ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Worst-ever US mass shooting Gunman massacres 50 in Orlando nightclub

அமெரிக்க மக்கள் மீது படுமோசமான முன்நிகழ்ந்திராத துப்பாக்கிச்சூடு சம்பவம்

ஓர்லாந்தோ இரவு விடுதியில் துப்பாக்கிதாரி 50 பேரை சுட்டுக் கொன்றார்

By Bill Van Auken
  13 June 2016

ஒரு அரக்கத்தனமான மற்றும் பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக, கனரக ஆயுதமேந்திய தனியொரு துப்பாக்கிதாரி, புளோரிடாவின் ஓர்லாந்தோவில் Pulse எனும் ஒரு LGBT இரவு உல்லாச விடுதியில் ஞாயிறன்று அதிகாலை 50 பேரை படுகொலை செய்தார் மற்றும் 53 க்கும் அதிகமானவர்கள் அந்நடவடிக்கையில் காயமடைந்தனர். ஓர் இராணுவ ரக A-15 தாக்குதல் துப்பாக்கியால் சுட்டதில் உயிருக்கு ஆபத்தான குண்டு காயங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன, இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறு அதிகமுள்ளது.

அந்த சம்பவம் நடந்து சில மணிநேரங்களுக்கு உள்ளேயே, இன்றைய நிலையில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக கருதப்படுபவர்கள் உள்ளடங்கலாக முன்னணி அமெரிக்க அரசியல் முக்கியஸ்தர்கள் மற்றும் ஊடகங்களின் எதிர்வினையானது, இந்த பாரிய படுகொலை நடவடிக்கை வெளிநாடுகளில் போரை ஊக்குவிக்கவும் மற்றும் உள்நாட்டில் அரசு ஒடுக்குமுறையைத் தீவிரப்படுத்தவும் முழுமையாக சாதகமாக்கிக் கொள்ளப்படும் என்பதை தெளிவாக்குகிறது.

ஒமர் மதீன் என்று அடையாளம் காணப்பட்டுள்ள, 29 வயதான, ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவர்களது மகனும் அமெரிக்க பிரஜையும் ஆன அந்த துப்பாக்கிதாரியும் அந்த துப்பாக்கிச்சண்டையில் ஓர்லாந்தோ SWAT பொலிஸ் பிரிவு ஒன்றால் கொல்லப்பட்டார்.

அந்த துப்பாக்கிச்சூட்டின் அந்நேரத்தில், “ஓர்லாந்தோவின் பிரபல ஓரின சேர்க்கையாளர்களது இரவு விடுதி" என்று அதனை காட்டிக்கொள்ளும் அந்த இரவு விடுதியில் 350 க்கும் அதிகமானவர்கள் ஒரு லத்தீன் இசை நிகழ்ச்சிக்காக அங்கே குழுமியிருந்தனர். பொலிஸ் வெளியிட்ட பலியானவர்களின் முதல் பட்டியல், பலியானர்களில் பலர் ஹிஸ்பானியர்கள் என்பதை எடுத்துக்காட்டியது.

ஞாயிறன்று வெளியான செய்திகளின்படி, மதீன் தாக்குதல் நடத்திய போது 911 அவசர எண்ணுக்கு அழைத்து, தான் ISIS க்கு (ஈராக் மற்றும் சிரியாவின் இஸ்லாமிய அரசு) விசுவாசமானவர் என்று அறிவித்ததுடன், போஸ்டன் தொடர் ஓட்ட பந்தய குண்டுதாரிகளையும் குறிப்பிட்டிருந்தார். அத்தாக்குதலுக்கு சில மணி நேரங்களிலேயே, ISIS அத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டது. அந்த படுகொலைகள் "இஸ்லாமிய அரசின் போராளி ஒருவரால் நடத்தப்பட்டது" என்று அது அறிவித்தது. இந்த பெருமைபீற்றலின் உண்மை என்னவாக இருந்தாலும், இரக்கமற்ற முறையில் 50 அப்பாவி மக்களைப் படுகொலை செய்து ISIS அதை கொண்டாடுவது, முற்றிலுமாக இந்த அமைப்பின் வலது சாரி குணாம்சத்தை மட்டுமே அடிக்கோடிடுகிறது.

