ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

France throws masses of people off unemployment insurance

பிரான்ஸ் பாரிய எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பற்ற மக்களை காப்பீட்டுக்கு வெளியில் தள்ளுகிறது

By Francis Dubois
15 November 2017

பிரான்சில் ஏழு பேரில் ஒருவர் ஏற்கனவே வறுமையில் வாழுகின்ற நிலையில், ஜனாதிபதி இமானுவல் மக்ரோனின் அரசாங்கம் பாரிய எண்ணிக்கையிலான வேலைவாய்ப்பற்ற மக்களை, வேலைவாய்ப்பின்மை காப்பீட்டுக்கு வெளியில் தூக்கியெறிகிறது. ஒரு பாரிய மலிவுகூலித் துறையை உருவாக்குவதே அதன் இலக்காகும்.

வேலைவாய்ப்பின்மை காப்பீட்டு நிறுவனமான Pôle Emploi சென்ற வாரத்தில் வேலைவாய்ப்பற்றவர்களை கண்காணிக்கின்ற அதன் புதிய முறையின் -18 மாதங்களுக்கு முன்பாக முந்தைய சமூக-ஜனநாயக ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் கீழ் உருவாக்கப்பட்டிருந்தது- முடிவுகளை வெளியிட்டது.

பரிசோதித்த 270,000 தொழிலாளர்களில் 14 சதவீதம் பேரை, அதாவது 37,800 பேரை, தனது பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதாக அது தெரிவித்தது. அரசு மற்றும் வேலைகொடுக்கும் குழுக்களின் உத்தியோகபூர்வ கூற்றுகளுக்கு நேர்மாறான வகையில், இந்த சோதிப்புகள் வேலை செய்ய மறுக்கின்ற “ஒட்டுண்ணிகளின்” ஒரு கூட்டம் பேர் எதனையும் வெளியில் கொண்டுவந்திருக்கவில்லை என்பதை ஊடகங்களும் கூட ஒப்புக்கொள்ளத் தள்ளப்பட்டிருந்தன. மிகப் பெருவாரியானோர் செயலூக்கத்துடன் ஒரு வேலையைத் தேடிக் கொண்டிருந்தவர்களாவர்.

இந்த காப்பீடு சோதனைகளும் மறுப்புகளும், தொழிலாளர்களை திறன்குறைந்த, குறைந்த ஊதிய வேலைகளுக்குள் நிர்ப்பந்தமாக தள்ளுவதை இலக்காகக் கொண்டு, வேலைவாய்ப்பற்றவர்களைக் குறிவைத்து எடுக்கப்படுகின்ற முன்னெப்போதினும் அரக்கத்தனமான நடவடிக்கைகளின் பகுதியாகும்.

பிரான்சில் தற்போது 6.5 மில்லியன் பேர் வேலைவாய்ப்பற்ற அல்லது தகுதிக்குக் குறைவான ஊதியமளிக்கப்படுகின்ற தொழிலாளர்களாக இருப்பதாக Pôle Emploi தெரிவிக்கிறது. இது நாட்டின் மக்கள்தொகையில் 10 சதவீதமாகும், அதன் தொழிலாளர் படையில் கிட்டத்தட்ட 20 சதவீதமாகும். உத்தியோகபூர்வ புள்ளிவிவரத்தில், கணக்கில் வராமல் 5 மில்லியன் பேர் வரை வேலைவாய்ப்பற்று இருக்கலாம் என்பதாக உத்தியோகபூர்வமற்ற மதிப்பீடுகள் சுட்டிக்காட்டுகின்றன.

செப்டம்பரில், வேலைவாய்ப்பின்மை காப்பீடு பிரிவில் அதன் “முக்கிய சீர்திருத்த”த்திற்கு மத்தியிலும் மக்ரோன் அவரது சமூகக் கொள்கைகளை விமர்சிப்பவர்களை “சோம்பேறிகள்” என்று விமர்சிப்பதற்கு சற்று முன்னரும், அரசாங்கம் வேலைவாய்ப்பற்றோரை சோதிக்கும் ஊழியர்களது எண்ணிக்கையை நான்குமடங்கு அதிகரித்து, ஹாலண்டின் கொள்கைகளை வலுவாக்குவதாக அறிவித்தது. இந்த சோதனையை “அதிரடியானதாக” ஆக்குவதே இலக்காகக் கூறப்பட்டது. அக்டோபர் 17 அன்று, Medef வேலைக்கு அமர்த்துவோர் கூட்டமைப்பின் தலைவரான பியர் கட்டாஸ், “பயனாளிகள்” செயலாக்க முறையுடன் விளையாடுவதாகக் கூறி அவர்களைக் கண்டனம் செய்தார், “மக்களை வேலை பெறுவதற்கு அமைப்புமுறை ஊக்குவிக்கின்ற வகையில்” வேலைவாய்ப்பில்லாத தொழிலாளர்களிடம் அன்றாடம் குறுக்கு விசாரணைகள் நடத்தப்பட அவர் கோரினார்.

