ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sanders backs Trump’s “America First” economic nationalism

ட்ரம்ப்பின் “முதலில் அமெரிக்கா” பொருளாதார தேசியவாதத்திற்கு சாண்டர்ஸ் ஆதரவளிக்கிறார்

By Jerry White
24 January 2017

“முதலில் அமெரிக்கா” தேசியவாதி டொனால்ட் ட்ரம்ப்பின் ஜனநாயக-விரோத மற்றும் இராணுவாதக் கொள்கைகளுக்கான தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் மில்லியன் கணக்கான மக்கள் பேரணிகள் நடத்திய —ஒரு புதிய அமெரிக்க ஜனாதிபதியின் பதவியேற்புக்கு கிட்டிய பதிலிறுப்பில் அளவிலும் சர்வதேசத் தன்மையிலும் இது முன்கண்டிராத ஒன்றாக இருந்தது— இரண்டு நாட்களின் பின்னர், வேர்மண்ட் செனட்டரான பேர்னி சாண்டர்ஸ் புதிய ஜனாதிபதி மற்றும் அவரது நச்சுத்தனமான பொருளாதார தேசியவாதத்தின் பின்னால் தன்னை ஐக்கியப்படுத்தி நிறுத்திக் கொண்டார்.

திங்களன்று காலை, 12 நாடுகள் பசிபிக் கடந்த உடன்பாட்டு வணிக ஒப்பந்தத்தில் (TPP) இருந்து அமெரிக்காவை விலக்கிக் கொள்ளும் நிர்வாக உத்தரவு ஒன்றில் ட்ரம்ப் கையெழுத்திட்டார். அதேவேளையில், மெக்சிகோ மற்றும் கனடா உடனான NAFTA (வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்) ஒப்பந்தத்தை மறுபேச்சுவார்த்தைக்கு உட்படுத்துகின்ற தனது சூளுரையையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

இந்த நடவடிக்கைகள் “அமெரிக்க தொழிலாளிக்கு மிக மகிழ்ச்சிதருவதாக இருக்கும்” என்று அறிவித்த ட்ரம்ப் மற்ற நாடுகளது தொழிலாளர்களுக்கு ஆதாயமளிப்பதாக இருக்கின்ற “அநீதியான வர்த்தகம்” தான் தொழிற்சாலைகளது மூடலுக்கும் அமெரிக்க தொழிலாளர்களது ஊதியங்களின் வீழ்ச்சிக்கும் காரணம் —முதலாளித்துவமும் பெருநிறுவனங்களின் இலாபத்திற்கான இடைவிடாத துரத்தலும் இல்லையாம்— என்பதான கூற்றை மீண்டும் வலியுறுத்தினார்.

சாண்டர்ஸ் ட்ரம்ப்பை விரைந்து பாராட்டினார், பின்வருமாறு கூறினார், “கடந்த 30 ஆண்டுகளாய், வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், சீனா மற்றும் பிற நாடுகளுடன் நிரந்தரமாய் இயல்பான வர்த்தக உறவுகள் ஆகியவை உள்ளிட தொடர்ச்சியான பல வர்த்தக ஒப்பந்ந்தங்களில் நாம் பங்குபெற்று வந்திருக்கிறோம்; இவை கண்ணியமான ஊதியங்களை வழங்கக் கூடிய மில்லியன்கணக்கான வேலைகளை நமக்கு விலையாக வைத்ததோடு ‘கீழ்நோக்கிய ஒரு ஓட்ட”த்திற்கும் காரணமாகின, அமெரிக்கத் தொழிலாளர்களுக்கான ஊதியங்களை கீழிறக்கியிருக்கின்றன....

 “அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு உதவக் கூடிய ஒரு  புதிய கொள்கையை கொண்டுவருவதில் ஜனாதிபதி ட்ரம்ப் முழுமூச்சாக செயல்படவிருக்கிறார் என்றால், அவருடன் சேர்ந்து வேலைசெய்வது எனக்கு மகிழ்ச்சியான விடயமே.”

