ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Hillary Clinton’s Democratic primary victory

ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர்தேர்வில் ஹிலாரி கிளிண்டனின் வெற்றி

By Joseph Kishore
9 June 2016

அந்நாட்டின் மிக பிரபல மாநிலமான கலிபோர்னியா உட்பட செவ்வாயன்று ஆறு மாநிலங்களில் நடந்த ஜனாதிபதி வேட்பாளர் தேர்வுப்போட்டிகளில் நான்கில் வெற்றி பெற்ற, ஹிலாரி கிளிண்டன் 2016 தேர்தல்களுக்கான ஏறத்தாழ நிச்சயமான ஜனநாயக கட்சி ஜனாதிபதி வேட்பாளராக ஆகியுள்ளார்.

வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸ் இதுவரையில் உத்தியோகபூர்வமாக ஒதுங்கிக் கொள்ளவில்லை, ஆனால் "மதிப்புடன்" விட்டுக்கொடுத்து கிளிண்டனை ஏற்றுக்கொள்ளுமாறு ஜனநாயகக் கட்சி ஸ்தாபகத்திற்குள்ளே அவரது ஆதரவாளர்களிடமிருந்துமே கூட அவர் அதிகரித்த அழைப்புகளை முகங்கொடுக்கிறார். சாண்டர்ஸ் வியாழக்கிழமை ஜனாதிபதி பராக் ஒபாமாவைச் சந்திக்க உள்ளார், இந்த வாரத்தில் இயன்றளவு துரிதமாக ஒபாமா கிளிண்டனுக்கான அவரது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆழ்ந்த மற்றும் அதிகரித்த சமூக அதிருப்தியால் குறிக்கப்பட்ட ஒரு வருடத்தில், அமெரிக்காவின் இரு-கட்சி ஆட்சிமுறை, ஒருபுறம் பாசிசவாத பில்லியனர் டோனால்ட் ட்ரம்ப் ஐயும், மறுபுறம் நடைமுறையில் இருப்பனவற்றிற்கு ஆளுருவாக கிளிண்டனையும் உருவாக்கி உள்ளது. தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் முகங்கொடுக்கும் ஆழ்ந்த சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகளை இப்போதைய அரசியல் கட்டமைப்பிற்குள் தீர்ப்பதற்கான சாத்தியமின்மை என்பதை இதைத்தவிர மிகவும் முடிவாக எடுத்துக்காட்டப்படமுடியாது.

முன்பில்லாதளவில் மிக அதீத செல்வவள திரட்சிக்கு இணையாக, அமெரிக்க அரசியல், முதலாளித்துவ ஜனநாயக சீரழிவின் பாரம்பரிய தனித்தன்மையான அரசமரபு (dynastic) மற்றும் வேண்டியவர்களுக்குச் சலுகையளிக்கும் (nepotistic) ஒரு குணாம்சத்தை அதிகரித்தளவில் ஏற்று வருகிறது. 350 மில்லியன் மக்கள் வாழும் ஒரு நாட்டில், ஜனநாயகக் கட்சி அதன் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த இதை விட சிறந்த ஒருவரைக் காண முடியவில்லை. இவரது அரசியல் வாழ்வைக் குறித்து கூறத் தொடங்குவதென்றால், அவர் ஒரு முன்னாள் ஜனாதிபதியின் மனைவியாவார் என்ற உண்மையிலிருந்து தொடங்குகிறது. முதலில் தந்தையும் மகனுமாக புஷ்கள் வந்தார்கள், இப்போது கணவனும் மனைவியுமாக கிளிண்டன்கள் வருகிறார்கள். மிஷேல் ஒபாமா, அல்லது ஒபாமா குழந்தைகளில் ஒருவர் பிரச்சாரத்திற்குத் தயாராகி வருகிறார் என்று அறிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஹிலாரி கிளிண்டன் என்ற நபரைப் பொறுத்த வரையில், ஜனநாயகக் கட்சியினர் மிகவும் மக்கள் செல்வாக்கிழந்த அவர்களது வேட்பாளரை தேர்ந்தெடுத்துள்ளனர். கிளிண்டன்கள் வலதுசாரி குடியரசு கட்சியினரது தாக்குதல்களின் இலக்கில் இருக்கிறார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை, அதேவேளையில் அவர்கள் தாம் தாக்குதலுக்குள்ளாக எண்ணற்ற விடயங்களை வழங்கி உள்ளனர். அவர்களது சுயநலனுக்குரிய பாசாங்குத்தனத்தின் முன்வரலாறு, பில் கிளிண்டன் அர்கன்சாஸில் அவரது அரசியல் வாழ்வைத் தொடங்கிய காலம் வரைக்கும் பின்னோக்கி நீள்கிறது, அங்கே அவர் வால்மார்ட் மற்றும் Perdue chicken பெருங்குழுமம் போன்ற பெருநிறுவன ஜாம்பவான்களுடான நெருக்கமான தொடர்புகளுடன் அவரது வெற்று வனப்புரைகளை இணைத்திருந்தார். வெள்ளை மாளிகையில் இருந்தபோது, பில் கிளிண்டன் ஜனநாயகக் கட்சியை மேற்கொண்டு வலதுக்கு மாற்றுவதை முடுக்கிவிட்டார், சுகாதார-விரோதமான சட்டமசோதா, “சட்டம் ஒழுங்கு" சிறை தண்டனை சட்டங்கள் மற்றும் சந்தை சார்பு பொருளாதார கொள்கைகளின் அடிப்படையில் குடியரசு கட்சியினரிடையே கூட ஆதரவை வென்றெடுக்கும் ஒரு முயற்சியும் அதில் உள்ளடங்கும்.

