ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Top US official warns “not much time” to prevent Korean war

கொரியப் போரை தடுப்பதற்கு “அதிக நேரம் இல்லை” என்று அமெரிக்க உயர்மட்ட அதிகாரி எச்சரிக்கிறார்

By Peter Symonds
4 December 2017

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர், வட கொரியாவுடன் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து நிலவும் பதட்டமான மோதலுக்கு ஏதேனும் ஒரு அமைதியான தீர்வை எட்டுவதற்கான நேரம் குறைந்து கொண்டே வருவதாக எச்சரித்தார்.

வட கொரியாவை, “அமெரிக்காவிற்கான மாபெரும் உடனடி அச்சுறுத்தல்” என்று விவரிக்கையில், மெக்மாஸ்டர் இதை அறிவித்தார்: “நாளுக்கு நாள் இது அதிகரித்து வருவதாகவே நான் நினைக்கிறேன், அதாவது நாங்கள் ஒரு பந்தயத்தில் இருக்கிறோம், உண்மையிலேயே, இந்த பிரச்சினையை தீர்க்க முடியும் என்ற ஒரு பந்தயத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.”

வட கொரிய தலைவர் கிம் ஜோங் உன் ஐ பற்றி குறிப்பிடுகையில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் இவ்வாறு கூறினார்: “ஒவ்வொரு முறையும் அவர் ஒரு ஏவுகணை சோதனையையும், அணுசக்தி சோதனையையும் நடத்தி, அவர் முன்னேறி வருகிறார்.”

அமெரிக்காவை சென்று தாக்கும் திறன் கொண்ட கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (ICBM) சோதனையை கடந்த வாரம் வட கொரியா நடத்தியதைத் தொடர்ந்து, கலிஃபோர்னியாவில் ரீகன் தேசிய பாதுகாப்பு அரங்கில் மெக்மாஸ்டர் பேசினார்.

அமெரிக்க வான் படையின் B1-B ரக லான்ஸர் மூலோபாய குண்டுவீச்சு விமானங்களுடன் இணைந்து F-35B ரக மின்னல் வேகத்தில் தாக்கும் போர் விமானங்கள் ஜப்பான் கடல் மீது பறக்கின்றன.

உண்மையில், ட்ரம்ப் நிர்வாக அதிகாரிகள், பியோங்யாங் ஆட்சியை எதிர்த்து அவர்கள் நிகழ்த்தும் இராணுவ ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காகவே வட கொரியாவின் அணுசக்தி திறன்களைப் பற்றி பெரியளவில் ஊதிப் பெரிதாக்கி வருகின்றனர். சமீபத்தில் சோதிக்கப்பட்ட ஏவுகணை அணுகுண்டை தாங்கிச் சென்றதா என்பதிலும்  அத்தகைய கனமான பொருளை தாங்கிச் செல்லும் அளவிற்கு அது திறன் வாய்ந்ததா என்பதிலும் சந்தேகம் இருப்பதால், அதன் சென்று தாக்கும் தொலைதூர மட்டமும் தெரியவில்லை. மேலும், அது வானில் இருந்து நொருங்கி விழுந்ததானது, வட கொரியா ஒரு சாத்தியமான மறுநுழைவு வாகனத்தைக் கொண்டிருக்கவில்லை என்பதையே குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம், ஒரு பாரிய இராணுவ தாக்குதல் உள்ளிட்ட, “அனைத்து தேர்வுகளும் மேசை மீது தயாராக உள்ளன” என்று மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளது. கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையில், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி, “போர் நிகழ்ந்தால், தவறேதும் இல்லாமல், வட கொரிய ஆட்சி முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும்” என அச்சுறுத்தினார்.

வட கொரியாவிற்கு எதிரான போருக்கான ஒரு மறைமுக ஒத்திகையாக சுமார் 230 விமானங்கள் மற்றும் 12,000 அமெரிக்க இராணுவ சிப்பாய்களும் பங்கேற்கும் மற்றுமொரு முக்கிய கூட்டு இராணுவ பயிற்சியை தென் கொரியாவுடன் அமெரிக்கா இன்று தொடங்குகிறது. இந்த படைப் பயிற்சி காட்சி ஆறு அமெரிக்க F-22 ரக வேட்டையாடும் விமானங்களையும் உள்ளடக்கியது. வட கொரியா மீதான எந்தவொரு முதல் தாக்குதலிலும் இந்த அதி நவீன மின்னல் வேகத்தில் தாக்கும் போர் விமானங்கள் பயன்படுத்தப்படும்.

ஒரு வார கால கண்கானிப்பு ஏஸ் 18 (Vigilant Ace) என்ற வான் போர் பயிற்சியில் பங்கேற்க அமெரிக்கா டசின் கணக்கான உச்சபட்ச பறக்கும் திறன் கொண்ட போர்விமானங்களையும், குண்டுவீசிகளையும் மற்றும் துணை விமானங்களையும் அனுப்பியுள்ளதாக தென் கொரிய பாதுகாப்பு அதிகாரி ஒருவர் CNN க்கு தெரிவித்தார். இதில், ஆறு F-22, ஆறு F-35, மற்றும் ஆறு EA-18G, அத்துடன் 10 F-15C மற்றும் F-16 போன்ற பல்வேறு ரக போர்விமானங்கள் அடங்கும். இவை அனைத்தும் B-1 மூலோபாய குண்டுவீசிகளுடனும், மற்றும் கூடுதலாக F-35 போர் விமானங்களுடனும் இணைக்கப்படும்.

