ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

வட இலங்கையில் சுத்திகரிப்புத் தொழிலாளர்களும் சுகாதார உதவியாளர்களும் நிரந்தர நியமனம் கோரி வேலை நிறுத்தம் செய்தனர்

By Vimal Rasenthiran
30 May 2016

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாணத்தின், யாழ் மாநகரசபையின், தற்காலிக சுத்திகரிப்பு தொழிலாளர்களும், சுகாதார உதவியாளர்களும் தங்களுக்கு நிரந்தர நியமனம் கோரி கடந்த 10ம் திகதி முதல் ஒரு வாரத்திற்கும் மேலாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர். மாநகரசபைக்கு வந்து செல்லும் அனைவரினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாநகர சபையின் வாசலில் அமர்ந்து போராடி வந்தனர்.

இந்த தொழிலாளர்கள், “எங்களுக்கு நிரந்தர நியமனம் தருவதாக ஏமாற்றியது ஏன்?”, “பல வருடங்களாக நாட்டினை சுத்தம் செய்த எமக்கு நிரந்தர நியமனம் கிடைக்கவில்லை;” “அடிக்காதே அடிக்காதே சுகாதார தொழிலாளர்களின் வயிற்றில் அடிக்காதே”, “நிரந்தர நியமனம் தா இல்லையேல் எமக்கும் எமது குடும்பத்துக்கும் நஞ்சைத் தா?” போன்ற கோஷங்கள் அடங்கிய பதாகைகளைப் பிடித்திருந்தார்கள்.

இந்தப் போராட்டத்தில் கடந்த 7 வருடங்களுக்கு மேலாக தற்காலிகமாக வேலை செய்து வரும் 120 சுத்திகரிப்பு தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்தனர். இவர்களில் ஓய்வுபெறும் வயதை அண்மித்த 10 தொழிலாளர்களும் உள்ளடங்குவர். கடந்த 19 வருடங்களாக மாநகர மருத்துவ சுகாதாரத் தொண்டர்களாக தற்காலிகமாக வேலை செய்துவரும் 8 சுகாதார ஊழியர்களும் அவர்களுடன் இணைந்து போராடினர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களுக்கு அந்த நாட்களுக்கான சம்பளமும் வழங்கப்படமாட்டாது.

மிகவும் நலிவடைந்த, பின்தங்கிய பிரிவினரான இந்த தொழிலாளர்களின் போராட்டத்துக்கு எந்தவொரு அரசியல் கட்சியும் அமைப்புக்களும் ஆதரவளிக்கவில்லை. ஊடகங்கள் ஒரு மூலையில் சிறிய இடம் கொடுத்ததற்கு அப்பால் அக்கறைகாட்டவில்லை.

மாநகரசபை ஆணையாளர் பிரச்சினையை தீர்ப்பதற்கு மூன்று மாத கால அவகாசம் கேட்டு தலையிட்டதை அடுத்து, இந்தப் போராட்டம், கடந்த 18 தேதி தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொழிலாளர்கள் வேலைக்குப் போனால் மட்டுமே ஒரு நாளைக்கு 972 ரூபாவை ஊதியமாக பெறுவர். விடுமுறை நாட்களிலும் இந்த தொழிலாளர்கள் கடமையாற்ற வேண்டியிருப்பதோடு, நிரந்தர ஊழியர்கள் விடுமுறை எடுக்கும் காலத்தில் இந்த தொழிலாளர்களே பதில் கடைமையாற்ற வேண்டும். விடுமுறை நாட்களில் வேலை செய்யும் போது அதற்கான விசேட கொடுப்பனவு எதுவும் கிடையாது. நிரந்தர ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியமோ அல்லது கொடுப்பனவுகளோ இவர்களுக்கு கிடையாது.

இந்த தற்காலிக சுத்திகரிப்பு தொழிலாளர்கள், 2010ல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த இராஜபக்ஷ தலமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் தற்காலிகமாக வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அந்தக் காலப்பகுதியில் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான ஈழ மக்கள் ஜனநாயக கட்சி (ஈ.பீ.டி.பீ.) மாநகர சபையின் ஆட்சியில் இருந்து வந்தது. அப்போது வழங்கப்பட்ட நிரந்தர நியமனங்கள், அந்தக் கட்சியின் அரசியல் செல்வாக்கின்படியே வழங்கப்பட்டது. இந்த தொழிலாளர்கள் கைவிடப்பட்டார்கள்.

