ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Security and the Fourth International, the Gelfand Case and the deposition of Mark Zborowski
An open letter from David North to Susan Weissman

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம், கெல்ஃபான்ட் வழக்கும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியமும்

சூசன் வைய்ஸ்மானுக்கு டேவிட் நோர்த் எழுதிய பகிரங்கக் கடிதம்

10 November 2015

திருமதி வைய்ஸ்மான் அவர்களுக்கு,

சென்ற கோடையில் Critique: Journal of Socialist Theory [1] இல் வெளியான ”மார்க் ‘எத்தியான்’ ஸ்பொரோவ்ஸ்கி: ஏமாற்றும் சித்திரம்” என்ற உங்களது கட்டுரையின் இரண்டாம் பகுதியின் நிறைவில் நீங்கள் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவையும் வழக்கறிஞர் அலன் கெல்ஃபான்டையும் தூற்றும் விதமாக கொடுத்திருக்கும் தவறான வாசகங்களை முழுமையாகவும், சந்தேகத்திற்கு இடமளிக்காத வகையிலும் மற்றும் பகிரங்கமாக திரும்பப் பெற வேண்டும் என்பதற்கான ஒரு உத்தியோகபூர்வ கோரிக்கையாக இக்கடிதம் எழுதப்படுகிறது.

எங்களது ஆட்சேபத்துக்குரிய பகுதிகள் "பிற்சேர்க்கை" (Postscripts) என்ற தலைப்பின் கீழ் வருகின்றன. அவை வெறுமனே புள்ளிவிபரத் தவறுகள் அல்ல, வருந்தத்தக்கவை ஆனால் உள்நோக்கமற்றவை என்றும் எடுத்துக்கொள்ள முடியாது, மாறாக அவை வேண்டுமென்றே செய்யப்பட்ட பல்வேறு உண்மைகளின் திரித்தல்களையும் மற்றும் அப்பட்டமான பொய்களையும் கொண்டுள்ளன.

சோவியத் இரகசியப் பொலிஸ், GPU-NKVD இன் முகவர்கள் நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவியது தொடர்பாக 1975 இல் அனைத்துலகக் குழு ஆரம்பித்த விசாரணையை மதிப்பிழக்கச் செய்யும் நோக்கத்தோடு நீங்கள் அவதூறுகளில் இறங்கியுள்ளீர்கள். பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் என்று அழைக்கப்படுகின்ற இந்த விசாரணையானது, நான்காம் அகிலத்தின் முக்கிய நபர்களையும், பின்னர் இறுதியாக, ட்ரொட்ஸ்கியையும் படுகொலை செய்வதில் ஸ்ராலினிச முகவர்கள் ஆற்றிய பாத்திரத்தின் மீது மிக விரிவானதொரு அம்பலப்படுத்தலாக இன்றளவும் இருந்து வருகிறது. உண்மையில், Critique இல் நீங்கள் வெளியிட்டிருக்கும் இரண்டு கட்டுரைகளுமே கூட—அவை உள்ளபடியே வரலாற்றில் வேரூன்றியிருப்பதைப் பொறுத்த வரையில்—அவற்றில் முறையான உபயக்குறிப்புகள் (attribution) இல்லையென்றாலும், 40 ஆண்டுகளுக்கு முன் அனைத்துலகக் குழு நடத்தியிருந்த ஆய்விலிருந்து தான் பெருமளவு விபரங்களை எடுக்கின்றன. பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் எனும் அந்த முன்னோடியான வேலையை நீங்கள் சொந்தப் பயன்பாட்டிற்கு எடுத்துக் கொண்டதை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளத் தவறியமையானது புத்திஜீவித கருத்துத் களவாடல் ஆகும்.

அலன் கெல்ஃபான்ட் மீதும், அவர் 1979 இல் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிராக தொடுத்த வழக்கின் மீதுமான உங்களது தாக்குதல் குறிப்பாக கண்டனத்திற்குரியதாகும், ஏனென்றால் அவரது முயற்சிகள் தான் ஜிபியு முகவரான (காலென், ஃபிராங்க்ளின் மற்றும் டொக்ஸீ என்ற) சில்வியா கோல்ட்வெல் பற்றிய ஆவணங்களை, நீதிபதிகள் குழுவின் எழுத்துப்பிரதிகள் போன்றவற்றை, வெளியிடுவதற்கு இட்டுச் சென்றன. சோவியத் இரகசிய பொலிஸின் குற்றவியல் நடவடிக்கைகள் குறித்த படைப்புகளில் வரலாற்றாசிரியர்களால் இந்த ஆவணங்கள் தான் பரவலாய் மேற்கோள் காட்டப் பெறுகின்றன. [2]

அனைத்துலகக் குழு மற்றும் கெல்ஃபான்ட் மீதான உங்களின் தாக்குதலின் கீழமைந்திருக்கும் அரசியல் உள்நோக்கங்களை நீங்கள் மறைத்திருக்கிறீர்கள் என்ற உண்மையின் மூலமாக உங்களது “பிற்சேர்க்கையின்” நேர்மையற்ற மற்றும் தீய மனோபாவம் தெள்ளத்தெளிவாகி விடுகிறது. பிற்சேர்க்கையைத் தொடர்ந்து, அங்கே ஒரு “உறுதிமொழி அறிக்கை” உள்ளது, அது “எழுத்தாளரின் கருத்துப்படி எந்த முக்கிய கருத்து வேறுபாடும் இல்லை” என்றுரைக்கிறது. [3] திருமதி வைய்ஸ்மான், Critique வாசகர்களிடம் முக்கிய தகவலை திட்டமிட்டு மறைத்து, ஒரு மோசடியான உறுதிமொழி அளித்த குற்றத்தை நீங்கள் புரிந்திருக்கிறீர்கள்.

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணைக்கு உங்களது அதீத வெறுப்பு, பிரிக்கவியலாதவாறு உங்களின் அரசியல் சேர்க்கைகளுடன் பிணைந்துள்ளது. நீங்கள் 40 ஆண்டுகளாக பப்லோவாத அரசியலில் ஊக்கத்துடன் செயல்பட்டு வருபவர் என்பதோடு, நான்காம் அகிலத்திற்குள் ஜிபியு (GPU) ஊடுருவியமையை மற்றும் ட்ரொட்ஸ்கியின் படுகொலையை சுற்றிய சூழல்கள் மீதான அனைத்துலகக் குழுவின் விசாரணையை, இந்த அத்தனை தசாப்தங்களிலும், எதிர்த்து வந்துள்ளீர்கள். அதிகளவில் முன்னாள் சோசலிச தொழிலாளர் கட்சி அங்கத்தவர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சொலிடாரிட்டி (Solidarity) அமைப்பில் நீங்கள் அங்கத்தவராக இருக்கிறீர்கள் என்பதுடன், 1986 இல் அதன் பத்திரிகையான Against the Current இன் ஆசிரியர் குழுவில் இணைந்தீர்கள். உங்களது நெருக்கமான அரசியல் சகாக்கள் பலரும் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையை ஒரு “அவதூறுப் பிரச்சாரம்” என முன்பிருந்தே பகிரங்கமாகவே கண்டனம் செய்து வருகிறார்கள். சில்வியா கோல்ட்வெல்லை சோசலிச தொழிலாளர் கட்சி ஒரு “முன்னுதாரணமான தோழர்” என புகழ்ந்ததற்கு, திருமதி. வைய்ஸ்மான், நீங்கள் எந்த ஆட்சேபமும் தெரிவிக்கவில்லை என்பதோடு, நான்காம் அகிலத்திற்குள் அரசின் ஊடுருவலை வெளிக்கொணரவும் அம்பலப்படுத்தவும் செய்யப்பட்ட முயற்சிகளை “முகவர் வேட்டை” என்றும் மற்றும் “பாதுகாப்பற்ற உணர்வின் கோளாறு” என்றெல்லாம் சோசலிச தொழிலாளர் கட்சி குணாம்சப்படுத்தியதுடன் உடன்படுகிறீர்கள்.

அனைத்துலகக் குழுவின் ஆய்வைக் குறித்து நீங்கள் தனிப்பட்டரீதியில் பொய்களைப் பரப்பி உள்ளீர்கள், சோசலிச தொழிலாளர் கட்சியின் ஸ்தாபக அங்கத்தவர்களில் ஒருவரான மறைந்த ஆல்பேர்ட் குளோட்சருக்கு (Albert Glotzer) நீங்கள் 1996 இல் எழுதிய ஒரு கடிதத்தில் பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையை “குப்பை” என வருணித்திருந்தீர்கள். பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணை, பிரதான முதன்மைபோக்கு வரலாற்றாசிரியர்களால் வாசிக்கப்படுகிறது என்பதற்கான அறிகுறிகளே கூட உங்களை அதிகமாக தொந்தரவு செய்கிறது. ஒரு பிரபல சோவியத் வரலாற்றாசிரியரது ஒரு படைப்பைக் குறிப்பிட்டு நீங்கள் குளோட்சருக்கு எழுதினீர்கள்: ”வோல்கோகோனோவின் (Volkogonov) நூலில் மிகவும் கவலைக்குரியதாக இருப்பது என்னவென்றால், ட்ரொட்ஸ்கியின் படுகொலை குறித்த ஒரு பகுதியில், அவர் தனக்கான அடிப்படையை சுடோபிளட்டோவ் (Sudoplatov) கூறியதில் இருந்து மட்டுமல்லாமல், அதனினும் மோசமாக ‘கெல்ஃபான்ட் வழக்கில்’ அமெரிக்க ஹீலியவாதிகள் (அல்லது ’நோர்த்தியவாதிகள்’ - Northites) கூற்றுகளிலிருந்து எடுத்துக் கொண்டிருக்கிறார் என்பது தான். [4] உங்களுக்கே நன்கு தெரியும், சுடோபிளட்டோவ், ட்ரொட்ஸ்கியின் படுகொலையைத் திட்டமிடுவதில் ஒரு மைய பாத்திரமாற்றிய படுபயங்கரமான கேஜிபி (KGB) கொலைகாரர் ஆவார். ஒரு GPU-NKVD கொலைகாரரை விடவும் மோசமானவர்களாக “நோர்த்தியவாதிகளை” நீங்கள் கருதுவது என்பது அனைத்துலகக் குழு மீதான உங்களது அகநிலை வெறுப்பின் ஆழத்தை மட்டுமல்லாமல் உங்களது ஸ்பொரோவோஸ்கி வேலைக்குக் அடியிலிருக்கும் அரசியல் கண்ணோட்டத்தையும் அம்பலப்படுத்துகிறது.

சில்வியா கோல்ட்வெல்லை பாதுகாப்பதை சோசலிச தொழிலாளர் கட்சி கைவிட வேண்டும் என்றும், கட்சியின் ஒரு பிரதான தலைவரான ஜோசப் ஹான்சன், 1930கள் மற்றும் 1940களில் ஜிபியு மற்றும் அமெரிக்க FBI உடனான அவரது இரகசிய நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி அனைத்துலகக் குழு வெளியிட்ட ஆவணங்களுக்கு பதிலளிக்க வேண்டுமென்றும் கோரியதற்காக சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து அலன் கெல்ஃபான்ட் வெளியேற்றப்பட்டதை நீங்கள் ஆதரித்தீர்கள் என்பதை உங்கள் வாசகர்களுக்கு நீங்கள் சொல்லத் தவறியிருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, சில்வியா கோல்ட்வெல்லையும் மற்றும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கியையும் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் அவர்களது கொலைபாதக நடவடிக்கைகள் குறித்து சத்தியப்பிரமாணத்தின் கீழ் சாட்சியம் அளிக்க நிர்ப்பந்திக்க, அலன் கெல்ஃபான்ட் செய்த முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவதற்கும் மற்றும் ஒடுக்குவதற்கும் 1981-1983 இல் சோசலிச தொழிலாளர் கட்சி செய்த முயற்சிகளை நீங்கள் இப்போதும் ஏற்றுக்கொள்கிறீர்கள், ஆனால் தொடர்ந்தும் அதனை மூடிமறைக்கிறீர்கள், திருமதி வைய்ஸ்மான்.

