ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Obama’s nuclear summit underscores danger of war

ஒபாமாவின் அணுஆயுத உச்சிமாநாடு போர் அபாயத்தை எடுத்துக்காட்டுகிறது

By Peter Symonds
2 April 2016

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அணுஆயுத பரவலைக் குறைப்பதில் அவரது ஜனாதிபதி காலம் எட்டியதாக கூறும் சாதனைகளை உயர்த்திக் காட்டும் ஒரு போலியான அறிக்கையுடன், 50க்கும் அதிகமான நாடுகள் பங்கேற்ற அணுஆயுத பாதுகாப்பு உச்சி மாநாட்டை நேற்று வாஷிங்டனில் நிறைவு செய்து வைத்தார். யதார்த்தத்தில் ஒபாமா நிர்வாகம் அணுஆயுதங்கள் பயன்படுத்துவதற்கான அபாயத்தைக் குறைத்திருக்கவில்லை, மாறாக பாரியளவில் அதிகரித்துள்ளது.

அல் கொய்தா அல்லது ISIS ஐ (ஈராக் மற்றும் சிரியாவிற்கான இஸ்லாமிய அரசு) அணுஆயுதங்களை பெறுவதிலிருந்து தடுக்க சர்வதேச ஒத்துழைப்பை உண்டாக்குவதற்காக என்ற நோக்கத்துடன், “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" பதாகையின் கீழ் இந்த உச்சி மாநாடு நடத்தப்பட்டது. “அணு குண்டுகளோ அல்லது அணுஆயுத தளவாடங்களோ இந்த பைத்தியக்காரர்களின் கைகளில் கிடைத்தால் அவர்கள் சாத்தியமான அளவிற்கு அப்பாவி மக்களைப் கொல்ல அவற்றைப் பிரயோகிப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை,” என்று ஒபாமா அறிவித்தார்.

ஆனால் மனிதயினம் முகங்கொடுத்திருக்கும் மிகப்பெரிய அபாயம் அல் கொய்தா அல்லது ISIS அணுஆயுதங்களை எடுத்து பிரயோகித்துவிடும் என்பதல்ல, மாறாக வெள்ளை மாளிகையில் உள்ள பைத்தியக்காரர்கள் அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு பேரழிவுகரமான மோதலுக்குக் களம் அமைத்து, மத்திய கிழக்கு, கிழக்கு ஐரோப்பா மற்றும் ஆசியாவில் பொறுப்பற்ற விதத்தில் வெடிக்கும் புள்ளிகளை எரியூட்டி இருக்கிறார்கள் என்பது தான்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் அந்த உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள மறுத்து விட்டார் என்ற அளவுக்கு வாஷிங்டன் மற்றும் மாஸ்கோவிற்கு இடையிலான உறவுகள் குரோதமாக உள்ளன. அந்த ஒன்றுகூடலுக்கு முன்னதாக அமெரிக்க இராணுவம் அறிவிக்கையில், ரஷ்ய எல்லைகளை ஒட்டியுள்ள கிழக்கு ஐரோப்பிய நேட்டோ நாடுகளில் பெப்ரவரி 2017 அளவில் அது ஆயுதங்தாங்கிய மூன்று படைப்பிரிவுகளது "நிரந்தர காலடியை" பேண திட்டமிடுவதாக அறிவித்தது.

மத்திய கிழக்கில், ISIS க்கு எதிராக சண்டையிடுகிறோம் என்ற போலிக்காரணத்தை பிரயோகித்து, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் மாஸ்கோவின் கூட்டாளியான ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் சிரியா ஆட்சியைக் கவிழ்க்க ரஷ்யாவுடன் ஓர் அபாயகரமான மோதலில் ஈடுபட்டுள்ளன. சென்ற நவம்பரில் நேட்டோ கூட்டாளியான துருக்கி, ரஷ்ய விமானம் அதன் வான் எல்லைக்குள் ஒன்று குறுகிய நேரத்திற்கு ஊடுருவியது என்று குற்றச்சாட்டி அந்த விமானத்தைச் சுட்டு வீழ்த்தியபோது, ஓர் இராணுவ மோதலுக்கான சாத்தியக்கூறு ஏற்பட்டிருந்தது.