மூன்று தசாப்த இனவாத யுத்தத்தால் அழிவுக்குள்ளான வடக்கில் உள்ள மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதாக வாக்குறுதியளித்து, 2013ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு முதல் முறையாக வடமாகாண சபையை பொறுப்பெடுத்துக்கொண்டது. பின்னர் 2015ல் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவளித்த ஒரு அரசாங்கம் கொழும்பில் அமைந்தது. ஆனால் இந்த தொழிலாளர்களின் வாழ்க்கையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அவர்கள் இப்போதும் முன்னைய அரசாங்க காலத்தைப்போலவே தற்காலிக தொழிலாளர்களாக பணிபுரியவேண்டிய நிலையிலேயே உள்ளனர்.

இந்த போராட்டத்தின் வேளையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள வடமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு தங்களின் கோரிக்கைகள் சம்பந்தமாக, மகஜர் ஒன்றையும் தொழிலாளர்கள் கையளித்துள்ளனர். கடந்த ஆண்டும் தாங்கள் இத்தகைய ஒரு போராட்டத்தின் வேளையில் முதலமைச்சரை சந்தித்தபோது, 100 நாட்களில் நிரந்தர நியமனம் பெற்றுத் தருவதாக உறுதி அளித்த அவர் இன்னமும் பெற்றுத் தரவில்லை என்றும், பல தடைவைகள் வாக்குறுதிகள் வழங்கப்பட்டு அவை எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்றும் தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

2013ம் ஆண்டு யாழ்ப்பாண போதனா வைத்தியாசாலை தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்களின் தங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி போராட்டம் நடத்தியவேளையிலும் கூட கூட்டமைப்பு எந்தவிதமான ஆதரவும் வழங்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம், “யாழ்.போதனா வைத்தியசாலை வடமாகாண சபைக்கு உட்பட்ட வைத்தியசாலை இல்லை. இந்த வைத்தியசாலை மத்திய அரசாங்கத்திற்கு கீழ் வருகின்றது. இதனால் வடமாகாண சுகாதார அமைச்சு நேரடியாக இந்த தொண்டர்களுடைய பிரச்சினைகளில் தலையிட சந்தர்ப்பங்கள் இல்லை,” என கூறி தனது பொறுப்பை தட்டிக்கழித்து விட்டார்.

போராட்ட வேளையில் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்த விக்னேஸ்வரன், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பக்கம் திரும்பிப்பார்க்காமலே சென்றார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு, கடந்த வருட ஜனவரியில் அமெரிக்க தலைமையிலான ஆட்சிமாற்ற சதிக்கு முழுமையாக ஒத்துழைத்து, சிறிசேனவுக்கு வாக்களிக்க தமிழ் வாக்காளர்களை வலியுறுத்தியது. பின்னர் எதிர்கட்சி வரிசையில் இருந்து விக்கிரமசிங்க அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்கள், ஒடுக்குமுறைகள் போன்ற அனைத்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து பாதுகாத்து வருகிறது. விக்கினேஸ்வரன் இன்னும் ஒருபடி மேலே சென்று, தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்களை ஒடுக்குவதற்கு வடமாகாணத்திற்கான போலிஸ் அதிகாரங்களை தம்மிடம் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளார். உலகப் பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களை தொழிலாள வர்க்கத்தின் மீது திணிக்கையில், எழும் தொழிலாளர்களின் எதிர்ப்புக்களை ஒடுக்குவதற்கே அவருக்கு போலிஸ் அதிகாரம் தேவைப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் கடந்த தசாப்தம் பூராகவும் போரைக் காரணம் காட்டி அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள உயர்வு மற்றும் நிரந்தர நியமனங்களை இடைநிறுத்தி வைத்திருந்தது. பாரிய அந்நிய செலாவணி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நடப்பு அரசாங்கம், புதிய வரிகள் ஊடாக சிக்கன நடவடிக்கைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது.

இந்த தற்காலிக சுத்திகரிப்பு தொழிலாளர்களை போலவே ஏனைய அரசாங்க நிறுவனங்களிலும் நிரந்தர நியமனம் கிடைக்காத ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மாத ஆரம்பத்தில் ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின் கீழ் உள்ள, மனிதவலு (மேன்பவர்) நிறுவனத்தினால் பல ஆண்டுகளாக நிரந்தர நியமனம் இன்றி சுரண்டப்படும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பல நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள்

போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை சந்திக்க சென்ற உலக சோசலிச வலைத் தள நிருபர்களை உற்சாகமாக வரவேற்ற தொழிலாளர்கள், ஏனைய கட்சிகளும் சில ஊடகங்களும் தங்களைப் புறக்கணிப்பதாக கூறி, தாங்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகளை உற்சாகமாக கலந்துரையாடினர்.