இப்போதைய கட்டுப்பாடுகளே ஏற்கனவே அரக்கத்தனமானவையாக உள்ளன. Pôle Emploi பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்களது உதவிகளை, அதாவது, அவர்களது ஒரே வருவாய் வழியை, அடுத்த 6 முதல் 12 மாதங்களுக்கு இழப்பார்கள். அவர்களுக்கு வேறு எந்த வருவாயும் இல்லையென்றால், அவர்கள் வாடகைக்கு, தண்ணீருக்கு, மின்சாரத்துக்கு, அல்லது உணவுக்கு பணம் செலுத்த முடியாது. அவர்களுக்கு ஒரு ஆண்டுக்கான மருத்துவ வசதி மட்டுமே கிடைக்கும். ஒரு கண்ணியமான வேலைக்கு, அல்லது எந்த வேலைக்குமான எந்த வாய்ப்பையும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் இழந்து விடுவார்கள்.

ஒரு நேர்காணலுக்கு வரமுடியாவிட்டாலோ அல்லது முந்தைய வேலைகளை விட மிகக் குறைந்த நிலைமைகளையும் ஊதியத்தையும் கொண்ட, அல்லது வீடு மற்றும் குடும்பத்தில் இருந்து  வெகுதொலைவில் அமைந்திருக்கின்ற ஒரு “உருப்படியான வேலை வாய்ப்பை” மறுக்கின்ற பட்சத்திலோ, அத்தொழிலாளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம். தொழிலாளர்கள் எந்த வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொள்ளும்படி நெருக்குதல் அளிக்கப்படுவதோடு, இருபத்தி நான்கு மணி நேரமும் அவர்கள் வேலைவாய்ப்பு நிறுவனத்தின் குரலுக்கு செவிமடுக்க ஆயத்தமாக இருக்க வேண்டும். பட்டியலில் இருந்து நீக்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு ஒரு “போலி அறிவிப்பு” வழங்கியிருந்தால், 12 மாத நல உதவிகள் நிறுத்தி வைக்கப்படுவதைக் கொண்டும் 3,750 யூரோ அபராதத்தைக் கொண்டும் -ஒரு வேலைவாய்ப்பில்லாத தொழிலாளிக்கு இது பெரிய தொகை- அவர் தண்டிக்கப்படுவார்.

தொழிலாளர்கள் மீதான அழுத்தம் இன்னும் தீவிரப்பட்டுச் செல்கிறது ஏனென்றால் Pôle Emploi தனியார் ஒப்பந்ததாரர்களுடன் சேர்ந்து வேலைசெய்கிறது, அவர்கள் “வேலைக்குத் திரும்புவதற்கு” ஊக்குவிக்கும் பொருட்டான பயிற்சி அமர்வுகளையும், வேலைவாய்ப்புக்கான வேலைப்பயிற்சிகளையும் நடவடிக்கைகளையும் ஏற்பாடு செய்கிறார்கள்.

வேலைவாய்ப்பற்றோர் மீதான இந்த புதிய சோதனைகள், அடிப்படையாக தொழிலாளர்களை கூடுதல் “நெகிழ்வு”டன் இருப்பதற்கு நிர்ப்பந்தம் செய்வதற்கும், இதுவரை அநேக தொழிலாளர்கள் வேலை செய்ய மறுத்து வந்திருக்கக் கூடிய வேலைநிலைமைகளை ஏற்றுக் கொள்ளுவதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்களைத் தள்ளுவதற்கும் வடிவமைக்கப்பட்டதாக உள்ளன. ஊதியங்களையும் சுரண்டல் மட்டங்களையும் கிழக்கு ஐரோப்பா, வட ஆபிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மட்டங்களுக்கு நகர்த்துவதே இலக்காக உள்ளது.

வறுமை விகிதங்கள் ஏற்கனவே அழிவுகரமான மட்டங்களை எட்டிக் கொண்டிருக்கும் நிலைமையிலும் கூட ஆளும் வர்க்கமானது மலிவூதியத் துறையில் ஒரு பரந்த அதிகரிப்புக்கு நெருக்கிக் கொண்டிருக்கிறது. கத்தோலிக்க உதவி தொண்டு அமைப்பு (Secours Catholique) -இது 2017 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.5 மில்லியன் மக்களைப் பார்த்துக் கொண்டது- நவம்பர் 9 அன்று, அதன் வருடாந்திர வறுமை குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டது. தேசிய புள்ளிவிவர அலுவலகத்திடம் இருந்தான தரவுகளையும் அது சுருங்க எடுத்துரைத்திருந்தது, 9 மில்லியன் மக்கள், அல்லது மக்கள்தொகையில் 14 சதவீதம் பேர் வறுமைக்கோட்டுக்குக் கீழே (மாத வருமானம் 1,000 யூரோவுக்கும் சற்று அதிகமாய்) வாழ்ந்து கொண்டிருப்பதாக அது காட்டியது.

