ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Students oppose Indian government’s new university entrance exam

இந்திய அரசாங்கத்தின் புதிய பல்கலைக்கழக நுழைவுத் தேர்வை மாணவர்கள் எதிர்க்கின்றனர்

By Yuvan Darwin and Arun Kumar
11 October 2017

இந்திய பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞான படிப்புக்களில் சேர்வதற்கு கட்டாய நுழைவுத் தகுதி பெற தற்போது, இந்திய அரசாங்கத்தின் தேசிய தகுதி மற்றும் நுழைவு தேர்வு (National Eligibility and Entrance Test-NEET) என்றழைக்கப்படும் தகுதி தேர்வை கட்டாயமாக்குவதை எதிர்த்து தமிழ்நாடு மாணவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

அக்டோபர் 2 அன்று, NEET தேர்வை இரத்து செய்யக் கோரி மாணவர்கள் திருச்சியின் பிரதான தபால் அலுவலகத்திலிருந்து நடத்திய அணிவகுப்பு போராட்டத்தை பொலிசார் தடுத்து நிறுத்தினர். மேலும், அனிதா சண்முகம் என்ற 17 வயது மாணவி தனது மருத்துவ கல்லூரியில் சேரும் நம்பிக்கை தகர்ந்துபோனதால், கடந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட அவரது புகைப்படத்தை மாணவர்கள் அந்த போராட்டத்தின் போது முகமூடிகளாக அணிந்திருந்தனர்.


அனிதா சண்முகம்

அனிதா சண்முகம், தமிழ்நாடு மாநில, அரியலூர் மாவட்டத்தில் உள்ள மிக ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்தவராவார். அவர் தமிழ்நாடு பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் 1,200 மதிப்பெண்களுக்கு 1,176 மதிப்பெண்கள் பெற்றுள்ள போதிலும், NEET தேர்வில் தோல்வியடைந்ததால், மாநில மருத்துவ கல்லூரியில் சேர்வதில் இருந்து அவர் தடுக்கப்பட்டார். தினக் கூலி தொழிலாளி ஒருவரின் மகளான இவர், அரியலூர் மாவட்டத்தில், 12ஆம் வகுப்புத் தேர்வில் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களில் 100 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவியாவர் என்ற நிலையில், NEET தேர்வுக்கு முன்னர் ஒரு மருத்துவ மாணவியாவதற்கு அவரது கிராமத்தில் முதல் தகுதியுடையதொரு நபராகவும் அவர் இருந்திருப்பார்.

செப்டம்பர் 1 அன்று, அனிதா சண்முகம் தற்கொலை செய்து கொண்டதானது, NEET ஐ திரும்பப் பெறக்கோரி மாநிலம் முழுவதும் மாணவர் ஆர்ப்பாட்டங்களை தூண்டியது. மேலும், மாநில தலைநகரம் சென்னையிலும், மற்றும் கோயம்புத்தூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் ஆகிய ஏனைய தமிழக நகரங்களிலும் கல்லூரி மாணவர்கள் அணிவகுப்புகளையும், பேரணிகளையும் நடத்தி போராட்டங்களில் ஈடுபட்டனர், இப்போராட்டதில் பின்னர் உயர்நிலைப் பள்ளி மாணவர்களும் இணைந்தனர். அனிதா சண்முகத்தின் துயரமிக்க மரணத்திற்கு பிரதம மந்திரி நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசாங்கத்தையும், அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக (All India Anna Dravida Munnetra Kazhagam-AIADMK) தலைமையிலான மாநில அரசாங்கத்தையும் குற்றம் சாட்டி ஆர்ப்பாட்டக்காரர்கள்  கண்டனம் செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு விடையிறுப்பாக AIADMK மாநில அரசாங்கம், பொலிஸை கட்டவிழ்த்துவிட்டு நூற்றுக்கணக்கான மாணவர்களை கைது செய்ததுடன், இறுதியாக விடுவிக்கப்படும் வரை அவர்களை சமூக கூடங்களில் காவலில் வைத்தது. இருப்பினும், ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து அதிகரித்தன.

செப்டம்பர் 8 அன்று, தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான ஒரு உச்சநீதிமன்ற அமர்வு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்தது. இத்தடை, பொதுமக்களின் சாதாரண வாழ்க்கையை பாதிக்கும் மற்றும் தமிழ்நாடு மாநில சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்கும் “வகையிலான “கடையடைப்பு” (வர்த்தகம் மற்றும் தொழில்களை ஒட்டுமொத்தமாக நிறுத்திவைப்பது) அல்லது நடவடிக்கைகளில் ஈடுபடும் எவர் மீதும்” வழக்கு தொடர தமிழ்நாடு முதன்மை செயலருக்கு அறிவுறுத்தியது.

