ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

On eve of Brexit referendum, mounting warnings of global trade war

பிரிட்டன் வெளியேறுவதற்கான வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, உலகளாவிய வர்த்தக போருக்கான எச்சரிக்கைகள் அதிகரித்து வருகின்றன

By Andre Damon
  22 July 2016

உலக பொருளாதாரத்தைக் கணிசமானளவிற்கு நிலைகுலைவுக்கு உள்ளாக்க அச்சுறுத்தும் ஒரு நிகழ்வாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இங்கிலாந்தின் அங்கத்துவம் மீது வியாழனன்று நடக்க உள்ள வெகுஜன வாக்கெடுப்புக்கு முன்னதாக, உலக வர்த்தக அமைப்பு (WTO), உலக வர்த்தகம் மந்தநிலையில் இருக்கையில் பாதுகாப்புவாதம் அதிகரித்து வருகிறது என்று எச்சரித்துள்ளது.

அமெரிக்காவில் டோனால்ட் ட்ரம்ப், பிரிட்டனில் நைஜல் ஃபாராஜ், பிரான்சில் மரீன் லு பென் மற்றும் அதேபோன்ற ஏனைய நாட்டு பிரமுகர்கள் என இத்தகைய வலதுசாரி தேசியவாத அரசியல்வாதிகளது வளர்ச்சியால் எடுத்துக்காட்டப்பட்ட பொருளாதார தேசியவாதம் மற்றும் வல்லாட்சியை (autarchy) நோக்கி அதிகரித்து வரும் போக்குகளின் மிகவும் வெளிப்படையான வெளிப்பாடே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் அச்சுறுத்தலாக உருவாகியுள்ளது.

2009 இல், WTO ஆவணங்களைத் தொகுக்கத் தொடங்கியதற்குப் பின்னர் கிடைக்கும் தகவல்படி, முன்னணி தொழில்துறை நாடுகளின் ஜி20 குழுவினது அங்கத்துவ நாடுகள் அக்டோபர் 2015 மற்றும் மே 2016 க்கு இடையே, மிகவும் வேகமான விகிதத்தில் புதிய பாதுகாப்புவாத நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி இருப்பதாக செவ்வாயன்று WTO ஓர் அறிக்கையில் அறிவித்தது.

இக்காலக்கட்டத்தின் போது, ஜி20 பொருளாதாரங்கள், "மாதத்திற்கு சராசரியாக ஏறக்குறைய 21 புதிய நடவடிக்கைகளுக்கு சமமாக, 145 புதிய வர்த்தக-கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை" நடைமுறைப்படுத்தியதாக WTO குறிப்பிட்டது. இது "முந்தைய அறிவிப்பின்படி மாதத்திற்கு 17 என்பதைக் காட்டிலும் கணிசமான அளவிற்கு" அதிகரித்திருந்தது.

ஆதாரம்: உலக வர்த்தக அமைப்பு

இதனொரு விளைவாக, ஜி20 பொருளாதாரங்களில் நடைமுறையில் உள்ள வர்த்தக-கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் மொத்த எண்ணிக்கையானது, அந்த மீளாய்வின் கீழ் அக்காலக்கட்டத்தில் 10 சதவீத அளவிற்கு அதிகரித்திருந்தது. இந்த பொருளாதாரங்களில் நடைமுறையில் இருக்கும் வர்த்தக கட்டுப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை, 2010 அக்டோபர் மத்தியில் 324 ஆக இருந்ததில் இருந்து இப்போது 1,196 ஆக அதிகரித்துள்ளது. 2008 க்குப் பின்னர் கொண்டு வரப்பட்ட வர்த்தக தடைகளில் 20 சதவீதம் மட்டுமே அவை நடைமுறைப்படுத்தப்பட்டதற்குப் பின்னர் நீக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கை, நிதியியல் நெருக்கடிக்கு முந்தைய மற்றும் பிந்தைய காலகட்டத்திற்கு இடையிலான உலக வர்த்தக வளர்ச்சிக்கும் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்குமான உறவில் ஏற்பட்டிருந்த கூர்மையான தொடர்பின்மையைச் சுட்டிக்காட்டுகிறது. 2008 க்குப் பிந்தைய காலகட்டத்தில், வர்த்தக வளர்ச்சியானது 2008 க்கு முந்தைய அதன் மட்டத்தை விட சராசரியாக பாதிக்கும் சற்று அதிகமாக இருந்துள்ளது. “கடந்த நான்காண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில் வர்த்தக வளர்ச்சியின் மெதுவான வேகம் 1990 இல் இருந்து 2008 வரையிலான காலகட்டத்துடன் முரண்பட்டு நிற்கிறது, அந்த காலகட்டத்தில் உலகின் மொத்த உள்நாட்டு வளர்ச்சியின் வேகத்தை விட சராசரியாக 21 மடங்கு வணிக வியாபாரம் அதிகமாக இருந்தது,” என்று WTO குறிப்பிட்டது.