பென்டகன் தனது போருக்கான தயாரிப்புகளுக்காக அதன் ஏவுகணை எதிர்ப்பு மற்றும் எச்சரிக்கை முறைகளை பெரிதுபடுத்துகின்றது. சனிக்கிழமை அன்று, மைக் ரோஜர்ஸ் மற்றும் ஆடம் ஸ்மித் என்ற இரண்டு அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், முன்னைய அதி உயர் பகுதி பாதுகாப்பு (Terminal High Altitude Area Defense-THAAD) பேட்டரிகளை நிறுவுவதற்கு ஏவுகணை பாதுகாப்பு முகவர்கள் (Missile Defense Agency-MDA) அமெரிக்க மேற்கு கடற்கரை பகுதியில் இடங்களை விசாரித்து கொண்டிருந்ததாக தெரிவித்தனர். அலஸ்கா மற்றும் கலிஃபோர்னியாவில் ஏற்கனவே தொலைதூர மட்டத்திலான தரைத்தள மத்தியத்தொடர் பாதுகாப்பு (Ground-based Midcourse Defense-GMD) இடைமறிப்பான்கள் நிறுவப்பட்டிருந்தன.

அமெரிக்கா போரை நோக்கி அடியெடுத்து வைத்துக்கொண்டே இருப்பதற்கான மற்றொரு அறிகுறியாக, ஹவாயில் அதிகாரிகள் மாதாந்திர அணுசக்தி தாக்குதல் எச்சரிக்கை சோதனைகளை மீட்டெடுத்து உள்ளனர். பனிப்போர் முடிந்த பின்னர் முதல் முறையாக கடந்த வெள்ளியன்று தாக்குதலுக்கான எச்சரிக்கை ஒலி ஒலித்தது.

அமெரிக்க-தென் கொரிய வான் பயிற்சிகளை பியோங்யாங் கண்டனம் செய்துள்ளது. ஞாயிறன்று உத்தியோகப்பூர்வ செய்தித்தாளான ரொடோங் சின்முன்னில் வெளிவந்த ஒரு விளக்கவுரை, வட கொரியாவிற்கு எதிரான இந்த போர் பயிற்சிகள் அனைத்தும், “எந்த நேரத்திலும் ஒரு அணு ஆயுத போருக்கு வழிவகுக்கக்கூடிய,” “ஒரு வெளிப்படையான, கடுமையான ஆத்திரமூட்டலாகவுள்ளது” என்று முத்திரை குத்தியது.

வட கொரிய ஆட்சியின் மீது முடக்கும் பொருளாதாரத் தடைகளை திணித்தும், மேலும் அதன் அணு ஆயுதங்களை அழிக்கவும், மற்றும் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்களை இல்லாதொழிக்கவும் வாஷிங்டன் விடுக்கும் கோரிக்கைகளுக்கு அடிபணியாவிட்டால் போர் நிகழுமென அச்சுறுத்தியும் வட கொரியாவை அமெரிக்கா நாலாப்புறமும் சுற்றி வளைத்துள்ளது. ஈராக் மற்றும் லிபிய தலைவர்கள் சதாம் ஹூசைன் மற்றும் மும்மர் கடாபி ஆகியோரின் கொடிய தலைவிதியை பியோங்யாங் ஏற்கனவே நன்கு அறிந்துள்ளது. இந்த நாடுகள் வெகுஜன அழிவு ஆயுதங்களைக் கொண்டிருந்ததாக கருதப்பட்டு அமெரிக்காவின் அழுத்தத்திற்கு உள்ளாகின.

ட்ரம்ப் நிர்வாகம் இரக்கமின்றி ஆசியாவையும், உலகையும் அணுவாயுதப் போரின் விளிம்பிற்கு இட்டுச்செல்கின்றது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த இராணுவத்தையும், ஆயிரக்கணக்கில் அணு ஆயுதங்களையும் கொண்டிருக்கும் அமெரிக்க படைக்கலத்திற்கு பொருத்தமான நிலையை வட கொரியா ஒருபோதும் அடைந்திருக்கப் போவதில்லை. அதன் எல்லைப் பகுதிக்கு அருகாமையில் பலமுறை அமெரிக்காவின் போர் பயிற்சிகளை எதிர்கொண்டுள்ள நிலையில், வட கொரிய தளபதிகள் தங்களது நாடு முற்றிலும் அழிவதைத் தடுப்பதற்கு முதலில் அவர்கள் போராட வேண்டும் என்று முடிவு செய்யலாம்.

