ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

වැටුප් අරගලයේ යෙදී සිටින හලාවත පොල්වතු කම්කරුවෝ ලෝසවෙඅ ට කතා කරති

இலங்கை: சம்பளப் போராட்டத்தில் ஈடுபட்ட சிலாபம் தென்னத் தோட்டத் தொழிலாளர்கள் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசினர்

By our correspondent 
26 October 2016

இலங்கை வடமேல் மாகாணத்தின் சிலாபம் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான தென்னந் தோட்டங்களில் வேலை செய்யும் தோட்டத் தொழிலாளர்கள் கடந்த பல மாதங்களாக சம்பள அதிகரிப்பை கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த செப்டெம்பர் 21 முதல் அக்கூட்டுத் தாபனத்துக்கு உரிய காரியாலய ஊழியர்கள், பகுதி நேர அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் உட்பட்ட 150 பேர், அரசாங்கத் துறை ஊழியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 10,000 ரூபா சம்பள உயர்வை தமக்கும் வழங்குமாறு கோரி சிலாபம் பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்துக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

தனியார் துறையினருக்கு வழங்குவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 2,500 சம்பள உயர்வைத் தருமாறு கோரி, நாள் சம்பளம் பெறும் 500 தோட்டத் தொழிலாளர்களும் கடந்த மே மாதத்தில் இருந்து இவ்வாறு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தென்னந்தோட்டத் தொழிலாளர்களின் இந்த பிரச்சாரமானது, தமது நாளாந்த ஊதியத்தை 1,000 ரூபாய் வரை உயர்த்துமாறு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்துக்கு சமாந்தரமாக இடம்பெற்றது.

தென்னந் தோட்டத் தொழிலாளர்களது சம்பளப் போராட்டத்தை, முதலாளித்துவ தாக்குதல்களுக்கு எதிராக ஏனைய தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் விவசாயிகளதும் நாளுக்கு நாள் வளரும் போராட்டத்துடன் இணைத்து, அரசாங்கத்துக்கும் முதலாளித்துவ அமைப்புக்கும் எதிரான ஒரு அரசியல் போராட்டமாக அபிவிருத்தி செய்வதற்கு எதிராக, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சுதந்திர தொழிலாளர் சங்கமும், மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பீ.) அனைத்து கூட்டுத்தாபன ஊழியர் சங்கமும் செயற்படுகின்றன. அரசாங்கத்துடனும் கம்பனியுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதன் ஊடாக, சம்பளத்தை அதிகரித்துக்கொள்ளலாம் என்ற மாயையில் தொழிலாளர்களை சிறைப்படுத்தி வைக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சங்கங்கள் முன்னர் கம்பனியுடன் கையெழுத்திட்டுள்ள கூட்டு ஒப்பந்தத்தின் காரணமாகவும், ஆட்சியில் இருந்த சகல அரசாங்கங்களால் தமது தொழில் மற்றும் வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக தொடுக்கப்படும் தாக்குதல்கள் காரணமாகவும், தொழிற்சங்கங்கள் மற்றும் ஸ்தாபன அரசியல் கட்சிகள் தொடர்பாக தேயிலைத் தோட்ட தொழிலாளர் மத்தியில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற வெறுப்பும் கசப்புமே தென்னந் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியிலும் காணப்படுகின்றது.

பிரச்சாரத்தின் பின்னர், இந்த தென்னந்தோட்ட தொழிலாளர்களது நாளாந்த சம்பளம் வேலை செய்யும் நாட்களில் மட்டும் 100 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அற்ப அதிகரிப்பின் பின்னரும் அவர்களது நாளாந்த சம்பளம் 515 ரூபா மட்டுமே ஆகும். மாத சம்பளம் பெறும் தொழிலாளருக்கு எந்தவொரு சம்பள அதிகரிப்புமே வழங்கப்படவில்லை.

