ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Who is responsible for the massacre in the Mediterranean?

மத்திய தரைக்கடல் படுகொலைக்கு யார் பொறுப்பு?

By Bill Van Auken
31 May 2016

“நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்,” இதை அக்டோபர் 20, 2011 இல் ஹிலாரி கிளிண்டன் ஒரு தொலைக்காட்சி இதழாளருக்கு ஆச்சரியத்துடன் கூறினார். லிபிய தலைவர் மௌம்மர் கடாபி சித்திரவதை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட ஒரு கோரமான காணொளி காட்டப்பட்ட பின்னரும், அப்போதைய வெளியுறவுத்துறை செயலர் கட்டுப்பாடின்றி கெக்களிப்புடன் கொக்கரித்தார்.

அண்மித்து ஐந்தாண்டுகளுக்குப் பின்னர், கிளிண்டன் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னணியில் இருக்கிறார். ஆனால் லிபியாவில், சிரியாவில் மற்றும் மத்திய தரைக்கடலில் உயிரிழப்புகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

மத்திய தரைக்கடலில் கடந்த வாரம் 900 அகதிகள் மூழ்கி இறந்துள்ளார்கள் என்று மதிப்பிடப்படும் நிலையில், இந்தாண்டில் இது வரையில் அதிகபட்ச மரணங்கள் நடந்த வாரமாக கடந்த வாரம் இருந்துள்ளது.

ஐரோப்பாவிற்கு வருவதற்காக 2014 க்குப் பின்னர் இருந்து மத்திய தரைக்கடலை அபாயகரமாக கடக்கும் முயற்சியில் 8,000 க்கும் அதிகமான அகதிகள் உயிரிழந்திருக்கிறார்கள், இவர்களில் பெரும் பெரும்பான்மையினர் லிபிய கடற்கரையிலிருந்து அவர்களது மரணகதியிலான பயணத்தை தொடங்கியவர்களாவர்.

அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் கிளிண்டனும் சரி அல்லது அவரது போட்டியாளர்களும் சரி, தன்னைத்தானே "ஜனநாயக சோசலிசவாதியாக" கூறிக்கொள்ளும் ஜனநாயக கட்சி பேர்ணி சாண்டர்ஸ் மற்றும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டோனால்ட் ட்ரம்ப் ஆகட்டும், இவர்கள் மத்திய தரைக்கடலில் நடந்து வரும் படுகொலைகளைப் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவில்லை.

ஆனால் அமெரிக்க தேர்தலில் அது ஏன் ஒரு முக்கியமான பிரச்சினை என்பதற்கு அங்கே நிறைய காரணங்கள் உள்ளன.

முதலும் முக்கியமானதுமாக, பத்து மில்லியன் கணக்கானவர்களை உயிர் வாழ்விற்கான ஒரு பெரும் பிரயத்தன போராட்டத்தில் வீடுகளை விட்டு வெளியேற்றிய வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவதில், வாஷிங்டனும், இரண்டு பிரதான முதலாளித்துவ கட்சிகள் மற்றும் தனிப்பட்டரீதியில் கிளிண்டனும் தீர்க்கமான பாத்திரம் வகித்துள்ளனர்.

ஒரு கால் நூற்றாண்டு கால அமெரிக்க இராணுவ தலையீடுகள், பினாமி போர்கள் மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைகளால் ஏற்பட்ட இந்த எண்ணிக்கை மலைப்பூட்டாமல் இருக்காது. இன்று இத்தகைய ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்கு உள்ளான ஒவ்வொரு நாடும், இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய மிக மோசமான உலகளாவிய அகதிகள் நெருக்கடிக்குத் தீர்க்கமாக பங்களிக்கின்றன.

2003 இல் சட்டவிரோத ஆக்கிரமிப்பு போரின் இலக்காக இருந்த ஈராக்கில், அமெரிக்க தலையீட்டால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மொத்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமாகும். ஸ்தூல மற்றும் சமூக கட்டமைப்பை அமைப்புரீதியில் சீரழித்தமை, அத்துடன் சேர்ந்து கடுமையான பிரிவினைவாத பிளவுகளுக்கு இட்டுச் சென்ற பிரித்தாளும் ஒரு திட்டமிட்ட கொள்கையைப் பின்பற்றியமை ஆகியவை ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசை (ISIS) வளர்த்து விட்டதுடன், ஃபல்லூஜாஹ் மற்றும் மொசூல் போன்ற ஏற்கனவே இரத்தத்தில் ஊறிய நகரங்களில் புதிய மற்றும் கொடூரமான படுகொலைகளை உருவாக்க அச்சுறுத்துகின்ற வகையில், நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த உள்நாட்டு போரையும் உருவாக்கியது.

