ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Amazon workers ask “$100 billion man” Jeff Bezos: where’s my cut?

“100 பில்லியன் டாலர் மனிதன்” ஜெஃப் பெஸோவை, அமேசான் தொழிலாளர்கள் கேட்கிறார்கள்: என் வெட்டு எங்கே?

By our reporters 
9 December 2017

கடந்த மாத இறுதியில், கறுப்பு வெள்ளி (Black Friday) பல்பொருள் கடை விற்பனைகள் அமேசான் பங்குகளை புதிய உச்சங்களுக்கு  இட்டுச்சென்ற பின்னர், அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஜெஃப் பெஸோவின் தனிப்பட்ட செல்வம் 100 பில்லியன் டாலரை தாண்டியுள்ளது என்பது தெரியவந்தது. தற்போது, முன்னாள் பணக்காரர் மைக்ரோஸாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸை விஞ்சி கூடுதலாக 10 பில்லியன் டாலருடன், பூமியின் பெரும் பணக்காரராக பெஸோஸ் இருக்கிறார்.     


பால்டிமோரில் அமேசான் விநியோக மையம்

சர்வதேச அமேசான் தொழிலாளர் குரல் (International Amazon Workers Voice-IAWV) செய்தியாளர்கள், பெஸோவின் செல்வ வளம் குறித்து பால்டிமோரில் உள்ள பகுதி நேர அமேசான் “கூட்டாளிகளின்” (தொழிலாளர் மற்றும் நிர்வாகத்திற்கு இடையேயுள்ள சுரண்டல் உறவை மறைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு நாசுக்கான சொல்) மனப்பாங்கு பற்றி விவாதிக்க அவர்களை பேட்டி கண்டபோது, மக்களிடையே நிலவிய பெரும் வெறுப்பையும், செல்வத்தை பகிர்ந்து கொள்வதற்கான அறை கூவல்களையும், மற்றும் சமூக கோபத்தையும் அவர்கள் சந்தித்தனர்.

“திரு பெஸோவையும், மற்ற நிர்வாகங்களையும் அவர்களது அலுவலகங்களில் இருந்து வெளியே வரவும், கடைகள் இருக்கும் தளத்திற்கு வரும்படியும் கூறுங்கள்” என்று தன்னைத் தானே இரு குழுந்தைகளுக்கான ஒரு தாயாக அடையாளப்படுத்திக் கொண்ட ஒரு தொழிலாளி தெரிவித்தார். “நாளின் முடிவில், ஒரு மணிநேரத்திற்கு பெறும் 12 டாலருக்கு ஒரு நாள் முழுவதும் என்ன செய்தோம் என்பது பற்றி அவர்கள் ஒருபோதும் உணர மாட்டார்கள். ஒரு வருடத்தில் நாம் சம்பாதிப்பதை விட அவர்களது அலுவலகத்தில் உட்கார்ந்து கொண்டே அவர்கள் அதிகம் சம்பாதிக்கின்றனர்,” என்று அவர் கூறினார்.

சிறு எண்ணிக்கையிலான பன்முக பெரும் கோடீஸ்வர தலைமை நிர்வாக அதிகாரிகளும், நிதி செயற்பாட்டாளர்களும் எவ்வாறு சர்வதேச தொழிலாளர் சக்தியிடமிருந்து இன்னும் மேலதிகமாகவும் மோசமாகவும் தொகைகளை பிழிந்து எடுக்க வழிவகை செய்கின்றது என்பதை பெஸோவின் செல்வம், பெருகியமுறை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு ஒரு சிலரிடம் மட்டும் எப்போதும் செல்வம் குவிந்து, பெரும்பாலோனோர் சுரண்டலுக்கு உள்ளாகும் இந்த செயல்முறை ஒரு அரசியல் முறிவுப் புள்ளியை அடைந்துள்ளது.

விடுமுறை நாட்களில் அவரது பணிச் சூழல் பற்றி விளக்கி, தொழிலாளர் தாய் இவ்வாறு கூறினார்: “5 மணி நேரங்களில் 100,000 பொட்டலங்களை தயார் செய்து முடிப்பதற்கு மட்டுமே அவர்கள் எங்களை பணியில் வைத்திருக்கிறார்கள், ஆனால் இறுதியில் பார்த்தால் எங்களது குழந்தைகளை கவனித்துக் கொள்ளும் அளவிற்கு கூட போதுமான பணம் எங்களுக்கு வழங்கப்படவில்லை. நான் ஒரு தனித்திருக்கும் தாயாகவுள்ள நிலையிலும், எனக்கு உணவு முத்திரை வழங்கப்படவில்லை. மாதத்திற்கு எனது வீட்டு வாடகை 850 டாலர் ஆகும். மேலும், சமையல் எரிவாயு, மின்சாரக் கட்டணம், பேருந்து அனுமதிச்சீட்டு போன்றவற்றிற்கும் செலவழித்து, நான் எனது இரண்டு குழந்தைகளையும் வளர்க்க வேண்டும்.

