ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US open to diplomacy with North Korea “until the first bomb drops”

“முதல் குண்டு வீசும்வரை” வட கொரியாவுடன் அமெரிக்கா இராஜதந்திர நடவடிக்கைக்கு தயாராக உள்ளது

By Peter Symonds 
16 October 2017

CNN இன் “State of the Union” நிகழ்ச்சியில், அமெரிக்க பாதுகாப்பு செயலர் றெக்ஸ் ரில்லர்சன் பேசுகையில், “முதல் குண்டு வீசப்படும் வரை” வட கொரியா உடனான அபாயகரமான மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இராஜதந்திர முயற்சிகள் தொடரும் என தெரிவித்தார். அமைதியான தீர்வு குறித்த மீள்உறுதி எதையும் வழங்குவதற்கு வெகுதூரத்திற்கப்பால், 25 மில்லியன் மக்களைக் கொண்டதொரு நாடான வட கொரியாவின் “ஒட்டுமொத்த அழிப்பு” என்பது போன்ற ட்ரம்பின் வார்த்தைகளில் மறைந்திருக்கும் அமெரிக்க தயாரிப்புகளின் முன்னேறிய நிலையினையே ரில்லர்சனின் குறிப்புகளும் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

ட்ரம்பின் போர்குணமிக்க கருத்துக்கள் மற்றும் ட்வீட்டுகள், அத்துடன் ஜனாதிபதியின் கடந்த மாத பகிரங்க கண்டனம் ஆகியவற்றை ரில்லர்சன் குறைத்து காட்ட முயற்சிக்கிறார். பேச்சுவார்த்தைகளுக்கான சாத்தியக்கூறுகளை உணர வைக்கும் விதமாக வட கொரியாவுடன் ஆரம்பகட்ட இராஜதந்திர தொடர்புகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரில்லர்சன் அறிவித்தபோது, வெளிவிவகாரச் செயலர், “தனது நேரத்தை வீணடிப்பதாக” ட்ரம்ப் உறுதியாக அறிவித்தார்.

CNN க்கான அவரது கருத்துக்களில் ரில்லர்சன், ட்ரம்பின் ஆக்கிரோஷமான ட்வீட்டுகள் “நடவடிக்கைகளை ஊக்குவிப்பதாக” இருந்தனவேயன்றி, இராஜதந்திர முயற்சிகளை கீழறுப்பதாக அவை இல்லை எனக் கூறினார். மேலும் அவர் இதையும் சேர்த்துக் கூறினார்: “ஜனாதிபதி, இதனை இராஜதந்திர ரீதியில் தீர்க்க விரும்புவதை எனக்கு தெளிவுபடுத்தியும் உள்ளார். அவர் போரை நாடிச் செல்ல முனையவில்லை.”

இராஜதந்திர தீர்வு என்பது பியோங்யாங் ஆட்சியின் முழுமையான சரணடைதலை கொண்டதாக இருக்கும் என்பதை ட்ரம்ப் தெளிவுபடுத்தியுள்ள காரணத்தால், இந்த கருத்துக்கள் எதையும் மதிப்புமிக்கதாக கருத இயலாது. அதாவது, வட கொரியாவை அதன் அணுஆயுத திட்டங்களை கைவிட நிர்பந்திப்பது மட்டுமல்லாமல், எல்லா விடயங்களிலும் அமெரிக்காவின் பாதையை பின்பற்ற ஏதுவாக தற்போதைய கோரிக்கைகளுக்கு அது அடிபணிய வேண்டுமென்பதும் ஆகும்.

கடந்த வெள்ளியன்று, ஈரானின் அணுஆயுத திட்டத்தை கடுமையாக கட்டுப்படுத்தும் 2015 ஒப்பந்தத்தை, அதில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய ஏனைய ஐந்து நாடுகளின் எதிர்ப்பு ஒருபுறம் இருந்தாலும், முறிப்பதற்கான முதல்கட்ட நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டார். ஒப்பந்த விதிமுறைகளுக்கு இணங்க தெஹ்ரான் செயல்படுவதாக சர்வதேச அணு ஆற்றல் அமைப்பு (International Atomic Energy Agency-IAEA) பலமுறை சான்றளித்துள்ளது.

வட கொரியாவைப் பற்றி கேட்டபோது, செய்தியாளர்களிடம் அவர் பேச்சுவார்த்தைக்கு “தயாராக” இருப்பதாக தெரிவித்தார். இருப்பினும், ஈரானுடனான ஒப்பந்தத்தை மறுதலித்ததன் மூலமாக, வட கொரியாவுடனான அத்தகையதொரு ஒப்பந்தத்தையும் ட்ரம்ப் தீவிரமாக நிராகரித்ததோடு, எந்தவொரு பேச்சுவார்த்தையும் கண்டிப்பாக அமெரிக்க விதிமுறைகளை அடிப்படையாகக் கொண்டே இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்திவிட்டார்.