அமெரிக்க புலனாய்வுத்துறை அதிகாரிகள் மூன்று முறை மதீனை விசாரித்திருந்ததை ஒப்புக்கொண்டனர், 2013 இல் சக பணியாளர்களை அவர் "ஆத்திரத்துடன் திட்டியதாக" கூறப்பட்ட சம்பவம் சம்பந்தமாக இரண்டு முறையும் மற்றும் 2014 இல் மொனெர் மொஹம்மத் அபுசல்லா உடன் அவருக்கு தொடர்பிருக்கலாம் என்பதில் சம்பந்தப்படுத்தியும் அவர் விசாரிக்கப்பட்டிருந்தார். புளோரிடாவில் வளர்ந்த இந்த மொனெர் மொஹம்மத் அபுசல்லா, சிரியாவில் அமெரிக்க ஆதரவிலான ஆட்சி மாற்ற போரில் ஓர் இஸ்லாமிய போராளியாக சண்டையிட சென்று, அங்கே தற்கொலை குண்டுதாரியாக இறந்தவராவார். மதீன் இனால் ஓர் அச்சுறுத்தல் கிடையாது என்பது அந்த விசாரணைகளில் முடிவு செய்யப்பட்டு, அவை மூடப்பட்டதாக புலனாய்வுத்துறை தெரிவித்தது.

அங்கே மதீனுக்கும் ISIS க்கும் இடையே ஏதேனும் பிரத்யேக தொடர்புகள் இருந்திருக்கலாமென அமெரிக்க அதிகாரிகள் சந்தேகத்துடன் தெரிவித்தனர். அந்த கொலைகாரரின் துல்லியமான நோக்கம் தெளிவாக தெரியவில்லை.

மதீனின் தந்தை ஊடகங்களிடையே கூறுகையில், அவரது மகன் ஓரின சேர்க்கையாளர் உணர்வுகளுக்கு கடுமையாக குரல் கொடுத்திருந்ததாகவும், இந்தாண்டின் தொடக்கத்தில் மியாமியில் இரண்டு ஆண்கள் முத்தம் கொடுப்பதைப் பார்த்த போது கோபப்பட்டதாகவும் தெரிவித்தார். அவரது தந்தை சித்திக் மிர் மதீன் கூறுகையில், “நாடு முழுவதும் அதிர்ச்சி அடைந்திருப்பதைப் போலவே,” குடும்பமும் "அதிர்ச்சி அடைந்திருப்பதாக" தெரிவித்தார். அவரது மகனின் நடவடிக்கைகளுக்கும் "மதத்திற்கும் எந்த சம்பந்தமும் கிடையாது" என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

உள்நாட்டு பாதுகாப்புத்துறைக்கு பாதுகாப்பு சிப்பாய்களை அனுப்புவது உட்பட அரசாங்க அமைப்புகளுக்கு சேவை வழங்கிய ஒரு தனியார் பாதுகாப்பு ஒப்பந்த நிறுவனமான G4S இல் மதீன் வேலை செய்து வந்தார். அதன் காரணமாக அவரிடம் துப்பாக்கியும், பாதுகாப்பு அதிகாரிக்கான உரிமங்களும் இருந்தன. மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவர்கள் வறுமை கோட்டிற்கு கீழே வாழ்ந்து வந்த மற்றும் உத்தியோகபூர்வ வேலைவாய்ப்பின்மை 16 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்த, ஓர்லாந்தோவிலிருந்து தென்கிழக்கே சுமார் 120 மைல் தூரத்தில் ஒரு புளோரிடா நகரமான போர்ட் பியர்ஸ் இல் அவர் வாழ்ந்து வந்தார்.

ஒமர் மதீனின் மனதில் என்ன ஓடிக்கொண்டிருந்தது என்பது ஒருவேளை ஒருபோதும் நிச்சயமாக அறிய முடியாது போகலாம். ஆனால் என்ன தெளிவாக இருக்கிறதென்றால் ஓர்லாந்தோவின் இந்த துயரகரமான படுபயங்கர சம்பவம் இரத்தந்தோய்ந்த தொடர்ச்சியான பல சம்பவங்களில் சமீபத்தியது மட்டுமே ஆகும். அமெரிக்க முதலாளித்துவ சமூகத்தின் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் முரண்பாடுகள் முன்பினும் அதிகமாக கொடூர வடிவங்களை எடுத்து வருகின்றன.