அமெரிக்கத் தொழிலாளியின் ஒரு நண்பராக தன்னைக் காட்டிக் கொள்ளுகின்ற பில்லியனர் வாய்வீச்சாளரின் முயற்சிகளை சாண்டர்ஸ் வழிமொழிவதானது, “அமெரிக்கா எல்லாவற்றுக்கும் மேல்” (“America Über Alles”) என்று சுருக்கமாய் விவரிக்கத்தக்க அடிப்படைக் கருப்பொருளைக் கொண்ட ஒரு பதவியேற்பு உரையை ட்ரம்ப் வழங்கியதற்கு மூன்று நாட்களுக்குப் பின்னர் வந்திருக்கிறது. “நமது நடுத்தர வர்க்கத்தின் செல்வம் அவர்களின் வீடுகளில் இருந்து பறிக்கப்பட்டு உலகெங்கிலும் மறுவிநியோகம் செய்யப்பட்ட” நிலையில் “மற்ற நாடுகளை செல்வ வளமாக்கிய” அரசியல்வாதிகளுக்கு எதிராக ட்ரம்ப் கோபம் கக்கினார். இப்போது முதல் “அமெரிக்காவுக்கான முழு விசுவாசம் என்பது தான் நமது அரசியலின் அடித்தளமாக இருக்கும்” என்று அவர் வலியுறுத்தினார்.

பரஸ்பர குரோத நலன்கள் கொண்ட சமூக வர்க்கங்கள் இல்லாத ஒரு ஐக்கியப்பட்ட தேசம் என்கிற கட்டுக்கதையானது, தொழிலாளர்களை தேசப் பதாகையின் கீழ் அவர்களது “சொந்த” முதலாளிகளுடன் கட்டிப் போடுவதன் மூலம், தொழிலாள வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்காய் எப்போதும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. கடந்த காலத்தில் போலவே, இன்றும், தேசிய ஐக்கியத்திற்கான கோரிக்கைகளும் அந்நியரச்சத்தின் ஊக்குவிப்பும் போர் மற்றும் சர்வாதிகாரத்தின் முன்நிகழ்வுகளாய் இருக்கின்றன.

பெருநிறுவனங்களுக்கு ஆதரவான வர்த்தக ஒப்பந்தங்களை ட்ரம்ப் விமர்சனம் செய்வதற்கும் அமெரிக்க தொழிலாளர்களின் நலன்கள் முன்னெடுக்கப்படுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதற்கு நேரெதிராய், இது அமெரிக்கத் தொழிலாளர்களை அவர்களது இயல்பான சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுக்கு, அதாவது மெக்சிகோ, சீனா மற்றும் உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களுக்கு, எதிராக நிறுத்துவதற்கான ஒரு பொறியாகும். உலகமயமாக்கப்பட்ட முதலாளித்துவமானது ஒரு பொதுவான உற்பத்தி நிகழ்முறையில் உலகின் அத்தனை பகுதிகளிலும் உள்ள தொழிலாளர்களையும் புறவயமாக ஒன்றுபடுத்தி -இதில் அவர்கள் ஒரே நாடுகடந்த பெருநிறுவனங்கள் மற்றும் வங்கிகளால் சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்- இருக்கிறது. எந்தவொரு நாட்டிலும் வேலைகள், ஊதியங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்தான எந்த ஒரு போராட்டமும், முதலாளித்துவத்திற்கு எதிராய் அனைத்து நாட்டின் தொழிலாளர்களையும் ஐக்கியப்படுத்துவதற்கான ஒரு மூலோபாயத்தின் மூலமாக அது வழிநடத்தப்படவில்லை என்றால், வெற்றிகாண இயலாது.

ட்ரம்ப்பின் பில்லியனர்கள், முன்னாள் இராணுவத் தளபதிகள் மற்றும் மிகவும் பிற்போக்குவாதிகள் கொண்ட அமைச்சரவையானது அவரது ஜனரஞ்சக தோற்றத்தின் பின்னால் இருக்கிற எதிர்ப்புரட்சிகர யதார்த்தத்தை அம்பலப்படுத்துகிறது. தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் சட்டங்கள் தொடங்கி, மெடிக்கேர், மெடிக்கேய்ட் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரையிலும் கடந்த நூற்றாண்டின் ஒவ்வொரு சமூக ஈட்டத்தையும் அழிப்பதை நோக்கி வெளிப்படையாக நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு அரசாங்கத்திற்கு சாண்டர்ஸ் நம்பகத்தன்மையை வழங்கிக் கொண்டிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலர் மற்றும் தாயகப் பாதுகாப்புச் செயலர் பதவிகளுக்கான ட்ரம்ப்பின் தேர்வுகளை ஏற்று சாண்டர்ஸ் வாக்களித்திருக்கிறார். ஓய்வுபெற்ற மரைன் தளபதி ஜேம்ஸ் “முறைத்த பார்வை” மாட்டிஸ் (பாதுகாப்புத் துறை) 2004 ஃபலூஜா முற்றுகையை வழிநடத்திய ஒரு போர்க் குற்றவாளி ஆவார். படுபயங்கர குவாண்டானாமோ விரிகுடா சிறை வளாகத்தை மேற்பார்வை செய்த ஓய்வுபெற்ற இராணுவத் தளபதி ஜோன் கெல்லி, மில்லியன்கணக்கான புலம்பெயர்ந்த மக்களை சுற்றிவளைத்து அவர்களை சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்புகிற பாதுகாப்புப் படைகளை மேற்பார்வை செய்ய இருக்கிறார்.

