ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French parliament extends state of emergency amid rising protests

அதிகரிக்கும் போராட்டங்களுக்கு இடையே பிரெஞ்சு நாடாளுமன்றம் அவசரகால நெருக்கடிநிலையை நீட்டிக்கிறது

By Alex Lantier
20 May 2016

நவம்பர் 13 பாரீஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்குப் பின்னர் பிரான்சின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கம் அறிவித்த அவசரகால நெருக்கடி நிலையை, தேசிய சட்டசபை நேற்று நீடித்தது. இது பெப்ரவரியின் இதேபோன்றவொரு முடிவு எடுக்கப்பட்டதற்கு பின்னர் இரண்டாவது முறையாக செய்யப்படுகிறது.

நாடாளுமன்ற விவாதத்தை தொடங்கி வைத்த உள்துறை மந்திரி பேர்னார் கசெனேவ், “பயங்கரவாத அச்சுறுத்தல் உச்சக் கட்டத்தில் உள்ளது, பிரான்சும் அத்துடன் ஐரோப்பிய ஒன்றியமும் இலக்காக உள்ளன,” என்று தெரிவித்தார்.

தற்போதைய காலக்கேடு மே 26 இல் முடிவுறுவதையிட்டு இரண்டு மாதங்களுக்கு அவசரகால நெருக்கடியை நீடிப்பதற்கு போலிக்காரணமாக இருப்பது, பிரான்சில் இந்த கோடையில் நடக்கவுள்ள 2016 யூரோ கால்பந்து போட்டிகள் மற்றும் Tour de France சைக்கிள் ஓட்ட போட்டி ஆகிய இரண்டுமாகும். அரசாங்க ஆதார நபர்களை மேற்கோளிட்டு, Les Echos எழுதுகையில், அவசரகால நெருக்கடி நிலையை நீடிப்பது அத்தகைய நிகழ்வுகளின் பாதுகாப்புக்கு உதவும் என்பதுடன், “நாடு முழுவதிலும் அல்லது ஒரு பிராந்தியத்தின் ஒரு பகுதியில், பொது ஒழுங்கை ஏதாவது விதத்தில் குழப்ப முனையும் எந்தவொரு நபரது பிரசன்னத்திற்கும் தடை விதிக்க இது அரசாங்கத்தை அனுமதிக்கும்,” என்று குறிப்பிட்டது.

அவசரகால நெருக்கடி நிலை, பிரதானமாக, விளையாட்டு போட்டிகளை பிரச்சனைக்கு உள்ளாக்கக்கூடிய இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு எதிராக திருப்பிவிடப்பட்டது என்ற சாக்குப்போக்கு, ஓர் அரசியல் மோசடியாகும். கடந்த பல மாதங்களில் என்ன நடந்திருக்கிறதென்றால், அவசரகால நெருக்கடி நிலை நவம்பர் 13 தாக்குதல்களை நடத்திய இஸ்லாமிய பயங்கரவாத வலையமைப்புகளை நோக்கி திருப்பிவிடப்படவில்லை, மாறாக இராணுவ-பொலிஸ் வன்முறை மற்றும் சமூக சிக்கன திட்டங்களுக்கு எதிராக அதிகரித்துவரும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்புக்கு எதிராக திருப்பி விடப்பட்டிருந்தது.

எவ்வாறிருப்பினும் பாரீஸ் தாக்குதல்களும் மற்றும் அவசரகால நெருக்கடி நிலையும், நேட்டோ மற்றும் இஸ்லாமிய வலையமைப்புகளுக்கு இடையிலான நெருக்கமான உறவுகளை வெட்டிவிடவில்லை என்பதையே புரூசெல்ஸ் தாக்குதல்கள் எடுத்துக்காட்டின. சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அதன் போரில் இஸ்லாமிய வலையமைப்புகளை நேட்டோ பயன்படுத்திய நிலையில், அவை ஐரோப்பாவில் உத்தியோகபூர்வமாக தொடர்ந்து பாதுகாப்பாக இருந்து வந்தன. தாக்குதல்தாரிகளை மற்றும் அவர்களது இலக்குகளைக் கண்டறிந்திருந்த ரஷ்ய, துருக்கிய மற்றும் இஸ்ரேலிய உளவுத்துறையினரின் விரிவான எச்சரிக்கைகளை பெல்ஜிய அதிகாரிகள் புறக்கணித்திருந்தனர் என்பது அத்தாக்குதல்களுக்கு பின்னர் உடனடியாக வெளியானது.