ஓர்லாந்தோவில் ஞாயிறன்று அதிகாலையின் இந்த மரண எண்ணிக்கை, 1890 இல் தெற்கு டகோடாவின் பைன் ரிட்ஜ் இந்தியானோ இட ஒதுக்கீட்டு இடத்தில் 150 லகோடாவினரின் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட அமெரிக்க படுகொலைக்குப் பின்னர், அமெரிக்க மண்ணில் நடந்துள்ள மிக மோசமான பாரிய துப்பாக்கிச்சூட்டை பிரதிநிதித்துவம் செய்கிறது. ஆனால் அமெரிக்க வாழ்வில் நடைமுறையளவில் நாளாந்த உண்மையாக மாறியுள்ள அதுபோன்ற இனப்படுகொலை வெடிப்புகளின் முடிவில்லா சவ ஊர்வலம் என்ற உள்ளடக்கத்தில் இது நடந்துள்ளது. 2016 ஆரம்பத்தில் இருந்து, அங்கே இதுபோன்ற 175 சம்பவங்கள் நடந்துள்ளன. அமெரிக்காவில் மக்கள் மீதான 372 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் கடந்த ஆண்டு நடந்துள்ளன, இதில் 475 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 1,870 பேர் காயமடைந்தனர்.

உள்நாட்டில் நடக்கும் மரணகதியிலான வன்முறையானது, வெளிநாடுகளின் முடிவில்லா போர்களுக்கு இணையாக அபிவிருத்தி அடைந்துள்ளது, 2001 இல் இருந்து அமெரிக்க இராணுவம் தொடர்ந்து படையெடுப்புகள், குண்டுவீச்சுக்கள், டிரோன் தாக்குதல்கள் மற்றும் "இலக்கில் வைத்த படுகொலைகளில்" ஈடுபட்டு வந்துள்ளது, இவை முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்களின் உயிரைப் பறித்துள்ளது. அமெரிக்காவிற்குள்ளேயே கூட, மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனையாளர்கள், பொதுவாக புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான மற்றும் குறிப்பாக முஸ்லீம்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் வன்முறையை நியாயப்படுத்துவதையும் மற்றும் மிகவும் பின்தங்கிய ஓரின சேர்க்கை உணர்வுகளை ஊக்குவிப்பதையும் செய்கின்றனர்.

ஓர்லாந்தோ இரவு உல்லாச விடுதி படுகொலைகளை உண்டாக்கிய தூண்டுபொருள்களது துல்லியமான சங்கமத்தை அறிய முடியாமல் போகலாம், ஆனால் அது அதிகரித்துவரும் சமூக இடப்பெயர்வு, போர் மற்றும் அரசியல் பிற்போக்குத்தனத்தால் வடிவமைக்கப்பட்ட ஒரு சூழலுக்குள் நடந்துள்ளது என்பதை மறுக்கவியலாது.

ஜனாதிபதி பராக் ஒபாமா ஞாயிறன்று வெள்ளை மாளிகையிலிருந்து ஏறத்தாழ ஒரு வெற்றுரையை வழங்கினார். அவர் அறிவிக்கையில், மக்கள் மீதான இந்த படுகொலை நடவடிக்கை "ஒரு பயங்கரவாத நடவடிக்கையாகும், ஒரு வெறுப்பார்ந்த நடவடிக்கையாகும்.” ஈராக், சிரியா, லிபியா, யேமன், சோமாலியா மற்றும் ஆபிரிக்க கண்டத்தின் ஏனைய இடங்களிலும் அமெரிக்க இராணுவ தலையீடுகளை மேற்பார்வையிட்டு கொண்டே, அதேநேரத்தில் ஆப்கானிஸ்தானில் அண்மித்து 15 ஆண்டுகால பழமையான அமெரிக்க போரைச் சமீபத்தில் தீவிரப்படுத்துவதற்கு ஒப்புதல் வழங்கிய ஒபாமா, “நமது மக்களைப் பாதுகாக்க, நமது தேசத்தை பாதுகாக்க, மற்றும் நம்மை அச்சுறுத்துபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, அமெரிக்கர்களாக, நாம் ஒன்றுபட்டு நிற்போம்,” என்று அறைகூவல் விடுத்தார்.

