ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

French president, British prime minister meet to discuss Brexit crisis

பிரெக்ஸிட் நெருக்கடியை விவாதிக்க பிரெஞ்சு ஜனாதிபதியும் பிரிட்டிஷ் பிரதமரும் சந்திக்கின்றனர்

By Alex Lantier
23 July 2016

பிரிட்டிஷ் பிரதமரான தெரசா மே, ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்க்கெலுடன் பேர்லினில் சந்தித்து பேசியதன் பின்னர், வியாழனன்று பாரிஸ் பயணம் மேற்கொண்டார். அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது குறித்து பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டுடன் விவாதித்தார்.

மேர்க்கெலை விடவும் கடுமையான நிலைப்பாட்டை ஹாலண்ட் எடுப்பார் என்றும், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகளை தொடக்க வசதியாக ஒன்றிய ஷரத்தின் 50வது பிரிவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கும் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு சுதந்திர அணுகலை தக்கவைத்துக் கொள்ளும் வகையில் ஐரோப்பாவெங்கிலும் சுதந்திர நடமாட்டத்திற்கு உடன்படுவதற்கும் கோருவார் என்றும் சந்திப்புக்கு முந்தைய ஊடகச் செய்திகள் கூறின. சந்திப்பின் போது ஹாலண்ட் கொஞ்சம் அனுசரனையான நிலைக்கு நகர்ந்து, வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைக்கும் பிரான்சின் ஒரு முக்கிய இராணுவக் கூட்டாளியாக பிரிட்டனின் பாத்திரத்தை மறு உறுதி செய்வதற்கும் பிரிட்டனுக்கு கூடுதல் அவகாசம் அளித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பேச்சுவார்த்தைகள் குறித்து ஹாலண்ட் கூறினார்: “பேச்சுவார்த்தைகளுக்கு முன்பாக ஒரு விவாதமோ, அல்லது முந்தைய சுற்றுப் பேச்சுவார்த்தைகளோ இருக்க முடியாது. ஆனால் இந்தப் பேச்சுவார்த்தைக்கு தயாரிப்பு செய்யப்பட முடியும். ஆனால், நான் திரும்பவும் சொல்கிறேன், ஐரோப்பாவின், ஐக்கிய இராச்சியத்தின், மற்றும் அந்தந்த நாட்டுப் பொருளாதாரங்களின் பொதுவான நலனுக்கு, இது எத்தனை விரைவாக நடக்கிறதோ அத்தனை நல்லது”.

ஹாலண்ட் இப்போது கூறியிருக்கும் கருத்துகள் முன்னதாக அவர் அளித்திருந்த கருத்துகளுடன் முரண்பட்டன. ஐக்கிய இராச்சியம் தனது விலகல் முடிவை “எத்தனை விரைவாக முடியுமோ அத்தனை விரைவாக” அறிவிக்க வேண்டும் என்று டப்ளின் பயணத்தின் போது அவர் அறிவித்திருந்தார். ஆயினும் அந்த சமயத்தில், இந்த விவகாரத்தில் மேர்க்கெலின் “அதே அணுகுமுறையையே” தானும் கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

எவ்வாறாயினும், ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளுக்கு சுதந்திர அணுகலை தொடர்ந்து பராமரிக்கின்ற சமயத்தில் பிரிட்டனுக்கான ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டத்தை லண்டன் வரம்புபடுத்தக் கூடாது என்பதை ஹாலண்ட் தொடர்ந்து வலியுறுத்தியிருந்தார். “மக்களின் சுதந்திரமான நடமாட்டம் இல்லாவிடின் பொருட்கள், மூலதனம் மற்றும் சேவைகளின் சுதந்திரமான நடமாட்டமும் இருக்க முடியாது” என்று அறிவித்த அவர் “மக்களின் சுதந்திர நடமாட்டத்திற்கு உடன்பட்டு பொதுச் சந்தையில் தொடர்வது, இல்லையேல் பிறிதொரு அந்தஸ்து நிலையைக் கொள்வது” ஆகிய இரண்டுக்கும் இடையில் லண்டன் ஒரு தெரிவைச் செய்தாக வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ஆயினும், பிரெக்ஸிட் வாக்களிப்பானது, பிரிட்டனுக்குள் ஐரோப்பிய ஒன்றிய மக்களின் புழங்கு திறனை வரம்புபடுத்துவதற்கான அங்கீகரிப்பின் ”மிகத் தெளிவான” சமிக்கை என்றும் அந்த வாக்களிப்பு அம்சத்திற்கு மரியாதையளிக்கவே தனது அரசாங்கம் நோக்கம் கொண்டுள்ளது என்றுமான தனது நிலையை மீண்டும் மே வலியுறுத்தினார். பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தனது பேச்சுவார்த்தை நிலைகளுக்கு தயாரிப்பு செய்து கொள்ளும் பொருட்டு அதற்கு அவகாசம் கிடைக்கின்ற வகையில், ஆண்டின் இறுதிக்கு முன்பாக 50வது ஷரத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் எண்ணம் பிரிட்டனுக்கு இல்லை என்பதையும் அவர் வலியுறுத்தினார்.

பிரிட்டனுக்குள் புலம்பெயர்கின்ற ஐரோப்பிய ஒன்றிய புலம்பெயர்வோரது உரிமைகள் குறித்து கவலைப்படுபவரைப் போல ஹாலண்ட் நடிப்பது ஒரு கபடவேட நடிப்பாகும். மே உடனான பேச்சுவார்த்தைகளில் கடினமான நிலைப்பாட்டை நோக்கி அவரைத் தள்ளியது புலம்பெயர்வோர் உரிமைகளுக்கான கவலைகள் அல்ல, Calais இல் பிரான்சிலிருந்து பிரிட்டனுக்கு பயணிக்க முனைகின்ற புலம்பெயர்மக்களை தடுக்கக் கூடிய புலம்பெயர் விரோத Le Touquet உடன்படிக்கையை தொடர்ந்து பராமரிக்கின்ற திட்டங்களைக் கொண்டு இருவருமே அவற்றின் மீது தாக்குதல் நடத்தியிருந்தனர். மாறாக, ஐரோப்பிய முதலாளித்துவத்தைக் கீழறுக்கக் கூடிய நிதி மற்றும் மூலோபாயப் பதட்டங்கள் அதிகரித்துச் செல்வதும், குறிப்பாக, பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகத்தின் நெருக்கடியுமே ஹாலண்டின் கடுமையான நிலைப்பாட்டின் காரணங்களாகும்.

ஆங்கிலக் கால்வாய்-வடக்குக் கடல் பிராந்தியத்திலுள்ள எல்லைக் கட்டுப்பாடுகளை கட்டுப்படுத்துகின்ற 2003 Le Touquet உடன்படிக்கைகளை ஹாலண்ட் மற்றும் மே இருவருமே மறு உறுதி செய்தனர். பிரான்சில் இருந்து பிரிட்டனுக்கு பயணிக்க எத்தனிக்கும் புலம்பெயர்வோரைத் தடுக்க கடமை கொண்டதாய் இது பிரான்சை ஆக்குகிறது, இதன் விளைவாக வடக்கு பிரான்சில் உள்ள Calais மற்றும் Grande-Synthe இல் உள்ள படுபயங்கரமான அகதிகள் முகாம்கள் உருவாகின. பிரிட்டனுக்குள் நுழைந்து விட முயலுகின்ற நப்பாசை கொள்ளும் குடியேற்ற மக்களை பிரெஞ்சு போலிஸ் தாக்குவதும் அவர்களுடன் மோதுவதும் அங்கே வழக்கமாகியிருக்கின்றன.

முன்னாள் வலது-சாரி பிரதமரான அலென் ஜூப்பே உள்ளிட்ட சக்திகள், பிரெக்ஸிட்டுக்கான பதில் நடவடிக்கையாக, இந்த உடன்படிக்கையை மறுதலித்து, புலம்பெயர் மக்களை பிரிட்டனுக்குள் பயணிக்க விடும்படி அழைப்பு விடுத்ததை ஹாலண்ட் உதாசீனம் செய்தார்.