ஆப்கானிஸ்தானில், அமெரிக்க தலைமையிலான போரில் நேரடியாக கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மிதமான எண்ணிக்கையிலேயே 100,000 க்கும் அதிகமாக இருக்கிறது, அதேவேளேயில் அங்கே தொடர்ந்து கொண்டிருக்கும் மோதலால், ஒரு சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருப்பதைப் போல, "வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு, படுமோசமான கழிவுநீர் வெளியேற்றும் வசதி, மருத்துவ வசதியை அணுக முடியாமை, சுற்றுச்சூழல் சீர்கேடுகளின் விளைவுகளைத் அதிகப்படுத்தி உள்ளது,” இவை இன்னும் பலரது அகால மரணங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. குறைந்தபட்சம் 3 மில்லியன் பேர் இப்போது அகதிகளாக உள்ளனர்.

சிரியாவில், வாஷிங்டன் மற்றும் அதன் பிரதான பிராந்திய கூட்டாளிகளால் முடுக்கிவிடப்பட்ட ஆட்சி மாற்றத்திற்கான போர் ஒரு மில்லியனில் கால்வாசியினருக்கும் அதிகமானவர்களை கொன்றுள்ளது, மேலும் மொத்த மக்கள்தொகையில் பாதிக்கும் மேலானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர் மற்றும் லெபனான், ஜோர்டான், துருக்கி மற்றும் ஈராக்கில் என இந்த நான்கு நாடுகளில் மட்டும் சுமார் 4 மில்லியன் பேர் அகதிகளாக வாழ்கிறார்கள். ISIS மற்றும் அதே போன்ற அல் கொய்தா இணைப்பு கொண்ட இஸ்லாமிய போராளிகள் குழு, சிரியா, ஈராக் மற்றும் அதற்கு அங்காலும் மக்கள் மீது கொடூரங்களை நடத்தி இந்த ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு பினாமிப் படைகளாக சேவையாற்றி உள்ளன.

நைஜீரியா மற்றும் சோமாலியாவில் இருந்து ஆபிரிக்கர்களது அகதிகள் பேரலையும் உருவாகி கொண்டிருக்கிறது. பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போரின் மேலதிக நீட்சியாக, இந்நாடுகளில் அமெரிக்க சிறப்பு நடவடிக்கை துருப்புகளும் டிரோன் தாக்குதல்களும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

லிபியாவில், இங்கிருந்து ஐரோப்பாவை சென்றடைவதற்காக மோசமான படகுகள் அளவுக்கு மிஞ்சிய அகதிகளை ஏற்றிய வருகின்ற நிலையில், மௌம்மர் கடாபி அரசாங்கத்தை கவிழ்ப்பதற்காக அமெரிக்க-நேட்டோவின் 2011 போரின் விளைவாக இந்நாடு பொருளாதாரரீதியிலும் சமூகரீதியிலும் சிதைக்கப்பட்டு, இரத்தந்தோய்ந்த உள்நாட்டு போரில் சிக்கியுள்ளது. இப்போருக்குப் பிந்தைய அண்மித்து ஐந்தாண்டுகளில், அங்கே மூன்று அரசாங்கங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் ஒன்று, மற்றொரு இராணுவ தலையீட்டை நியாயப்படுத்துவதற்காக சமீபத்தில் தான் மேற்கத்திய ஆதரவுடன் அமைக்கப்பட்டது. அவற்றில் எதுவுமே அந்நாட்டின் ஒரு கணிசமான பகுதியின் மீது கூட கட்டுப்பாட்டைக் கொண்டதல்ல. குற்றகரமான 2011 போரின் நாசகரமான விளைவுகள், வாஷிங்டன் மற்றும் அதன் நேட்டோ கூட்டாளிகளால் இப்போது மற்றொரு தலையீட்டை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அமெரிக்கா மற்றும் பிரிட்டன் சிறப்பு படை கமாண்டோக்கள் ஏற்கனவே அம்மண்ணில் உள்ளனர்.

ஹிலாரி கிளிண்டன் சிரியாவில் இருந்ததைப் போலவே அமெரிக்காவின் லிபிய தலையீட்டிலும் ஒரு முன்னணி ஆலோசகராக இருந்தார். இரண்டு விடயங்களிலும், சூறையாடுவதற்கான மற்றும் உலகின் மூலோபாய பகுதிகளின் மீது வாஷிங்டனின் மேலாதிக்கத்தைக் கொண்டு வருவதற்கான ஏகாதிபத்திய போர்கள், “மனித உரிமைகள்" என்ற இழிவார்ந்த மற்றும் பாசாங்குத்தனமான பதாகையின் கீழ் ஊக்குவிக்கப்பட்டன.

லிபிய மற்றும் சிரிய மக்களைப் பாதுகாக்கும் பொய் பாசாங்குத்தனத்தை கொண்டு, நூறு ஆயிரக் கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் மில்லியன் கணக்கானவர்கள் அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.

