ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

“ශ්‍රී ලංකාවේ දරුවන්ගෙන් සියයට දහයක් පාසැල් නොයයි”: ධනපති පාලනයට එරෙහි බලගතු දෝෂාභියෝගයක්

“இலங்கையில் சிறுவர்களில் நூற்றுக்கு பத்து சதவீதமானோர் பாடசாலை செல்வதில்லை”: முதலாளித்துவ ஆட்சிக்கு எதிரான குற்றப்பத்திரிக்கை

By D.A. Anjana and Pani Wijesiriwardane 
5 July 2017

இலங்கையின் கல்வித் தரம் “தெற்கசியாவில் உயர் மட்டத்தில் உள்ளதாக ஆளும் வர்க்கம் தம்பட்டம் அடிக்கையில், நாட்டில் பாடசாலை செல்லும் வயதான சிறுவர்களில் 9.9 சதவீதமானோர், அதாவது 452,661 பேர் பாடசாலை செல்வதில்லை எனவும், அதில் 51,249 சிறுவர்கள் ஒரு நாளும் பாடசாலைக்கு செலவில்லை” எனவும் புள்ளிவிவர திணைக்களத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட “சிறுவர்களின் செயற்பாட்டு புள்ளிவிபரம் 2016" அறிக்கையில் அம்பலமாகியுள்ளது. இந்த அறிக்கையின் மூலம் வெளிவந்திருப்பது, பத்து தசாப்தங்களை அண்மித்த காலமாக இலங்கையை நிர்வகித்த முதலாளித்துவ வர்க்கத்திற்கும், மொத்தத்தில் முதலாளித்துவ அமைப்பு முறைக்கும் எதிரான ஒரு பலம்வாய்ந்த குற்றப் பத்திரிகையாகும் .

அறிக்கையின் படி, இலங்கையில் பள்ளிச் செல்லும் வயதுடைய சிறுவர்களின் மொத்த எண்ணிக்கை 4.6 மில்லியன்களாகும். அதில் 77.7 வீதமானோர் கிராமப்புறத்திலும் 17 சதவீதமானோர் நகர் புறத்திலும் 5.3 சதவீதமானோர் தோட்டப் பிரதேசத்திலும் வாழ்கின்றனர். பாடசாலை செல்லாத சிறுவர்களில் பெரும்பான்மையானோர், அதாவது 78.82 சதவீதமானோர் கிராமப்புற சிறுவர்களாகும். அதை எண்ணிக்கையில் பார்ப்போமாயின் 40,394 ஆகும். பாடசாலை செல்லாத சிறுவர்களில் 2,329 பேர், அதாவது 4.54 சதவீதமானோர் தோட்டப்புற சிறுவார்களாவர் என அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. நகரங்களில் வாழும் சிறுவர்களில் 10,885 பேர் ஒருநாளும் பாடசாலை சென்றிருக்கவில்லை. இது 21.18 சதவீதமாகும். மிகவும் பிரதான விடையம் யாதெனில் 15-17 வயதிற்கு இடைப்பட்டவர்களில் 39.7 சதவீதமானோர் பாடசாலைக்கு செல்வதில்லை என்பதாகும்.

குடும்ப அமைப்பு பிளவுபடுவதனால் பிள்ளைகள் மீதான கவனம் குறைவடைவது, தாயோ அல்லது தந்தையோ வெளிநாடு செல்கின்றமை, குழந்தைகள் பல்வேறுவிதமான குற்றச்செயல்களிலும் துர்நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றமை, வறுமை கரணமாக தொழில்களில் ஈடுபடுகின்றமை, பெற்றோர்களின் கல்வி  அறிவின்மை போன்ற சமூக பொருளாதார காரணங்கள் இந்த நிலைமைகளுக்கு காரணங்கள் என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. அறிக்கையின் படி, அப்பா அல்லது அம்மாவுடன் அல்லது அவர்கள் இருவரும் இல்லாது வாழ்கின்ற பாடசாலை செல்லும் வயதுடைய சிறார்களின் எண்ணிக்கை 22.2 சதவிகிதமாகும்.