பிரிட்டனுக்கு எதிரான ஹாலண்டின் சற்று கூடுதல் கடுமையான நிலைப்பாடு ஐரோப்பாவில் இருக்கும் முக்கிய ஏகாதிபத்திய சக்திகளிடையே நிலவுகின்ற கடுமையான பிளவுகளையும் போட்டிகளையும் பிரதிபலிப்பதாய் இருக்கிறது. பிரிட்டனைப் போல் ஏறக்குறைய தொழில்மயம் வற்றிப் போய் ஒரு சில பாரிய வங்கிகளால் கட்டுப்படுத்தப்படக் கூடியதாக இருக்கின்ற பிரான்சில், ஆளும் உயரடுக்கின் பிரிவுகள் பிரெக்ஸிட் நெருக்கடியில் இருந்து நிதிரீதியாக இலாபமடைய நோக்கம் கொண்டிருக்கின்றன. பிரெக்ஸிட் வாக்களிப்புக்குப் பின்னர் லண்டன் நகரை விட்டு ஓடுகின்ற வெளிநாட்டு வங்கிகளை பாரிசுக்கு இழுப்பதற்கும் அதன்மூலம் பாரிஸை லண்டனின் ஒரு நிதிரீதிப் போட்டியாளராய் உருவாக்குவதற்கும் பிரெஞ்சு நிதித்துறையினர் நம்பிக்கை கொண்டிருக்கும் அதேவேளையில், ஐரோப்பாவை நிதிரீதியாகச் சூறையாடுவதில் கிடைக்கும் செல்வத்தைப் பங்குபோடுவதிலும் ஒரு கடுமையான மோதல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான சக்திகளுக்கு எதிராய் ஜனநாயக உரிமைகளையும் புலம்பெயர்ந்தோரையும் ஐரோப்பிய ஒன்றியம் பாதுகாத்துக் கொண்டிருப்பதாக நடிப்பதன் மூலமாக பிரெஞ்சு அரசியலில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான சக்திகளின் எழுச்சியை மட்டுப்படுத்துவதும் ஹாலண்டின் இன்னொரு கவலையாக இருக்கிறது. இதில் அவரது பிரதான இலக்காக இருப்பது நவ-பாசிச தேசிய முன்னணி. இக்கட்சியானது ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கமும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியமும், தொழிலாள வர்க்கத்தின் மீது மக்கள்விரோதக் கொள்கைகளை இடைவிடாது திணித்ததன் மூலமாக ஆழமாய் நம்பிக்கையிழந்து விட்டிருப்பதை சுரண்டிக் கொண்டு, பிரெக்ஸிட் வாக்களிப்புக்கு அழைப்பு விடுத்த பிரிட்டனின் அதி-வலது சக்திகளுக்கு நிகரான விதத்தில் தேசியவாத அழைப்புகளைச் செய்து வருகிறது.

Le Touquet உடன்படிக்கைகளைப் பராமரித்துக் கொண்டே ஜனநாயக உரிமைகளின் பாதுகாவலராகவும் வேடம்போட ஹாலண்ட் முனைவது என்பது, ஐரோப்பிய ஒன்றியத்திற்குள்ளாக சிக்கன நடவடிக்கைக்கும் ஆழமடைந்து செல்லும் பிளவுகளுக்கும் தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு அதிகரித்துச் செல்வதால் குறிக்கப்படுகின்ற ஒரு சூழலின் மீது மிகக் குறைந்த தாக்கத்தையே கொண்டிருக்கும்.

பிரிட்டனின் 48 சதவீதத்துடன் ஒப்பிட்டால் பிரெஞ்சு மக்களில் 61 சதவீதம் பேர் ஐரோப்பிய ஒன்றியம் குறித்து “அனுகூலமற்ற” கண்ணோட்டத்தையே கொண்டிருந்தனர் என்று சமீபத்தில் Pew Research Center வெளியிட்ட ஒரு கருத்துக்கணிப்பு கண்டறிந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான மனோநிலையில் கிரீசுக்கு - அடுத்தடுத்த கிரேக்க அரசாங்கங்கள் திணித்த ஆறு ஆண்டு கால ஐரோப்பிய ஒன்றிய தலைமையிலான சிக்கன நடவடிக்கைக் கொள்கைகளால் இந்நாடு நாசம் செய்யப்பட்டிருந்தது - அடுத்த இடத்தை பிரான்சு பிடித்திருந்தது.

பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி இடையில் அதிகரித்துச் செல்லும் பதட்டங்கள் பிரான்சில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆதரவை மேலும் கீழறுத்துக் கொண்டிருக்கின்றன. “ஐரோப்பிய ஒன்றியமானது சமபலம் கொண்டவர்களின் ‘கூட்டாக’ ஜேர்மனியுடன் சேர்ந்து பிரெஞ்சு மக்களிடம் விற்கப்பட்டிருந்தது” என்று ஐரோப்பிய ஒன்றிய விரோத டெய்லி டெலிகிராப் பத்திரிகையிடம் க்வீன் மேரி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் Brigitte Granville கூறினார். “ஆனால் 2010க்குப் பின்னர் அந்த நிலைமை இல்லை என்பது தெளிவு. கிரீசில் ஜேர்மனி தான் ஒவ்வொன்றையும் தீர்மானித்தது என்பதை எவரும் காணமுடியும்.”

ஒரு முதலாளித்துவ அடிப்படையில் ஐரோப்பாவை ஐக்கியப்படுத்த முதலாளித்துவம் திறனற்று இருப்பதும், மோதல் மற்றும் போரை நோக்கிய முனைப்பு அதிகரித்துச் செல்வதுமே எங்கெங்கிலும் முன்னிலைக்கு வந்து கொண்டிருக்கின்றன.

உண்மையில், ஹாலண்ட்-மே உரையாடலில் இன்னுமொரு முக்கிய அம்சமாக இருந்தது பிரான்ஸ்-பிரிட்டன் இடையிலான இராணுவக் கூட்டணியாகும். வரலாற்றுரீதியாக இருபதாம் நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்களில் ஜேர்மனிக்கு எதிராக செலுத்தப்பட்டதாக இருந்த இந்தக் கூட்டணி, 2010 இல் உருவான வரிசையான உடன்படிக்கைகளில் மறு உறுதி செய்யப்பட்டது. அணு ஏவுகணைகள் மற்றும் விமானந்தாங்கிக் கப்பல்களைப் பராமரிப்பதற்கான வளங்களை திரட்டுவதற்கு பிரான்ஸும் பிரிட்டனும் அவற்றில் உடன்பட்டிருந்தன. ஐரோப்பாவிற்குள்ளாக இது ஒரு கடுமையான பிளவுக்கு இட்டுச் சென்றது. 2011 இல் லிபியாவுக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா தொடக்கிய ஒரு வலிந்து தாக்கிய போரில் இருந்து ஜேர்மனி ஒதுங்கிக் கொண்டது.

அணு ஆயுதங்களைக் கொண்டு நூறாயிரக்கணக்கான மக்களைக் கொல்வதற்கு தனக்கு விருப்பமே என பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் மே வெளிப்படையாக அறிவித்து விட்டிருந்ததற்கு பிந்தைய கொஞ்ச காலத்திலேயே, ஹாலண்டும் மேயும் பிரான்ஸ்-பிரிட்டன் கூட்டணியின் முக்கியத்துவத்தை, குறிப்பாக அணு அம்சத்தை, மறுதிட்டவட்டம் செய்திருந்தனர். தொழிற் கட்சிக்குள் அக்கட்சியின் தலைவரான ஜெரிமி கோர்பினை வெளியேற்றுவதற்காக நடக்கின்ற ஜனநாயக-விரோத நடவடிக்கைகளின் மையத்திலும் இந்தப் பிரச்சினை இருந்து வருகிறது, கோர்பின் பல்வேறு சமயங்களிலும் பிரிட்டனின் Trident அணு ஏவுகணைத் திட்டத்தை விமர்சித்து வந்திருப்பதோடு அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான தனது எதிர்ப்பையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.

மிக மூர்க்கமான கூறுகளின் பின்னால் ஹாலண்ட் தன்னை நிறுத்திக் கொண்டார். “சமீப வருடங்களில் வலுவூட்டப்பட்டிருக்கிறதும் அத்துடன் மிக முக்கிய கருப்பொருளான, தற்காப்பு அணுசக்திப் பெருக்கம் என்பதை மையமாய்க் கொண்டதுமான பாதுகாப்பு ஒத்துழைப்பு” குறித்து அவர் வெகுவாய் பாராட்டினார். ”ஒரு சில நாட்களுக்கு முன்பாக, பொது அவையில் நடைபெற்ற ஒரு விவாதம், நமது இரண்டு நாடுகளுக்கு இடையிலான புதிய உறவுகளைக் கட்டியெழுப்பக் கூடிய தற்காப்பு அணுஆயுதப் பெருக்கத்திற்கு ஆதரவாக ஐக்கிய இராச்சியத்தின் ஈடுபாட்டை மீண்டும் ஊர்ஜிதம் செய்திருக்கிறது.”