ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Obama's legacy of war, repression and inequality

ஒபாமா விட்டுச்செல்லும் போர், ஒடுக்குமுறை மற்றும் சமத்துவமின்மையின் மரபு

By Joseph Kishore
10 January 2017

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா “தேசத்திற்கு வழங்கவிருக்கும் விடைபெறும் உரை” இன்றிரவு நிகழவிருக்கும் நிலையில், அதற்கு முன்பாக, ஒபாமா விட்டுச்செல்லும் மரபு என்ற கருப்பொருளின் மீது ஊடகங்களின் ஒருமித்த கவனக்குவிப்பு வந்துசேர்ந்திருக்கிறது. ஜனாதிபதியை பிரமாதமான பிரசங்கியாக, முற்போக்கான சீர்திருத்தவாதியாக, தொலைநோக்கு சிந்தனையாளராக மற்றும் மக்களின் மனிதராக சித்தரிக்கின்ற கொஞ்சல் புகழுரைகளும் இதில் அடங்கும்.

ஒபாமாவின் ஜனாதிபதி பதவிக்காலம் குறித்த விபரிப்புக்கு கட்டமைப்பைக் கொடுக்கும் முயற்சியாக, நகைச்சுவை நடிகர்கள் எலென் டிஜெனெரஸ் மற்றும் ஜெர்ரி சீன்பீல்டு, நடிகர்கள் லியானார்டோ டிகாப்ரியோ மற்றும் டோம் ஹேங்க்ஸ், முன்னாள் கூடைப்பந்து நட்சத்திரமான மைக்கேல் ஜோர்டான் மற்றும் இன்னும் பல பிரபலங்கள் இடம் பெற்று “ஆம், நம்மால் முன்னேற்றத்தை உருவாக்க முடியும், என்பதை நிரூபிக்கின்ற வரலாற்றுத் தருணங்களை” வியந்து பாராட்டுகின்ற ஒரு காணொளியையும் வாரஇறுதியில் வெள்ளை மாளிகை வெளியிட்டிருந்தது. இத்தகைய அபத்தமான மற்றும் குமட்டலான உமிழ்வுகள் 44வது ஜனாதிபதியின் பண்புநலன்களுக்கோ அல்லது சாதனைகளுக்கோ சாட்சியமளிப்பதாக இல்லை, மாறாக அமெரிக்காவின் கலாச்சார ஸ்தாபகம் புத்திஜீவித்தனரீதியாகவும், அரசியல்ரீதியாகவும் மற்றும் தார்மீகரீதியாகவும் அடித்தளம் அரிக்கப்பட்டிருப்பதற்கே சாட்சியமளிப்பதாக இருக்கிறது.

ஒபாமாவுக்கும் ஜனநாயகக் கட்சியைச் சுற்றிய சலுகைகொண்ட சமூக அடுக்குகளுக்கும் வேண்டுமானால், தேன்சொட்டும் வார்த்தைகளையும் புத்திசாலித்தனமான விளம்பர உத்திகளையும் கொண்டு ஒரு மரபு உருவாக்கப்பட முடியுமாக இருக்கலாம். ஆனால் மில்லியன்கணக்கான மக்களோ நிர்வாகத்திற்கு அதன் நடவடிக்கைகளின் அடிப்படையிலேயே தீர்ப்பளிப்பர்.

ஒபாமாவின் வெள்ளை மாளிகையின் உண்மையான செயல்வரலாற்றினை விரிவாக எடுத்துரைப்பதற்கு இங்கே இருப்பதை விடவும் மிக அதிக இடம் தேவையாக இருக்கும். ஆயினும், கடந்த எட்டு ஆண்டுகளது எந்தவொரு புறநிலையான மதிப்பீடும் பின்வரும் கூறுகளைக் கொண்டதாய் இருக்கும்:

1. முடிவற்ற போர்

அமெரிக்க வரலாற்றில் இரண்டு பதவிக்காலம் முழுமையிலும் தேசத்தைப் போரில் ஈடுபடுத்தியிருந்த முதல் ஜனாதிபதியாக ஒபாமா இருக்கிறார். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் இடைவிடாத குருதிகொட்டல், லிபியா மீதான குண்டுவீச்சு, சிரியாவில் ஆறு ஆண்டுகால ஆட்சி-மாற்றப் போர், மற்றும் ஏமனில் சவுதி தலைமையிலான அழிப்புக்கான ஆதரவு ஆகியவையும் இதில் அடங்கும். 2016 இல், அமெரிக்க சிறப்பு நடவடிக்கை படையினர் 138 நாடுகளில், அல்லது உலகின் 70 சதவீத நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர் என சமீபத்திலான ஒரு ஆய்வு குறிப்பிட்டது.

