ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Defenders of imperialist “human rights” hail Spanish government’s crackdown in Catalonia

ஏகாதிபத்திய "மனித உரிமைகளின்" பாதுகாவலர்கள், ஸ்பானிய அரசாங்கத்தின் கட்டலான் ஒடுக்குமுறையை பாராட்டுகின்றனர்

Chris Marsden
4 October 2017

ஸ்பானிய அரசால் கட்டலான் சுதந்திர சர்வஜன வாக்கெடுப்பு மீது ஞாயிறன்று நடத்தப்பட்ட மூர்க்கமான ஒடுக்குமுறை, உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்களை ஆழமாக அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

உலகின் முன்னணி "ஜனநாயகங்களில்" ஒன்றான அந்த அரசாங்கம், தங்களின் அடிப்படை வாக்குரிமையை பயன்படுத்த துணிந்த எவரொருவரையும் மூர்க்கமாக அடித்து கைது செய்ய, ஆயுதந்தாங்கிய பொலிஸை அனுப்பியது, இது பாசிசவாத ஆர்ப்பாட்டக்காரர்களால் வரவேற்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பன்முக கலாச்சார நகரங்களில் ஒன்றான பார்சிலோனா, ஒரேயிரவில் போர்க்களமாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த இரத்தக்களரிக்கு இடையே, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஸ்பானிய அரசாங்கத்தினை பாதுகாக்க பாய்ந்து வந்தன. அமெரிக்கா ஆட்சி கவிழ்க்க விரும்பும் அரசாங்கங்களது மனித உரிமை துஷ்பிரயோகங்கள் குறித்து குளம் குளமாக கண்ணீர் வடிப்பதில் நிபுணத்துவம் பெற்ற முன்னணி பத்திரிகைகளின் கட்டுரையாளர்கள், ஸ்பானிய அரசாங்கத்தை ஜனநாயக மற்றும் அரசியலமைப்பு ஆட்சிமுறைக்கு ஒரு முன்மாதிரியாக புகழ்கின்றனர்.

பல தசாப்தங்களாக அமெரிக்க மக்களிடம் போர்களை விற்பனை செய்வதையே தனது தொழிலாக கொண்டுள்ள சிஐஏ இன் ஊதுகுழல், ரோஜர் கோஹனின் "கட்டலோனியாவுக்கே சேதம்" என்று தலைப்பிட்டு செவ்வாயன்று நியூ யோர்க் டைம்ஸில் வெளியான கட்டுரை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஸ்பானிய பிரதம மந்திரி மரீயானோ ரஹோய் இன் அரசாங்கம் "அடிப்படையில் சரியாக இருந்தது என்றும், கட்டலான் சர்வஜன வாக்கெடுப்பு ஒரு பொறுப்பற்ற மோசடியாகும்,” என்றும் அறிவித்த கோஹன், “அந்த சர்வஜன வாக்கெடுப்புக்கு ஸ்பெயினின் அரசியலமைப்பு நீதிமன்றம் இடைக்கால தடை விதித்திருப்பதால், அது சட்டவிரோதமானது,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஷேக்ஸ்பியர் நாடக கதாபாத்திரம் Polonius க்கு ஒத்த மதிப்புடைய ஐரோப்பிய ஒன்றியத்திற்காக, ஒரு முட்டாள்தனமான அலங்கார புதுக்கவிதையோடு கோஹன் நிறைவு செய்கிறார்: “ஐரோப்பிய இறையாண்மை, இன்னும் நிறைய தேசிய கொடிகளில் அல்ல, ஒவ்வொரு ஐரோப்பியரின் நல்லெண்ணத்தின், பிரகாசமான எதிர்காலத்திலேயே தங்கியுள்ளது,”

“பிராங்கோவின் மரணத்திற்குப் பின்னர் கற்பனையும் செய்து பார்க்க முடிந்திராத, ஒருவித செல்வசெழிப்பு மற்றும் ஜனநாயக ஸ்திரப்பாட்டுடன், கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் அதிகமாக ஸ்பெயினை, அதற்குள் கட்டலோனியாவை, எடுத்துக்காட்டி வந்த" “ஐரோப்பிய ஒன்றியத்தில் பொதிந்துள்ள மற்றும் அமெரிக்காவின் பிரசன்னத்தினால் அதிகாரம் சமநிலைப்படுத்தப்பட்ட ... ஐரோப்பாவில் உலக போருக்குப் பிந்தைய தாராளவாத ஒழுங்கமைப்பிற்கு" எதிராக திருப்பி விடப்பட்டவர்களாக, "என்ன விலை கொடுத்தாவது தொந்தரவுக்கு உள்ளாக்கும்" மேலெழுச்சிக்கு ஆதரவாளர்களாக கட்டலானியர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள்.