ஒரு தவறான உறுதிமொழி அறிக்கையை நீங்கள் கொடுத்திருப்பது ICFI மற்றும் அலன் கெல்ஃபான்ட் மீதான உங்கள் தாக்குதலை மட்டும் மதிப்பிழக்கச் செய்யவில்லை. அது நான்காம் அகிலத்திற்குள் ஒரு முகவராக மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் நடவடிக்கைகள் குறித்த உங்களது ஆய்வின் தன்மையையும் மற்றும் நோக்கத்தையும் குறித்து மிகமுக்கியமான கேள்விகளை எழுப்புகிறது. உங்களது “பிற்சேர்க்கையினது” நேர்மையற்ற தன்மையின் வெளிச்சத்தில் பார்க்கையில், உங்களது ஸ்பொரோவ்ஸ்கி திட்டவேலையின் நேர்மையுமே கூட பெரும் சந்தேகத்திற்கு உள்ளாகிறது. “ஏமாற்றும் சித்திரம்” (Portrait of Deception) என்று ஸ்பொரோவ்ஸ்கி குறித்த உங்களது கட்டுரையின் உபதலைப்பு, உங்களது சொந்த முயற்சிகளை குறித்த ஒரு விவரிப்பாகவும் கூட நியாயமாக அர்த்தமளிக்க முடியும்.  

உங்களது பிற்சேர்க்கையின் ஒரு விரிவான ஆய்வுக்குத் திரும்புவோம். நிறைவுப் பத்தியின் முழு உரை இவ்வாறு இருக்கிறது:

1979 இல், ஜெர்ரி ஹீலியின் பிரிட்டிஷ் சோசலிச தொழிலாளர் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்க சகசிந்தனையாளர்களது அமைப்பான வேர்க்கர்ஸ் லீக், சான்பிரான்சிஸ்கோவில் ஸ்பொரோவ்ஸ்கி வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரது வீட்டை முற்றுகையிட்டது. இந்த அமைப்பு, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒரு தலைவரும், மெக்சிகோ, கோயோகான் மாவட்ட வியன்னா வீதியில் ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவரான ஜோசப் ஹான்சனுக்கு எதிராக, ஒரு விசித்திரமான, குறுங்குழுவாத தூற்றல் பிரச்சாரத்தை தொடங்கியது. இழிவார்ந்த கெல்ஃபான்ட் வழக்கு—இது சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஜோசப் ஹான்சனுக்கு எதிராய் வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் அலன் கெல்ஃபான்ட்டின் பெயரைக் கொண்டு அவ்வாறு அழைக்கப்பட்டது—இதில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் FBI இன் முகவர்களாக இருந்தனர் என்றும், ஜோசப் ஹான்சன் FBI மற்றும் ஜிபியு இன் ஒரு முகவராக இருந்தார் என்றும் வேர்க்கர்ஸ் லீக் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கு அற்பமானதாகவும் முகாந்திரமற்றதாகவும் இருந்தது, ஆனால் ஹீலியின் அமைப்புகளுக்கு தலைப்புச் செய்திகளையும் மையினையும் இது வழங்கியது. இந்த வேலையின் முக்கியத்துவம், கெல்ஃபான்ட் 1982 ஏப்ரலில் ஸ்பொரோவ்ஸ்கியை சாட்சியம் அளிக்கச் செய்வதில் வெற்றி பெற்றார் என்பது தான். ஸ்பொரோவ்ஸ்கி, அவர் பிறந்த ஆண்டு மற்றும் இடம் அத்துடன் அவருக்கு யாரேனும் உறவினர்கள் இருந்தார்களா என்பதற்கு அதிகமாக வேறெதற்கும் பதிலளிக்க மறுத்து, கெல்ஃபான்ட் மற்றும் அவரது வழக்கறிஞருக்கு அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டி வந்தார். இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஐந்தாவது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களை முட்டாளாக்கிய ஸ்பொரோவ்ஸ்கி வாயைத் திறக்க மறுப்பதில் அவர் ஒரு நிபுணர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்தார். [5]

இந்தப் பத்தியில் ஏறக்குறைய ஒவ்வொரு வாக்கியமுமே, விபரப்பிழைகளையும், கீழமைந்த நிகழ்வுகள் மற்றும் பிரச்சினைகளைக் குறித்த தவறான சித்தரிப்புகளையும், அரை-உண்மைகளையும் மற்றும் அப்பட்டமான பொய்களையும் கொண்டுள்ளது.

1 1979 இல், [மூலப்பிரதியில் உள்ளவாறு] ஜெர்ரி ஹீலியின் பிரிட்டிஷ் சோசலிஸ்ட் தொழிலாளர் கழகம் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அமெரிக்க சக-சிந்தனையாளர்களது அமைப்பான வேர்க்கர்ஸ் லீக், சான்பிரான்சிஸ்கோவில் ஸ்பொரோவ்ஸ்கி வாழ்ந்த இடத்தைக் கண்டுபிடித்து அவரது வீட்டை முற்றுகையிட்டது.

ஆகஸ்ட் 1975 இல் ஸ்பொரோவ்ஸ்கி தன்னை டேவிட் நோர்த் படம்பிடிப்பதில் இருந்து தப்பிக்க முயற்சிக்கின்றார்

அலட்சியத்தினாலும் வெறுப்பாலும், மிக அடிப்படையான உண்மை விபரங்களையும் கூடச் சரியாகப் பெறுவதற்கு உங்களுக்கு முடியாதிருக்கிறது. வேர்க்கர்ஸ் லீக் சான்பிரான்சிஸ்கோவில் இருக்கும் ஸ்பொரோவ்ஸ்கியின் முகவரியைக் கண்டுபிடித்தது 1979 இல் அல்ல, 1975 இல். இந்த நான்கு-வருட வித்தியாசமானது, அலன் கெல்ஃபான்ட் 1979 ஜனவரியில் அவர் சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டதற்குப் பின்னர் அக்கட்சிக்கு எதிராக ஒரு வழக்குத் தொடுக்க முடிவெடுக்க இட்டுச் சென்ற நிகழ்வுகளின் விபரங்களைத் திரிக்கிறது. அத்துடன், வேர்க்கர்ஸ் லீக் ஸ்பொரோவ்ஸ்கியின் வீட்டை முற்றுகையிடவில்லை. அனைத்துலகக் குழுவின் சார்பாக, நான் 1975 ஆகஸ்டில் ஸ்பொரோவ்ஸ்கி மற்றும் அவரது மனைவியை அவர்களது குடியிருப்பின் வெளியே புகைப்படம் எடுத்தேன். இந்த புகைப்படங்கள், பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையின் ஆரம்பகட்ட இடைக்கால அறிக்கையான ட்ரொட்ஸ்கியை ஜிபியு எவ்வாறு கொலை செய்தது என்ற ஆவணத்தில் இடம்பெற்றிருந்தன.

2.இந்த அமைப்பு, அமெரிக்க சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒரு தலைவரும், மெக்சிகோ, கோயோகான் மாவட்டத்தின் வியன்னா வீதியில் ட்ரொட்ஸ்கியின் செயலாளர்களில் ஒருவருமான ஜோசப் ஹான்சனுக்கு எதிராக ஒரு விசித்திரமான, குறுங்குழுவாத தூற்றல் பிரச்சாரத்தை தொடங்கியது.

பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையை “ஜோசப் ஹான்சனுக்கு எதிராக ஒரு விசித்திரமான, குறுங்குழுவாத தூற்றல் பிரச்சாரம்” என்று நீங்கள் வருணித்திருப்பது ஜோசப் ஹான்சனுக்கு எதிராக அனைத்துலகக் குழு வைத்த குற்றச்சாட்டுகளின் மூலங்கள் (origins) மற்றும் தன்மையை (nature) அவதூறாக பொய்மைப்படுத்துகிறது. ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது எனும் அறிக்கை, அனைத்துலகக் குழுவின் பத்திரிகையில் 1975 ஆகஸ்ட்-செப்டம்பர் காலத்தில் வரிசைப்படுத்தப்பட்டிருந்தது. மிகக் கவனமாக ஆய்வு செய்யப்பட்டிருந்த இந்த வரலாற்று விபரிப்பானது, நான்காம் அகிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக, ட்ரொட்ஸ்கியின் வாழ்க்கைக்கு எதிராக நடந்த சதித்திட்டத்தைக் குறித்து ஒரு விரிவான விளக்கத்தை வழங்கியது. சோசலிச தொழிலாளர் கட்சியோ, ட்ரொட்ஸ்கியின் படுகொலைக்கு உடனடிப் பிந்தைய காலத்தில் ஒரேயொரு அறிக்கை வழங்கியதைத் தவிர, நான்காம் அகிலத்திற்குள் ஊடுருவி ட்ரொட்ஸ்கியின் கொலையை ஒழுங்கமைத்திருந்த GPU-NKVD வலையமைப்பை வெளிக்கொணரவோ அம்பலப்படுத்தவோ எந்த முயற்சியும் செய்திருக்கவில்லை. அமெரிக்க அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள், காங்கிரஸ் விசாரணைகளின் உரைவடிவங்கள், 1950களில் விசாரணைக்குக் கொண்டுவரப்பட்ட சோவியத் முகவர்களின் சாட்சியங்கள் என இவற்றின் அடிப்படையில், அனைத்துலகக் குழு, ட்ரொட்ஸ்கியைக் கொலை செய்வதற்கும் நான்காம் அகிலத்தை அழிப்பதற்குமான சதியில் சம்பந்தப்பட்டிருந்த —பாரிஸ், நியூயோர்க் மற்றும் மெக்சிகோவின்— ஜிபியு முகவர்களது ஒரு பரந்த வலையமைப்பை மீள்நிர்மானம் செய்து காட்டியது.

ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது ஆவணம் சர்வதேச ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு எதிரான ஜிபியு சதியின் மூலங்களை ஆய்வு செய்தது. அது ஐரோப்பாவில் (செனின் மற்றும் வெல் என்ற) ஸொபோலெவிசியஸ் (Sobolevicius) சகோதரர்கள் மற்றும் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி (”எத்தியான”) ஆகியோரின் நடவடிக்கைகளை மீளாய்வு செய்தது. அனைத்துலகக் குழு வெளிக்கொணர்ந்த விபரங்கள் லோலா டோலன் (என்ற ஏஸ்திரினே-Estrine) குறித்த சர்ச்சைக்குரிய பிரச்சினைகளையும் எழுப்பியது. “Siamese Twin” (இணைபிரியாதவர்) என்று ஸ்பொரோவ்ஸ்கியாலேயே வருணிக்கப்பட்ட இந்த பெண்மணி, சுமார் 20 ஆண்டுகாலம், அம்பலப்படுத்தப்படுகின்ற அச்சுறுத்தலில் இருந்து அவரை இடைவிடாமல் பாதுகாத்து, அதன்மூலம், அவரது குற்றங்களுக்கு வழிவகை செய்தவராயிருந்தார். ரமோன் மெர்காடெர் (Ramon Mercader - என்ற ஃபிராங்க் ஜாக்சன்) எவ்விதத்தில் நான்காம் அகிலத்தின் களத்திற்குள் ஊடுருவினார் என்பதையும், பின்னர் அவர் சோசலிச தொழிலாளர் கட்சி அங்கத்தவரான சில்வியா அகலோஃப் (Sylvia Ageloff) உடன் தனிப்பட்ட உறவைத் தொடங்கி, இறுதியில் கொலைகாரராக மாறயிருந்த அந்நபருக்கு எவ்வாறு ட்ரொட்ஸ்கியுடனான நேரடி அணுகலைக் கொடுத்தது என்பதையும் அனைத்துலகக் குழு திறனாய்வு செய்தது. தோமஸ் பிளாக், ஃபிளாய்ட் கிளீவ்லாண்ட் மில்லர் (Floyd Cleveland Miller) மற்றும், 1938 மற்றும் 1947 க்கு இடையே சோசலிச தொழிலாளர் கட்சியின் ஸ்தாபகரான ஜேம்ஸ் பி. கனனின் அந்தரங்கக் காரியதரிசியாக இருந்த சில்வியா கோல்ட்வெல் (Sylvia Caldwell) ஆகியோர் உட்பட, அமெரிக்காவிற்குள் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக ஊடுருவியிருந்த ஜிபியு முகவர்களின் வலையமைப்பையும், ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது ஆவணம் அலசியது.

