ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Surrounded by generals, Trump remarks on “the calm before the storm”

தளபதிகள் புடைசூழ ட்ரம்ப் “புயலுக்கு முந்தைய அமைதி” பற்றி குறிப்பிடுகிறார்

By Peter Symonds
7 October 2017

வியாழனன்று மாலை வெள்ளை மாளிகையில் உயர்மட்ட இராணுவத் தலைவர்கள் புடைசூழ அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போதைய உலக சூழ்நிலை “புயலுக்கு முந்தைய அமைதி” போன்று இருப்பதாக அச்சுறுத்தும் வகையில் விவரித்தார். ட்ரம்பின் இந்த பீதியூட்டும் கருத்து கிட்டத்தட்ட நிச்சயமாக வட கொரியாவிற்கு எதிராக விடுக்கப்பட்டதுதான் என்பதை அவர் மிகக் குறிப்பாக மறுக்கின்றபோதிலும், ஒரு பேரழிவுகர போரைத் தொடங்கும் விளிம்பில் தான் அமெரிக்கா உள்ளது என்பதைக் குறிப்பிடும் மற்றொரு எச்சரிக்கையாகவே அது உள்ளது.

“உலகின் மிகப் பெரிய இராணுவ தலைவர்கள்” மற்றும் அவர்களது மனைவிகளும் கலந்துகொண்ட ஒரு இரவு உணவு விருந்துக்கு முன்னதாக முன்னேற்பாடின்றி அவசரமாக கூட்டப்பட்ட புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சியின் போது ட்ரம்ப் அவரது கருத்துக்களைக் கூறினார். பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எச்.ஆர்.மெக்மாஸ்டர், பணியாளர்கள் தலைவரின் கூட்டுத் தலைவர் ஜோசப் டன்ஃபோர்டு மற்றும் வெள்ளை மாளிகை பணியாளர்களின் தலைவர் ஜோன் கெல்லி ஆகிய அனைவரும் அங்கு ஆஜராகி இருந்தனர்.

தளபதிகளுடனான சந்திப்பில் இருந்த அமெரிக்க ஜனாதிபதியிடம் செய்தியாளர்கள் அடுத்தடுத்து பலமுறை புயலா? என்ன புயல்? என்று கேள்விகள் கேட்டதை அவர் புறக்கணித்த போதிலும், இறுதியில் “நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்” என்று மட்டும் அறிவித்தார்.

முந்தைய கூட்டத்தின் அவரது ஆரம்ப உரையில், வட கொரியா மீதான மிகுந்த அச்சுறுத்தலான வார்த்தைகளை பிரயோகித்து பின்வருமாறு அறிவித்தார்: “எங்களது நாடு அல்லது கூட்டணி நாடுகளுக்கு கற்பனை செய்துகூட பார்க்க முடியாத உயிரிழப்புக்கு அச்சுறுத்தும் இந்த சர்வாதிகாரத்தை நாங்கள் அனுமதிக்க முடியாது. அது நடக்காமலிருக்க நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்வோம்.”

ட்ரம்ப் கடைசியாக இதையும் கூறி அடிக்கோடிட்டுக்காட்டினார்: “தேவைப்பட்டால், அது கண்டிப்பாக செய்யப்படும், என்னை நம்புங்கள்.”

உண்மையில், கொரிய தீபகற்பத்தில் நிலவும் உச்சகட்ட பதட்டமான சூழ்நிலைக்கு முக்கிய பொறுப்பாளியாக இருப்பது ட்ரம்ப் நிர்வாகமேயன்றி வட கொரிய ஆட்சியல்ல. உலகின் மிக சக்திவாய்ந்த இராணுவ இயந்திரத்தின் தலைமை தளபதியாக இருக்கும் ட்ரம்ப், சிறிய, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நாட்டை நிர்மூலமாக்க மீண்டும் மீண்டும் அச்சுறுத்தியுள்ளார்.

