ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Socialist Equality Party (Sri Lanka) stands for local government elections

சோசலிச சமத்துவக் கட்சி (இலங்கை) உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றது

By our correspondents
23 December 2017

இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி (சோ.ச.க.) வரவிருக்கும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மூன்று சபைகளுக்கு 61 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பிரதேச சபைகள் உட்பட 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் பெப்ரவரி 10 அன்று இடம்பெறவுள்ளன.

கட்சியின் நீண்டகால அரசியல் குழு உறுப்பினரான விலானி பீரிஸ் தலைமையில், கொழும்புத் தலைநகருக்கு அருகில் உள்ள கொலன்னாவ நகர சபைக்கு 23 வேட்பாளர்களை சோ.ச.க. நிறுத்தியுள்ளது. சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினரான எம்.தேவராஜா தலைமையில், 24 உறுப்பினர்கள், மத்திய பெருந்தோட்ட நகரான ஹட்டனுக்கு அருகில் அம்பகமுவ பிரதேச சபைக்காக போட்டியிடுகின்றனர். மற்றொரு சோ.ச.க. அரசியல் குழு உறுப்பினர் பி. சம்பந்தன் தலைமையில், போரினால் நாசமாக்கப்பட்ட வடக்கின் யாழ்ப்பாண குடாநாட்டில் ஊர்காவற்துறையில் 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தொழிலாள வர்க்கம், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற ஏழைகள் மத்தியில் அனைத்துலக சோசலிச கொள்கைகளுக்காக போராடுவதில் கறைபடியாத சரித்திரம் கொண்ட கட்சி உறுப்பினர்களும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் இருந்து ஈர்க்கப்பட்ட ஆதரவாளர்களும் எங்களது வேட்பாளர்களில் அடங்குகின்றனர்.

ஏகாதிபத்தியத்தின் மூன்றாம் உலக யுத்த அச்சுறுத்தல், சர்வதேச நாணய நிதியத்தின் ஆணையின் படி அரசாங்கம் முன்னெடுக்கும் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கும் எதிராக, ஒரு அனைத்துலகவாத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தேர்தலில் போட்டியிடும் ஒரே கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இரண்டு வருடங்களுக்கும் மேலாக உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை தள்ளிவைத்தனர். அரசாங்கத்தின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள் பற்றி பொதுமக்கள் மத்தியில் விமர்சனங்கள் அதிகரித்த நிலைமையில் அவர்கள் இறுதியாக தேர்தலுக்கு அழைப்பு விடுக்க நிர்பந்திக்கப்பட்டனர்.

அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்க, தொகுதி எல்லை நிர்ணய அறிக்கைக்கு காத்திருக்கின்றோம், ஒரு புதிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தைத் தயாரிக்கின்றோம், என்பவை போன்ற பலவேறு சாக்குப் போக்குகளை கூறிவந்தது. எனினும் உண்மையான காரணம், சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ.ல.சு.க.) மற்றும் விக்ரமசிங்கவின் ஐக்கிய தேசியக் கட்சியினதும் (ஐ.தே.க.) கூட்டணி அரசாங்கம், தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளின் எதிர்த் தாக்குதலை சந்திக்க நேரும் என பீதியடைந்துள்ளது.

2015 ஜனவரி ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவை வெளியேற்றி சிறிசேன பதவிக்கு வந்தார். அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட 26 ஆண்டுகால இனவாத யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாகவும், வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதாகவு, ஜனநாயக உரிமைகளை மீள ஸ்தாபிப்பதாகவும், சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தார்.

நவசமசமாஜக் கட்சி, முன்னிலை சோசலிசக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற போலி-இடது குழுக்களும், அதேபோல் கல்வியாளர்களும், மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளை ஏமாற்றுவதற்காக சிறிசேனவின் "நல்லாட்சி" மோசடியை ஆதரித்தன.

அதிகாரத்திற்கு வந்து சிறிது காலத்திற்குள்ளேயே, சிறிசேனவும் விக்கிரமசிங்கவும் நாட்டின் வெளியுறவுக் கொள்கையை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் பிராந்திய நட்பு நாடான இந்தியாவிற்கும் சார்பாக மாற்றி, சீனாவிடம் இருந்து தமது அரசாங்கத்தை தூர விலக்கி வைத்தனர். அரசாங்கம் கடந்த மூன்று ஆண்டுகளில், அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு சீனாவை கீழ்ப்படுத்தும் மற்றும் தேவைப்பட்டால் யுத்தத்திற்கு செல்லும் இலக்குடன், பெய்ஜிங்கிற்கு எதிராக வாஷிங்டனின் இராணுவ கட்டியெழுப்பலுடன் நாட்டை ஒருங்கிணைத்துள்ளது.

உண்மையில், இராஜபக்ஷவை அகற்றி, சிறிசேனவை நியமித்து, நாட்டின் புவிசார்-மூலோபாய அணிசேர்வை மாற்றுவதற்கு வாஷிங்டனால் திட்டமிடப்பட்ட ஆட்சி மாற்ற நடவடிக்கையை மூடி மறைப்பதற்கான போர்வையே நல்லாட்சி இயக்கம் என அழைக்கப்பட்டது. வாஷிங்டன், இராஜபக்ஷவின் சர்வாதிகார ஆட்சியை எதிர்க்கவில்லை மாறாக பெய்ஜிங்கிடம் இருந்து நிதி உதவி பெறுவதையும் ஆயுதங்களை கொள்வனவு செய்வதையுமே எதிர்த்தது.