1940 மே 24 இல் ட்ரொட்ஸ்கியைப் படுகொலை செய்வதற்கு நடந்த, தோல்வியில் முடிந்த முயற்சியின் போது, ஸ்ராலினிச எந்திரத் துப்பாக்கி படைக்கு கோயோகான் குடியிருப்பின் வாயிற்கதவுகளைத் திறந்து விட்ட அமெரிக்கப் பாதுகாவலரான, ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் (Robert Sheldon Harte) குறித்த விபரங்களையும், ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது ஆவணம் வெளிக்கொண்டு வந்தது, அந்த விபரங்கள் அவர் ஒரு ஸ்ராலினிச முகவராக இருந்தார் என்பதைப் பலமாக எடுத்துக்காட்டியது.

ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு வெறும் பத்து நாட்களுக்குப் பின்னர், ஜோசப் ஹான்சன், சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், மெக்சிகோ நகர அமெரிக்கத் தூதரகத்தில் FBI இன் பிரதிநிதி ஒருவருடன் தொடர்ச்சியாய் இரகசியக் கூட்டங்களை நடத்தினார் என்பதை முதன்முறையாக எடுத்துக்காட்டிய அமெரிக்க அரசாங்க ஆவணங்களையும் அனைத்துலகக் குழு வெளிக்கொண்டு வந்தது. முதல் சந்திப்பில் ஹான்சன் FBI முகவரான ராபர்ட் மெக்கிரிகோரிடம் (Robert McGregor), “1938 இல் நியூ யோர்க்கில் இருந்தபோது ஜிபியு இன் ஒரு முகவர் அவரையே அணுகி நான்காம் அகிலத்தில் இருந்து விலகி மூன்றாம் அகிலத்தில் இணையுமாறு கேட்டதாக” தெரிவித்தார். ட்ரொட்ஸ்கியின் ஒப்புதலுடன் அவர் நடந்து வந்ததாக தெரிவித்த ஹான்சன், “தனது உண்மையான அடையாளத்தை வெளிக்காட்டாமல் தன் பெயர் ’ஜோன்’ என்று மட்டும் கூறிக் கொண்ட ஒரு மனிதருடன்” மூன்று மாத காலம் "தொடர்பில் இருந்ததாக" FBI க்குத் தெரிவித்தார். [6]

முன்னதாக அறிந்திராத இத்தகவலை எதிர்கொண்ட நிலையில், அனைத்துலகக் குழு, ஹான்சனுக்கு FBI உடனான அவர் தொடர்புகளைக் குறித்தும், ஜிபியு உடனான அவரது உறவு குறித்தும் விளக்கமளிக்குமாறு கோரியது.

ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது ஆவணத்திற்கான ஹான்சனின் பதிலிறுப்பு வியப்பூட்டுவதற்கு சற்றும் குறையவில்லாமல் இருந்தது. ”அமெரிக்க கெஸ்டபோ” (American Gestapo) பிரதிநிதிகள் —இப்படித் தான் சோசலிச தொழிலாளர் கட்சி 1940 இல் FBIக்கு வெளிப்படையாக பெயரிட்டிருந்தது— இவர்கள் உடனான இந்த சந்திப்பும் மற்றும் அதற்கடுத்த சந்திப்புகளும் சோசலிச தொழிலாளர் கட்சி தலைமையின் ஒப்புதலைப் பெற்றவை என்பதற்கான எந்த ஆதாரத்தையும் வழங்காமலேயே, FBI உடனான அவரது சந்திப்பை நினைவூட்டும் ஆவணங்களை “வெந்நீர் ஊற்று சகதி” (geyser of mud) [7] என்று சர்வசாதாரணமாக நிராகரித்து விட்டார். அதேபோல் ஜிபியு முகவர் “ஜோன்” உடனான அவரது சந்திப்புகளுக்கும் எந்த நம்பத்தகுந்த விளக்கத்தையும் ஹான்சன் வழங்கவில்லை.

அதே நேரத்தில், கனனின் அந்தரங்க காரியதரிசிக்கு தந்திரமானவகையில் ஹான்சன் பாதுகாப்பு வழங்கினார். சோசலிச தொழிலாளர் கட்சி இன் Intercontinental Press 1975 நவம்பர் 24 பதிப்பில் வெளியான ஒரு நீளமான அறிக்கையில் அவர் எழுதினார், “சில்வியா கோல்ட்வெல் (இதுதான் கட்சியில் அவரது பெயர்), காரியதரிசி அந்தஸ்தில் கனனுக்கு உதவியது உட்பட சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசிய அலுவலகத்தை நிர்வகிக்கும் அவரது கடினமான பொறுப்பில் மிகக் கடுமையாக வேலை செய்தார். சொல்லப் போனால், பெரும்பாலும் இந்த சலிப்பூட்டும் வேலைகளை அவருடன் சேர்ந்து செய்தவர்கள் அவரை ஒரு முன்னுதாரணமாகக் கருதினர். பூடென்ஸ் (Budenz) பரப்பிய மோசமான அவதூறில் அவர் காயப்பட்ட அளவுக்கு அவர்களும் காயப்பட்டனர்.” [8]

திருமதி வைய்ஸ்மான், உங்களுக்கு நன்கு தெரியும், லூயிஸ் பூடென்ஸ் (Louis Budenz) ஒருசமயம் ஸ்ராலினிச Daily Worker பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர். அவர் அமெரிக்காவில் ஜிபியு இன் முகவராக இருந்து ட்ரொட்ஸ்கி படுகொலை செய்வதற்கான சதியில் ஒரு மத்திய பாத்திரம் ஆற்றியவர். கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து விலகிய பின்னர், பூடென்ஸ் FBI இன் பக்கம் சென்றார், ட்ரொட்ஸ்கிச சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஜிபியு நுழைத்திருந்த முகவர்களை அவர் அடையாளம் காட்டத் தொடங்கினார். அந்த முகவர்களில் ஒருவர் தான் சில்வியா கோல்ட்வெல், இவரை 1947 இல் பூடென்ஸ் அம்பலப்படுத்திய சிறிது காலத்திற்குப் பின்னர் சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து காணாமல் போனார். உளவு பார்த்தமைக்காக ராபர்ட் ஸாப்லென் மீதான குற்றவிசாரணையில், 1960 இல், சில்வியா காலென் (கோல்ட்வெல்லின் முதற்பெயர்) குற்றப்பதிவு செய்யப்படாத சதி-உடந்தையாளராக பெயரிடப்பட்டிருந்தார். ரோபர்ட் ஸாப்லன்—நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை—மேலே குறிப்பிடப்பட்ட ஸொபோலேவிசியஸ் (Sobolevicius) சகோதரர்களில் ஒருவராவார், இவர் 1930களின் ஆரம்பத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக முதன்முதலாக ஊடுருவியிருந்தார். 1950களில் வேவு பார்த்த குற்றம் உறுதிசெய்யப்பட்ட அவரது சகோதரரான ஜாக் ஸோபலும் (Jack Soble) கூட, அவரது விசாரணையின் போது, கனனின் காரியதரிசி ஒரு ஜிபியு முகவர் என்பதை அடையாளம் காட்டியிருந்தார்.

ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் (Robert Sheldon Harte) குறித்து ICFI எழுப்பிய பிரச்சினைகளை ஹான்சன் "குறிப்பாக கேவலமானவை” என்று கண்டனம் செய்தார், அவர் அறிவித்தார்: “ஹார்ட்டுக்கு எதிரான பழைய ஜிபியு அவதூறுகளின் துர்நாற்றம், தொழிலாளர் புரட்சிக் கட்சியின் (WRP) தலைமையகங்களில் இன்னும் கூட விடாப்பிடியாய் இருப்பதை நாம் காண்கிறோம்.” [9] ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது ஆவண பிரசுரத்தை அடுத்து, அனைத்துலகக் குழு FBI உடனான ஹான்சனின் தொடர்புகள் சம்பந்தமான இன்னும் அதிக அரசு ஆவணங்களை வெளிக்கொண்டு வந்தது. [10] FBI உடனான ஹான்சனின் உறவு தீவிரமானதாகவும் மற்றும் முடிவில்லாததாகவும் இருந்ததை அவை வெளிப்படுத்தின. ஹான்சனிடம் இருந்து FBI க்கு சென்ற ஒருவழிப்பாதை தகவல் பரிவர்த்தனையை அது உள்ளடக்கி இருந்தது. பல அமெரிக்க ஜிபியு முகவர்களை அடையாளம் காட்டும் தகவல்களை அவர் வழங்கியிருந்தார். (ஜிபியு இல் இருந்து விலகி வந்த இன்னொரு மனிதரான) விட்டேக்கர் சாம்பர்ஸ் (Whittaker Chambers) எழுதிய ஒரு இரகசியக் குறிப்பை, ஹான்சன் FBI வசம் ஒப்படைத்தார், அது சோசலிச தொழிலாளர் கட்சி அங்கத்தவரான சில்வியா அகலோஃபும் (Sylvia Ageloff) ட்ரொட்ஸ்கியின் கொலையில் உடந்தையாக இருந்ததை எடுத்துரைத்தது. அது கூறியதாவது: “அகலோஃப் பெண்களின் அப்பாவித்தனத்தை நம்ப முடியாது. ஒரு மரமண்டை தான் ஜிபியு முகவருடன் வாழ்ந்து கொண்டே, அதை உணராதவராகவும் இருக்க முடியும்.” சாம்பர்ஸின் மதிப்பீடு ஏற்றுக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பது இன்னமும் ஒரு சட்டப்பூர்வ விவாத பொருளாகவே உள்ளது. ஆனால், கட்சித் தோழர் ஒருவரை குற்றவாளியாக்கும் அந்த ஆவணத்தை FBI க்கு ஹான்சன் கொடுத்த அந்த சமயத்தில், அந்த கொலைகாரரின் குற்றகரமான இரட்டைவேஷத்திற்கு சில்வியா அகலோஃப் அப்பாவித்தனமாக பலியாகியிருந்தார் என்பதுதான் சோசலிச தொழிலாளர் கட்சியின் வெளிப்படையான நிலைப்பாடாக இருந்தது.

FBI உடனான ஹான்சனின் சந்திப்புகளை நெருக்கமாய் கண்காணித்து வந்திருந்த FBI இயக்குநர் ஜே. எட்கார் ஹூவர், ட்ரொட்ஸ்கி படுகொலை சம்பந்தமான FBI இன் விசாரணைக்கு சம்பந்தப்பட்ட எந்த தகவலும் அவருக்குக் கொடுக்கக்கூடாதென உத்தரவிட்டிருந்தார்.

