ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Germany, France criticize Trump’s immigration ban

ஜேர்மனியும் பிரான்சும் ட்ரம்ப்பின் குடியேற்றத் தடையை விமர்சனம் செய்கின்றன

By Alex Lantier
31 January 2017

ஏழு முஸ்லீம் நாடுகளில் இருந்தான பயணிகளுக்கு அமெரிக்காவுக்கு அணுகலை மறுக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் உத்தரவுக்கு எதிராக அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் போராட்டங்கள் பெருகிச் செல்வதன் மத்தியில், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகள் வார இறுதியில் இந்தத் தடை மீது விமர்சனம் செய்தனர். அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவிக்கு ட்ரம்ப்பினால் பரிந்துரைக்கப்பட்டிருக்கும் றெக்ஸ் ரில்லர்சன் பதவியில் அமர்ந்த பின்னர், அவருடனான எதிர்கால பேச்சுவார்த்தைகளில் இந்த பிரச்சினையை எழுப்புவதற்கு, சனிக்கிழமையன்று, புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள ஜேர்மன் வெளியுறவு அமைச்சர் சிக்மார் காப்ரியலும் அவரது பிரெஞ்சு சகாவான ஜோன்-மார்க் எய்ரோவும் வாக்குறுதியளித்தனர்.

எய்ரோ, இந்த தடை “நம்மைக் கவலைப்படுத்தவே முடியும்” என்று அறிவித்தார். “நாம் சர்வதேசக் கடமைப்பாடுகளில் கையெழுத்திட்டிருக்கிறோம், ஆகவே போர் மற்றும் ஒடுக்குமுறைக்கு தப்பி ஓடிவரும் அகதிகளை வரவேற்பது நமது கடமைகளின் பகுதியாகும்... நம்மைக் கவலைக்குள்ளாக்கும் வேறு பல பிரச்சினைகளும் இருக்கின்றன. அதனால் தான் சிக்மாரும் நானும் என்ன செய்யலாம் என்பதைக் குறித்து கலந்தாலோசித்தோம். எங்களது சகாவான, ரில்லர்சன், உத்தியோகபூர்வமாக பதவியில் அமர்ந்த பின்னர், நாங்கள் இருவரும் அவரைத் தொடர்பு கொண்டு பேசுவோம்.”

ட்ரம்ப்பின் கொள்கைகள், துன்புறுத்தப்படுவோருக்கு அடைக்கலம் கொடுக்கும் மேற்கத்திய பாரம்பரியங்களுடன் முறிவு கொண்டதாய் இருப்பதாக காப்ரியல் கூறினார்: “உமது அண்டைவாசிகளை நேசி என்பது, மற்றவர்களுக்கு உதவும் செயல்பாடு என்பது இந்தப் பாரம்பரியத்தின் பகுதியாகும். இது, மேற்கத்தியவர்களாகிய நம்மை ஒன்றிணைக்கிறது. இதுவே நாம் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்கின்ற ஒரு பொதுவான அடித்தளமாக இருக்கிறது என்றும், நாம் ஊக்குவிக்க விரும்புவதாக இருக்கின்ற ஒன்றாக இருக்கிறது என்றும் நான் கருதுகிறேன்” என்றார்.

ட்ரம்ப்பின் குடியேற்றத் தடை என்பது சந்தேகத்திற்கிடமின்றி பிற்போக்கானதும், ஜனநாயக-விரோதமானதும் ஆகும், இது அமெரிக்காவில் போலிஸ்-அரசு ஆட்சி வடிவங்களுக்கான துரிதமான நகர்வு நடைபெற்றுக் கொண்டிருப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இருந்தபோதிலும், பேர்லின் மற்றும் பாரிஸில் இருந்து ட்ரம்ப் மீது பாய்கின்ற விமர்சனங்கள் அப்பட்டமான கபடவேடங்களாகும். முஸ்லீம்கள் மற்றும் புலம்பெயர்ந்த மக்கள் துன்புறுத்தப்படுவதால் எழுகின்ற பரந்தளவிலான கோபம் பெருகிச் செல்வதில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்தைப் பாதுகாத்துக் கொள்வதே அவற்றின் நோக்கமாக இருக்கிறது, அத்துடன் இவை அமெரிக்காவிற்கு எதிராய் ஜேர்மனி மற்றும் பிரான்சினால் தலைமை கொடுக்கப்படுகின்ற ஒரு ஐரோப்பியக் கூட்டணியின் ஏகாதிபத்திய நலன்களைத் திட்டவட்டம் செய்வதற்கு தயாரிப்பு செய்கின்றன.

