ஏனைய மொழிகளில்

Chinese finance minister calls for easier dismissals under labour laws

சீன நிதி மந்திரி தொழிலாளர் சட்டங்களின் கீழ் இலகுவாக வேலைநீக்கம் செய்வதற்கு அழைப்பு விடுக்கிறார்

By Peter Symonds
10 March 2016

சீனாவின் நிதி மந்திரி லூ ஜிவை அந்நாட்டின் தொழிலாளர் சட்டங்களை விமர்சித்து திங்களன்று கூறிய கருத்துக்கள், தொழிலாள வர்க்கத்தின் வேலைகள், சம்பளம் மற்றும் வேலையிட நிலைமைகள் மீது அரசாங்கம் கடுமையான தாக்குதல்களுக்குத் தயாரிப்பு செய்து வருகிறது என்பதற்கு ஓர் எச்சரிக்கையூட்டும் அறிகுறியாகும்.

இவ்வார பெய்ஜிங் தேசிய மக்கள் மாநாட்டின் (NPC) அருகாமையில் தொலைகாட்சிக்கு அவர் கருத்துரைக்கையில், சட்ட அமைப்புமுறை மிகவும் அதிகமாக தொழிலாளர்களுக்கு சாதகமாக இருப்பதாக குறைகூறினார். “ஒரு தொழிலாளர் கடுமையாக வேலை செய்யவில்லை என்றால், அவர்களை வேலையை விட்டு நீக்குவதைப் போல ஏதோவொன்றைச் செய்வதற்கு நிறுவனங்கள் சிரமப்படுகின்றன,” என்றவர் அறிவித்தார்.

லூவின் கருத்துக்கள் உலகில் எந்தவொரு தலைமை செயலதிகாரி அல்லது பெருநிறுவன அரசியல்வாதியாலும் ஏற்றுக் கொள்ளப்படும். குறிப்பாக தொழிலாளர்களை வேலைக்கு எடுப்பது மற்றும் வேலையிலிருந்து நீக்குவது என்று வரும்போது, அவர்கள் மிகப்பெரியளவில் "தொழிலில் வளைந்துகொடுக்கும் தன்மைக்காக" மீண்டும் மீண்டும் அழைப்புவிடுக்கிறார்கள். மேலும் அவரது வாதங்கள் வெட்கமின்றி தொழிலாளர்கள் மீதான அதேயளவிலான அக்கறைகளுடன் அலங்கரிக்கப்பட்டன.

“இந்த சட்டத்தின் நிஜமான நோக்கம் தொழிலாளர்களை பாதுகாப்பு தான் என்றாலும், இறுதியில் இது சில தொழிலாளர்களின் நலன்களைப் பாதிக்கிறது மற்றும் ஊதியங்களில் விரைவான உயர்வுக்கும் இட்டுச் செல்கிறது,” என்று விவரித்த லூ, அதிகரிக்கும் செலவுகளால் முன்னணி நிறுவனங்கள் அவற்றின் செயல்பாடுகளை வெளிநாடுகளுக்கு நகர்த்த முனைகின்றன என்றார். “இறுதியில் யார் பாதிக்கப்படுகிறார்கள்? தொழிலாளர்கள் தான் பாதிக்கப்படுகிறார்கள்.” என்றார்.

சீனாவில் கடந்த தசாப்தத்தில் ஊதிய மட்டங்கள் இரண்டு மடங்கு உயர்ந்துள்ளதாகவும், இது மலிவு-செலவு உற்பத்தியை நோக்கி, குறிப்பாக, வியட்நாம் மற்றும் பங்களதேஷ் போன்ற மலிவு உழைப்புகளின் ஆதாரங்களை நோக்கி நகர்வதற்கு இட்டுச் செல்வதாகவும் தேசிய புள்ளிவிபரங்கள் ஆணையம் குறிப்பிட்டது.

கூலிகளைக் குறைத்து மற்றும் நிலைமைகளை மோசமாக்குவதன் மூலம் உற்பத்தியை அதிகரிப்பதற்கான முடிவில்லா உந்துதலுடன் "சர்வதேச போட்டித்தன்மையை" அதிகரிப்பதற்கான சர்வதேச முதலாளித்துவ அரசாங்கங்களின் விடையிறுப்பு என்னவோ அதுதான் லூ மற்றும் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) ஆட்சியின் பதிலாகவும் உள்ளது.