2015 இல் உலக வர்த்தகம் வீழ்ச்சி அடைந்ததுடன், அது பண்டங்களின் விலை வீழ்ச்சி மற்றும் ஏற்றுமதி ஸ்திரமின்மைக்கு இட்டுச் சென்றது. அந்த அறிக்கை குறிப்பிடுகையில், “உலக வர்த்தகத்தின் டாலர் மதிப்பு 2015 இல் கூர்மையாக சரிந்து, ஆண்டுக்கு-ஆண்டு என்றரீதியில் சுமார் 13 சதவீதமாக நான்காம் காலாண்டில் வீழ்ச்சி அடைந்திருந்தது,” என்று விளக்கியது.

ஆதாரம்: உலக வர்த்தக அமைப்பு

இன்றியமையாத விதத்தில் காலவரையற்ற காலத்திற்கு ஒரு பொருளாதார மந்தநிலை இருக்குமென அதிகரித்த எண்ணிக்கையிலான பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கத் தொடங்கியுள்ளதன் விளைவாக, பொருளாதார தேசியவாதம் நோக்கிய போக்குகள் தீவிரமடையக்கூடும்.

இந்தாண்டின் ஆரம்பத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் Maurice Obstfeld எச்சரிக்கையில், “அதிகரித்தளவில் ஏமாற்றமளிக்கும்" உலக பொருளாதாரமானது, மற்றொரு நிதியியல் நிலைகுலைவு மற்றும் அதிகரித்து வரும் பாதுகாப்புவாத அச்சுறுத்தலுக்கு இடையே, "ஒரே நேரத்தில் நிகழும் வளர்ச்சிக்குறைவால்" அச்சுறுத்தப்படுவதாக எச்சரித்தார். “உள்நோக்கி-திரும்பும் தேசியவாதத்தின் அதிகரித்த அலையுடன்" சேர்ந்து “ஒரு சமயத்தில் முன்னோக்கி இயக்கப்பட்ட ஐரோப்பிய திட்டம் ஆட்டங்கண்டு வருகிறது என்பதில் ஐரோப்பா எங்கிலும் அரசியல் கருத்தொற்றுமை நிலகிறது,” என அவர் எச்சரித்தார்.

“பரந்தளவில் வர்த்தக மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு பங்கம் விளைவதற்கு, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு இருக்கும் நிஜமான சாத்தியக்கூறு ஒரு வெளிப்பாடாகும்,” என்று Obstfeld தெரிவித்தார். “ஐரோப்பாவைப் போலவே, அமெரிக்கா உட்பட ஏனைய முன்னேறிய நாடுகளில், எல்லை கடந்த பொருளாதார ஒருங்கிணைப்புக்கு எதிரான ஒரு எதிர்விளைவு என்பது போருக்குப் பிந்தைய முன்பில்லாத அளவிலான அதிக சுதந்திர வர்த்தக போக்கை நிறுத்தவோ அல்லது திருப்பி அமைக்கவோ அச்சுறுத்துகிறது,” என்பதையும் அவர் சேர்த்துக் கொண்டார்.

செவ்வாயன்று அமெரிக்க செனட் சபையில் கூறிய கருத்துக்களில், பெடரல் ரிசர்வ் தலைமை பெண்மணி ஜெனெட் யெலென் அவரது கவலைகளை அழுத்தந்திருத்தமாக வெளியிட்டார், பொருளாதார மந்தநிலைமை நோக்கி நிகழ்ந்துவரும் போக்குகள் காலவரையின்றி தொடரக்கூடும் என்பதை அவர் முதலில் இம்மாத ஆரம்பத்திலும் கூறியிருந்தார். “சமீபத்திய ஆண்டுகளில் காணப்படும் மெதுவான உற்பத்தி வளர்ச்சி எதிர்காலத்திலும் தொடரலாம் என சில முன்னணி பொருளாதார நிபுணர்கள் வெளியிட்ட சாத்தியக்கூறை நாம் உதறிவிட முடியாது,” என்றவர் தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறும் ஒரு விளைவு, நிதியியல் சந்தைகளில் விற்றுத்தள்ளல்களைத் தூண்டிவிட்டு, அமெரிக்காவிலேயே கூட ஒரு பின்னடைவின் சாத்தியக்கூறை முன்னிறுத்துகிறது என்று கூறி, அத்தகைய ஒரு முடிவின் எதிர்விளைவுகளை குறித்தும் அவர் எச்சரித்தார்.