ஒபாமாவின் முன்னாள் வெளியுறவுத்துறை செயலரும் இன்றைய நிலையில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கருதப்படுபவருமான ஹிலாரி கிளிண்டன், வெளிநாடுகளில் அமெரிக்க இராணுவவாதத்தை ஊக்குவிக்க மற்றும் அமெரிக்காவிற்குள்ளேயே ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களைத் தீவிரப்படுத்த ஓர்லாந்தோவின் துயரத்தைச் சாதகமாக்கிக் கொள்வதில் இன்னும் அதிக வெளிப்படையாக இருந்தார். “உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் வரும் அச்சுறுத்தல்களில் இருந்து நம் நாட்டை பாதுகாக்கும் நமது முயற்சிகளை நாம் இரட்டிப்பாக்க வேண்டியுள்ளது என்பதை தான் இப்போதைக்கு நாம் நிச்சயமாக கூற முடியும்,” என்றவர் தெரிவித்தார். “சர்வேச பயங்கரவாத குழுக்களைத் தோற்கடிப்பது, கூட்டாளிகள் மற்றும் பங்காளிகளுக்கு எங்கெல்லாம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் அவர்களுடன் சேர்ந்து வேலை செய்வது, இங்கேயும் சரி வேறிடத்திலும் சரி ஆட்களைச் சேர்க்கும் அவர்களது முயற்சிகளை எதிர்த்து தடுப்பது, உள்நாட்டில் நமது பாதுகாப்பை கடுமையாக்குவது என்பதே இதன் அர்த்தமாகும்,” என்றவர் தெரிவித்தார்.

அவரது குடியரசு கட்சி போட்டியாளர் டோனால்ட் ட்ரம்ப், ஓர்லாந்தோ படுகொலையைப் பயன்படுத்தி அவரது முஸ்லீம்-விரோத மற்றும் புலம்பெயர்ந்தோர்-விரோத வெறித்தனத்தை ஊக்குவிப்பதைப் பலப்படுத்துவதற்கு, சற்றே வித்தியாசமான உத்தியைப் பின்பற்றினார். இந்த படுகொலைகளை ஒபாமா “தீவிர இஸ்லாமிய பயங்கரவாதத்தின்" மீது சாட்ட தவறினால், அவர் "இந்த அவமானத்திற்காக உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும்" என்றும், அதே வார்த்தைகளை கிளிண்டனும் பயன்படுத்த தவறினால் அவர் தேர்தலில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்றும் ஆரம்பத்தில் ட்வீட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

“ஏனென்றால் இந்த தலைவர்கள் பலவீனமாக இருக்கிறார்கள், இது நடக்குமென்று நான் கூறியிருந்தேன்—இது இன்னும் மோசமடையத் தான் செய்யும்,” என்று அதே நாளின் மாலையில் தெரிவித்தார். “நான் உயிர்களைக் காப்பாற்றவும் மற்றும் அடுத்த பயங்கரவாத தாக்குதலைத் தடுக்கவும் முயன்று வருகிறேன். இனியும் நாம் அரசியல்ரீதியாக சரிபார்த்துக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டிருக்க முடியாது,” என்றார்.

இத்தகைய பிற்போக்குத்தனமான முறையீடுகள், 2016 ஜனாதிபதி தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெற்றாலும் சரி, என்ன தயாரிப்பு செய்யப்பட்டு வருகிறதோ அதற்கான ஒரு எச்சரிக்கையாகும். சமூக நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசைதிருப்புவதும், அரசியல் விவாதத்தை வலதிற்கு திருப்புவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் உரிமைகள் மற்றும் நிலைமைகள் மீதான தீவிரப்படுத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் புதிய போர்களுக்குத் தயாரிப்பு செய்வதுமே ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசு கட்சியினர் இருதரப்பினரது நோக்கமாகும்.