ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The way forward after the Brexit referendum

பிரிட்டன் வெளியேறுவதற்கான வாக்களிப்பிற்கு பின்னரான முன்நோக்கிய பாதை

Statement by the Socialist Equality Party (UK)
  27 June 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்துவம் தொடர்பான வாக்களிப்பின் முடிவானது தீவிரமானதொரு ஸ்திரமின்மை மற்றும் அரசியல் கொந்தளிப்பின் காலகட்டத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில், பிரிட்டிஷ், ஐரோப்பிய மற்றும் உலக அரசியலில் நிகழ்ந்துள்ள ஒரு பிரளய நிகழ்வாகும்.

வாக்கெடுப்புக்கு தூண்டுதலளித்த பிரதமர் டேவிட் கேமரூனும் சரி அல்லது விலக வேண்டும் வாக்களிப்பை பிரச்சாரம் செய்தவர்களும் சரி, ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகும் வாக்களிப்பின் பின்விளைவுகள் குறித்து எந்த ஆழ்ந்த சிந்தனையும் கொண்டிருந்திருக்கவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இப்போது, வாக்களிப்பிற்குப் பின்னால், பிரிட்டிஷ் முதலாளித்துவமானது, நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கும் நிலையில் விடயங்களை முழுவதுமாகக் கிரகித்துக் கொள்ள முயற்சித்து திகைத்து தடுமாறிக் கொண்டிருக்கிறது.

நெருக்கடியின் வீச்சு ஃபைனான்சியல் டைம்ஸ்’ பத்திரிகையில் பொருளாதார கட்டுரையாசிரியர்களின் தலைமைப் பொறுப்பில் அமர்ந்திருக்கும் மார்ட்டின் வூல்ஃப் எழுதிய கருத்துகளில் சுட்டிக்காட்டப்படுகிறது. அவர் எழுதினார்: “இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலத்தில் பிரிட்டிஷ் வரலாற்றில் மிக அழிவுகரமான ஒற்றை நிகழ்வு என்றால் அநேகமாக அது இதுவாகத் தான் இருக்கும்.” அவரது சகாவான கீடியோன் ராக்மான், “ஐரோப்பிய ஒன்றியம் முழு வீச்சில் சிதறுவதென்பது இப்போது ஒரு உண்மையான சாத்தியமாகி இருக்கிறது” என்று எச்சரித்தார்.

ஐரோப்பிய ஒன்றியம் மட்டுமல்ல, ஐக்கிய இராச்சியமே கூட உடையும் அபாயத்தில் தான் இருக்கிறது. ஸ்காட்லாந்தில் பெரும்பான்மையான வாக்குகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தொடருவதற்கு ஆதரவாக அளிக்கப்பட்டிருந்த நிலையில், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி, இரண்டாவதாய் ஒரு சுதந்திரமான கருத்துவாக்கெடுப்புக்கு நெருக்குதலளித்து வருவதோடு புரூசேல்ஸ் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்த முனைந்து கொண்டிருக்கிறது. வடக்கு அயர்லாந்தில் கருத்து வாக்களிப்பானது குடியரசுவாதிகளுக்கும் மற்றும் ஒன்றியவாதிகளுக்கும் இடையில் துருவப்பட்டிருந்தது. அது 1998 இல் உள்நாட்டுப் போர் முறையாக முடிவுக்கு வந்ததன் பின்னரான மிகக் கடுமையான நெருக்கடியை எதிர்நோக்கிக்கொண்டிருக்கிறது.

விலக வேண்டும் வாக்களிப்பானது கன்சர்வேடிவ் கட்சியில் தலைமைப் போட்டிக்கு இட்டுச்சென்றிருப்பது மட்டுமல்ல, தொழிற் கட்சியினுள் பிளேயர்வாதிகளின் ஒரு வலது-சாரி கலகம் உருவெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த பிளேர்வாதிகள் கட்சித் தலைவராக ஜெரிமி கோர்பினை அகற்றும் நோக்கத்துடன், நிழல் மந்திரிசபையில் இருந்து 11 இராஜினாமாக்களின் ஆதரவுடன், ஒரு “நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின்” மீது வாக்கெடுப்புக்கு அழைப்பு விடுத்துள்ளனர். ஒரு திடீர் பொதுத் தேர்தல் தொடர்பான ஊகங்கள் அதிகரிப்பதின் மத்தியில் இரண்டு கட்சிகளுமே கூட உடையக் கூடும்.

