ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Democratic Party and the anti-Russia hysteria

ஜனநாயகக் கட்சியும், ரஷ்ய-விரோத விஷம பிரச்சாரமும்

Patrick Martin
6 February 2017

வெறும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதற்கு பின்னர் இருந்து, அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் நகரங்களின் வீதிகளில் மில்லியன் கணக்கானவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக புதிய நிர்வாகத்தினது முஸ்லீம்-விரோத புலம்பெயர்வு ஆணை மற்றும் அகதிகள் மீதான ஆணையில் எடுத்துக்காட்டப்பட்ட அதன் தேசிய பேரினவாத மற்றும் சர்வாதிபத்தியத்திற்கு அவர்கள் ஆழ்ந்த எதிர்ப்பை உணர்வதால் உந்தப்பட்டுள்ளனர்.

எவ்வாறிருப்பினும் ஜனநாயகக் கட்சியின் விமர்சனங்கள் முற்றிலுமாக வேறுவிதமான பிரச்சினையில் மையமிட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரத்தின் போது ஹிலாரி கிளிண்டனால் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு கருத்துருவை தொடர்ந்து கொண்டே, ஜனநாயகக் கட்சியினர் ட்ரம்ப் ஐ மாஸ்கோ மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு முகவராக சித்தரித்து, எதிர்ப்பை அரசியல்ரீதியில் கீழ்தரமான நவ-மக்கார்த்தியிச பிரச்சாரத்திற்குப் பின்னால் திசைதிருப்ப முனைந்துள்ளனர்.

ரஷ்யாவை தொந்தரவுக்குட்படுத்தும் சமீபத்திய சுற்று, வழமை போல, நியூ யோர்க் டைம்ஸ் இன் பக்கங்களில் சமிக்ஞை காட்டப்பட்டது. ட்ரம்ப் ஐ "சைபீரிய வேட்பாளர்" என்று முத்திரை குத்தி டைம்ஸ் கட்டுரை ஒன்றில் கடந்த கோடையில் "ரஷ்ய இணைய ஊடுருவல்" பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்த போல் க்ரூக்மன், கடந்த திங்களன்று அவரது துணை-தலையங்க கட்டுரையில் "நாம் ட்ரம்ப்-புட்டின் ஆட்சிக்குள் நுழைய இன்னும் வெறும் ஒரு வாரமே இருக்கிறது,” என்ற வார்த்தைகளோடு தொடங்கினார்.

செனட்டர் எலிசபெத் வாரென் சனியன்று பால்டிமோர் இல் நடந்த முற்போக்கான காங்கிரஸ் மூலோபாய உச்சி மாநாட்டில் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறி சவுக்கை சுழற்றினார்: “நவம்பரில், அமெரிக்கா டொனால்ட் ட்ரம்ப் ஐ தேர்ந்தெடுத்தது. ஆம், ரஷ்யர்கள் உதவினார்கள். ஆம், FBI இயக்குநர் உதவினார். ஆம், அவர் மூன்று மில்லியன் மக்கள் வாக்குகளில் தோல்வி அடைந்தார். ஆனால் நாம் அவ்வளவு சுலபமாக விட்டுக் கொடுத்துவிடவில்லை.”

அதன் பின்னர் பெரும்பாலும் ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்தின் "இடது" விமர்சனமாக சித்தரிக்கப்பட்டவை வந்தன, ஆனால் ரஷ்யாவைத் தொந்தரவுக்குட்படுத்துவது மீதான ஒப்புதல் வேறொரு முன்னணி ஜனநாயக கட்சியாளர், பிரதிநிதிகள் சபையின் சிறுபான்மை தலைவர் நான்சி பெலொசியால் உரிய முறையில் குறிப்பிடப்பட்டது, அவர் ஞாயிறன்று NBC இன் "பத்திரிகை சந்திப்பு" நிகழ்ச்சியில் தோன்றிய போது அவருக்குள் இருந்த ஜோ மெக்கார்த்திக்கு முழு வெளிப்பாட்டை அளித்தார்.

ஜனநாயகக் கட்சி பிரச்சாரங்களின் வலதுசாரி குணாம்சம் மீதான வாரெனின் விமர்சனம் குறித்து வினவிய போது, பெலொசி துரிதமாக விடயத்தை மாற்றினார்: “ஆனால் என்னை செனட்டர் அறிக்கையின் முதல் பாகத்திற்கு செல்ல விடுங்கள். ரஷ்யர்கள் டொனால்ட் ட்ரம்பிடம் என்ன வைத்திருக்கிறார்கள் என்று நான் அறிய விரும்புகிறேன். ரஷ்யாவுடன் அவரது நிதியியல் தொடர்புகள், தனிப்பட்ட மற்றும் அரசியல் தொடர்புகள் குறித்து ஒரு FBI விசாரணையைப் பெற வேண்டுமென நான் நினைக்கிறேன்,” என்றார்.