சிறார்கள் பிரதிநிதித்துவம் செய்யும் சமூக வர்க்கங்களின் அடிப்படையில், அவர்களை வகைப்படுத்தி இந்த புள்ளி விபரம் மேட்கொள்ளப்ட்டிருக்காவிட்டாலும், அறிக்கையில் வெளிபடுத்தப்படும் வரையறுக்கப்பட்ட விடயங்களுக்கு ஊடாக கூட, முதலாளித்துவ  அமைப்பு முறையும் அதன் அரசுகளும் தொழிலாள-ஒடுக்கப்பட்ட மக்களின் குழந்தைகளுக்கு ஏற்படுத்தியிருக்கும் நிலைமை தொடர்பான ஒரு விளக்கத்தை வழங்குகிறது.

கிராமப்புற கல்வி

வீட்டு வளவினை பராமரிப்பதோடு தொழில்களில் மற்றும் தமது பெற்றோர்களின் பொருளாதார நடவடிக்கைகளில், குறிப்பாக விவசாயத்தில் ஈடுபடுகின்றமை, கிராமப்புற சிறார்கள் பாடசாலை செல்லாமைக்கு மூலகாரணமாக அமைகிறது.

மொத்தத்தில் இலங்கை சிறார்களில் 65 சதவீதமானோர் வீட்டுவளவினை பராமரிப்பதிலும் 2.3 வீதத்தினர் பொருளாதார நடவடிக்கைகளிலும் ஈடுபடுகின்றனர். பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறார்களில் 84.7 வீதம் அல்லது 87,854 பேர் கிராமப்புற பிள்ளைகளாவர். அவர்களில் பெரும்பான்மையானோர் 15-17 வயதிற்கு இடைப்பட்டவர்களாவதுடன் அவர்களில் அநேகமானோர் பாடசாலை செல்வதில்லை. அவர்களில் 59.3 சதவீதமானோர் சம்பளமின்றி தமது குடும்ப பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

2008ல் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பு புள்ளி விபரத்தில், 12.9 சதவீதமாக இருந்த பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுவோரின் தொகை, பத்து வருடகாலத்தில் 2.3 சதவீதமாக இந்தளவு குறைய கரணம் என்ன என்பதை அறிக்கை விளக்கவில்லை. உண்மையிலயே கடந்த தசாப்தத்தில் வறுமையில் ஏற்பட்ட உயர்வோடு ஒப்பிடும் போது இந்த புள்ளிவிபரம் சந்தேகத்துக்குறியது.

எவ்வாறு இருப்பினும் கிராமப்புற பாடசாலைகள் மூடப்பட்டமையினால் சிறார்கள் பாடசாலைக்கு செல்லவில்லை என்ற காரணத்தை பற்றி அறிக்கையில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால், கல்வித்துறையில் முன்னெடுக்கப்பட்ட வெட்டு நடவடிக்கைகளினால், நாடெங்கிலும் நூற்றுக்கணக்கான பாடசாலைகள் மூடப்பட்டன. 1997ம் ஆண்டில் 10,358 ஆக இருந்த பாடசாலைகளின் எண்ணிக்கை 2011 ஆகும் போது, 9,731 ஆக வெட்டப்பட்டது. இப்போது மிஞ்சியுள்ளது 9,500 மாத்திரமே.

தமது வீட்டுக்கு அருகாமையில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டதன் விளைவாக, வறுமையில் வாழும் கிராமப்புற சிறார்களில் ஒரு பகுதியினருக்கு என்றுமே பாடசாலை செல்ல முடியா  நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்னும் ஆயிரக்கணக்கான கிராமப்புற பாடசாலைகள் ஐந்தாம் வகுப்புவரை மட்டுப்படுத்தப்பட்டமையினால், அவற்றில் கற்ற பிள்ளைகள் அடுத்த கட்டக் கல்விக்காக தூர இடங்களுக்கு பணம் செலுத்தி செல்லவேண்டி இருப்பதால், அவர்களது கல்வியையே கைவிட வேண்டிய நிலையும் உருவாகியுள்ளது.

கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதாசாரம் மிக உயர்ந்த மட்டத்தில் உள்ளதோடு, தாயோ அல்லது தகப்பனோ மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ள காரணத்தால், பொருத்தமான பாதுகாப்பு இல்லாமையால் பிள்ளைகளுக்கு பாடசாலையை விட்டுச் செல்ல நேரிட்டுள்ளது. பெரும்பான்மையான பிள்ளைகள் சிறுவயதிலேயே சுதந்திர வர்த்தக வலயங்களில் தொழிலுக்காக நகரத்தை நோக்கி இடம் பெயர்கின்றனர்.

நகர்புற கல்வி

பாடசாலைக்கு செல்லாத நகர்புற பிள்ளைகளின் எண்ணிக்கை 10,885 என குறிப்பிடப்பட்டிருந்தாலும் அதில் அதி பெரும்பான்மையானோர், தொழிலாள ஒடுக்கப்பட்ட குடும்பம்பங்களின் பிள்ளைகள் ஆவர் என்பதை சொல்ல வேண்டியதில்லை. அவர்களின் வறுமையும் அதனடிப்படையில் ஏற்பட்டிருக்கும் பாரிய சமூக பொருளாதார பிரச்சினைகளும் இதன் பின்னணியாக உள்ளன.

அறிக்கையே குறிப்பிடுவதின் படி, பாடசாலை செல்லும் வயதுடைய நகர்புர சிறார்கள் 13,529 பேர் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். கொழும்பு நகரத்தில் வாழும் வறுமையான பிள்ளைகளை எடுத்துக்கொள்வோமானால், அவர்களில் குறிப்பிடத்தக்க தொகையினர் பாடசாலை காலத்தின் பின்னர் ஒரு சிறிய சம்பளத்திற்கு பல்வேறு விதமான இடைக்கால வேளைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களில் இன்னும் சிலர் போதைவஸ்து வியாபாரம் போன்றவற்றுக்கும் விபச்சார தொழிலுக்கும் பலியாகியுள்ளனர்.

நகர்ப்புற வறியவர்களுக்கிடையில் குடும்ப அமைப்பு முறிவடையும் எண்ணிக்கை மிகவும் உச்சத்தில் உள்ளது. அதில் ஏற்றப்படும் பாதுகாப்பற்றத்தன்மை இந்த சிறார்களின் கல்வி நடவடிக்கைகளின் மீது பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அவர்கள் வாழும் எந்த அடிப்படை வசதிகளும் அற்ற வசிப்பிடங்கள் அடிக்கடி வெள்ளப்பெருக்கு போன்றவற்றினால் பாதிப்புக்குள்ளாகும் சிறிய வீடுகளாகும். அவை கல்வி நடவடிக்கைகளுக்கு எந்த விதத்திலும் பொருத்தமானவை அல்ல.

தோட்டப்புற கல்வி நிலைமை

தோட்டப் பிரதேசங்களில் பாடசாலை செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2,329 என்றும் அது மிகவும் சிறிய தொகை என்றும் காட்ட முயறசித்தாலும், அது தோட்ட பிரதேசத்தில் கல்வி பெறவேண்டிய வயதை உடைய சிறுவர்களின் மொத்த எண்ணிக்கையில் பத்து சதவீதத்தை அண்மிக்கிறது. தோட்ட பிரதேசத்தில் உயர்கல்விக்கு பிரவேசிப்பவர்கள் மிகவும் குறைந்த எண்ணிக்கையானோரே. ஒரு வருடத்துக்கு பல்கலைக்கழகம் பிரவேசிப்போர் 120-150 பேர் மட்டுமே. அது பல்கலைக்கழக பிரவேசம் பெறும் மொத்த மாணவர் எண்ணிக்கையில் 0.5 சதவீதமாகும். மொத்த பாடசாலை பிள்ளைகளின் எண்ணிக்கையில் தோட்ட மாணவர்களின் எண்ணிக்கை 5.3 ஆகும்.