ஐரோப்பாவில் “தொற்று” பயம். ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் தலைவரான மார்ட்டின் ஷூல்ஸ் போன்ற முன்னணி பிரமுகர்கள், வெளியேற்ற நடவடிக்கைகளை முறைப்படி தொடங்குகின்ற லிஸ்பன் உடன்படிக்கையின் 50 வது பிரிவை பிரிட்டன் தாமதமில்லாமல் அமுலாக்கத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அப்போது தான் நிதியச் சேதத்தை குறைக்க முடியும் என்பதோடு மற்ற நாடுகளுக்கு உதாரணமாகக் கூடிய வகையில் பிரிட்டன் மீது ஒரு கடுமையான கணக்குத்தீர்ப்பை திணிக்கலாம் என்பதே இதன் பின்னிருக்கும் நோக்கமாகும். பிரான்சில் தேசிய முன்னணி, மற்றும் ஸ்லோவேக்கியா, போலந்து, இத்தாலி, நெதர்லாந்து, டென்மார்க் மற்றும் பிறவெங்கிலும் இருக்கக் கூடிய இதேபோன்ற கட்சிகள் உள்ளிட, அதி-வலது சக்திகள் இப்போது தத்தமது நாடுகளில் கருத்து வாக்கெடுப்பை கோரிக் கொண்டிருக்கின்றன.

புவியரசியல் உறவுகள் ஸ்திரம் குலைந்திருக்கின்றன. ஐரோப்பாவில் பிரிட்டன் நங்கூரமிடப்பட்டதாக இல்லாது போனால், பிரான்சுக்கும் அதனை விட கூடுதல் சக்திவாய்ந்த ஜேர்மனிக்கும் இடையிலான உறவுகள் இன்னும் மோசமடையும். அதே அளவுக்கு, பிரிட்டன் ஒரு பாலமாக இருக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளும் சீர்குலையும்.

ஐக்கிய இராச்சியத்தில், ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கு வாக்களித்த சிலரிடமே கூட, பிரெக்ஸிட் விளைபயனால் பரவலான அதிர்ச்சியும் கோபமும் இருக்கிறது. பொருளாதாரப் பேரழிவு மற்றும் இந்த வாக்களிப்பானது வலது-சாரி, புலம்பெயர்ந்தோர்-விரோத தேசியவாதிகளுக்கு அளித்திருக்கக் கூடிய ஊக்கம் ஆகியவை குறித்த வெளிப்பட்ட எச்சரிக்கைகளுக்கு மத்தியில், மில்லியன்கணக்கானோர் எதிர்காலத்தை குறித்து அச்சப்படுகின்றனர். இன்னொரு வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு ஆதரவான ஒரு மனு சுமார் மூன்று மில்லியன் வாக்குகளை ஆதரவை பெற்றிருக்கிறது.

விலக வேண்டும் வாக்களித்தவர்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தது என்பது சில மணி நேரங்களுக்குள்ளாகவே வெட்டவெளிச்சமாகியது. UKIP தலைவரான நைஜல் ஃபராஜும் விலக வேண்டும் பிரச்சார முன்னணி ஆதரவாளரான வலது-சாரி டோரி இயன் டங்கன் ஸ்மித்தும் பிரிட்டனின் தேசிய சுகாதார சேவைக்குள்ளாக ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிகளைப் பாய்ச்சுவதற்கு தாங்கள் அளித்த வாக்குறுதி ஒரு பொய் என்பதை ஒப்புக்கொண்டனர்.

ஆளும் உயரடுக்கு “தேசிய நலனுக்காக” இன்னும்பெரிய தியாகங்களை செய்யக் கோரி வருவதால், தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் இன்னும் தீவிரமடையும் என்பது மட்டுமே இந்த சூழ்நிலையில் நிச்சயமான ஒரே விடயமாக இருக்கிறது.

