ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Indian Trotskyists hold meeting for release of Maruti Suzuki workers

மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பது குறித்து இந்திய ட்ரொட்ஸ்கிஸ்டுகள் கூட்டம் நடத்தினர்

By our correspondents 
16 December 2017

டிசம்பர் 10 அன்று, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (International Committee of the Fourth International- ICFI) இந்திய ஆதரவாளர்கள் சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறீபெரும்புதூரில், ஒரு உலகளாவிய வாகன மற்றும் மின்னணு மையத்தில் வெற்றிகரமான பொதுக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இக்கூட்டம், மாருதி சுசூகி தொழிலாளர்களை ஜோடிக்கப்பட்ட வழக்கில் இருந்து விடுவிப்பதற்கான ICFI இன் உலகளாவிய பிரச்சாரத்தின் ஒரு பாகமாக இருந்தது.

இந்தியாவில் ICFIஇன் ஆதரவாளர்கள், சிறீபெரும்புதூர் சுற்று வட்டாரத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்புப் பகுதிகளிலும் மற்றும் ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலங்களிலும் (Oragadam Special Economic Zones-SEZs) தங்களது பிரச்சாரத்திற்கு கணிசமான ஆதரவை திரட்டும் பொருட்டு ஒரு மாத காலம் தொடர் பிரச்சாரத்தை நடத்தினர்.

இக்கூட்டத்தில், ரெனோல்ட் நிசான் (Renault Nissan) மற்றும் ஒருங்கிணைந்த வாகன தொழிற்சாலையின் (Integral Coach Factory-ICF) தொழிலாளர்களும் பங்கேற்றனர். மேலும் இக்கூட்டம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நடத்தப்பட்டதோடு, முகநூல் வழியாக நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. கூட்ட உரைகளின் சுருக்கம் ஹிந்தியிலும் வழங்கப்பட்டது.

கூட்டம் ஆரம்பிப்பதற்கு சற்று முன்னர், மாநில காவல்துறையின்  குற்றவியல் புலனாய்வுத் துறையிலிருந்து (Crime Investigation Department-CID) இரண்டு அதிகாரிகள் கூட்ட அரங்கிற்குள் நுழைவதற்கு முனைந்து, கூட்டம் நடத்த காவல்துறையின் முன் அனுமதி பெற்றிருக்க வேண்டும் என்று கூறினர். அவர்களை நுழைவாயில் பகுதியிலேயே கூட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தடுத்து நிறுத்தி, உட்புறக் கூட்டத்திற்கு பொலிஸ் அனுமதி தேவையில்லை என்று வலியுறுத்தினர். CID அதிகாரிகள் கூட்டத்திற்கு இடையூறு செய்வதை நிறுத்துவதற்கு முன்னதாகவே கிட்டத்தட்ட 15 நிமிடங்களாக அவர்களுடன் விவாதம் தொடர்ந்து நடைபெற்றிருந்தது.

கடந்த ஏப்ரலில், ICFI ஆதரவாளர்கள் சிறீபெரும்புதூர் பேருந்து சந்திப்பில் மாருதி சுசூகி தொழிலாளர்கள் சிறையிலடைக்கப்பட்டது குறித்து ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்திய போது, பங்கேற்பாளர்களை மிரட்டும் ஒரு முயற்சியாக, காவல்துறையும், CID அதிகாரிகளும் அந்நிகழ்வை புகைப்படம் எடுத்ததுடன், காணொளி பதிவும் செய்து கொண்டனர்.

இக்கூட்டத்திற்கு தலைமை வகித்த சதீஷ் சைமன் உரையாற்றுகையில், மாருதி சுசூகி நிறுவனம், இந்திய பொலிஸ் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து தொடுத்த ஜோடிப்பு வழக்கின் விளை பொருளாக வட இந்திய மாநிலமான ஹரியானாவில் மானேசரிலுள்ள மாருதி சுசூகி வாகன ஒருங்கிணைப்பு தொழிலாளர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும், ஆலையில் உள்ள ஏனைய பதினெட்டு தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச குற்றச்சாட்டுக்களின் பேரில் மூன்று முதல் ஐந்து ஆண்டுகள் வரையிலும் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமாக கூறினார்.