உச்சநீதிமன்ற தடைக்கு உட்பட்டு, தமிழ்நாடு அரசாங்கம், NEET எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மீதான அதன் தாக்குதல்களை முடுக்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து செப்டம்பர் 8 அன்று, மதுரையில் 81 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, நீதித்துறை காவலில் வைக்கப்பட்டனர்.

அவர்களில், 47 பேர் செப்டம்பர் 12 அன்று விடுவிக்கப்பட்டனர். எஞ்சியோர், சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல், கலகம் செய்தல், குற்றவியல் சதி மற்றும் ஒரு பொது ஊழியரை அவரது கடமையை செய்யவிடாமல் தடுக்க அவரைத் தாக்குதல் அல்லது குற்றவியல் சக்தியை பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திய தண்டனை விதிமுறைக்கு உட்படுத்தப்பட்டனர்.

NEET தேர்வு முதலில் 2013 இல் முன்மொழியப்பட்டது, ஆனாலும், தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், குஜராத் போன்ற பல்வேறு மாநில அரசுகள், அத்துடன் பல கல்லூரிகளும் உட்பட எழுப்பிய மறுப்புக்களுக்கு பதிலிறுப்பாக பல சட்ட ரீதியான மாற்றங்களுக்கு அது உள்ளானது.    

கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் அனைத்து மருத்துவ படிப்புக்களுக்கும் இந்த தேர்வு கட்டாயமாக்கப்பட வேண்டுமென உத்தரவிட்டது. ஜூலை 2016 இல், மருத்துவ மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கானதொரு தேசிய தேர்வாக NEET ஐ உருவாக்கி, மோடி அரசாங்கம், இந்திய மருத்துவ குழு (திருத்தம்) மசோதா, 2016 மற்றும் பல் மருத்துவர் (திருத்தம்) மசோதாவையும் நிறைவேற்றியது. AIADMK தலைமையிலான தமிழ்நாடு மாநில அரசாங்கத்தின் அழுத்தத்தின் கீழ், NEET தேர்வு குறித்து தமிழ்நாட்டிற்கு மட்டும் வெறும் ஒரு வருட விலக்கு அளிக்கப்பட்டது.

அனிதா சண்முகத்தின் தற்கொலை தமிழ்நாட்டில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டங்களின் வெடிப்பிற்கு தூண்டுதலாக இருந்தபோதிலும், NEET மீதான எதிர்ப்பு இந்தியா முழுவதிலுமான மாணவர்கள் மத்தியில் விரைவாக வளர்ச்சி அடைந்துள்ளது.

இந்த NEET தேர்வு, இந்தியாவின் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் மூலம் (Central Board of Secondary Education-CBSE) நடத்தப்படுகிறது. இது விதிக்கப்படுவதற்கு முன்னர், உயர்நிலை கல்வியை நிறைவு செய்த மாணவர்கள், மத்திய அரசு அல்லது அந்தந்த மாநில அரசுகள் நடத்திய பல்கலைக்கழக நுழைவு தேர்வுகளில் அவர்களது செயல்திறன் இருந்ததன் அடிப்படையில் மருத்துவ பட்டப்படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்படலாம் என்ற நிலைமை இருந்தது.

இந்திய பள்ளிக்கூடங்கள் தங்கள் மாணவர்களை NEET தேர்வுக்கு தயார் செய்து வருகின்றனர், என்றாலும் இது ஒரு கடுமையான தேர்வாக உள்ளது, மேலும் இதில் பங்கேற்கும் ஒருவருக்கு கூடுதல் பயிற்சியும், அதிக செலவிலான தனியார் பயிற்சியும் தேவைப்படுகிறது. இந்நிலையில், மிக வறிய தொழிலாள வர்க்க மற்றும் ஒடுக்கப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த குழந்தைகளால் கட்டணங்களை செலுத்த இயலாது என்பதால் அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.        

வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் பொதுக் கல்விக்கான அரசாங்க நிதியளிப்பு பற்றாக்குறை மீது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவரும் கோபம் மற்றும் அமைதியின்மையின் மற்றுமொரு வெளிப்பாடாக இந்த NEET எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் உள்ளன. இந்தியாவில் பொது கல்வி மீதான அரசு செலவினங்கள் 1991 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 4.4 சதவிகிதமாக இருந்தது, இந்த ஆண்டு 3.71 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது.

ஆசிரியர்கள் பின்வருவனவற்றையும் பரிந்துரைக்கின்றனர்:

India imposes regressive nationwide sales tax
[18 August 2017]

Unions suspend Tamil Nadu government workers’ strike
[16 September 2017]

India: BJP-backed student union unleashes violence at Delhi University
[8 March 2017]