“சமீபத்திய ஆண்டுகளில், தொழிலாளர்களது வருவாய் உயர்வு உற்பத்தி உயர்வை விட வேகமாக இருக்கிறது. இது ஏற்புடையதல்ல,” என்று லூ அப்பட்டமாக அறிவித்தார்.

இந்த நிதி மந்திரியின் கருத்துக்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இன் வர்க்க குணாம்சத்தை எடுத்துக்காட்டுகிறது, அது கடந்த மூன்று தசாப்தங்களில் சீனாவில் முதலாளித்துவ மீட்சி நிகழ்முறைகளினூடாக தங்களைத்தாங்களே செழிப்பாக்கிக் கொண்ட ஒரு சிறிய பெரும்-செல்வந்தர்களுக்காக பேசுகிறது.

குறிப்பிடத்தக்க வகையில், சின்ஹூவா அரசு செய்தி நிறுவனம், தேசிய மக்கள் மாநாடு வெறுமனே ஒரு நாடகபாணியிலான விவகாரம் அல்ல மாறாக "தன்னியல்பான அதிருப்திக்கு" மற்றும் பிரதிநிதிகளுக்கு இடையிலான பலமான விவாதத்திற்கு ஒரு சான்று என்பதை எடுத்துக்காட்ட லூ இன் கருத்துக்களை மேலுயர்த்திக் காட்டியது.

தொழிலாளர் ஒப்பந்த சட்டத்தை விமர்சிப்பது லூ மட்டுமல்ல ஏனைய தேசிய மக்கள் மாநாட்டு பிரதிநிதிகளும், சகல வியாபார முதலாளிமார்களும் அந்த ஒத்துப்பாடலில் இணைந்திருப்பதை அச்செய்தி குறிப்பிட்டுக் காட்டியது.

Anhui Tianfang தேனீர் குழுமத்தை நடத்தி வரும் ஷெங் ஜியாவோ அறிவிக்கையில், "பணியாளர்களை ஒப்பிட்டு நோக்குகையில் பணி வழங்குனர்களின் நிலைமைகளை" அந்த சட்டம் பலவீனப்படுத்துகிறது, மற்றும் அது அவர்களின் பன்முக தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இல்லை, சான்றாக தற்காலிக அல்லது மணித்தியாலய அடிப்படையில் வேலை செய்யும் தொழிலாளர்களைப் போதுமானளவிற்குக் கையாள உகந்ததாக இல்லை,” என்று அறிவித்தார்.

ஒரு சுயதொழில்முனைவரான காவோ யாவே குறை கூறுகையில், “ஒரு பணியாளரை வேலையிலிருந்து நீக்க விரும்பும் ஒரு பணி வழங்குனர் பல கடமைப்பாடுகளின் கீழ் வருகிறார், ஆனால் பணியாளர்கள் வெளியேற விரும்பினால் அவர்கள் அதுபோன்ற கட்டுப்பாடுகளுக்கு உட்படுவதில்லை,” என்றார்.

சீன மக்கள் அரசியல் ஆலோசனை கூட்டமைப்பினது தேசிய குழு அங்கத்தவரும் மற்றொரு முதலாளியுமான ஜிங் யான்சென் கூறுகையில், அந்த சட்டத்தின் சாராம்சம் தொழிலாளர்களைப் பாதுகாப்பதாகும், ஆனால் அது எல்லை மீறி விட்டதால் அதை நீக்கிவிட வேண்டும் என்றார்.

இந்த "எதிர்ப்பு" மற்றும் "சர்ச்சையின்" இத்தகைய அறிகுறிகள் எல்லாம் பெருநிறுவன உயரடுக்கு அங்கத்தவர்களின் நிலைப்பாட்டிலிருந்து வருகின்றன, இவர்கள் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பின் உயர்மட்ட அடுக்குகளுடன் நெருக்கமாக பின்னி பிணைந்துள்ளனர். அந்நாட்டின் மிகச் செல்வசெழிப்பான பில்லியனர்களில் பலர் மற்றும் வியாபார பெருமக்களின் ஒரு நீண்ட பட்டியலில் இருப்பவர்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளாக உள்ளனர்.

