ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

India to become hub for US Seventh Fleet

இந்தியா அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படை பிரிவுக்கான ஒரு மையமாக ஆக இருக்கிறது

By Keith Jones 
16 February 2017

இந்தவாரத் தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட ஒரு பேரத்தின் கீழ், இந்தியா அமெரிக்காவின் ஏழாவது கப்பற்படைப் பிரிவிற்கு பிரதான சேவை மற்றும் பழுதுபார்ப்பு மையமாக ஆகப்போகிறது. இந்த கப்பற்படை தொகுதிதான் சீனாவிற்கெதிரான அமெரிக்க யுத்தத் தயாரிப்புக்களின் மையமாக இருக்கிறது.

அமெரிக்க போர் விமானங்களுக்கும் போர்க்கப்பல்களுக்கும் தொடர்ந்து இந்திய தளங்கள் கிடைக்கக்கூடியதாகவும் ஓய்வுக்காக, மீள எண்ணெய் நிரப்பல்களுக்காக, மறு அளிப்புக்காக துறைமுகங்கள் கிடைக்கூடியதாக வகைசெய்யும் சமீபத்தில் போடப்பட்ட இந்தோ-அமெரிக்க உடன்பாட்டிற்கு இந்த பேரம் உயிரூட்டுகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டில் கையெழுத்திட்ட Logistics Exchange Memorandum of Agreement (LEMOA) உடன்படிக்கையும் கூட அமெரிக்க இராணுவம் இந்திய தளங்களில் போர்த்தளவாடங்களை இறக்க “முன்கொண்டு செல்ல” அமெரிக்க இராணுவத்தை அனுமதிக்க வகைசெய்கிறது.

ரிலையன்ஸ் பாதுகாப்புப் பொறியியல் நிறுவனம் கடந்த திங்கட்கிழமை அன்று, மேற்கு இந்திய மாநிலமான குஜராத்தின் பிபாவா கப்பற் தளத்தில் ஏழாவது கப்பற்படைப் போர்க்கப்பல்களுக்கு சேவை மற்றும் பழுது பார்ப்பு பணிகள் மற்றும் பெட்ரோல் கலங்களை அளிப்பதற்கு பென்டகனுடன் “மாஸ்டர் ஷிப் ரிப்பேர் அக்ரீமெண்ட்” (“Master Ship Repair Agreement”) என்ற கப்பல் பழுதுபார்க்கும் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.

ரிலையன்ஸ் அதிகாரிகளின்படி, கப்பற்தளமானது அமெரிக்க கடற்படைக்கு அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 பில்லியன் ரூபாய்கள் (1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள்) மதிப்புடைய பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.

2014 இல் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தின் மொத்த வருவாயான 50 மில்லியன் டாலர்களுக்கும் குறைவானதை கணக்கில் எடுத்துக் கொண்டால், இது பெரும் இலாபம் சம்பாதிப்பதற்கான சாதகமான பேரம் ஆகும்.

“இந்தியக் கடலில் இயங்கும் 100க்கு மேற்பட்ட அமெரிக்க கடற்படைக் கப்பல்களுக்கு பிபாவா கப்பற் தளத்தில் (Pipavav shipyard) இப்பொழுது சேவைகள் கிடைக்கும்” என நிறுவனத்தின் பேச்சாளர் கூறினார். அவர் அமெரிக்க கப்பற்படை “மிகவும் கடுமையான தரமுறைகள் சிலவற்றை பின்பற்றும், எனவே இந்த பேரமானது, இதேபோன்ற திட்டங்கள் மற்ற நாடுகளிலிருந்தும் கிடைப்பதற்கு வழிவகுக்கும் என நம்புகிறோம்” என மேலும் கூறினார்.

கப்பல் பழுதுபார்க்கும் உடன்படிக்கை, அமெரிக்க கடற்படையின் கீழ் ரிலையன்ஸ் கப்பற்தளத்தை “அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்ததாரர் ஆக வடிவமைப்பதற்கு மிக நெருக்கமாக வருகிறது.

ஏழாவது கப்பற் படையானது மேற்கு பசிபிக்கிற்கும் இந்திய பெருங்கடலின் கிழக்கு பகுதியின் இந்திய-பாக்கிஸ்தான் எல்லை வரைக்கும் பொறுப்பு கொண்டுள்ளது. அந்தவாறாக சீனா மீதான அமெரிக்க போருக்கு மையமாகும். இந்த திட்டங்களுள் “வான் கடல் யுத்த” திட்டம் என்று பெண்டகன் அழைக்கும், நகர்ப்புறங்கள் மற்றும் கட்டமைப்புக்களில் உள்ள சீன இராணுவ நிலைகள் மீது பெருமளவில் குண்டுகளை வீசல் மற்றும் மலாக்கா நீரிணை, இந்திய பெருங்கடல்/ தென் சீனக் கடல் பிராந்தியத்தில் உள்ள சோதனைச் சாவடிகளை கைப்பற்றுவதன் மூலம் சீனா மீது பொருளாதாரத் தடையை விதிப்பதும் உள்ளடங்கும்.

இதுவரையில், ஏழாவது கப்பற் படைக்கு பராமரிப்பும், பழுதுபார்ப்பும் ஜப்பான் மற்றும் சிங்கப்பூரில் மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்த பழுதுபார்ப்பு பேரமானது புவிசார் மூலோபாய நலன்களால் உந்தப்பட்டது. வாஷிங்டனானது நீண்டகாலமாகவே அதன் மூலோபாய நிகழ்ச்சிநிரலுக்கு இந்தியாவை கடிவாளமிட்டுக் கொண்டுவர மற்றும் அமெரிக்காவின் பிரதான ஆசிய - பசிபிக் கூட்டாளிகளான ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளடங்கலான அமெரிக்கா தலைமையிலான சீன எதிர்ப்புக் கூட்டணியின் நாற்கரத்தில் இந்தியாவை தென்மேற்கு தூணாக ஆக்குவதற்கு முயற்சி செய்து வருகிறது.