ஐயத்திற்கிடமின்றி, இதுதான் கோஹனின் ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையிலிருந்து வரும் கண்ணோட்டமாக உள்ளது, இங்கிருந்து தான் அவர் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் குறித்த அவரது மாபெரும் உச்சரிப்புகளை உதிர்கிறார்.

ஆனால் இப்போது 17.8 சதவீத வேலைவாய்ப்பின்மையோடு, 25 வயதிற்கு கீழே இருப்பவர்களிடையே 38.6 சதவீத வேலைவாய்ப்பின்மை கொண்ட ஒரு நாடான ஸ்பெயினில், புரூசெல்ஸ் மற்றும் சர்வதேச நாணய நிதியம் கூட்டாக உத்தரவிட்ட பல ஆண்டுகால சிக்கன நடவடிக்கைகளுக்குப் பின்னர், மொத்த குடும்பங்களில் பாதி உத்தியோகபூர்வ வறுமை மட்டத்திற்கு கீழே வருவாய் ஈடுகின்றன.

நியூ யோர்க் டைம்ஸின் பாசாங்குத்தனத்திற்கு, வாஷிங்டன் போஸ்ட் இன் பாகத்திலிருந்து வரும் முற்றுமுதலான பொய், துணை இணைப்பாக உள்ளது, இது கட்டலான் சர்வஜன வாக்கெடுப்பு முடிவை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான ரஷ்ய சூழ்ச்சிகளின் விளைவென்று சித்தரிக்கிறது.

“ஞாயிறன்று கட்டலோனியாவில் வாக்களித்திருக்கக் கூடியவர்கள் மீது ஸ்பானிய கலக பொலிஸின் ரப்பர் தோட்டா துப்பாக்கிசூடுகள் மற்றும் தடியடி பிரயோகங்களின்" புகைப்படங்கள் "அப்பிராந்திய தலைவர்களுக்கு செய்திக்கான சௌகரியமான தொனியை வழங்கியிருப்பதாகவும்" ஆனால் உண்மையில் ஸ்பெயின் அரசியல் நெருக்கடியானது, "சட்டத்தை மீறி ஒரு சுதந்திர குடியரசை உருவாக்குவதற்காக கட்டலான் தேசியவாதிகளால் உந்தப்பட்ட ஒரு பொறுப்பற்ற மற்றும் அர்த்தமற்ற முனைவின்" விளைவாகும் என போஸ்ட் குறைகூறுகிறது.

ஐரோப்பிய ஆணைக்குழுவும் மற்றும் ஜனாதிபதி ட்ரம்பும், “பிரிவினைவாதிகள் ஆட்சி செய்த ஸ்காட்லாந்து, வெனிசூலாவின் ஒதுக்கப்பட்ட அரசாங்கம், ரஷ்யாவின் உளவுத்துறை மற்றும் பிரச்சார எந்திரம்" என இவற்றிற்கு எதிராக நடந்து கொண்டதைப் போலவே, அவர்கள் பிரிவினைவாதத்தை எதிர்க்கும் அதிகாரபூர்வ குரல்கள் என்று அவர்களை போஸ்ட் மேற்கோளிடுகிறது. “ஜனநாயக மேற்கை" பிளவுபடுத்தி பலவீனப்படுத்த "பிரிவினைவாதிகளை ஆதரிப்பதற்காக அதன் ஊடக நிறுவனங்களையும் சமூக ஊடக ஊக்கிகளையும் அணிதிரட்டியதாக" ரஷ்யாவின் உளவுத்துறை மற்றும் பிரச்சார எந்திரத்தை அது குறிப்பிடுகிறது.

அமெரிக்க ஊடகங்கள், எப்போதும் போல, கொடூர ஏகாதிபத்திய-ஆதரவு பிரச்சாரத்திற்கான ஒரு வாகனமாக உள்ளன. ஆனால் அதே இன்றியமையாத தொனி பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் இல் ஒலிக்கிறது. அது தலையங்கத்தில் எழுதுகிறது, ரஹோயின் ஒடுக்குமுறை துரதிருஷ்டவசமானது, ஏனென்றால் அது "நவீன ஸ்பெயின் அதன் எதேச்சதிகார கடந்த காலத்தைக் கலைத்துவிடவில்லை என்ற பிரிவினைவாதிகளின் வாதங்களுக்கு மதிப்பை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.” ஆனால் எந்தவொரு சுதந்திர பிரகடனமும் “சட்ட மதிப்பு மற்றும் அரசியல் சட்டபூர்வத்தன்மை ஏதுமில்லாத ஒரு பொறுப்பற்ற நடவடிக்கையாக" இருக்கும், அது "ஸ்பெயினின் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க கூட்டாளிகளிடம் இருந்து" உரிய முறையில் "இறுக்கமான விடையிறுப்பை எதிர்கொள்ளும்.”

