ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Trump presidency and the coming conflict between Europe and America

ட்ரம்ப் ஜனாதிபதி காலமும், ஐரோப்பாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே வரவிருக்கின்ற மோதலும்

Chris Marsden
19 January 2017

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்பது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவிற்கும் இடையே, அனைத்திற்கும் மேலாக அமெரிக்காவிற்கும் ஜேர்மனிக்கும் இடையே போருக்குப் பிந்தைய உறவுகளில் முன்னொருபோதும் இல்லாத சீரழிவுக்கான முன்னறிவிப்பாகும்.

ஜனவரி 20 பதவியேற்பு விழா முன்னதாக பிரிட்டனின் சண்டே டைம்ஸ் மற்றும் ஜேர்மனியின் பில்ட் (Bild) பத்திரிகைகளில் ட்ரம்ப் உடனான ஒரு பேட்டி வந்தது. அவரது கருத்துக்கள், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஐரோப்பிய ஒழுங்கமைப்பிற்கான அடித்தளமாக இருந்த அமைப்புகளுக்கு எதிரான தாக்குதலாக இருந்தன.

ஐரோப்பிய ஒன்றியம், ஜேர்மன் மேலாதிக்கத்திற்கான ஒரு வாகனம் என்று வர்ணித்தும், அத்தோடு "ஏனையவர்களும் வெளியேறுவார்கள்" என்ற அனுமானிப்பை வெளிப்படுத்தியும், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டனின் வெளியேற்றத்தை ட்ரம்ப் புகழ்ந்துரைத்தார். “பாருங்கள், வர்த்தகத்தில் அமெரிக்காவை, பகுதியாகவாவது, தோற்கடிக்கவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது, சரியா? ஆகவே அது பிரிந்திருக்கிறதா அல்லது ஒன்றுசேர்ந்திருக்கிறதா என்பதெல்லாம் உண்மையில் எனக்கு அக்கறை இல்லை, எனக்கு அது எவ்வாறு இருந்தாலும் அதைப்பற்றி அக்கறையில்லை,” என்பதையும் சேர்த்துக் கொண்டார்.

ஜேர்மனியின் வாகன தொழில்துறையை தடையாணைகளைக் கொண்டு அச்சுறுத்திய ட்ரம்ப், சான்சிலர் அங்கேலா மேர்க்கெலின் அகதிகள் கொள்கையே ஐரோப்பாவை நிலைகுலைத்ததாக குற்றஞ்சாட்டி, அவரை தாக்கினார். ரஷ்யாவிற்கு எதிரான தடையாணைகளை எதிர்த்த அதேவேளையில், அவர், நேட்டோ கூட்டணி "பயனற்று போய்விட்டதாக" அவர் நம்புவதாக அறிவித்தார்.

இதற்குமுன்னர் ஒருபோதும் ஒரு அமெரிக்க ஜனாதிபதி ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவை தனது வெளிப்படையான இலக்காக அமைத்துக் கொண்டதில்லை. அவர் இங்கிலாந்தை ஜேர்மனிக்கு எதிராக நிறுத்த விரும்புவதையும், அவர் இங்கிலாந்தின் சுதந்திர கட்சியுடனும் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய விரோத வலதுசாரி கட்சிகளுடனனும் தன்னைத்தானே ஒன்றிணைத்துக் கொண்டிருப்பதையும் ட்ரம்ப் நேர்காணலில் தெளிவுபடுத்தினார்.

ஐரோப்பாவின் அரசியல் உயரடுக்கின் விடையிறுப்பும் அதேயளவிற்கு விரோதமாக இருந்தது. ஜேர்மனியில், மேர்க்கெல் பதிலளிக்கையில், “ஐரோப்பியர்களாகிய நமது தலைவிதி நம் கரங்களில் இருப்பதாகவே நான் நினைக்கிறேன்,” என்றார். மேர்க்கெலின் கூட்டணி கட்சியான சமூக ஜனநாயகக் கட்சியின் சிக்மார் காப்ரியேல் வலியுறுத்துகையில், “நாம் இப்போது ஒரு அடிமைத்தனமான மனோபாவத்தை ஏற்க வேண்டியதில்லை… ட்ரம்ப் ஐ கையாள்வதில், நமக்கு ஜேர்மன் தன்னம்பிக்கை மற்றும் ஒரு தெளிவான நிலைப்பாடு அவசியப்படுகிறது,” என்றார்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் கூறுகையில், “அட்லாண்டிக் இடையிலான கூட்டுறவு" இப்போதிருந்து ஐரோப்பாவின் சொந்த "நலன்கள் மற்றும் மதிப்புகளின்" அடிப்படையில் இருக்கும் என்றார்.

