ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The lying campaign on Russian hacking

ரஷ்ய ஊடுருவல் தொடர்பான பொய் பிரச்சாரம்

By Andre Damon
31 December 2016

விளாடிமிர் புட்டின் அரசாங்கம் நடத்தியதாகக் கூறப்படும் இணையவழி தாக்குதல்களுக்கான பதிலடியாகக் கூறி ரஷ்யாவை குறிவைத்தான ஒரு வரிசையான நடவடிக்கைகளை வியாழக்கிழமையன்று அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா அறிவித்தார். 35 ரஷ்யத் தூதர்களை வெளியேற்றுவது மற்றும் ரஷ்யாவின் உளவு முகமைகள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை திணிப்பது ஆகியவையும் இதில் அடங்கும்.

ியூ யோர்க் டைம்ஸ் தலைமையில் ஊடகங்கள் இந்த நடவடிக்கைகளை பாராட்டின, ”அமெரிக்க கணினிகள் மீதான ஊடுருவல் தாக்குதல்களுக்கும் 2016 ஜனாதிபதி தேர்தலில் செல்வாக்கு செலுத்த முயன்றதற்காகவும் ரஷ்யாவுக்கு எதிராக பதிலடி கொடுக்க ஜனாதிபதி ஒபாமா முடிவெடுத்தமை சரியானது என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது” என்று ஒரு முன்னிலை தலையங்கத்தில் டைம்ஸ் அறிவித்தது.

ரஷ்யாவுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் வைக்கும் இதே அரசாங்கம் தான் உலகின் மிகப்பெரும் ஊடுருவல் மற்றும் இணையவேவு திட்டத்தை இயக்கிக் கொண்டிருக்கிறது என்பதையும், அதன் நோக்கம், எட்வார்ட் ஸ்னோவ்டென் வெளியிட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டவாறாக, “அத்தனையையும் சேகரி...அத்தனையையும் சுரண்டிக் கொள்” என்ற பதாகையின் கீழ் உலகின் அத்தனை தகவல்களையும் சேகரிப்பது அல்லது ஊடுருவல் செய்வதாக இருந்தது என்பதையும் குறிப்பிட வேண்டும் என்று அமெரிக்க ஊடகங்களுக்கு தோன்றியிருக்கவில்லை.

இந்த அரசாங்கம் தான், இஸ்ரேலுடன் சேர்ந்து, ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்கான Stuxnet worm ஐ உருவாக்கி வெளியிட்டது, ஜேர்மன் சான்சலர் அங்கேலா மேர்க்கெலின் தொலைபேசியை ஒட்டுக்கேட்டதாக அம்பலத்துக்கு வந்தது, அத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் இணைய தொடர்பை வேவு பார்த்தது. பிற நாடுகளது தேர்தல்களில் “செல்வாக்கு செலுத்துகின்ற” விடயத்தைப் பொறுத்த வரை, உலகெங்கிலும் அரசியல் நிகழ்வுகளில் புரட்டுவேலைகள் செய்வதற்கும், தேர்தல்களை கதைமாற்றுவதற்கும் அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை தூக்கிவீசுவதற்கும் அமெரிக்கா மற்றும் அதன் உளவு முகமைகள் நடத்திய இரகசிய நடவடிக்கைகளது ஒரு வரலாறை எடுத்தால் அது பல தொகுதிகள் நீளக்கூடியதாக இருக்கும்.

வேறெந்த நாட்டையும் போலவே, ரஷ்யாவும், இணையத்தில் வேவு வேலைகளில் ஈடுபடுகிறது என்று சந்தேகிப்பதற்கு பெரும் கற்பனாசக்தியெல்லாம் அவசியமில்லை. ஆனால் இங்கே, ஜனநாயகக் கட்சியின் தேசியக் கமிட்டிக்குள் ரஷ்யா ஊடுருவல் செய்தது என்று கூறப்படுகின்ற குற்றச்சாட்டுகள் முகாந்திரமற்றவையாக இருக்கின்றன.

தகவல்தொடர்பு தொழில்நுட்பம் குறித்த அடிப்படை அறிவு கொண்ட ஒரு பாரபட்சமற்ற மனிதரை, அமெரிக்கா மீது ரஷ்யா ஒரு பெரும் இணையவழித் தாக்குதல் நடத்தியதான முடிவுக்கு வரச் செய்யக் கூடிய வகையிலான எந்த ஒரு விபரத்தையும் வெள்ளை மாளிகையோ, அமெரிக்க உளவு முகமைகளோ, ஊடகங்களோ அல்லது எந்த தனியார் பாதுகாப்பு நிறுவனமோ முன்வைத்திருக்கவில்லை.

ரஷ்யாவுக்கு எதிரான தனது நடவடிக்கைகளை அறிவித்த அறிக்கையில் ஒபாமா பின்வருமாறு அறிவித்திருந்தார்: “அமெரிக்க தேர்தல் நடைமுறையில் தலையீடு செய்யும் நோக்கத்துடனான நடவடிக்கைகளை ரஷ்யா எடுத்திருந்தது என்ற எங்களது மதிப்பீட்டை அக்டோபரில் எனது நிர்வாகம் பகிரங்கமாக்கியது.”