தொடர வேண்டும் என்பதற்கு ஆதரவாய் பெருவாரியாய் வாக்களித்திருந்த இளம் தலைமுறையிடையே இந்த வாக்கெடுப்பு முடிவு மீதான கோபம் மிகவும் திட்டவட்டமானதாய் இருக்கிறது. பல சிந்திக்கக் கூடிய தொழிலாளர்களையும் நடுத்தரவர்க்க தொழில்முறை பணியாளர்களையும் போல, “தொட முடியாத உயரத்திலிருக்கும் உயரடுக்கின்” பாகமாய் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் இந்த வாக்கினை அளித்திருக்கவில்லை, மாறாக விலக வேண்டும் பிரச்சாரத்தின் தலைவர்கள் கிளப்பிய அந்நியரச்சத்தின் மீதும் அதிவலதுகளுக்கு அவர்கள் வழங்கிய ஊக்கத்தின் மீதும் - வாக்களிப்புக்கு ஒரு வாரம் முன்னதாய் தொழிற் கட்சியின் எம்பியான ஜோ ஹொக்ஸ் அரசியல் படுகொலை செய்யப்பட்டதில் இது தெளிவாய் விளங்கப்பட்டது - அவர்கள் வெறுப்படைந்திருந்ததாலேயே அவர்கள் தொடர வேண்டும் என்று வாக்களித்திருந்தனர்.

நடமாட்ட சுதந்திரத்தை உத்திரவாதமளிக்கின்ற ஒரு பரந்த ஐரோப்பிய சமுதாயமே “Little Englander” என்ற பேரினவாதத்தைக் காட்டிலும் கூடுதல் முற்போக்கானது என்ற அவர்களது முற்றிலும் ஆரோக்கியமான நம்பிக்கையானது, முன்னணி தொழிற் கட்சியினர் மற்றும் டோரிக்களால், வாக்களிப்பு முடிவை பல்வேறு பொறிமுறைகள் மூலம் தலைகீழாக்குவதற்கு விடுக்கப்படுகின்ற அழைப்புகளின் மூலமாக இப்போது சுரண்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.

ஆயினும், பிரெக்ஸிட் வாக்களிப்பு சம்பந்தமாக மார்பில் அடித்து புலம்புகின்ற அரசியல்வாதிகளும் ஊடக அறிஞர்களும் ஐரோப்பிய ஒன்றியத் திட்டம் இத்தனை பரந்த அளவில் மக்களின் வெறுப்புக்குரியதானது எப்படி என்பதை விளக்க முடிவதில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தை நன்மையான ஒரு சக்தியாக காட்டிய தொடர வேண்டும் பிரச்சாரமானது, விலக வேண்டும் என்ற எதிரிகளினதைப் போலவே நேர்மையற்றதாக இருந்தது என்ற காரணத்தால்தான் அவர்களுக்கு அவ்வாறு விளக்க முடியாமல் இருக்கிறது.

விலக வேண்டும் வாக்களிப்பானது சமூக துயரநிலையின், குறிப்பாக தொழிலாளர்களின் மிக வறுமைப்பட்ட அடுக்குகளிடம் இருந்தான கூக்குரலாகும். ஐரோப்பிய ஒன்றியமானது, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களில் காட்டக் கூடிய இரக்கமின்மையில் பிரிட்டனில் இருக்கும் டோரிக்களுக்கு கொஞ்சமும் சளைத்ததில்லை என்பதை, எல்லாவற்றுக்கும் முதலாய் கிரீசை அது அழித்ததில், அவர்கள் அறிவர். தொடர வேண்டும் பிரச்சாரம், உலகத் தலைவர்கள் மற்றும் வங்கியாளர்களது அதிகாரநிலைகளை மேற்கோள் காட்டி ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அளிக்கும் பாராட்டுமொழிகள், பல வருடங்களாய் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்கள் இடையே ஒருபோதும் ஆதரவை வெல்ல முடியாது.