ஐரோப்பிய சிந்தனைக் குழாம்கள் மற்றும் ஊடகங்கள் இராணுவவாதம் தீவிரமடைவதையும் மற்றும் தேசிய பதட்டங்களின் ஒரு வெடிப்படையும் அனுமானித்தன. “ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் கூட்டு பாதுகாப்பை பலப்படுத்துவதன் மூலமாக அதிகரித்த மூலோபாய தன்னாட்சியை பெற ஆலோசிக்க வேண்டியிருக்கும்,” என்று மாட்ரிட் இல் Elcano Royal அமைப்பின் பீலிக்ஸ் அர்டேகா தெரிவித்தார்.

"ஜேர்மனிக்கு எதிரான குழுவாக்கத்தை" ஊக்குவிப்பதன் மூலமாக, ட்ரம்ப், “ஜேர்மன் சுற்றி வளைப்பின் பழைய அச்சங்களுக்கு நெருப்பூட்டக்கூடும்" என்று Carnegie Europe அமைப்பின் யூடி டெம்சே எழுதினார். “அதுவொரு புதிய அரசியல் கண்ணோட்டம் என்றாலும் கூட, ஐரோப்பாவும் ஜேர்மனியும் அதற்கு விடையிறுக்க வேண்டியிருக்கும்,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

கார்டியனில், நத்தலி நொவ்கரேடே அறிவுறுத்துகையில், “செல்வாக்கின் பரப்பெல்லையின் ஒரு திருப்பத்தை ஐரோப்பா காணக்கூடும்… அத்துடன் அரசாங்கங்கள் அவற்றின் அண்டைநாடுகளை மற்றும் அக்கண்டத்தின் எதிர்காலத்தை விலையாக கொடுத்து தங்களின் சொந்த நலன்களைப் பாதுகாக்க முயற்சிக்க விரையக்கூடும்,” என்றார்.

ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" நிலைப்பாடுகள், ஐரோப்பா உடனான அமெரிக்க அரசியல் உறவுகளில் ஒரு மிரட்சியூட்டும் மாற்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. Christian Science Monitor, அட்லாண்டிக் இடையிலான விவகாரங்களுக்கான நிபுணர் ஜோன் ஹல்ஸ்மன் கூறியதை மேற்கோளிட்டு, “போருக்குப் பிந்தைய சர்வதேச அமைப்புமுறையில் அமெரிக்காவின் தலைமையை விட்டுக்கொடுத்த 'வில்சனிய' அமெரிக்க தலைவர்களுக்கு இயைந்துபோகும்வகையில்  வளர்ந்துள்ளதற்காகவும்" மற்றும் "ஒரு 'ஜாக்சனியவாத' மற்றும் ட்ரம்ப் ஆல் ஊக்குவிக்கப்பட்ட இன்னும் அதிக தேசியவாத அமெரிக்க உலக கண்ணோட்டத்திற்கு மிக விரைவிலேயே போதுமானளவிற்கு ஒத்துப்போக முடியாத நிலையிலுள்ள “ஐரோப்பிய உயரடுக்குகளைக்" கண்டித்தார்.