கடந்த மாதம் ஐ.நா.வில் ட்ரம்ப் அவரது பாசிசவாத உரையைத் தொடர்ந்து, வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன் “நீண்ட காலத்திற்கு சுற்றிவர முடியாது” என்று ட்வீட் செய்ததன் மூலம், வட கொரியா “ஒட்டுமொத்த அழிவை” எதிர்கொள்ளும் என எச்சரித்தார். அவர் வட கொரியாவுடனான பேச்சுவார்த்தைகளை வலுவாக நிராகரித்ததோடு, பியோங்யாங்குடன் பேச்சுவார்த்தைகளை சாத்தியமாக்க முயன்று “தனது நேரத்தை வீணாக்குகின்ற” அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் றெக்ஸ் ரில்லர்சனை கடந்த வாரம் பகிரங்கமாக கண்டித்தார்.

வட கொரியாவுடனான இந்த அதிதீவிர போர் அபாயம், வாஷிங்கடன் மற்றும் வெள்ளை மாளிகையிலுள்ள ஆளும் வட்டாரங்களுக்கு மத்தியிலான பிளவுகளை இன்னும் ஆழமடையச் செய்கின்றது. இந்த வேறுபாடுகள் குணாம்சத்தில் தந்திரோபாய ரீதியானவை ஆகும். “மேஜையின் மீது அனைத்து தெரிவுகளும் தயாராகவுள்ளன” என்று தெரிவித்து, ரில்லர்சன், பாதுகாப்பு செயலர் மாட்டிஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் அனைவரும் வட கொரியாவை எச்சரித்துள்ளனர். அதே நேரத்தில், மோதல் குறித்து இராஜதந்திர தீர்வு ஒன்று அவசியம் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஈரானின் அணுஆயுத திட்டங்களை தீவிரமாக கட்டுப்படுத்த அதனுடன் மேற்கொள்ளப்பட்ட 2015 ஒப்பந்தத்திற்கு ட்ரம்பின் அனைத்து மூன்று உயர்மட்ட ஆலோசகர்களும் கூட ஆதவளித்தனர். அதன் மறுபுறம், ட்ரம்ப், அமெரிக்கா ஒருபோதும் உடன்பட்டிராத வகையிலான “மோசமான மற்றும் மிகுந்த ஒருதலைபட்ச பரிவர்த்தனைகளை” கொண்டதாக இந்த ஒப்பந்தம் உள்ளதென கண்டனம் செய்தார். அடுத்த வாரமே, தெஹ்ரான் மற்றும் ஒப்பந்தத்தை ஆதரிக்கும் வாஷிங்டனின் ஐரோப்பிய கூட்டாளிகளுடனான பதட்டங்களை அதிகரிக்க வழிவகை செய்யும் ஒரு நடவடிக்கையாக இந்த ஒப்பந்தத்தை முறிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இந்த நிலைமைகளின் கீழ், வியாழனன்று ட்ரம்ப் தனது உயர்மட்ட தளபதிகளை சந்தித்தது, அனைத்திற்கும் மேலாக, வட கொரியாவுடனான அவரது பொறுப்பற்ற மற்றும் ஆக்கிரோஷமான போருக்கு அவர்களது முழு ஆதரவை உறுதி செய்ய நோக்கம் கொண்டிருந்ததாகத் தோன்றுகிறது. விவாதத்திற்கு முந்தைய அவரது கருத்துக்களில், ட்ரம்ப், அங்கு கூடியிருந்த அனைவரும் “மிக உயர்ந்த வேகத்திலான, ஒரு பரந்தளவிலான இராணுவ தெரிவுகளை…..” வழங்குவர் என அவர் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். மேலும், “அதிகாரத்துவத்தின் தடைகளை சமாளிக்க” பொறுப்பில் இருக்கும் தளபதிகளையே அவர் நம்பியிருப்பதையும் தெளிவுபடுத்தினார்.

