ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French government threatens ban on protests against labor law

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கப்போவதாக பிரெஞ்சு அரசாங்கம் அச்சுறுத்துகிறது

By V. Gnana and Alex Lantier
  16 June 2016

சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக செவ்வாயன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிலாளர்கள் பரந்த அளவில் அணிதிரண்டிருந்ததை தொடர்ந்து, புதனன்று, ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் பிரதமர் மானுவல் வால்ஸும் இச்சட்டத்திற்கு எதிரான இனிமேலான ஆர்ப்பாட்டங்களுக்கு முற்றுமுதலான தடையைத் திணிக்க அச்சுறுத்தல் விடுத்தனர்.

காலையில் France Inter வானொலியில் பேசிய வால்ஸ், முந்தைய நாளில், போலிசின் முறைப்படியான மதிப்பீடுகளின் படி குறைந்தது 75,000 தொழிலாளர்கள் பங்குபற்றியிருந்த பாரிஸ் ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றுக்கு முடிவுகட்ட அழைப்பு விடுத்தார். ஸ்ராலினிச CGT தொழிற்சங்கத்தை குறிப்பிட்டு வால்ஸ் கூறினார்: “பாரிஸில் அவர்கள் இனியும் எந்த ஆர்ப்பாட்டங்களையும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என்று அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.”

பிரெஞ்சு மக்களில் 75 சதவீதம் பேரால் எதிர்க்கப்படுகின்ற இந்தச் சட்டத்தை, சின்னச் சின்னத் திருத்தங்களது இலைமறைப்பும் கூட இன்றி, ஆர்ப்பாட்டங்களை மீறித் திணிப்பதற்கு PS திட்டமிட்டிருந்ததை வால்ஸ் தெளிவாக்கினார். “ஏற்கனவே தொழிற்சங்கங்களுடனான பேச்சுவார்த்தைகளது விளைபயனாக இருக்கக் கூடிய ஒரு உரைவடிவத்தில் அரசாங்கம் எதனையும் மாற்றப் போவது கிடையாது... இந்த உரைவடிவம் ஊழியர்களுக்கும் நல்லது நிறுவனங்களுக்கும் நல்லது என்பதோடு புதிய உரிமைகளையும் உருவாக்குகிறது” என்றார் அவர்.

ஆர்ப்பாட்டங்களை இனியும் பாதுகாப்பாக நடத்த முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்த அவர் பின்வருமாறு அறிவித்தார்: “ஒரு ஆர்ப்பாட்டத்தில் பாதுகாப்பை உறுதி செய்யும் திறன் ஒருவரிடம் இல்லாதபோது, 700 அல்லது 800 கலகக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஊடுருவி நிலைமை கைமீறிச் செல்ல அனுமதிக்கப்படுவதாய் இருக்கும்போது, விரைவாக பாதைமாறக் கூடிய இத்தகைய ஆர்ப்பாட்டங்களை ஒருவர் ஒழுங்கமைக்க மாட்டார்.”

தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான இனிமேலான போராட்டங்களை PS தடை செய்யக் கூடும் என்று அவர் நிறைவு செய்தார். புதிய ஆர்ப்பாட்டங்களுக்கு அங்கீகாரம் அளிக்க CGT கோரினால், “நிலைமையைப் பொறுத்து, தனித்தனிக் கோரிக்கைகளின் அடிப்படையில், நாங்கள் எங்களது பொறுப்பை நிறைவேற்றுவோம்” என்றார் வால்ஸ்.

ஹாலண்டின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் லு ஃபொல் கூறுவதன் படி, புதன்கிழமை நடந்த கபினட் கூட்டம் ஒன்றில் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை தடை செய்கின்ற வால்ஸின் மிரட்டலை ஹாலண்ட் தனிப்பட்ட வகையில் மறுவலியுறுத்தம் செய்திருந்தார். “யூரோ 2016 [கால்பந்து கோப்பை] ஐ பிரான்ஸ் நடத்திக் கொண்டிருக்கின்ற ஒரு சமயத்தில், பயங்கரவாதத்திற்கு அது முகம்கொடுக்கின்ற சமயத்தில், உடைமைகளும், மக்களும், பொதுச் சொத்துகளும் இனியும் பாதுகாக்கப்பட முடியாது என்ற நிலையிருந்தால் ஆர்ப்பாட்டங்கள் அதன்பின்னும் அங்கீகரிக்கப்பட முடியாது.”

யூரோப்1 வானொலிக்கு சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், எந்த முக்கியமான திருத்தங்களும் இன்றி இச்சட்டத்தை PS திணிக்கும் என்பதை ஹாலண்ட் வலியுறுத்தினார். கடந்த காலத்தில் இதே மாதிரியான எதிர்ப்புகளின் போது ”அனேக அரசாங்கங்கள் விட்டுக் கொடுத்திருக்கின்றன” என்றார் அவர். “வீதிகளில் உட்பட விவாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சட்டமானது, நிறைவேறும்.”