வடிவமைக்கப்பட்டதாகவோ அல்லது தற்செயலானதாகவோ இருக்கும் ஒரு போர் அபாயத்தை மட்டுமே அதிகரிப்பதாக, நேரம் குறைந்து கொண்டே வருகிறது என்று வாஷிங்டனில் இருந்து எச்சரிக்கைகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

சனிக்கிழமை அன்று மெக்மாஸ்டர் இவ்வாறு அறிவித்தார்: “இந்த ஆயுத மோதல் பிரச்சினையை தீர்ப்பது குறித்து விவாதிக்க பல வழிகள் உள்ளன, ஆனால் அவர் (கிம் ஜோங்-உன்) மிக மிக நெருங்கி கொண்டே வரும் வேளையில், இது ஒரு பந்தயமாகத்தான் உள்ளது, மேலும் இன்னும் அதிக நேரம் இல்லை.”

இருப்பினும், மெக்மாஸ்டரின் “அமைதிப்பூர்வ” தீர்வான வட கொரியா மீதான ஒட்டுமொத்த பொருளாதார முற்றுகை என்பது, பியோங்யாங்கை கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்கத் தூண்டும் ஒரு போர் நடவடிக்கைக்கு எந்தவகையிலும் குறைவானது இல்லை. அவர் வட கொரியா மீதான “மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளுக்கும்,” மேலும் “ஏற்கனவே உள்ள பொருளாதாரத் தடைகளை முழுமையாக செயல்படுத்துவதற்கும்” அழைப்பு விடுத்தார்.

ஏற்கனவே உள்ள பொருளாதாரத் தடைகள் என்பவை, கிட்டத்தட்ட வட கொரியாவின் அனைத்து ஏற்றுமதிகள் மீதான மற்றும் அதன் இறக்குமதிகளில் ஒரு கணிசமான பகுதிகள் மீதான, அத்துடன் நிதி மற்றும் முதலீடு மீதான தடைகளையும் உள்ளடக்கியது. பியோங்யாங்கில் ஒரு உடனடி பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை தூண்டும் ஒரு நகர்வாக, சீனா வட கொரியாவிற்கான அனைத்து எரிசக்தி விநியோகங்களையும் குறைப்பதற்கு அமெரிக்கா தற்போது கோரி வருகிறது.

மெக்மாஸ்டர், வட கொரிய எண்ணெய் இறுக்குமதிகளை குறைப்பதற்கு சீனா ஒருதலைப்பட்சமான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று கூறினார். மேலும், “எரிபொருள் இல்லாமல் நீங்கள் ஏவுகணையை ஏவமுடியாது” என்றும் கூறினார். அவரும், ட்ரம்பும், ஒரு 100 சதவிகித எண்ணெய் தடை “இந்த நேரத்தில் பொருத்தமானதாக இருக்கும்” என்று கருதியதாக அவர் தெரிவித்தார்.

தனது வடக்கு எல்லைப் பகுதியில் ஒரு போருக்கான நிலைமையை எதிர்கொண்டுள்ள நிலையில், சீன அரசாங்கம், வட கொரியா மீதான பொருளாதாரத் தடைகள் குறித்த அமெரிக்காவின் முந்தைய கோரிக்கைகளுக்கு ஆர்வமின்றி இணங்கியுள்ளது. இருப்பினும், சீனாவின் நுழைவாயிலில் அமெரிக்க சார்பு ஆட்சியை நிறுவுவதற்கு வாஷிங்டன் இதனை சுரண்டுக்கூடும் என்பதால் பியோங்யாங்கில் ஒரு உள்வெடிப்பிற்கு வழிவகுக்கும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பெய்ஜிங் விரோதமாகவுள்ளது.

சீனாவை பொருளாதார ரீதியாகவும், மூலோபாய ரீதியாகவும் கீழறுக்க நோக்கம் வைத்திருந்த ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பு” கொள்கையில் தொடங்கி, தற்போது வட கொரியாவுடன் அதிகரித்துவரும் அமெரிக்க மோதல்கள் என்பது ஒரு மிகப் பரந்த அமெரிக்க மூலோபாயத்தின் ஒரு பகுதியாகும்.

இந்த போர் அபாயம், வாஷிங்டனில் நிலவும் தீவிரப்பட்ட அரசியல் உள்மோதலினாலும், சமூக சமத்துவமின்மை குறித்து எழுந்து வரும் பொதுமக்கள் சீற்றத்திற்கும், எதிர்ப்புக்கும் மத்தியில் ட்ரம்ப் நிர்வாகம் மீதான கடும் நெருக்கடியினாலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அனைத்து பக்கங்களிலும் முற்றுகையிடப்பட்ட நிலையில், மிக ஆழமடைந்திருக்கும் சமூக மற்றும் அரசியல் பதட்டங்களை வெளிநோக்கி திசை திருப்புவதற்கு நோக்கம் வைத்து, குறைந்தபட்ச மோசமான தேர்வாக ஒரு வெளிப்புற எதிரிக்கு எதிராக ஒரு பேரழிவுகரமான போரைத் தொடுக்க ட்ரம்ப் முடிவுக்கு வரக்கூடும்.