அக்டோபர் 7 அன்று தேசிய உளவுப் பிரிவு இயக்குநரான ஜேம்ஸ் கிளாப்பர், “அமெரிக்க அரசியல் ஸ்தாபகங்கள் உள்ளிட அமெரிக்க மனிதர்கள் மற்றும் ஸ்தாபகங்களிடம் இருந்தான மின்னஞ்சல்கள் சமீபத்தில் ஊடுருவப்பட்டதை ரஷ்யா தான் இயக்கியிருந்தது என்பதை உளவு சமூகம்...உறுதியாக நம்புகிறது” என்று வெளியிட்டிருந்த ஒரு அறிக்கையை தான் ஒபாமா, திட்டமிட்டு தெளிவற்ற வகையில், குறிப்பிட்டார்.

ஜனநாயகக் கட்சியின் தேசியக் கமிட்டியானது ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் பேர்னி சாண்டர்ஸை பலவீனப்படுத்தி ஹிலாரி கிளிண்டன் வெற்றிபெறுவதை உறுதிசெய்வதற்காக முதனிலைத் தேர்தல் நிகழ்முறையில் முறைகேடு செய்தது என்று விக்கிலீக்ஸ் வெளியிட்ட அம்பலப்படுத்தல்களை மதிப்பிழக்கச் செய்வதே, நவம்பர் தேர்தலுக்கு முன்வந்த காலத்தில் கிளாப்பர் விடுத்த இந்த அறிக்கையின் நோக்கமாக அப்போது இருந்திருந்தது.

வெறும் மூன்று பத்திகள் நீளம் மட்டும் இருந்த கிளாப்பரின் இந்த அறிக்கையானது, இந்த விடயத்தில் வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் போலவே, அதன் பொதுப்பட்ட தன்மை மற்றும் குறிப்பான விவரங்கள் இன்மை ஆகிய குணாம்சங்களைக் கொண்டிருந்தது. “நம்புகின்றது” என்ற வார்த்தையை அது பயன்படுத்தியிருப்பது மிகவும் முக்கியமானதாகும், ஏனென்றால் இது “நிச்சயமாக” என்ற வார்த்தையை விடவும் சற்று உறுதி குறைந்ததாக இருப்பதைக் குறிக்கிறது.

வியாழக்கிழமையன்று ஒபாமாவின் அறிக்கையின் அதேகாலத்தில், கிளாப்பரின் தேசிய உளவு இயக்குநர் அலுவலகம் 2016 தேர்தலில் ரஷ்ய ஊடுருவல் குற்றச்சாட்டு குறித்த ஒரு அறிக்கையை வெளியிட்டது.

இரகசிய தகவல்களை அணுகுவதற்கு முயற்சிகள் நடந்ததாக எந்த குறிப்பான குற்றச்சாட்டுகளோ அல்லது குறைந்தபட்ச ஆதாரங்களோ அந்த ஆவணத்தில் இல்லை. ஆவணத்தின் உள்ளடக்கம் மிகவும் பற்றாக்குறையாக இருந்ததைக் கொண்டு பார்க்கும்போது, இந்த அறிக்கை நழுவலான முடிவுக்கு வந்திருப்பதில் ஆச்சரியமில்லை, அது அறிவிக்கிறது, “ஏராளமான பாதுகாப்பு நிறுவனங்களால் விவரிக்கப்படுகின்ற நடவடிக்கைகள் பலவற்றிலும் ரஷ்யாவின் குடிமை மற்றும் இராணுவ உளவு சேவைகள் உள்ளிட ரஷ்ய அரசாங்கம் ஈடுபட்டிருந்தது என்பதை அமெரிக்க அரசாங்கம் ஊர்ஜிதப்படுத்த முடியும்.”

அறிக்கையில் இருந்த ஆதாரம் “தேர்தலில் தலையீடு செய்வதற்கான ஒரு திட்டத்துடன்...GRU அல்லது FSB (ரஷ்ய உளவு முகமைகள்) இன் மூத்த அதிகாரிகளை நேரடியாக தொடர்புபடுத்தும் வகையிலான எந்த ஒன்றுக்கும் நெருங்கி வராததாக இருந்தது” என்று நியூ யோர்க் டைம்ஸின் முன்பக்கக் கட்டுரை ஒன்று வெள்ளிக்கிழமை சுட்டிக் காட்டத் தள்ளப்படும் அளவுக்கு கிளாப்பர் வெளியிட்ட ஆவணத்தில் இருந்த உண்மைகள் மிகவும் பலவீனமானவையாக இருந்தன.

அப்படியானால், எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், நியூ யோர்க் டைம்ஸ் ஏன், "விதிவிலக்காக தண்டனை பெறாமலேயே அமெரிக்க ஜனநாயகத்திற்கு குழி பறிக்க முடியும் என்று ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கருத அனுமதித்து, அடுத்த மாதம் ஒபாமா பதவியிலிருந்து அகல்வது என்பது பொறுப்பற்ற செயலாக இருக்கும்”என்று அறிவிக்கிறது.

இத்தகைய பதிலடிக்கு நியாயமான எந்த உண்மைகளும் அங்கே இருக்கவில்லை என்பதிலெல்லாம் “ஆவணபூர்வ செய்தித்தாளுக்கு” எந்த அக்கறையுமில்லை. அதற்கு காரணம், இதுவும் அமெரிக்க ஊடகங்களின் எஞ்சியவற்றைப் போலவே, அமெரிக்க அரசாங்கத்தின் போலியான திட்டவட்டங்களை கேள்வி கேட்பதற்கோ அல்லது சோதித்துப் பார்ப்பதற்கோ செயலாற்றவில்லை, மாறாக அவற்றை பரப்புவதற்கே செயலாற்றுகிறது.

2003 இல் ஈராக்கில் போர் தொடுப்பதற்காக, புஷ் நிர்வாகம் “பேரழிவு ஆயுதங்கள்” என்ற மோசடியான கூற்றுகளை முன்வைத்ததின் எதிரொலிகளை இப்போதைய பிரச்சாரத்தில் காணமுடிகிறது. இப்போது போலவே, அப்போதும், டைம்ஸும் மற்ற பத்திரிகைகளும் நிர்வாகத்தின் பொய்களை திருப்பி திருப்பிக் கூறின மற்றும் ஊதிப் பெருக்கின என்பதுடன் நில்லாமல், போரை நியாயப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் பரப்புரை முயற்சியின் பகுதியாக நிகழ்வுகளின் ஒரு பொய்யான விவரிப்பை செயலூக்கத்துடன் அபிவிருத்தி செய்தன.

வெள்ளை மாளிகை மற்றும் நியூ யோர்க் டைம்ஸால் முன்னெடுக்கப்பட்டு வந்த ரஷ்ய-விரோதப் பிரச்சாரத்தின் -சிரியாவில் அமெரிக்க ஆதரவு ஆட்சி-மாற்ற முயற்சி நிலைகுலைந்ததில் இது மேலும் தீவிரப்பட்டிருக்கிறது- ஒரு நீட்சியின் பகுதியாகவே ஒபாமாவின் சமீபத்திய செயல்பாடுகள் இருக்கின்றன.

அமெரிக்க இராணுவ மூர்க்கத்தனத்தின் குறி குறித்து அமெரிக்க அரசுக்குள்ளாக கணிசமான பிளவுகள் நிலவும் பொருட்சூழலில் இந்த பிரச்சாரம் நடைபெறுகிறது. நியூ யோர்க் டைம்ஸ் எந்த கன்னைக்காக பேசுகிறதோ அந்த கன்னையானது ரஷ்யாவுக்கு எதிராக ஒரு மிக நேரடியான தலையீட்டை எதிர்நோக்குகிறது, அதேவேளையில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் அரசில் அவர் நிற்கின்ற பக்கத்தை சேர்ந்த கன்னையும் ரஷ்யாவுடனான மோதலை உண்மையான எதிரியான சீனாவில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் விடயமாகப் பார்க்கின்றன.

இவ்விடயத்தில், ட்ரம்ப் நிர்வாகத்தை ரஷ்யாவுடனான ஒரு மோதலுக்கு இட்டுச் செல்லும் வண்ணம் பதவியை விட்டு அகலும் முன்பாக புதிய “கள உண்மைகளை” உருவாக்கி விட்டுச் செல்வதற்கு ஒபாமாவின் நிர்வாகம் முனைந்து கொண்டிருக்கிறது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில், ரஷ்ய எல்லையில் 4,000 அமெரிக்க/நேட்டோ துருப்புகள் நிலைநிறுத்தப்படுவதை துரிதப்படுத்துவதாக வெள்ளை மாளிகை அறிவித்தது, புதிய நிர்வாகம் பதவியேற்பதற்குள்ளாக அவர்கள் நிலைநிறுத்தப்பட்டிருப்பார்கள் என்பதே இதன் பொருளாகும்.

இந்த இராணுவ பெருக்கத்தின் பக்கவாட்டில் வெள்ளை மாளிகையும், டைம்ஸும் மற்றும் அமெரிக்க ஊடகங்களின் பெரும் பகுதிகளும் 1940கள் மற்றும் 1950களது தொடக்கத்திற்கு பிந்தைய காலத்தின் மிகவும் வெறித்தனமான ரஷ்ய விரோதப் பிரச்சாரத்தை, அக்காலகட்டத்தின் மெக்கார்த்திய சூழ்ச்சி வேட்டைகளது நாற்றம் வெளிப்பட விசிறி விட முனைந்து வருகின்றன. வரவிருக்கும் நிர்வாகமானது “ரஷ்யா விடயத்தில் மென்மையாக நடந்து கொள்ளக் கூடாது” என்பதை உறுதி செய்வது தான், ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான்கு நாட்களுக்குப் பின்னர் ஒரு தலையங்க வார்த்தைகளில் வெளிப்படுத்தியதைப் போல, டைம்ஸின் பிரதான கவலையாக இருக்கிறது.