வாஷிங்டனின் இந்த "மனித உரிமைகள்" பிரச்சாரம், அமெரிக்காவில் சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பில் இருந்து பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்பு கட்சி மற்றும் ஜேர்மனியில் இடது கட்சி வரையில் உலகெங்கிலுமான போலி-இடது அமைப்புகளின் ஒட்டுமொத்த பரிவாரங்களால் எதிரொலிக்கப்பட்டது. சில அமைப்புகள் தனிச்சலுகை கொண்ட நடுத்தர வர்க்க அடுக்குகளிடையே ஒரு பரந்த அதிகார வட்டத்தைப் பாதுகாக்கும் அவற்றின் முயற்சியில், சிஐஏ ஒழுங்கமைத்த இத்தகைய நடவடிக்கைகளை "புரட்சிகள்" என்று பிரகடனப்படுத்தும் அளவிற்குச் சென்றன. அவையும் தற்போதைய நிஜமான மனிதாபிமான நெருக்கடிக்கு குற்றகரமாக பொறுப்பாகின்றன.

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இத்தகைய வரலாற்று குற்றங்கள் எதுவுமே நடந்து வரும் அமெரிக்க தேர்தல்களில் விவாத பொருளாக இல்லை. அதே போல தவிர்க்க முடியாமல் ஒரு மூன்றாம் உலக போரை நோக்கி இட்டுச் செல்லும், இன்னும் அதிக இரத்தஆறுக்கு செய்யப்படும் தயாரிப்புகள் மீது ஒரு மவுனத்திரை போர்த்தப்பட்டிருக்கிறது. வாக்கெடுப்பு முடிந்ததும், அமெரிக்க இராணுவவாதத்தின் உலகளாவிய வெளிப்பாடு வேகமாக தீவிரமடையும் என்பது நிச்சயம்.

அனைத்திற்கும் மேலாக, “ஒரு சுவரைக் கட்டுவதற்கான" ட்ரம்ப் இன் பாசிசவாத மற்றும் அர்த்தமற்ற முறையீடுகளுக்கு அப்பாற்பட்டு, ஐரோப்பாவைப் போலவே அமெரிக்காவிலும் ஒரு முக்கிய பிரச்சினையாக உள்ள அகதிகள் விவகாரம் குறித்து அங்கே நிஜமான விவாதங்களே கிடையாது. படையரண் ஐரோப்பிய அகதிகள்-விரோத கொள்கைகள் மற்றும் வெளிநாட்டவர் விரோத மற்றும் புலம்பெயர்வோர்-விரோத பேரினவாதம் தூண்டிவிடப்படுவது ஆகியவை மத்தியத் தரைக்கடலில் கொடூரமான மரண எண்ணிக்கைக்குப் பங்களிப்பதைப் போலவே, அமெரிக்காவில் பின்பற்றப்படும் கொள்கைகளும் அதேபோன்ற விளைவுகளுக்கு இட்டுச் சென்றுள்ளது. அகதிகளுக்கான பால்கன் பாதை என்றழைக்கப்படுவதை ஐரோப்பிய ஒன்றியம் மூடியமை அதனினும் அதிக அபாயகரமான மத்தியத்தரைக்கடலை நோக்கி அவர்களைத் திருப்பிட்டதைப் போலவே, அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையை மூடியமை அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றவர்களை இன்னும் அதிக அபாயகரமான, வெயில் பட்டாலே பலர் இறந்து போகக்கூடிய பாலைவனப் பகுதிகளுக்குள் போகச் செய்தது.

மீண்டும், இன்றைய நிலையில் குடியரசுக் கட்சி வேட்பாளரான ட்ரம்ப் இல் இருந்து நிஜமான சுவரை எழுப்பிய ஒபாமா மற்றும் அதை ஆதரிக்கும் ஹிலாரி கிளிண்டன் வரையில், மத்திய அமெரிக்காவிலிருந்து குழந்தை அகதிகளை வெளியேற்றுவதற்காக, இந்தவொரு கொள்கை பிரதான முதலாளித்துவ கட்சிகள் இரண்டினாலும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.

அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தவர்களை பாதுகாப்பது போருக்கு எதிரான போராட்டத்திலிருந்து பிரிக்க முடியாததாகும். ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள எந்தவொரு பிரிவுக்கும் அதை செய்வதற்கு எந்த விருப்பமும் கிடையாது. மத்திய தரைக்கடலில் கட்டவிழ்ந்து வரும் துயரங்கள் உட்பட தொடர்ந்து கொண்டிருக்கும் மற்றும் தீவிரமடைந்து வரும் இரத்த ஆற்றை நிறுத்துவதற்கு, முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வரும் ஒரு சோசலிச வேலைத்திட்டம் மற்றும் ஒரு புரட்சிகர மூலோபாயத்தை அடிப்படையாக கொண்ட ஒரு புதிய சுயாதீனமான பாரிய சர்வதேச தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைப்பது அவசியமாகும்.

கட்டுரையாளர் பரிந்துரைக்கும் ஏனைய கட்டுரைகள்:

New York Times on Clinton and Libya: Portrait of a war criminal

[1 March 2016]