ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Macron advocates austerity, law-and-order and militarism in French elections

பிரெஞ்சு தேர்தலில் சிக்கன நடவடிக்கை, சட்டம்-ஒழுங்கு மற்றும் இராணுவவாதத்திற்கு மக்ரோன் ஆலோசனையளிக்கிறார்

By Kumaran Ira
8 February 2017

En Marche இன் பிரெஞ்சு ஜனாதிபதி வேட்பாளரான இமானுவேல் மக்ரோன் பிப்ரவரி இறுதியில் தான் வெளியிட இருக்கும் தனது வேலைத்திட்டத்தின் முக்கியமான அம்சங்களை Lyon இல் இந்த சனிக்கிழமையன்று கோடுபோட்டுக் காட்டினார். ஆழமான சிக்கன நடவடிக்கைகள், சமூகப் பாதுகாப்பு அமைப்புமுறையை அகற்றுவது, அரக்கத்தனமான போலிஸ் அரசு நடவடிக்கைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை மேலதிகமாய் இராணுவமயமாக்குவதற்கான நடவடிக்கைகளில் ஜேர்மனியுடன் நெருக்கமான ஒத்துழைப்பு ஆகியவற்றுக்கு அவர் ஆலோசனையளிக்கிறார்.

தன்னை “இடதுமில்லை வலதுமில்லை” என்பதாக சித்தரிக்கும் அவர், இப்போதைய அரசியல், முற்போக்குவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்குமான ஒரு யுத்தம் மட்டுமே என்று கூறுகிறார், அவர் வினவினார்: “வலதுகளோ இடதுகளோ இனியும் இருக்கவில்லை என்று நான் கூறவில்லை. ஆனால், வரலாற்றுத் தருணங்களில் இத்தகைய பிரிவினைகளைக் கடந்து நாம் போக வேண்டாமா?”

வலது-சாரி வாக்காளர்கள் மற்றும் சோசலிஸ்ட் கட்சி வாக்காளர்கள் இருசாராரையுமே தனக்கு ஆதரவளிக்கச் செய்ய நம்பிக்கை ஏற்படுத்தும் முயற்சியாக, பிரான்சின் அத்தனை அரசியல் வண்ணங்களையும் கொண்ட முன்னாள் ஜனாதிபதிகளையும் அவர் பாராட்டினார்: “[பிரெஞ்சு ஜனாதிபதி] பிரான்சுவோ மித்திரோன் அவர் இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன்பாக ஆற்றிய உரையால் நெகிழ்ந்து போவதற்கு, ஒருவர் இடது-சாரியாக இருந்தாக வேண்டுமா என்ன? Vel d’Hiv இல் ஜாக் சிராக் ஆற்றிய உரையால் பெருமிதம் கொள்வதற்கு ஒருவர் வலது-சாரியாக இருந்தாக வேண்டுமா என்ன?... இல்லை! ஒருவர் பிரெஞ்சுக்காரராய் இருந்தால் போதும்!” வலது-சாரி குடியரசுக் கட்சியின் [LR] ஜனாதிபதி வேட்பாளரான பிரான்சுவா ஃபிய்யோனின் ஆசானாகிய பிலிப் செகானையும் அவர் மேற்கோளிட்டார்.

PS இன் ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்டுக்கு மூத்த ஆலோசகராக இருந்தமை மற்றும் பொருளாதார அமைச்சராக இருந்தமை -இச்சமயத்தில் பொறுப்புடைமை உடன்பாடு என்ற கட்டுப்பாடுகள் அகற்றத் தொகுப்பை வடிவமைப்பதில் இவர் உதவினார்- உள்ளிட முக்கியமான பதவிகளை வகித்திருந்ததன் பின்னர் சென்ற கோடையில் மக்ரோன் அரசாங்கத்தை விட்டு விலகினார். தனது தேர்தல் இயக்கமான En Marche ஐ நவம்பரில் அவர் உருவாக்கினார். PS மற்றும் LR ஆகிய வழமையான ஆளும் கட்சிகளின் மீதான பிரமைவிலகிய நிலையில் இருக்கக் கூடிய இளைஞர்கள், தொழிலாளர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்து மக்களிடையே நிலவுகின்ற அதிருப்திக்கு தேசியவாத விண்ணப்பங்களைச் செய்கிற அதேவேளையில், அவர் பெரு வணிகங்களுக்காகவே தளர்ச்சியின்றி பேசுகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெறுவாராயின், PS மற்றும் LR அரசாங்கங்களின் கொள்கைகளைத் தொடர்வதற்கே அவர் முயற்சி செய்வார்.