யாழ்ப்பாண நகரில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள திருநகர் என்னுமிடத்தில் வாழும் 70 வீதமானவர்கள் இந்த சுத்திகரிப்புத் தொழிலாளர்களே. பெரும்பாலான சொந்த நிலமற்ற தொழிலாளரகள், வீதியின் இரு மருங்கிலும் குடிசைகள் அமைத்து வாழ்கின்றார்கள். இந்தப் பிரதேசம் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி புறக்கணிக்கப்பட்ட பகுதியாக காணப்படுகின்றது.

மருத்துவ சுகாதாரத் தொண்டரான ஜேசுதாசன் சகாயராணி வேலைக்கு சேர்ந்த ஆரம்ப காலகட்டத்தில் ஊதியம் இன்றியே வேலை செய்ததாக கூறினார். “இப்போதும் எங்களுக்கு 690 ரூபா நாட்கூலிதான். 20 அல்லது 21 நாட்கள் மட்டுமே வேலை செய்கிறோம். டெங்கு ஓழிப்பு, ஏ.ஆர்.வி. ஊசி போடுதல், சிறுவர் பாராமரிப்பு போன்ற பல நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றோம். யுத்தகாலத்தில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்தபோது கூட நாங்கள் உயிரைப் பணயம் வைத்து வேலை செய்திருக்கின்றோம். ஆனால் எங்களுக்கு 19 வருடங்களாக நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை.

வ. சுகந்தன் (23), தான் 2010 இல் சுத்திகரிப்புத் தொழிலாளியாக வேலைக்கு சேர்ந்தாக கூறினார். “180 நாளுக்குள் ஒருவருக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டுமென சட்டத்தில் உள்ளது. ஆனால் நாங்கள் வருடக் கணக்காக தற்காலிகமாக வேலை செய்கின்றோம். எங்களுக்கு ஒய்வூதியம் போன்ற அடிப்படை வசதிகள் இதனூடாக இல்லாமல் போகின்றது. நான் ஒரு குடிசையில் வாழ்கின்றேன் நிலம் எமக்கு சொந்தம் இல்லை. கிடைக்கும் சம்பளத்துடன் பற்றாக்குறை வாழ்க்கை தான் வாழ்கின்றோம். நிரந்தர நியமனம் எங்களுக்கு தரவேண்டும். பல முறை நியமனம் தருவதாக அதிகாரிகளால் எங்களுக்கு போலி வாக்குறுதிகள் வழங்கப்பட்டு நிறைவேற்றப்படவில்லை,” என அவர் தெரிவித்தார்.

ச. திருமாறன், (30), கூறும் போது, “நான் 2010ம் ஆண்டு தற்காலிக ஊழியராக வேலைக்கு சேர்ந்தபோது 8 மாதங்கள் சம்பளம் அற்று வேலை செய்தேன். சாப்பாட்டுக்கே சிரமப்பட்டேன், பகலில் வேலைக்கு வந்துவிட்டு, இரவில் மீனவர்களுடன் சேர்ந்து கடலுக்குப் போய் அதில் கிடைத்த அற்ப வருமானத்தில் குடும்பத்தினை கொண்டு நடத்தினேன்.

தற்போது எனக்குச் சம்பளம் ஒரு நாளைக்கு 972 ரூபா. லீவு எடுத்தால் சம்பளம் கிடையாது. நாங்கள் முப்பது நாளும் வேலை செய்தாலும் கூட எமது குடும்பச் செலவுக்குப் போதவில்லை. மாதம் முடிவில் 5,000 ரூபாவுக்கு மேல் கடையில் கடனாளிகளாக இருக்கின்றோம். எனக்கு மூன்று பிள்ளைகள் அரசாங்க பாடசாலையில் படிக்கின்றார்கள். ஆனால் அவர்களை ரீயூசன் அனுப்புவதற்கான பணம் எம்மிடம் கிடையாது.

“எமது வேலை நிரந்தரமற்றதாக இருப்பதினால், வங்கிகளில் கூட கடன் தர மறுக்கின்றார்கள். இந்த வேலை நிரந்தரமாக்கப்பட்டால் தான் பிற்காலத்தில் எமக்குப் சில நன்மைகள் கிடைக்கலாம். இல்லாவிட்டால் இவ்வளவு காலமும் நாங்கள் பட்ட கஸ்ட்டத்துக்கு அர்த்தமில்லை. சுத்திகரிப்புத் தொழில் என்பது எவ்வளவு துன்பகரமான தொழில்? இது அனைவருக்கும தெரியும்.