இறையாண்மை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான மதிப்பு குறித்து ஒருவர் இதுபோன்ற அடித்தளமில்லா வியாக்கியானத்தை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், அவர் முழு அரசியல் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். பத்திரிகைத்துறை கனவான்களின் சொந்த ஆளும் உயரடுக்குகளது நலன்கள் மட்டுமே, அவர்கள் ஏற்கின்ற தொனியை தீர்மானிக்கிறது.

அவற்றின் தாய் அரசிடம் இருந்து உடைத்துக் கொள்ள பிரிவினைவாத சக்திகளுக்கு முழு உரிமை இருக்கிறது என்பதை பிரதான சக்திகள் அவற்றின் சூறையாடும் நோக்கங்களுக்காக முன்னெடுத்த போதெல்லாம், சந்தர்ப்பத்திற்கேற்ப மீண்டும் மீண்டும் ஒவ்வொரு முறையும், இதே பிரசுரங்கள், இதே இதழ்கள், அதை பிரகடனப்படுத்தி உள்ளன.

மதரீதியில் ஆகட்டும் அல்லது இனரீதியில் ஆகட்டும், எந்த வகைப்பாட்டில் இருந்தாலும் சிறுபான்மையினருக்கான சுயநிர்ணயம் என்பது, யூகோஸ்லாவியாவைத் துண்டாடவும், ஈராக், லிபியா மற்றும் சிரியாவிற்கு எதிரான போர்களிலும் மற்றும் 1991 இல் ஜோர்ஜியாவை அங்கீகரித்த பின்னர் இருந்து முன்னாள் சோவியத்தின் பிராந்தியங்களில் அத்துமீறுவதற்கான ஒவ்வொரு முயற்சியிலும் அது சித்தாந்தரீதியிலான நியாயப்பாடாக முன்வைக்கப்பட்டது.

கோஹன், 1990 கள் நெடுகிலும், பொஸ்னியா மற்றும் கொசோவோ பிரிவினைவாத இயக்கங்களைப் பாதுகாத்து, சேர்பியா மற்றும் பெல்கிராடில் இருந்த யூகோஸ்லாவ் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக நேட்டோ மிகவும் ஆக்ரோஷமாக செயல்படவில்லை என்று கண்டித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார். “கொசோவோவின் சுயாட்சியை மிலோசேவிக் நசுக்குவதானது, யூகோஸ்லாவியாவை 'சேர்போஸ்லாவியா' ஆக மாற்றுவதில் முக்கியமானதாக இருப்பதாக...” அவர் 2008 இல் அறிவித்தார்.

கோஹனின் கட்டுரைகள், யூகோஸ்லாவியாவில் நேட்டோ குண்டுவீச்சை ஊக்குவிக்க உதவின என்பதோடு, எண்ணற்ற ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்படுவதற்கும் இட்டுச் சென்றது. கோஹன் அவரது குறிப்பிடத்தக்க முட்டாள்தனமான நேர்மையற்ற பாணியில், ஸ்லோபோடன் மிலோசேவிக் மற்றும் பஷர் அல் அசாத்திற்கு எதிராக “மனித உரிமைகளை" பாதுகாக்கும் பெயரில் கொசோவிய பிரிவினைவாதிக்கும் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய "கிளர்ச்சியாளர்களுக்குமான" அவரது ஆதரவை, ரஹோயின் ஒடுக்குமுறைக்கான அவரது உணர்ச்சிபூர்வ பாராட்டுகளுடன் இணைத்துப் பார்க்க எந்த முயற்சியும் செய்யவில்லை.

மாட்ரிட்டின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கான அதுபோன்ற முயற்சிகள் மரணகதியிலான தாக்கங்களைக் கொண்டுள்ளன.

நியூ யோர்க் டைம்ஸ், வாஷிங்டன் போஸ்ட் இன்னும் பலரும் கட்டலான் பிரிவினைவாதத்தை மட்டுமல்ல, மாறாக இப்போதிருக்கும் முதலாளித்துவ ஒழுங்கமைப்பிற்கு எதிரான எல்லா எதிர்ப்பையும் சட்டவிரோதமானதென அறிவிக்கின்றனர். “சட்டத்தின் ஆட்சியை" பாதுகாப்பதற்காக, கூறப்படாத இலக்கில் இருப்பது வெறுமனே கட்டலோனியா மற்றும் ஸ்பெயின் தொழிலாள வர்க்கம் மட்டுல்ல, மாறாக அக்கண்டம் முழுவதிலுமான தொழிலாள வர்க்கமாகும்.