இறுதியில், மெக்சிகோவில் இருந்து நியூயோர்க் திரும்பும் முன்னதாக, தனக்கு “சட்ட தண்டனையிலிருது விதிவிலக்குடன் பிரச்சினையின்றி தகவல்களை தெரிவிப்பதற்கு ஏற்ற” ஒரு நம்பகமான FBI தொடர்பு கொடுக்கப்பட வேண்டுமென்று ஜோசப் ஹான்சன் கோரினார். [11]

3. "இழிவார்ந்த கெல்ஃபான்ட் வழக்கு இது சோசலிச தொழிலாளர் கட்சி மற்றும் ஜோசப் ஹான்சனுக்கு எதிராக வழக்குத் தொடுத்த வழக்கறிஞர் அலன் கெல்ஃபான்ட்டின் பெயரைக் கொண்டு அவ்வாறு அழைக்கப்பட்டது இதில் சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவர்கள் FBI இன் முகவர்களாக இருந்தனர் என்றும், ஜோசப் ஹான்சன் FBI மற்றும் ஜிபியு இன் ஒரு முகவராக இருந்தார் என்றும் வேர்க்கர்ஸ் லீக் குற்றஞ்சாட்டியது. இந்த வழக்கு அற்பமானதாகவும் முகாந்திரமற்றதாகவும் இருந்தது, ஆனால் ஹீலியின் அமைப்புகளுக்கு தலைப்புச் செய்திகளையும் மையினையும் வழங்கியது.

1979 ஜூலையில் கெல்ஃபான்ட் தொடுத்த வழக்கில் —அது "இழிவார்ந்ததா" என்பது ஒருபுறம் இருக்கட்டும்— “அற்பமானதோ முகாந்திரமற்றதோ” எதுவும் இருக்கவில்லை. அது பாரிய ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அந்த வழக்கு “அற்பமாகவோ முகாந்திரமற்றோ” இருந்திருந்தால், அது விசாரணையின்றி தீர்ப்பளிக்கக் (summary judgement) கோரி சோசலிச தொழிலாளர் கட்சி கொண்டுவந்த மூன்று மனுக்களிலிருந்து தப்பித்திருக்க முடியாது. கெல்ஃபான்ட் உண்மையான ஒரு விசாரணைக்குரிய பிரச்சினையை ஸ்தாபிக்க அவசியமான சட்டபூர்வ சோதனையை பூர்த்தி செய்திருந்ததாக ஒப்புக் கொண்டு, 1982 ஜூலை 12 இல், நீதிபதி மரியானா பிஃபேல்ஸர் (Marianna Pfaelzer) விசாரணையின்றி தீர்ப்பளிக்க மறுத்துவிட்டார். இவ்வாறாக, அந்த வழக்கு விசாரணைக்குச் சென்றது. சட்டப்படி, இந்த தீர்ப்பின் அர்த்தம் என்னவென்றால் நீதிமன்றம் கெல்ஃபான்டின் வழக்கை “அற்பமானதாகவோ” அல்லது “முகாந்திரமற்றதாகவோ” காணவில்லை என்பதுதான். இது, இன்று நீங்கள் தாங்கிப் பிடிக்கின்ற, அதாவது "ஹீலியும் அவரது சகாக்களும் இத்தாக்குதல்களின் பெயரளவிலான இலக்குகளான ஹான்சன் மற்றும் நோவாக்கிற்கு எதிரான அவர்களின் அவதூறு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, விசாரணைக்குரிய ஆதாரங்களையோ, ஆவணங்களையோ அல்லது சாட்சியங்களையோ கொஞ்சமும் முன்வைக்கவில்லை"[12] என்ற சோசலிச தொழிலாளர் கட்சியின் உத்தியோகபூர்வ கூற்றினைப் புறநிலைரீதியாக சிதறடித்தது.

1979 இல் சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு வழக்கு தொடுப்பதற்கு முன்பாக ஓராண்டுக்கும் அதிகமான காலத்தில், கெல்ஃபான்ட் தேசிய செயலரான ஜாக் பார்ன்ஸிடமிருந்தும் (Jack Barnes) மற்றும் இதர பிற கட்சித் தலைவர்களிடமிருந்தும், அனைத்துலகக் குழு வெளியிட்ட உண்மைகளில் வேரூன்றிய மற்றும் பொருத்தமான ஒரு விளக்கத்தைக் கொண்ட குற்றத்திற்குட்படுத்தும் ஆவணங்களைப் பெற முயன்று வந்தார். ஆனால் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. அதற்குப் பதிலாக “ஹீலியின் பெரிய பொய்” என்று தலைப்பிட்ட சோசலிச தொழிலாளர் கட்சியின் படிப்பிக்கும் சஞ்சிகை குறித்து அவருக்குக் கூறப்பட்டது. அனைத்துலகக் குழு எழுப்பிய அத்தனை கேள்விகளுக்கும் அந்த சஞ்சிகையில் பதில் அளிக்கப்பட்டிருப்பதாக கெல்ஃபான்டிடம், பொய்யாக, கூறப்பட்டது. அதனைக் கவனமெடுத்துப் படித்த எவரொருவருக்கும் வெளிப்படையாகத் தெரிந்தவாறு, அந்த சஞ்சிகையில் எந்த பதிலும் கிடையாது. சில்வியா கோல்ட்வெல்லை ஒரு முகவராகவும் மற்றும் ஜோசப் ஹான்சன் FBI உளவாளியாக சேவை செய்ததை ஸ்தாபித்த ஆதாரங்களுக்கு நம்பகத்தகுந்த பதில்களை வழங்க சோசலிச தொழிலாளர் கட்சி மறுத்ததில், திருமதி. வைய்ஸ்மான், நீங்கள் வெளிப்படையாக திருப்திபட்டு கொண்டீர்கள். ஆனால் கெல்ஃபான்ட் திருப்தி கொள்ளவில்லை.

1978 மார்ச் 26 தேதியிட்டு சோசலிச தொழிலாளர் கட்சி தேசிய கமிட்டிக்கு அனுப்பிய ஒரு கடிதத்தில், கெல்ஃபான்ட், அனைத்துலகக் குழு வெளிக்கொண்டு வந்திருந்த ஆவணங்களை மற்றும் அது தொடர்பான சாட்சியங்களைக் கவனமாகத் திறனாய்வு செய்திருந்தார். அவர் தேசியக் கமிட்டியிடம் மூன்று கேள்விகளை முன்வைத்தார்:

I. ஜேம்ஸ் பி. கனனின் அந்தரங்கக் காரியதரிசி, சில்வியா பிராங்க்ளின், ஒரு ஜிபியு முகவரா?

II. 1938 இல் ஜிபியு உடன் தனிநபராகத் தொடர்பு கொள்ள சோசலிச தொழிலாளர் கட்சி ஜோசப் ஹான்சனுக்கு ஒப்புதல் அளித்திருந்ததா?

III. 1940 இல் FBI ஐ சந்திக்க ஜோசப் ஹான்சன் சோசலிச தொழிலாளர் கட்சியிடம் ஒப்புதல் பெற்றிருந்தாரா?[13]

பெரும் அனுபவம் வாய்ந்த பிரதிவாத அரசு வழக்கறிஞரான கெல்ஃபான்ட், ஒவ்வொரு கேள்வியுடனும் அனைத்துலகக் குழு தயாரித்திருந்த ஆதார ஆவணத்தின் ஒரு விரிவான ஆய்வறிக்கையும் இணைத்திருந்தார். அவரது கடிதத்தின் நிறைவுப் பகுதியில், கெல்ஃபான்ட் பின்வருமாறு எழுதினார்:

எனது கடிதத்தைப் புறநிலையாக வாசிக்கும் எவரொருவரும் சில்வியா பிராங்க்ளின் ஒரு ஜிபியு முகவராக இருந்தார் என்றும், ஜிபியு மற்றும் FBI உடனான ஜோசப் ஹான்சனின் உறவு, குறைந்தபட்சம், பெரும் கேள்விக்குரியதாக, ஒரு உடனடியான மற்றும் விரிவான ஆய்வுக்கு அவசியப்படுத்துவதாக இருந்தது என்ற முடிவுக்கு தான் வருவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கை உள்ளது.[14]  

கெல்ஃபான்ட் இரண்டு கோரிக்கைகளுடன் அக்கடிதத்தை முடித்திருந்தார்:

ஒரு ஜிபியு முகவராக சில்வியா ஃபிராங்ளின் மறுதலிக்கப்பட வேண்டும்.

ஜிபியு மற்றும் FBI உடன் ஜோசப் ஹான்சன் சம்பந்தப்பட்டிருந்தமை குறித்த ஒரு முழுமையான மற்றும் நிறைவான கணக்குவழக்கினை வழங்கவும், அத்துடன் அவரிடமிருந்த அல்லது அவரது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்த கோப்புகள், குறிப்புகள், கைப்பிரதிகள், கடிதங்கள் அல்லது மற்ற தகவல் பரிமாற்றங்கள் எதனையும் மற்றும் அத்தனையையும் கட்சியிடம் ஒப்படைக்குமாறும் கேட்கப்பட வேண்டும்.[15]

1978 ஏப்ரல் 7 இல், சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் கமிட்டி சார்பாக எழுதுகையில், லாரி சீய்கிள் (Larry Seigle) கெல்ஃபான்டுக்கு பின்வரும் எச்சரிக்கையுடன் பதிலளித்தார்:

ஜோ ஹான்சனுக்கு எதிரான உங்களது குற்றச்சாட்டுகளை முன்னெடுப்பதை எவ்வாறு தொடரலாம் என்பது குறித்து எமது கருத்துக்களை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். இந்தக் கேள்விக்கான பதில் எளிமையானது. கட்சி அதன் பொறுப்புகளுக்குள் முகவர்களைப் பொறுக்கியெடுக்கும் வேலையை அனுமதிக்காது மற்றும் அனுமதிக்கவும் முடியாது. ஹீலியவாத அவதூறுகளை நீர் மீண்டும் திரும்பக் கூறுவீராயின், அதை பொறுத்துக் கொள்ள முடியாது. [16]

அனைத்துலகக் குழு வெளியிட்ட ஆதாரங்களுக்கு பதிலளிக்கவோ மறுப்பளிக்கவோ சோசலிச தொழிலாளர் கட்சி தலைமையால் முடியவில்லை என்பதையும், பதில்களை எதிர்பார்த்தவர்களுக்கு அவர்கள் சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற அச்சுறுத்தல் மட்டுமே அதன் ஒரே பதில் என்பதையும் சீய்கிளின் கடிதம் தெளிவாக்கியது.

”கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும்... சோசலிச தொழிலாளர் கட்சியில் இருக்கும் அத்தனை உளவாளிகளின் பெயர்களையும்” அமெரிக்க அட்டர்னி ஜெனரல் வெளியிட வேண்டும் என்று கேட்டு 1978 டிசம்பர் 18 இல், கெல்ஃபான்ட் பெடரல் நீதிமன்றத்தில் ஒரு பொதுத் தரப்பு (amicus curiae—நீதிமன்றத்தின் நண்பர்) மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். [17] அதன் பின்னர் ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில், 1979 ஜனவரி 11 இல், சோசலிச தொழிலாளர் கட்சியின் அரசியல் கமிட்டி, கெல்ஃபான்டின் அரசியல் கோட்பாட்டுரீதியிலான கோரிக்கைக்கு அவரை சோசலிச தொழிலாளர் கட்சியிலிருந்து வெளியேற்றியதன் மூலமாகப் பிரதிபலிப்பு காட்டியது. 1979 ஜூலையில் சோசலிச தொழிலாளர் கட்சி தலைமை விடுத்த ஒரு பொது அறிக்கையில், கெல்ஃபான்ட் வெளியேற்றம் “நீண்டகாலமாக தள்ளிப்போய் கொண்டே இருந்ததாக” சீய்கிள் எழுதினார். [18]

சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் ஊடுருவல்கள் சம்பந்தமாக கெல்ஃபான்ட் எழுப்பிய கேள்விகள் முற்றிலும் நிரூபிக்கப்பட்டுள்ளன என்ற உண்மைக்கு இடையிலும், இன்றுவரை நீங்கள் கெல்ஃபான்ட் மீது அவதூறு செய்தே வருகிறீர்கள்.