பில் கிளிண்டன் பதவியிலிருந்து வெளியேறிய பின்னர் கிளிண்டனின் ஊழல் இன்னும் அதிகமாக வெளியானது. அந்த ஜோடி பெருநிறுவன நிர்வாகக்குழு உடனான அவர்களது தொடர்புகள் மூலமாக மற்றும் கிளிண்டன் அமைப்பின் செயல்பாடுகள் மூலமாக 150 மில்லியன் டாலருக்கும் அதிகமாக சுருட்டி இருந்தது. நியூயோர்க்கில் இருந்து ஒரு செனட்டராக வோல் ஸ்ட்ரீட் உடனான அவரது உறவுகளை உருவாக்கியிருந்த ஹிலாரி கிளிண்டன், ஒபாமாவின் வெளியுறவுத்துறை செயலராக இராணுவ-உளவுத்துறை எந்திரத்துடன் நெருக்கமான தொடர்புகளை இறுக்கமாக்கினார்.

ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொல்லப்படுவதற்கு இட்டுச் சென்ற 2003 ஈராக் படையெடுப்புக்கு அவர் ஆதரவளித்தமை மற்றும் லிபியா மீதான படையெடுப்பு மற்றும் சிரியா உள்நாட்டு போர் குறித்த ஒபாமா நிர்வாகத்தின் முடிவில் அவர் நேரடியாக சம்பந்தப்பட்டிருந்தமை ஆகியவை அந்த காலக்கட்டத்தில் கிளிண்டனின் மிகவும்குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளாக இருந்தன. கவனமாக வடிவமைக்கப்பட்ட அவரது அரசியல் பிம்பத்திற்குப் பின்னால், கிளிண்டனின் நிஜமான வேஷம், மௌம்மர் கடாபி சித்தரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட செய்திக்கு அப்பெண்மணி எழுத்துபூர்வ தயாரிப்பின்றி எகத்தாள கெக்களிப்புடன், “நாங்கள் வந்தோம், பார்த்தோம், அவர் இறந்து கிடந்தார்!” என்று வியந்து வரவேற்றதில் மிகத் தெளிவாக வெளிப்பட்டது.

எது அவரை வேட்பாளர் ஆக்கியது? ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம் மற்றும் ஊடகங்களின் ஆதரவுக்கு அப்பாற்பட்டு, கிளிண்டனின் வெற்றி ஒரு வர்க்கம் பற்றிய பொதுவான தன்மையை அடிப்படையாக கொண்ட அரசியலுக்கு அப்பாற்பட்டு, இனம் மற்றும் ஆண்-பெண் பாகுபாடு அரசியல் வெற்றி கொண்டிருப்பதைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. கிளிண்டன்கள், பில் மற்றும் ஹிலாரி, இனவாத அரசியலை ஊக்குவித்துள்ளனர் அதேவேளையில் பரந்த பெரும்பான்மை ஆபிரிக்க-அமெரிக்கர்கள் உள்ளடங்கலாக தொழிலாள வர்க்கத்திற்கு பேரழிவுகரமான விளைவுகளைக் கொண்ட கொள்கைகளை பின்தொடர்கின்றனர். ஜனநாயகக் கட்சி வேட்பாளர் போட்டியில், பழைய வாக்காளர்களுடன் சேர்ந்து, ஆபிரிக்க-அமெரிக்க வாக்காளர்களிடையே மற்றும் ஏனைய சிறுபான்மையினரிடையே கிளிண்டனால் குறிப்பிடத்தக்க பெரும்பான்மை பெற முடிந்தது. சமூக சமத்துவமின்மை மீதான விமர்சனம் மீது தமது பிரச்சாரத்தை மையப்படுத்தி இருந்த சாண்டர்ஸைப் பொறுத்த வரையில், அவர் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் பரந்த பிரிவுகளிடையே ஆதரவை வென்றார்.