இந்த காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்த அரசுகளும் அரசு அமைப்புகளும் புனிதமானவை என்று அறிவிக்கப்பட்டால், பின் சமூக மற்றும் அரசியல் எதிர்ப்பின் எல்லா வடிவங்களும் கட்டலான் சர்வஜன வாக்கெடுப்பைப் போலவே ஈரவிக்கமின்றி கையாளப்பட வேண்டும் என்றாகிவிடும்—அதில் இராணுவ ஒடுக்குமுறையும் உள்ளடங்கும்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ட்ரம்ப் நிர்வாகத்தின் பாகத்திலிருந்து ரஹோயின் ஒடுக்குமுறை ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது, ஏதேச்சதிகாரம், அரசு வன்முறை மற்றும் உலகெங்கிலுமான அரசாங்கங்களது ஜனநாயக உரிமைகள் மீதான அடக்குமுறையை நோக்கிய முனைவுடன் முற்றிலும் இணைந்து நிற்கிறது.

இந்த அச்சுறுத்தல் ஸ்பெயினில் மிகவும் யதார்த்தமாக உள்ளது.

திங்களன்று, நீதித்துறை அமைச்சர் ரஃபாயெல் கட்டாலா கூறுகையில், கட்டலான் சட்டமன்றம் சுதந்திர பிரகடனம் செய்தால் அரசாங்கம் ஷரத்து 155 ஐ கையிலெடுக்குமென எச்சரித்தார். “ஷரத்து 155 உள்ளது. நாங்கள் சட்டத்தின் முழு பலத்தையும் பிரயோகிப்போம்,” என்றவர் எச்சரித்தார்.

“ஒரு சுயாட்சி சமூகம், அரசியலமைப்பு அல்லது ஏனைய சட்டங்களின் கீழ் அதன் மீது சுமத்தப்பட்ட கடமைகளைப் பூர்த்தி செய்யவில்லை..." என்றால், ஷரத்து 155 அந்த பிராந்திய அரசாங்கத்தை கலைக்கும். இதை, இராணுவத்தை அனுப்புவதன் மூலமாக மட்டுமே நடைமுறைப்படுத்த முடியும்.

இந்த அச்சுறுத்தல் நேற்று ஆறாம் பேரரசர் ஃபிலிப் இன் அசாதாரண தலையீட்டால் எடுத்துக்காட்டப்பட்டது, அவர் கட்டலான் அரசாங்கம் "தங்களை சட்டம் மற்றும் ஜனநாயகத்திற்கு வெளியே நிலைநிறுத்தியதற்காக" அதை கண்டித்தும், “அரசியலமைப்பு உத்தரவை உறுதிப்படுத்தி வைக்க அரசின் சட்டபூர்வ அதிகாரங்களுக்கு பொறுப்பிருப்பதாக" பிரகடனப்படுத்தியும் ஓர் உரை வழங்கினார்.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, கட்டலான் தேசியவாத அரசியலை இடதிலிருந்து எதிர்க்கிறது. ஆனால் தேசிய பிரிவினைவாதம் உட்பட தேசியவாதத்திற்கு எதிரான போராட்டமானது ஓர் அரசியல் போராட்டமாகும், அதற்கு சர்வதேச ஐக்கியத்திற்கான போராட்டத்தின் அவசியத்தை தொழிலாள வர்க்கத்திற்குப் புரிய வைப்பதும், மற்றும் அதைச் சுற்றி நடுத்தர வர்க்கத்தின் முற்போக்கான பிரிவுகள் மற்றும் இளைஞர்களை அணிதிரட்டுவதும் அவசியமாகும்.

இந்த போராட்டமானது, மாட்ரிட்டில் உள்ள அரசாங்கத்தால் கட்டவிழ்த்துவிடப்பட்ட மற்றும் ஏகாதிபத்திய ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த வன்முறைக்கு சற்றும் சமரசமற்ற எதிர்ப்பின் அடிப்படையில் விரிவடைய வேண்டும்.

மேலும் படிக்க:

கட்டலான் சுதந்திரத்திற்கான சர்வஜன வாக்கெடுப்பு மீதான அரசு ஒடுக்குமுறையை எதிர்ப்போம்! [PDF]