சில மறுக்கவியலாத உண்மைகளை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர என்னை அனுமதியுங்கள்:

முதலாவதாக, சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதற்குப் பின்னர் பெறப்பட்ட வெனோனா (Venona) ஆய்வறிக்கைகளும் ஆவணங்களும் ரோபர்ட் ஷெல்டன் ஹார்ட் —அதாவது ஹான்சனும் அவரது உடனிருந்த ஜோர்ஜ் நோவாக்கும் ”ஹீலியின் பெரிய பொய்”க்குப் பலியான அப்பாவி என்று யாருக்குப் புகழஞ்சலி செலுத்தியிருந்தார்களோ அவர்— ஜிபியு ஆல் பணியமர்த்தப்பட்டிருந்தார் என்பதையும், 1940 மே 24 அன்று ட்ரொட்ஸ்கியைக் கொல்ல நடந்த முயற்சியில் பங்கேற்றவர்களில் ஒருவராய் இருந்தார் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளன:

தாக்குதல் நடத்தியவர்களுடன் ஹார்ட் ஒத்துழைத்திருந்தார் என்பதை, வாசிலி மிட்ரோகின் (Vasili Mitrokhin) மூலம் மேற்குக்கு கொண்டு வரப்பட்ட கேஜிபி இன் காப்பக ஆவணங்கள் ஊர்ஜிதப்படுத்தின. 1997 இல் ரஷ்யாவில் வெளியிடப்பட்ட கேஜிபி இன் வரலாறு ஒன்று, ஹார்ட் விருப்பத்துடனேயே வாயில்கதவைத் திறந்துவிட்டார் என்பதையும் மற்றும் அவர் தாக்குதல் நடத்தியவர்களுடன் சேர்ந்து வெளியேறினார் என்பதையும் குறிப்பிட்டதுடன், அவர் நியூ யோர்க் நிலையத்தால் பணியமர்த்தப்பட்டு “குபிட்” (Cupid) என்ற புனைபெயர் கொடுக்கப்பட்டிருந்தார் என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்தது. [19]

இவ்வாறாக ஜிபியு ட்ரொட்ஸ்கியை எவ்வாறு கொலை செய்தது ஆவணத்தில் அனைத்துலகக் குழுவினால் ஆரம்பத்தில் எழுப்பப்பட்ட வினாக்கள் —அதற்காக அது ஹான்சன் மற்றும் நோவாக்கிடம் இருந்தான வக்கிரமான தூற்றலையும் எதிர்கொண்ட நிலையில்— முழுக்க நியாயமானவையாக இருந்தன. உங்களது Critique கட்டுரைகளில் ஷெல்டன் ஹார்ட் குறித்த எந்தக் குறிப்பும் இல்லை என்பதை ஒருவர் குறித்துக் கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, சில்வியா கோல்ட்வெல் ஒரு ஜிபியு முகவராக இருந்தது ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. கெல்ஃபான்டின் வழக்கு, அவரது 1958 நீதிபதிகள் குழு முன்பான சாட்சியம் வெளியாக இட்டுச் சென்றது, அதில் அவர் சோசலிச தொழிலாளர் கட்சியில் ஒரு ஸ்ராலினிச உளவாளியாக அவரது பாத்திரத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்திருந்தார். அவர் ஒரு முகவராக இருந்தார் என்பதை நீங்களும் கூட இறுதியாய் ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். Critique கட்டுரையில் நீங்கள் பின்வருமாறு எழுதுகிறீர்கள்:

அதற்கு பதிலாக, ஜேம்ஸ் கனனின் காரியதரிசியாக வேலை செய்தததன் மூலம் சோசலிச தொழிலாளர் கட்சி நடவடிக்கைகள் குறித்த உட்கட்சி ஆவணங்களையும் தகவல்களையும் அணுகப் பெற்றிருந்த சில்வியா கலென் உடன் சேர்ந்து மைக் கோர்ட் (Mike Cort) —ஃப்ளாய்ட் க்ளீவ்லாண்ட் மில்லர் (Floyd Cleveland Miller) என்றும் அறியப்படும் இவர்— சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக கேஜிபி இன் பிரதான முகவர் ஆனார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக சில்வியாவின் பெயர் கோல்ட்வெல் என்று இருந்தது, ஆனால் அவர் மணந்திருந்த ஆண்களின் —முதலில் சல்மோன் ஃபிராங்ளின் (இவரும் ஒரு முகவர்), பின் ஜேம்ஸ் டொக்ஸீ (James Doxsee) ஆகியோரின்— இறுதிப் பெயர்களாலும் அறியப்பட்டார். வெனோனா விபரங்களில் அவரது இரகசியப் பெயர் (cover name) சாத்தீர் (Satyr) என இருந்தது. அவர் NKVD கட்டுப்பாட்டாளரான ஜாக் ஸோபிள் (Jack Soble) க்கு சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் இருந்த கன்னை மோதல்கள் குறித்த தட்டச்சு செய்யப்பட்ட அறிக்கைகளை தொடர்ந்து வழங்கி வந்தார், ஆனாலும் இந்த வேலை அவரை பதட்டப்படுத்துவதால் தன்னை அந்த வேலையிலிருந்து விடுவிக்குமாறு தொடர்ந்து கேட்டு வந்தார். ஸோபிள் இன் வழிகாட்டலின் கீழ் கோர்ட் மற்றும் கோல்ட்வெல் இருவருக்கும் பொறுப்பாக ஜோசப் காட்ஸ் (Joseph Katz) அமர்த்தப்பட்டிருந்தார். [20]

வெனோனா (Venona) உரைஆவணங்கள் —சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து அமெரிக்க அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட ரகசிய குறியீடற்ற சோவியத் உளவு அறிக்கைகளின் எழுத்துப்பிரதிகளான இவை— பல ஆண்டுகளுக்கு முன்பே பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையாலும் அலன் கெல்ஃபான்ட் வழக்கினாலும் ஏற்கனவே வெளிக்கொண்டு வரப்பட்டிருந்த டொக்ஸீ குறித்த விபரங்களுக்கு வெகு குறைவான கூடுதலான விபரங்களையே அளித்தது. மே 1977 இல், இலினோய் இன் வீட்டன் நகரில் கோல்ட்வெல்லின் இருப்பிடத்தை நான் கண்டறிந்திருந்தேன், அத்துடன் அவரது புதிய திருமணப் பெயர் சில்வியா டொக்ஸீ என்பதையும் ஸ்தாபித்தேன். 1983 மார்ச் மாதம், கெல்ஃபான்ட் வழக்கின் விசாரணை முடிவில், சோசலிச தொழிலாளர் கட்சியின் கடுமையான ஆட்சேபணைகளைத் தாண்டி, நீதிபதி மரியன்னா பிஃபேல்சர் (Marianna Pfaelzer), டொக்ஸீயின் உயர்நீதிபதிகள் குழு முன்பான சாட்சியத்தின் உரைவடிவாக்கங்களை வெளியிட்டார். பிஃபேல்சாரின் (Pfaelzer) நடவடிக்கை, சோசலிச தொழிலாளர் கட்சியின் வழக்கறிஞரைத் தெளிவாக அதிர்ச்சியில் ஆழ்த்தியது—சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியச் செயலர் ஜாக் பார்னேஸ் (Jack Barnes) குறித்து கூற வேண்டியதே இல்லை. இந்த உரைவடிவாக்கங்கள் வெளியிடப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கும் முன்பாக, பார்னேஸ், சில்வியா பிராங்ளின் மீதான அவர் மரியாதையை மீண்டும் உறுதிப்படுத்தி இருந்தார். 1983 மார்ச் 9 இல், திறந்த நீதிமன்றத்தில் கெல்ஃபான்டின் வழக்கறிஞருக்கும் மற்றும் பார்ன்ஸுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடல் பின்வருமாறு இருந்தது:

கேள்வி: (கெல்ஃபான்டின் கடிதம்) உங்களுக்குக் கிடைத்தபோது, என்னவாக இருந்தாலும் சில்வியா பிராங்ளின் ஜிபியு இன் ஒரு முகவர் என்பதை சுட்டிக்காட்ட எந்தவொரு ஆதாரமும் இருக்கவில்லை என்பது தான் இப்போதும் உங்கள் கருத்தா?

பார்ன்ஸ்: அத்தனை ஆதாரங்களும் நேரெதிராக உள்ளன. அவர் இயக்கத்தில் இருந்தபோது திருப்திகரமாக நடந்து கொண்ட விதம் மட்டுமல்ல, அவர் விலகிய பின்னர் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றுமே சுட்டிக்காட்டுவது என்னவென்றால், அவர் என்னவாக இருந்தாரோ அப்படியே இப்போதும் இருக்கிறார் என்பதையே ஆகும்: அதாவது, எங்களது இயக்கத்தின் ஒரு விசுவாசமான, கடுமையாக உழைக்க கூடிய, ஒரு முன்மாதிரியான அங்கத்தவராக இருக்கிறார்.

கேள்வி: இன்றும் உங்களது அபிப்ராயம் அப்படித் தான் இருக்கிறதா?

பார்ன்ஸ்: இன்று என்னுடைய அபிப்ராயம் என்னவாக இருக்கிறது என்றால், கடந்த சில ஆண்டுகளில் அவர் அனுபவித்திருக்கக் கூடிய தொல்லைகளுக்குப் பின்னர், அவர் எனது அபிமானிகளில் ஒருவராகவே ஆகியிருக்கிறார். அப்போதை விடவும் அவரைக் குறித்தும், அவரது குணநலன்களைக் குறித்தும், இன்னும் அதிகமாக நன்மதிப்பை உணர்கிறேன். [21]

மூன்றாவதாக, சில்வியா கோல்ட்வெல்லை அம்பலப்படுத்தியிருந்த லூயிஸ் பூடென்ஸ் (Louis Budenz), ஜோசப் ஹான்சனையும் ஒரு ஜிபியு முகவராக அடையாளம் காட்டியிருந்தார் என்பதை இந்த கண்டுபிடிப்பு நிகழ்வுப்போக்கின் போது கெல்ஃபான்டுக்குக் கிடைத்த ஒரு ஆவணம் ஸ்தாபித்தது. 1976 ஜூன் 8 இல் ஜோசப் ஹான்சனுக்கு அவரது நண்பர் வான் டி. ஓ’பிரையனால் (Vaughn T. O’Brien) எழுதப்பட்டிருந்த ஒரு தனிப்பட்ட கடிதம் பின்வரும் குறிப்பிடத்தக்க நிகழ்வை நினைவுகூர்ந்தது:

சில ஆண்டுகளுக்கு முன்னர், 1940களின் பின்பகுதியில் அல்லது 1950களின் ஆரம்பத்தில் (தேதி எனக்கு சரியாக நினைவில்லை என்றாலும், இடம் நன்றாக நினைவிருக்கிறது—நியூ யோர்க் நகரின் இரண்டாம் அவென்யூ பதினேழாம் தெருவில்) பியர்ல் க்ளூகரை (Pearl Kluger) நான் வீதியில் சந்தித்தேன். பியர்ல் லியோன் ட்ரொட்ஸ்கியின் பாதுகாப்பிற்கான அமெரிக்க கமிட்டி அலுவலகத்தில் செயலாளராக இருந்தவர், அத்துடன் ஆரம்பத்தில் பழைய அமெரிக்க தொழிலாளர் கட்சியில் ஏ.ஜே. முஸ்தே (A.J. Muste) மற்றும் [மூலப்பிரதியில் உள்ளவாறு] லூயிஸ் பூடென்ஸ் (Louis Bundenz) ஆகியோருடன் தொடர்பில் இருந்தார் என நான் நினைக்கிறேன். பியேர்லை (Pearl) நான் ஒரு கணிசமான காலத்திற்குப் பார்த்திருக்கவில்லை, ஆனாலும் அப்பெண்மணி உடனடியாக சொன்னார், “உங்கள் நண்பர் ஜிபியு உடன் வேலை செய்ததாக பூடென்ஸ் சொல்கிறார்” என்று. [22]