“நாம் வேலையை விட முடிவு செய்தால், யார் இந்த பொட்டலங்களை எல்லாம் வெளியே அனுப்புவார்கள்?” என்று அவர் கூறினார், அதன் மூலமாக நிறுவனத்தால் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களின் சமூக சக்தி பற்றி குறிப்பிட்டார். “உங்களை பணக்காரர்கள் ஆக்குவது நாங்கள் தான்” என்றும் தெரிவித்தார்.

பெஸோவின் செல்வத்தை அபகரிப்பது குறித்த IAWV இன் அழைப்பை பால்டிமோரில் உள்ள S எனும் ஒரு தொழிலாளி உடனடியாக ஒப்புக்கொண்டதோடு, அவரும் அவரது சக ஊழியர்களும், “அதிக நேரம் பணி செய்தவர்கள் ஆனால் குறைவாக ஊதியம் வழங்கப்பட்டவர்கள்” என்று தெரிவித்தார். WSWS புள்ளி விபரங்கள், பெஸோவின் செல்வத்தில் இருந்து மிகச்சிறிய தொகையை கொண்டு உலகப் பசியை போக்க முடியும் என்று காட்டுவது குறிப்பாக வருத்தமளிப்பதாக உள்ளது என்று S கூறினார். டசின் கணக்கான மற்ற தொழிலாளர்கள் நின்று துண்டு பிரசுரங்களை எடுத்துச்சென்றனர். பெரும்பாலானோர் கடந்து சென்று கொண்டே ”எங்களது வெட்டு எங்கே? என்று வாய்சவடலாக கேள்வி எழுப்பினர்.

உழைக்கும் மக்கள் மீதான மாபெரும் சுரண்டலில் பெஸோ மட்டும் தனியாக இல்லை. கடந்த மாதம், கொள்கை ஆய்வுகளுக்கான நிறுவனம் (Institute for Policy Studies-IPS) மூலமாக வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, அமெரிக்க நிதியாதிக்கக்குழுவின் முன்கண்டிராத எடுத்துக்காட்டாக, அமெரிக்காவின் பாதிக்கும் மேற்பட்ட செல்வத்தின் மீது வெறும் மூன்று தனிநபர்கள் தான் ஏகபோக உரிமை கொண்டுள்ளனர்.

அமேசான் அதன் விற்பனைக்கு ஒரு கப்பல்வணிக மையமாக பால்டிமோரை தேர்வு செய்துள்ளது. மேலோட்டமான கடந்த மாத அறிக்கைகள், பால்டிமோர் பிராந்தியத்தில் ஒரு கட்டத்தில் உலகின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி ஆலையாக இருந்த பழைய பெத்லஹேம் எஃகு ஆலையின் தளத்தில் இந்த முறை அமேசான் தனது நான்காவது விநியோக மையத்தை கட்டமைக்க முயன்றதை காட்டுகின்றன. கப்பல் வணிகம் மற்றும் உற்பத்தி துறைகளில் அதன் வரலாற்றுக்காக பால்டிமோரை பயன்படுத்தி, ஒரு குறைவூதிய மற்றும் உயர்ந்தபட்ச சுரண்டலுக்கான தொழிலாளர் சக்தியை உருவாக்க மனச்சோர்வடைந்த நகர மக்கள்தொகையை அமேசான் சாதகமாக்கிக் கொண்டது.

“இது மிக மிக கடினமானது. இந்த இடத்தில் ஒரு இயந்திர மனிதனைப் போல நாங்கள் நடத்தப்படுகிறோம்” என்று மற்றொரு தொழிலாளி கூறினார். பழிவாங்கப்படுதலுக்கு அஞ்சி தனது பெயரை தெரிவிக்க அவர் விரும்பவில்லை. மேலும், “வேலையை விட்டு செல்ல வேண்டுமானால், அதற்கு அவர்கள் கால அவகாசம் எடுத்துக்கொள்ள” வேண்டியிருப்பது போன்ற அமேசானின் பல கொள்கைகளை எதிர்ப்பதாக அந்த தொழிலாளி தெரிவித்தார்.