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில், முக்கிய சக்திகளுக்கு இடையில் தீவிரப்பட்டுச் செல்லும் மோதல்களும் மற்றும் ஐரோப்பிய மற்றும் உலக முதலாளித்துவத்தின் ஆழமான நெருக்கடியும் மேலோங்கியிருக்கின்றன. பிரெக்ஸிட் வாக்களிப்பு மற்றும் ட்ரம்ப் தேர்வானமை ஆகியவற்றுக்குப் பின்னர், ட்ரம்ப் ஐரோப்பிய ஒன்றியத்தை தாக்குகிறதும் பிரான்சில் தேசிய முன்னணி மற்றும் ஐரோப்பாவெங்கிலும் அதைப் போன்ற நவ-பாசிச சக்திகளை ஆதரிக்கிறதுமான நிலையில் அட்லாண்டிக்-கடந்த கூட்டணிக்குள்ளாக பதட்டங்கள் வெடித்துக் கொண்டிருக்கின்றன. ட்ரம்ப்பின் பொருளாதார தேசியவாதம், ஜேர்மனியின் பொருளாதார வலிமைக்கு அவர் காட்டும் அதீதமான குரோதம், மற்றும் சீனா மற்றும் மத்திய கிழக்குக்கு எதிரான அவரது போர் மிரட்டல்கள் இவை அனைத்துமாய் சேர்ந்து ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தை அதன் கூட்டணிகளை மறுபரிசீலனை செய்வதற்கு தள்ளிக் கொண்டிருக்கின்றன.

அமெரிக்கா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான மோதல் தீவிரப்படுகின்ற நிலையில், ஜேர்மனியுடன் உறவுகளை ஊக்குவிப்பதற்கு Lyon இல் மக்ரோன் ஆலோசனை மொழிந்தார். ட்ரம்ப்பின் குடியேற்றவிரோத கொள்கைகளை விமர்சனம் செய்த அவர் கூறினார்: “எனது வேலைத்திட்டத்தில் சுவர் எதுவும் இருக்காது”.

பாதுகாப்புச் செலவினத்தை பிரான்சின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.6 சதவீதமாக இருப்பதில் இருந்து 2 சதவீதத்திற்கு, அதாவது ஒவ்வொரு ஆண்டும் 9 பில்லியன் யூரோ அதிகரிப்புக்கு, மக்ரோன் அழைப்பு விடுத்தார். “ஜேர்மனி மற்றும் பிரான்ஸ் இடையிலான கூட்டுகளைக் கொண்டு கூடுதலான ஒரு ஐரோப்பிய பாதுகாப்பை நான் விரும்புகிறேன்” என்றார் அவர்.

“நாம் அபாயகரமான காலத்தில் வாழ்கிறோமென்றால், அதன் காரணம் சர்வதேச சூழலே அபாயகரமானதாக இருக்கிறது என்பது தான்” என்று அவர் மேலும் சேர்த்துக் கொண்டார். ரஷ்யா, ஈரான், துருக்கி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகளை மேலெழுகின்ற எதேச்சாதிகார ஆட்சிகளாய் சித்தரித்த அவர் அறிவித்தார்: “இந்த சூழலில் நாம் நமது பொறுப்பை தாங்கிநிற்க வேண்டும், நமது வரலாற்றையும் அதன் வழிநடத்தும் தர்க்கத்தையும் அறிந்து கொள்ள வேண்டும்.”

அதிகரித்த இராணுவச் செலவினம் மற்றும் போர் திட்டமிடல் சுமைகளை ஒட்டுமொத்தமாய் தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்துவதையே மக்ரோன் நோக்கமாய் கொண்டிருக்கிறார். உழைப்புக்காகும் செலவுகளையும், சமூக செலவினங்களையும் மற்றும் வணிகக் கட்டுப்பாடுகளையும் வெட்டிக்குறைப்பதற்கு ஆலோசனைவைத்த அவர், இது வணிக உருவாக்கத்தை எளிமைப்படுத்தி பிரான்சின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் என்று கூறிக் கொண்டார்.

சென்ற ஆண்டில், பாரிய ஆர்ப்பாட்டங்களுக்கும் மற்றும் கடலளவான மக்கள் எதிர்ப்புக்கும் முகம் கொடுத்த நிலையிலும், நாடாளுமன்றத்தின் மூலமாக ஹாலண்ட் அழுத்தித் திணித்த ஒன்றை விடவும் கூடுதல் கடுமையானதொரு தொழிலாளர் சட்டத்தை மக்ரோன் விரும்புகிறார். தொழிலாளர்களுக்கு எந்த சமூக அல்லது சுகாதார பாதுகாப்புகளும் இல்லாத ஒரு நிலைக்கு பிரான்சை கொண்டுசெல்கின்ற விதமாய் தொழிலாளர்’ ஊதியங்களில் சமூக செலவினத்திற்காக முதலாளிகள் செலுத்துகின்ற பங்களிப்புகளில் அதிரடியான குறைப்புகளைத் திணிப்பதற்கு அவர் நோக்கம் கொண்டிருக்கிறார்.

