ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Far-right party enters Austrian government

அதிவலது கட்சி ஆஸ்திரிய அரசாங்கத்தில் நுழைகிறது

Peter Schwarz
19 December 2017

ஆஸ்திரிய அரசாங்கத்தினுள் அதிவலது சுதந்திர கட்சி (FPÖ) திங்களன்று உள்நுழைந்திருப்பது ஒட்டுமொத்த ஐரோப்பாவிலும் ஓர் அரசியல் திருப்புமுனையைக் குறிக்கிறது. இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய காலகட்டத்தில், ஹிட்லரின் மூன்றாம் ரைஹ் இன் குற்றங்களைத் தொடர்ந்து பாசிசவாத-எதிர்ப்பானது உத்தியோகபூர்வ அரசு சித்தாந்தத்தின் தூணாக மாறியிருந்த மேற்கு ஐரோப்பாவின் பாகமாக பாரம்பரியமாக பார்க்கப்பட்டு வந்த ஒரு நாட்டில், நவ-நாஜி சூழலை கொண்ட அதிதீவிர வலது வட்டாரங்களுடன் நெருங்கிய தொடர்புள்ள அரசியல்வாதிகள் அதிகாரத்திற்கு வந்துள்ளனர். பொலிஸ், இராணுவம் மற்றும் உளவுத்துறை சேவைகள் அனைத்தும் FPÖ அமைச்சர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன.

பழமைவாத ஆஸ்திரிய மக்கள் கட்சி (ÖVP) முதன்முதலில் 17 ஆண்டுகளுக்கு முன்னர், அப்போது ஜோர்ஜ் ஹைடர் தலைமையில் இருந்த FPÖ உடன் ஒரு கூட்டணி அரசாங்கம் அமைத்த போது, அது போராட்டம் மற்றும் சீற்றத்தின் ஒரு சர்வதேச அலையைத் தூண்டியது. ஐரோப்பிய ஒன்றியம் வியன்னா மீது தடையாணைகள் விதித்தது. இம்முறை, அதுபோன்ற எதுவும் நடக்கவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசாங்கம் பாராட்டுக்கள் மற்றும் ஆதரவைப் பெற்றுள்ளது.

 “FPÖ ஐரோப்பிய அரசியலின் முதன்மை போக்கில் இணைகிறது,” என்று வியன்னாவின் Der Standard எழுதியது. சுவிஸ் பத்திரிகை Neue Zürcher Zeitung அந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை "வலதுசாரி பழமைவாதத்தின் ஒரு சில அடையாள கொள்கைகள் என்றும், ஆனால் ஒட்டுமொத்தமாக உறுதியான மற்றும் நல்ல அணுகுமுறைகளாக" வர்ணித்தது. Frankfurter Allgemeine Zeitung பொறுத்த வரையில், புதிய அரசாங்கம் "அனைத்தினும் முதலாவதாக வழமையான ஜனநாயகத்தின் ஒரு பாகையில்" உள்ளது.” அந்த அரசாங்கத்தை விரும்ப வேண்டும் என்பது அவசியமில்லை, “ஆனால் அது மதிக்கப்பட வேண்டும்,” என்பதை அது சேர்த்துக் கொண்டது.        

 “ஆஸ்திரியாவின் புதிய அரசாங்கத்தை கம்பிக்கூண்டுக்குள் அடைப்பதால்" எந்த பலனும் இல்லை என்று Die Welt கருத்து வெளியிட்டது. அதற்கு "ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட" வேண்டும். "பொறுமையாக விடையிறுக்குமாறு" ஐரோப்பாவுக்கு ஆலோசனை வழங்கிய அப்பத்திரிக்கை, “நாம் இடதிலிருந்து செவிமடுப்பதைப் போல, ஆஸ்திரியா நரகத்தின் வாசலில் இல்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டது. சான்சிலர் அங்கேலா மேர்க்கெலும் ஜேர்மன் அரசாங்கமும் ஒட்டுமொத்தமாக நெருக்கமான கூட்டுறவுக்கு திறந்திருப்பதாக ஜேர்மனியின் அரசு செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.    