வாக்களிப்பு முடிவுகள் வெறுமனே அல்லது பிரதானமாக கேமரூனின் ஒரு தவறான அரசியல் கணிப்பினாலோ, அல்லது ஃபராஜ், போரிஸ் ஜோன்சன் மற்றும் குழாமினரின் பிற்போக்குத்தனமான பிரச்சாரத்தாலோ விளைந்ததல்ல. மிக அடிப்படையாய், அது ஐரோப்பிய ஐக்கியப்படுத்தல் என்ற போருக்குப் பிந்தைய திட்டத்தின் தோல்வியில் இருந்து எழுகிறது.

உலகத்தை இரண்டு முறை முழுவீச்சிலான போருக்குள் மூழ்கடித்திருந்த தேசிய மோதல்களின் ஒரு வெடிப்பு மீண்டும் தோன்றுவதைத் தடுப்பதற்கு, அமெரிக்காவின் ஆதரவுடன், கண்டத்தின் ஆளும் வர்க்கங்கள் செய்த முயற்சியாக இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கை இருந்தது. ஆயினும், முதலாளித்துவத்தின் கட்டமைப்புக்குள், ”ஐக்கியம்” என்பது மிகச் சக்திவாய்ந்த தேசங்கள் மற்றும் பெருநிறுவனங்கள் கண்டத்தின் மீதும் அதன் மக்களின் மீதும் செல்வாக்கு செலுத்துவது என்பதைத் தவிர்த்து வேறு எந்த அர்த்தத்தையும் ஒருபோதும் வழங்கியிருக்கவில்லை.

இப்போது நடைபெறுகின்ற விதமாக தேசிய எல்லைகளின் ஊடாக ஐரோப்பிய ஒன்றியம் உடைவது என்பது தடுத்து நிறுத்தவியலாமல் மீண்டும் போருக்குச் செலுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் பழையபடி ஒன்றிணைக்கப்பட முடியாது. உலகப் பொருளாதாரத்தின் ஒருங்கிணைந்த தன்மைக்கும், உற்பத்தி சாதனங்களின் தனியார் சொத்துடைமையை அடிப்படையாகக் கொண்ட குரோதமான தேசிய அரசுகளாய் உலகம் பிளவுபட்டுக் கிடப்பதற்கும் இடையிலான அடிப்படை முரண்பாட்டில் வேரூன்றியிருக்கின்ற காரணத்தால் முதலாளித்துவத்திற்குள்ளாக தீர்க்கப்படவியலாததாக இருக்கின்ற ஒரு விரிந்த நெருக்கடியையே பிரெக்ஸிட் முடிவு வெளியில் கொண்டுவந்திருக்கிறது.

ஐரோப்பா ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். ஆயினும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல்தரப்பட்ட ஸ்தாபகங்களைப் பாதுகாப்பதற்கு செய்யப்படுகின்ற முயற்சிகளின் மூலமாகவோ அல்லது மற்ற அதிகாரத்துவ பொறிமுறைகளின் மூலமாகவோ ஒரு முற்போக்கான அடிப்படையில் இது செய்யப்பட இயலாது. ஐரோப்பாவின் முற்போக்கான மற்றும் ஜனநாயகரீதியான ஐக்கியப்படுத்தலானது கீழிருந்து, கண்டமெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் தலைமையில் சோசலிசத்துக்காக நடத்தப்படுகின்ற ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலமாக மட்டுமே சாதிக்கப்பட முடியும்.

ஐரோப்பிய சோசலிச அரசுகளின் ஒன்றியத்துக்கான போராட்டத்தில் ஐரோப்பியத் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்துவதே அவசரமான கடமை ஆகும்.

தொடர வேண்டும் முகாமும் சரி விலக வேண்டும் முகாமும் சரி தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை என்பதை விளக்கி, இந்த வாக்கெடுப்பை செயலூக்கத்துடன் புறக்கணிப்பதற்கு சோசலிச சமத்துவக் கட்சி முன்மொழிந்தது. தொழிற் கட்சியும் தொழிற்சங்க காங்கிரசும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்னால் அணிவகுத்தன, “இடது விலக வேண்டும்” வாக்களிப்பை ஆலோசனையளித்தவர்கள் டோரி வலது மற்றும் UKIP இன் அதிதேசியவாதிகளின் பக்கம் சாய்ந்தனர். இந்த பெரும் அரசியல் காட்டிக் கொடுப்பு தான் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான எதிர்ப்பில் வலதுகள் மேலாதிக்கம் செலுத்துவதை அனுமதித்தது.