ஒரு வியாபார பெண்மணியும் மற்றும் ஷாங்காய் இல் இருந்து வரும் தேசிய மக்கள் மாநாட்டு பிரதிநிதியுமான வான், கடந்த ஆண்டின் பங்கு விலை பொறிவைத் தூண்டிவிட்டதற்காக சந்தை நெறிமுறையாளர்களைக் கடுமையாக திட்டுவதற்காக அம்மாநாட்டின் ஆரம்ப பகுதியைப் பயன்படுத்தினார். “2007 க்குப் பின்னர் இருந்து பங்குச் சந்தை அபிவிருத்தியின் பத்தாண்டுகள் சீன முதலீட்டாளர்கள் கண்ணீர் விட்ட ஒரு தசாப்தமாகும்,” என்றவர் அறிவித்தார்.

கூர்மையான பொருளாதார வளர்ச்சிக் குறைவு நிலைமைகளின் கீழ், இத்தகைய சமூக அடுக்குகள் சமீபத்திய ஐந்தாண்டு திட்டத்திலும் மற்றும் சனியன்று பிரதமர் லீ கெக்கியாங் ஆல் முன்வைக்கப்பட்ட தொழில் அறிக்கையிலும் கொண்டு வரப்பட்ட மறுசீரமைப்பைச் செய்ய மற்றும் சந்தை-சார்பு தாராளமயமாக்கலைத் தீவிரப்படுத்தக் கோரி வருகின்றன.

“தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது" மீதான அக்கறையுடன் நிதி மந்திரி லூவின் எல்லா இடிப்புரைகளைக் கொண்டு பார்த்தால், கனரக தொழில்துறையில் பாரியளவிலான வேலைநீக்கங்கள் மூலமாக சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் மில்லியன் கணக்கான தொழிலாளர்களின் வாழ்வைச் சீரழிக்கத் தயாரிப்பு செய்து வருகிறது. அவரது தொழில் அறிக்கையில், பிரதமர் லீ பாரிய உபரி உற்பத்தித்திறன்களைக் குறைக்க மற்றும் ஒருங்கிணைக்க, மறுஒழுங்கமைப்பு செய்ய அல்லது அரசு நிதியுதவிகள் மூலமாக காப்பாற்றப்பட்டு வருகின்ற "நலிந்த" அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களை மூடுவதற்கான அரசாங்கத்தின் உள்நோக்கத்தை அறிவித்தார்.

அந்த மாநாட்டுக்கு முன்னதாக, வேலைவாய்ப்புத்துறை மந்திரி ஜின் வைமின் எஃகு மற்றும் நிலக்கரித்துறையில் 1.8 மில்லியன் வேலைகளை அழிக்கும் திட்டங்களை அறிவித்தார். கண்ணாடி, சிமெண்ட், கப்பல் கட்டும் துறை, அலுமினியம் மற்றும் ஏனைய கனரக தொழில்துறைகளும், 6 மில்லியன் வேலைகள் வரை வெட்டப்படும் என்ற மதிப்பீட்டுடன், கடுமையான ஆட்குறைப்பை முகங்கொடுக்கின்றன.

செவ்வாயன்று, வடக்கு மாகாணமான ஹெபி (Hebei) ஆளுநர் ஜியாங் குயின்வை கூறுகையில் 2020 க்குள் அம்மாகாணத்தில் உள்ள 400 எஃகு ஆலைகளில் 240 மூடப்படும் என்று அறிவித்தார். அந்த மாகாண அரசாங்கம் மூன்றில் இரண்டு பங்கு சிமெண்ட் உற்பத்தித்திறனைக் குறைக்கும் என்றும், நிலக்கரி மற்றும் கண்ணாடித்துறையில் கடுமையான வெட்டுக்களைத் திணிக்கும் என்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படலாம் என்று ஷாங் மதிப்பிட்டார்.

ஏற்கனவே பொருளாதாரரீதியில் பின்தங்கிய பகுதிகளில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மீது இந்த நடவடிக்கைகள் ஒரு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். பிரதமர் லீ அடுத்த ஐந்தாண்டுகளில் வருடாந்தர வளர்ச்சியை 6.5 சதவீதமாக முன்வைத்த போதினும், சீனாவின் பெரும்பகுதிகளில் பொருளாதார வளர்ச்சிக் குறைந்துள்ளது அல்லது மந்தநிலையில் உள்ளது. அதுவும் இது குறிப்பாக ஹெபி (Hebei) மற்றும் லியோனிங் (Liaoning) உள்ளடங்கிய அந்நாட்டின் வடகிழக்கில் உள்ள மிகவும் நலிந்த மாகாணங்கள் என்றழைக்கப்படுவதன் விடயத்தில் ஆகும்.