தேயிலை மற்றும் ரப்பருக்கு அடுத்த இலங்கையில் மூன்றாவது பிரமாண்டமான பெருந்தோட்ட உற்பத்தியாக தென்னை விளங்குகின்றது. உலகப் பொருளாதார பின்னடவு மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்கா முன்னெடுக்கும் போரினாலும் தேயிலை மற்றும் ரப்பரின் உற்பத்திகளின் வருமானம் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், தென்னை ஏற்றுமதி அதிகரித்து வருமானம் அதிகரித்துள்ளது. ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் அறிக்கயின்படி, நாட்டின் மொத்த விவசாய உற்பத்தியில் 12 சதவீதம் தென்னையாகும். நாடெங்கும் 350,000 ஏக்கரில் தென்னை பயிரடப்பட்டுள்ளதுடன் வருடாந்தம் 2.5 பில்லியன்கள் வரை தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இலங்கை இதுவரை டெசிகேட் தென்னை (டி.சி.) ஏற்றுமதி செய்யும் நாடுகளிடையே ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதுடன் தென்னை நார் சம்பந்தமான உற்பத்தியில் முக்கிய இடத்தை வகிக்கின்றது. தேங்காய் எண்ணெய், கொப்பரா உடப்ட்ட தெங்கு பொருட்கள் சகலவற்றின் ஏற்றுமதியிலும் கடந்த பல ஆண்டுகளாக அபிவிருத்தி ஏற்பட்டுள்ளதுடன் 2015ல் மொத்த தென்னை பொருட்களின் ஏற்றுமதி வருவாய் 523 பில்லியன் டொலர்களாகும்.

தென்னந்தோட்ட வருமானம் பெருமளவில் அதிகரித்து இருப்பினும், அவற்றில் உழைப்புச் சுரண்டல் ஏனைய தோட்டங்களில் இருந்து வேறுபடவில்லை. அநேக தோட்டங்களில் தொழிலாளர்கள் லயின் அறைகளில் வாழ்வதுடன் அவற்றில் அநேகமானவை பாழடைந்த, பாதுகாப்பற்றவையாக உள்ளன.

பெரும் கம்பனிகளுக்குப் போலவே, பிரதான அரிசியல் கட்சி பிரமுகர்களுக்கும் சிலாபம், குருநாகல், நீர்கொழும்பு என்ற முக்கோன தெங்கு உற்பத்தி வலயத்திலும் அதற்கு வெளியேயும் பிரமாண்டமான தென்னந் தோட்டங்கள் உள்ளன.

தென்னை சார்ந்த, தென்னை நார் மற்றும் ஏனைய தொழிற்சாலைகளிலும் தொழிலாளர்கள் பெருமளவு சுரண்டலை எதிர்கொள்கின்றனர்.

மாதம்பை தென்னந்தோட்டம் ஒன்றில் பகுதி அதிகாரி ஒருவர் உலக சோசலிச வலைத் தளத்துடன் பேசும்போது, “எனது சம்பளத்தில் ஊழியர் சேமலாப நிதி போன்றவை வெட்டப்பட்ட பின்னர், கையில் கிடைப்பது 30,000 ரூபாவுக்கும் குறைவான தொகையே. எனக்கு படிக்கும் நான்கு பிள்ளைகள் உள்ளனர். வாழ்வதற்கு இந்தப் பணம் கொஞ்சமும் போதாது. தொழிலாளருக்கு 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டாலும் அவர்களுக்கு சுமத்தப்பட்டுள்ள வேலை பிரமாண்டமானது. நாளொன்றுக்கு 40 தென்னங்கன்றுகளை நாட்ட வேண்டும். 150 தென்னம் பாத்திகளில் தென்னை ஓலைகளை வெட்டி சமப்படுத்த வேண்டும். தேங்காய் பறிக்கும் நாட்களில் 3,000 தேங்காய்களை சேகரிக்க வேண்டும். ஏனைய நாட்களில் 40 ஏக்கர் அளவிலான பிரதேசத்தில் தேங்காய் சேகரிக்க வேண்டும் என்பதே இலக்கு. தொழிலாளர்களின் வருகை மற்றும் தேங்காய் அறுவடையை நிர்வாகம் பெரும் கவனத்துடன் மேற்பார்வை செய்கின்றது.