புஷ்ஷின் கீழ் தொடங்கப்பட்டு ஒபாமாவின் கீழ் விரிவுபடுத்தப்பட்ட “21 ஆம் நூற்றாண்டின் போர்கள்” ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களைக் கொன்றிருப்பதோடு, மில்லியன் கணக்கான மக்களை அவர்களது வீடுகளில் இருந்து துரத்தி, இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிக மோசமான அகதிகள் நெருக்கடியை உருவாக்கியிருந்தன. ஒபாமாவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யானது தென்சீனக் கடல் தொடங்கி இந்தியா மற்றும் பாகிஸ்தான் வரையிலும் பதட்டங்களுக்கு எரியூட்டியிருக்கிறது. ஊடகங்களாலும் ஜனநாயகக் கட்சியாலும் ரஷ்ய-விரோத போர்வெறி தூண்டப்பட்டதன் மத்தியில் கிழக்கு ஐரோப்பாவில் நேட்டோ துருப்புகள் நிலைநிறுத்தப்பட்டு வருகின்ற நிலையில்தான் நடப்பு ஜனாதிபதி வெள்ளை மாளிகையை விட்டு அகலவிருக்கிறார்.

ஒபாமா “ஆளில்லா விமானத் தாக்குதல்” (drone) ஜனாதிபதியாக இருந்து, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கானோருடன் சேர்த்து, ஆளில்லாத வான் வாகனங்கள் மூலமாக பாகிஸ்தான், ஏமன், சோமாலியா மற்றும் லிபியாவில் சுமார் 3,000 பேர் கொல்லப்படுவதை மேற்பார்வை செய்திருக்கிறார்.

2. ஜனநாயக உரிமைகள்

ஆளில்லா விமானத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் குறைந்தபட்சம் மூன்று பேர் அமெரிக்கக் குடிமக்கள் ஆவர். முறையான வழிமுறைகள் இல்லாமலேயே அமெரிக்கக் குடிமக்கள் உள்ளிட்ட எவரொருவரையும் படுகொலை செய்வதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் இருப்பதாக 2011 இல் ஒபாமா நிர்வாகம் அறிவித்தமையானது, முன்னாள் அரசியல்சட்ட பேராசிரியர் அடிப்படை ஜனநாயகக் கோட்பாடுகளுக்குக் கொண்டிருக்கிற மனோபாவத்தை சுருங்கக் கூறுவதாய் இருக்கிறது.

ஒபாமா அவர் பதவியேற்ற நாளில் மூட வாக்குறுதியளித்த குவாண்டனாமோ விரிகுடாவிலுள்ள அமெரிக்க சிறை மற்றும் சித்திரவதை மையம் இன்னும் திறந்துதான் இருக்கிறது. ஈராக்கில் போர்க் குற்றங்களை துணிச்சலுடன் அம்பலப்படுத்திய செல்ஸியா மானிங், கான்சாஸ், Fort Leavenworth இல் 35- ஆண்டுகால சிறைத்தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் என்பதுடன் முந்தைய நிர்வாகங்கள் அனைத்தும் செய்ததன் கூட்டு எண்ணிக்கையை விடவும் அதிகமான எண்ணிக்கையில் விழிப்பூட்டிகள் மீது ஒபாமாவின் வெள்ளை மாளிகை வழக்குத் தொடுத்திருக்கிறது. வழக்குவிசாரணை அல்லது அதனினும் மோசமான அச்சுறுத்தலின் கீழ் எட்வார்ட் ஸ்னோவ்டென் ரஷ்யாவில் நாடுகடந்து வாழத் தள்ளப்பட்டார்; விக்கிலீக்ஸின் ஸ்தாபகரான ஜூலியன் அசாஞ்ச் தொடர்ந்தும் லண்டனில் உள்ள ஈக்குவடோர் தூதரகத்தில் சிறைப்பட்டவராய் இருக்கிறார்.

