிலையில் விழுந்திருக்கும் அரசாங்கம், தனது முன்னாள் செயல்களை நேர்மையாகவும் விமர்சனப்பாங்குடனும் மீண்டும் திரும்பிப் பார்க்கும் இடத்திற்கு சென்று, பொது மக்களிடையே பெருமகிழ்ச்சியை ஏற்படுத்துவதற்க்கான பிரதிபலன்களை செய்வதில் வெற்றிகாணுமெனில் மட்டுமே, அது மீண்டும் பலமிக்க தன்மையை பெற்றுக்கொள்வது சாத்தியமாகும்,” என்று அவர் கூறினார்.

முதலாளித்துவத்துக்கு “பிரதிபலன்மிக்க” செயலை செய்வதற்குள்ள கஷ்டத்தையிட்டு அங்கலாய்க்கும் ஐவன், சோசலிசத்துக்கு கடும் எதிரியும் ஏகாதிபத்திய மற்றும் உலக முதலாளித்துவத்தின் முகவர் ஆவர். சிங்கள இனவாதத்துடன் ஏகாதிபத்திய-விரோத வாய்ச்சவடால்கள் கலந்த தீவிரவாதத்தை அரவணைத்து கொண்டிருந்த மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி.) தலைவர்களில் ஒருவராக 1970களின் இறுதி பாதிவரை இருந்த அவர், அரசியல் ஸ்தாபகத்துடனும் ஏகாதிபத்திய தூதரக அலுவலகங்களுடனும் கிட்டிய உறவுகொண்டு முதலாளித்துவ அரசாங்கத்தின் கேடுகேட்ட முண்டுகோலாக மாற்றமெடுத்தவராவார்.

முதலில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அவருக்கு வக்காலத்து வாங்கிய பின்னர், மஹிந்த இராஜபக்ஷ ஜனாதிபதியான காலத்தில் அவருக்கும் வக்காலத்து வங்கிய அவரது அவரது பிரதான கைங்காரியம், முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு எதிரான பொதுமக்களது வெறுப்பு எழும் சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்துக்கான சோசலிச பாதையை அடைப்பதற்காக, தாமே முன்னர் தூக்கி பிடித்த பழைய முதலாளித்துவ தலைமைகளுக்கு எதிராக, ஒரு புதிய முதலாளித்துவ தலைமைத்துவத்தை தூக்கிப் பிடிப்பதே ஆகும்.

இராஜபக்ஷ, ஒருபுறம் வெகுஜன எதிர்ப்புக்கும் மறுபுறம் சீனாவுடன் வளர்த்துக்கொண்ட நெருங்கி உறவு காரணமாக அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் நெருக்குவராத்துக்கும் உள்ளாகி, பெரும் நெருக்கடியை எதிர் கொண்ட சமயத்தில், சிறிசேனவை முன்நிறுத்தி அமெரிக்க பக்கபலத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஆட்சி மாற்றத்தின் போது, ஐவனும் அதைக் கொண்டாடி தனது பேனாவையும், வாயையும் அதற்காக அர்ப்பணித்துக்கொண்டார். 2012ல் நிகழ்ந்த ராவய 25ம் ஆண்டு நிறைவு விழாவின் போது, அப்போதைய ஜனாதிபதி இராஜபக்ஷவையும் எதிர்க்கட்சி தலைவர் விக்கிரமசிங்கவையும் அழைத்து, “மக்கள் புரட்சி” ஏற்படுவதை தடுக்க இரண்டு பிரதான கட்சிகளும் ஒருங்கிணைவது அவசியம் என ஐவயன் சுட்டிக் காட்டினார்.

அந்த 25ம் ஆண்டு விழாவின் முக்கிய நோக்கம், “சமூகத்துக்கும் அரசாங்கத்துக்கும் இடையே ஏற்பட்டிருந்த பிளவை கவனத்தில் எடுத்து நாட்டுக்கு தேவைப்படும் புதிய மறுசீரமைப்புக்கான கலந்துரையாடலை செய்வதாகும்,” எனக் கூறிக் கொண்ட ஐவன், “இன்று ஐந்தாண்டுக்குப் பின், எமக்கு அன்று பூரணப்படுத்த முடியாதிருந்த அதே தலைப்பினை பற்றியே பேச வேண்டியுள்ளது,” எனக் கூறி, முதலாளித்துவ அரசின் சீரழிவைப் பற்றி அங்கலாய்த்துக் கொண்டார்.