சில்வியா கோல்ட்வெல் (பிராங்ளின், டொக்ஸீ) புகைப்படம் டேவிட் நோர்த் 1977

(1958 நீதிபதிகள் குழு சாட்சிய உரைவடிவாக்கங்கள் மற்றும் வெனோனா உரைஆவணங்கள் வெளியிடப்படுவதற்கு முன்பே கூட) சில்வியா கோல்ட்வெல், ஒரு ஜிபியு-கேஜிபி உளவாளியாக இருந்தார் என்பதற்கு பெருகியளவில் ஆதாரங்கள் இருந்தும், அவரை ஹான்சனும் சோசலிச தொழிலாளர் கட்சியும் ஒரு “முன்னுதாரண” தோழராக ஏன் சளைக்காமல் பாதுகாத்து நின்றார்கள் என்பதையும், பூடென்ஸை ஒரு பொய்ச்சாட்சியாக ஏன் அவர்கள் மீண்டும் மீண்டும் கண்டனம் செய்தார்கள் என்பதையும் ஓ’பிரையனின் கடிதம் வெளி கொணர்ந்தது. பூடென்ஸ், கோல்ட்வெல்லை மட்டுமன்றி ஹான்சனை நோக்கியும் கைகாட்டியிருந்தார். சோசலிச தொழிலாளர் கட்சி, கோல்ட்வெல்லிற்கு எதிரான பூடேன்ஸின் குற்றச்சாட்டுகளை உண்மையென ஏற்றுக் கொண்டிருந்தால், அதனுடன் பிணைந்த ஹான்சனின் பாத்திரம் குறித்த தீவிரமான கேள்விகளையும் அது எழுப்பியிருக்கும். அனைத்திற்கும் மேலாக, ஹான்சனை முகவராக பூடென்ஸ் ஒருபோதும் பகிரங்கமாக அடையாளம் காட்டவில்லை என்ற உண்மையானது, ஹான்சன் 1940 தொடங்கி ஒரு உயர்மட்ட உளவாளியாக செயல்பட்டு வந்ததால், அவருக்கு எதிரான அம்பலப்படுத்தலை FBI தடுத்திருக்கும் என்ற சந்தேகத்தைத் தவிர்க்கவியலாமல் எழுப்பியிருக்கும்.

கெல்ஃபான்ட் வழக்கு விசாரணை முடிந்த ஐந்து வாரங்களுக்கு பின்னர், 1983 ஏப்ரல் 15 ஆம் தேதி மிலிட்டன்ட் (Militant) பதிப்பில், சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர்கள், நீங்கள் பல வருடங்களாக அறிந்திருந்த விடயமான, பூடென்ஸ் “பல சோசலிச தொழிலாளர் கட்சி அங்கத்தவர்களை சோவியத் முகவர்களாக அடையாளம் காட்டியிருந்தார் என்பதையும், 1979 இல் மரணிக்கும் வரையிலும் சோசலிச தொழிலாளர் கட்சியின் ஒரு பிரதான தலைவராய் இருந்த ஜோசப் ஹான்சனும் அவர்களில் உள்ளடங்குவார்” என்பதையும் அவர்கள் முதன்முறையாக அங்கத்தவர்களுக்குத் தெரியப்படுத்தினர். “பல” என்ற இந்த வார்த்தை சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் இருந்த ஜிபியு முகவர்களின் பட்டியலில், ஹான்சன் மற்றும் கோல்ட்வெல் ஆகிய இரண்டு பெயர்களுக்கும் அதிகமான எண்ணிக்கையைக் குறிக்கிறது. பாதுகாப்பு மற்றும் நான்காம் அகிலம் விசாரணையையும் அலன் கெல்ஃபான்டின் முயற்சிகளையும் முழுமையாக சரியென்று காட்டிய இந்த திகைப்பூட்டும் வாக்குமூலம் பகிரங்கமான பின்னரும், கோல்ட்வெல்லை தொடர்ந்தும் பாதுகாக்க சோசலிச தொழிலாளர் கட்சி தலைவர்கள் முடிவு செய்தனர். மிலிட்டன்ட் பத்திரிகையில் இந்த அவமானகரமான ஒப்புதல் வாக்குமூலம் வெளியான அடுத்த நாளே, லாரி சீய்கிள் பின்வரும் முன்மொழிவை சோசலிச தொழிலாளர் கட்சி அரசியல் கமிட்டியின் முன் வைத்தார்:

இறுதியாக சில்வியா கோல்ட்வெல்லுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் விடயத்தில் கட்சியின் நிலைப்பாட்டை அளிக்கும் ஒரு கட்டுரையை நாம் எழுதியாக வேண்டும். கட்சியானது இப்போது சில்வியா கோல்ட்வெல் மற்றும் சோசலிச தொழிலாளர் கட்சிக்கு எதிராக நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் எதிர் உளவுத் திட்ட வகை “அரசு-உளவு” (Cointelpro-type “snitch-jacket”) நடவடிக்கைகளுக்கு எதிராக தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு பொறுப்பேற்றுள்ள நமது அரசியல் நிலைப்பாட்டை, கட்சிக்கும் மற்றும் சர்வதேச இயக்கத்திற்கும் அத்தகைய ஒரு கட்டுரை மூலமாக வழங்கியாக வேண்டும். புரட்சிகரமான தொழிலாளர்களின் கட்சியினது தலைமையானது அதன் அங்கத்தவர் ஒவ்வொருவரையும் இத்தகைய அவதூறுப் பிரச்சாரங்களுக்கு எதிராய் விசுவாசத்துடன் பாதுகாக்கின்ற பொறுப்பைக் கொண்டுள்ளதை, இதுவரை ஒருபோதும் கற்றிராதவர்களுக்கும் அல்லது மறந்து விட்டிருக்கக் கூடியவர்களுக்கும், மீண்டுமொருமுறை விளக்குவது குறிப்பாக அவசியமானதாகும். [23]

"சில்வியா கோல்ட்வெல் கட்டுரைக்காக சீய்கிள் முன்வைத்த அணுகுமுறைக்கு ஒப்புதலளிக்கும்” ஒரு மசோதா ஏகமனதாய் நிறைவேறியதாக அரசியல் கமிட்டியின் சம்பவக் குறிப்பு எடுத்துக்காட்டுகிறது. இந்த “அணுகுமுறை” சோசலிச தொழிலாளர் கட்சியின் தேசியக் கமிட்டிக்கு ஜாக் பார்ன்ஸ் 1983 மே மாதம் வழங்கியிருந்த ஒரு அறிக்கையில் உணரப்பட்டது. இது மிலிட்டன்ட் பத்திரிகையில் 1983 ஆகஸ்ட் 5 இல் வெளியானது. பார்ன்ஸ் கோல்ட்வெல்லை மீண்டும் “தோழர்” என்று ஏற்றிருந்தார். தேசியக் கமிட்டியிடம் அவர் பின்வருமாறு கூறினார்:

FBI இன் கலகக்கருவியும் உளவாளியுமான லூயிஸ் பூடென்ஸ் மூலமாக சில்வியா மீது சேறுவீசப்பட்டது என்பதை நாம் அறிவோம். அவர் அந்த பழிவாங்கப்பட்ட ஆண்டுகள் முழுவதிலும் FBI ஆல் துரத்தப்பட்டார். ரோஸன்பேர்க் (Rosenbergs) தம்பதியைக் குற்றவாளிகளாகக் கண்ட விசாரணை போல 1950களில் சோவியத் “உளவுபார்ப்பு வேலையை” விசாரித்த ஃபெடரல் நீதிபதிகள் குழுவின் முன் அவர் முன்நிறுத்தப்பட்டார். WL-WRP நமது இயக்கத்திற்கு எதிரான அவர்களது சீர்குலைப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்துகின்ற ஒரு வழிவகையாக இங்கேயும் மற்றும் சர்வதேச அளவிலும் அந்த முயற்சியைத் தொடர்கின்ற நிலையை அவர் எதிர்கொண்டிருக்கிறார்.

நீதிபதிகள் குழுவின் உரைவடிவாக்கங்கள் இட்டுக்கட்டப்பட்டவை என்று கூறுமளவுக்கு பார்னேஸ் சென்றார். “இது ஒரு மிகத் துல்லியமான வடிவதிற்குள்—அதாவது பிரமாணச் சாட்சியம் அளிக்கும் பெண்மணி தன் மீது குற்றம்சாட்டப்பட்ட விடயங்களை தானே செய்ததாகக் கூறுகின்ற ஒரு உத்தியோகபூர்வ உரைவடிவமாக—இருப்பதாகக் கூறப்படுகிறது.” பார்னெஸின் நடைமுறைப் பொருத்தமற்ற விரக்தியான கூற்றுகள் தேசிய கமிட்டியால் எந்த ஆட்சேபணையும் இன்றி ஏற்றுக் கொள்ளப்பட்டன.

4. இந்த வேலையின் முக்கியத்துவம், கெல்ஃபான்ட் 1982 ஏப்ரலில் ஸ்பொரோவ்ஸ்கியை சாட்சியம் அளிக்கச் செய்வதில் வெற்றி பெற்றார் என்பது தான். ஸ்பொரோவ்ஸ்கி, அவர் பிறந்த ஆண்டு மற்றும் இடம் அத்துடன் அவருக்கு யாரேனும் உறவினர் இருந்தார்களா என்பதற்கு அதிகமாக வேறெதற்கும் பதிலளிக்க மறுத்து, கெல்ஃபான்ட் மற்றும் அவரது வழக்கறிஞருக்கு அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டி வந்தார். இறுதியில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஐந்தாவது சட்டத்திருத்தத்தை பயன்படுத்தி தன்னிடம் கேள்வி எழுப்பியவர்களை முட்டாளாக்கிய ஸ்பொரோவ்ஸ்கி வாயைத் திறக்க மறுப்பதில் அவர் ஒரு நிபுணர் என்பதை மீண்டுமொருமுறை நிரூபித்தார்.

மேற்கூறிய பத்தியில் இருக்கும் ஒவ்வொன்றுமே சட்ட ஆவணங்களின் திரித்தலாகவும் மற்றும் பொய்மைப்படுத்தலாகவும் உள்ளது. ஸ்பொரோவ்ஸ்கி யாருக்கும் அப்படி இப்படியுமாக போக்குக் காட்டவில்லை. ஸ்பொரோவ்ஸ்கியை வாக்குமூலம் அளிக்கச் செய்ய கெல்ஃபான்ட் செய்த முயற்சிகளைக் குறித்த சட்ட ஆவணங்களில் இது தெளிவாக எடுத்துக்காட்டப்படுகிறது. 1982 பிப்ரவரி 1 இல், நீதிபதி பிஃபால்சர், உண்மைகளை கண்டறிய கெல்ஃபான்டுக்கு 90 நாள் அவகாசம் அளித்தார், இந்தக் காலத்தில் அவர் சாட்சியங்களைக் குறுக்குவிசாரணை செய்து வழக்கிற்குப் பொருத்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்படுவார். ஸ்பொரோவ்ஸ்கியை சாட்சியம் அளிக்கச் செய்யும் சட்ட ஆவணத்தை வழங்க கெல்ஃபான்டின் வழக்கறிஞர்கள் நடவடிக்கை மேற்கொண்டனர். உடனடியாக சோசலிச தொழிலாளர் கட்சி, ஸ்பொரோவ்ஸ்கி சாட்சியமளிப்பதைத் தடுக்கும் ஒரு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. 1982 மார்ச் மாதத்தில் ஜாக் பார்ன்ஸ் தனது சொந்த சாட்சியத்தின் போது, ஸ்பொரோவ்ஸ்கியைப் பாதுகாத்து சோசலிச தொழிலாளர் கட்சி தலையீடு செய்தமைக்கு பின்வருமாறு ஒரு அசாதாரணமான நியாயப்படுத்தலை வழங்கினார்:

கேள்வி: ஜிபியு முகவர்களைப் பாதுகாப்பது உங்கள் வேலையா?