ஜனநாயகக் கட்சி சுற்றுவட்டத்தில் இருந்த மற்றும் பெரும்பாலான பாகம் சாண்டர்ஸை ஆதரித்த போலி-இடது அமைப்புகள் அவர்களுக்கு அவர்களே வெடி வைத்துக் கொண்டுள்ளனர். இனம், ஆண்-பெண் பாகுபாடு மற்றும் பாலின அடையாளம் அடிப்படையில் முதலாளித்துவ அரசியலை மறுக்கட்டமைப்பு செய்வதற்கான அரசியல் வடிவத்தை வழங்கி, அவர்கள், அடிப்படை சமூக வகைப்படுத்தல் வர்க்கம் ஆகும் என்ற மார்க்சிச கருத்துருவுக்கு எதிரான ஒரு தசாப்தகால நீண்ட பிரச்சாரத்தினூடாக இந்த விளைவுக்குத் தயாரிப்பு செய்திருந்தனர்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அவர் ஒரு பிரதான கட்சியின் முதல் பெண் வேட்பாளர் என்பதற்காக கிளிண்டனின் வெற்றியை ஒரு "வரலாற்று மைல்கல்லாக" பிரகடனப்படுத்த இப்போது ஊடகங்கள் உச்சதொனிக்கு மாறி வருகின்றன. பிரிட்டனில் பரம-பிற்போக்குவாதியான மார்கரெட் தாட்சர் அதிகாரத்திற்கு வந்து தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக ஒரு போர் தொடங்கி ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்குப் பின்னர், கிளிண்டனின் வேட்பாளர் நியமனத்தை சமத்துவத்தின் ஒரு மாபெரும் வெற்றியாக சித்தரிக்கும் ஒரு முயற்சி அர்த்தமற்றதும் அருவருப்பாகவும் உள்ளது. இன்னும் அதிக அப்பட்டமான விதத்தில், இது அரசியல் சந்தைப்படுத்தலில் பழையதை உபயோகிக்கும் மறுசுழற்சியாக உள்ளது, 2008 இல் முதல் ஆபிரிக்க-அமெரிக்க தலைமை நிர்வாகி பராக் ஒபாமாவின் "மாற்றம் மிகுந்த" தேர்வு உள்ளடங்கி இருந்தது.

சாண்டர்ஸைப் பொறுத்த வரையில், அவரது “அரசியல் புரட்சி” இரு-கட்சி முதலாளித்துவ அமைப்புமுறைக்கு எதிரான ஓர் இயக்கத்தை அபிவிருத்தி செய்வதை நோக்கமாக கொண்டிருக்கவில்லை, மாறாக சமூக எதிர்ப்பை தணித்து மூச்சடைக்கச் செய்து ஜனநாயகக் கட்சிக்குப் பின்னால் திருப்பி விடுவதை நோக்கமாக கொண்டிருந்தது. உலக சோசலிச வலைத் தளம் ஆரம்பத்திலிருந்து குறிப்பிட்டதைப் போல, இது ஓர் அரசியல் முட்டுச்சந்துக்குத்தான் இட்டுச் சென்றுள்ளது. ஜனநாயகக் கட்சி ஸ்தாபகம் இப்போது சாண்டர்ஸை அதன் அணிக்குள் திரும்ப இழுத்துக் கொண்டிருக்கிறது அதேவேளையில் அந்த வேட்பாளர் அவரே "பில்லியனர் வர்க்கத்தின்" மீதான அவரது கண்டனங்களால் ஈர்க்கப்பட்ட மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களை கிளிண்டனுக்கு பின்னால் எவ்வாறு சமாதானப்படுத்தி அணிதிரட்டுவது என்று கண்டறிய முயன்று கொண்டிருக்கிறார்.