PS இன் முதற் செயலரான ஜோன்-கிறிஸ்தோப் கம்படெலிஸ் இந்த கருத்துக்களையே எதிரொலித்தார். “ஆர்ப்பாட்டங்களில் ஒரு நிறுத்தம் வேண்டும், ஏனென்றால் அவை வன்முறையாக சீரழிந்து கொண்டிருக்கின்றன” என்று அவர் அழைப்பு விடுத்தார். CGT, “கலகக்காரர்களின் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட்டு”க் கொண்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.

ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்க சோசலிஸ்ட் கட்சி விடுத்திருக்கும் அழைப்பை வலது-சாரி அரசியல்வாதிகள் ஆதரித்தனர் அல்லது அதற்கு தங்கள் உடன்பாட்டை சுட்டிக்காட்டினர். முன்னாள் பிரதமரான பிரான்சுவா ஃபிய்யோன், “பிரான்சில் பெரு நகரங்களில் திரும்பத் திரும்பவான ஆர்ப்பாட்டங்களை நாம் இனியும் ஏற்க முடியாது” என்று அறிவித்தார். நவ-பாசிச தேசிய முன்னணியைச் சேர்ந்த மரியோன் மரிசால்-லு பென் பின்வருமாறு கூறினார்: “இந்த ஆர்ப்பாட்டங்களின் நியாயத்தன்மை குறித்த கேள்வி முன்வைக்கப்பட முடியும். பல வாரங்களாய் நாம் கண்டு வருகின்ற இந்த வகையான வன்முறையைத் தவிர்க்க தொழிற்சங்கங்களால் முடியாது என்றால், என்ன நடந்தாயினும் இந்த ஆர்ப்பாட்டங்கள் நின்றாக வேண்டும்.”

வீதி வன்முறையத் தவிர்ப்பதற்கு ஆர்ப்பாட்டங்கள் மீதான ஒரு தடை அவசியமாக இருக்கிறது என்று கூறுவதானது தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளை கழுத்து நெரிப்பதற்கான ஒரு வெளிப்பட்ட மோசடியான சாக்காகும். பாரிஸிலும் சரி, பிரான்ஸ் எங்கிலுமான மற்ற நகரங்களிலும் சரி, ஏதோ ஒரு சில நூறு அடையாளம் காண முடியாத கலகக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் பல பத்தாயிரக் கணக்கான போலிசை விஞ்சி, நகரின் பெரும்பகுதிகளை சூறையாடுவதைப் போல வால்ஸும் ஹாலண்டும் வாதிடுகின்றனர்.

உண்மையோ முற்றிலும் மாறுபட்டதாய் இருக்கிறது. பெருவாரியாய் அமைதியான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டிருந்த இளைஞர்களும் தொழிலாளர்களும் கலகத் தடுப்புப் போலிசாரின் வன்முறையான தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டு வந்துள்ளனர். பாதுகாப்புப் படையினருடன் மோதல்கள் வெடிக்கின்ற போது, அமைதியான ஆர்ப்பாட்டக்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சுற்றி வளைக்கப்பட்டு வந்திருக்கின்றனர். எப்படியிருந்த போதிலும், தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பு தொடர்ந்து வளர்ச்சி கண்டிருப்பதோடு கூடுதல் தீர்மான உறுதி படைத்ததாயும் ஆகியிருக்கிறது.

தொழிலாள வர்க்கத்தில் அதிகரித்துச் செல்லும் எதிர்ப்பினால் உலுக்கப்பட்டிருக்கும் PS ம் பிரான்சின் ஒட்டுமொத்த ஆளும் வர்க்கமும் ஜனநாயக உரிமைகளைக் கிழித்துப் போடுவதற்கும் தொழிலாள வர்க்கத்திலான எதிர்ப்பின் எந்த வெளிப்பாட்டையும் குற்றமாக்குவதற்கும் தயாரிப்புடன் இருப்பதை சமிக்கை செய்து கொண்டிருக்கின்றன. ஐரோப்பிய முதலாளித்துவ வர்க்கத்தின் சிக்கன நடவடிக்கை திட்டநிரலை திணிப்பதற்காக ஒரு போலிஸ் அரசு ஆட்சியை ஸ்தாபிப்பதே இந்தக் கொள்கைக்குக் கீழமைந்திருக்கும் தர்க்கமாய் இருக்கிறது.