வட கொரியாவுடனான அமெரிக்கப் போரில் பணயமாக இருப்பது என்னவென்று நேற்று ஜனநாயகக் கட்சி பிரதிநிதி டெட் லியு அடிக்கோடிட்டுக்காட்டினார். வட கொரியாவுடனான ஒரு மோதல் “நம்பமுடியாத அளவில் இரத்தம்தோய்ந்ததாக” இருக்குமெனவும் அவர் எச்சரித்தார். பியோங்யாங் ஆட்சியை “ஒரு முழுமையான அபாயகரமானது மற்றும் அச்சுறுத்தலானது” என்று கண்டனம் செய்கின்ற அதேவேளையில், அங்கு “சிறந்த இராணுவ தெரிவுகள்” எதுவும் இல்லையெனவும் அவர் கூறுகிறார். லியூ, 1990 களில் குவாமில் முன்னாள் விமானப்படை அதிகாரியாக இருந்தார் என்பதோடு வட கொரியாவுடனான மோதலுக்கு தயாரிப்பு செய்ய வடிவமைக்கப்பட்ட போர் பயிற்சிகளிலும் பங்கேற்றவராவார்.

செப்டம்பர் 26 இல், பாதுகாப்பு செயலர் மாட்டிஸுக்கு லியூவும், பிரதிநிதி ருபென் காலிகோவும் எழுதிய கடிதம், “இராஜதந்திரம் உட்பட ஏனைய அனைத்து தெரிவுகளையும் முதலில் பயன்படுத்தாமல் இராணுவ வலிமையை நேரடியாக பயன்படுத்துவது தவறானது” எனத் தெரிவிக்கிறது. மேலும், அமெரிக்க இராணுவ தாக்குதலுக்கு வட கொரிய மரபு ரீதியிலான மற்றும் அணுஆயுத விடையிறுப்புகள் குறித்த (அமெரிக்க, தென் கொரிய மற்றும் ஜப்பானிய) “சிறந்த – மோசமான – வழக்கு விபத்து மதிப்பீடுகளை மையப்படுத்திய பல தொடர்ச்சியான கேள்விகளுக்கு அவர்கள் பதில்களை கோருகின்றனர்.

“இந்த நிர்வாகம் அமெரிக்காவை வட கொரியாவுடன் இருண்ட, இரத்தக்களரியான மற்றும் நிச்சயமற்ற போர் பாதைக்கு இட்டுச் செல்வதற்கு முன்பாக, அமெரிக்க மக்களும், அவர்களது காங்கிரஸ் பிரதிநிதிகளும் மேற்குறிப்பிட்ட முக்கியமான கேள்விகளுக்கு பதிலளிக்க தகுதிபடைத்திருக்க வேண்டும்” என அந்த கடிதம் முடிவடைகிறது.

லியூ போரை எதிர்க்கவில்லை என நேற்று கஷ்டப்பட்டு வலியுறுத்தினார். உண்மையில், 2016 கூட்டாட்சி தேர்தல்களில் “ரஷ்ய செல்வாக்கிற்கு” எதிரான மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் மீதான மெக்காத்தியிச சதிவேட்டைக்கு ஒரு வாய்மொழி ஆதரவாளராக இருந்துவருகிறார். அமெரிக்க ஆளும் உயரடுக்கின் இந்த தன்னலக் கும்பல் மோதலுக்கு சாதகமாக உள்ளது, அதிலும், தேவைப்பட்டால், வட கொரியாவை விட மற்றும் உட்குறிப்பாக சீனாவை விட, முதலில் ரஷ்யாவுடனான போருக்கு சாதகமாக உள்ளது.