எவ்வாறிருப்பினும் இப்போது வரையில், பொதுவாக அதுபோன்ற ஒருதலைபட்சமான போக்குகள் தடுக்கப்பட்டிருந்தது. அமெரிக்க ஆளும் வர்க்கம், நடைமுறையளவில் உலகளாவிய மேலாதிக்கத்தைச் செயல்படுத்துவதற்கான அதன் தகைமையை, அதன் தடையற்ற கோரிக்கை பலவீனப்படுத்தும் என்பதை அது ஒப்புக் கொள்கிறது. ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் உடனான அவரது உறவுகள் சம்பந்தமாக அமெரிக்க உளவுத்துறை முகமைகளுக்குள் ட்ரம்பை நோக்கிய விரோதத்தை உயிரூட்டி வரும் பிரச்சினைகளில் ஒன்று என்னவென்றால், நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலமாக நீண்டகாலமாக ஐரோப்பாவிற்குள் அமெரிக்கா அதன் மேலாதிக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு உகந்த கட்டமைப்பை பேணுவதற்கு ஒரு ரஷ்ய "அரக்கன்" இன்றியமையாத விதத்தில் அவசியப்படுகிறது என்பது அவர்கள் நம்பிக்கையாகும்.

கடந்த முறை, 2003 இல், ஈராக் போருக்கு முன்னதாக அமெரிக்காவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையே கூர்மையாக பதட்டங்கள் எழுந்தன. அப்போது அமெரிக்க பாதுகாப்புத்துறை செயலர் டொனால்ட் ரம்ஸ்ஃபெல்ட் ஈராக்கில் அமெரிக்காவிற்கு ஆதரவளிக்க மறுப்பதற்காக பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியைக் கண்டித்தார். ரம்ஸ்ஃபெல்ட் அவ்விரு நாடுகளையும் "பழைய ஐரோப்பா” என்று குறிப்பிட்டதோடு, அவற்றை கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு எதிராக நிறுத்தினார்.

அதே ஆண்டு ஜனவரி 26 இல், உலக சோசலிச வலைத் தளம் "அமெரிக்காவை எப்படி சமாளிப்பது? ஐரோப்பாவின் தர்மசங்கட நிலை" என்று தலைப்பிட்டு டேவிட் நோர்த் ஒரு முன்னோக்கு கருத்தை பிரசுரித்தார், அது அந்த மோதலின் வரலாற்று முக்கியத்துவத்தை விவரித்தது.

1945 மற்றும் 1991 க்கு இடையே ஐரோப்பா உடனான அமெரிக்காவின் போருக்குப் பிந்தைய உறவு, "அடிப்படையில் பனிப்போரின் குறிப்பிட்ட சூழலுக்குள் அதன் சொந்த இன்றியமையாத பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் நலன்களைக் குறித்த அதன் மதிப்பீட்டால் தீர்மானிக்கப்பட்டது" என்பதை நோர்த் விளங்கப்படுத்தினார். “ஐரோப்பாவை நோக்கிய அமெரிக்காவின் மனோபாவமானது, (1) சோவியத் ஒன்றியத்தின் தனிமைப்படுத்தலை வலுப்படுத்துவது மற்றும் மேற்கு ஐரோப்பாவில் அதன் செல்வாக்கைக் குறைப்பது (“கட்டுப்படுத்துவது”) மற்றும் (2) ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் தீவிரமான போர்குணத்தோடு மற்றும் உயர்ந்தமட்டத்தில் அரசியல்மயப்பட்டிருந்த அந்நேரத்தில் சமூகப் புரட்சியை தடுப்பது ஆகிய மோலோங்கிய இந்த தேவைகளால் தீர்மானிக்கப்பட்டிருந்தது,” என்று அவர் தொடர்ந்து விளங்கப்படுத்தினார்.

“மேற்கு ஐரோப்பாவுடனான அதன் கூட்டணி இருந்த அந்த காலகட்டத்தில் அமெரிக்காவின் வலியுறுத்தலானது, உண்மையில், வரலாற்று விதிமுறைகளில் இருந்து விலகுவதாக இருந்தது. ஏதோவிதத்தில் ஒரு பிரதான ஏகாதிபத்திய சக்தியாக காலங்கடந்து எழுந்திருந்ததில் வேரூன்றிய அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக அடிப்படையான போக்கு, ஐரோப்பாவை விலையாக கொடுத்து உலகில் அதன் இடத்தை வைத்துக் கொள்வதாக இருந்தது.” 