இத்தாக்குதல்கள் நவம்பர் 13 பாரீஸ் தாக்குதல்களின் சூத்தரதாரியாக குற்றஞ்சாட்டப்பட்ட சலாஹ் அப்தெஸ்லாம் புரூசெல்ஸில் கைது செய்யப்பட்டதற்கு சற்று பின்னர் தான் நடந்தன. எவ்வாறிருப்பினும் பெல்ஜிய பொலிஸ் மார்ச் 22 தாக்குதல்தாரிகளைக் குறித்து அறிந்திருந்தது என்பது மட்டுமல்ல, மாறாக, டிசம்பருக்குப் பின்னர் அப்தெஸ்லாம் இருந்த இடம் குறித்தும் அறிந்திருந்தது என்பதும் விரைவிலேயே வெளியானது. இக்காலப்பகுதி முழுவதிலும் ஐரோப்பாவின் "தேடப்படும் முக்கிய மனிதராக" ஊடகங்கள் அவரை பரவலாக காட்டியிருந்தன.

எவ்வாறிருப்பினும் அனைத்திற்கும் மேலாக, சோசலிஸ்ட் கட்சியின் தொழிலாளர்நல மந்திரி மரியம் எல் கொம்ரியின் தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக இளைஞர்களினதும் தொழிலாளர்களினதும் பாரிய இயக்கம் மேலெழுந்ததைக் கடந்த இரண்டு மாதங்கள் கண்டுள்ளன. இதன்போது, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் போராடுவதற்கான உரிமை மீது முன்னொருபோதும் இல்லாதளவில் கட்டுப்பாடுகளை திணிப்பதற்காக அவசரகால நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி உள்ளது. கலகம் ஒடுக்கும் பொலிஸ் வன்முறையானரீதியில் போராட்டங்களைத் தாக்கிய அதேவேளையில், சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம் டஜன் கணக்கான போராட்டக்காரர்களை "முன்கூட்டியே" கைது செய்தததுடன், ஏனையவர்களை வீட்டுக் காவலில் அடைத்தது, அல்லது போராட்டங்கள் நடக்கும் இடங்களுக்கு அவர்கள் செல்வதற்குத் தடைவிதித்தது.

இது, எல் கொம்ரியின் பிற்போக்குத்தனமான சட்டத்தை 75 சதவீத மக்கள் எதிர்க்கின்ற நிலைமைகளின் கீழ், போராட்டங்களை பீதியூட்டுவதற்கும் மற்றும் தடுப்பதற்குமான ஓர் அப்பட்டமான முயற்சியாகும்.

வர்க்கப் பதட்டங்கள் அதிகரித்து வருகின்றன. டிரக் ஒட்டுனர்கள், சுத்திகரிப்பு தொழிலாளர்கள், போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு தொழிலாளர்கள் உட்பட தொழிலாளர்களின் புதிய அடுக்குகள் வேலைநிறுத்த நடவடிக்கை மற்றும் போராட்டங்களைத் தொடங்கி உள்ளனர். இது, அவசரகால சட்டத்தின் ஜூலை 26 காலக்கெடுவுக்குப் பின்னரும் ஒடுக்குமுறை நடவடிக்கைகளுக்கு அது வழங்கும் முழு அதிகாரத்தை மக்களுக்கு எதிராக தொடர்ந்து பயன்படுத்த, சோசலிஸ்ட் கட்சியை இன்னும் முழுமையாக தீர்மானகரமாக இருப்பதையை காட்டுகின்றது.

சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் நாடாளுமன்றத்தில் அதன் முன்னணி உளவுத்துறை வல்லுனர்களில் ஒருவரான Jean-Jacques Urvoas உம், அவசரகால நெருக்கடி நிலையை நடைமுறையளவில் நிரந்தரமாக்கும் சட்டமசோதாவிற்கு தயாரிப்பு செய்து வருகின்றனர். சட்டசபையில் குற்றவியல் சீர்திருத்த சட்டமசோதாவை மேற்பார்வையிட்டு வரும் சோசலிஸ்ட் கட்சி சட்டசபை அங்கத்தவர் பாஸ்கல் போப்லின் கூறுகையில், அதுவொரு "கருவி, அது அவசரகால நெருக்கடி நிலை இல்லாமலேயே அதை நடைமுறைப்படுத்த எங்களை அனுமதிக்கும்,” என்றார்.

அவர்கள் தயாரிப்பு செய்து வரும் குற்றவியல் சட்ட சீர்திருத்தம், அவசரகால நெருக்கடி நிலையின் கீழ் பாதுகாப்பு படைகளுக்கு இப்போது வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பலவற்றை சட்டமாக கொண்டிருக்கும். அடையாளங்காணும் சோதனையின் போது நான்கு மணி நேரங்களுக்கு வழக்கறிஞரை அணுக முடியாதவாறு மக்களைக் காவலில் வைத்திருப்பது; பயங்கரவாதத்திற்காக சந்தேகிக்கப்படுபவர்களை விசாரணையின் கீழ் வைத்திருப்பதை நியாயப்படுத்த பொலிஸிற்கு போதிய ஆதாரமில்லை என்றால், அவர்களை ஒரு மாதம் வரையில் வீட்டுக் காவலில் வைப்பது; தொலைபேசி மற்றும் இணைய வழிகளை ஊடுருவுதல் மீதும் அத்துடன் இரவுநேர சோதனைகளுக்கும் பொலிஸ் அதிகாரங்களை விரிவாக்குவது ஆகியவை அவற்றில் உள்ளடங்கும்.

அவசரகால நெருக்கடி நிலையை சோசலிஸ்ட் கட்சி கொண்டு வந்தமை, ஒரு குறிப்பிட்ட கொடூர பயங்கரவாத தாக்குதலுக்கு விடையிறுப்பாக கொண்டு வரப்பட்ட ஒரு சம்பவம் கிடையாது. அது பாரிய உளவுபார்ப்பு மற்றும் ஏதேச்சதிகார கைது நடவடிக்கைக்கான அதேபோன்ற அரசு அதிகாரங்களை சர்வதேச அளவில் பரந்துபட்டு கட்டமைப்பதன் பாகமாக இருந்தது, இவை 15 ஆண்டுகளுக்கு முன்னர் செப்டம்பர் 11, 2015 தாக்குதல்களுக்குப் பின்னர் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" கொண்டு வரப்பட்டதற்குப் பின்னர் தீவிர வேகத்துடன் அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளன.

இத்தகைய நிகழ்வுகள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நோக்கம் கொண்டுள்ளன என்பதையும் மற்றும் நீண்டகால ஜனநாயக பாரம்பரியங்களைக் கொண்ட முன்னேறிய நாடுகளிலும் கூட சர்வாதிகாரங்கள் உருவாவதற்கு அச்சுறுத்துகின்றது என்பதையும் தான் பிரான்சின் சம்பவங்கள் குறிப்பிடத்தக்க கூர்மையுடன் எடுத்துக்காட்டுகின்றன. சோசலிஸ்ட் கட்சி அதன் மக்கள்விரோத மற்றும் பிற்போக்குத்தனமான சமூக திட்டநிரலுக்கு அதிகரித்து வரும் மக்கள் எதிர்ப்பால் அதிர்ந்து போயிருந்தாலும், அது —ஒட்டுமொத்த ஆளும் வர்க்கத்தின் அணியில்— அத்தகைய எதிர்ப்பை நசுக்கும் ஓர் ஆட்சியை ஸ்தாபிக்க முயல்வதன் மூலமாக விடையிறுத்து வருகிறது.