பார்ன்ஸ்: இயக்கத்தின் மூலமாகப் போராடியும் மற்றும் அதனுடன் இணைந்து வேலை செய்தும், அமெரிக்கக் குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், எங்களது கட்சியின் உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும் போது அவற்றைப் பாதுகாத்து நிற்பதும் எனது வேலையாகும்.

கேள்வி: உங்கள் இயக்கத்திற்குள் ஜிபியு இன் நடவடிக்கைகள் குறித்து, சட்ட எல்லைகளுக்குட்பட்டு விசாரணைகள் நடத்தப்படுகின்ற போது, உங்கள் கட்சியின் உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாகின்றனவா?

பார்ன்ஸ்: தனிநபர்களை துன்புறுத்துவதையே ஒரே நோக்கமாகக் கொண்ட அமைப்புகளால் அவர்கள் துன்புறுத்தப்படுகின்ற போது, அவர்களின் உரிமைகள் பாதிக்கப்படுகின்றன. முன்னதாக நீங்கள் ஸ்பொரோவ்ஸ்கியைக் குறிப்பிட்டீர்கள். அவர், சத்தியப்பிரமாணத்தின் கீழ், எங்கள் இயக்கத்திற்கு அந்நியமான முகமைகளுடன் அவருக்குத் தொடர்புகள் இருந்ததாகக் கூறியிருந்தார். ஸ்பொரோவ்ஸ்கி அவர்களுக்கே கூட, இந்த நாட்டில் வேறு எந்தக் குடிமகனுக்கும் இருக்கும் அதே உரிமைகள் இருக்கின்றன. [24]

பிரச்சினை ஸ்பொரோவ்ஸ்கிக்கு உரிமைகள் இருந்ததா என்பதல்ல, ஒரு ஸ்ராலினிச முகவராக அவரது பாத்திரம் தொடர்பாக, சட்டபூர்வமான ஒரு வாக்குமூலத்தில், அவரை சாட்சியம் அளிக்க நிர்பந்திக்க முடியுமா என்பது தான். அவரது வாக்குமூலத்தை தடுக்க சோசலிச தொழிலாளர் கட்சி செய்த முயற்சிகளுக்குப் விடையிறுப்பாக, கெல்ஃபான்டின் வழக்கறிஞர்கள் ஸ்பொரோவ்ஸ்கியின் வாக்குமூலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் ஒரு பதில் மனுவை 1982 மார்ச் 12 அன்று தாக்கல் செய்தனர்.

திரு. ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியம் அமெரிக்க ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள் ஜிபியு இன் நடவடிக்கையின் இயல்பு மீது மதிப்பார்ந்த வெளிச்சம் பாய்ச்சும். இயக்கத்திற்குள் அவருடன் ஒத்துழைத்தவர்களின் பெயர்கள் குறித்தும் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக அவரது நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் கேள்வியெழுப்பப்படும். நான்காம் அகிலத்திற்குள்ளாக திரு. ஸ்பொரோவ்ஸ்கியின் வாழ்க்கையைக் கொண்டு பார்த்தால், ஜிபியு முகவர்களின் நடவடிக்கைகள் மற்றும் அவர்களது செயல்பாட்டு முறை குறித்த விடயத்தில் அவரால் மிகமுக்கியமான வெளிச்சத்தைக் கொடுக்க முடியும் என்பது தெளிவு, சோசலிச தொழிலாளர் கட்சியைப் பாதுகாத்து நிற்பவர்களின் இன்றைய நடவடிக்கைகளை மதிப்பீடு செய்வதில் அது மிகப்பெருமளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். திரு. ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியத்தின் முக்கியத்துவம் தெளிவாக உள்ளது, அத்துடன் ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக அவர் செய்த ஒற்றுவேலையின் வரலாற்றைக் கணக்கிலெடுத்துப் பார்த்தால், அவரது சார்பாக சாட்சியத்தைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு உத்தரவை சோசலிச தொழிலாளர் கட்சி பிரதிவாதிகள் எதிர்பார்ப்பது, சொல்லப் போனால் விசித்திரமான ஒன்றாகும். [25]

ஸ்பொரோவ்ஸ்கியின் சாட்சியத்தை தடுக்கும் சோசலிச தொழிலாளர் கட்சியின் முயற்சியை நீதிபதி பிஃபால்சர் (Pfaelzer) நிராகரித்தார், சாட்சியம் 1982 ஏப்ரல் 15 இல் நடைபெறவிருந்தது. இறுதியில், அந்த கொலைகாரர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தைப் பிரதிநிதித்துவம் செய்த ஒரு வழக்கறிஞரால் குறுக்குவிசாரணை செய்யப்படவிருந்தார். இந்நிகழ்வு சோசலிஸ்ட் ஒவ்வொருவராலும் கொண்டாடப்பட்டிருக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் இந்த வாக்குமூலத்தை தடுக்க முயன்றிருந்த சோசலிச தொழிலாளர் கட்சிக்கோ இது அச்சுறுத்தலாக தெரிந்தது. மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் சார்பில் வழக்கறிஞர் ஜேம்ஸ் லார்ஸன் ஆஜரானார். ஸ்பொரோவ்ஸ்கியைக் கேள்வி கேட்பதைத் தடுக்கும் போராட்டத்தில், லார்ஸன் சோசலிச தொழிலாளர் கட்சியின் வழக்கறிஞர்களுடன் நெருக்கமாய் இணைந்து வேலை செய்தார். இந்த வாக்குமூலத்தில் அமெரிக்க அரசாங்கம் பெரும் ஆர்வம் காட்டியது. அரசாங்கத்தின் தரப்பில், சிஐஏ இயக்குநர் வில்லியம் கேசி (William Casey), FBI இயக்குநர் வில்லியம் வெப்ஸ்டர் (William Webster), மற்றும் அட்டர்னி ஜெனரல் வில்லியம் ஃபிரெஞ்ச் ஸ்மித் (William French Smith) ஆகியோர் சார்பில் லிண்டா குரோம்வெல் (Linda Cromwell) அரசாங்க தரப்பில் ஆஜரானார். அலன் கெல்ஃபான்டின் வழக்கறிஞரான ஜோன் பேர்ட்டன் (John Burton) ஸ்பொரோவ்ஸ்கியைக் குறுக்குவிசாரணை செய்தார்.

அவரது தனிநபர் அடையாளங்களைக் குறித்த விபரங்களுக்குப் பதிலளித்த பின்னர், ஸ்பொரோவ்ஸ்கியிடம் அவர் எப்போது ரஷ்யாவை விட்டு வந்தார் என்று கேட்கப்பட்டது. அவரது பதில்: “எனது வழக்கறிஞரின் அறிவுரையின் பேரில், தன்னைத்தானே குற்றவாளியாக்கும் சுய-வாக்குமூலத்திலிருந்து விதிவிலக்களிக்கும் மாநில மற்றும் மத்திய சிறப்புரிமைகளை மீறி, எனது பதில் என்னைக் குற்றவாளியாக்கக் கூடும் என்ற முகாந்திரத்தின் அடிப்படையில், இந்த கேள்விக்கு நான் பதில் கூற மறுக்கிறேன்,” என்றார். பேர்ட்டனிடமிருந்து அடுத்துவந்த அத்தனை கேள்விகளுக்குமே அவரது பதில் இந்த சிறப்புரிமையை நிலைநாட்டுவதாகவே இருந்தது. அதில் பின்வரும் அதிமுக்கியமான கேள்விகளும் உள்ளடங்கும்:

கேள்வி: 1941 டிசம்பரின் போது அமெரிக்காவிற்குள் நீங்கள் நுழைந்த சூழல்கள் தொடர்பான கேள்விகளை நான் எழுப்பினால், அதற்கும் உங்கள் பதில் இதே தான் இருக்குமா?

ஸ்பொரோவ்ஸ்கி: ஆம்.

உங்களுக்குத் தெரியும், திருமதி வைய்ஸ்மான், ஸ்பொரோவ்ஸ்கியின் சார்பாக லோலா டோலன் மற்றும் ஜோர்ஜ் நோவாக் எடுத்த அசாதாரணமான முயற்சிகளின் காரணத்தால் தான் ஸ்பொரோவ்ஸ்கி பாசிச-ஆதரவு விச்சி பிரான்சில் இருந்து தப்பி அமெரிக்காவிற்குள் நுழைய முடிந்திருந்தது. இந்தக் கேள்விக்கு ஸ்பொரோவ்ஸ்கி பதிலளித்திருந்தால் அவருக்கு டோலன் உடனான உறவின் இயல்பைத் தெளிவுபடுத்துவதில் அது பங்களித்திருக்க முடியும். அவரது ஜிபியு நடவடிக்கைகளில் டோலனும் உடந்தையாளராக வேலை செய்திருந்தாரா? சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக இருந்த ஸ்ராலினிச அனுதாபிகள் மற்றும் உளவாளிகளின் ஒரு வலைப்பின்னலின் பகுதியாக ஜோர்ஜ் நோவாக் இருந்திருந்தாரா?

தன்னைத்தானே குற்றவாளியாக்கும் சுய-வாக்குமூலத்திலிருந்து விதிவிலக்கு அளிக்கும் ஐந்தாம் சட்டத்திருத்த சிறப்புரிமையை அவர் தொடர்ந்து பயன்படுத்துவாரா என்று கேட்டு, ஸ்பொரோவ்ஸ்கி மீதான தனது குறுக்குவிசாரணையில் பேர்ட்டன் தொடர்ந்து நெருக்கினார்.

கேள்வி: 1954 மற்றும் 1955 ஆம் ஆண்டுகளின் போது அமெரிக்காவில் நீங்கள் நுழைந்த காலம் தொட்டு ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளும் மற்றும் அமெரிக்காவில் சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளும் சோவியத் இரகசிய பொலிஸின் சார்பாக நீங்கள் ஈடுபட்டு வந்திருக்கக்கூடிய எந்த நடவடிக்கைகள் தொடர்பாகவும் கேள்விகளை நான் எழுப்பினால், அப்போதும் உங்கள் பதில்கள் இதேதானா? 

ஸ்பொரோவ்ஸ்கி: ஆம்.

கேள்வி: 1930 தொடங்கி இன்றைய காலம் வரை ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குள்ளாக சோவியத் இரகசிய பொலிஸின் சர்வதேச எந்திரம் தொடர்பாய் நீங்கள் அறிந்திருக்கக்கூடிய தனிப்பட்ட விபரங்கள் அல்லது நீங்கள் கேள்விப்பட்டிருக்கக் கூடிய விபரங்கள் குறித்து நான் உங்களிடம் கேட்டால், அப்போதும் உங்கள் பதில் இதேதானா?

பதில்: ஆம். [26]

வழக்கறிஞரது அறிவுரையின் பேரில், குற்றவாளியாக்கும் சுய-வாக்குமூலத்திலிருந்து விதிவிலக்களிக்கும் ஐந்தாம் சட்டத்திருத்த சிறப்புரிமையை ஸ்பொரோவ்ஸ்கி முன்நிறுத்தியதை, “கெல்ஃபான்ட் மற்றும் அவரது வழக்கறிஞருக்கு அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டி வந்தார்” என்று நீங்கள் ஏன் வருணிக்க வேண்டும்? அவரது கோழைத்தனமான மவுனம் எப்படி “அவரிடம் கேள்வி கேட்டவர்களை முட்டாளாக்கியது?” சொல்லப் போனால், வழக்கின் உள்ளடக்கத்திற்குள் பார்த்தால், அவரது சாட்சியமே எதிர்வரும் காலத்தில் அவருக்குத் தண்டனை பெற்றுத் தரலாம் என்ற முகாந்திரத்தின் பேரில் கேள்விகளுக்குப் பதில் கூற ஸ்பொரோவ்ஸ்கி மறுத்தமையானது, சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சிக்குள் உயர்ந்தளவில் அரசின் ஊடுருவல் இருந்தது என்ற கெல்ஃபான்டின் குற்றச்சாட்டிற்கு உதவத்தானே செய்திருந்தது.