மூன்று ஆண்டு காலத்துக்குள், அரசாங்கம் முற்றிலும் வெகுஜன அதிருப்திக்கு உள்ளாகியுள்ளது. 2008 நிதிய சரிவினால் குறிக்கப்பட்ட பூகோள முதலாளித்துவ பொறிவின் பின்னணியில், இராஜபக்ஷ போன்றே சிறிசேனவின் அரசாங்கமும் பிணை எடுப்புக் கடன்களுக்காக சர்வதேச நாணய நிதியத்தை நோக்கித் திரும்பியது. சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவின் கீழ், அரசாங்கம் 2014ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 7.5 சதவீதமாக இருந்த அரச செலவை 2020ல் 3.5 சதவீதமாகக் குறைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றது. இது வரியை உயர்த்துவதுடன் பொதுக்கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் நலன்புரி சேவைகள் போன்ற சமூகத் திட்டங்களை வெட்டிக் குறைப்பதையும் தனியார்மயமாக்கத்தையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

இந்த தாக்குதல்களை எதிர்த்து கடந்த பல மாதங்களாக, மின்சக்தி, பெற்றோலிய, புகையிரத, சுகாதார மற்றும் பெருந்தோட்ட துறைகளையும் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஊதிய அதிகரிப்பு, தொழில் பாதுகாப்பு மற்றும் வேலை நிலைமை அபிவிருத்தியையும் கோருகின்றனர். இந்தத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் இறுதிநாளான வியாழக்கிழமை, அம்பாந்தோட்டை துறைமுகத்தின் வேலை நீக்கப்பட்ட சுமார் 500 தொழிலாளர்கள் மீண்டும் வேலை கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அரசாங்கம் துறைமுகத்தை சீனக் கம்பனியிடம் ஒப்படைத்தபோது அவர்கள் வேலை இழந்தனர்.

இன்னும் இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள வடக்கில் வாழும் தமிழ் மக்கள், போரின் பேரழிவை சரிசெய்யவும் தற்போதைய இராணுவ அடக்குமுறையை தடுக்கவும் அரசாங்கம் எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்காததனால், தொடர்ந்தும் எதிர்ப்பு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதுவரை தொழிற்சங்கங்கள், போலி இடது அமைப்புகளின் உதவியுடன் தொழிலாளர் போராட்டங்களுக்கு குழிபறித்து வருகின்றன. நவம்பர் மாதம், அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் போலி-இடது தலைவர்களின் காட்டிக்கொடுப்பினால், பல்கலைக்கழக மாணவர்கள் தாம், மாதக் கணக்காக முன்னெடுத்த போராட்டத்தை கைவிட்டனர்.

தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் ஏழைகளின் போராட்டத்தின் மீது அரசாங்கம் இராணுவம், பொலிஸ் மற்றும் குண்டர்களை கட்டவிழ்த்து விட்டு வன்முறையை நாடியுள்ளது. ஜூலையில், பெற்றோலியத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தை முறியடிக்க, அரசாங்கம் அத்தியாவசிய சேவை விதிகளை சுமத்தியதுடன், இராணுவத்தையும் கட்டவிழ்த்து விட்டது. ஒரு வாரத்திற்கு முன்னர், அரசாங்கம் மீண்டும் புகையிரத வேலைநிறுத்தத்தை நசுக்குவதற்காக கடுமையான அத்தியாவசிய சேவை விதிகளைப் பயன்படுத்தியது. இந்த பொலிஸ்-அரச வழிமுறைகள், ஒவ்வொரு நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் நெருக்கடி நிறைந்த முதலாளித்துவ ஒழுங்கை பாதுகாக்க சர்வாதிகார வழிமுறைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதன் பாகம் ஆகும்.

இலங்கையின் ஆளும் உயரடுக்கின் ஒவ்வொரு பிரிவும் வளரும் போராட்டங்களைப் பற்றி பதட்டமாக உள்ளது. ஒரு "ஐக்கிய அரசாங்கத்தில்" இருந்தாலும், சிறிசேனவின் ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐ.தே.க.யில் இருந்து தனியாகவே தேர்தலில் போட்டியிடுகின்றன. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்டு அரசாங்கத்தை இயக்கும் ஐ.தே.க.யை விட தனக்கு தனியான அடையாளம் இருப்பதாக காட்டுவதற்கு ஸ்ரீ.ல.சு.க. ஏக்கத்துடன் முயற்சிக்கின்றது.

இராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ.ல.சு.க. மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு எதிர்க் கன்னையையும் சிறிசேன எதிர்கொள்கின்றார். அரசாங்கத்திற்கு பெருகிவரும் எதிர்ப்பை சுரண்டிக்கொண்டு, அதை கவிழ்க்க ஒரு இயக்கத்தை உருவாக்க இராஜபக்ஷ முயல்கிறார். கடந்த சில மாதங்களாக, சிறிசேனவும் அவருக்கு விசுவாசமான அமைச்சர்களும் இராஜபக்ஷ கன்னையை வளைத்துப் போடவும் அரசாங்கத்தின் மீதான அதன் விமர்சனத்தை நிறுத்தவும் முயற்சித்தனர். ஸ்ரீ.ல.சு.க. அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டும் என இராஜபக்ஷ குழு கோரியதால் அந்த கலந்துரையாடல்கள் தோல்வியடைந்தன.

புதிதாக உருவாக்கப்பட்ட பொதுஜன முன்னணி (PJP or Common Peoples Party) என்ற பெயரில் வேட்பாளர்களை களமிறக்குவதன் மூலம் ஆளும் கூட்டணியிலான நெருக்கடியில் இலாபம் பெற இராஜபக்ஷவின் பிரிவு முயற்சிக்கின்றது. அதிகாரத்திற்கு வரவும் தொழிலாள வர்க்கத்தை நசுக்குவதற்கும் ஒரு இனவாத இயக்கத்தை கட்டியெழுப்பும் நோக்குடன், இராஜபக்ஷ தமிழர்-விரோத பேரினவாதத்தை தூண்டிவிட்டும், பெளத்த மதகுருமாருக்கு அழைப்பு விடுத்தும் அரசாங்கத்துடன் போட்டியிடுகிறார்.

"இராஜபக்ஷவின் சர்வாதிகாரத்தையும்" அவரது ஊழல் நிறைந்த ஆட்சியையும் அகற்றுவதற்காக எனக் கூறிக்கொண்டு, ஜே.வி.பி. சிறிசேன ஆட்சிக்கு வர ஒத்துழைத்தது. சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கத்திற்கு சில மாதங்கள் நேரடியாக ஆதரவளித்த பின்னர், இப்போது ஜே.வி.பி. ஊழலை தோற்கடிப்போம் கிராமத்தின் அரசியல் அதிகாரத்தை கட்டி எழுப்புவோம் என்ற சுலோகத்தை கூறிக்கொண்டு, அரசாங்க கூட்டணியில் இருந்து தன்னை தூர விலக்கிக்கொள்ள முயல்கிறது.

பிரதான தமிழ் முதலாளித்துவக் கூட்டணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, வடக்கு மற்றும் கிழக்கில் மட்டுமே தேர்தல்களில் போட்டியிடுகின்றது. பாராளுமன்றத்தில் உத்தியோகபூர்வ எதிரக் கட்சியாக இருந்தாலும், தமிழ் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஒரு உண்மையான பங்காளியாக செயல்படுகிறது.

இவை உள்ளூராட்சி மன்ற தேர்தலாக இருந்தாலும், ஒவ்வொரு நாட்டிலும் உள்ள உழைக்கும் மக்களைப் போன்ற தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏழைகளும் ஒரே அடிப்படை பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். சமூக மற்றும் வாழ்க்கை நிலைமைகளின் மீதான தாக்குதல்கள் மற்றும் சர்வாதிகார வடிவிலான ஆட்சியை நோக்கிய நகர்வுகளுடன் ஒரு உலகளாவிய இராணுவ மோதல்களின் அச்சுறுத்தலும் நெருங்கிக்கொண்டிருக்கின்றது. ஆளும் கட்சிகளும் எதிர்க்கட்சி என்று அழைத்துக்கொள்ளும் கட்சிகளும் இந்த தீர்க்கமான பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கு இந்த தேர்தல்களைப் பயன்படுத்துவார்கள்.

சோசலிச சமத்துவக் கட்சி, இலங்கை ஆளும் உயரடுக்கின் நெருக்கடியை விளக்கி, சர்வதேச சோசலிசத்தை அடிப்படையாகக் கொண்ட கட்சியின் மாற்றீட்டு வேலைத்திட்டத்தை தெளிவுபடுத்தும் ஒரு தேர்தல் அறிக்கையை எதிர்வரும் நாட்களில் வெளியிடும். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைப் பகுதியான சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும், முதலாளித்துவ வர்க்கத்தின் ஒவ்வொரு பிரிவிலும் இருந்து தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்காக போராடுவதிலும், சோசலிசக் கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தைக் கட்டியெழுப்ப தொழிலாளர்களை அணிதிரட்டவும் கிராமப்புற ஏழைகளை வழிநடத்தவும் செயற்படுவதில் ஒரு சாதனையைக் கொண்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி போட்டியிடும் பிரதேசங்களில் மட்டுமல்லாமல் ஏனைய பகுதிகளிலும், இந்த வேலைத்திட்டத்தை விளக்குவதற்காக நாம் கூட்டங்களையும் வேலைத்தள பிரச்சாரங்களையும் விரிவுரைகளையும் நடத்த ஏற்பாடு செய்கின்றோம். சோ.ச.க. ஒரு மில்லியன் ரூபா தேர்தல் மற்றும் கட்சி வளர்ச்சி நிதியை சேகரிக்க ஆரம்பித்துள்ளது. இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்குமாறு நாம் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம்.