லிபியாவிலும் சிரியாவிலும் ஆட்சிமாற்றங்களுக்கான உள்நாட்டுப் போர்களில் இஸ்லாமியத் தீவிரவாதிகளை ஆயுதபாணியாக்குவதில் அமெரிக்காவுடன் கைகோர்த்திருந்ததன் மூலம், ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், நூறாயிரக்கணக்கான உயிர்களின் இழப்பிலும் பத்து மில்லியன் கணக்கான மக்கள் அகதிகளாக்கப்படுவதிலும் —இவர்களில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் படுபயங்கரமான நிலைமைகளின் கீழ் ஐரோப்பாவிற்கு தப்பி ஓடினர்— சம்பந்தப்பட்டிருந்தன. “அண்டைவாசியை நேசிக்கும்” கொள்கையைக் குறித்த காப்ரியலின் அற்பத்தனமான பேச்சு எப்படியிருந்தபோதிலும், அகதிகளை ஐரோப்பிய ஒன்றியம் நடத்திய விதமானது, குண்டர்கள் பாணியிலும் ட்ரம்ப் போன்றே அரசியல் ரீதியாய் குற்றவியல்தனமான பாணியிலுமே இருந்தது.

அகதிகள் நெருக்கடி தீவிரப்பட்ட நிலையில், மத்தியதரைக்கடலில் படகுமூழ்கும் சம்பவங்கள் குறித்த செய்திகளின் காரணத்தால் ஐரோப்பாவிற்குள் வரும் குடியேற்றவாசிகள் அஞ்சுவார்கள் என்ற நம்பிக்கையுடன், Mare Nostrum திட்டத்தின் கீழ் மத்திய தரைக்கடலில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதை ஐரோப்பிய ஒன்றியம் இரத்து செய்தது. இந்த முடிவை பாராட்டிய ஐரோப்பிய ஒன்றிய எல்லை நிறுவனமான Frontex, இத்திட்டத்தை இரத்து செய்தமையானது “அநேகமாய் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கு இட்டுச் செல்லும்”, ஆயினும் “மத்திய தரைக்கடலை கடக்க முயலும் அகதிகள் எண்ணிக்கையை கணிசமாய் குறைப்பதற்கு” இது இட்டுச் செல்லும் என்று எழுதியது.

ஐரோப்பா வந்துசேர்ந்த அகதிகள் ஐரோப்பாவெங்கிலும் தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டனர்; அவர்கள் விரும்பிய நாடுகளுக்குச் செல்வதில் இருந்து தடுக்கப்பட்டனர்; ஜேர்மனியிலும் மற்றும் பிற ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளிலும் தன்னிச்சையான வெளியேற்ற உத்தரவுகளுக்கு இலக்காயினர்.

ட்ரம்ப் மீதான விமர்சனங்களுக்கு பதிலிறுத்த இத்தாலியின் வெளியுறவு அமைச்சரான அஞ்சலினோ அல்ஃபானோ Corriere della Sera செய்திநிறுவனத்திடம் கூறுகையில், “மற்றவர்களது தெரிவுகள் குறித்து கருத்துகள் கூறும்” நல்ல நிலையில் ஐரோப்பா இல்லை என்றார். மேலும் “அல்லது நாமும் ஐரோப்பாவில் சுவர்களை எழுப்புகிறோம் என்பதை நாம் மறந்து விட விரும்புகிறோமா?” என்றார்.