ஸ்ரீபெரும்புதூர் கூட்டத்தின் ஒரு பகுதி

மாருதி சுசூகி தொழிலாளர்கள் இலக்கு வைக்கப்பட்டதற்கு, அவர்கள் தங்களது ஆலையில் நிலவிய அடிமை தொழிலாளர் நிலைமைகளை எதிர்த்து வேலை நிறுத்தங்கள், ஆலை உள்ளிருப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்ட ஒரு தொடர்ச்சியான போர்க்குணமிக்க போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டது தான் காரணம் என்று மேலும் சைமன் விளக்கினார்.

இக் கூட்டத்தில் பேசிய யுவன் டார்வின், வாதித்தரப்பு வழக்கு தொடர்பான சட்டரீதியான விவாதம் பற்றி கருத்து தெரிவித்தார். இந்த ஜோடிப்பு வழக்கு மீதான உலக சோசலிச வலைத் தளத்தின் ஐந்து பகுதிகள் கொண்ட தொடர்ச்சியான கட்டுரைகளை குறிப்பிட்டு, சாட்சியங்களிலும், விசாரணையிலும் இருந்த வெளிப்படையான நிலையற்ற தன்மைகள், இடைவெளிகள் மற்றும் முரண்பாடுகளை சுட்டிக்காட்டினார்.

தொழிலாளர்களுக்கு எதிராக தங்களது சதிவேட்டையை தொடங்குவதற்கு நிர்வாகமும் பொலிஸும் பயன்படுத்திக் கொண்ட  ஜுலை 18, 2012 மானேசர் ஆலை சம்பவம் குறித்து ஒரு சுதந்திரமான, நியாயமான மற்றும் பாரபட்சமற்ற விசாரணையை பொலிஸ் மேற்கொள்ளவில்லை என்றும் அவர் கூட்டத்தில் தெரிவித்தார்.

பொலிசார் சாட்சியங்களை புனைந்தனர் என்றும், போலி மருத்துவ அறிக்கைகளை தயார் செய்தனர் என்றும், மற்றும் சாட்சிகளுக்கு சொல்லிக் கொடுத்தனர் அல்லது அவர்களைப் பயிற்றுவித்தனர் என்றும் அவர் தெரிவித்தார். குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலாளர்களுக்கு எதிராக ஆதாரங்களை நிரூபிக்க வாதித் தரப்பு தவறியது. ஆதாரம் எதுவும், அதிலும் ஜோடிக்கப்பட்ட ஆதாரம் கூட எதுவும் இல்லாத நிலையில் முதன்முதலில் குற்றஞ்சாட்டப்பட்ட 148 பேரில் 117 பேரை விடுவிக்கும் நிலைக்கு நீதிபதி தள்ளப்பட்டார்.

இக்கூட்டத்தில் முக்கிய அறிக்கையை வெளியிட்ட அருண் குமார், ஜுலை 18 கைகலப்பை நிறுவனம் எப்படி தூண்டிவிட்டது, பின்னர் அது மனிதவள மேலாளர் அவினேஷ் தேவின் மரணத்திற்கு எப்படி வழிவகுத்தது, மேலும் அதன் தொடர்ச்சியாக, கொலை குற்றச்சாட்டின் பேரில் 148 தொழிலாளர்கள் மீது ஜோடிப்பு வழக்கு எவ்வாறு தொடரப்பட்டது என்றும் மற்றும் 2,300 தொழிலாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும் அனைத்தையும் விவரித்தார்.

“ஜுன் 2011 மத்தியில் இருந்து 2012 மத்தியில் வரை நடைபெற்ற மாருதி சுசூகி தொழிலாளர்களின் தைரியமிக்க போராட்டம்,” “இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தை உலுக்கிப்போட்டது. ஏனென்றால், அப்போராட்டம் குர்கான்-மானேசர் தொழில்துறைப் பகுதி மற்றும் இந்தியா முழுவதிலும் நிலவும் சுரண்டல் மிக்க கொடூரமான வேலை நிலைமைகளுக்கு எதிரானதொரு முனையத்தை பிரதிநிதித்துவப்படுத்தியது” என்று அவர் கூறினார்.