ஆர்ப்பாட்டங்களுக்குத் தடைவிதிக்க சோசலிஸ்ட் கட்சி அழைப்பதானது மிகப்பெரும் அரசியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அதனை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்தில் ஆழமாய் வேரூன்றியிருக்கக் கூடிய அரசியல் எதிர்ப்பைத் தூண்டி விடக் கூடியதாகும். அத்தகையதொரு கொள்கை, ஐரோப்பிய பாசிசத்திற்கும் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்திய உடனடிக் காலத்தில் அமெரிக்க-ஆதரவுடன் அமைந்த முதலாளித்துவ ஆட்சிகளுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாள வர்க்கத்தால் வெல்லப்பட்டிருந்த ஜனநாயக உரிமைகளை அழிப்பதற்கு நிகரானதாகும்.

ஐரோப்பிய ஆளும் வர்க்கங்கள் பாசிச ஆட்சிகளின் கீழான அவற்றின் வரலாற்றுக் குற்றங்களுக்குப் பின்னரும் கூட அவற்றால் சோசலிச புரட்சியை தடுத்து விட முடிந்ததென்றால், தொழிலாள வர்க்கத்தின் அதிகாரத்திற்கான போராட்டத்தை முடக்கிய ஸ்ராலினிச கட்சிகளின் பாத்திரமே அதற்கு அனைத்துக்கும் மேலான காரணமாய் இருந்தது. இருந்தபோதிலும் அவை வெடிப்பான முதலாளித்துவ-எதிர்ப்பு மனோநிலைக்கும், பிரான்ஸ் உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் அதிகரித்த வளர்ச்சிக்கும், அத்துடன் சோவியத் ஒன்றியத்தின் இருப்பு தொடர்வதில் பொதிந்திருந்த சோசலிசப் புரட்சியின் அபாயத்திற்கும் முகம்கொடுத்திருந்தன. சமூக மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீது மிகப் பரந்த விட்டுக்கொடுப்புகளுக்கு அவை நிர்ப்பந்தம் பெற்றன.

நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் கீழ் இது மறுக்கப்பட்டிருந்த, 1946 இல் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த பிரெஞ்சு அரசியல் சட்டத்தின் முகவுரையின் 7வது பிரிவு, வேலைநிறுத்தத்திற்கான உரிமையை முறையாக உத்தரவாதம் செய்தது.

1950 இல் வரைவு செய்யப்பட்டு பிரான்சும் ஐரோப்பாவெங்கிலும் பல்வேறு நாடுகளும் கையெழுத்திட்ட மனித உரிமைகள் தொடர்பான ஐரோப்பிய மாநாட்டின் 11வது பிரிவு, ஒன்றுகூடுவதற்கும் ஆர்ப்பாட்டம் செய்வதற்கும் முறைப்படியாக உத்திரவாதமளித்தது.

கால்நூற்றாண்டுக்கு முன்பாக சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டதன், மற்றும் அது முதலாக குறிப்பாக 2008 இன் பொருளாதார நெருக்கடி முதலாக வங்கிகள் மற்றும் ஐரோப்பிய அரசாங்கங்களால் நடத்தப்பட்டு வந்திருக்கின்ற சிக்கன நடவடிக்கைகளின் அரசியல் தாக்கங்களே இப்போது வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. பிரான்சின் அரசியல்சட்டத்திலும் மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய மாநாட்டிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கக் கூடிய உரிமைகள் ஐரோப்பாவெங்கிலும் தொழிலாள வர்க்கத்தின் மீது தொடுக்கப்படுகின்ற சிக்கன நடவடிக்கைத் தாக்குதல்களுக்கு இணக்கமற்றவையாக இருக்கின்றன. இந்த உரிமைகளை அகற்றி, சமூக எதிர்ப்பை, தனது பரந்த மற்றும் அதிகரித்துச் செல்கின்ற போலிஸ் மற்றும் மின்னணுக் கண்காணிப்பு எந்திரத்தைக் கொண்ட ஒடுக்குமுறையைக் கொண்டு கையாளுவதை நோக்கி ஆளும் வர்க்கம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

பிரான்சில், நவம்பர் 13 பாரிஸ் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பின்னர் திணிக்கப்பட்ட அவசரகாலநிலையின் முக்கியத்துவத்தை இது அம்பலப்படுத்துகிறது. அதன் பிரதான இலக்கு இஸ்லாமிய பயங்கரவாத வலைப்பின்னல்கள் அல்ல - சிரியாவில் ஆட்சிமாற்றத்திற்கான பினாமிப் போரில் தங்களின் மதிப்பிற்குரிய சொத்துக்களாய் அவை பயன்படுகின்ற வரையில் நேட்டோ சக்திகள் அவற்றை சகித்துக் கொள்கின்றன - மாறாக தொழிலாள வர்க்கமே ஆகும் என்பதை உலக சோசலிச வலைத் தளம் மீண்டும் மீண்டும் எச்சரித்தது. அதற்குப் பிந்தைய சில மாதங்களிலேயே, தனது சிக்கன நடவடிக்கை திட்டநிரலுக்கு தொழிலாள வர்க்கத்தில் வெளிப்படும் எதிர்ப்பை சட்டவிரோதமாக்குவதற்கு PS நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறது.

ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டமானது அனைத்திற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தில் ஒரு புதிய புரட்சிகர தலைமையை உருவாக்கும் பிரச்சினையை மேலே கொண்டு வருகிறது. CGT ம் அதனுடன் இணைந்த இடது முன்னணி போன்ற பல்வேறு போலி-இடது அமைப்புகளும் தொழிலாள வர்க்கத்தில் PS க்கான எதிர்ப்பை அணிதிரட்டுவதற்கான ஒரு போராட்டத்திற்கு திறனற்றவையாகவும் அதற்குக் குரோதமானவையாகவும் நிரூபணமாகும்.

CGT பொதுச் செயலரான பிலிப் மார்ட்டினஸுக்கும் தொழிலாளர் அமைச்சரான மரியம் எல் கொம்ரிக்கும் இடையிலான இன்றைய சந்திப்பு போராட்டம் விலைபேசப்படுவதற்கான ஒரு தயாரிப்பினைத் தவிர வேறெதனையும் சாதிக்க முடியாது என்பதையே வால்ஸ் மற்றும் ஹாலண்டின் அறிக்கைகள் எடுத்துக்காட்டுகின்றன. மார்ட்டினேஸ் ஊடகங்களிடம் கூறினார்: “பேச்சுவார்த்தைக்கு மறுப்பதும் மற்றும் அத்தனை விவாதத்திற்கும் முன்நிபந்தனைகளை உத்தரவிடுவதும் அரசாங்கத்தின் தரப்பில் தவறானதாகும்... வெள்ளிக்கிழமையன்று இந்த முன்நிபந்தனைகள் அகற்றப்படும் என்றும் விவாதங்கள் எங்களை முன்னேற அனுமதிக்கும் என்றும் நான் நம்புகிறேன்.”

ஆயினும் PS சட்டத்தில் எதனையும் மாற்றப் போவதில்லை என்பதும் சரணாகதிக்கான நிபந்தனைகளைத் தவிர்த்து மார்ட்டினஸ் உடன் எதனையும் அது பேச்சுவார்த்தை நடத்த விரும்பவில்லை என்பதும் இப்போது தெளிவாக இருக்கிறது.

PSக்கு எதிரான ஒரு சமரசமற்ற அரசியல் போராட்டமே முன்னிருக்கின்ற ஒரே பாதையாகும் என்பது தெளிவடைய தெளிவடைய, CGT ம் இடது முன்னணியும் இன்னும் கூடுதலாய் அத்தகையதொரு போராட்டத்தை எதிர்க்கும். இடது முன்னணி PS இன் நீண்ட கால அரசியல் கூட்டாளிகளையும் கொண்டிருக்கிறது. தேசிய நாடாளுமன்றத்தில் அது அவசரநிலைக்கு ஆதரவாய் வாக்களித்தது. சென்ற மாதத்தில் போலிசுக்கு ஆதரவான ஒரு நவ-பாசிச ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக எரிக் கோகரல் என்கிற ஒரு முன்னணி உறுப்பினரையும் கூட அது அனுப்பி வைத்தது. PS க்கு எதிராய் ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு போராட்டத்தில் அது கடும் குரோதம் கொண்டதாய் நிரூபணமாகும்.

சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தில் ஆதரவை அணிதிரட்டுவதே பிரான்சில் தொழிலாளர்கள் முகம் கொடுக்கின்ற இன்றியமையாத பிரச்சினை ஆகும். ஜேர்மனியிலான ஹார்ட்ஸ் சட்டங்களின் பாணியில், ஐரோப்பாவெங்கிலுமான முன்னணி நிர்வாகிகளுடன் ஆலோசித்து தொழிலாளர் சட்டத்தை PS உருவாக்கியது. மார்ச் மாதத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்களின் முதல் அலைக்கு அது முகம்கொடுத்த சமயத்தில், ஜேர்மனி, இத்தாலி மற்றும் போர்ச்சுகல் ஆகிய நாடுகளின் சமூக ஜனநாயகக் கட்சி அரசியல்வாதிகளுடன் ஒருங்கிணைந்து கொள்கையை உருவாக்குவதற்காய் ஒரு கூட்டத்தை PS நடத்தியது. இந்த அத்தனை நாடுகளிலும் சிக்கன நடவடிக்கைகளுக்கும் போலிஸ் அரசு நடவடிக்கைகளுக்கும் எதிரான வெடிப்பான சமூக எதிர்ப்பு தொழிலாளர்கள் மத்தியில் இருக்கிறது, அங்கு தான் பிரான்சின் தொழிலாளர்கள் தங்களது மிக முக்கியமான கூட்டாளிகளைக் காண்பார்கள்.