ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

උතුරේ දෙමල තරුනයා මරා දැමූ ආන්ඩුවේ පොලිස් නිලධාරීන් හෙලිදරවු වේ

இலங்கை: யாழ்ப்பாணத்தில் தமிழ் இளைஞன் கொல்லப்பட்டதில் அரசாங்கப் படைகள் அம்பலமாகியுள்ளன

By our correspondent
10 November 2017

வட இலங்கையில் யாழ்ப்பாணம், அரியாலை கிழக்கு, உதயபுரம் கிராமத்தில் தமிழ் இளைஞன் கொல்லப்பட்டமை தொடர்பில், விசேட அதிரடிப்படையைச் சேர்ந்த இரண்டு பொலிசார் நவம்பர் 3 கைது செய்யப்பட்டுள்ளனர். வடக்கில் அரசாங்கத்தினால் இராணுவ–பொலிஸ் பயங்கரம் கட்டவிழ்த்துவிடப்பட்டிருப்பதையே இக்கொலை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

25 வயது இளம் கடற்தொழிலாளியான டொன் பொஸ்கோ டெஸ்மன், அக்டோபர் 22 அன்று பிற்பகல் 3 மணியளவில், மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த போது, அவரைப் பின்தொடர்ந்து இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். கொல்லப்படும்போது, டெஸ்மன் மோட்டார் சைக்கிளின் பின்பக்க இருக்கையில் அவரது நண்பருடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரது நண்பர் மயிரிழையில் உயிர் தப்பினார்.

டெஸ்மன் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். அதிகப்படியான இரத்தப்போக்கு மற்றும் துப்பாக்கி ரவை சுவாசப்பையினைத் துளைத்துச் சென்றமையினால் இறந்துவிட்டார் என அன்றிரவே அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு வழங்கும் சாக்கில், பொலிஸ் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற டெஸ்மனின் நண்பரை உடனடியாகவே கைது செய்து, பல நாட்களின் பின்னர் விடுதலை செய்தது.

டெஸ்மனின் கொலை, வறுமையில் பீடித்த உதயபுரம் கிராமத்தில் பதட்ட சூழ்நிலையை உருவாக்கியதுடன் எதிர்ப்பும் நடவடிக்கை ஒன்றும் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டது. சூட்டுச் சம்பவத்துக்கு பின்னர், மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை எதிர்பார்த்து உடனடியாகவே விசேட அதிரடிப்படையினர் நிலைகொண்டனர்.

யாழ்ப்பாண பொலிசார் சூட்டுச் சம்பவம் சம்பந்தமான விசாரணையை நடத்தினார்கள். அக்டோபர் 28, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர விசாரணையை பொறுப்பேற்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு உத்தரவிட்டார். உதவிப் பொலிஸ் பரிசோதகர் மல்லவராச்சி பிரதீப் நிஷாந்த மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் முதியன்சேலாகே இந்திக புஸ்பகுமார ஆகிய இருவரை குற்றப்புலனாய்வுத்துறை கைது செய்தது. இருவரும் கிராமத்துக்கு அருகில் அமைந்துள்ள விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்தவர்களாகும். யாழ்ப்பாண நீதவான் இருவரையும் நவம்பர் 16 வரை விளக்கமறியலில் வைத்தார்.

இந்த கொலைச் சம்பவம், அருகாமையில் உள்ள சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மோட்டார் சயிக்கிள், ஒரு முச்சக்கர வண்டி மற்றும் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 9 மில்லிமீட்டர் கைத்துப்பாக்கி என்பன முகாமுக்குள் இருந்து சி.ஐ.டி.யினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வாகனங்கள் பாதுகாப்பு அமைச்சின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் கொலையில் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்பு உள்ளது என்பதை இந்த செய்திகள் தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக, இந்தப் பிராந்தியம் விளைவுகளுடன் கூடிய இராணுவ நிர்வாகத்தின் கீழ் இருப்பதுடன், அரசாங்கப் படைகள் மற்றும் பொலிசால் மட்டுமே ஆயுதங்களை சுதந்திரமாக தாங்கித்திரிய முடியும்.