பெருகிய அளவிலான புதிய வர்த்தக-தடை நடவடிக்கைகள், "அதிகளவில் பண்டங்களைக் குவிப்பதற்கு எதிரான" வழக்குகளின் வடிவத்தை எடுத்துள்ளது. வர்த்தக-கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைத் திணிக்கும் நாடுகள், பொருட்களை வேண்டுமென்றே சந்தை விலைகளை விட குறைவாக விற்பதாக இத்தகைய வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. அத்தகைய வழக்குகளில் சுமார் 40 சதவீத வழக்குகள், உலோகங்களை, பிரதானமாக எஃகு உலோகத்தை இலக்கில் வைத்துள்ளன.

சீன எஃகு நிறுவனங்கள் அமெரிக்க சந்தைகளில் அவற்றின் தயாரிப்பு பொருட்களைக் "குவிப்பதாக" தீர்மானித்த பின்னர், கடந்த மாதம் அமெரிக்க வணிகத்துறை அறிவிக்கையில், அது சாத்தியமான அளவிற்கு உடனடியாக இந்த கோடைகாலம் தொடங்கி, கிட்டத்தட்ட 500 சதவீத அளவிற்கு சீன எஃகு மீது வரிகளை விதிக்க இருப்பதாக அறிவித்தது.

உலகாளவிய அளவில் எஃகு தொழில்துறையில் அதீத உற்பத்தியானது உலகெங்கிலும் பாரிய வேலைநீக்கங்களுக்கு இட்டுச் சென்றுள்ளது, பிரிட்டனில் டாடா எஃகுத்துறை செயல்பாடுகள் நிறுத்தப்பட்டதுடன் சேர்ந்து அந்நாட்டில் உற்பத்தி நடைமுறையில் நிறுத்தப்பட்டுள்ளதும் இதில் உள்ளடங்கும். இந்தாண்டின் ஆரம்பத்தில் சீனா எஃகு தொழில்துறையில் 500,000 வேலைநீக்கங்களையும் மற்றும் அதைச் சார்ந்த நிலக்கரி தொழில்துறையில் 1.3 மில்லியன் வேலைநீக்கங்களையும் அறிவித்தது.

அமெரிக்காவின் மிகப்பெரிய எஃகு உற்பத்தி நிறுவனமான US Steel அதன் சீனப் போட்டியாளர்களது எஃகு இறக்குமதிகளுக்குத் தடை விதிக்கக் கோரி தொடுத்த ஒரு வழக்கிற்கு அமெரிக்கா இம்மாதம் ஒப்புதல் அளித்தது, இம்முறை சீன நிறுவனங்கள் எஃகுத்துறை வர்த்தக இரகசியங்களைச் சட்டவிரோதமாக திருட முயற்சிக்கிறது என்ற சாக்குபோக்கை அது பயன்படுத்தியது.

அடுத்த அமெரிக்க ஜனாதிபதி மொத்தமாக சீனாவிலிருந்து எஃகு இறக்குமதிகளுக்குத் தடைவிதிக்கும் நிஜமான சாத்தியக்கூறை இந்த வழக்கு வழங்குகிறது, இத்தகையவொரு நகர்வு பிரமாண்டமான பொருளாதார மற்றும் புவிசார் அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும். சுவிட்சர்லாந்தின் செயிண்ட் காலென் பல்கலைக்கழகத்தின் சர்வதேச வர்த்தக பேராசிரியர் சைமன் எவ்னெட் பைனான்சியல் டைம்ஸிற்கு கூறுகையில், “இது எச்சரிக்கை மணிகளை ஒலிக்கச் செய்கிறது… அது நிஜமாகவே ஒரு அணுஆயுத சாத்தியக்கூறாக இருக்கும்,” என்றார்.