“மருத்துவ விடுப்பு எடுப்பதற்கு எனக்கு நேரம் பாக்கியில்லாத நிலையில், எனது உடல்நிலை சரியில்லாமற் போனால் கூட, என்னை வீட்டிற்கு செல்ல அவர்கள் அனுமதிக்கமாட்டார்கள். ஒருவேளை செல்ல நேரிட்டால், நான் பணிநீக்கம் செய்யப்படுவேன்” என்று அவர் தெரிவித்ததோடு, வேலையில் இருக்கும் போது “உண்மையிலேயே நோயுற்ற” மக்களுக்கு கூட விடுப்புக்கு அனுமதி வழங்கப்படாததை அவர் பார்த்துள்ளதாகவும் கூறினார்.


கிளென், பால்டிமோர் அமேசான் தொழிலாளி

அமேசான் நிறுவனத்தோடு ஒப்பந்தம் வைத்துள்ள ஒரு தற்காலிக நிறுவனத்தின் தொழிலாளியான கிளென், அவரது தற்காலிக நிறுவனத்தின் மூலமாக முழுநேர பணி செய்யக்கூடிய ஒரு சில நபர்களில் அவரும் ஒருவராக இருப்பது “அதிர்ஷ்டவசமானது” என்று நினைப்பதாகக் கூறினார். ஏனைய தொழிலாளர்கள், பருவகால சுழற்சியில் பணியமர்த்தப்பட்டவர்கள், இந்நிலையில் பெரும்பாலும் முழுநேர பணியை மட்டும் தான் நம்ப முடியும். பெஸோவின் 100 பில்லியன் டாலர் செய்தி குறித்து அவர் அதிர்ச்சியடைந்து இவ்வாறு கூறினார்: “இங்கே பணியாளர்கள் போலுக்கு செலுத்துவதற்காக பீட்டரை கொள்ளையடிக்கிறார்கள். ஆனால் மொத்தப் பணமும் அவரிடம் உள்ளது.”

தொழிலாளர்கள் எதையாவது செய்ய வேண்டும், ஆனால் “தொழிற்சங்கத்தில் இணைவது என்பது எந்த வேறுபாட்டையும் உருவாக்காது” என்று கிளென் உணர்ந்தார். அவர்கள் எப்போதும் முதலாளிகளுக்கு சேவை செய்கிறார்கள், அவர்கள் தொழிலாளர்களை பயன்படுத்துவதற்கும், தவறாக பயன்படுத்துவதற்கும் உதவுகிறார்கள், அல்லது அவர்கள் மாற்றத்தை விரும்பும்போது அவர்களது வாயை மூடச் செய்துவிடுகிறார்கள்” என்றும் தெரிவித்தார். IAWV செய்தியாளர் ஒருவர், தொழிலாளர்கள் தங்களது நலன்களைப் பாதுகாப்பதற்காக பழைய தொழிற்சங்கங்களுக்கு பதிலாக தொழிலாளர்களுக்கான புதிய அமைப்புகளை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அத்துடன் இரு கட்சிகளுடனும் ஒரு முழுமையான அரசியல் முறிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் விளக்கமளித்தார்.

பெஸோவின் தவறான வழியில் சேகரிக்கப்பட்ட சொத்து குறித்து உலக சோசலிச வலைத் தளத்தில் சமீபத்தில் பிரசுரமான ஒரு முன்னோக்கு கட்டுரையில் குறிப்பிடப்பட்டது போல, “இத்தகைய பிரமாண்டமான செல்வ குவிப்பு, தற்போதைய சூழ்நிலையில் உலக சோசலிச மாற்றத்திற்கான நிலைமைகள் கருவுற்று இருப்பதை நிரூபித்துள்ளது.”

சர்வதேச அமேசான் தொழிலாளர் குரல் அனைத்து அமேசான் தொழிலாளர்களுக்கும் விடுத்துள்ள அறைகூவலில், தங்களது நிறுவனத்தில் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக அடிமட்ட தொழிலாளர் குழுக்களை அமைக்க அதன் வலைத் தளத்திற்கு எழுதும்படியம் அத்துடன் ஒட்டுமொத்த முதலாளித்துவ அமைப்புக்கு எதிராக சர்வதேச அளவில் அனைத்து தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்த பாடுபடும்படியும் கூறியள்ளது.