இந்திய முதலாளித்துவ வர்க்கமானது அதன் பங்கிற்கு, பெரும் வல்லரசாக வேண்டுமென்ற அதன் சொந்த அபிலாஷைகளை பெறுவதில் அமெரிக்க ஆதரவை ஈர்க்கும் நம்பிக்கையில், அது வாஷிங்டன் பால் என்றுமிராத அளவு மிக கூர்மையாக சாய்ந்துள்ளது.

நரேந்திர மோடி மற்றும் அவரது பாஜக கட்சி அரசாங்கமானது அமெரிக்கா இந்தியாவின் மிக முக்கியமான கூட்டாளி என்று வெட்டகமற்ற வகையில் அறிவிக்க மட்டுமில்லை. 2014ல் அது அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து சீனாவுடனான அமெரிக்க மோதலில் இந்தியாவை சக்திமிக்க வகையில் “முன்நிற்கும்” அரசாக உரு மாற்றியிருக்கின்றனர்.

புதுடெல்லியானது தென்சீன கடலின் மீதான சர்ச்சையில் சீனாவை ஒரு வலுச்சண்டைக்காரர் என்று வண்ணம் பூசும் ஆத்திரமூட்டும் நிலைப்பாடுகளை கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்கிறது. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் பெரிய அளவில் இருதரப்பு மற்றும் முத்தரப்பு மூலாபாய உறவுகளை விரிவுபடுத்தி வருகிறது.

அண்மையில், அமெரிக்க பசிபிக் ஆணையக தலைவர், ஹாரி ஹாரிஸ், இந்திய பெருங்கடலில் சீன நீர்மூழ்கிக் கப்பல் மற்றும் கப்பல்கள் நடமாட்டங்களை பற்றிய உளவுத்தகவல்களை அமெரிக்க மற்றும் இந்திய இராணுவங்கள் பகிர்ந்துகொள்வதாக வெளிப்படுத்தினார்.

இவை இந்திய மக்களுக்கு தெரியாதிருந்த போதிலும், LEMOA இன் கீழ், புதுடெல்லி அனுமதிக்கும் பட்சத்தில் அமெரிக்கா இந்திய இராணுவ தளங்களையும் பயன்படுத்தக் கூடும்.

2005 இல் “உலக மூலோபாய பங்காண்மை”–யை இந்தியாவும் அமெரிக்காவும் அமைத்த பின்னரிலிருந்து LEMOA பாணியிலான உடன்பாட்டிற்கு இந்தியாவை உடன்படச் செய்தது வாஷிங்டனின் பிரதான வெளியுறவுக் கொள்கையில் அரசியல் இலக்காகும்.

வாஷிங்டன் மற்றும் புதுடெல்லி இருவருக்கும் இது அரசியல் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாலும், LEMOA வைப் பயன்படுத்துவதாக அமெரிக்கா முதலில் பகிரங்கமாக அறிவித்ததானது, இந்தியாவிற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார ஆதாயங்களைக் கொண்டு வரும் அல்லது குறைந்த பட்சம் கொண்டு வருவதாக தோன்றும்.

ரிலையன்ஸ் பென்டகனுடன் இந்த பேரத்தை பற்றிக் கொள்வதற்கு உதவும் முகமாக குஜராத் மாநில பாஜக அரசாங்கமானது, அது அதன் கப்பற் தளத்தை நவீனப்படுத்துவதற்கு பத்து மில்லியன் கணக்கான டாலர்களை உதவியாக வழங்கியுள்ளது. மே 2014ல் மோடி இந்திய பிரதமராகும் வரை குஜராத் முதல்வராக இருந்தார் மற்றும் மாநில பாஜகவில் அவர் தொடர்ந்தும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.

ரிலையன்ஸ் பாதுகாப்பு பொறியியல் நிறுவனம் கோடீசுவர் அணில் அம்பானிக்கு சொந்தமானது. அவரது சகோதரர் முகேஷ் அம்பானி 23 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகம் கொண்ட இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் ஆவார். அம்பானி சகோதரர்கள் இருவருமே மோடியின் தீவிர ஆதரவாளர்கள் ஆவர் மற்றும் 2014 தேர்தலில் பாஜகவின் பிரதம வேட்பாளராக அவரை முன் நிறுத்தியதில், அதில் இந்திய பெருநிறுவனங்கள் அழுத்தம் கொடுப்பதற்கு உதவினர்.

இந்திய பெருநிறுவன ஊடகமும் இந்திய-அமெரிக்க கூட்டிற்கு மிக சாதகமாகவே உள்ளது. இருந்தும் இப்போதும் அது 1971 டிசம்பரில் இந்தோ-பாக்கிஸ்தான் போரின்பொழுது வாஷிங்டன் ஏழாவது கப்பற்படை பிரிவை பயன்படுத்த அச்சுறுத்தல் விடுத்ததை நினைவு கூர்கிறது. அந்நேரம் பாக்கிஸ்தான் அமெரிக்காவின் பிரதான குளிர் யுத்த கூட்டளியாக இருந்தது, அப்படியிருக்க, சீனாவுடனான வாஷிங்டனின் உறவைக் கண்டும் அஞ்சி, இந்தியா சோவியத் ஒன்றியத்துடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தது.