இதனிடையே, ஐரோப்பாவெங்கிலும் அதி-வலது அரசியல்வாதிகள் ட்ரம்ப்பின் தடையை பாராட்டினர். “எந்த இஸ்லாமிய நாட்டிலும் இருந்து இனி எந்தக் குடியேற்றமும் கிடையாது என்பதே நமது துல்லியமான தேவை ஆகும்... இஸ்லாமும் சுதந்திரமும் ஒன்றுக்கொன்று இணக்கமற்றவை” என்றார் நெதர்லாந்தின் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த கீர்த் வில்டர்ஸ்; இத்தாலியின் Northern League ஐ சேர்ந்த மாத்தியோ சால்வினி அறிவித்தார்: “ஒரு படையெடுப்பு நடந்து வருகிறது, அது தடுத்து நிறுத்தப்படுவது அவசியம்.”

ஐரோப்பிய முதலாளித்துவம், ட்ரம்ப்பிலும் சற்று மென்மையான, கூடுதல் பகுத்தறிவான மாற்று எதனையும் பிரதிநிதித்துவ படுத்தவில்லை. ட்ரம்ப்பின் முதல் வாரத்திலான அவரது பொறுப்பற்ற கொள்கைகள் தனிப்பட்ட முறையில் ட்ரம்ப்பின் விளைபயனோ, அல்லது அமெரிக்க முதலாளித்துவத்தின் ஆழமான சிதைவின் விளைபயனோ கூட இல்லை, மாறாக ஒட்டுமொத்தமாக உலக முதலாளித்துவத்தின் முரண்பாடுகளது விளைபயனே என்பதையே இதன் செயல்வரலாறு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இதுவே ஏகாதிபத்திய போர் முனைப்புக்கும் புலம்பெயர்ந்தவர்களும் வெளிநாட்டினரும் சர்வதேசரீதியாக பலியாக்கப்படுவதற்கும் இட்டுச் சென்றிருக்கக் கூடிய சமூக மற்றும் அரசியல் பொறிவின் உந்துசக்தியாகும், இதன் மிகவும் பூர்த்தியான மற்றும் அவலட்சணமான வெளிப்பாடே ட்ரம்ப் ஆகும்.

ட்ரம்ப்பின் இராணுவவாத மற்றும் ஜனநாயக-விரோதக் கொள்கைகளை விமர்சனம் செய்கின்ற ஐரோப்பிய அரசியல்வாதிகள் ஜேர்மனி தனது வெளியுறவுக் கொள்கையை மீண்டும் இராணுவமயமாக்குவதற்கு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும், பிரான்சில் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிரான சமூகப் போராட்டங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கக் கூடிய கிட்டத்தட்ட நிரந்தரமான பிரான்சின் அவசரகால நிலையையும் பாதுகாத்துப் பேசுகின்றனர்.

ஆயினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான அவர்களது சிடுமூஞ்சித்தனமான மற்றும் கவனமாய் அளந்தெடுத்த விமர்சனங்களுக்குப் பின்னால், ட்ரம்ப்-எதிர்ப்புப் போராட்டங்களுக்கான வெறும் ஒரு எதிர்வினையை விடவும் அதிகமாய், அவற்றை தணிக்கின்ற நோக்கத்துடனான அதிகமான பொய்களே இருக்கின்றன. ட்ரம்ப்பின் பிற்போக்குத்தனமான நாசச்செயல்கள் அமெரிக்காவை சர்வதேச அளவில் மதிப்பிழக்கச் செய்கின்ற நிலையில், அதனால் ஆதாயம் பெறும் இடத்தில் ஐரோப்பிய கண்டத்திலிருக்கும் முன்னணி சக்திகளை -பிரதானமாக ஜேர்மனி மற்றும் பிரான்சினை- நிறுத்துவதற்கே அவர்கள் முனைந்து வருகின்றனர்.

அகதிகளுக்கான தடை விடயத்தில் மட்டுமல்லாது, இன்னும் ஏராளமான விடயங்களில், அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் ஐரோப்பிய ஒன்றிய சக்திகள் கொண்டிருக்கும் கூர்மையான அதிருப்தியை அடிக்கோடிடும் விதமாக, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், சனிக்கிழமையன்று, லிஸ்பனில் நடந்த தெற்கு ஐரோப்பிய நாடுகளது உச்சிமாநாட்டில் இருந்தபடி, ட்ரம்ப்பின் கொள்கைகளுக்கான ஐரோப்பிய எதிர்ப்பிற்கு அழைப்பு விடுத்தார்.