அதே நேரத்தில், இராணுவ நடவடிக்கை எடுக்க அமெரிக்கா தயாராக இருப்பதையும் ட்ரம்ப் வலியுறுத்தினார். பேச்சுவார்த்தைகளை தவிர ஏதோவொன்று நிகழக்கூடுமாயின், என்னை நம்புங்கள், நாம் எப்போதும் கண்டிருப்பதை விட அதிகமான ஒன்றை செயல்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர், எச்.ஆர்.மெக்மாஸ்டர், அமெரிக்காவை சென்று தாக்கும் திறன்படைத்த அணுஆயுதங்களை கொண்டிருப்பதிலிருந்து வட கொரியாவை தடுப்பதற்கு ஜனாதிபதி “தேவையான எதையும் செய்யத் தயாராக உள்ளார்” என்பதை வலியுறுத்தினார். மேலும், “[வட கொரிய தலைவர்] கிம் ஜோங் உன், இந்த அணுஆயுத திறன் அபிவிருத்தி அவரை பாதுகாப்பாக வைத்திருக்குமென கருதுகிறார் என்றால், அது உண்மையில் அதற்கு மாறானதாகவே இருக்கும் என்பதை அவர் உணர்ந்துகொள்ள வேண்டும்” எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த வியாழனன்று நடைபெற்ற பத்திரிகையாளர் நிகழ்ச்சி ஒன்றில், வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜோன் கெல்லி, அமெரிக்கா இராணுவ நடவடிக்கையை எடுக்க வேண்டிய உச்ச ஸ்தானத்தை வட கொரியா எட்டிவிட்டதாக சுட்டிக்காட்டினார். இது ஏற்கனவே, “ஒரு நேர்த்தியான நல்ல கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Intercontinental Ballistic Missile-ICBM) திறனைக் கொண்டிருப்பதோடு, நேர்த்தியானதொரு நல்ல அணுஆயுதம் தரித்த சுயமாக இலக்கை தேடித்தாக்கும் ஆயுதத்தையும் அபிவிருத்தி செய்து வருகிறது” என்றும் அவர் தெரிவித்தார்.

“அந்த நாடு, அமெரிக்காவை சென்று தாக்குவதற்கான திறனை அவ்வளவு எளிதாக கொண்டிருக்க முடியாது என்று கருதும் நிர்வாகத்திற்காக நான் பேசுகிறேன் என்று நினைக்கிறேன்” என்று கெல்லி எச்சரித்தார்.

ட்ரம்ப் நிர்வாகம், இன்று கொரிய தீபகற்பத்தின் நீர்நிலைகளில் முக்கிய கூட்டு கடற்படை பயிற்சிகளை ஆரம்பித்து வட கொரியாவுடனான பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், 40 க்கும் மேற்பட்ட அமெரிக்க மற்றும் தென் கொரிய போர்க்கப்பல்களையும், அத்துடன் இரு நாடுகளிலிருந்து விமானங்களையும் உள்ளடக்கிய ஐந்து நாட்களுக்கான போர் பயிற்சிகளில், அணுஆயுத சக்திவாய்ந்த விமானந்தாங்கி கப்பலான USS ரொனால்ட் ரீகன், அதன் அழிப்புக்கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களின் முழு தாக்குதல் குழுவுடன் பங்கேற்கவுள்ளது.

வட கொரிய தேசிய ஊடகங்கள் சனியன்று, “வெடிப்புறும் புள்ளியான தீபகற்ப பகுதியை பதட்டமான சூழ்நிலைக்கு மட்டுமே உந்தித்தள்ளும்,” “ஒரு பொறுப்பற்ற போர் நடவடிக்கையாகவே” நடைபெறவிருக்கும் பயிற்சிகள் இருக்குமென முத்திரைகுத்தின. இந்த பயிற்சிகள் “வழமையானவை” மற்றும் “தற்காப்புக்கானவை” என சித்தரிக்க அமெரிக்காவும், தென் கொரியாவும் முயற்சிக்கின்ற போதிலும், இந்த இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் வட கொரியாவுடனான போருக்கானதொரு ஒத்திகைதான் என்பதை தெளிவுபடுத்துகிறது.

தென் கொரிய யோன்ஹாப் செய்தி நிறுவனத்தின்படி, இந்த கூட்டு கடல்சார் சிறப்பு எதிர்ப்பு அதிரடி பயிற்சிகள் (Maritime Counter Special Operations Exercise), கொரிய தீபகற்பத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரப் பகுதிகளை இணைக்கும் நீர்நிலைகளில் இடம்பெறவுள்ளன. மேலும், வட கொரியாவின் தரைவழி மற்றும் கடற்படை படைகளை நெருக்கமாக கண்காணிக்க, கூட்டு கண்காணிப்பு ரேடார் இலக்கு தாக்குதல் அமைப்பு (Joint Surveillance Target Attack Radar System) ஒன்றையும் அமெரிக்கா நிறுவியுள்ளது.