”இடது” தேசியவாத பிரச்சாரகர்களை எதிர்ப்பது தான் SEP கையிலெடுத்த மிக முக்கியமான சவாலாக இருந்தது. வலதுகளிடம் இருந்தான அபாயங்களைக் குறித்து அறியாத மயக்கத்தில் தொழிலாள வர்க்கத்தை ஆழ்த்துவதற்கு சோசலிஸ்ட் கட்சியும், சோசலிச தொழிலாளர் கட்சியும் மற்றும் பிற போலி-இடது குழுக்களும் தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தன. டோரி கட்சியிலான ஒரு பிளவு கேமரூனின் இடத்தில் ஜோன்சன் அமர்த்தப்படுவதற்கான அடிப்படையை வழங்கி, கோர்பின் தலைமையிலான ஒரு தொழிற் கட்சி அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படுவதை துரிதப்படுத்தும் என்ற ஒரு பொய்யான முகாந்திரத்தினைக் கூறி விலக வேண்டும் வாக்களிப்புக்கு இவை ஆலோசனையளித்தன. இந்த கற்பனைச் சித்திரம் உடைந்து நொறுங்க 48 மணி நேரம் கூட பிடிக்கவில்லை, வலதுகளிடம் கோர்பினின் முடிவில்லாத சரணாகதிகள் அரண்மனை பதவிக்கவிழ்ப்பு முயற்சிக்கு ஊக்கமளித்துள்ளது.

ஜோர்ஜ் காலோவே ஆற்றிய பாத்திரத்தில் இருந்து ஒரு குறிப்பான எச்சரிக்கை எடுத்துக் கொள்ளப்பட்டாக வேண்டும். UKIP உடன் வெளிப்படையாக கூட்டு சேர்ந்த அவர் ஐரோப்பாவிற்குள்ளாக தொழிலாளர்களது சுதந்திரமான நடமாட்டத்திற்கான தனது எதிர்ப்பையும் அறிவித்தார். ஜூன் 23 ஐ பிரிட்டனின் “சுதந்திர தினம்” என அவர் பிரகடனம் செய்தமையானது திரும்பவழியற்ற பாதைக்குள் முன்னேறிச் சென்றதாகும். காலோவே மட்டுமல்ல, போலி-இடதுகளின் ஒரு ஒட்டுமொத்த பிரிவுமே தேசியவாத பிற்போக்குத்தனத்தின் முகாமுக்குள் பயணித்துக் கொண்டிருக்கிறது.

SEP எடுத்த நிலைப்பாட்டின் முழுமையான முக்கியத்துவம் இன்னும் தெளிவாகவிருக்கின்றன. வரலாற்றுரீதியாக அபிவிருத்திசெய்யப்பட்ட மார்க்சிச கோட்பாடுகளால் புரிந்துணரப்பட்டும் வழிநடத்தப்பட்டும், வர்க்க சக்திகளின் சமநிலை குறித்த ஒரு ஸ்தூலமான ஆய்வை அடிப்படையாகக் கொண்டு, அரசியல்ரீதியாக நனவுள்ள, சுயாதீனமான தொழிலாள-வர்க்க இயக்கம் உருவெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை SEP வெளிப்படுத்தியது.

அதன் மூலமாக, நாங்கள் வருங்காலத்திற்கான ஒரு அடையாளக்குறியை இட்டதோடு தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய அரசியல் பாதையைத் திறப்பதற்கும் உதவினோம். ஒரு செயலூக்கமான புறக்கணிப்புக்கான பிரச்சாரம், பிரிட்டனிலும் மற்றும் ஐரோப்பாவெங்கிலும் ஒரு சோசலிச மற்றும் சர்வதேசிய முன்னோக்கிற்காகவும் அத்துடன் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளாக சோசலிச சமத்துவக் கட்சிகளைக் கட்டியெழுப்புவதற்காகவுமான போராட்டத்தின் மூலமாய் ஒரு நேர்மறையான கொள்கையாக இப்போது அபிவிருத்தி செய்யப்பட்டாக வேண்டும்.