கடந்த மாதம் Los Angeles Times கருத்துக் கணிப்பில், ஓய்வுபெற்ற விமானப்படை பிரிகேடியர் ஜெனரல் ராப் கிவ்வென்ஸ் பின்வருமாறு எச்சரித்தார்: “[வட கொரியாவுடனான ஒரு அமெரிக்கப் போர்] ஈராக் அல்லது ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பு போன்றதாகவோ, அல்லது லிபியா அல்லது சிரியாவில் நிகழ்ந்த போர் நடவடிக்கைகளை போன்றதாகவோ இருக்கும், என்றாலும் இது தொலைநிலையில் இருந்து பார்க்கும்போது அதனை ஒத்ததாக இருக்காது என்பதாகவே பெரும்பாலான அமெரிக்கர்களின் கருத்து உள்ளது”

கிவ்வென்ஸ் பகிரங்கமாக மேலும் அறிவித்தார்: “இந்த போரை முடிவுக்குக் கொண்டுவர, என்ன விலை கொடுத்தும் வட கொரியாவை தோல்வியுறச் செய்வது மட்டும் தான் ஒரேயொரு வழியாகவுள்ளது.” கொரிய தீபகற்ப பகுதியில் பணியாற்றியவரான கிவ்வென்ஸ், அணுஆயுதங்களை பயன்படுத்துவதற்கு முன்பு கூட, ஒவ்வொரு நாளும் 20,000 தென் கொரியர்கள் மடியக்கூடுமென பென்டகன் மதிப்பிட்டுள்ளதாக தெரிவித்தார்.

வட கொரியாவின் எந்தவொரு பதிலடியையும் தடுக்கும் முயற்சியில், அதன் இராணுவ இயந்திரம், தொழில் மற்றும் உயர்மட்ட அதிகாரத்துவத்தை அழிக்க பாரம்பரிய ரீதியான மற்றும் / அல்லது அணுஆயுத தளவாடங்கள் உள்ளிட்ட ஒரு பாரிய இராணுவ தாக்குதலுக்கு ட்ரம்ப் நிர்வாகம் தயாரிப்பு செய்து கொண்டிருப்பதாகவே ஒவ்வொரு அறிகுறியும் உள்ளது.

அணுஆயுதப் போரை நீங்கள் தடுக்க முயலுவதாக கருதி, வட கொரிய அணுஆயுத படைக்களத்தை அழிக்க நீங்கள் எடுக்கும் எந்தவொரு முயற்சியும் மிகப்பெரிய விடயத்தை கட்டவிழ்த்து விடப் போவதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டதாகவே இருக்குமென்று இராணுவ ஆய்வாளர் டேனியல் பிங்க்ஸ்டன் Los Angeles Times க்கு தெரிவித்தார்.

அந்த நிகழ்வில், ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழகத்தைச் சார்ந்த 38வது வடக்கு கண்காணிப்புக் குழு நேற்று வெளியிட்ட அறிக்கையொன்று, வட கொரிய அணுஆயுத தாக்குதலில் டோக்கியோ மற்றும் சியோலில் மட்டும் 3.8 மில்லியன் கணக்கிலான மக்கள் இறக்க நேரிடலாமென மதிப்பிட்டுள்ளது. சீனா மற்றும் ரஷ்யா உடனான அணுஆயுதம் தாங்கிய ஒரு பரந்த போர் ஆரம்பத்தில் தவிர்க்கப்பட்டிருந்தாலும் கூட, இந்த குழு, பரந்த இறப்பு எண்ணிக்கை குறித்து மதிப்பிடாத போதிலும், வட கொரியா மீதான அமெரிக்க அணுஆயுத தாக்குதல்களில் மில்லியனுக்கும் மேற்ப்பட்ட மக்கள் இறக்க நேரிடும்.

ட்ரம்ப், அவரது நிர்வாகத்தை பலப்படுத்தும் ஒரு வழிமுறையை தேடவும், மேலும் ஒரு வெளிநாட்டு எதிரிக்கு எதிராக வெளிப்படையாக அமெரிக்காவில் கடுமையான சமூக பதட்டங்களை வெளிப்படுத்தவும் முனைகின்ற நிலையில், வாஷிங்டனிலும், வெள்ளை மாளிகையிலும் நிலவும் அரசியல் பிளவுகள் வட கொரியா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு குறைந்த வாய்ப்புக்களை விட அதிக வாய்ப்புக்களையே உருவாக்கும்.