1975ல் மார்க் ஸ்பொரோவ்ஸ்கி, அவரது மனைவி சான் பிரான்சிஸ்கோவில்

கேள்விகளுக்கு பதிலளிக்க ஸ்பொரோவ்ஸ்கியை நிர்ப்பந்திக்க கெல்ஃபான்டின் வழக்கறிஞர்கள் மீண்டும் நீதிமன்றம் சென்றனர். ஸ்பொரோவ்ஸ்கி ஐந்தாம் சட்டத்திருத்த சிறப்புரிமையை முன்நிறுத்தியதற்கு எதிரான அவர்களது மேல்முறையீட்டின் மீதான விசாரணை 1983 ஜனவரி 4 அன்று அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி ஜே.ஸ்டீல் லாங்ஃபோர்ட் (J. Steele Langford) முன்னிலையில் நடந்தது. அரசாங்க முகவர்களை அம்பலப்படுத்துவதற்கு இட்டுச் செல்லக்கூடிய தகவல்களை வழங்குவதை, அரச குற்றமாக ஆக்குகின்ற சட்டம் புதிதாக நிறைவேற்றப்பட்டிருந்ததை கவனத்திற்குக் கொண்டு வந்து, ஜோன் பேர்ட்டனின் வாதத்திற்கு மாஜிஸ்திரேட் பதிலளித்தார்.

நீதிமன்றம்: குற்றவாளியாக்கும் சுய-வாக்குமூலத்திலிருந்து விடுவிக்கும் சிறப்புரிமையைக் குறிப்பிடுவதற்கு திரு. ஸ்பொரோவ்ஸ்கியின் அக்கறையை இப்போது நீங்களே கௌரவிக்கிறீர்கள் என்றால், நீதிமன்றம் ஏன் கௌரவிக்க கூடாது?

பேர்ட்டன்: கனம் நீதிபதி அவர்களே, நாங்கள்—

நீதிமன்றம்: பகுதியாக வாக்குமூலங்களைக் கொண்டு, நான் புரிந்து கொண்ட வகையில், சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக இருந்த மற்றும் இருக்கின்ற பல்வேறு மனிதர்களை இந்த சாட்சி அடையாளம் காட்ட விரும்புகிறார், அவர்கள் நடைமுறையில் இரகசிய முகவர்களாக, இன்னும் சொல்லப்போனால், அமெரிக்காவின் உளவுத் துறை முகவர்களாக இருக்கக் கூடும்?

பேர்ட்டன்: கனம் நீதிபதி அவர்களே எங்களது நடவடிக்கையின் நோக்கமே அதுதான், அதை நிரூபிக்கத் தான், துல்லியமாக அந்த நோக்கத்திற்காகத் தான் நாங்கள் மார்ச் 1 விசாரணையை நோக்கி சென்று கொண்டிருக்கிறோம். அது உளவுவேலை சார்ந்த தனிநபர் அடையாள பாதுகாப்புச் சட்டமீறல் என்றா நீங்கள் கூறுகிறீர்கள்?

நீதிமன்றம்: ஆமாம். [27]

சோசலிச தொழிலாளர் கட்சிக்குள்ளாக இருந்த முகவர்களை அம்பலப்படுத்த இட்டுச் செல்கின்ற அந்த சாட்சியம் அவரையே குற்றவாளியாக்க இட்டுச் செல்லக் கூடும் என்று கூறி ஸ்பொரோவ்ஸ்கிக்கு ஆதரவாக நீதிபதி லாங்ஃபோர்ட் தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கின் தன்மையைக் கொண்டு பார்க்கும்போது, திரு. ஸ்பொரோவ்ஸ்கி, வழக்கு தாக்கல் செய்யப்பட்டதன் பின், இந்த ஆண்டு தான் சட்டமாகி இருக்கக் கூடிய, குறிப்பிட்ட தேசியப் பாதுகாப்பு தகவல்களின் பாதுகாப்பு என்று அறியப்படும் சட்ட ஷரத்து எதிர்நிற்கின்ற நிலையில், சோசலிச தொழிலாளர் கட்சியில் போலியாக பங்குபற்றியிருந்திருக்கக் கூடிய உளவுத்துறை முகவர்களாக இருக்கத்தக்கவர்களது பெயர்களையோ அல்லது வருணிப்புகளையோ அல்லது அவர்களை அடையாளம்காட்ட இட்டுச் செல்லும் வேறு எதனையுமோ அடையாளம்காட்ட கோரப்படுவது சட்டப்பிரிவு 601(a) இன் மீறலுக்கு இட்டுச் செல்லும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது அல்லது கொள்ளக் கூடும் என்றே எனக்குத் தோன்றுகிறது என்றார். [28]

கெல்ஃபான்ட் மற்றும் அவரது வழக்கறிஞரை ஸ்பொரோவ்ஸ்கி முட்டாளாக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும், அவர் அவர்களுக்கு அப்படியும் இப்படியுமாக போக்குக் காட்டவும் கூட இல்லை. அதற்கு மாறாக, ஒரு நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பின்னர், ஸ்பொரோவ்ஸ்கி, சோசலிச தொழிலாளர் கட்சியில் இருந்த அவரது பாதுகாவலர்களின் பெரும் உதவியுடன், அந்த அமைப்புக்குள் இருந்த அரசாங்க முகவர்களை அடையாளம் காட்டுவதைக் குற்றச் செயலாக ஆக்கியிருந்த, புதிதாக நிறைவேற்றப்பட்டிருந்த பெடரல் சட்டங்கள் மூலமாக, அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிப்பதில் இருந்து தப்பித்து வந்தார். மார்க் ஸ்பொரோவ்ஸ்கியை குறுக்கு விசாரணை செய்வதற்கு ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்குக் கிட்டிய ஒரே மற்றும் இறுதி வாய்ப்பானது இவ்வாறு தான் முடிந்து போனது.

1997 மார்ச் 1 அன்று ஆல்பர்ட் குளோட்சருக்கு (Albert Glotzer) எழுதிய ஒரு சோகம் ததும்பும் கடிதத்தில் நீங்கள் பின்வருவதை நினைவுகூர்கிறீர்கள்: “ஸ்பொரோவ்ஸ்கி இறப்பதற்கு முன்பு அவரைப் பார்க்க நான் பலமுறை முயற்சி செய்தேன், குறைந்தது நான்கு முறையாவது அவருக்கு தொலைபேசி அழைப்பை செய்திருப்பேன், ஆனால் எப்போதுமே அவர் அழைப்பைத் துண்டித்து விடுவார் அல்லது என் முகத்துக்கு நேரே கதவை அறைந்துவிட்டு சென்று விடுவார். ரோஷக்காரர்!” உங்கள் அவமான உணர்வு தவறானது. உங்களுக்கு ஆச்சரியம் ஏன் ஏற்பட்டது, திருமதி. வைய்ஸ்மான்? தனது கரங்களில் இரத்தக்கறை கொண்ட ஒரு ஸ்ராலினிச முகவரான ஸ்பொரோவ்ஸ்கி, அவர் செய்த கொலைகள் குறித்து உங்களுடன் மகிழ்ச்சி பொங்க விபரங்களை அளித்து பேசிக் கொண்டிருப்பார் என்றா உண்மையில் நீங்கள் எதிர்பார்த்தீர்கள்? அவர் உள்ளத்தைத் திறந்துகாட்டி நீங்கள் புரிந்து கொள்ள எதிர்பார்ப்பார் என்று எதிர்பார்த்தீர்களா? ஸ்பொரோவ்ஸ்கி விடயத்திலான உங்களது அசட்டுத்தனமான அணுகுமுறைகளில், நீங்களே தான் உங்களை முட்டாளாக்கிக் கொண்டீர்கள்.

கெல்ஃபான்ட் வழக்கு முடிந்து முப்பத்தியிரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. கடந்த சில ஆண்டுகளாக, மார்க் ஸ்பொரோவ்ஸ்கியின் பாத்திரம் குறித்த உண்மைகளை வெளிக்கொண்டுவர சளைக்காது உழைக்கும் ஒரு அறிஞராக உங்களை விளம்பரம் செய்து வந்திருக்கிறீர்கள். ”காப்பக தணிக்கை மற்றும் ஆவணப்படுத்தலின் ஒரு பயங்கரமான வளைவுசுளிவுகளுக்குள் புகுந்து பயணிக்க வேண்டியிருப்பது” குறித்து ஒரு களைத்துப் போன தொனியுடன் எழுதியிருக்கிறீர்கள். ”உண்மைகளை வெளியே கொண்டுவருவது ஒருபோதும் சுலபமானதில்லை” என்று பெருமூச்சுடன் பிரகடனம் செய்கிறீர்கள். திருமதி. வைய்ஸ்மான், அதை, அலன் கெல்ஃபான்ட் மற்றும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்கா சொல்கிறீர்கள்! ஹான்சன், நோவாக் மற்றும் பார்ன்ஸ் ஆகியோரின் பொய்களுக்கும் மூடிமறைப்புகளுக்கும் நீங்கள் ஓசையில்லாமல் உடன்பட்டதைக் குறித்து வெட்கப்படுவதற்குப் பதிலாக, அவற்றைத் தொடர்ந்து காப்பாற்றுவதற்குத்தான் நீங்கள் இப்போதும் வேலை செய்து கொண்டிருக்கிறீர்கள்.

நிறைவாக, மார்க் ஸ்பொரோவ்ஸ்கி குறித்த உங்களது கட்டுரையின் பிற்சேர்க்கையில் இருக்கும் அவதூறான திரித்தல்களையும் மோசடியான கூற்றுகளையும் நீங்கள் பகிரங்கமாக திரும்பப்பெற வேண்டும் என்று நான் மீண்டும் கோருகிறேன்.

தங்கள் உண்மையுள்ள,

டேவிட் நோர்த்

தேசியத் தலைவர், சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர்

***

Footnotes:

[1] Volume 43, No. 2, pp. 189–209

[2] See, for example, The Venona Secrets: Exposing Soviet Espionage and American Traitors, by Herbert Romerstein and Eric Breindel; and Spies: The Rise and Fall of the கேஜிபி in America, by Harvey Klehr, John Earl Haynes, and Alexander Vassiliev

[3] Ibid, p. 209

[4] Letter to Albert Glotzer, December 13, 1996

[5] Ibid

[6] How the ஜிபியு Murdered Trotsky (London: New Park, 1981), pp. 217–218

[7] Healys Big Lie: The Slander Campaign Against Joseph Hansen, George Novack, and the Fourth International (New York: National Education Department, 1976), p. 13

[8] Ibid, p. 9

[9] Ibid, pp. 9–11

[10] The texts of these documents are reprinted in The Gelfand Case, Volume 1, (New York: Labor Publications, 1985), pp. 7–30

[11] Ibid, p. 21

[12] Healys Big Lie, p. 63

[13] The Gelfand Case, Volume 1, pp. 52–70

[14] Ibid, p. 69

[15] Ibid, p. 70

[16] Ibid, p. 74

[17] Ibid, p. 91

[18] Ibid, p. 103

[19] Harvey Klehr, John Earl Haynes, Alexander Vassiliev: Spies: The Rise and Fall of the கேஜிபி in America (Kindle Locations 7502-7505). Kindle Edition

[20] “Portrait of Deception,” Part 2, Critique, 2015, Volume 43, No. 1, p. 192

[21] The Gelfand Case, Volume 2, p. 635

[22] Ibid, p. 651

[23] சோசலிச தொழிலாளர் கட்சி Political Committee Meeting No. 8, April 16, 1983

[24] The Gelfand Case, Volume 2, p. 422

[25] The Gelfand Case, Volume 1, pp. 152–153

[26] The Gelfand Case, Volume 2, pp. 434–435

[27] Ibid, pp. 465–466

[28] Ibid, p. 469