ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

From Selma to the CIA
John Lewis, Donald Trump and the demise of the “civil rights” establishment

செல்மாவில் இருந்து சிஐஏ வரை

ஜோன் லிவீஸூம், டொனால்ட் ட்ரம்பும் மற்றும் "குடியுரிமை" ஸ்தாபகத்தின் அழிவும்

Patrick Martin
16 January 2017

NBC இன் ஞாயிற்றுக்கிழமை காலை நிகழ்ச்சியான "பத்திரிகை சந்திப்பு" (Meet the Press) க்காக வெள்ளியன்று நடத்தப்பட்ட ஒரு நேர்காணலில், ஜனநாயகக் கட்சி பிரதிநிதி ஜோன் லிவீஸ் கூறுகையில், அவர் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாகவும், ஏனென்றால் "ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இவரை ஒரு சட்டபூர்வ ஜனாதிபதியாக நான் பார்க்கவில்லை,” என்றும் அறிவித்தார்.

டொனால்ட் ட்ரம்பின் ஜனாதிபதி பதவியை நிராகரிக்கவும் எதிர்க்கவும் பல காரணங்கள் உள்ளன: இப்போது அமெரிக்க அரசியல் அமைப்புமுறையில் ஆதிக்கம் செலுத்தும் நிதியியல் செல்வந்த உயரடுக்கின் ஆளுருவாக விளங்கும் ட்ரம்ப், இன்னும் அதிக செல்வவளத்தை குவிப்பதற்கான அதன் பைத்தியக்காரத்தனமான உந்துதலுக்கு சகல அரசு கொள்கையையும் அடிபணிய செய்ய விரும்புகிறார்; அவர் அதிதீவிர-வலது, சக பில்லியனர்கள் மற்றும் முன்னாள் தளபதிகளைக் கொண்டு தனது மந்திரிசபையையும் வெள்ளை மாளிகை அதிகாரிகளையும் நிரப்பியுள்ளார்; அவரது அரசாங்கமானது, ஒரு பாரிய இராணுவ கட்டமைப்புக்கும் அத்துடன் சேர்ந்து கல்வி, மருத்துவக் காப்பீடு மற்றும் ஏனைய அரசு சேவைகளுக்கான சமூக செலவினங்களில் கடுமையான வெட்டுக்களைச் செய்யும் ஒரு திட்டத்திற்கும் பொறுப்பேற்றுள்ளது.

ஆனால் லிவீஸ் இவற்றில் எதையுமே குறிப்பிடவில்லை. அவர், அவரது ட்ரம்ப் நிராகரிப்பை, 2016 ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது ரஷ்ய ஊடுருவல் குறித்த அமெரிக்க உளவுத்துறை முகமைகளின் அறிக்கைகள் மீது அமைத்துள்ளார். “இந்த மனிதர் தேர்ந்தெடுக்கப்பட உதவுவதில் மற்றும் ஹிலாரி கிளிண்டன் வேட்பாளர் நியமனத்தை முறியடிப்பதில் ரஷ்யர்கள் உதவியிருந்ததாக நான் கருதுகிறேன்,” என்றார். “அது சரியல்ல. அது நியாயமல்ல. அது வெளிப்படையான ஜனநாயக நடைமுறை அல்ல,” என்றார்.

ஜனநாயகக் கட்சியின் தேசிய கமிட்டி மற்றும் கிளிண்டன் பிரச்சாரக் குழுவை ஊடுருவியதற்கு ரஷ்ய அரசாங்கம் பொறுப்பு என்பதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை. ரஷ்ய ஊடுருவல் குறித்த கூப்பாடும், ஆரவாரமும் இரண்டு நோக்கங்களைக் கொண்டுள்ளது: ஒன்று கிளிண்டன் பிரச்சாரத்தின் வலதுசாரி மற்றும் ஜனநாயக விரோத குணாம்சத்தை எடுத்துக்காட்டுகின்ற, கசியவிடப்பட்ட மின்னஞ்சல்களின் உண்மையான உள்ளடக்கத்தை மூடிமறைப்பது; அடுத்து, ரஷ்யாவிற்கு எதிராக அரசியல், பொருளாதார, இராஜாங்க மற்றும் இறுதியாக இராணுவ "பழிவாங்கலுக்கு" சாதகமாக அமெரிக்காவில் பொது மக்களின் கருத்தைத் தூண்டிவிடுவது.