அந்த உச்சமாநாட்டில் ரஷ்யா கலந்து கொள்ளாதமை அதன் மோசடியான தன்மையை எடுத்துக்காட்டுகிறது. அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து உலகின் அணு குண்டுகளில் 90 சதவீதமான சுமார் 10,000 குண்டுகளின் மிகப் பெரிய ஆயுதக் கிடங்கைச் சேவையில் கொண்டுள்ளன, இது ஒபாமாவின் "அணுஆயுதமில்லா உலகிற்கான தொலைநோக்குப் பார்வை" என்பதை கேலிக் கூத்தாக்குகிறது. வாஷிங்டனின் "அணுஆயுதப் பரவல் தடுப்பு" கொள்கையின் நோக்கம் உலகளாவிய அணு குண்டுகளைக் களைவதல்ல மாறாக ரஷ்யா உட்பட அமெரிக்காவின் முக்கிய போட்டியாளர்கள் மீது அதன் மேலாதிக்கத்தை பேணுவதை உறுதிப்படுத்துவதாகும்.

அந்த அணுஆயுத உச்சி மாநாட்டில் வெள்ளை மாளிகையின் தலைவரது ஒருங்குவிப்பு சீனாவின் மீதிருந்தது. வியாழனன்று அக்கூட்டத்தின் பின்னர் ஒபாமா அவரது சீன ஜனாதிபதியான ஜி ஜின்பிங் ஐ சந்தித்தபோது, அந்த பதட்டங்கள் உணரக் கூடியதாக இருந்தது. அதற்கு முந்தைய நாள் வாஷிங்டன் போஸ்டில் வெளியான ஒரு கருத்துரையில், அமெரிக்க ஜனாதிபதி "வட கொரியாவின் தொடர்ச்சியான ஆத்திரமூட்டல்களை" “இன்னும் முடியாத வியாபாரம்" என்று குறிப்பிட்டார். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமில்லா பகுதியாக்குவதற்கு சீனாவும் அமெரிக்காவும் ஒப்புக் கொண்டுள்ள போதினும், தென் கொரியாவில் Terminal High Altitude Area Defence இராணுவ ஆயுத அமைப்பை (THAAD) நிலைநிறுத்தும் பெண்டகனின் திட்டங்களை ஜி ஜின்பிங் "உறுதியாக எதிர்த்தார்.”

ஒபாமா, பதவிக்கு வந்ததில் இருந்து, வட கொரியாவின் ஆயுதங்கள் மற்றும் இராணுவ வசதிகளை அகற்றுவதற்கான ஆறு-தரப்பு பேச்சுவார்த்தைகளை எவ்விதத்திலும் மீண்டும் தொடங்குவதை முறியடித்துள்ளார். அதற்கு மாறாக அவர் சீனாவிற்கு எதிரான அதன் பரந்த "ஆசியாவை நோக்கிய முன்னெடுப்பின்" பாகமாக தென் கொரியா மற்றும் ஜப்பானில் அமெரிக்க இராணுவ ஆயத்தப்பாடுகளை நியாயப்படுத்த கொரிய தீபகற்பத்தின் சீற்றங்களை மீண்டும் மீண்டும் பற்றிக்கொண்டார்.

முன்னுக்குப் பின் முரணான அமெரிக்க வாக்குறுதிகளுக்கு இடையே, தரையிலிருந்து வானில் சென்று தாக்கும் ஏவுகணை பிரதானமாக வட கொரியாவிற்கு எதிராக அல்ல, சீனாவிற்கு எதிராக திருப்பி வைக்கப்பட்டுள்ளது. சீனாவின் இராணுவ விரிவாக்கத்தால் முன்னிறுத்தப்பட்ட "அச்சுறுத்தல்" குறித்து வாஷிங்டன் தொடர்ச்சியான முரசறிவித்தல்களை வைத்தாலும், அமெரிக்காதான் அதன் அணுஆயுத கிடங்குகளின் நவீனத்தன்மை மற்றும் அளவில் அதிகரித்தளவில் விஞ்சி நிற்கிறது. சீனாவிடம் 260 போர்கருவிகள் இயங்கும்நிலையில் இருப்பதாக மதிப்பிடப்படுவதுடன் ஒப்பிடுகையில் அமெரிக்கா சுமார் 5,000 போர்க்கருவிகளைச் சேவையில் கொண்டுள்ளது.