ஸ்னோவ்டெனால் அம்பலப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு முகமையின் பாரிய வேவுத் திட்டங்கள் தொடர்ந்தும் இயங்குகின்றன என்பதுடன், இந்த தெளிந்த சட்டவிரோத மற்றும் அரசியல்சட்டவிரோத நடவடிக்கைக்காக ஒரேயொரு மனிதரும் கூட விசாரணைக்குட்படுத்தப்படவில்லை. “முன்நோக்கிப் பார்ப்பதே அவசியம், பின்நோக்கி பார்ப்பதல்ல” என்று பிரகடனம் செய்து, சித்திரவதையை ஸ்தாபகமயமாக்கிய புஷ் நிர்வாகத்தின் அதிகாரிகளுக்கு ஒபாமா பச்சைக்கொடி காட்டியிருந்தார் என்பதோடு, அவர்களில், இப்போதைய சிஐஏ இயக்குநரான ஜான் பிரெனன் உள்ளிட்ட சிலருக்கு, ஒபாமா நிர்வாகத்தில் தலைமைப் பதவிகள் கிடைப்பதும் கூட இயன்றிருந்தது.

போலிஸ் துறைகளின் இராணுவமயமாக்கத்தை ஒபாமா விரிவுபடுத்தி வந்திருக்கிறார் என்பதுடன் அரசியல்சட்டத்தை மீறிய வகையிலான போலிஸின் துஷ்பிரயோகத்தை உறுதிசெய்ய வேண்டும் என நீதிமன்றத்திலும் தலையீடு செய்திருக்கிறார்.

3. சமூக சமத்துவமின்மை

2008 பொருளாதார நெருக்கடிக்கு உடனடிப் பிந்தைய காலத்தில் ஒபாமா பதவிக்கு வந்திருந்தார், நிதிப் பிரபுத்துவத்தின் செல்வத்தை மீட்டெடுப்பது தான் அவரது நிர்வாகத்தின் கவனக்குவிப்பு மையமாக இருந்திருக்கிறது. சந்தைப்பங்குகளின் மதிப்புகள் 2009 மார்ச்சில் (அவர் பதவியேற்ற இரண்டு மாதங்களின் பின்னர்) மிகத் தாழ்ந்த புள்ளியில் இருந்ததில் இருந்து -அமெரிக்க பெடரல் ரிசர்வின் “பண இறைப்பு” கொள்கைகளால் எரியூட்டப்பட்டு- மும்மடங்குக்கும் அதிகமாய் உயர்வு கண்டிருக்கின்றன, ஊகவணிகத்தின் இந்த புதிய களியாட்டத்தில் தலைமையில் இருக்கும் ஒரு சதவீதத்தினர்தான் மிகப்பெரும்பான்மையான ஆதாயதாரர்களாய் இருந்திருக்கின்றனர். பெருநிறுவனங்களின் காலாண்டு கூட்டு இலாபங்கள் 2008 இன் முடிவில் 671 பில்லியன் டாலர்களாய் இருந்ததில் இருந்து 2016 இல் 1.636 டிரில்லியன் டாலர்களாய் உயர்ந்தன, மேலிருக்கும் 400 செல்வந்த அமெரிக்கர்களது சொத்துமதிப்பு 1.57 டிரில்லியன் டாலர்களில் இருந்து 2.4 டிரில்லியன் டாலர்களுக்கு உயர்ந்தது.

இன்னொரு முனையில், ஒபாமா நிர்வாகத்தின் எட்டு ஆண்டுகளானவை ஊதியங்களில் வீழ்ச்சியையும், வாழ்க்கைச் செலவினங்களில் அதிகரிப்பையும், கடன் அதிகரிப்பையும் உருவாக்கியுள்ளன. ஒபாமா நிர்வாகத்தின் “மீட்சி” காலத்தின் போது அதிகரிக்கப்பட்ட வேலைகளில் கிட்டத்தட்ட 95 சதவீத வேலைகள் தற்காலிகமானவையாக அல்லது பகுதி-நேர வேலைகளாக இருந்தன என்று ஹார்வர்ட் அண்ட் பிரின்ஸ்டன் நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது, தற்காலிக வேலைகளில் தொழிலாளர்களது பங்களிப்பு 10.7 சதவீதமாக இருந்ததில் இருந்து 15.8 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஒபாமா தனது நிர்வாகத்தின் ஆரம்பத்தில் வாகன உற்பத்தி நிறுவனங்களின் திவால்நிலைக்குத் தலைமைதாங்கினார் (அத்தனை அடுக்குகளிலும் புதிய ஆளெடுப்புகளுக்கு 50 சதவீத ஊதியவெட்டுகளை திணித்தார்). டெட்ராயிட்டின் திவால்நிலைக்கு ஆதரவளித்து நகரத் தொழிலாளர்களின் ஓய்வூதியங்களை வெட்டினார். கல்விச் ”சீர்திருத்தம்” என்ற பேரில், அரசாங்கப் பள்ளிகள் அலைபோல் மூடப்படுவதையும் ஆசிரியர்கள் மீதான தாக்குதல்களையும் அவர் மேற்பார்வை செய்தார், நூறாயிரக்கணக்கிலான ஆசிரியர்கள் வேலையிழந்தனர்.