ஹாலண்ட், “அமெரிக்காவின் ஜனாதிபதி [பாரிஸ் காலநிலை] உடன்பாட்டின் பயனளிக்கும் தன்மை குறித்து தனக்கு திருப்தி தோன்றவில்லை என்று கூறுவதற்காக காலநிலை என்று குறிப்பிடுகிறார் என்றால், நாம் பதிலிறுத்தாக வேண்டும்”, “ஐரோப்பிய பொருளாதாரத்தை மட்டுமல்லாது உலக நாடுகளின் பொருளாதாரங்களையும் சேர்த்து ஒட்டுமொத்த பொருளாதாரங்களையும் ஸ்திரம்குலைக்கக் கூடிய பாதுகாப்புவாத நடவடிக்கைகளை அவர் சேர்க்கிறார் என்றால், நாம் பதிலிறுத்தாக வேண்டும், அகதிகள் விடயத்தில் ஐரோப்பா தன் கடமையைச் செய்திருக்கும் இடத்தில் அவர் அகதிகள் வருகையை மறுக்கிறார் என்றால் நாம் பதிலிறுத்தாக வேண்டும்” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்தான பிரிட்டனின் வெளியேறலை ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்குமான ஒரு முன்மாதிரியாகத் தூக்கிப் பிடிப்பதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்தை உடைப்பதற்கு ட்ரம்ப் செய்கின்ற முயற்சியையும் ஹாலண்ட் தாக்கினார். “அமெரிக்காவின் ஜனாதிபதியிடம் இருந்து ஐரோப்பா குறித்து அறிவிப்புகள் வருகின்றபோது, பிரெக்ஸிட்டை மற்ற நாடுகளுக்கான ஒரு முன்மாதிரியாக அவர் பேசுகின்றபோது, நாம் பதிலிறுத்தாக வேண்டியிருக்கிறது என்றே நான் நம்புகிறேன்” என்றார் ஹாலண்ட். “நமது நிலைப்பாடுகளை நாம் தெரிவிக்க வேண்டும் என்பதோடு நாம் என்ன கருதுகிறோம் என்ற உறுதிப்பாட்டுடன் ஒரு பேச்சுவார்த்தையை தொடங்கியாக வேண்டும்.”

அணு-ஆயுத வல்லமை கொண்ட ரஷ்யா, சீனா, அத்தோடு அநேகமாய், ஐரோப்பிய சக்திகளும் கூட உள்ளிட்ட அமெரிக்காவின் “கிட்டத்தட்ட சமமான போட்டியாளர்கள்” உடனான போருக்கு தயாரிப்பு செய்வதற்கு பென்டகனுக்கு ட்ரம்ப் அளித்த உத்தரவுகளை ஹாலண்ட் விமர்சனம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ விவகாரங்களில், அமெரிக்காவுடன் ஒரு உடன்பாடு எட்டப்பட முடியும் என்று தான் நம்புவதை பிரெஞ்சு ஜனாதிபதி சுட்டிக் காட்டினார். சிரியா, ஈராக் மற்றும் ரஷ்யா பற்றிக் குறிப்பிட்ட அவர், “இவை அனைத்துமே” ட்ரம்ப் உடனான “பேச்சுவார்த்தைக்கான விடயமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

எவ்வாறாயினும், சர்வதேச அளவில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வர்த்தக மற்றும் மூலோபாய நிலைகளுக்குள்ளாக ஜேர்மனியும், பிரான்சும் மற்ற தொடர்புடைய ஐரோப்பிய ஒன்றிய அரசுகளும் பரந்த அளவில் உள்ளே நுழைந்து கொண்டிருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை, இது வெகுவிரைவிலேயே, அமெரிக்காவுடன் ஒரு பேரழிவுகர சாத்தியம் கொண்ட இராணுவ மோதலுக்கு மட்டுமே இட்டுச் செல்லத்தக்க ஒரு மூலோபாயமாகும்.