அதிக சுரண்டலுக்கு உள்ளாகும் தொழிலாள பிரிவினர் தோட்டத் தொழிலாளர்களாவர். பெற்றோர்கள் தொழில் செய்தாலும் பிள்ளைகளின் போசாக்கு மற்றும் கல்விக்காக அந்த அற்ப சம்பளம் எந்தவிதத்திலும் போதுமானது அல்ல. பற்றாக்குறை காரணமாக அநேக பிள்ளைகள் கல்வியை விட்டு வீட்டு வேலைகளுக்கு அல்லது வேறு தொழில்களுக்கு நகரங்களுக்கு வரும் அதேவேளை, மிகவும் குறைந்த வேலை நிலைமைகளில் அவர்களின் உழைப்பு அற்ப சம்பளத்துக்கு சுரண்டப்படுகின்றது. அறிக்கையின் படி, தோட்டப்புறத்தில் பாடசாலை செல்லும் பிள்ளைகளில் நூற்றுக்கு 8 அளவிலான தொகையினர், பொருளாதரா நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அதே போல், பாடசாலை செல்ல வேண்டிய பிள்ளைகளில் மிகவும் முடமான பிள்ளைகள் இருப்பது தோட்டப் புறங்களில் என்றாலும், அவர்களுக்கு அவசியமான விசேட பாடசாலைகள் தோட்டப்புறத்தில் கிடையாது.

அவர்கள் வாழும் சிறிய லயன் அறைகளில் அல்லது தற்காலிக குடிசைகளில், பாடம் படிப்பது ஒருபுறம் இருக்க படுத்து உறங்குவதற்கு கூட வசதி கிடையாது. முதலாளித்துவ ஸ்பானத்தின் பகுதியான தோட்டப்புற தொழிற்சங்கள், இந்த நிலைமைகளுக்கு பொறுப்பாளியாவதால் இந்த அறிக்கை அவற்றுக்கும் ஒரு குற்றப் பத்திரிகை ஆகும்.

வடக்கு-கிழக்கு கல்வி

கல்வி மற்றும் ஏனைய சமூக வாழ்கை தொடர்பாக பார்க்கும் போது மூன்று தசாப்தங்களாக உள்நாட்டு யுத்தத்தால் ஒடுக்கப்பட்டு இன்னும் ஒடுக்கப்படுகின்ற வடக்கு-கிழக்கு பிரதேசங்களை சார்ந்த சிறார்களின் கல்வி உட்பட ஏனைய  நடவடிக்கைகள் தொடர்பாக இந்த அறிக்கையில் மிக மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பெரும்பான்மையானோருக்கு பாடசாலை கல்வி மாத்திரமல்ல இருப்பிடங்களும் தமது பெற்றோரின் ஜீவனோபாயங்களும் இல்லாமல் ஆக்கப்பட்டுள்ளது. யுத்தத்தால் அனாதைகளான வடக்கில் 68,278 பேரும் கிழக்கில் முறையே 162,769 பேரும் தமது வீடுகளில் இருந்து வெளியேறி வேறு இடங்களில் வசிப்பதாக அறிக்கை குறிப்பிடுகிறது.

அவர்களின் வாழ்விடங்களையும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களையும் மீண்டும் அவர்களுக்கு வழங்காது இராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது. யுத்தம் முடிவுற்று ஏழு வருடங்கள் கழிந்தும் அவர்கள் பழைய வாழ்க்கைக்கு செல்ல முயற்சி செய்துகொண்டுள்ளனர்.