ஒபாமாவின் உள்நாட்டிலான பிரதான முன்முயற்சியான கட்டுபடியாகும் பராமரிப்புச் சட்டத்தைப் பொறுத்தவரை, ஆரோக்கியப் பராமரிப்புச் செலவுகளை பெருநிறுவனங்கள் மற்றும் அரசிடம் இருந்து தனிநபர்களுக்கு மாற்றுவதே அதன் நோக்கமாகவும் விளைபயனாகவும் இருந்தது, பெருநிறுவனங்கள் காப்பீட்டு கவரேஜை வெட்டின, மட்டமான பராமரிப்புக்கு எக்கச்சக்கமான விலைசெலுத்த தொழிலாளர்கள் தள்ளப்பட்டனர். இதன் பின்விளைவுகளை ஒரு புள்ளிவிபரம் சுருங்க எடுத்துவைக்கிறது: எய்ட்ஸ் தொற்று உச்சத்தில் இருந்த 1993க்குப் பின்பு முதன்முறையாக, 2014 க்கும் 2015க்கும் இடையிலான காலத்தில், மிதமிஞ்சிய மருந்து உடகொள்ளல்கள், தற்கொலைகள் மற்றும் சமூக துயரத்தின் பிற வெளிப்பாடுகள் மூலம் வயதுவந்தோர் மரணிப்பதிலான அதிகரிப்பின் காரணத்தால், அமெரிக்காவில் எதிர்பார்ப்பு சராசரி ஆயுள்காலம் வீழ்ச்சி கண்டிருந்தது.

இன்னும் இரண்டு புள்ளிவிபரங்களைக் குறிப்பிடவில்லை என்றால் ஒபாமாவின் மரபு குறித்த எந்த கணக்கும் முழுமையடையாது. 2009க்குப் பின்பு, சுமார் 10,000 பேர் அமெரிக்க போலிசால் கொல்லப்பட்டிருக்கிறார்கள், வரலாற்றில் வேறெந்த நிர்வாகத்தை விடவும் அதிகமாய் சுமார் மூன்று மில்லியன் புலம்பெயர்ந்தவர்களை ஒபாமா நிர்வாகம் நாட்டிலிருந்து திருப்பி அனுப்பியிருக்கிறது.

இதுதான் ஒபாமா என்ற மனிதர். இதில் மிகவும் அதிர்ச்சியளிப்பதாய் இருப்பது ஒபாமாவின் வெற்றுத்தனம். 2004 ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்தெரிவு மாநாட்டில் அவர் வழங்கிய முக்கிய உரை முதலாக, ஊடகங்கள் அவரை மிகப் பெரும் பிரசங்கியாக பாராட்டி வந்திருக்கின்றன. ஆயினும், கூட்டரசாங்க மட்டத்தில் அரசியல் பதவிகளில் அவர் இருந்திருந்த இந்த 12 ஆண்டு காலத்தில், -வெள்ளை மாளிகையில் அவர் இருந்த எட்டு ஆண்டுகளும் இதில் அடக்கம்- அவரது பேச்சு அல்லது நேர்காணலில் இருந்து நினைவுகூரத்தக்கதாக ஒரேயொரு வாக்கியத்தையும் கூட ஒபாமா விட்டுச்செல்லவில்லை.

“ஆண்டின் சிறந்த விளம்பரத்திறன்மனிதர்” என்று பெயரிடப்பட்டு பதவிக்கு வந்திருந்த ஒபாமா குறித்த ஒவ்வொன்றுமே போலியானதாகவும் திட்டம்தீட்டி பரப்பப்பட்டவையாகவும் இருக்கின்றன. உணர்ச்சியின்மை, ஒரு விசித்திரமான ஒதுங்கல், பண்புநலன்களற்ற ஒரு மனிதர் ஆகியவை தான் அவர் சீராய் வெளிப்படுத்துகின்ற ஒரே விடயம் ஆகும்.

ஆளுமையானது செயல்பாட்டுடன் தொடர்புடையது. வேறெதனையும் விட அதிகமாய், ஒபாமா, உளவு முகமைகளின் ஜனாதிபதியாக இருந்திருக்கிறார். அவரது அரசியல் உறுதிப்பாடுகள் சிஐஏவின் விவரிப்புப் புத்தகங்களைத் தாண்டி நீண்டிச் சென்றதாகத் தெரியவில்லை. பின்புலத்தை இன்னும் கூர்ந்து கவனிக்கத் தலைப்படுபவர்களுக்கு, அவரை வெள்ளைமாளிகைக்கு சில கரங்கள் வழிநடத்திச் சென்றன என்பது எப்போதுமே தென்பட்டு வந்திருக்கிறது. ஆளும் வர்க்கத்தை பொறுத்தவரை, தனிமனித ஆளுமையிலும் நிர்வாகத்திலும் வோல் ஸ்ட்ரீட் மற்றும் இராணுவ-உளவு எந்திரத்தின் முற்றுமுதலான மேலாதிக்கத்துடனான அடையாள அரசியலை ஒன்றுகலப்பது தான் ஒபாமா செய்ய வேண்டியிருந்த குறிப்பான செயல்பாடாக இருந்தது.

ஜனநாயகக் கட்சியைச் சூழ்ந்திருந்த ஓரளவுக்கு தாராளவாத அமைப்புகளும் மற்றும் உயர்-நடுத்தர வர்க்கத்து போலி-இடது அமைப்புகளும், ஒரு ஆபிரிக்க-அமெரிக்கர் ஜனாதிபதியாவதை தங்களின் எதிர்ப்பு நடிப்புகளைக் கைவிடுவதற்கான ஒரு சந்தர்ப்பமாகப் பிடித்துக் கொண்டு, அவரது தேர்ந்தெடுப்பை ஒரு “உருமாற்ற” நிகழ்வாக புகழ்ந்து தள்ளினர். ஆயினும், தீர்மானகரமான சமூக வகைப்பாடு வர்க்கம் தானே தவிர, நிறம் அல்ல, என்பதையே அவரது பதவிக்காலம் எடுத்துக்காட்டியிருக்கிறது.

ஒபாமாவின் “முற்போக்கு” மரபு குறித்த வருணனைகள் அனைத்துக்கும் மத்தியில், ஒபாமாவின் எட்டுஆண்டுகால வெள்ளை மாளிகை வாசம் டொனால்ட் ட்ரம்ப் தேர்வாவதற்கு வழியமைத்தது எப்படி என்பதை விளக்கும் திறன் யாருக்கும் இருப்பதாகத் தெரியவில்லை. ஒட்டுமொத்த அரசியல் ஸ்தாபகத்தின் மீதும் பொதுவாய் பிரமைவிலகியதான உணர்வு நிலவியதற்கு மத்தியில் சமூக வாழ்வின் கடும் நிதர்சனங்களும், பரவலான கோபம் மற்றும் ஏமாற்றமும் ஜனநாயகக் கட்சியின் வாக்குகளது ஒரு பொறிவுக்கு இட்டுச் சென்றது.

ஆளும் வர்க்கத்தின் இரண்டு வலது-சாரி கன்னைகளுக்கு இடையேயான ஒரு மூர்க்கமான மோதலை ஒபாமா இப்போது உலகத்திடம் விட்டுச் செல்கிறார்: சிலவராட்சியின் ஒரு எதேச்சாதிகார மற்றும் இராணுவவாத அரசாங்கத்திற்குத் தயாரிப்பு செய்து கொண்டிருக்கும் ட்ரம்ப் நிர்வாகம் ஒருபக்கமும், ரஷ்யாவுக்கு எதிரான தமது போர் தயாரிப்புகளைத் தொடர்ந்து முன்னெடுக்க இப்போதைக்கு அவர் தயங்குகிறார் என்பதில் ஆவேசம் கொள்ளுகின்ற அதன் விமர்சகர்கள் எதிர்ப்பக்கமும் நிற்கின்றனர்.

ஒபாமா நிர்வாகத்தின் செயல்வரலாறும் தனிமனிதராக அவரது பண்புநலன்களும், இறுதியில், கூரான சமூகப் பதட்டங்களது ஒரு கொதிகலனுக்கு மேலே எந்த பரந்த ஆதரவுத் தளமும் இல்லாமல் ஒரு இறுகிப் போன மற்றும் பிற்போக்குத்தனமான அரசியல் ஸ்தாபகமாக நின்று கொண்டிருக்கக் கூடிய அமெரிக்க அரசியலின் கட்டமைப்பையே எடுத்துக்கூறக்கூடியவையாக உள்ளன. அமெரிக்க முதலாளித்துவத்தின் நெருக்கடி ஆழமடைந்து செல்வதும் சமூக மற்றும் புரட்சிகரப் போராட்டங்களின் ஒரு புதிய காலகட்டம் எழுச்சி காண்பதும் தான் ஒபாமா விட்டுச் செல்கின்ற உண்மையான மரபாகும்.