அனைத்திற்கும் மேலாக, ஒரு தற்காப்பு ஆயுதமாக காட்டப்படுகின்ற போதினும், THAAD ஆயுத அமைப்புமுறை அதன் எந்தவொரு போட்டியாளர் மீதும் "அணுஆயுத தலைமையை" எட்டுவதற்கு பெண்டகனின் முயற்சிகளது பாகமாக உள்ளது. சீனாவை போல இல்லாமல், அமெரிக்கா ஒருபோதும் முதல் அணுஆயுத தாக்குதலை நிராகரித்திருக்கவில்லை. THAAD ஆயுத அமைப்புமுறை என்பது, ஒரு முன்கூட்டிய அமெரிக்க அணுஆயுத தாக்குதலை சீன ஆயுதங்கள் செயலிழக்க செய்யவில்லை என்றால் சீன ஆயுதங்கள் அவை அமெரிக்க இலக்குகளை எட்டுவதற்கு முன்னரே தகர்த்துவிடுவதை உறுதிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டதாகும். அதேவேளையில் தகைமை கொண்டவை அல்ல.

ஜி மற்றும் ஒபாமா தென் சீனக் கடல் மீதான இராஜாங்க மோதல்களையும் பேசினர். அவர்களது சந்திப்புக்கு முன்னதாக அமெரிக்க அதிகாரிகள், சீனா அதன் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள தீவுக்குன்றுகளை “இராணுவமயப்படுத்துவதாக” மீண்டும் அதை குற்றஞ்சாட்டியதுடன், வான் பாதுகாப்பு அடையாள மண்டலம் (ADIZ) அறிவிக்கப்படுவதற்கு எதிராகவும் எச்சரித்தனர். புதனன்று பாதுகாப்புத்துறை துணை செயலர் ரோபர்ட் வோர்க் ஒரு ADIZ ஐ அமெரிக்கா அங்கீகரிக்காது என்று கூறி, அது அப்பிராந்தியத்தை "ஸ்திரமின்மைக்கு" உட்படுத்துவதாக முத்திரை குத்தினார். 2012 இல், கிழக்கு சீனக் கடலில் பெய்ஜிங் ஒரு ADIZ ஐ அறிவித்த பின்னர் அப்பகுதிக்குள் பெண்டகன் அணுஆயுத தகைமை கொண்ட B-52 ரக குண்டுவீசி விமானங்களை பறக்கவிட்டது.

தென் சீனக் கடலில் அதிகரித்துவரும் ஸ்திரமின்மை வாஷிங்டன் நடவடிக்கைகளது ஒரு நேரடி விளைவாகும். அது சீனாவிற்கு எதிராக பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் போன்ற நாடுகள் அவற்றின் கடல்போக்குவரத்து உரிமைகோரல்களை ஆக்ரோஷமாக அழுத்தமளிப்பதற்கு அவற்றை ஊக்குவித்து வருகிறது. கடந்த ஆண்டின் போது, அமெரிக்கா மீண்டும் மீண்டும் சீனாவின் நில சீரமைப்பு நடவடிக்கைகளையும் மற்றும் தென் சீனக் கடலில் "விரிவாக்கவாத" நடவடிக்கைகளையும் கண்டித்துள்ளது. இரண்டு சம்பவங்களில்—கடந்த அக்டோபர் மற்றும் மீண்டும் ஜனவரியில்—அமெரிக்கா சீன-நிர்வாகத்தில் உள்ள தீவுக்குன்றுகளைச் சுற்றி 12 கடல் மைல்தூர கடல் எல்லைக்குள் "சுதந்திர கப்பல் போக்குவரத்து" நடவடிக்கைகளை நடத்த அமெரிக்க கடற்படை சிறுபோர்க்கப்பல்களை அனுப்பியது.

நியூ யோர்க் டைம்ஸ் தகவல்படி, ஒபாமா வியாழனன்று மீண்டும் "தென் சீனக் கடலில் சீனாவின் இராணுவ வசதிகளின் கட்டமைப்பு மீது" ஜி க்கு அழுத்தமளித்தார். அதற்கு விடையிறுப்பாக, ஜி ஒபாமாவிற்குக் கூறுகையில், கடல் எல்லை பிரச்சினையில் வாஷிங்டன் ஒருதரப்பு நிலைப்பாட்டை எடுக்காது என்ற அதன் பொறுப்பை "உறுதியாக" அனுசரிக்கும் என்று அவர் நம்புவதாகவும் மற்றும் "ஒரு புறநிலைரீதியிலான மற்றும் பாரபட்சமற்ற மனோபாவத்தை ஏற்குமென்று" நம்புவதாகவும் தெரிவித்தார். சீனாவின் சின்ஹூவா செய்தி நிறுவனச் செய்தியின்படி, “கடல் போக்குவரத்து சுதந்திரம்" என்ற பெயரில் அதன் இறையாண்மையை மீறுவதை பெய்ஜிங் ஏற்காது என்று ஜி எச்சரித்தார்.