அவசியமான படிப்பினைகளை வரைந்து, ஒரு நிஜமான சோசலிச இயக்கத்தைக் கட்டமைக்கத் தொடங்குவது முக்கியமாகும். சோசலிச சமத்துவக் கட்சி வரவிருக்கும் போராட்டங்களுக்கு ஓர் அரசியல் தலைமையைக் கட்டமைக்க ஜனாதிபதியாக ஜெர்ரி வைட் மற்றும் துணை ஜனாதிபதியாக நைல்ஸ் நிமுத் ஐ தேர்தல் வேட்பாளர்களாக நிறுத்தி உள்ளது.

அதிகரித்துவரும் அரசியல் தீவிரமயப்படலுக்கு எரியூட்டியுள்ள புறநிலையான போக்குகள் தொடர்ந்து செயல்படத் தொடங்கும். கட்சி மாநாடுகளுக்கு இன்னும் ஆறு வாரங்கள் இருக்கின்றன மற்றும் பொது தேர்தலுக்கு இன்னும் ஐந்து மாதங்கள் இருக்கின்றன. பல ஆச்சரியங்கள் வரக்கூடும். வேட்பாளர்களது கட்டுப்பாட்டுக்கு வெளியே, ஆழமடைந்து வரும் சமூக, பொருளாதார மற்றும் புவிசார்அரசியல் நெருக்கடி, தேர்தல்களை வடிவமைக்கும். சமீபத்திய 39,000 வெரிசோன் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் அமெரிக்காவிலும் உலகெங்கிலும் வர்க்க போராட்ட மீளெழுச்சியின் பாகமாகும். சர்வதேச அளவில், ஒவ்வொரு நாளும் புவிசார் அரசியல் பதட்டங்களின் புதிய வெடிப்புகளைக் கொண்டு வருகின்றன, அமெரிக்காவின் உலகளாவிய மேலாதிக்கத்தை பேணுவதற்கான அதன் முயற்சிகளால் எரியூட்டப்படுகின்ற இவை, ஒரு புதிய உலக போரைத் தூண்ட அச்சுறுத்துகிறது.

அடுத்த ஐந்து மாதங்களில், சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் வேட்பாளர்கள் அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களுடன் பேசி கல்வியூட்டுவார்கள் மற்றும் புரட்சிகர மார்க்சிசத்தின் முன்னோக்கிற்கு ஆதரவை வென்றெடுக்க போராடுவார்கள். “இரண்டு தீயவைகளில் குறைவானதை தேர்ந்தெடுத்தல்" மற்றும் சாண்டர்ஸ் ஆல் மட்டுமின்றி பசுமை கட்சி போன்ற சுயாதீனமான பிரச்சாரம் என்று கூறிக்கொண்டு ஊக்குவிக்கும் கருத்துருவான அரசியல் அமைப்புமுறையை அடிமட்டத்திலிருந்து அழுத்தமளிக்கலாம் என்பது சந்தேகத்திற்குரியதே என்பதை போன்ற நடைமுறைவாத அரசியல் வடிவங்களை நிராகரிக்க வேண்டியதன் அவசியத்தை நாம் வலியுறுத்துகிறோம். ட்ரம்ப் க்கு எதிராக கிளிண்டனை ஆதரிக்க வேண்டும் என்ற எல்லா வாதங்களையும் நாம் நிராகரிக்கிறோம். இத்தகைய கருத்துக்கள், ட்ரம்ப் ஜெயித்தாலும் அல்லது கிளிண்டன் ஜெயித்தாலும் தேர்தலுக்குப் பின்னர் வரவிருக்கும் வலதை நோக்கிய பாரிய திருப்பத்திற்கு தொழிலாளர்களை முற்றிலுமாக தயாரிப்பின்றி செய்து, இரு-கட்சி அமைப்புமுறையுடன் அவர்கள் முறித்துக் கொள்வதை தடுக்கும் நோக்கம் கொண்டுள்ளன.

ஜனநாயகக் கட்சி உடன் தீர்க்கமாக முறித்துக் கொண்டு, சமத்துவமின்மை, போர் மற்றும் சர்வாதிகாரத்தின் ஆதாரமாக உள்ள முதலாளித்துவ அமைப்புமுறையை நேரடியாக இலக்கில் வைக்கும் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான அரசியல் இயக்கத்தைக் கட்டியமைக்காமல் தொழிலாளர்களை அரசியல் போராட்டத்திற்குள் உந்திவருகின்ற பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது.