ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

The Brexit referendum: A turning point in European politics

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பு: ஐரோப்பிய அரசியலில் ஒரு திருப்புமுனை

Chris Marsden
  23 June 2016

ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்து தொடர்ந்து அங்கத்துவம் வகிப்பது மீதான இன்றைய வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், அது பிரிட்டனிலும் மற்றும் அக்கண்டம் முழுவதிலுமான அரசியல் வாழ்வில் ஒரு கூரியதிருப்பத்தை குறிக்கிறது.

பழமைவாத பிரதம மந்திரி டேவிட் கேமரூன் கட்சியினது யூரோ-ஐயுறவுவாத அணியைச் சாந்தப்படுத்துவதற்கும் மற்றும் டோரியை விலையாக கொடுத்து அந்த அடித்தளத்தில் இங்கிலாந்து சுதந்திர கட்சி (UKIP) கூடுதலாக ஆதாயமடைவதைத் தடுப்பதற்கும் அவர் இந்த வெகுஜன வாக்கெடுப்புக்கு அழைப்புவிடுத்தார். அவரது இந்த பேரழிவுகரமான அரசியல் கணக்கீட்டு பிழை, அதற்கு மாறாக பழமைவாதிகளை இரண்டாக பிளவுபடுத்துவதற்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் உடைவைத் துரிதப்படுத்துவதற்கும் மற்றும் உலகளாவிய ஒரு பிரதான பொருளாதார நெருக்கடியைத் தூண்டுவதற்கும் அச்சுறுத்துகின்றது.

பொருளாதாரரீதியில், ஒருங்கிணைந்த ஐரோப்பிய சந்தையின் பாகமாக இருப்பதன் மூலமாக பிரிட்டிஷ் முதலாளித்துவ வர்க்கத்திற்கு சிறந்த ஆதாயம் கிடைக்குமா அல்லது, வெளியேறுவதற்கு வக்காலத்துவாங்குபவர்களின் வார்த்தைகளில், சீனா, இந்தியா மற்றும் காமன்வெல்த் நாடுகளில் கிடைக்கும் வாய்ப்புகளை சிறப்பாக சுரண்டுவதற்காக "ஐரோப்பாவிலிருந்து விலகி உலகில்" அதன் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதன் மூலமாக சிறந்த ஆதாயம் கிடைக்குமா என்பது பற்றியே உண்மையான மோதல் நடந்து வருகின்றன.

கேமரூன் மற்றும் தொழிற் கட்சி தலைவர் ஜெர்மி கோர்பின் தலைமையிலான தங்கியிருப்பதை ஆதரிக்கும் தரப்பும் சரி, டோரி போரிஸ் ஜோன்சன் மற்றும் UKIP தலைவர் நைஜல் ஃபாராஜ் தலைமையிலான வெளியேறுவதை ஆதரிக்கும் தரப்பும் சரி, இரண்டு தரப்புமே, வேலைகள் மற்றும் அத்தியாவசிய சமூக சேவைகளைப் பாதுகாப்பதும் மற்றும் செல்வசெழிப்பை உறுதிப்படுத்துவதுமே அவற்றின் நிஜமான கவலைகள் என்ற பொய்களை போர்த்தி உள்ளனர்.

யதார்த்தத்தில், ஒன்றியத்தில் இருக்கலாம் என்பவர்களால் பாதுகாக்கப்படும் ஐரோப்பிய ஒன்றியம் என்பது கிரீஸில் மிகவும் கொடூரமாக எடுத்துக்காட்டப்பட்டதைப் போல கடுமையான சிக்கன திட்டங்களை திணிப்பதற்கான ஒரு கருவியாகும். ஆனால் வெளியேறலாம் என்பவர்கள் தொழிலாளர் சட்டமசோதாவில் கொஞ்ச நஞ்சமாக என்ன மிஞ்சி இருக்கிறதோ அவற்றிலிருந்து பெரு வணிகங்களை மற்றும் இலண்டன் நகரை விடுவிக்கவும் மற்றும் தொலைதூர கிழக்கில் உள்ள தொழிலாளர்கள் முகங்கொடுக்கும் மட்டத்திற்கு நிலைமைகளைக் கொண்டு வருவதற்கும் மட்டும் விரும்புகிறது. எந்த அணி ஜெயித்தாலும், தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல் ஜூன் 24 இல் இருந்து வெறியோடு மீண்டும் தொடங்கிவிடும்.

ஆயுதப் படைகளின் முன்னணி பிரமுகர்களும் மற்றும் பாதுகாப்பு சேவைகளான MI5 மற்றும் MI6 இன் முன்னணி பிரமுகர்களும் அரசியல் வாழ்விற்குள் இந்தளவிற்கு ஒருமித்து தலையீடு செய்வது இதற்கு முன்னர் ஒருபோதும் இருந்ததில்லை. இரண்டு தரப்புமே நேட்டாவிற்கான அவற்றின் கடமைப்பாடுகளையும், ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக நடந்துவரும் தாக்குதலையும் அதிகாரபூர்வமாக அறிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டிஷ் அங்கத்துவம் வகிப்பதும் மற்றும் பொதுவாக ஐரோப்பிய ஒன்றியமும் நேட்டோவை பலப்படுத்துவதாக, தங்கியிருக்கலாம் எனும் முகாம் வாதிடுகின்றது, அதேவேளையில் வெளியேறலாம் எனும் முகாம், பிரிட்டிஷ் அங்கத்துவமானது அனைத்திற்கும் மேலாக ஜேர்மனியால் அழுத்தமளிக்கப்படும் ஓர் ஐரோப்பிய இராணுவத்தை உருவாக்கும் திட்டங்களுடன் இங்கிலாந்தை கட்டிப்போடுகின்றது என்றும், இது நேட்டோவைப் பலவீனப்படுத்தும் என்பதுடன் அக்கண்டம் முழுவதிலும் ஜேர்மனியின் சவாலுக்கிடமற்ற மேலாதிக்கத்தை நிறுவும் பேராபத்தை உயர்த்தும் என்றும் வாதிடுகின்றது.

வர்க்க போர், வர்த்தக போர் மற்றும் இராணுவப் போரின் இத்தகைய அரசியல் யதார்த்தங்களை மூடிமறைக்க, மற்றும் தொழிலாள வர்க்கத்திற்குள் பிளவுகளை விதைக்க, இந்த வெகுஜன வாக்கெடுப்பானது தேசியவாதம் மற்றும் வெளிநாட்டவர் விரோத போக்கைத் தூண்டுவதன் மீது அதிகரித்தளவில் ஒருமுகப்பட்டுள்ளது.

ஆளும் உயரடுக்கு மற்றும் அதன் கட்சிகளால் திணிக்கப்பட்ட கடுமையான சிக்கன நடவடிக்கைகளால் விளைந்த பல சமூக பிரச்சினைகளுக்கு மீண்டும் மீண்டும் புலம்பெயர்ந்தவர்கள் மீது பழிசுமத்தப்படுகிறது. புலம்பெயர்வோர்-விரோத நடவடிக்கைகளுக்கு சுருள் கம்பி வேலிகள், துப்பாக்கிப் படகுகள் மற்றும் அடைப்பு முகாம்கள் சூழ்ந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் "படையரண் ஐரோப்பா" அவசியப்படுகிறதா அல்லது இங்கிலாந்து அதன் எல்லைகள் மீது அதுவே "திரும்ப கட்டுப்பாட்டை எடுத்து,” பிரிட்டனுக்குள் ஐரோப்பிய தொழிலாளர்களது சுதந்திர நகர்வை முடிவுக்குக் கொண்டு வர வேண்டுமா என்பதில் மட்டுந்தான் தங்கியிருக்கலாம் மற்றும் வெளியேறலாம் அணிகள் வேறுபடுகின்றன.

இது உருவாக்கி உள்ள விஷம் ஊறிய பதட்டம், அதாவது நாஜி பிரச்சார வாடை வீசும் UKIP இன் பிரச்சார ஆவணம் போன்றவை, சமூக மற்றும் அரசியல் வாழ்வைக் களங்கப்படுத்தி, தீவிரவலதின் சக்திகளைப் பலப்படுத்துகின்றன.

கடந்த வியாழனன்று ஒரு பாசிசவாதியால் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ கொக்ஸ் படுகொலை செய்யப்பட்டமை, தேசியவாத பிற்போக்குத்தனத்திற்குள் கீழிறங்குவதன் விளைவுகள் குறித்து தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுக்கு ஒரு மரணகதியிலான எச்சரிக்கையாகும். அது இங்கிலாந்தில் வர்க்க போராட்டத்தின் ஒரு புதிய கட்டத்தை குறிக்கிறது, இது முன்பினும் அதிக மூர்க்கமான வடிவங்களை எடுக்கும்.

கொக்ஸ் இன் படுகொலை மனம் குழம்பிய தனியொருவரின் நடவடிக்கை அல்ல, மாறாக அதுவொரு அரசியல் படுகொலையாகும். அது புலம்பெயர்வோரை இடைவிடாது பலிக்கடா ஆக்கியதன் மூலமாக, தேசியவாதத்தைத் தூண்டிவிட்டதன் மூலமாக மற்றும் தொழிலாள வர்க்கத்தை முடமாக்கியதன் மூலமாக தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் தசாப்தங்களாக தயாரிப்பு செய்யப்பட்டது, இவை அடிமட்டத்திலிருந்து நடைமுறைரீதியில் ஒரு சவால் எழாதவாறு சமூக பிற்போக்குத்தனம் ஆழமடைய அனுமதித்துள்ளன. எவ்வாறிருப்பினும் வெகுஜன வாக்கெடுப்பு பிரச்சாரத்தின் அருவருக்கத்தக்க பிரச்சாரம் இந்த படுகொலை வன்முறையை தூண்டுவதில் எந்த பங்கும் வகிக்கவில்லை என்று கூறுபவர்கள் அனைவரும் அவர்களது சொந்த அரசியல் பொறுப்புக்களை மூடிமறைக்க பொய் உரைத்து வருகிறார்கள்.

குறிப்பாக போலி-இடது குழுக்கள், அவை ஐரோப்பிய ஒன்றிய சார்பிலான அதிலேயே தங்கியிருக்கலாம் திட்டநிரலுடன் அணி சேர்ந்தும் அல்லது ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு முகாமை ஆதரித்து டோரி வலது மற்றும் UKIP ஐ தொழிலாளர்களின் "நண்பர்களாக" சித்திரிக்க அனுமதித்தும், குற்றகரமான பாத்திரம் வகித்துள்ளன.

அனைத்திற்கும் மேலாக சோசலிஸ்ட் தொழிலாளர் கட்சி மற்றும் சோசலிஸ்ட் கட்சி போன்ற இடதிலிருந்து வெளியேறலாம் எனும் பிரச்சாரத்தை ஒழுங்கமைப்பவர்களுக்கும் இது பொருந்தும். டோரிக்களை பிளவுபடுத்துவதற்கும் மற்றும் தொழிற் கட்சி அரசாங்கத்தை அதிகாரத்திற்குக் கொண்டு வருவதற்கும் அரசியல் கோட்பாடுகளை வெகுஜன வாக்கெடுப்பு மீதான நம்பிக்கைக்கு அடிபணிய செய்யலாம் என்ற அவர்களது வலியுறுத்தல், முதலாளித்துவ வர்க்கத்தின் மிகவும் பிற்போக்குத்தனமான பிரிவுகளுடனான ஓர் அரசியல் கூட்டணியை நியாயப்படுத்த பயன்படுத்தப்படுகிறது.

இதில் எதுவும் தற்செயலானதல்ல. முன்னாள் தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோர்ஜ் கலோவே (George Galloway) ஃபாராஜ் உடனான ஒரு அரங்கில் "ஜூன் 23 வெற்றிக்காக இடது, வலது, இடது வலது என முன்னோக்கி அணிவகுக்கவும்" என்று அறிவித்த போது, அவர் வெறுமனே இங்கிலாந்தில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் எழுச்சி கண்டு வரும் ஓர் அரசியல் போக்குக்கு —அதாவது இடது பிரமுகர்கள் என்று பாசாங்குத்தனமாக காட்டிக்கொண்டு தேசியவாதத்தின் அடிப்படையில் வலது மற்றும் தீவிர-வலது போக்குகளுடன் மறுஅணிசேரும் ஒரு போக்கிற்கு— குரல் கொடுத்தார்.

2014 இல் உக்ரேனில், வாஷிங்டன் வடிவமைத்த "யூரோ மைதான்" (Euromaidan) ஆட்சிக்கவிழ்ப்பு சதி என்றழைக்கப்பட்ட ஸ்வோபொடா மற்றும் அதேபோன்ற பாசிசவாத குழுக்கள் உடனான ஒரு கூட்டணியின் வடிவத்தை இது எடுத்தது. கிரீஸில், இது சிரிசா மற்றும் சுதந்திர கிரேக்கர்கள் இடையிலான ஒரு தேர்தல் கூட்டணியாக உருவெடுத்தது. இங்கிலாந்தில், போலி-இடது பிரிவுகள், சில ஸ்ராலினிச-தலைமையிலான தொழிற்சங்கங்கள் உடன் சேர்ந்து, போரிஸ் ஜோன்சன் மற்றும் ஃபாராஜ், அவர்களது "மில்லியன் கணக்கான வாக்காளர்களுடன்", கேமரூனை பதிவியிலிருந்து கீழிறக்கும் பொறுப்புக்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்று வாதிடுகின்றன. ஐரோப்பிய தொழிலாளர்களின் சுதந்திர நகர்வை முடிவுக்குக் கொண்டு வருவது உட்பட தொழிற் கட்சி அரசாங்கத்தால் தேசிய பாதுகாப்புவாத நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களது வெளியில் கூறப்பட்ட அல்லது கூறப்படாத நோக்கமாகும்.

இத்தகைய வலதுசாரியை நோக்கி திரும்பும் சக்திகளிடம் இருந்து சமூக சமத்துவக் கட்சியை (SEP) ஒரு இணைக்க முடியாத இடைவெளி பிரிக்கின்றது. அவை, பூகோளமயப்பட்ட சக்திகளுக்கு எதிரான ஒரு கவசமாக கருதப்படும் தேசியம் என்பதற்குள் திரும்புவதன் மூலமாக மற்றும் வர்க்க சமரசம் மூலமாக தங்களுக்குக் கிடைக்கும் தனிச்சலுகைகளைப் பேணிப் பாதுகாக்க விரும்பும் ஒரு செல்வ செழிப்பான நடுத்தர வர்க்கத்தின் முயற்சிகளை வெளிப்படுத்தி காட்டிகின்றன.

சோசலிச சமத்துவக் கட்சியோ, பூகோளரீதியில் ஒழுங்கமைந்த முதலாளித்துவத்திற்கு எதிராக ஐரோப்பிய மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியத்திற்கான ஒரு போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி உள்ளது. அது வெகுஜன வாக்கெடுப்பில் ஆளும் வர்க்கத்தின் எந்தவொரு அணிக்கும் ஒரு துளி ஆதரவும் வழங்கவில்லை. தொழிலாள வர்க்கத்தின் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதற்கான ஒரு வழிவகையாக, செயலூக்கத்துடனான புறக்கணிப்புக்கு நாம் அழைப்புவிடுத்துள்ளோம்.

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்பானது, உலகின் சந்தைகள் மற்றும் மூலோபாய ஆதாரவளங்களின் மீது மேலாதிக்கம் செலுத்த போட்டியிடும் ஏகாதிபத்திய சக்திகளின் உந்துதலால் உருவாகி ஆழமடைந்துவரும் விரோதங்களின் ஒரு விளைபொருளாகும். இந்த மோதல் தான் முதலாளித்துவ அடிப்படையில் அக்கண்டத்தை பொருளாதாரரீதியில் மற்றும் அரசியல்ரீதியில் ஐக்கியப்படுத்துவதற்கான சகல முயற்சிகளையும் பேராபத்தாக பலவீனப்படுத்துகிறது. தொழிலாள வர்க்கம் தலையிடாவிட்டால், இது ஐரோப்பாவை பால்கன்மயப்படுத்துவதிலும் மற்றும் இரண்டு உலக போர்களுக்கு இட்டுச் சென்ற நிலைமைகளுக்குள் வேகமாக வீழ்ச்சியடைய செய்வதிலும் போய் முடியும்.

முதலாளித்துவ வர்க்கம் முகங்கொடுக்கும் இந்த நெருக்கடியானது, வேலைகள், கூலிகள் மற்றும் சமூக நிலைமைகள் மீது முன்பினும் அதிகமாக மூர்க்கமான தாக்குதல்களைத் தொடங்குவதற்கும், சர்வாதிபத்திய ஆட்சி வடிவங்களை நோக்கி நகர்வதற்கும், மில்லியன் கணக்கானவர்கள் எதிர்க்கும் காலனித்துவ ஆக்கிரமிப்பு போர்களில் ஈடுபடுவதற்கும் அதை உந்துகிறது. கிரீஸ், பெல்ஜியம் மற்றும் பிரான்சில் வெடித்த எதிர்ப்பில் நிரூபிக்கப்பட்டு வருவதைப் போல, இது, கண்டம் முழுவதிலும் முதலாளித்துவத்திற்கு எதிரான சமூக மற்றும் அரசியல் போராட்டம் வெடிப்பதற்கான புறநிலைமைகளை உருவாக்குகிறது.

தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முன்னிருக்கும் பணி புதிய எல்லைகளை உருவாக்குவதல்ல, மாறாக அவற்றை அகற்றுவதாகும்; ஐக்கிய ஐரோப்பிய சோசலிச அரசுகளுக்குள் தொழிலாள வர்க்க ஆட்சியைக் கொண்டு ஐரோப்பிய ஒன்றிய எஜமானர்களைப் பிரதியீடு செய்வதாகும். இதற்காக, சோசலிச சமத்துவக் கட்சி எடுத்திருக்கும் நிலைப்பாடு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. அது இங்கிலாந்து தொழிலாளர்களுக்கு மட்டுமல்ல, மாறாக ஐரோப்பா முழுவதிலுமான தொழிலாளர்களுக்கு ஒரு முன்னோக்கிய பாதையைக் காட்டுகிறது.