சென்ற ஜூலையில், சாண்டர்ஸ் ஜனநாயகக் கட்சியின் முதனிலைப் போட்டியில் இருந்து விலகி ஹிலாரி கிளிண்டனுக்கு தனது ஆதரவை அறிவித்த சமயத்தில், டொனால்டு ட்ரம்ப் தேர்வாகக் கூடியதைக் காட்டிலும் பயங்கரமான வேறொன்று இருக்க முடியாது என்றார். “பில்லியனர் வர்க்க”த்திற்கு எதிரான ஒரு “அரசியல் புரட்சி”யின் தலைவராகக் கூறிக் கொண்ட இவர், முதனிலைத் தேர்தலில் தனக்கு வாக்களித்திருந்த மில்லியன்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம், ட்ரம்ப்பைத் தேர்ந்தெடுப்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு பேரழிவாக இருக்குமென்பதால் வோல் ஸ்ட்ரீட்டின் மனதிற்குகந்த வேட்பாளருக்கு வாக்களிப்பதைத் தவிர்த்து அவர்களுக்கு வேறு தெரிவில்லை என்று கூறியிருந்தார்.

ஹிலாரி கிளிண்டனுக்கு சாண்டர்ஸ் ஆதரவளித்தமையானது ட்ரம்ப் “ஸ்தாபகத்திற்கு விரோதமான” ஒரேயொரு வேட்பாளராக தன்னை முன்நிறுத்திக் கொள்வதற்கும் இரண்டு பெரு வணிகக் கட்சிகளாலும் மேற்பார்வை செய்யப்பட்டு ஒபாமாவின் கீழ் வேகம் பெற்றிருந்த சமூக அசமத்துவத்தின் வளர்ச்சி தொடர்பான மக்களின் கோபத்தை சுரண்டிக் கொள்வதற்கும் களத்தைத் திறந்து விட்டது.

சாண்டர்ஸின் சரணாகதியென்பது அவரது சந்தர்ப்பவாத மற்றும் தேசியவாத அரசியலின் தர்க்கரீதியான விளைபயனாகும். அவரது வேலைத்திட்டம், சோசலிசத்தன்மை கூட வேண்டாம், ஒரு உண்மையான இடது-சாரி தன்மையைக் கூட ஒருபோதும் கொண்டிருந்தது கிடையாது. வோல் ஸ்டீரிட் மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் ஒரு கட்சியான ஜனநாயகக் கட்சிக்கான ஒரு பாதுகாப்பு வால்வாகவே அவர் பல தசாப்தங்களாய் செயல்பட்டு வந்திருந்தார்.

தொழிலாள வர்க்கத்தின் ஒரு உண்மையான இயக்கத்திற்கு எதிரான வகையிலும் அதனால் மிரட்சியடைந்தும், சாண்டர்ஸ், வர்க்கப் போராட்டத்தை ஒடுக்குவதற்கும் தொழிலாளர்களது வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான பெருநிறுவன-அரசாங்கத் தாக்குதலிலான தனது உடந்தையை நியாயப்படுத்துவதற்கும் பொருளாதார தேசியவாதத்தைப் பயன்படுத்துகின்ற, தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் தன்னை கூட்டுச் சேர்த்துக் கொண்டுள்ளார். ட்ரம்ப்பின் தேர்வுக்கு தொழிற்சங்கங்கள் அளித்த பதிலிறுப்பின் சிகரமாய், ஐக்கிய எஃகுத்தொழிலாளர் சங்க தலைவரான லியோ ஜெரார்டு TPP குறித்த ட்ரம்ப்பின் நடவடிக்கையைப் பாராட்டினார், ”உற்பத்தித் துறைக்கு புத்துயிரூட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கின்ற வாக்குறுதியளிக்கப்பட்ட, தொழிலாளர்-ஆதரவு, வருவாய்-வளர்ச்சி-ஆதரவு திட்டநிரலின்” தொடக்கமாக இது இருக்கும் என்று தான் நம்புவதாக அவர் தெரிவித்தார். “நடப்பு நிர்வாகத்துடன் இணைந்து வேலைசெய்வதை” தொழிற்சங்கங்கள் எதிர்நோக்கியிருப்பதாக அவர் மேலும் சேர்த்துக் கொண்டார்.