இந்தக் கொலைக்கான நோக்கம் தெளிவாக இல்லை. உண்மை விரைவில் வெளிச்சத்துக்கு வருமா என்பதும் சந்தேகத்துக்குரியதே. கொல்லபட்ட இளைஞனின் பெற்றோரின் வீட்டுக்கு உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் சென்றிருந்தார்கள். அவர்களின் வீடு 2009ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அரசாங்கத்தின் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர், புதிதாக மீளக் குடியமர்த்தப்பட்ட உதயபுரம் கிராமத்தில் உள்ளது. டெஸ்மன், ஒரு தற்காலிக கொட்டிலில் தனது பெற்றோருடன் வசித்து வந்தார். படுகொலைக்கான காரணத்தை கூறும் நிலைமையில் அவர்கள் இருக்கவில்லை. பொலிஸ் எப்படி சட்டத்தினைக் கையில் எடுத்துக் கொண்டு இவ்வாறு மக்களைக் கொல்ல முடியும் என அவர்கள் பரிதாபமாக கேட்டார்கள்.

தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த கொழும்பு அரசாங்கங்களால் 26 வருடங்களாக கட்டவிழ்த்துவிடப்பட்ட இனவாத யுத்தத்திற்குப் பின்னர், சிறுபான்மைத் தமிழர்களுக்காக “நல்லிணக்கத்தை” ஏற்படுத்தப் போவதாக வாக்குறுதியளித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததை அடுத்து, பொலிஸ் துப்பாக்கிச் சூட்டினால் படுகொலை செய்யப்பட்டவர்களில் டெஸ்மன் நான்காவது நபராகும்.

2016 அக்டோபரில், கொக்குவில் – குளப்பிட்டிச் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்து கொண்டிருந்த இரண்டு பல்கலைக்கழக மாணவர்களை பொலிஸ் சுட்டுக்கொன்றது. மோட்டார் சைக்கிளை நிறுத்துமாறு பொலிசாரால் வழங்கப்பட்ட சமிக்கைக்கு கீழ்படியாமல் அதிவேகமாக சென்ற காரணத்தினாலேயே தாங்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக ரோந்து சென்ற பொலிஸ் ஒரு ஜோடிக்கப்பட்ட கதையை முதலில் கட்டிவிட்டது. மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் நடத்தப்பட்ட விசாரணைகளின் பின்னர், இது மெய்சிலிர்க்கும் படுகொலை என பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பொலிசாருக்கு எதிரான வழக்கு இழுபட்டுச் செல்கின்றது.

கடந்த யூலையில், துன்னாலையைச் சேர்ந்த மற்றொரு இளைஞர், மணல் ஏற்றிச் சென்ற லாரியில் பயணித்துக் கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். அதிகரித்துவந்த மக்களின் எதிர்ப்பினால், “கூடுதல் அதிகாரத்தினை” கையில் எடுத்ததற்கான தண்டனையாக இரண்டு பொலிசார் சேவையில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர்.பொலிசுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட வழக்கு, நத்தை வேகத்தில் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

எவ்வாறாயினும், துன்னாலை மற்றும் குடவத்தை கிராம மக்கள் மீது, அங்கிருந்த பொலிஸ் காவலரணை தாக்கியதாக குற்றஞ்சாட்டி டசின் கணக்கான அப்பாவிகளை பொலிஸ் கைது செய்தது. அவர்கள் செய்த “குற்றம்” பொலிஸ் படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்தது மட்டுமே. கைது செய்யப்பட்டவர்கள், தாங்கள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் அவர்களுக்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்படுவதாகவும் முறைப்பாடு செய்துள்ளனர். கடுமையான பிணை நிலமைகளின் கீழ் மற்றையவர்கள் விடுதலை செய்ப்பட்டபோதிலும், 35 பேர் இன்னமும் சிறையில் வைக்கப்பட்டுள்ளார்கள். பல இளைஞர்கள் கைதுசெய்யப்படுவோம் என்ற பீதியினால் தலைமறைவாக உள்ளனர்.

யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குள், அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகளால் பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் சில சந்தர்ப்பங்களில் வாள் போன்ற உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களுடன் பல வன்முறைகள் இடம்பெறுகின்றன. “ஆவா குழு” என்று அழைக்கப்படும் பாதாள உலக குழுவே சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசாங்கமும் மற்றும் பொலிசாரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்தக் குழு ஆரம்பத்தில், முன்னாள் ஜனாதிபதியின் சகோதரரான முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபாய இராஜபக்ஷவின் பங்களிப்புடன் இராணுவப் புலனாய்வுத்துறையால் உருவாக்கப்பட்டதாக, அரசாங்கத்தின் அமைச்சரவை அமைச்சர் ராஜித சேனாரட்ன வெளிப்படுத்தினார். இந்தக் குழு இராணுவம் மற்றும் பொலிசுடன் தொடர்பு வைத்திருக்க கூடும்.

பொலிஸ் வன்முறைக்கு முகம் கொடுக்கும் கிராமத்தவர்கள், தாங்கள் இன்னமும் யுத்த காலத்திலேயே வாழ்வதுபோல் உணர்வதாக உலக சோசலிச வலைத் தளத்துக்கு கூறினார்கள். மற்றொரு சம்பவம் கடந்த மே மாதத்தில் பளைப் பிரதேசத்தில் நடைபெற்றது. இந்தப் பிரதேசத்த்துக்கு அருகாமையில் பொலிஸ் வாகனத்துக்கு எதிராக ஒரு துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கூறிக்கொண்டு சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

100,000 படைகளுடன் வடக்கு மற்றும் கிழக்கில் நடைபெறும் இராணுவ நிர்வாகத்தினை நியாயப்படுத்துவதற்காக இத்தகைய சம்பவங்களை அரசாங்கம் பயன்படுத்துகின்றது. கோப்பாயில் இரண்டு பொலிசார் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், “நாங்கள் பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட்டதாக கூறினாலும் கூட, எல்லாவற்றையும் முற்றாக அழிக்கவில்லை. இந்த வகையான சம்பவங்கள் நடைபெறுவதற்கு நாங்கள் அனுமதிக்க முடியாது. இந்த முறையிலேதான் புலிப் பயங்கரவாதம் ஆரம்பித்தது. அது மீண்டும் புத்துயிர் பெறுகின்றது,” என பொலிஸ் மாஅதிபர் கூறினார். இத்தகைய போலிப் பிரச்சாரம், சிங்களவர்கள் மத்தியில் தமிழர்-விரோத உணர்வினை கிளறிவிடுவதற்கு பயன்படுத்தப்படுகின்றது.

இராணுவம், பொலிஸ் மற்றும் அரசாங்கமும் யுத்தத்தினால் தங்களின் சமூக மற்றும் வாழ்க்கைத் தரங்கள் அழிக்கப்பட்டதற்கு எதிராக தமிழ் தொழிலாளர்கள் மற்றும் ஏழைகள் மத்தியில் வளர்ச்சியடைந்து வரும் எதிர்ப்புக்கள் சம்பந்தமாக பீதியுடன் உள்ளன. யுத்த காலத்தில் கைப்பற்றப்பட்ட பெரும்பான்மையான காணிகள் இன்னமும் மீளக் கையளிக்கப்படவில்லை. தற்போது, பல அரசியல் கைதிகள் உண்ணாவிரதம் இருக்கின்றார்கள். நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

மக்கள் மத்தியில் அபிவிருத்தியடைந்துவரும் எதிர்ப்புக்களை ஒடுக்குவதே பொலிஸ்-இராணுவ பயமுறுத்தல்களின் இலக்காகும். இந்த எதிர்ப்பு, நாட்டின் தென்பகுதியில் வாழும் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் அதிகரித்துவரும் எதிர்ப்புக்களின் ஒருபாகமாகும். போராட்டங்கள் வெடிக்கும் என்ற பீதியினால், தொழிலாளர்களை இனவாத வழியில் பிளவுபடுத்துவதற்கு அரசாங்கம், பாதுகாப்பு படைகள் மற்றும் இனவாத குழுக்களும் இனவாதத்தினைக் கிளறிவிடுவதற்கு செயற்படுகின்றன.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட தமிழ் அரசியல் கட்சிகள், இந்த ஒடுக்குமுறை நடவடிக்கைகள் சம்பந்தமாக எந்த கவலையும் வெளிப்படுத்தவில்லை. உண்மையில், கொழும்பு ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறை ஆட்சியை அவர் ஆதரிக்கின்றனர்.