இத்தகைய புகழ்ச்சியான எதிர்வினைகளுக்கான காரணம், FPÖ மிகவும் மிதவாதமாக வளர்ந்துள்ளது என்பதல்ல. அதற்கு எதிர்விதமாக, புதிய துணை சான்சிலரான Heinz-Christian Strache இன் தலைமையின் கீழ், அக்கட்சி மிகவும் தீவிரமாக மாறியுள்ளது. ஆனால் 2000 இல் மனக்குமுறலை உருவாக்கிய நிலைப்பாடுகள்—அதாவது, வெளிநாட்டவர் விரோத மனோபாவம், தேசிய பேரினவாதம், ஜனநாயக உரிமைகளை மதியாமை, ஒடுக்குமுறை அரசு எந்திரத்தைப் பலப்படுத்துதல் ஆகியவை—இப்போது அனைத்து முதலாளித்துவ அரசாங்கங்கள் மற்றும் கட்சிகளின் உத்தியோகபூர்வ கொள்கைகளாகி உள்ளன.

உலகெங்கிலும் உள்ள முதலாளித்து சமூகம் இரண்டு அல்லது மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் இருந்ததை விட மிக அதிகளவில் சமநிலை பிறழ்ந்துள்ளது. இது சமீபத்தில் பிரசுரிக்கப்பட்ட உலக சமத்துவமின்மை அறிக்கையில் மீண்டுமொருமுறை பலமாக ஆவணப்படுத்தப்பட்டது. ஒரு சிறிய சிறுபான்மையின் செல்வவளம் அதிகரித்து கொண்டிருக்கையில், நூறு மில்லியன் கணக்கான மக்களோ அதிகரித்தளவில் தாங்கொணாத வாழ்க்கை நிலைமைகளுக்குள் மூழ்கடிக்கப்பட்டுள்ளனர். இதன் விளைவாக கோபமும் சமூக எதிர்ப்பும் அதிகரித்து வருகிறது.

ஆளும் வர்க்கம், அதிவலதின் வேலைத்திட்டத்தை ஏற்று —ஆஸ்திரியாவில் போலவே— அதை அரசாங்கத்திற்குள் வரவேற்று, கூர்மையாக வலதுக்கு நகர்வதன் மூலமாக விடையிறுத்து வருகிறது. ஆளும் உயரடுக்கு, ஒடுக்குமுறை அரசு எந்திரத்தை ஆயத்தப்படுத்துவது, மிகவும் பிற்போக்குத்தனமான சக்திகளைப் பலப்படுத்துவது, இனவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத மனோபாவத்தைத் தூண்டிவிடுவது ஆகியவற்றின் மூலம் வரவிருக்கும் வர்க்க மோதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. இத்தகைய அபிவிருத்திகள் 1930 களை நினைவூட்டுகின்றன, இருப்பினும் இம்முறை யூதர்களுக்கு பதிலாக முஸ்லீம்கள் பிரதான பலிக்கடாவாக ஆக்கப்படுகின்றனர்.

ஆஸ்திரியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் அதிவலதின் வளர்ச்சியை, அனைத்து ஸ்தாபக கட்சிகளினது, குறிப்பாக ஒருசமயம் தொழிலாள வர்க்கத்தின் நலன்களைக் பிரதிநிதித்துவம் செய்வதாக கூறிக் கொண்ட கட்சிகளினது, வலது நோக்கிய திருப்பத்தின் உள்ளடக்கத்தில் இருந்து மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஆஸ்திரியாவில், சமூக ஜனநாயகக் கட்சி (SPÖ) 1970 இல் இருந்து, இடையில் வெறும் ஏழாண்டு தவிர, சான்சிலர் பதவியை ஏற்றிருந்துள்ளது. SPÖ நீண்டகாலத்திற்கு முன்னரே அதன் சோசலிச இலட்சியங்களைக் கைவிட்டு விட்ட போதினும், 1970 களில் இருந்து இப்போது வரையில் அது சமூக சீர்திருத்தங்களை உத்தரவாதப்படுத்தும் கட்சியாக பார்க்கப்பட்டது. ஆனால் அது FPÖ க்கு முன்பினும் நெருக்கமாக சென்று, இடைப்பட்ட ஆண்டுகளில் தொடர்ந்து வலதுக்கு நகர்ந்துள்ளது. 