சிறைத் தண்டனைகள் குறித்து குறிப்பிடுகையில், அருண்குமார் இவ்வாறு தெரிவித்தார்: “ஜப்பானைத் தளமாகக் கொண்ட சுசூகி மோட்டார்ஸ், ஃபோர்டு, பி.எம்.டபிள்யூ. மற்றும் ஜெனரல் மோட்டார்ஸ் போன்ற பெரியளவிலான நாடுகடந்த பெருநிறுவனங்களின் முதலீட்டு இடமாக விளங்கும் இந்தியாவின் தொழில்துறைப் பகுதிக்குள் நிலவும் மலிவு கூலியுழைப்பு நிலைமைகள் மீதான அனைத்து எதிர்ப்புகளையும் நசுக்குவதற்கு நோக்கம் கொண்டதாகவே இந்த கடுமையான தண்டனைகள் இருந்தன.”

மேலும் அவர் தொடர்ந்து இவ்வாறு கூறினார்: “சிறையிலடைக்கப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பதற்கான ஒரு சர்வதேச பிரச்சாரத்தை விஸ்தரிக்கும் விதமாக, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, பூகோள அளவில் இயங்கும் நாடுகடந்த நிறுவனங்களுக்கு எதிராக பொதுவானதொரு போராட்டத்தில் சர்வதேசிய தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்ட முனைந்தது.”

மாருதி சுசூகி தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை தனிமைப்படுத்துவதில் முனைப்புடன் இருந்த இந்திய ஸ்ராலினிச கட்சிகள் மற்றும் அவற்றுடன் இணைந்த தொழிற்சங்கங்களின் அரசியல் பங்கு பற்றி அருண்குமார் விளக்கமளித்தார். மேலும், இது தொழிலாள வர்க்கத்தின் மீது இந்திய ஆளும் உயரடுக்கினரால் நடத்தப்பட்டுவரும் தாக்குதலை எவ்வாறு பலப்படுத்தியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாருதி சுசூகி தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கு குறித்து எண்ணற்ற கட்டுரைகளையும் அறிக்கைகளையும் பிரசுரித்தும் மற்றும் குர்கானில் இருந்து உடனுக்குடனான தளச்செய்தி அறிக்கைகளை வழங்கியும், அவர்களை ஆரம்பத்தில் இருந்தே பாதுகாத்து வந்த உலக சோசலிச வலைத் தளத்தின் (WSWS) கொள்கை ரீதியான பதிவுகளை அருண்குமார் மதிப்பாய்வு செய்தார்.

கூட்டத்திற்கு பின்னர், ரெனோல்ட் நிசான் தொழிலாளர்கள் WSWS நிருபர்களுடன் உரையாற்றிய போது, அவர்களது வேலை நிலைமைகள் பற்றி விளக்கியதோடு, சிறையிலிடப்பட்ட மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பதற்கான பிரச்சாரத்திற்கு அவர்கள் தமது ஆதரவையும் தெரிவித்தனர்.

சந்திரசேகர், வயது 30, ரெனோல்ட் நிசான் தொழிலாளியாக கடந்த ஏழு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அதற்கு முன்பு ஹூண்டாய் வாகன ஆலையில் பணிபுரிந்துள்ளார். அவர், சிறீபெரும்புதூர் மற்றும் ஒரகடம் சிறப்பு பொருளாதார மண்டலங்களில் இருந்து பல நிறுவனங்கள் திடீரென காணமற்போனது பற்றி பேசினார்.

“நோக்கியா, ஃபாக்ஸ்கான் மற்றும் பி.ஒய்.டி. போன்ற நிறுவனங்கள் பத்து வருடங்களுக்கு குறைவாகவே இப்பகுதியில் இயங்கிவந்த போதிலும், அவை மூடிவிட்டு பிற நாடுகளுக்கு சென்றுவிட்டன. எங்களது நிறுவனத்திலும் நாங்கள் அதேமாதிரியான சூழ்நிலைக்கு முகம்கொடுத்து வருகின்ற நிலையில், எங்களது போராட்டங்களை தமிழ்நாடு மாநிலத்திற்குள் மட்டுமாக வரையறுத்துவிட முடியாது” என்று தெரிவித்தார்.