பாதுகாப்பு ஆதாரத்தை மேற்கோளிட்டு, விமானந்தாங்கி தாக்குதல் குழுவுடன் இணைந்த அணுஆயுத சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் “முக்கிய தலைவர்களை கொல்லும்” நடவடிக்கைகளை மேற்கொள்ள அமெரிக்க சிறப்பு படை பிரிவு பணிக்கப்பட்டுள்ளதாக யோன்ஹாப் தெரிவிக்கிறது. முக்கிய தலைவர்களை கொல்லும் நடவடிக்கைகள் – அதாவது, வட கொரியா மீதான முன்கூட்டிய தாக்குதல்களுக்காக சட்டபூர்வமாக 2015 ஆம் ஆண்டு பிற்பகுதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அமெரிக்க-தென் கொரிய OPLAN 5015 இன் ஒரு பகுதியாக வட கொரியாவின் உயர்மட்ட தலைவர்களை படுகொலை செய்வதாகும்.

இரண்டு அமெரிக்க அணுஆயுத சக்திவாய்ந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே இந்த பிராந்தியத்தில் உள்ளன. கூட்டு கடற்படை பயிற்சிகளில் பங்கேற்கும் பொருட்டு சனியன்று, Ohio-வகை நீர்மூழ்கிக் கப்பலான USS Michigan, தென் கொரிய துறைமுகமான பூசானை சென்றடைந்தது.

மேலும், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர், தரைவழி எதிர்ப்பு கப்பல் போர், தாக்குதல், கண்காணிப்பு மற்றும் இராணுவ உளவு பார்ப்பு ஆகிய திறன்களைக் கொண்ட லாஸ் ஏஞ்சல்ஸ்-வகை தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான USS Tucson, முந்தைய சனிக்கிழமையன்று தென் கொரிய துறைமுகம் ஜின்ஹேயில் நிறுத்தப்பட்டிருந்தது. UPI மூலமாக இராணுவ அதிகாரிகள் மேற்கோளிட்டதன் படி, கடந்த புதனன்று வட கொரியாவின் தெற்கு நீர்நிலைப் பகுதிகளில் இது நிறுத்தப்பட்டிருந்தது.

அதே நேரத்தில், இந்த வாரம் சியோல் சர்வதேச விண்வெளி மற்றும் பாதுகாப்பு கண்காட்சியில் (Seoul International Aerospace and Defence Exhibition) பங்கேற்பதற்கு, B-1B மூலோபாய குண்டுவீசிகள் மற்றும் F-22 ரக ராப்டார் இரகசிய போர்விமானங்கள் உட்பட உயர் தொழில்நுட்ப போர் விமானங்களை அமெரிக்க விமானப் படை அனுப்பியது. இந்த B-1B குண்டு வீசிகள், தென் கொரிய மற்றும் ஜப்பானிய போர் விமானங்கள் உடனான இரவு நேர முதல் கூட்டு பயிற்சிகளில் மிக சமீபத்தில் ஈடுபடுத்தப்பட்டது உட்பட, வட கொரிய எல்லைக்கு நெருக்கமாக பல்வேறு ஆத்திரமூட்டும் வகையிலான இராணுவ பயிற்சிகளை மேற்கொள்வதிலும் சமீபத்தில் ஈடுபடுத்தப்பட்டன.

ட்ரம்ப் மற்றும் அவரது உயர்மட்ட அதிகாரிகளினால் அதிகரித்து வருவதான போர் பயிற்சிகள் மற்றும் ஆத்திரமூட்டும் அச்சுறுத்தல்களின் கலவை, போர் அபாயத்தை மிகவும் அதிகரிக்கச் செய்கின்றதேயொழிய, இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்த அமைதியான தீர்வுக்கான வழிமுறைகள் அனைத்தையும் நிராகரிக்கவே செய்கின்றது. பியோங்யாங் ஆட்சி, தனது நாட்டின் தலைவரோடு சேர்த்து, இராணுவம் மற்றும் தொழில்துறை திறனையும் முற்றிலுமாக அழிக்கக்கூடியதொரு பாரிய தாக்குதலின் விளிம்பில் அமெரிக்கா உள்ளது என்பதை மட்டுமே அதனால் யூகிக்க முடியும்.

ஈரானுடனான 2015 ஒப்பந்தத்திற்கு விதிக்கப்பட்ட தலைவிதியைக் கண்ட பின்னரும், அமெரிக்கா நல்ல நம்பிக்கையுடன் பேச்சுவார்த்தைக்கு முனைகிறது என்றோ, அல்லது எந்தவொரு ஒப்பந்தத்தையும் அடைந்த பின்னர் அது அதன் பக்கத்தை சரியாக பேணும் என்பது பற்றியோ கருதுவதற்கான எந்தவொரு காரணத்தையும் வட கொரியா கொண்டிருக்கவில்லை. பேரழிவுகர ஆயுதங்கள் என அழைக்கப்படுவதை கைவிட அவர்கள் ஒப்புக்கொண்ட பின்னரும் ஈராக்கி மற்றும் லிபிய தலைவர்களுக்கு கொடூரமான முடிவே ஏற்பட்டது என்பதோடு, அவர்களது நாடுகளும் அமெரிக்க தாக்குதலுக்கு உள்ளாகின என்ற நிலையில், அதே பாதையை பின்பற்ற வேண்டாம் என்ற பியோங்யாங்கின் தீர்மானத்தை மட்டுமே இது வலுவூட்டுகிறது.