அப்பெண்மணி தொடர்ந்து கூறுகையில், “நாம் அவரது வரி தாக்கல்களைப் பார்த்தால் தான்… டொனால்ட் ட்ரம்ப் க்கும் அவர் வியந்து போற்றும் புட்டினுக்கும் இடையிலான உறவில்… நமக்கு உண்மை கிடைக்கும்,” என்றார்.

முன்னாள் ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட பேர்ணி சாண்டர்ஸ், ஞாயிறன்று "மாநில கூட்டாட்சி மன்ற உரை" (State of the Union) எனும் CNN நிகழ்ச்சியில் தோன்றிய போது, இதே கருத்துருக்கு குரல் கொடுத்தார். அவர், நீதிமன்றங்கள் மற்றும் ஊடகங்கள் பற்றிய ட்ரம்பின் தாக்குதல்களை மேற்கோளிட்டும் மற்றும் அவர் "நமது உளவுத்துறை அமைப்புகள் நவ-நாஜி பாணியில் செயல்படுவதாக தாக்குகிறார்" என்ற உண்மையை மேற்கோளிட்டும், ட்ரம்ப் ஐ "ஒரு சர்வாதிகார திசையில் நம்மை பெரிதும் நகர்த்தி கொண்டிருக்கும் ஒரு ஜனாதிபதியென நான் அஞ்சுகிறேன்" என்று விமர்சித்தார். நவம்பர் 8 தேர்தலுக்குப் பிந்தைய வாரங்களில் "ரஷ்ய இணைய ஊடுருவல்" சொல்லாடலைப் பரப்புவதில் உளவுத்துறை முகமைகள் வகித்த பாத்திரம் குறித்து அவை மீதான ட்ரம்பின் விமர்சனமே அக்கருத்துக்களாகும்.

இப்பிரச்சாரத்திற்கு மத்தியில், ட்ரம்ப் மீதான ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் இருதரப்பினரது விமர்சகர்களும், ட்ரம்ப் கூறியதன் அனேகமாக உண்மையான விடயத்தை மட்டும் கைப்பற்றி வருகிறது.

ஞாயிற்றுக்கிழமை காலை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேட்டி காணப்பட்ட பெரும்பாலான அரசியல்வாதிகள், ஜனநாயக கட்சியினரும் சரி குடியரசு கட்சியினரும் சரி, Fox இல் பதிவு செய்யப்பட்ட Bill O’Reilly உடனான Super Bowl கால்பந்து போட்டிக்கு முந்தைய நேர்காணலில் விளாடிமீர் புட்டின் குறித்து ட்ரம்ப் வழங்கிய கருத்துக்களை விமர்சித்தனர். “புட்டின் ஒரு கொலைகாரர்" என்று கூறி, ரஷ்ய ஜனாதிபதி மீதான ஒரு குற்றச்சாட்டை O’Reilly வெளிக் கொணர முயன்றார். ட்ரம்ப் பதிலளிக்கையில், “நம்மிடையே நிறைய கொலைகாரர்கள் இருக்கிறார்கள். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நம் நாடு மிகவும் அப்பாவியான நாடென்று நினைக்கிறீர்களா?” என்றார்.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையே "தார்மீகரீதியில் சமப்படுத்தி" காட்டப்பட்ட இது குறித்து அரசியல்வாதிகள் மற்றும் ஊடக விமர்சகர்களிடம் இருந்து ஒரு கண்டன அலையைத் தூண்டியது. மினிசொடாவின் ஜனநாயக கட்சி செனட்டர் Amy Klobuchar, ஏனையவர்களின் வார்த்தைகளையே எதிரொலித்து, ABC News க்கு கூறுகையில், “விளாடிமீர் புட்டின் என்ன செய்திருக்கிறாரோ அதை நம் நாட்டின் எந்தவொரு தலைவர்களுடன் நீங்கள் ஒப்பிட முடியாது. இந்த மனிதர் தான், இந்த ஆட்சி தான், நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப்படும் வகையில், உக்ரேனில் ஒரு பயணியர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தினார்… இந்த ஆட்சி தான், நமது தேர்தலில் மேலாளுமை செலுத்த முயன்றுள்ளதாக நாம் நம்புகிறோம்—இதை நம் சொந்த நாட்டின் 17 உளவுத்துறை முகமைகள் கூறுகின்றன. இதைவிட வேறெந்த ஒப்பீடும் அவசியமில்லையென நான் நினைக்கிறேன்,” என்றார்.

உண்மையைக் கூற வேண்டுமானால், ரஷ்ய அரசாங்கத்தை, புட்டினின் கடந்த கால அனைத்து KGB நடவடிக்கைகளைப் பொறுத்த வரையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பாரிய படுகொலைகள் விடயத்தில் மிகவும் ஒரு கத்துக்குட்டியாகும்.