கடந்த வாரயிறுதியில் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில் "சீனாவின் இரட்டை-வேக பொருளாதாரம்" என்று தலைப்பிட்ட ஒரு கட்டுரை, ஒரு துயரஞ்செறிந்த சித்திரத்தை வரைந்தது: “சீனாவின் மெதுவான பயணம் நில/கட்டிடம்—எஃகுத்துறை, சிமெண்ட், நிலக்கரி மற்றும் கட்டுமான உபகரணங்களுடன்—தொடர்புபட்ட துறைகளில் உள்ள அரசுக்கு சொந்தமான தொழில்துறை நிறுவனங்களுடன் சேர்ந்து திணறிக் கொண்டிருக்கிறது, இவை அனைத்தும் பாரிய உபரி உற்பத்தித்திறனால் பாதிக்கப்பட்டுள்ளன. வங்கிக் கடன்களாலும் மற்றும் அவற்றை தொடர்ந்து பெற்றுக்கொள்வதாலும், தேவையற்ற செலவுள்ள பொதுத்துறை திட்டங்களது கேட்பாணைகளால் பல இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒரு போலியான பொருளாதாரத்தில் அவை மாயத்தோற்றங்களாகும்.”

மிகப் பெரியளவில் அரசின் ஊக்க செலவினங்கள் மற்றும் ஒரு ஊகவணிக வீட்டுத்துறை குமிழியை எரியூட்டிய மலிவு கடன் வழங்கல் ஆகியவற்றின் அடிப்படையில் 2008 உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர் லியோனிங் வளர்ச்சி பெற்றதாக அக்கட்டுரை விவரித்தது. “தொழில்துறை நகரங்களுக்கு உயிர்கொடுத்து வைக்க சீனா வீண் முதலீட்டு மானியங்களை வழங்கி வந்தால், அதன் நிதியியல் அமைப்புமுறை வெடிப்பதைத் தவிர்க்க முடியாது” என்பதில் அந்த அமெரிக்க நிதியியல் மூலதனத்தின் குரல் எந்த சந்தேகமும் வைக்கவில்லை.

நிதி மந்திரி லூ, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரத்துவத்தின் ஏனையவர்களோடு சேர்ந்து, ஐயத்திற்கிடமின்றி இதை ஒப்புக் கொள்கிறார். இதனால் தான், தயாரிக்கப்பட்டு வருகிற சரமாரியான வேலை நீக்கங்களுக்கு வசதி செய்ய தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்களுக்கு அவர் விடாப்பிடியாக வக்காலத்துவாங்கி வருகிறார். இதுவரையில் அந்த ஆட்சி பின்வாங்கி வந்திருந்தால், அதற்கு காரணம் அந்நடவடிக்கைகளின் விளைவாக பரந்த சமூக கிளர்ச்சி வெடிக்குமென்ற பயம் மட்டுமல்ல, ஒரு பொலிஸ்-அரசு எந்திர கட்டியமைக்க வேண்டியிருந்ததும் காரணமாகும்.

சீனத் தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் சமூக பேரழிவு உலகெங்கிலும் தொழிலாள வர்க்கம் எதை முகங்கொடுத்து வருகிறதோ அதன் பாகமாக உள்ளடங்கி உள்ளது. ஒவ்வொரு நாட்டிலும், பெருநிறுவனங்கள் "சர்வதேச போட்டித்தன்மையைச்" சமாளிப்பதற்குத் தொழிலாளர்கள் அவர்களது சம்பளம், நிலைமைகள் மற்றும் வேலைகளைத் தியாகம் செய்தாக வேண்டுமென வலியுறுத்தி, மோசமடைந்து வரும் உலகளாவிய நெருக்கடியின் சுமையை அரசாங்கங்கள் தொழிலாளர்களின் முதுகில் சுமத்தி வருகின்றன.