ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

2017 French elections: Why is the NPA criticizing the Left Front’s populism?

2017 பிரெஞ்சு ஜனாதிபதி தேர்தல்: இடது முன்னணியின் ஜனரஞ்சகவாதத்தை NPA ஏன் விமர்சனம் செய்கிறது?

By Kumaran Ira
16 February 2017

அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தேர்வினாலும் பிரான்சில் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி மதிப்பிழந்திருப்பதாலும் ஒரு சர்வதேச நெருக்கடி தூண்டப்பட்டிருப்பதன் மத்தியில், பல தசாப்தங்களாக PS இன் சுற்றுவட்டத்தில் இயங்கி வந்திருக்கும் குட்டி-முதலாளித்துவக் கட்சிகளிடையே கடுமையான கொள்கை பிளவுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. Rebellious France movement இன் இடதுசாரி வேட்பாளராக போட்டியிடும் இடது முன்னணியின் தலைவர் ஜோன் லூக் மெலோன்சோனின் ஜனரஞ்சகவாதத்தை புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி (NPA) விமர்சிக்கின்றது.

“மெலோன்சோனின் பிரச்சாரம்: பிரெஞ்சு இடதுகளை ஜனரஞ்சகவாதத்தை சுற்றி நோக்குநிலை கொள்ள செய்வதற்கு செய்யும் முயற்சியா?" என்ற பிப்ரவரி 11 அன்றான கட்டுரையில் NPA மெலோன்சோனின் 2017 பிரச்சாரத்தை தாக்கியிருக்கிறது. "‘இடது மக்கள்தொகை’யின் நோக்குநிலைபிறழலுக்கான பதிலிறுப்பாய் அது ஜனரஞ்சகவாதத்தை நோக்கி திரும்புவதற்கு மெலோன்சோன் ஆலோசனை கூறுகின்ற மட்டத்திற்கு, அது அடிப்படைகளின் ஆழமான உருமாற்றங்களுடன் கைகோர்த்து செல்கிறது” என்று NPA எழுதுகிறது.

NPA மேலும் கூறுகிறது, மெலோன்சோனின் 2017 பிரச்சாரம் “வெறுமனே தொழிலாளர் இயக்கத்தின் நோக்குநிலைகளது ஒரு எளிமையான நவீனப்படுத்தலை மட்டும் கொண்டதல்ல, மாறாக அது உண்மையில் பிரெஞ்சு இடதுகளின் வரலாற்றுடனான ஒரு முக்கிய முறிவுக்கான திட்டத்தைக் கொண்டதாகத் தெரிகிறது.” மெலோன்சோன் “தொழிலாளர் இயக்கத்தின் பாரம்பரியங்களில் இருந்து தன்னை விலக்கி நிறுத்திக் கொள்ள” முயற்சி செய்வதாக NPA எழுதுகிறது. “பிரெஞ்சு இடதுகளின் பழைய அடையாளங்களது இந்த நிராகரிப்பானது அடிப்படையாக தொழிலாளர் இயக்கத்தின் பாரம்பரியங்களுடனான ஒரு முறிவையே மறைமுகமாய் குறிக்கிறது.” “சுரண்டல்”, “இலாபம்”, “முதலாளித்துவம்”, மற்றும் “சோசலிசம்” ஆகியவை உள்ளிட்ட வார்த்தைகள் மெலோன்சோனின் 2017 பிரச்சாரத்தில் இடம்பெறவில்லை என்பதை அது குறிப்பிட்டுக் காட்டுகிறது.

மெலோன்சோனின் இடது கூட்டணியில் இருக்கும் கட்சிகளுடன் NPA பல தசாப்தங்கள் நெருக்கமாக வேலைசெய்து வந்திருந்த நிலையில், மெலோன்சோன் மீதான NPA இன் விமர்சனங்கள் அரசியல் மோசடியானவை ஆகும். மெலோன்சோன் முதலாளித்துவ சொத்துடைமையின் ஒரு பாதுகாவலர் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. 2014 இல் முதல் வெளியீடாக இருந்த, மக்களின் சகாப்தம் என்ற அவரது புத்தகத்தில், அவர் சோசலிசம், தொழிலாள வர்க்கம் மற்றும் இடதுகளின் முடிவை அறிவித்திருந்ததோடு, PSக்கு எதிரான ஒரு இடது-சாரி இயக்கத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சிப்பதென்பது PS இன் நெருக்கடிக்கான சரியான பதிலிறுப்பாக இருக்காது என்று வலியுறுத்தி ஒரு ஜனரஞ்சகவாத தேசியவாதத்தையும் முன்னெடுத்திருந்தார்.

ஆயினும் மெலோன்சோனுக்கு சளைக்காத மட்டத்திற்கு NPA யும் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தையும் சோசலிசத்துக்கான ஒரு புரட்சிகர சர்வதேசிய போராட்டத்தையும் நிராகரிக்கிறது. உண்மையில் சொல்லப் போனால், அதன் செய்தித் தொடர்பாளரும் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளருமான ஒலிவியே பெசன்ஸெனோ -அவருடைய அராஜகவாத-சுதந்திரவாத அனுதாபங்கள் நன்கறியப்பட்டவை- 1998 ஒபெர்வில்லியே (Aubervilliers) காங்கிரசில் கட்சித் தலைமையின் கவனத்திற்கு வந்ததற்குக் காரணமே அவர் சோசலிசத்துக்கான போராட்டத்தை கடந்து செல்வதற்கு அழைப்பு விடுத்ததால் என்றே கூறப்படுகிறது.

NPA வின் தலைமையும் சரி மெலோன்சோனும் சரி -இரு தரப்புமே 1968 மே-ஜூன் பொது வேலைநிறுத்தத்திற்குப் பின்னர் அபிவிருத்தி கண்ட நடுத்தர வர்க்க இயக்கத்தில் இருந்து எழுந்தவையே தவிர தொழிலாளர்களையோ அல்லது சோசலிசத்தையோ குறிக்கவில்லை. 1968க்குப் பின்னர் இந்த இருதரப்புமே புதிதாக உருவாக்கப்பட்டிருந்த PS ஐ , அதாவது நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை ஆதரிக்கின்ற அத்துடன் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நச்சுத்தனமான சிக்கன பொருளாதார நடவடிக்கைகளைப் பின்பற்றுகின்ற ஒரு பிற்போக்குத்தனமான இக்கட்சியை நோக்கியே நோக்குநிலை அமைத்தன.

NPA இன்று மெலோன்சோனை விமர்சிக்கிறது என்றால், அதன் காரணம் மெலோன்சோனுடன் அது குறிப்பாக வெளியுறவுக் கொள்கை விவகாரத்தில் கணிசமான தந்திரோபாய பேதங்களைக் கொண்டிருக்கிற காரணத்தால் தான். அவரது பகிரங்கமான மார்க்சிச-விரோத நிலைப்பாடுகள், NPA உள்ளிட PS இன் ஒட்டுமொத்த சுற்றுவட்டத்தையும் அம்பலப்படுத்தி இடதுதிசையிலிருந்து மற்றும் தொழிலாள வர்க்கத்தின் நிலைப்பாட்டில் இருந்தான தாக்குதல்களுக்காய் அதை திறந்து விடுகிறது என்பதே அதன் அச்சமாகும்.

ஆயினும் செவ்வியல் மார்க்சிசத்தின் மையமான, புரட்சிகர சக்தியான சர்வதேச தொழிலாள வர்க்கத்தை தாங்கள் நிராகரிப்பதில், NPA வெளிப்படையாகவே இருக்கிறது.

1991 இல் சோவியத் ஒன்றியம் ஸ்ராலினிசத்தால் கலைக்கப்பட்டதற்குப் பிந்தைய காலத்தில் பின்நவீனத்துவ மற்றும் அராஜகவாத மெய்யியல் பரிணாமவளர்ச்சி கண்டதை திறனாய்வு செய்கின்ற 2013 இல் வந்த இடது அரைக்கோளம் (Left Hemisphere) என்ற ஒரு புத்தகத்தில் சோர்போன் பல்கலைக்கழக பேராசிரியரும் NPA இன் அங்கத்தவருமான ராஸ்மிக் குயூச்சியான் (Razmig Keucheyan) எழுதினார்: “இன்றைய உலகம், அதன் அத்தனை இரைச்சல்களுடனும், செவ்வியல் மார்க்சிசம் எழுந்த உலகத்தை ஒத்திருக்கிறது. ஆயினும் மற்ற அம்சங்களில் அது மிக மாறுபட்டதாக இருக்கிறது, எல்லாவற்றுக்கும் மேல் அதன் காரணம் ஒரு தெளிவாக அடையாளம் காணப்பட்ட ‘விடுதலைக்கான கருப்பொருள்’ (subject of emancipation) இல்லாதிருப்பதாகும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலான மார்க்சிஸ்டுகள் சக்திவாய்ந்த தொழிலாளர் அமைப்புகளை மனதில் கொண்டு செயல்பட்டிருக்க முடிந்தது, அவர்கள் பலசமயங்களில் அவற்றுக்குத் தலைமை கொடுத்தனர், அவற்றின் நடவடிக்கைகள் அப்போது முதலாளித்துவத்தின் ஒரு இறுதி நெருக்கடியாக முன்வைக்கப்பட்ட ஒன்றை வெல்லவிருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் இப்போது அதுபோன்ற எதுவுமில்லை, அப்படியான ஒன்று அண்மை எதிர்காலத்தில் வருவதற்கான வாய்ப்பும் இல்லை.”

இத்தகைய தொழிலாளர் விரோதக் கருத்தாக்கங்கள் தான் 2009 இல் NPA இன் உருவாக்கத்தின் கீழ் அமைந்திருந்தன. அதன் முன்னோடிக் கட்சியான LCR (புரட்சிகர கம்யூனிஸ்ட் கழகம்) PS உடனான கூட்டணி மற்றும் ட்ரொட்ஸ்கிசத்துடன் அது கொண்டிருந்த எந்தவொரு அடையாளத் தொடர்பையும் கூட வெளிப்படையாக நிராகரிப்பது ஆகியவற்றின் அடிப்படையில் தன்னை கலைத்துக் கொண்டது.

2009 இல் NPA ஸ்தாபக காங்கிரசுக்கான LCR இன் மேடை கூறியது, “NPA ட்ரொட்ஸ்கிசத்துடன் ஒரு குறிப்பிட்ட உறவு கொண்டிருப்பதாய் கூறிக் கொள்ளவில்லை, மாறாக கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக, அமைப்புமுறையுடன் தொடர்ச்சியாய் மோதி வந்திருக்கக் கூடியவர்களின் தொடர்ச்சியாகவே கூறிக் கொள்கிறது. NPA ஒரு பன்மைவாத மற்றும் ஜனநாயகக் கட்சியாகும். சோசலிச இயக்கத்தின், உலகமயமாக்க-எதிர்ப்பு இடதுகளின், அரசியல் சூழல் இயக்கத்தின், PS மற்றும் PCF யில் இருந்தான தோழர்களின் பல்வேறு பாகங்களில் இருந்தும், அராஜகவாத இயக்கத்திடம் இருந்தும், புரட்சிகர இடதிடம் இருந்தும் பங்கேற்பு இருந்தது. உணர்ச்சியற்றதாக ஆகி விடாமல், தன்னை இன்னும் மேலதிகமாய் திறந்து விடுவதன் மூலமாக NPA வெற்றிகாண்பதற்கு அனைத்தும் இருக்கிறது.”

அச்சமயத்தில் உலக சோசலிச வலைத் தளம் விளக்கியதைப் போல, இந்த நிலைப்பாடானது PS மற்றும் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் சுற்றுவட்டத்திற்குள் NPA முழுமையாக ஒருங்கிணைவதற்கு வசதிதரும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது. அது எழுதியது: “LCR தன்னைக் கலைத்துக் கொள்வதன் மூலம், உண்மையில், தொழிலாள வர்க்கத்தின் முழுமையான அரசியல் சுயாதீனத்திற்கான வலியுறுத்தல், புரட்சிகர சர்வதேசியவாதம், அத்துடன், முதலாளித்துவ அரசு, ஸ்ராலினிச மற்றும் சமூக ஜனநாயக அதிகாரத்துவங்கள் மற்றும் முதலாளித்துவ தேசியவாதம் மற்றும் குட்டி-முதலாளித்துவ தீவிரவாதத்தின் அத்தனை வகையறாக்களுடனும் ஒத்துழைப்பதற்கு சமரசமற்ற எதிர்ப்பு காட்டுவது என்ற ட்ரொட்ஸ்கியின் அரசியல் பாரம்பரியத்திற்கே குறிவைக்கிறது.”

அப்போது தொடங்கியே NPA இன் ஏகாதிபத்திய ஆதரவு கொள்கைகளின் மூலமாக இந்த மதிப்பீடு மலைப்பூட்டும் வகையில் நிரூபணப்பட்டிருக்கிறது. NPA லிபியா மற்றும் சிரியாவிலான அமெரிக்க-நேட்டோ போர்களை ஜனநாயகத்திற்கான போர்களாய் பாராட்டியதோடு, சிஐஏ மற்றும் அல்கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமிய எதிர்ப்புப்போராளிகளை புரட்சிகரவாதிகளாய் ஊக்குவித்தது. மெலோன்சோன் போலவே, NPA பிரான்சில் முஸ்லீம்-விரோத வெறி ஊக்குவிக்கப்படுவதை ஆதரித்தது, அரசாங்கப் பள்ளிகளில் முக்காடு அணிவதற்கும் பொதுஇடங்களில் பர்தா அணிவதற்குமான பிற்போக்குத்தனமான தடைகளை ஆதரித்தது. மெலோன்சோன் போலவே, NPA யும் 2012 இல் ஹாலண்டுக்கு வாக்களிப்பதற்கு உற்சாகத்துடனும் நிபந்தனையின்றியும் அழைப்பு விடுத்திருந்தது.

சிரிசா (”தீவிர இடதுகளின் கூட்டணி”) 2015 ஜனவரியில் கிரீசில் அது அதிகாரத்திற்கு வந்த சமயத்தில் NPAவும் மெலோன்சோனும் அதனைப் பாராட்டியதோடு ஐரோப்பிய ஒன்றியத்தை எதிர்த்துப் போராடுகின்ற ஒரு இடது-சாரி அரசாங்கமாக அதனைச் சித்தரித்தனர். அதன்பின் அரையாண்டு கூட கடப்பதற்கு முன்னதாகவே இது ஒரு அரசியல் மோசடியாக அம்பலப்பட்டது: சிரிசா ஐரோப்பிய ஒன்றியத்திடம் சரணாகதியடைந்து, மிருகத்தனமான சிக்கன பொருளாதார நடவடிக்கைகளையும் சமூக செலவினத்தில் பரந்த வெட்டுகளையும் திணித்தது.

NPA யையும் மெலோன்சோனையும் பிரிப்பது பிற்போக்குத்தனமான, தொழிலாள வர்க்க-விரோதமான கொள்கைகள் குறித்த அவர்களின் மனோபாவம் அல்ல, ஏனென்றால் இருவருமே அதனை ஆதரிக்கின்றனர்; மாறாக தந்திரோபாய பேதங்களே, எல்லாவற்றுக்கும் மேல் வெளியுறவுக் கொள்கை விடயத்தில், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் நேட்டோவின் கொள்கைகளை எவ்வாறு முன்னெடுத்து நடத்துவது மற்றும் தொகுத்துக் காட்டுவது என்பது குறித்தவற்றிலான பேதங்களே பிரித்து நிற்கிறது.

உக்ரேனில், 2014 பிப்ரவரியில் கியேவில் நடந்த பாசிச தலைமையிலான ஆட்சிக்கவிழ்ப்பை ”ஜனநாயக”த்திற்கு ஆதரவான ஒரு எழுச்சியாக சித்தரித்து வழிமொழிந்து அமெரிக்கா-நேட்டோ செய்த தலையீட்டின் பக்கம் NPA யும் PS அரசாங்கமும் சாய்ந்தபோதே இவை மிகத் தெளிவுபட தெரிந்து விட்டன. NPAவின் ரஷ்ய சக-சிந்தனையாளர்களான ரஷ்ய சோசலிச இயக்கம் (RSM) இன்னும் மேலேபோய், மைதான் சதுக்கத்தில், ஸ்வோபோடா மற்றும் யூதப்படுகொலையில் பங்குபெற்ற நாஜி SS அலகுகளை வெளிப்படையாகப் பாராட்டும் Right Sector உள்ளிட்ட அதிவலது சக்திகளுடன் சேர்ந்து வேலைசெய்வதற்கும் கூட ஆலோசனை வைத்தது.