சந்தேகத்துக்கிடமின்றி பாடசாலை செல்லாத பிள்ளைகளின் பெரும்பான்மையானோரை பிரதிநித்துவம் செய்வது இந்தப் பிள்ளைகளே. இது இந்த அறிக்கையில் மறைக்கப்பட்டிருப்பது யுத்தத்தின் அழிவினை மறைப்பதற்கு ஆளும் வர்க்கம் மேற்கொள்ளும் மோசமான முயற்சியின் ஒருபகுதியே.

தற்போதைய அரசின் தாக்குதல்

யுத்தத்தின் அழிவினாலும் தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது மேற்கொண்ட தாக்குதலின் விளைவாகவும் இராஜபக்க்ஷ அரசாங்கத்திற்கு எதிராக வளர்ச்சியடைந்த எதிர்ப்பினை, போலி இடதுகளின் ஆதரவுடன் சுரண்டிக்கொண்டு ஆட்சிக்கு வந்த சிறிசேன-விக்கிரமசிங்க அரசாங்கம், இராஜபக்ஷ முன்னெடுத்து சென்ற அதே சிக்கன நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்றது.

போலியான 100 நாள் வேலைத்திட்டத்தில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 100 பில்லியன் வெட்டப்பட்டுள்ளது. கல்விக்கான அரச ஒதுக்கீடு, மொத்த தேசிய உடற்பதியில் 1.5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வெட்டுகளின் ஒரு பகுதியாக தெற்கில் 50 மாணவர்களுக்கு குறைந்த 131 பாடசாலைகளில் இரண்டாம் நிலை கல்வியை நிறுத்தி அடிப்படை பாடசாலைகளாக மாற்ற திட்டமிடப்படுகிறது.

அது மாத்திரமன்றி சர்வதேச மூலதனத்தின் மலிவு உழைப்புத் தளமாக இலங்கையை ஆக்கிக் கொண்டிருக்கும் அரசாங்கம், அதற்குத் தேவையான உழைப்பாளிகளை பயிற்றுவிப்பதற்கு ஏற்றவாறு முழுக் கல்வி முறையையுமே மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. கடந்த காலத்தில் தொழிலாள வர்க்கம் போராடி பெற்றுக்கொண்ட, மட்டுப்படுத்தப்பட்ட அளவிலாவது நடைமுறையில் இருந்த அரச கல்வியை முழுமையாக அழித்து, முழுக் கல்வியையும் தனியார்மயப்படுத்துவது அரசின் பொருளாதார வேலை திட்டத்தின் முக்கிய பகுதியாகும்.

வெளியிடப்பட்டுள்ள மட்டுப்படுத்தப்பட்ட அறிக்கையிலும் கூட, பல தசாப்தங்களாக ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் தற்போதைய அரசாங்கமும் கல்வி உட்பட சமூக உரிமைகள் தொடர்பாக கடைபிடிப்பது குரூரமான சமூக விரோத நடவடிக்கையே. சிறிசேன-விக்ரமசிங்க அரசாங்கம் உட்பட உலகெங்கிலும் ஆளும் வர்க்கம் பின்பற்றும் இந்தப்போக்கு, உலக முதலாளித்துவம் முகம் கொடுத்துள்ள பாரிய அமைப்பு ரீதியான நெருக்கடியில் இருந்தே இந்த போக்கு ஆரம்பிக்கிறது.

இலாபத்திற்காக அன்றி சமூகத்தின் பெரும்பான்மையானோரின் தேவைக்காக உற்பத்தியை ஒழுங்குபடுத்தும் ஒரு சோசலிச வேலைத் திட்டத்தை அபிவிருத்தி செய்யவும் அதை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளர்-விவசாயிகள் அரசாங்கத்தை அதிகாரத்திற்கு கொண்டுவர போராடுவதுமே கல்வி உரிமையை பாதுகாத்துக்கொள்வதற்கும் அர்த்தபுஷ்டியுள்ள கல்வி முறையை அபிவிருத்தி செய்வதற்குமான ஒரே ஒரு மாற்றிட்டாகும்.