ட்ரம்ப் குறித்த லிவீஸின் விமர்சனத்தில் ஒரு சிறிதளவு கூட உண்மையான ஜனநாயக சாராம்சம் கிடையாது. மக்கள் வாக்குகளில் அண்மித்து மூன்று மில்லியன் வாக்குகள் வித்தியாசத்தில் ட்ரம்ப் தோல்வி அடைந்திருப்பதையோ அல்லது குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் உள்ள பல மாநில அரசாங்கங்கள் சிறுபான்மை வாக்காளர்களை ஒடுக்க கொண்டு வந்த "வாக்காளர் அடையாள அட்டை" சட்டங்களின் தாக்கங்களைக் குறித்தோ அவர் குறிப்பிடவில்லை. ட்ரம்ப் மீதான அவர் தாக்குதல், முற்றிலுமாக, 1950 களில் கம்யூனிஸ்டுகளை விமர்சித்து வந்த ஜோசப் மெக்கார்தியின் மொழியை நினைவூட்டும் விதத்தில், சிஐஏ தலைமையிலான ரஷ்ய-விரோத பிரச்சாரத்தை தழுவியதாக இருந்தது.

இங்கே ஒரு மங்கலான வரலாற்று முரண்பாடு உள்ளது. 1950 கள் மற்றும் 1960 களில், தெற்கில் மிக தீவிரமான குடியுரிமை போராட்ட கால ஆண்டுகளின் போது, அலபாமாவின் பெர்மிர்ங்காம் போன்ற நகரங்களின் பொலிஸ், FBI, மற்றும் தெற்கிலிருந்த ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் இனப்பாகுபாட்டுக்கு எதிரான போராட்டங்களை "வெளியிலிருந்து தூண்டிவிடுபவர்களின்" வேலை என்றும், கம்யூனிஸ்டுகள் சோவியத் ஒன்றியத்துடன் தொடர்பு ஏற்படுத்த இவ்வாறு செய்வதாகவும் வாதிட்டனர். ஆனால் அந்த ஆண்டுகளில் ஒரு மாணவ தலைவராக முக்கிய பாத்திரம் வகித்தவரும், செல்மாவில் இருந்து அலபாமாவின் மொன்ட்கொமெரி வரையில் வாக்குரிமைகளுக்காக தலைமையேற்று பேரணி சென்றவருமான ஜோன் லிவீஸ், ஒரேயொரு ஒரு விடயத்தை நினைவுபடுத்துகிறார்: அதாவது, உங்கள் எதிரிகளை ரஷ்யாவின் கருவியாக கண்டனம் செய்வது, ஒரு நிரூபிக்கப்பட்ட பிரச்சார உத்தி என்பதை.

கடந்த 30 ஆண்டுகளாக அட்லாண்டாவின் ஒரு காங்கிரஸ் உறுப்பினராக லிவீஸ், முதலாளித்துவ அரசியலின் மேலாதிக்கத்தை பலப்படுத்துவதற்காக, நடுத்தர வர்க்க ஆபிரிக்க-அமெரிக்கர்களின் ஒரு பிரிவை நியமிப்பதிலும் ஊழல்களுக்கும் ஆளுருவாக விளங்குகிறார். லிவீஸ் போன்ற குடியுரிமை தலைவர்கள், ஒட்டுமொத்தமாக ஜனநாயக கட்சி மற்றும் அரசு எந்திரத்தை புதுப்பிப்பதற்கு அமெரிக்க ஆளும் உயரடுக்கின் ஒரு நனவுபூர்வமான மூலோபாயத்தின் பாகமாக இணங்கும் விதமாக தேர்வு செய்யப்பட்டனர்.

டஜன் கணக்கான பிரதான நகரங்கள் ஆபிரிக்க-அமெரிக்க மேயர்களை கொண்டிருந்தன, அவர்களில் சிலர் குடியுரிமை போராட்டங்களின் முன்னாள் அனுபவஸ்தர்கள், ஏனையவர்கள் வெறுமனே அதிலிருந்து பணத்தைக் குவித்துக் கொண்டவர்கள். காங்கிரஸின் கறுப்பின வேட்பாளர் தேர்வுக்குழு எண்ணிக்கை விரல்விட்டு எண்ணக்கூடிய எண்ணிக்கையிலிருந்து முப்பதுக்கும் அதிகமாக விரிவடைந்தது. இடஒதுக்கீட்டு நடவடிக்கை போன்ற திட்டங்களின் உதவியுடன், கல்வித்துறைசார் அறிஞர்கள், அரசு அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள், பெருநிறுவன நிர்வாகிகள் மற்றும் இறுதியில் தலைமை செயலதிகாரிகள் வரையில் கறுப்பினத்தவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

இந்த சாதகங்கள் அதிகமானவை அல்ல என்றாலும், அவை நல்ல சம்பளத்துடன், அரசியல்ரீதியில் அடையாளப்படுத்தும் விதத்தில் இருந்ததோடு, அமெரிக்க பெருவணிகங்களின் சூறையாடல்களுக்கும் மற்றும் பென்டகனின் குற்றங்களுக்கும் "திசைதிருப்புவதற்கான" ஒரு மூடிமறைப்பை வழங்கின. அமெரிக்க ஏகாதிபத்தியம் கட்டாய இராணுவ சேவையில் சேர்க்கப்பட்டவர்களைக் கொண்டு பத்தாயிரக் கணக்கான நிராயுதபாணியான ஈராக்கியர்களை எரித்து சாம்பலாக்கிய அதேவேளையில், முப்படை தலைமை தளபதிகளின் தலைவராக முதல் கறுப்பின தலைவர் ஜெனரல் கொலின் பாவெல் 1991 பாரசீக வளைகுடா போரின் வளர்ச்சியைக் குறித்து பத்திரிகைகளுக்கு விளக்கமளித்து கொண்டிருந்தார். இதே பாணியில், முதல் கறுப்பின வெளியுறவுத்துறை செயலராக பாவெல், மற்றும் முதல் கறுப்பின தேசிய பாதுகாப்பு ஆலோசகராக கொண்டாலிசா ரைஸ், ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் 2003 இல் சட்டவிரோத ஈராக்கிய படையெடுப்பை தொடங்கியபோது அவருக்கு ஆதரவாக நின்றனர்.

இந்த நிகழ்வுபோக்கு முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதியாக—அத்துடன் உலகின் எந்தவொரு இடத்திலும் டிரோன் குண்டுவீச்சு ஏவுகணைகளை பயன்படுத்துவதற்கும், அமெரிக்க குடிமக்களை படுகொலை செய்வதற்கும் உரிமை இருப்பதாக வலியுறுத்திய முதல் ஜனாதிபதியாக—பராக் ஒபாமா தேர்ந்தெடுக்கப்படுவதில் போய்முடிந்தது. இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் ஒரு ஜீவனாக ஒபாமா, ஆப்கானிஸ்தானில் போரை விரிவாக்கினார், லிபியாவில் ஒரு புதிய போரை தொடங்கினார், ஈராக் மற்றும் சிரியா போர்களில் அமெரிக்க இராணுவத்தை மீண்டுமொருமுறை ஈடுபடுத்தினார். அவர் சிஐஏ, FBI மற்றும் தேசிய பாதுகாப்பு முகமையின் பொலிஸ்-அரசு நடவடிக்கைகளைத் தொடர்ந்து பலப்படுத்தினார்.

ஜோன் லிவீஸ் ஒருபோதும் ஒபாமா நிர்வாகத்தின் இராணுவ-உளவுத்துறை நடவடிக்கைகளை எதிர்க்கவில்லை என்பது ஜனநாயகக் கட்சியின் ஆபிரிக்க-அமெரிக்க அரசியல்வாதிகளது இந்த ஊழல் அடுக்கின் குணாம்சத்திற்குக் குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு முரண்பட்ட விதத்தில், லிவீஸ் 2011 இல் ஒபாமாவிடம் இருந்து சுதந்திரத்திற்கான ஜனாதிபதி விருது பெற்றார், அதே ஆண்டில் தான் அன்வர் அல்-அவ்லாகி மீதான டிரோன்-ஏவுகணை படுகொலைக்கு அந்த ஜனாதிபதி அங்கீகாரம் வழங்கியிருந்தார்.

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர், மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர் வியட்நாம் போருக்கு எதிராக தைரியமாக முன்வந்து அன்னிய நாடுகள் மீதான ஏகாதிபத்திய போருக்கான எதிர்ப்பையும் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தையும் இணைக்க முயன்றதன் மூலம், ஒரு முக்கிய படியை முன்னெடுத்தார். இன்றோ தங்களின் சொந்த வலதுசாரி அரசியலை மூடிமறைப்பதற்காக கிங்கின் கவசத்தை போர்த்திக் கொள்ள முயலுபவர்களிடையே, அதுபோன்ற கோட்பாட்டின் ஒரு துளி கூட கிடையாது.

ஏப்ரல் 1968 இல் டாக்டர் கிங்கின் படுகொலைக்குப் பின்னர் —இந்த சம்பவம் சந்தேகத்திற்கு இடமின்றி வியட்நாம் போருக்கு எதிராக அவர் திரும்பியதுடன் தொடர்புபட்டிருந்தது— அவர் ஆதரவாளர்கள் ஸ்தாபகத்துடன் சமாதானம் செய்து கொண்டனர். எப்போதுமே கிங் கவுன்சில்களின் வலதுசாரிக்காக நின்றிருந்த ஆண்ட்ரூ யங் போன்ற அவர்களில் சிலர், அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வெளிப்படையான ஆதரவாளர்களாக மாறினர், மேலும் கார்ட்டர் நிர்வாகத்தில் யங் ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்க தூதராக சேவையாற்றினார்.

ஜெஸ்சி ஜாக்சன், ஜூலியன் பாண்ட் மற்றும் ஜோன் லிவீஸ் போன்ற ஏனையவர்கள், பெருவணிக கட்சியான ஜனநாயகக் கட்சி மேலும் மேலும் வலதிற்கு நகர்ந்த நிலையில் அதற்கு ஒரு "முற்போக்கான" மூடிமறைப்பை வழங்கி, அதன் அரசியலுக்காக கூலிக்கு மாரடிப்பவர்களாக மாறினர். லிவீஸ் கூட, 1986 இல் ஒரு காங்கிரஸ் ஆசனத்தை வெல்வதற்கு முன்னதாக, பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை நடத்தி, கார்ட்டர் நிர்வாகத்தில் சேவையாற்றினார். 1960 களில் வார்த்தையளவில் அவர் வகித்த பாத்திரத்திற்காக சமீபத்திய ஆண்டுகளில் அவருக்கு பண உதவித்தொகைகள் வழங்கப்பட்டன, 1965 மார்ச் நடவடிக்கையை மீண்டும் நினைவூட்டுவதற்காக லிவீஸின் செல்மாவிற்கான வருடாந்தர விஜயத்திற்காக, அவரது நம்பிக்கை மற்றும் அரசியல் பயிலகம் (Faith and Politics Institute) ஓர் ஆசனத்திற்கு 25,000 டாலர் என தரகர்களுக்கு ஆசனங்களை விற்று வருகிறது.

போர்வெறியூட்டும் ரஷ்ய-விரோத பிரச்சாரத்தில் லிவீஸூம் சேர்ந்திருப்பது, அமெரிக்க தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அரசியல் சவாலை எடுத்துக்காட்டுகிறது. ஜனநாயக கட்சியின் எந்தவொரு பிரிவும், ட்ரம்ப் நிர்வாகம் மற்றும் காங்கிரஸில் உள்ள குடியரசு கட்சியினரின் அசுரத்தனமான வலதுசாரி திட்டத்திற்கு எதிராக ஒரு உண்மையான அல்லது கோட்பாட்டுரீதியிலான போராட்டத்தை நடத்தாது. குடியரசு கட்சியைப் போலவே, ஜனநாயக கட்சியும் நிதியியல் பிரபுத்துவத்தின் இலாபங்கள் மற்றும் செல்வவளத்தையும், மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உலகளாவிய நலன்களையும் பாதுகாக்கிறது.