அந்த சமயத்தில் நாஜி-ஆதரவு Right Sector ஐ ஜனநாயக-ஆதரவு புரட்சியாளர்களாக பாராட்டி RSM அங்கத்தவரான இல்யா புட்றைற்ஸ்கிஸ் (Ilya Budraitskis) அளித்திருந்த களச் செய்திகளை NPA பிரசுரித்தது. புட்றைற்ஸ்கிஸ் எழுதினார், “Right Sector இடம் இருந்து ஒரு “தேசிய சர்வாதிகாரத்தை” ஆலோசனையளிக்கும் அதி-வலது முன்மொழிவாளர்கள் இல்லையென்றால், Hrushevskoho இல் எந்த தடுப்பரண்களோ அல்லது ஆக்கிரமிக்கப்பட்ட அமைச்சரவைகள் “புரட்சியின் தலைமையகங்களாக” மாற்றப்படுவதோ ஒருபோதும் நடந்திருக்காது.”

ஆயினும் உக்ரேனிலான நேட்டோவின் தலையீடு ரஷ்யாவுடனான பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் பாரம்பரியமான உறவுகளை சேதப்படுத்தக்கூடியதாகக் கண்ட நவ-பாசிச முன்னணியின் மரின் லு பென் போன்ற மற்ற பிரெஞ்சு முதலாளித்துவ அரசியல்வாதிகளை அடியொற்றி மெலோன்சோனும் அந்தத் தலையீட்டில் இருந்து தன்னைத் தள்ளி நிறுத்திக் கொண்டார். “நவ-நாஜிக்கள் அரசியல் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு ஆட்சிக்கவிழ்ப்பு மற்றும் சாகசவாத [உக்ரேன்] அரசாங்கத்திற்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை” எடுப்பதற்கு ரஷ்யாவுக்கு உரிமையிருந்ததாக மெலோன்சோன் கூறினார்.

அடுத்து வந்த மாதங்களில், பாரம்பரியமாக இடது முன்னணியின் ஆதரவாக இருந்து வந்திருக்கும் பொருளியலாளர் ஜாக் சப்பிர் போன்ற மெலோன்சோனின் சுற்றுவட்டத்தில் இருந்த சக்திகள், மெலோன்சோன், இடது முன்னணி மற்றும் FN இடையிலான கூட்டணிகளுக்கு அழைப்பு விடுக்கத் தொடங்கினர். இது இடது முன்னணியும், அதன் மிகப்பெரும் பாகக் கட்சியான ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியும் [PCF] இன்னும் அதிகமாய் வலது நோக்கி நகர்வதற்கு மேடையமைத்து கொடுத்தது. சென்ற ஆண்டில் PS இன் தொழிலாளர்-விரோத தொழிற் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வெடித்ததன் மத்தியில், ஸ்ராலினிச CGTயானது FN உடன் தொடர்புடைய போலிஸ் சங்கங்கள் நடத்திய ஆர்ப்பாட்டங்கள், மற்றும் Calais இல் அகதிகள் முகாம்களை சுற்றி ஏற்பாடு செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர்-விரோத பேரணிகள் ஆகியவற்றில் இணைந்து கொண்டது.

ரஷ்யா தொடர்பாக என்ன கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்பதில் நேட்டோவுக்கும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் இடையில் பிளவுகள் வெடித்திருக்கும் நிலையிலும், பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தலில் அதிகாரத்தின் வாயிற்கதவு வரை வந்துசேர்ந்து FN காத்திருக்கின்ற நிலையிலும், NPA மெலோன்சோனை விமர்சித்துக் கொண்டிருப்பது தற்செயலான விடயம் அல்ல.

உலகளாவிய போர் கொள்கை தொடர்பாகவும், எந்த கட்சி பிரான்சை ஆள வேண்டும் என்பது தொடர்பாகவும் ஆளும் வர்க்கத்திற்குள்ளும் NPA யும் ஒரு ஒருங்கிணைந்த பாகமாக இருக்கின்ற அரசியல் ஸ்தாபகத்திற்குள்ளும் கொதித்துக் கொண்டிருக்கின்ற ஒரு பரந்த விவாதத்தையே அதன் விமர்சனங்கள் பிரதிபலிக்கின்றன. ஆயினும், மார்க்சிசத்திற்கும் தொழிலாள வர்க்கத்திற்குமான அதன் முழுமுதல் குரோதத்தின் விடயத்தில், NPA மெலோன்சோனிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கென்று ஏதுமில்லை.

மேலதிக வாசிப்புக்கு:

பிரான்சின் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி உக்ரைனின் பாசிசத் தலைமையிலான ஆட்சிமாற்றத்தை ஆதரிக்கிறது

By Alex Lantier
2 April 2014