உலக வர்த்தகத்தின் பொறிவு மற்றும் பாதுகாப்புவாதத்தின் அதிகரிப்பு ஆகியவை 1930 களின் பெருமந்தநிலைமைக்கு பிரதான பங்களிப்பாளர்களாக இருந்ததாக பரவலாக பொருளாதார நிபுணர்கள் நம்புகின்றனர். 1930 ஸ்மூத்-ஹாவ்லெ வரிச் சட்டம் (Smoot–Hawley Tariff Act) அமெரிக்க ஏற்றுமதிகள் மற்றும் இறக்குமதிகளைப் பாதி அளவிற்கும் அதிகமாக குறைப்பதில் பங்களிப்பு செய்ததாக நம்பப்படுகிறது.

2008 நிதியியல் நெருக்கடியை அடுத்து, ஜி20 அங்கத்துவ நாடுகள், 1930 களின் தவறுகளாக அவர்கள் எதை பார்க்கிறார்களோ அதை மீண்டும் செய்வதில்லை என்றும், குறைந்து வரும் வளர்ச்சிக்கு வர்த்தக-போர் நடவடிக்கைகளைக் கொண்டு விடையிறுப்பதில்லை என்றும் சூளுரைத்து இருந்தன. ஆனால் நிகழ்ந்து வரும் மற்றும் ஆழமடைந்து வரும் பொருளாதார மந்தம் மற்றும் உலகளாவிய அளவில் அதீத உற்பத்தி, இவற்றுடன் சேர்ந்து அதிகரித்து வரும் அரசியல் எதிர்ப்பு மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சமூக போராட்டங்கள் என இவற்றிற்கு இடையே —இந்த போக்குகள் தான் 1930களில் மேலோங்கி இருந்தன— உலகின் சகல முதலாளித்துவ பொருளாதாரங்களும் இராணுவவாதம், வெறித்தனமான தேசியவாதம் மற்றும் வலதுசாரி பொருளாதார ஜனரஞ்சகவாதத்தை ஊக்குவிக்க அதிகரித்தளவில் திரும்பி வருகின்றன.

1930 களில், ஒரு தீர்க்க முடியாத பொருளாதார நெருக்கடி நிலைமைகளின் கீழ், பொருளாதார பாதுகாப்புவாதத்தின் அதிகரிப்பானது இரண்டாம் உலக போருக்கு முன்னேற்பாடாக மாறியது. இன்றோ அதே நிலைமைகள் உலகெங்கிலும் அதிகரித்தளவில் மேலோங்கி உள்ளன. தேசிய ஏதேச்சதிகாரம் மற்றும் ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான மோதலை நோக்கிய போக்குகளை எதிர்கொள்ள போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட, சர்வதேச அமைப்புகள் சிதைந்து வருகின்றன. இந்த போக்கு, இவ்வாரத்திய ஐரோப்பிய ஒன்றிய வெகுஜன வாக்கெடுப்பின் முடிவு என்னவாக இருந்தாலும், வரவிருக்கும் வாரங்களில் அதிகரிக்க மட்டுமே செய்யும், ஏனெனில் 2008 க்குப் பிந்தைய காலகட்டத்தில் மேலாளுமை கொண்ட இத்தகைய போக்குகள் —அதாவது பொருளாதார மந்தம், நிதியியல் ஒட்டுண்ணித்தனம் மற்றும் பொருளாதார தேசியவாதத்தின் வளர்ச்சி ஆகியவை— தீவிரமடைந்து வருகின்றன.

இறுதியாக, 1930 களைப் போலவே, முதலாளித்துவ தேசிய-அரசு அமைப்புமுறையின் உள் முரண்பாடுகளில் வேரூன்றிய இத்தகைய போக்குகளுக்கு எந்தவிதமான சமாதானமான தீர்வும் கிடையாது. அவை ரஷ்யா மற்றும் சீனாவிற்கு எதிராக அமெரிக்காவினது தொடர்ச்சியான இராணுவ ஆத்திரமூட்டல்களிலும், அத்துடன் ஜேர்மனி மற்றும் ஜப்பான் போன்ற இரண்டாம் உலக போர்களில் ஒரு முன்னணி பாத்திரம் வகித்த நாடுகளில் ஏற்பட்டு வரும் தீவிர தேசியவாத வளர்ச்சியிலும் வேரூன்றி உள்ளன.