அவர் கூறினார், “வேலைகளில் முதலாளிகளுக்கான வரி விகிதங்களை குறைந்த பட்ச ஊதியத்தில் 2.5 மடங்கு வரை என்ற விகிதத்திற்கு வெட்டுவதன் மூலமும், குறைந்தபட்ச ஊதியத்திலான வரிகளில் 10 சதவீத வெட்டின் மூலமும், உழைப்பை மலிவாகக் கிடைக்கச் செய்வதற்கு நான் விரும்புகிறேன்.”

இது தொழிலாளர்களது வாங்கும் திறனை அதிகப்படுத்தும் என்று கூறி இந்தக் கொள்கையை நியாயப்படுத்துவதற்கு மக்ரோன் முயல்கிறார். அவரது நடவடிக்கைகள் தொழிலாளர்களை தனியார் மருத்துவக் காப்பீடை எடுத்துக் கொள்ளும் நிலைக்கே தள்ளும் என்பதோடு, வேலையை விட்டு நீக்கப்பட்டால் கிடைக்கக் கூடிய வேலையின்மை நல உதவிகள் முன்னினும் சொற்பமாகக் கூடிய நிலையில்  தொழிலாளர்களை விடும். “உழைப்பை விடுதலை செய்வதற்கு, அதற்கு நல்ல ஊதியமளிக்கப்பட வேண்டும் என்பதையே நான் விரும்புகிறேன்” என்றார் அவர். “தொழிலாளர்கள் செலுத்தும் தொகைகளை குறைப்பதற்கு மருத்துவப் பராமரிப்பு மற்றும் வேலைவாய்ப்பின்மை ஆகியவற்றுக்கு நாம் மறுநிதியாதாரம் அளிக்க வேண்டும். அப்போது ஒவ்வொருவரிடமும் கூடுதலான வாங்கும் திறன் வந்துசேரும்.”

தனது வலது-சாரி வேலைத்திட்டத்தை மறைப்பதற்கு ஒருசில அடையாள நடவடிக்கைகளுக்கும் மக்ரோன் ஆலோசனை வைக்கிறார், கல்வியின் நண்பராக தன்னைக் காட்டிக் கொள்கிறார். ஆசிரியர்களின், அதிலும் குறிப்பாய் அனுகூலம் குறைந்த “முன்னுரிமை” மண்டலங்களில் வேலைசெய்யும் ஆசிரியர்களின், ஊதியங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்று தான் விரும்புவதாக அவர் கூறிக் கொண்டார். “நமது பள்ளிகளில் ஒரு வகுப்பிற்கு இருக்கும் மாணவர்களது எண்ணிக்கையை பாதியாகக் குறைக்க நம்மால் இயல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அத்தனை முன்னுரிமை கல்வி மண்டலங்களிலும் இருக்கக் கூடிய ஆரம்பப்பள்ளிகளில் அங்கு வேலைசெய்கிற ஆசிரியர்களுக்கு மேம்பட்ட ஊதியத்தை நான் வழங்குவேன். அவர்கள் தங்களது திட்டப்பணிகளை முன்னெடுப்பதற்கு கூடுதலான தன்னாட்சி அதிகாரம் இருக்கும்.”

சட்டரீதியாய் வயதுவந்தோருக்கான வயதை எட்டும் ஒவ்வொரு இளைஞருக்கும், கலாச்சார நடவடிக்கைகளில் செலவிடுவதற்கான “இளைஞர் அனுமதிச்சீட்டாக” 500 யூரோக்கள் வழங்குவதற்கு அவர் வாக்குறுதியளித்தார்.

மக்ரோனின் ஒட்டுமொத்த வேலைத்திட்டமுமே சமூக செலவினங்களையும் தொழிலாளர்களின் சட்ட உரிமைகளையும் வெட்டுவதை நோக்கமாகக் கொண்டிருக்கும் மட்டத்தைக் கொண்டு பார்த்தால், தொழிலாளர்களின் சில தேர்ந்தெடுத்த வகையினருக்கு சிற்சில கையளிப்புகளையும் ஊதிய அதிகரிப்புகளையும் கொடுப்பதற்கான அவரது ஆலோசனைமொழிவுகளும் கல்விக்கும் இளைஞர் மேம்பாட்டிற்குமான அவரது அக்கறையான நிலைப்பாடுகளும் ஒரு பிற்போக்குத்தனமான நகைச்சுவை நடிப்பு ஆகும்.