கத்தோலிக்க உதவி தொண்டு நிறுவனத்திடம் உதவி பெறும் மக்கள் சராசரியாக 548 யூரோக்கள் மாத வருமானம் கொண்டிருந்தனர், இது கடந்த ஆறு வருடங்களில் வெறும் 3 யூரோ மட்டும் அதிகரித்திருக்கிறது. 92 சதவீதம் பேருக்கு வருவாய் இல்லை; 42 சதவீதம் பேர் தங்கள் வாடகை கொடுக்க முடியவில்லை, 41 சதவீதம் பேர் தங்கள் எரிபொருள் அல்லது மின்சாரத்துக்கு செலவழிக்க இயலவில்லை, 22 சதவீதம் பேர் அவர்களது வங்கிக் கையிருப்பை மீறிய கடன் பெற்றவர்களாய் இருந்தனர், 17 சதவீதம் பேரால் அவர்களது தண்ணீர் கட்டணத்தை செலுத்த இயலவில்லை, 56 சதவீதம் பேர் உணவுக்கு செலவு செய்வதற்கு சிரமம் கொண்டிருந்தனர். “குடும்பங்களுக்கு ஆபத்தான நிலை அதிகரித்துச் செல்வதை” அந்த அறிக்கை சுட்டிக்காட்டியது. 53 சதவீதம் பேர் ஸ்திரமான சட்டரீதியான அந்தஸ்து இல்லாத வெளிநாட்டுக்காரர்களாய் இருந்தனர், ஆகவே அவர்கள் வேலை செய்வதில் இருந்தோ அல்லது சமூக உதவியைப் பெறுவதில் இருந்தோ தடைசெய்யப்பட்டிருந்தனர்.

சமீபத்தில் வெளியான “பாரடைஸ் ஆவணங்கள்” -பெரும் செல்வந்தர்களின் பாரிய வரி ஏய்ப்புத் திரையின் ஒரேயொரு விளிம்பை அது உயர்த்திக் காட்டியிருக்கிறது- நிதிப் பிரபுத்துவமும் அதன் அரசியல் சேவகர்களும் பரந்த மக்கள் தொடர்பாக கொண்டிருக்கக் கூடிய அலட்சியத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. “கடல்கடந்த” ஏற்பாடுகளின் நிபுணர்கள் வரி ஏய்ப்பை கூடுதல் கடினமாக்கக் கூடிய சட்டங்கள் நிறைவேற்றப்படுவதை எவ்வாறு முடக்குகிறார்கள் என்பதையும் இந்த ஆவணங்கள் எடுத்துக்காட்டுகின்றன.

பாரடைஸ் ஆவணங்களில் இடம்பிடித்திருக்கக் கூடிய முக்கிய பிரெஞ்சு நிறுவனங்களில், உலகளாவிய எண்ணெய் நிறுவனமான Total, பாதுகாப்புத்துறை ஒப்பந்த வேலைகள் நிறுவனமான Dassault, கச்சாப் பொருட்கள் நிறுவனமான Louis Dreyfus, எரிசக்தி நிறுவனமான Engie ஆகியவை அடங்கும், LVMH luxury நிறுவனத்தின் பில்லியனர் தலைமை நிர்வாக அதிகாரியான பேர்னார்ட் ஆர்னோல்ட்டும் உடன் இடம்பிடித்திருக்கிறார்.

பெரும் செல்வந்தர்கள் நூறு பில்லியன் கணக்கான யூரோக்களை வரி அதிகாரிகளிடம் இருந்து மறைக்கின்ற நிலையில், மிக உயர் வருவாய் பிரிவில் உள்ளவர்கள் மீது சொத்து வரியை (ISF) அகற்றியிருக்கும் மக்ரோன் அரசாங்கம், அதேநேரத்தில், துயர நிலையையும் சமூக நிராதரவையும் மறுக்கின்ற காரணத்திற்காக வேலைவாய்ப்பற்றவர்களை காப்பீடு பட்டியலில் இருந்து அகற்றுவதற்கு சுருக்கு வீசுகிறது.

ஏழைகள் மீதும் வேலைவாய்ப்பற்றோர் மீதும் ஆளும் வர்க்கம் கொண்டிருக்கும் குரோதத்தை கன்சர்வேடிவ் செனட்டரான Gérard Longuet நவம்பர் 6 அன்று சுருங்க வெளிப்படுத்தினார், அவர் தொலைக்காட்சியில்  பின்வருமாறு தெரிவித்தார்: “இந்த நூறு பில்லியன் கணக்கான யூரோக்கள் வரிவிதிப்புக்குத் தப்பி அரசுக் கருவூலத்தில் நுழையுமாயின் அது நல்லதே, ஏனென்றால் அரசு ஒட்டுமொத்தமாக அவற்றை வீணடிப்பதோடு எந்த நல்ல காரணத்துக்காகவும் அந்தப் பணத்தை செலவிடுவதில்லை.”