“மாருதி சுசூகி தொழிலாளர்களின் உரிமைகளுக்காக நீங்கள் போராடுவதை நான் வரவேற்கிறேன். இதுபோன்றதொரு சர்வதேச அமைப்பு பற்றி நான் முதல் முறையாக இப்பொழுது தான் கேள்விப்படுகிறேன். உலகளாவிய பெருநிறுவனங்களை நாம் எதிர்க்க வேண்டும் என்பதுடன், சர்வதேச தொழிலாள வர்க்க ஐக்கியத்திற்காகவும் போராட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். இந்த நிறுவனங்களில் தொழிலாளர் போராட்டங்கள் வெடிக்கும்போது, நிர்வாகம் பெரும்பாலும் நிறுவனத்தை மூடிவிட்டு பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றன” எனவும் தெரிவித்தார்.

ரெனோல்ட் நிசான் நிறுவனத்தின் மற்றொரு ஊழியரான 27 வயதான ரமேஷ் என்வர், இந்தியாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் நிறுவன மேலாண்மைக்கு உடந்தையாக இருப்பதை சுட்டிக்காட்டினார். மேலும், “அனைத்து கட்சிகளும் உலகளாவிய நிறுவனங்களுக்கு ஆதரவாக வேலை செய்கின்றன. இத்தகைய நிறுவனங்களில் உள்ள தொழிலாளர் பிரச்சினைகளைப் பற்றி அவர்கள் ஒருபோதும் பேசுவதில்லை” என்று அவர் தெரிவித்தார்.

“தமிழ்நாட்டிலுள்ள இரண்டு முக்கிய கட்சிகளான அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் (AIADMK) மற்றும் திராவிட முன்னேற்றக் கழகமும் (DMK), மாநிலத்தில் உலகளாவிய நிறுவனங்கள் முதலீடு செய்வதன் மூலமாகத்தான் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படுகின்றன என்ற நிலையில் தொழிலாளர்கள் அவர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால், நீங்கள் கூறியது போல, வெளிநாட்டு நிறுவனங்கள் மலிவு கூலியுழைப்பை சுரண்டுவதன் மூலமாக பெரும் இலாபத்தை ஈட்ட முடியும் என்பதால் மட்டும் தான் இங்கு முதலீடு செய்கின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.

“நிசான் நிறுவனத்தில், நிறுவனத்திற்கு உடந்தையாகவுள்ள தொழிற்சங்கத்திற்கு எதிராக ஒரு சுயாதீனமான தொழிற்சங்கத்தை ஸ்தாபிக்க நாங்கள் போராடி வருகிறோம். நாங்கள் அதில் வெற்றி பெற்றால், மாருதி சுசூகி தொழிலாளர்களைப் போலவே நாங்களும் ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிலைமைகளின் மேம்பாட்டிற்காக  போராடுவோம்.”

“சிறையிலிடப்பட்டுள்ள மாருதி சுசூகி தொழிலாளர்களை விடுவிப்பது என்பது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச அளவிலான அணிதிரள்வை சார்ந்திருப்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். உங்களது சர்வதேச அமைப்பு குறித்து எங்களது ஆதரவை எப்பொழுதும் நீங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளலாம்.”

மாருதி சுசூகி நிறுவனத்தில் இருந்த வேலை நிலைமைகளைப் போலவே சிறீபெரும்புதூரில் இருப்பதாக 28 வயதான ஜவஹர் என்பவர் தெரிவித்தார். “பெரும்பாலான நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்கள் கிராமங்களைச் சார்ந்த விவசாய குடும்பங்களில் இருந்து வருகின்றனர். மேலும், கிராமங்களில் இருந்து படித்த பெரும்பாலான இளைஞர்கள் தரமான  வேலைகளைத் தேடி நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்” என்று கூறினார்.

“பெரும்பாலான அரசியல் கட்சிகள், அதிலும் குறிப்பாக பிரதான கட்சிகள், இத்தகைய நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளதோடு, அந்நிறுவனங்களுக்கு ஒப்பந்த தொழிலாளர்களை வழங்குவதன் மூலம் இலாபம் ஈட்டுகின்றன,” இந்நிலையில், “தொழிலாளர் பிரச்சினைகளுக்காக அவர்கள் எப்படி போராடுவார்கள்? உங்களது சர்வதேச அமைப்பு பற்றி மேலும் அறிந்துகொள்ள நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம்” என்று ஜவஹர் மேலும் தெரிவித்தார்