தனது வேலைத்திட்டம், பிரெஞ்சு வரலாற்றின் மிகவும் மக்கள் விரும்பாத ஜனாதிபதியாக ஆகியிருக்கக் கூடிய ஹாலண்டின் கீழ் தான் சூத்திரப்படுத்த உதவியிருந்த கொள்கைகளை விடவும் எந்த விதத்திலும் வித்தியாசமானதுமில்லை ஜனரஞ்சகமானதுமில்லை என்பதை நன்கு அறிந்திருக்கக் கூடிய மக்ரோன், போலிசுக்கும் உளவு சேவைகளுக்கும் அசாதாரண அதிகாரங்களை அளிக்கின்ற சட்டம்-ஒழுங்கு நடவடிக்கைகளுக்கும் ஆலோசனைவைக்கிறார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 10,000 போலிசாரை பணியமர்த்துவதற்கு அவர் வாக்குறுதியளித்திருக்கிறார், மேலும் சேர்த்துக் கொண்டார், “இன்னும் கூடுதல் திறம்பட்டதான மற்றும் சர்வவியாபகமானதான பிராந்திய உளவு சேவையின் பிரசன்னத்திற்காக நமது உளவு சேவைகளை நாங்கள் மறுஒழுங்கு செய்வோம். அன்றாட பாதுகாப்பில் திறம்பட்டதான ஒரு போலிஸ் சேவையை நாங்கள் மீண்டும் உருவாக்குவோம்.”

குறிப்பாக LR வேட்பாளரான ஃபிய்யோன், கற்பனையான வேலைகளைக் கொடுத்து கிட்டத்தட்ட 1 மில்லியன் யூரோ அரசாங்கப் பணம் தனது மனைவிக்கு வழங்கப்படுவதை ஏற்பாடு செய்ததான குற்றச்சாட்டுகளில் திகைக்கச் செய்யப்பட்டிருப்பதன் பின்னர், மக்ரோனின் வேட்பு முன்னிலை முக்கியத்துவத்திற்கு வந்திருக்கிறது. ஏப்ரல் 23 அன்று நடைபெறும் முதல் சுற்றில் மக்ரோன் பிய்யோனை வெளியேற்றி, மே 7 அன்று நடைபெறும் இறுதிச் சுற்றில் நவ-பாசிச தேசிய முன்னணியின் தலைவர் மரின் லு பென்னை எதிர்கொள்வார் என்றே சமீபத்திய கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. இவ்வாறாக பிரான்சின் அடுத்த ஜனாதிபதியாவதற்கான அதிக சாத்தியமிருக்கும் வேட்பாளராக இப்போது அவர் இருக்கிறார்.

அந்த ஊழல் குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய மக்ரோன், பரந்த மக்களை LR மற்றும் PS ஆகிய கட்சிகளிடம் இருந்து இது மேலும் அந்நியப்படுத்தி “அமைப்புமுறை விரோதமான” கட்சியாக கூறப்படும் அதிவலது FN ஐ ஊக்குவிப்பதாக அமைந்து விடக் கூடும் என்ற அச்சத்தையும் வெளிப்படுத்தினார்.

அவர் எச்சரித்தார்: “ஒவ்வொரு நாளும், ஊழல்கள் இன்னொரு காலத்து நடைமுறைகளை வெளிக்கொண்டு வருகின்றதொரு தருணத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அத்தகைய காலங்கள் குறித்து நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஏனென்றால் நமது ஊடகங்களிலும் அரசியல் வாழ்க்கையிலும் நடந்து கொண்டிருப்பவை எவரொருவருக்கும் நல்லதல்ல. ஏனென்றால் நடந்து கொண்டிருப்பவை தேசிய முன்னணிக் கட்சியின் ஆதாயமாய் ஆகி விடக் கூடாது என்ற வகையில் ஒவ்வொன்றையும் செய்வதற்காக நாம் போராடிக் கொண்டிருக்கிறோம்... ஏனென்றால் இன்று, நம் நாட்டில் மேலெழுந்து கொண்டிருப்பது ஜனநாயகத்தின் ஒரு வியாபகமான சிதைவு, பொதுவான அவநம்பிக்கை என்பது தான் அது.”

FN இன் மேலெழுச்சிக்கு எதிரான சிறந்த எதிரியாக மக்ரோன் காட்டிக் கொள்வது ஒரு அரசியல் மோசடியாகும். பிலிப் டு வில்லியே போன்ற தேசியவாத அதி-வலது பிரமுகர்களை மக்ரோன் பகிரங்கமாக சந்திக்கிற மற்றும் தழுவிக் கொள்கிற மட்டத்திற்கு, FN முன்வைக்கிற அதே மனோநிலையையே அவரது பிரச்சாரமும் கூட தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது.