ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US vice president’s trip triggers debate on US-China conflict

அமெரிக்க துணை ஜனாதிபதியின் பயணம் அமெரிக்க-சீன மோதல் குறித்த விவாதத்தைத் தூண்டுகிறது

By Mike Head and James Cogan
23 July 2016

தென் சீனக் கடலில் அதன் கடல்சார் உரிமைகோருவதற்கு சீனாவிற்கு எந்த "வரலாற்று உரிமையும்" கிடையாதென மத்தியஸ்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றத்தின் (PCA) தீர்ப்பை அடுத்து துணை ஜனாதிபதி ஜோ பைடெனின் இராஜாங்க நடவடிக்கையானது, அமெரிக்க ஏகாதிபத்தியம் அந்த தீர்ப்பை பெய்ஜிங் உடன் இராணுவ பதட்டங்களைத் துரிதமாக அதிகரிப்பதற்குப் பயன்படுத்த விரும்புகிறது என்பதில் எந்த ஐயத்தையும் விட்டு வைக்கவில்லை.

ஜூலை 16 க்குப் பின்னர், ஹவாய் இல் ஜப்பானிய மற்றும் தென் கொரிய மந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்திய பைடென், அமெரிக்காவினது ANZUS உடன்படிக்கை கூட்டாளிகளான ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்திற்கு உயர்மட்ட அரசு விஜயங்களை மேற்கொண்டார். சர்ச்சைக்குரிய பகுதிகளில் சீனா உரிமைகோரும் தீவுத்திட்டுக்கள் மற்றும் பாறைகுன்றுகளுக்கு அருகில் கடல் மற்றும் வான்வழியில் "கடல் போக்குவரத்துக்கான சுதந்திரம்" என்றழைக்கப்படும் ஆத்திரமூட்டல்களைத் தீவிரப்படுத்துவதில் ஆஸ்திரேலிய இராணுவ மற்றும் இராஜாங்க ஆதரவை வாஷிங்டன் எதிர்பார்க்கிறது என்பதை பைடென், குறிப்பாக, ஆஸ்திரேலியாவில் தெளிவுபடுத்தினார்.

அந்நீதிமன்ற தீர்ப்பை ஆதரித்து அறிக்கைகளை வெளியிடுமாறு, அமெரிக்க ஆதரவுடன் சீன உரிமைக்கோரல்களுக்கு சட்டபூர்வ சவாலைத் தொடங்கிய அரசாங்கமான பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் இந்தியா உட்பட ஏனைய பல அப்பிராந்திய நாடுகளை ஒபாமா நிர்வாகம் தூண்டியது.

இன்று லாவோஸ் இல் தொடங்குகின்றதும், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஜோன் கெர்ரி மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் யி இருவரும் கலந்து கொள்ள இருப்பதுமான தென்கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பான ஆசியான் (ASEAN) வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு, அதன் அங்கத்துவ நாடுகளிடையே தென் சீனக் கடல் மீதான பிளவுகளால் மேலாதிக்கம் பெற்றிருக்கும். PCA தீர்ப்பை ஆதரித்து ஓர் அறிக்கையைப் பெறும் முயற்சிகளை குறைந்தபட்சம் லாவோஸ் மற்றும் கம்போடியா எதிர்க்கக்கூடும். எதிராளிகளுக்கு இடையிலான உரிமைகோரல்களை "இருதரப்பு" பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்த்துக் கொள்ளலாம் என்ற சீனாவின் நிலைப்பாட்டை அவை ஆதரிக்கின்றன.

அமெரிக்க இராணுவம் அதன் அடுத்த "கடல் போக்குவரத்துக்கான சுதந்திர" நடவடிக்கையை மேற்கொள்ளும் போது, ஆயுத மோதல்கள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறே சகல இராஜாங்க நடவடிக்கைகளில் இருந்தும் அதிகரிக்கிறது.

ஆஸ்திரேலியாவில், பைடென் இன் விஜயத்தை அடுத்து அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையிலான ஒரு போர் சாத்தியக்கூறு மீது ஊடகங்களில், பிரதானமாக ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிவியூ (AFR) இல் பகிரங்கமான ஒரு விவாதம் நடந்துள்ளது.