தென் சீனக் கடலில் அமெரிக்க கடற்படை போர்க்கப்பலில் இருக்கும் ஒரு செய்தியாளரிடம் இருந்து வந்த நம்பகரமான செய்திகளுடன், இவ்வாரம் நியூ யோர்க் டைம்ஸ், இதழியல் என்பதாக காட்டி அப்பிரச்சாரத்திற்கான மற்றொரு சான்றை வழங்கியது. அமெரிக்க இராணுவம் சீனப் படைகளை எதிர்கொள்வது இப்போது தென் சீனக் கடலில் வழமையான ஒன்றாகி விட்டது என்பதை அந்த இடத்திலிருந்தே வந்த அச்செய்தி தெளிவுபடுத்தியது. ஒரு பிழையான கணக்கீட்டிற்கான அபாயம் ஓர் ஆயுத மோதலுக்கு மற்றும் ஒரு பரந்த மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடும் என்பதையே இத்தகைய ஒவ்வொரு எதிர்நடவடிக்கைகளும் முன்னிறுத்துகின்றன.

“சர்ச்சைக்குரிய கடலில் ரோந்து நடவடிக்கையில், அமெரிக்கா மற்றும் சீனா மேலாதிக்கத்திற்காக போட்டியிடுகின்றன,” என்று தலைப்பிட்டு வியாழனன்று வெளியான நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை, முப்படை தளபதிகளின் தலைமையக தலைவர் ஜெனரல் ஜோசப் டன்ஃபோர்டு மற்றும் அமெரிக்க பசிபிக் கட்டளையகத்தின் தளபதி அட்மிரல் ஹாரி ஹாரீஸ் க்கு இடையே இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடந்த உரையாடல் ஒன்றைக் குறிப்பிட்டது. “[சீனா மற்றும் பிலிப்பைன்ஸால் உரிமைகோரப்படும் கடல்குன்றுகளான] Scarborough Shoals விடயத்தில் நீங்கள் போரில் இறங்குவீர்களா?” என்று டன்ஃபோர்டிடம் கேட்கப்பட்டது. அதற்கான பதில் அவரால் வழங்கப்படவில்லை.

அதற்கான பதில் ஆம் என்பதோ அல்லது இல்லை என்பதோ என்னவாக இருந்தாலும், அமெரிக்க இராணுவத்தின் மிகவும் மூத்த தளபதிகளான அவ்விருவரும் சீனா உடனான போரைச் சர்வசாதாரணமாக விவாதிப்பதே அதன் தன்மையை எடுத்துக்காட்டி விடுகிறது. அனைத்திற்கும் மேலாக ஆசியாவில் வாஷிங்டன் பதட்டங்களை தீவிரப்படுத்துவதில் ஓர் உள்ளார்ந்த தர்க்கமும் உள்ளது. அமெரிக்கா Scarborough Shoals விவகாரத்தில் பிலிப்பைன்ஸை, அல்லது சென்காயு/தியாவு தீவுக்குன்றுகள் விவகாரத்தில் ஜப்பானை, அல்லது வட கொரியா சம்பவத்தில் தென் கொரியாவை ஆதரிக்க மறுத்தால், ஆசியாவிலும் மற்றும் சர்வதேச அளவிலும் அமெரிக்க கூட்டணிகளின் ஒட்டுமொத்த வலையமைப்பும் கேள்விக்கு உள்ளாகும்.

அணுஆயுத உச்சி மாநாட்டில் ஒபாமாவின் தோரணை என்னவாக இருந்தாலும், அடித்தளத்திலுள்ள இந்த இயக்கவியல் தான் மிகவும் நிஜமான அணுஆயுத போர் அபாயத்தை முன்னிறுத்துகிறது.