ஜப்பானிய நகரங்கள் மீது இரண்டு அமெரிக்க அணுகுண்டுகளை வீசி முடித்துக் கொள்ளப்பட்ட, இரண்டாம் உலக போருக்குப் பின்னர் இருந்து, கொரியா, வியட்நாம், மத்திய அமெரிக்கா போர்களிலும், முதல் வளைகுடா போர், சேர்பியா மீதான வான்வழி போர், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக் மீதான தாக்குதல்கள், லிபியா மீதான குண்டுவீச்சு, சிரியா மற்றும் யேமன் அழிப்பில் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை பத்து மில்லியன்களாகும், இது தவிர இலத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா மற்றும் ஆசியாவில் சிஐஏ ஆதரவிலான தலையாட்டி ஆட்சிகளால் ஏற்படுத்தப்பட்ட இரத்த ஆறைக் குறித்து கூற வேண்டியதே இல்லை.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற பதினைந்து ஆண்டுகள் மத்திய கிழக்கில் ஒரு மில்லியனுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்றது, அத்துடன் மில்லியனுக்கும் அதிகமானவர்கள் அகதிகளாக ஆக்கப்பட்டார்கள். உலகில் ஏதேனும் ஒரு இடத்தில் யாரேனும் ஒருவர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் கொல்லப்படாமல் ஒரு நாளும் கழிவதில்லை. ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், சிரியா, ஈராக், யேமன், லிபியா, சோமாலியா மற்றும் ஏனைய நாடுகளிலும் ஆயிரக் கணக்கானவர்களை டிரோன் ஏவுகணை கொண்டு படுகொலை செய்வதற்குத் தனிப்பட்டரீதியில் ஒப்புதல் வழங்க "பயங்கர செவ்வாய்கிழமைகளை" வழமையாக நடத்தியவர், விளாடிமீர் புட்டின் கிடையாது, மாறாது அது பராக் ஒபாமா ஆவார்.

கடந்த மாதம் பால்டிக் நாடுகள் மற்றும் உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ இராணுவ நடவடிக்கைகளுக்கான ஒரு பயணத்தில் போர்வெறி கொண்ட குடியரசு கட்சி செனட்டர்களான ஜோன் மெக்கெயின் மற்றும் லிண்ண் கிரஹாம் ஆகியோருடன் இணைந்து, இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடனான அவரது நன்மதிப்புகளை மெருகூட்டிக் கொண்ட Klobuchar, ஒரு சாத்தியமான ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளர் அல்லது துணை-ஜனாதிபதி வேட்பாளராக நிலைநிறுத்தப்பட்டு வருகிறார்.

ரஷ்யா மீதான ஜனநாயக கட்சியின் பிரச்சாரத்தில் அங்கே ஒரு தெளிவான அரசியல் கணக்கீடு சம்பந்தப்பட்டுள்ளது. அது, ஒருபுறம், ஜனநாயக கட்சியினர் பரந்தளவில் ஆதரிக்கும் ட்ரம்ப் நிர்வாக கொள்கைகளது வலதுசாரி, ஜனநாயக விரோத மற்றும் பெருநிறுவன-சார்பிலான குணாம்சத்திலிருந்து கவனத்தை சிதறடித்து திசைதிருப்பும் ஒரு முயற்சியாக சேவையாற்றுகிறது.

அதே நேரத்தில், ஜனநாயக கட்சியினர் தற்போது நிலவும் எதிர்ப்பை அவர்களது சொந்த திட்டநிரலை ஊக்குவிப்பதற்கு சாதகமாக்கிக் கொள்ள முனைந்துள்ளனர். அவர்கள் நேட்டோவைப் பேணுவதற்கு ரஷ்ய-விரோத கொள்கையைப் பிரதானமாக பார்க்கும், மற்றும் மத்தியக் கிழக்கில் அமெரிக்க மேலாதிக்கத்திற்கு ஒரு சகித்துக் கொள்ள முடியாத தடையாக ரஷ்யாவைக் கருதும், மற்றும் முதலில் ரஷ்யாவைக் கையாளாமல் சீனாவைக் கையாள்வது சாத்தியமில்லை என்று நம்பும் ஆளும் வர்க்கத்தின் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு கன்னையைப் பிரதிநிதித்துவம் செய்கின்றனர்.

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிரான மற்றும் அது பிரதிநிதித்துவம் செய்யும் அபாயத்திற்கு எதிரான ஒரு போராட்டத்திற்கு ஜனநாயக கட்சியுடன் முறித்துக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையே பிரதிநிதித்துவம் செய்கிறது என்பதையே இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன. ஜனநாயக கட்சியினர் வெளிப்படுத்தும் எந்தவொரு எதிர்ப்பும், முற்றிலுமாக அமெரிக்க ஆளும் வர்க்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களின் கட்டமைப்பிற்குள்ளேயே உள்ளது. உண்மையான எதிர்ப்பானது, சமூக சமத்துவமின்மை மற்றும் முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான எதிர்ப்புடன் போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தை இணைத்து, தொழிலாள வர்க்கத்தில் வேரூன்றி இருக்க வேண்டும்.