ஜூலை 2 ஆஸ்திரேலிய தேர்தல்களுக்கான பிரச்சாரம் முழுவதிலும் அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகமானது, அமெரிக்க தலைமையிலான போர் முனைவைக் குறித்தும் மற்றும் மக்களின் முதுகுக்குப் பின்னால் நடந்து வரும் இராணுவ நடவடிக்கைகள் குறித்தும் மவுனமான ஒரு சதியில் ஈடுபட்டிருந்தன. பைடென் இன் பயணமும் மற்றும் அவர் அளித்த சேதியும், போர் அபாயத்தை உடனடியாக அரங்கின் மத்தியில் கொண்டு வந்துள்ளன.

கடந்த புதனன்று அமெரிக்க-ஆஸ்திரேலிய கூட்டணி குறித்து ஓர் உரையில் கூறுகையில், “ஆசிய பசிபிக்கில் அமெரிக்காவின் அர்ப்பணிப்பு மற்றும் தாங்குதிறன்" குறித்து கேள்வி எழுப்புபவர் "சரியாக கவனம் செலுத்தவில்லை" என்று பைடென் அறிவித்தார். அதன் "ஈடுஇணையற்ற" இராணுவ செலவுகள் மற்றும் பலத்துடன், அமெரிக்கா "உலகின் ஒவ்வொரு மூலையிலும், எந்தவொரு மூலையிலும் ஒரே நேரத்தில் அதன் கடற்படை மற்றும் விமானப்படை பலத்தைக் காட்ட சாமாந்தரமற்ற தகைமையைக்" கொண்டிருக்கிறது. ஆஸ்திரேலியா "எல்லா வழியிலும்" அமெரிக்காவுடன் நிற்க வேண்டுமென பைடென் வலியுறுத்தினார்.

வியாழனன்று AFR இல் வெளியான ஒரு கட்டுரை, “அமெரிக்காவும் சீனாவும் போரில் இறங்கினால் யார் வெல்வார்கள்?” என்று தலைப்பிடப்பட்டு இருந்தது. “அத்தகைய ஒரு மோதல் உலகையே பிளவுபடுத்தி உலக பொருளாதாரத்தை அதன் அடிமட்டத்திற்குக் கொண்டு வரும்" என்றாலும் கூட, அதுபோன்ற "அதீத" மற்றும் "தீவிரமான" சூழலைப் புறக்கணித்து விட முடியாது என்று பைடென் விஜயத்தின் போதே அது திட்டவட்டமாக குறிப்பிட்டது.

“நாங்கள் முழுவதுமாக உள்நுழைந்துள்ளோம்—நீங்களும் இருக்கிறீர்கள்" (“We’re all in—you are too”) என்ற ஒளிவுமறைவற்ற தலைப்பின் கீழ், ஆஸ்திரேலிய பைனான்சியல் ரிவியூ பைடென் உரையின் குறிப்புகளை பிரசுரித்தது. இந்த தலைப்பானது, 2011 இல் அமெரிக்க ஜனாதிபதி ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் “21 ஆம் நூற்றாண்டில் ஆசிய பசிபிக்கில், ஐக்கிய அமெரிக்கா முழுவதுமாக உள்நுழைந்துள்ளது" என்று கூறி "முன்னிலையை" (pivot) அறிவித்த பராக் ஒபாமாவினது கருத்துக்களை பைடென் கையிலெடுத்ததைக் குறித்த ஒரு குறிப்பாகும்.

இராணுவ மற்றும் உளவுத்துறை ஸ்தாபகத்திற்குள் ஆதார நபர்களைக் கொண்டுள்ள ஒரு அனுபவமிக்க முன்னாள் இதழாளர் பிரையன் ரூவி AFR இன் மற்றொரு கட்டுரையில் எச்சரிக்கையில், சீனா உரிமைகோரும் ஒரு தீவுக்கு அருகில் ஆஸ்திரேலிய போர்கப்பல் ஒன்றை அனுப்புவது "ஒரு சிறிய மட்டத்திலான மோதலைத் தூண்டினாலும், அது கட்டுப்பாட்டை விட்டுப்போகும் அபாயத்தைக்" கொண்டிருப்பதாக குறிப்பிட்டார்.

ரூவி வெளிப்படையாக அமெரிக்க-சீனப் போரின் பேரழிவுகரமான பாதிப்புகளுக்கு ஆதரவு திரட்டினார். “கடற்கரையோர ஒரு மிகப்பெரிய வான்வழி மற்றும் கடல்வழி போரில் அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மிக எளிதாக சீனாவை தோற்கடிப்பார்கள்,” என்றவர் எழுதினார். “ஆனால் இராணுவ நிலைப்பாட்டை தீர்மானிக்காவிட்டாலும், அந்த போர் உலகளாவிய பொருளாதாரத்தை முறிக்கும் மற்றும் சீனாவுடனான ஆஸ்திரேலியாவின் வர்த்தகத்தை சிதைக்கும்” என்று, இந்த எழுத்தாளர் உட்பட, சில பார்வையாளர்கள் நம்புகிறார்கள்.

அமெரிக்கா தலைமையிலான 2003 ஈராக் மீதான படையெடுப்பைக் குறிப்பிட்டு அவர் எழுதினார்: “அவமானப்பட்ட சீனா, மறுஅணிசேர்க்கை செய்து விரோதங்களை மீட்டமைத்தால், 'இலக்கு அடையப்பட்டுவிட்டது' என்ற அறிவிப்பு, ஈராக்கில் நடந்ததை விட அர்த்தமில்லாது போகும். இறுதியில் சீனப் பெருநிலத்தின் மீது படையெடுத்து, எண்ணற்ற நகரங்களை ஆக்கிரமித்து, தேசப்பற்று மிகுந்த மில்லியன் கணக்கான சீனர்களுக்கு எதிராக ஒரு நீடித்த கொரில்லா போரில் அவர்களை வெல்வதை, ஓர் உறுதியான வெற்றி உள்ளடக்கி இருக்கும். போரில் முடியக்கூடிய இப்போதைய ஆயுத போட்டியை யாரும் விரும்பவில்லையெனக் கூறி பொதுவாக இந்த அறிவுக்கு ஒவ்வாத சாத்தியக்கூறு நிராகரிக்கப்படுகிறது. ஆனால் ஆயுத போட்டிகள் மோசமாகத்தான் போய் முடியும்,” என்றார்.

யதார்த்தத்தில் சீனா மீதான ஒரு முழு அளவிலான அமெரிக்க தாக்குதல் ஏறத்தாழ நிச்சயமாக ஒரு அணுஆயுத போராக தீவிரமடையும், அதில் சீனாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கான உழைக்கும் மக்கள் கொல்லப்படலாம். அத்தகைய ஒரு மோதலில் பைன் கேப் (Pine Gap) செயற்கைகோள் தொலைதொடர்பு நிலையம் உட்பட அமெரிக்க படைகள் அணுகுவதற்கு விடப்பட்ட ஆஸ்திரேலிய இராணுவ தளங்கள் இலக்குகளில் ஒன்றாக இருக்கலாம்.

அக்கறை கொண்ட விஞ்ஞானிகளது கூட்டமைப்பின் அணுஆயுத போர் அபாயம் குறித்த மே மாத எச்சரிகைகளைப் பின்தொடர்ந்து வாஷிங்டனை மையமாக கொண்ட மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம் (CSIS) வெளியிட்ட ஒரு சமீபத்திய அறிக்கையும் அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே சாத்தியமான ஓர் அணுஆயுத தாக்குதலைக் குறித்து விவாதிக்கிறது. அமெரிக்க ஆளும் உயரடுக்கின் கட்டளைகளுக்கு சீனாவை அடிபணிய வைக்க அமெரிக்காவின் "ஆசிய முன்னிலையை" முறைப்படுத்துவதில் CSIS முன்னிலையில் நிற்கிறது.

சீனாவின் அணுஆயுத பலமும், பாரிய பேரழிவு ஆயுதங்களும்" என்ற தலைப்பில் எழுதப்பட்ட ஜூலை 20 ஆம் தேதி அறிக்கையை பிரதான மூலோபாய பகுப்பாய்வாளர் அந்தோனி கோர்டெஸ்மன் மேற்பார்வை செய்திருந்தார். நிலத்தடி அமைப்புகள் மற்றும் சுரங்க பாதைகளின் ஒரு பாரிய வலையமைப்பில் சீனா முழு அளவிலான அதன் அணுஆயுதங்களை மூடிமறைத்துள்ளது என்று சில அமெரிக்க ஆதாரநபர்களின் குற்றச்சாட்டுக்களை மீளாய்வு செய்ய அதில் ஒரு முக்கிய பகுதியே அர்பணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் அணுஆயுதங்கள் அவற்றின் அளவிலும் திறனிலும் விரிவாக்கப்படுகின்றன என்பதே அது குறித்த CSIS பகுப்பாய்வு முழுவதிலும் இழையோடி உள்ளது. பெண்டகனுடன் தொடர்புபட்ட சிந்தனை குழாம்களால் சமீபத்திய ஆண்டுகளில் பிரசுரிக்கப்பட்ட ஏனைய அறிக்கைகளோடு சேர்ந்து, இது உள்ளார்ந்து, பெய்ஜிங் உடனான இராணுவ மோதலுக்கு அமெரிக்கா தாமதமின்றி விரைவாக செயல்பட வேண்டும் என்ற தீர்மானத்திற்கு செல்கிறது.