சிலாபம் பெருந்தோட்ட கம்பனிக்கு உரிய சிலாபம்-ஆனமடுவ பாதையில் உள்ள 1,600 ஏக்கர் வரையிலான பழுகஸ்வெவ தென்னந் தோட்டத் தொழிலாளர் தமது மோசமான வேலை நிலைமைகள் மற்றும் வாழ்க்கை நிலைமைகளைப் பற்றி பின்வருமாறு விபரித்தனர்.

மூன்று பிள்ளைகளின் தாயான 35 வயது பெண் தொழிலாளி கூறியதாவது: “எமது மூத்த தாய்மார் கேகாலை ரப்பர் தோட்டங்களில் இருந்து இங்கு வந்துள்ளனர். அந்த வரலாறு பற்றி எனக்கு தெரியாது. நான் தற்போது தேங்காய் பறித்த மரங்களை எண்ணுகின்றேன். நான் கர்ப்பிணியாக இருப்பதால் தேய்காய் சேகரிக்கப் போவதில்லை. எனது கணவரும் மூத்த மகனும் தேங்காய் உரிக்கின்றனர். ஆயிரம் தேங்காய் உரித்தால் 1,000 ரூபா கிடைக்கும். தோட்டத்தில் வேலை செய்யும் எந்தப் பிள்ளைக்கும் படிப்பில் நாட்டம் கிடையாது. எல்லோரும் தோட்டத்தில்தான் வேலை செய்கின்றனர்.”

நலன்புரி சேவை வெட்டின் காரணமாக தாய்-சேய் மருத்துவ நிலையம் மூடப்பட்டும் வீடுகள் திருத்தப்படாமலும் இருப்பதாக இருப்பதாக அவர் கூறினார். மின் மாணி இன்மையால் சகல வீடுகளில் இருந்தும் மின்சார கட்டனமாக மாதாந்தம் 850 ரூபா ஊதியத்தில் கழிக்கப்படுவதாகவும், மின்சார பாவனை அளவு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர், வீட்டில் அதிக மின்சாரப் பாவனைப் பொருட்கள் இல்லாததால் அக்கட்டனம் மேலதிகமானது என்றார்.

தோட்டத்தில் மேலதிகமாக உற்பத்தி பண்டமாக றகன் பழம் உற்பத்தி செய்யப்படுவதாகவும் தோட்டத்தில் எருமை மாடுகள் கொட்டில்களில் வளர்க்கப்பட்டு தயிர் மற்றும் யோகட் உற்பத்தி செய்யப்பட்டு பெருமளவு வருவாய் பெறப்படுவதாகவும் அவர் கூறினார்.

புழுகஸ்வெவ என்பது, பிரித்தானிய ஏகாதிபத்திய காலத்தில் இருந்து ஆரம்பித்த ஒரு தென்னந் தோட்டமாகும். இந்த தோட்டம் இடைக்கிடை தனியார் துறைக்கும் அரசாங்கத்துக்கும் கைமாற்றப்பட்டு இயங்கியுள்ளதுடன் 1992ல் வடமேல் மாகாண தனியார்துறை தோட்டக் கம்பனிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 2008ல் மீண்டும் அரசாங்கம் சுவீகரித்துக்கொண்டுள்ளது.

இந்த தோட்டம் ஆசியாவின் மிகப் பெரிய தனி தோட்டமாக கருத்தப்படுவதுடன் உலக ரீதியில் மிகத் தரமான தெங்கு உற்பத்திகளை வழங்கும் தோட்டமாகவும் பெயர் பெற்றுள்ளது. 300 அளவிலான தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி பெறப்படும் வருவாய் பெருமளவில் அதிகரித்துள்ளதுடன் 2010ல் அது 145 மில்லியன் ரூபாய்களை எட்டியுள்ளது.

மூங்கில் தடியினால் கொக்கி கட்டி தேங்காய் பறித்துக்கொண்டிருந்த பழுகஸ்வத்தையைச் சேர்ந்த இளம் தொழிலாளி கூறியதாவது: “என்னுடன் இன்னும் நான்கு பேர் இங்கு தேங்காய் பறிக்கின்றனர். ஒரு ஏக்கரில் தேங்காய் பறிக்க 375 ரூபா தருவார்கள். 38 ஏக்கரில் இருந்து நூற்றுக்கணக்கான மரங்களில் தேங்காய் பறிக்க 4 நாட்கள் செல்லும். காலை 7.30 மணியில் இருந்து 11 மணி வரை தேங்காய் பறிப்பின் ஒரு நாளுக்கு சுமார் 800 ரூபா கிடைக்கும். அதன் பின் தோட்டத்தில் செய்யக் கூடிய எந்த வேலையையும் செய்வோம். இச்சகல வேலைகளையும் செய்துதான் மாதம் நான் 28,000 ரூபா அளவு சம்பாதிக்கின்றேன். பிள்ளைகளின் சாப்பாடு, உடுப்பு மற்றும் பாடசாலை செலவுக்கு இந்த தொகை போதவே போதாது.”

18 வயது இளைஞன் தேங்காய் உரித்துக்கொண்டிருந்தார். “நான் ஒரு நாளுக்கு ஆயிரம் தேங்காய்கள் வரை தோலுரிப்பேன். உடம்பில் பலம் இருப்பதால் அது அந்தளவு கடினம் இல்லை. எனது தந்தை வாவியில் மூழ்கி இறந்துவிட்டார். தாய் வேறு திருமணம் செய்துகொண்டார். தங்கை அம்மாவுடன் இருக்கின்றாள். நான் தனித்து வாழ்கிறேன். உணவுக்காக வாரம் 2,000 ரூபா செலவாகின்றது, நான் 6ம் வகுப்புவரை மட்டும்தான் படித்தேன். ஆனால் தங்கையை படிக்க வைக்க வேண்டும். அதனால் சிறிதளவு பணம் அவளுக்கும் அம்மாவுக்கும் கொடுக்க வேண்டும்,” என அவர் கூறினார்.

தொழிற்சங்கங்களால் எந்த பிரயோசனமும் கிடையாதென ஒரு தொழிலாளி கூறினார். அவர் சிலாபம் பெருந்தோட்ட கம்பனிக்கு உரிய மாதம்பையிலுள்ள 300 ஏக்கர் அளவிலான தென்னந் தோட்டத்தில் வேலை செய்கின்றார். “ஸ்ரீலங்கா சுதந்திர தொழிலாளர் சங்கமானது எமது சம்பளத்தில் மாதம் 80 ரூபாவை சந்தாப் பணமாக பெறுகின்றது. எனினும் எமது சம்பளம் மற்றும் வாழ்க்கைத் தரத்தை பாதுகாக்க அது எந்தப் போராட்டத்தையும் செய்வதில்லை.”

தமது தோட்டத்தில் 30 தொழிலாளர்கள் மட்டுமே தொழில் செய்வதாகவும், தோட்டத்தில் எந்தவொரு போராட்டம் செய்தாலும் கம்பனியினால் வேட்டையாடப்படுவதாகவும் அவர் கூறினார். “ஏனைய தொழிலாளருடன் இணையாது எம்மால் போராட முடியாது. ஆனால் தொழிற்சங்கங்களோ தொழிலாளர்கள் ஐக்கியப்படுவதை எதிர்க்கின்றன.”

இத்தொழிலாளர்களது சம்பள போராட்டம் உட்பட, ஏனைய தொழிலாளர்களதும் போராட்டங்களை, துரோக தொழிற்சங்கங்களின் பிடியில் இருந்தும் விடுவித்து, தொழிலாளர்கள் சுயாதீனமாக சோசலிச வேலைத் திட்டத்தின் அடிப்படையில் அதை முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தையே இது வலியுறுத்துகின்றது. (பார்க்க: இலங்கை தோட்டத் தொழிலாளர்களின் போராட்டம்: நடவடிக்கை குழுக்களை கட்டியெழுப்பு! சோசலிசக் கொள்கைகளுக்காகப் போராடு!)