ஜேர்மன் நிதியியல் பத்திரிகையான Handelsblatt இடம் பேசிய காப்ரியல், சர்வதேச அளவில் அமெரிக்காவை குறிவைத்து ஜேர்மனியின் தலைமையில் நடக்கவிருக்கும் மூர்க்கமான வர்த்தக மூலோபாய பாதையை கோடுபோட்டுக் காட்டினார். “ஆசியாவுடனும் தென் அமெரிக்காவுடனும் ட்ரம்ப் ஒரு வர்த்தகப் போரை தொடக்குவாராயின், அது நமக்கான வாய்ப்புகளைத் திறந்து விடவும் செய்கிறது” என்ற காப்ரியல் மேலும் கூறினார்: “ஐரோப்பா ஒரு புதிய ஆசிய வெளியுறவுக் கொள்கையில் துரிதமாக வேலைசெய்தாக வேண்டும்... அமெரிக்க பாதுகாப்புவாதமானது ஆசியா முழுவதிலும் ஐரோப்பாவுக்கான புதிய சந்தர்ப்பங்களை திறந்து விடுகின்ற ஒரு சூழ்நிலையை உருவாக்குமானால், நாம் தலையிட்டாக வேண்டும்.”

பிரெக்ஸிட்டானது ஐரோப்பிய ஒன்றியத்தை உள்ளிருந்து வலுப்படுத்தும் வகையில் அதனை மாற்றியமைப்பதற்கான ஒரு சந்தர்ப்பத்தை ஜேர்மனிக்கும் பிரான்சுக்கும் வழங்கியிருந்ததாகவும் காப்ரியல் சேர்த்துக் கொண்டார். “ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் ஒரு குழுவின் —எல்லாவற்றுக்கும் முதலில், [யூரோ] நாணயமதிப்பு ஒன்றியத்தை— ஒத்துழைப்பை அபிவிருத்தி செய்வதற்கும் அதன்பின் சற்று பலவீனமான ஐரோப்பிய ஒன்றிய அரசுகளின் இரண்டாம் சுற்றுவட்டத்தை அதனுடன் ஒன்றிணைப்பதற்குமான ஒரு வாய்ப்பும் நமக்கு இருக்கிறது” என்றார் அவர். “அது ஐரோப்பாவுக்குள் பதட்டங்களை பெருமளவில் குறைப்பதோடு மைய ஐரோப்பாவை உண்மையாகவே வலுப்படுத்தும்.”

பிரான்சுடனான கூட்டணியுடன் ஜேர்மனியால் மேலாதிக்கம் செய்யப்படுகின்ற ஒரு “மைய ஐரோப்பா”வின் பிரதான இலக்காக இருக்கப் போவது ஐரோப்பாவில் இருக்கக் கூடிய தொழிலாள வர்க்கமே. ஜேர்மனியின் Bundesbank இன் முன்னாள் துணைத் தலைவரான ஜூர்கன் ஸ்ரார்க் டெய்லி டெலிகிராப் பத்திரிகைக்கு அளித்த ஒரு நேர்காணலில், ஜேர்மனி, ஹாலண்ட், பெல்ஜியம், லுக்சம்பேர்க் மற்றும் பிரான்ஸ் ஆகியவை கொண்ட ஒரு “மைய” யூரோ மண்டலத்தை வலுப்படுத்த வேண்டுமென்றால் இத்தாலி, கிரீஸ் மற்றும் பிற நாடுகள் யூரோ மண்டலத்தில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று ஆலோசனை வைத்தார். இது கடுமையான பணக் கொள்கைகளுக்கு அனுமதிக்கும் என்றும் இன்னும் அதிரடியான சிக்கன நடவடிக்கைத் திட்டங்களை அமல்படுத்த அரசியல்வாதிகளை தள்ளும் என்றும் ஸ்ரார்க் நம்பிக்கை வெளியிட்டார்.

“[ஐரோப்பிய மத்திய வங்கியானது] தனது நடவடிக்கைகளில் ‘நாங்கள் பின்பலமாக இருக்கிறோம்’, ‘நாடு A அல்லது நாடு B ஐ திவாலாவதில் இருந்து நாங்கள் தடுப்போம்’ என்ற சமிக்கையை அளிக்கின்ற வரையில், எந்த கட்டமைப்புச் சீர்திருத்தங்களும் ஏற்படப் போவதில்லை”. “அரசியல்வாதிகள் சூடுசுரணையற்று போயுள்ளனர்.” என்றார் ஸ்ரார்க்.