ஐவனது உரையின் பெரும்பங்கு, முதலாளித்துவ நீதித்துறையின் முறைகெட்ட உறவு பற்றி விபரித்து, அதனை சுத்திகரிக்கும் தேவையை விபரிப்பதற்கே ஒதுக்கப்பட்டிருந்தது. “கடந்த கலத்தில் சிறந்த நீதியமைப்பு எமக்கு இருந்தது” எனக் கூறிய ஐவன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் முன்னிலையில் இந்த சம்பவங்களை விபரிப்பதன் நோக்கம், “அவர்களது கவனத்தை” நீதித் துறையை நோக்கித் திருப்ப வேண்டியதன் அவசியத்தை விளக்குவதற்கே என்றார்.

துர்நாற்றம் வீசும் முதலாளித்துவ அமைப்பை சுத்தப்படுத்த சேவையாற்றும் இந்த அடிவருடி, தனது உரையின் இறுதியில், முதலாளித்துவ லிபரல் வாதக் கும்பலின் அழுகிப்போன கருத்தான, ”பிரைஜைகளின் மீது பொறுப்பை சுமத்தல்” என்பதை தூக்கிப் பிடித்து, இந்த அரசாங்கமோ அல்லது வேறு அரசாங்கமேனும் நாட்டை கட்டியெழுப்பும் வரை காத்திருக்காது, அந்த பொறுப்பை சிறந்த பிரஜைகளின் கையில் கொடுத்து விடுவதே சிறந்த வழி, என கூறிமுடித்தார்.

ராவய செய்த வகிபாகத்தை பற்றி எமக்கு மதிப்புண்டு” எனக் கூறிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திசநாயக்க, தானும் பங்கேற்று ஆட்சியேற்றிய சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், பொதுமக்களின் வெறுப்புக்கு உள்ளானமைக்கு, கடந்த அரசாங்கத்தின் “ஊழல், மோசடி மற்றும் வீணடிப்புகளை” இல்லாதொழிக்க தவறியமையே காரணம் என்ற பக்கத்தில் குவிமையப்படுத்தினார். “நாம் நினைத்ததிலும் பார்க்க ஊழல் வலையமைப்பு பரந்துபட்டுள்ளது… இந்த ஊழல் வலயத்தை சிறிய மாற்றங்களால் தோற்கடிக்க முடியாது… இந்த வலையமைப்பை தோற்கடிக்க பரந்த மக்கள் இயக்கம் தேவை” என கூறியவாறு அரசாங்கத்தை துண்டிலில் இருந்து விடுவிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்தின் நிர்வாக சபையில் குந்தியிருந்த ஜே.வி.பி. தலைவர், ”நாம் பயணித்த பொருளாதார பாதை தோல்வியடைந்துவிட்டது. இனிமேலும் நாம் செல்ல வேண்டிய பாதை இதுவல்ல,” என கூறினாலும், எந்த பாதையில் செல்ல வேண்டும் என்பதை கூறவில்லை.

ஜனாதிபதி சிறிசேன, பிரதமர் விக்கிரமசிங்க தொடக்கம், அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு இன்றைய அரசாங்கத்தை ஆட்சியேற்ற பாடுபட்ட ஏனைய முதலாளித்துவ கட்சிகள், போலி இடது தலைமைகள் மற்றும் மத்தியதர வர்க்க அமைப்புக்களின் பிரதிநிதிகள் வரை சகலரும், கூட்டத்தில் ஆற்றிய உரைகள் அவர்கள் எதிர் கொண்டுள்ள நெருக்கடியின் ஆழத்தையும் அங்கலாப்பையுமே வெளிக்காட்டியுள்ளது.