ஹிலாரி கிளிண்டன் தோற்றுவிட்ட உடனேயே, சாண்டர்ஸ், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் எலிசபத் வாரென் போன்ற “முற்போக்கு” ஜனநாயகக் கட்சியினர் ஒரு ஊழிக்காலம் குறித்த தங்களது முன்கணிப்புகளில் இருந்து பின்வாங்கி ட்ரம்ப்புடன் குலாவத் தொடங்கி விட்டனர்.

சாண்டர்ஸின் உதாரணம் அமெரிக்காவில் நடுத்தர வர்க்க “இடது” அரசியலின் தன்மை குறித்த ஒரு படிப்பினை ஆகும். இத்தகைய அரசியல் சந்தர்ப்பவாதம் அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் அமைப்புக்கு வெளியில் சிந்திக்கும் திறனற்றதாகும். ஒரு “கூட்டணி” குறித்து கோடுகாட்டும்போதே கோட்பாடான அரசியல் குறித்த எந்த நடிப்பும் கைவிடப்படுகிறது. அவர்களுக்கு ஒரேயொரு கண்டிப்பான விதி மட்டும் தான்: தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்திற்கான மார்க்சிஸ்டுகளின் போராட்டத்திற்கும் தொழிலாளர்களை சமூகத்தை புரட்சிகரமாக உருமாற்றுவதிலான அவர்களது முன்னிலைப் பாத்திரம் குறித்து நனவுடையவர்களாக்குவதற்கான போராட்டத்திற்கும் முழுமுதலான எதிர்ப்பு இருக்க வேண்டும்.

அமெரிக்காவிலும் மற்றும் உலகெங்கிலும் ட்ரம்ப்புக்கு எழுந்திருக்கக் கூடிய பாரிய எதிர்ப்பானது சமூக அசமத்துவம் மற்றும், பாசிசம் மற்றும் போர் அபாயம் ஆகியவை குறித்து எல்லைகள் கடந்த பொதுவான கவலைகளின் ஒரு வெளிப்பாடே ஆகும். அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் வர்க்கப் போராட்டம் வளர்ச்சி காண்பதன் ஏககாலத்தில் இது நிகழ்கிறது, ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் உலகளாவிய பொருளாதார நெருக்கடி மற்றும் போருக்கான மறுஆயுதபாணியாகல் ஆகியவற்றின் சுமைகளை தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளுக்கு மாற்ற முனைகின்ற நிலையில் இந்த வர்க்கப் போராட்டம் இன்னும் தீவிரம் அடையவிருக்கிறது.

இந்த எதிர்ப்பை, ட்ரம்புக்கு எதிராக மட்டுமல்லாமல் அவரை உருவாக்கிய முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிராகவுமான, ஒரு நனவான அரசியல் இயக்கமாக அபிவிருத்தி செய்வதற்கு சந்தர்ப்பவாத அரசியலின் அத்தனை வடிவங்களுடனும் ஒரு தீர்மானகரமான முறிவு அவசியமாக இருக்கிறது.

தொழிலாள வர்க்கத்திற்கான முன்னோக்கிய பாதை ஜனநாயகக் கட்சியை இடது நோக்கித் தள்ளுகிற அல்லது ஏதோ வகையான “இடது” தேசியவாத அரசியலை உருவாக்குவதற்கான நம்பிக்கையற்ற முயற்சியில் இல்லை. தேசியவாதம் மற்றும் பேரினவாதத்தின் அத்தனை வடிவங்களும் நிராகரிக்கப்பட வேண்டும், முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளில் இருந்தும் அரசியலில் இருந்தும் முற்றிலும் சுயாதீனப்பட்டும் அவற்றுக்கு எதிரான வகையிலும், ஒரு சர்வதேசியவாத மற்றும் சோசலிச வேலைத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன அரசியல் இயக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.