பின்னர் நோர்த் எழுதினார்: “சோவியத் ஒன்றியத்தின் பொறிவானது, போருக்குப் பிந்தைய இராஜாங்க உறவுகள் அடிப்படையாக கொண்டிருந்த சர்வதேச கட்டமைப்பை மாற்றியிருக்கிறது. சோவியத் ஒன்றியத்திற்கு எதிராக ஒரு பாதுகாப்பு கோடாக மேற்கு ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தை முன்னிறுத்துதற்கான எவ்வித தேவையும் இனிமேல் அமெரிக்காவுக்கு இல்லை. அனைத்திற்கும் மேலாக, சோவியத் சோசலிசக் குடியரசுகளின் ஒன்றியம் இல்லாமை உருவாக்கிய அதிகார வெற்றிடத்தை ஐக்கிய அமெரிக்க அரசுகள் தனது சொந்த வசதிவாய்ப்புக்காக சுரண்டிக் கொள்ள உறுதியாக இருந்தது.”

இந்த உள்ளடக்கத்தில், அவர் 1928 இல் லியோன் ட்ரொட்ஸ்கி முன்வைத்த தீர்க்கதரிசனமான எச்சரிக்கையை மேற்கோளிட்டார்:

வளர்ச்சிக் காலகட்டத்தினை விடவும் நெருக்கடி காலகட்டத்தில்தான் அமெரிக்காவின் மேலாதிக்கமானது இன்னும் முழுமையாகவும், இன்னும் பகிரங்கமாகவும், இன்னும் மூர்க்கத்தனமாகவும் செயல்படும். ஆசியா, கனடா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா அல்லது ஐரோப்பாவிலேயே கூட நடக்கலாம், அதேபோல அமைதியான முறையிலோ அல்லது போர் மூலமாகவோ நடக்கலாம், எப்படியாயினும் பிரதானமாக ஐரோப்பாவின் நலன்களை பலியிட்டே அமெரிக்கா தனது சிக்கல்களில் இருந்தும் சீரழிவில் இருந்தும் தன்னை விடுவித்துக் கொள்ள முனையும்.”

2003 இல் எதிர்நோக்கப்பட்ட இந்த குழப்பநிலை இப்போது அதன் முழு முக்கியத்துவத்தை பெறுகிறது. வெளியேறவிருக்கும் வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி, மேர்க்கெலை "தைரியமானவர்" என்றும், ட்ரம்பின் கருத்துக்கள் "பொருத்தமற்றவை" என்றும் வர்ணிக்கின்ற நிலையில், அமெரிக்க முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜேர்மனி மீதான ட்ரம்பின் தாக்குதல்களுக்கு தொடர்ந்து ஆழ்ந்த விரோதமாக உள்ளன. ஆனால் இதுபோன்ற உடன்பாடின்மைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்கா அதன் பொருளாதார வீழ்ச்சி, சீனா மற்றும் ஏனைய எதிர்விரோத சக்திகளின் வளர்ச்சியால் முன்வரும் சவால், மற்றும் 2003 இல் இருந்து ஏற்பட்ட தொடர்ச்சியான பல இராணுவ தோல்விகளின் காரணமாக, அதன் உலகளாவிய மேலாதிக்கத்திற்கான அச்சுறுத்தலை எதிர்கொள்ள அது புறநிலைரீதியில் வர்த்தக போர் மற்றும் பாதுகாப்புவாதத்தை நோக்கிய ஒரு கூர்மையான போக்கில் சென்று கொண்டிருக்கிறது. இது தவிர்க்கவியலாமல் ஐரோப்பாவுடன் மோதலைத் தூண்டும்.

ஜேர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ரஷ்யா ஆகியவற்றிற்கு இடையே தவிர்க்கவியலாமல் என்ன மாதிரியான கூட்டணி ஏற்படும் என்பது உட்பட அமெரிக்காவின் இந்த புவிசார் மூலோபாய மாற்றத்தின் விளைவுகளை யாராலும் விளக்கமாக அனுமானிக்க முடியாது. அமெரிக்காவிற்கான ஒரு முக்கிய எதிர்பலமாக சீனா வகிக்கக்கூடிய முக்கிய பாத்திரத்தையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

எவ்வாறிருப்பினும், இதுபோன்ற நிகழ்வுகளுக்கு அடியே தேசிய விரோதங்கள் வெடிக்கும், அதில் ட்ரம்பின் "முதலிடத்தில் அமெரிக்கா" திட்டநிரலின் சுழல், “முதலிடத்தில் ஜேர்மனி,” “முதலிடத்தில் பிரிட்டன்" மற்றும் "முதலிடத்தில் பிரான்ஸ்" ஆகியவற்றை நிலைநிறுத்துவதற்கான கோரிக்கைகளைக் கொண்டு வரும், இது போட்டியிடும் சக்திகளின் அணிகளாக ஐரோப்பா உடைவதற்கு மட்டுமே இட்டுச் செல்லும்.

முதலாளித்துவத்தின் கீழ் ஐரோப்பாவை ஒருங்கிணைக்கும் திட்டம் முடிவுக்கு வந்து கொண்டிருப்பதுடன், கட்டுப்படுத்தப்பட்டு இருந்ததாக அர்த்தப்படுத்தப்பட்ட அரசியல் பூதங்கள் அனைத்தையும் கட்டவிழ்த்துவிடும்.

நெருக்கமான அரசியல் ஐக்கியம் மற்றும் ஒரே சந்தை ஆகியவை செல்வவளத்தையும் சமாதானத்தையும் கொண்டு வரும் என்ற வெறும் வாக்குறுதியை தவிர அங்கே வேறொன்றுமில்லை. அதற்கு மாறாக, வலதுசாரி பிற்போக்குத்தனம் மற்றும் பாசிச கட்சிகளது வளர்ச்சி ஒவ்வொரு நாட்டிலும் நடந்தேறி வருகிறது. நேட்டோ துருப்புகள் பெருந்திரளாக ரஷ்ய எல்லைகளை நோக்கி நகர்கின்ற நிலையிலும் கூட, இராணுவமயமாக்குவதற்கான தேவை குறித்து ஐரோப்பிய சக்திகள் நிரந்தரமாக பேசி வருகின்றன, அதேவேளையில் சிக்கனத் திட்டம் ஒன்றில் மட்டும் அவை அனைத்தும் உடன்பட்டுள்ளன.

பேர்லின், பாரீஸ் மற்றும் இலண்டன் ஆகியவை அவற்றின் போட்டியாளர்களுக்கு எதிராக போட்டியிட இன்னும் அதிக "தேசிய தியாகங்களைக்" கோரி, அக்கண்டத்தை மறுஆயுதபாணிக்க பெரும் தொகைகளை செலுத்துமாறு கோருகையில், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் இன்னும் மோசமடையும்.

உலகளாவிய பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த குணாம்சம் மற்றும் உற்பத்தி கருவிகளின் தனியார் சொத்துடைமையின் அடிப்படையில் எதிர்விரோத தேசிய அரசுகளாக உலகம் பிளவுபட்டிருப்பதற்கும் இடையிலான அடிப்படை முரண்பாடுகளைக் கடந்து வருவதற்கு முதலாளித்துவ வர்க்கம் இலாயகற்றது என்பதை நிரூபித்துள்ளது.

ஐரோப்பாவின் தொழிலாள வர்க்கம், 1945 இல் இருந்து, பல தலைமுறைகள் தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து வந்த போருக்குப் பிந்தைய காலக்கட்டம் முடிந்துவிட்டது, ஒரு புதிய போருக்கு முந்தைய காலகட்டம் தொடங்கி உள்ளது என்ற ஒரு புரிதலில் இருந்து முன்நகர வேண்டும். அது சகல ஏகாதிபத்திய சக்திகளது சிக்கனத் திட்டம், இராணுவவாதம் மற்றும் போருக்கான உந்துதலை எதிர்க்க பொறுப்பேற்க வேண்டும்.

அனைத்திற்கும் மேலாக, அது அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர் போராட்டங்களில் நனவூபூர்வமாக ஐக்கியமாக முனைய வேண்டும். செல்வந்த தட்டுக்கள் மற்றும் போர்வெறியர்களது ட்ரம்ப் அரசாங்கம் தவிர்க்கவியலாமல் தூண்டிவிடும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின் வெடிப்பானது, ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களுக்கு மிகவும் சக்திவாய்ந்த தூண்டுதலை வழங்கும்.