கோர்டெஸ்மன் எழுதுகிறார்: மோதல் சம்பவத்தில் “சீனாவும் மற்றும் அமெரிக்காவும், ஏனைய அணுஆயுத படைகளின் இருப்பால் ஏற்கனவே முன்னிறுத்தப்பட்ட மறைமுகமான அச்சுறுத்தலை கடந்து, எப்போதைக்கும் மதிப்புடைய எந்தவொரு மூலோபாய அல்லது இராணுவ வெற்றிகளை விட உண்மையில் இருதரப்பிலும் ஏறத்தாழ நிச்சயமாக மிகவும் பேரழிவு ஏற்படுத்தும் மற்றும் மிகவும் விலைகொடுக்க செய்யும் அளவிற்கு எந்தவொரு மட்டத்திலும் அணுஆயுத தாக்குதல்களை நடத்தும் கணக்கீடுகளை செய்ய நகர்வதற்கு எல்லா விதத்திலும் காரணங்கள் உள்ளன. அதே நேரத்தில் தடுப்புமுறை சிலவேளையில் தோல்வியடைந்து, ஒருபோதும் முறையாக திட்டமிட முடியாத விதத்தில் அல்லது கட்டுப்படுத்த முடியாத விதத்தில் தீவிரப்பாடு நிகழ்வதற்கு வரலாறே ஓர் கொடூரமான எச்சரிக்கையாக உள்ளது.”

2013 இல், கோர்டெஸ்மன் எழுதியிருந்த மற்றொரு ஆவணத்தில் அவர் "சிந்திக்க முடியாததை சிந்திக்க" வேண்டிய அவசியத்தை கையிலெடுத்திருந்தார் — இது இருதரப்பும் உயிர்பிழைக்கும் மற்றும் "ஜெயிக்கும்" ஓர் அணுஆயுத போர் சாத்தியமே என்று அமெரிக்க மூலோபாவாதி ஹெர்மன் கான் 1960 இல் கூறியிருந்ததைக் குறித்த குறிப்பாகும். அந்நேரத்தில் அவர் முக்கியமாக சித்த பிரமை கொண்ட வெறியராக மற்றும் "டாக்டர் ஸ்ட்ரேன்ஜ்லவ்" (Doctor Strangelove) படத்தில் ஸ்டான்லி குப்ரிக் இன் கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்டவர்களில் ஒருவராக கைவிடப்பட்டார்.

கான் இன் சித்த பிரமைக்கு இணையாக கோர்டெஸ்மன், 2013 இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான ஓர் அணுஆயுத போர் குறித்து எழுதுகையில், “ஒரு ஈவிரக்கமற்ற 'யதார்த்த" கண்ணோட்டத்திலிருந்து நல்ல செய்தி என்னவென்றால் அத்தகையவொரு மனிதயின கொடூரம், அவசியமாக மற்ற நாடுகளுக்கு மிக தீவிரமான மற்றும் பிரமாண்டமான மூலோபாய விளைவுகளை கொண்டிருக்காது என்பதுடன், சிறந்த ஆதாயங்களையே கூட கொண்டிருக்கலாம் … இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இழப்பானது பண்டங்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்பவர்களுக்கு சில குறுகிய கால பொருளாதார பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். ஆனால் மொத்த விளைவானது, மாற்றீடுகள் அல்லது செலவுகளில் எந்த தெளிவான பிரச்சினைகளும் இல்லாமல் மற்ற வழங்குனர்களுக்கு பலாபலன்களை மாற்றிவிடும்,” என்றார். [அழுத்தம் சேர்க்கப்பட்டது]

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார வீழ்ச்சிக்காக, சீனாவின் வளர்ச்சி மீது பழி தூற்றப்பட்டு வருகின்ற ஒரு நச்சுத்தனமான சூழலில், அணுஆயுதம் கொண்டு சீனாவை நாசமாக்குவது "ஆதாயங்களை வழங்கும்" என்று அமெரிக்க அரசியல் ஸ்தாபகம் தீர்மானிக்கும் என்பதே படுபயங்கரமான சாத்தியக்கூறாக உள்ளது.