நவ-பாசிசவாத தேசிய முன்னணிக்கு (FN) நெருக்கமான ஒரு பொலிஸ் தொழிற்சங்கம் அழைப்புவிடுத்த "பொலிசார் வெறுப்புக்கு" எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு, அதுவும் அதில் உயர்மட்ட தேசிய முன்னணி தலைவர்கள் கலந்து கொண்ட நிலையில், புதனன்று சோசலிஸ்ட் கட்சியும் மற்றும் ஸ்ராலினிச அமைப்பான தொழிலாளர் பொது கூட்டமைப்பு (CGT) தொழிற்சங்கமும், இரண்டும், அவற்றை ஆதரிக்க முன்னொருபோதுமில்லாத வகையில் முன்வந்தன.

நேற்று பிரதம மந்திரி மானுவெல் வால்ஸ், தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான வேலைநிறுத்தங்களையும் மற்றும் தொழிலாளர்களது போராட்டங்களையும் கண்டிக்க மற்றும் அத்தகைய போராட்டங்களை அரசு பொறுத்துக் கொள்ளாது என்பதை தெளிவுபடுத்த RTL வானொலியில் பேசினார். அது, பிரெஞ்சு அரசியலமைப்பில் பாதுகாக்கப்பட்டுள்ள போராடுவதற்கான உரிமை மற்றும் வேலைநிறுத்த உரிமை இரண்டுக்கும் எதிராக ஆக்ரோஷமாக நகர்ந்து வருகிறது.

நெடுஞ்சாலைகளில் மற்றும் பல எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் டிரக் ஓட்டுனர்கள் மறியல் செய்த போது, வால்ஸ், “இத்தகைய மறியல் நடவடிக்கைகளை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்,” என்று அறிவித்ததுடன், கூடுதல் நேர சம்பளத்தில் தொழிலாளர் சட்டம் திணிக்கக்கூடிய வெட்டுக்களைக் குறித்து தொழிற்சங்கங்கள் "அரைகுறையான உண்மைகளைப்" பரப்பி வருவதாகவும் மற்றும் “பீதிகளைத் தூண்டிவிடுவதாகவும்" அவற்றைக் குறை கூறினார்.

இது, 2010 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை வேலைநிறுத்தங்களின் போது செய்ததைப் போல, வேலைநிறுத்த மறியல் போராட்டங்களை ஸ்தூலமாக நசுக்க மற்றும் வேலைநிறுத்தங்களை உடைக்க அரசாங்கம் பொலிஸை அனுப்புமா என்ற கேள்வியை எழுப்புகிறது.

“இன்று அவர்களது நோக்கம் என்னவென்பது உண்மையிலேயே எனக்கு தெரியவில்லை. … இன்று ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் கடமை தவறியர்கள் இருக்கிறார்கள் என்றால், அவ்வாறு இருந்தாலும், இத்தகைய சில போராட்டங்களின் முக்கியத்துவம் குறித்து ஒருவர் கேள்வி எழுப்ப வேண்டும்,” என்று கூறி, வால்ஸ் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை தாக்கினார். “போராட்டங்களுக்குள் இறங்குவதிலிருந்து மீண்டும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்களை தடுக்க பெயர்களின் பட்டியல் மீண்டும் தயாரிக்கப்படும்,” என்பதையும் சேர்த்து கொண்ட அவர், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதில் குறிப்பிட்ட போராட்டக்காரர்கள் தடுக்கப்படுவார்கள் என சூளுரைத்தார்.