FPÖ க்கு SPÖ வழி அமைத்து கொடுத்திருக்காவிட்டால், அதிவலது FPÖ ஆல் இந்தளவுக்கு எளிதாக அதிகாரத்திற்கு வந்திருக்க முடியாது. Burgenland மாநிலத்தில், SPÖ இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னரே FPÖ உடன் ஒரு கூட்டணியை உருவாக்கியது. சமீபத்திய கூட்டாட்சி தேர்தல் பிரச்சாரத்தில், SPÖ இன் முன்னணி வேட்பாளரும், அப்போதைய சான்சிலரும் ஆன கிறிஸ்டியன் கெர்ன், கூட்டாட்சி மட்டத்தில் அந்த அதிவலதுடன் ஒரு கூட்டணியை உருவாக்குதவற்கான அவர் விருப்பத்தை அறிவித்தார்.    

இதேபோன்ற அபிவிருத்திகள் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா எங்கிலும் நடந்து வருகின்றன. அதிகரித்து வரும் சமூக பதட்டங்கள் மற்றும் வர்க்க மோதலின் அச்சுறுத்தலுக்கு முன்னால், ஸ்தாபக கட்சிகள் வலதுடன் இணைவதை நோக்கி அணிவகுத்து, அவற்றின் அணிகளைத் தீர்மானித்து வருகின்றன. இதிலிருந்து அதிவலது இரண்டு விதத்தில் இலாபமடைகிறது: அதன் கொள்கைகளை ஸ்தாபக கட்சிகளே ஏற்பதிலிருந்து அது பலமடைகிறது, அடுத்து சமூக ஜனநாயக கட்சிகள் வலது நோக்கி திரும்புவதால் அதன் வெகுஜனவாத வாய்சவுடால் உடன் இடதிலிருக்கும் வெற்றிடத்தை நிறைத்துக் கொள்கின்றன. இதன் விளைவாக, பெருந்திரளான மக்களிடையே திரண்டு வரும் கோபமும் எதிர்ப்பும் எந்தவித முற்போக்கான வழியும் காண முடிவதில்லை.  

ஜேர்மனியில், சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 12 ஆண்டுகளுக்கு முன்னர் அதன் ஹார்ட்ஸ் தொழிற்சட்டங்களை திணித்து சமூக எதிர்புரட்சிக்கு தலைமை ஏற்றது, இச்சட்டங்கள் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நிலைமைகளில் ஒரு பாரிய சீரழிவை ஏற்படுத்தின. SPD அப்போதிருந்து, (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம்-கிறிஸ்துவ சமூக ஒன்றியம் ஆகிய) பழமைவாதிகளுடனான கூட்டணிகளில் இளைய பங்காளியாக சேவையாற்றி, உள்நாட்டில் அரசு எந்திரத்தையும் வெளிநாடுகளில் இராணுவத்தையும் கட்டி எழுப்பி உள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சரும் முன்னாள் SPD தலைவருமான சிக்மார் காப்ரியேல், அதிவலது கட்சியான ஜேர்மனிக்கான மாற்றீட்டின் (AfD) கொள்கைகளை ஏற்குமாறு இப்போது SPD க்கு அழைப்புவிடுத்து வருகிறார். Der Spiegel இன் சமீபத்திய கருத்துரையில், SPD “மறுபங்கீடு மீதான பிரச்சினைகளில்" ஒருமுனைப்படுவதற்கு பதிலாக, “அடையாளம்,” “சொந்த நாடு" மற்றும் "மேலாதிக்க கலாச்சாரம்" ஆகியவற்றிற்கான விருப்பத்தில் ஒருமுனைப்பட வேண்டுமென காப்ரியேல் வாதிட்டார்.

இத்தாலியில் “மத்தியவாத-இடது" என்றழைக்கப்படும் அரசாங்கங்களால் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வந்துள்ள சமூக வெட்டு நடவடிக்கைகளில், சமூக ஜனநாயக PD (ஜனநாயகக் கட்சி) இதில் ஒரு முக்கிய பாத்திரம் வகித்திருந்த நிலையில், இவை வெளிநாட்டவர் விரோத ஐந்து நட்சத்திர இயக்கம் (Five Star movement) உட்பட பல்வேறு அதிவலது கட்சிகளின் வளர்ச்சியை ஊக்குவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கை கட்டளைகளுக்கு எழுந்த எதிர்ப்பலையில் இருந்து பதவிக்கு வந்த அலெக்சிஸ் சிப்ராஸின் கிரேக்க போலி-இடது சிரிசா, இன்னும் அதிக நஞ்சார்ந்த சிக்கன நடவடிக்கைகளைத் திணிக்க அதிவலது சுதந்திர கிரேக்கர்கள் கட்சியுடன் (Anel) ஒரு கூட்டணி அரசாங்கம் உருவாக்கியது.

அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்திற்கு இடையிலான இணக்கமான உறவு ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் ஜெயிப்பதற்கு நிலைமைகளை உருவாக்கியது. ட்ரம்ப் அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான குணாம்சம் முன்பினும் தெளிவாகி வருகின்ற நிலையில், ஜனநாயகக் கட்சியோ அதை வலதிருந்து தாக்கி வருகிறது. பணக்காரர்களுக்கான ட்ரம்பின் வரி வெட்டுக்கள், புலம்பெயர்ந்தோர், ஜனநாயக உரிமைகள் மற்றும் சமூக நல வழிவகைகள் மீதான அவர் தாக்குதல்களையும், அல்லது வட கொரியா மற்றும் ஈரானுக்கு எதிரான அவர் போர் அச்சுறுத்தல்கள் ஆகியவற்றுக்கான எதிர்ப்பில் அவர்கள் ஒருமுனைப்படவில்லை, மாறாக ரஷ்யாவை நோக்கிய அவர் நிலைப்பாடு போதுமானளவுக்கு ஆக்ரோஷமாக இல்லை என்பதற்காக எதிர்க்கின்றனர்.

ஆஸ்திரியாவில் வலதை நோக்கிய திருப்பமானது, அரசியல் பிற்போக்குத்தனம், வறுமை, சமூக வெட்டுக்கள், ஒடுக்குமுறை மற்றும் போர் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டத்திற்கு சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான, சோசலிச பாரிய இயக்கம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது.

சமயத்திற்கேற்ப தங்களை சோசலிஸ்டாக மற்றும் மார்க்சிஸ்டாக கூட வர்ணித்துக் கொள்ளும் பல்வேறு போலி-இடது அமைப்புகள், ஜேர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சிகள், இடது கட்சி அல்லது அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் வாலைப் பிடித்து தொங்கி கொண்டுள்ளன. இந்த வலதுசாரி கட்சிகளுக்கு அழுத்தமளித்து, முற்போக்கான கொள்கைகளுக்கு அவற்றின் ஆதரவை வென்றுவிடலாமென அவை வாதிடுகின்றன. இது தொழிலாள வர்க்கத்தை முடமாக்கும் மற்றும் வலதைப் பலப்படுத்தும் ஓர் அபாயகரமான பிரமையாகும்.

அதிகரித்து வரும் உலகளாவிய பதட்டங்கள் மற்றும் தவிர்க்கவியலாமல் ஒரு புதிய உலக போருக்குத் தள்ளிச் செல்லும் இராணுவவாதத்தின் வெறித்தனமான வளர்ச்சியை உருவாக்கி கொண்டிருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் உலகளாவிய நெருக்கடி, எந்தவொரு சமூக அல்லது அரசியல் விட்டுக்கொடுப்பும் சாத்தியமில்லை என்ற அளவுக்கு வந்துவிட்டது. இதனால் தான் முதலாளித்துவ ஊடகங்களும் ஸ்தாபக கட்சிகளும் பங்கிரங்கமாக "ஐரோப்பிய அரசியலின் பிரதான போக்கிற்குள்" அதிவலது FPÖ ஐ வரவேற்றுக் கொண்டிருக்கின்றன.   

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவும் (ICFI) அதன் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளும் மட்டுமே ஒரு சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தை சர்வதேச அளவில் புரட்சிகரமாக அணித்திரட்டுவதற்காக போராடி வரும் உலகில் உள்ள ஒரே அரசியல் போக்காக உள்ளது. அதிவலதின் வளர்ச்சியை எதிர்த்து போராட தீவிரமாக விருப்பமுறும் அனைவரும், இப்போராட்டத்தில் இணையவும் மற்றும் ICFI ஐ கட்டியெழுப்பதில் பங்கெடுக்கவும் முடிவெடுக்க வேண்டும்.