ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Warnings of global arms race ahead of Nuclear Security Summit

அணுஆயுத பாதுகாப்பு மாநாட்டிற்கு முன்னதாக உலகளாவிய ஆயுத போட்டிக்கான எச்சரிக்கைகள் வருகின்றன

By Andre Damon
30 March 2016

அமெரிக்கா, சீனா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, இந்தியா மற்றும் ஏனைய ஐம்பதிற்கும் அதிகமான நாடுகளது தலைவர்கள் ஈராண்டுக்கு ஒருமுறை நடக்கும் அணுஆயுத பாதுகாப்பு உச்சிமாநாட்டிற்காக வியாழனன்று வாஷிங்டனில் ஒன்றுகூடுவார்கள். ஐரோப்பாவில் பயங்கரவாத தாக்குதல்களின் ஒரு சமீபத்திய அலையை முகங்கொடுத்திருக்கையில், ஐக்கியம் மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு குறித்து பெரிதும் அர்த்தமற்ற பிரகடனங்களை அறிவிக்க இந்த உச்சி மாநாடு அர்ப்பணிக்கப்படும்.

உளவுத்துறை முகமைகள் மற்றும் சிந்தனை குழாம்கள் பிரசுரித்த விபர அறிக்கைகள் தேசிய பத்திரிகை அல்லது மாலைநேர செய்திகளில் இவை பற்றி எப்போதாவது குறிப்பிடப்பட்டாலும் அரிதாகவே குறிப்பிடப்படுகின்றன என்பதால், திரைக்குப் பின்னால், இவை வேறுவிதமான விபரங்களைக் கூறுகின்றன, அதில் ஒன்று ரஷ்யா அம்மாநாட்டிற்கு பிரதிநிதிகளை அனுப்பப் போவதில்லை என முடிவெடுத்திருப்பதாக குறிப்பிட்டது.

மூலோபாயம் மற்றும் வரவு-செலவு திட்டம் மதிப்பீடுகளுக்கான மையம் (Center for Strategic and Budgetary Assessments) இந்தாண்டு ஆரம்பத்தில், “ஆர்மெக்கெடோன் மீள்யோசனை: இரண்டாவது அணுஆயுத காலக்கட்டத்தின் சூழல்களைத் திட்டமிடல்" என்று தலைப்பிட்டு ஆய்வு ஒன்றைப் பிரசுரித்தது.

அமெரிக்கா தலைமையில் பிரதான உலக சக்திகள் அவற்றின் அணுஆயுதங்கள் மற்றும் வழக்கில் இருக்கும் ஏனைய ஆயுதங்கள் இரண்டையும் நவீனப்படுத்த, மேம்படுத்த மற்றும் விரிவாக்க ஆக்ரோஷமாக இயங்கிவருவதுடன், உலகம் ஒரு "புதிய ஆயுத போட்டிக்கு" இடையே இருப்பதாக தனியார் உளவுத்துறை சிந்தனைக் குழாம் ஸ்ட்ராட்ஃபோர் (Stratfor) அறிவிக்கிறது.

2010 இல் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, அமெரிக்கா "புதிய அணுஆயுத போர்கருவிகளை அபிவிருத்தி செய்யாது அல்லது புதிய இராணுவ நடவடிக்கைகளையோ பின்பற்றாது அல்லது புதிய தகைமைகளை பெற்றுக்கொள்ளாது,” என்று சூளுரைத்தார். அவரது ஏனைய வாக்குறுதிகளைப் போலவே, இந்த சூளுரையும் முறிந்து போனது. வெள்ளை மாளிகை அமெரிக்க அணுஆயுத கிடங்குகளை நவீனப்படுத்த 1 ட்ரில்லியன் டாலர் திட்டத்தைத் தொடங்கி உள்ளது. இத்திட்டம், இப்போதைய அணுஆயுத போர் தளவாடங்களைத் துல்லியமாக-வழிநடத்தப்படும் ஏவுகணைகளுடன் இணைத்து மேம்படுத்துவதற்கானது, அத்துடன் இவற்றை அணுஆயுதமில்லா ஆயுதங்களுடன் இணைத்து போர்களங்களில் பிரயோகிக்க அவற்றை இலகுவாக்குவதற்காக அவற்றின் நாசமாக்கும் தகைமையைச் சீர்செய்யும் இயந்திர அமைப்புகளையும் கொண்டு வரும்.

கவலை கொண்ட விஞ்ஞானிகளின் ஐக்கியம் என்ற அமைப்பிற்காக இரண்டு முன்னாள் உயர்மட்ட பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எழுதிய ஒரு சமீபத்திய அறிக்கையில், வெள்ளை மாளிகையின் அந்த நகர்வு "புதிய அணுஆயுதங்களை அபிவிருத்தி செய்வதில்லை அல்லது நிலைநிறுத்துவதில்லை என்ற நிர்வாகத்தின் வாக்குறுதிகளை மீறுவதாக பலரால் பார்க்கப்படும்,” என்று எச்சரித்தனர்.

ஜனவரியில் பாதுகாப்புத்துறை அறிவிக்கையில், 2021 தொடங்கி பெருந்தொலைவுக்குப் பாயும் ஏவுகணைகளை ஏவக்கூடிய அதன் ஓஹியோ-ரக நீர்மூழ்கி கப்பல்களை முற்றிலும் புதிய வடிவமைப்பால் பிரதியீடு செய்யும் திட்டங்களுடன் அது நகர்ந்து வருவதாக அறிவித்தது. பெருந்தொலைவுக்கு ஏவுகணைகளை ஏவும் அமெரிக்க கடற்படையின் 14 ஓஹியோ-ரக நீர்மூழ்கி கப்பல்களில் ஒவ்வொன்றும், உலகின் ஐந்தாவது மிகச் சக்தி வாய்ந்த இராணுவப் படையை உள்ளடக்கி உள்ளது. ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பல்களும் 24 Trident II ஏவுகணைகளைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ஏவுகணையும், 1945 இல் ஹிரோஷிமாவில் பத்தாயிரக் கணக்கானவர்களைக் கொன்ற "Little Boy" குண்டை விட 36 மடங்கு அதிகமாக நாசப்படுத்தக்கூடிய எட்டு குண்டுகளைத் தாங்கி இருக்கும்.

இருந்தாலும் கடற்படையோ இதுவும் போதாதென காண்கிறது. 6 பில்லியன் டாலரில் இருந்து 8 பில்லியன் டாலர் மதிப்பைக்கொண்டிருக்ககூடிய 12 புதிய நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒவ்வொன்றும் ஓஹியோ-ரக நீர்மூழ்கி கப்பல்களை விட 2 பில்லியன் டாலர் அதிகமாகும். இந்த மதிப்பீட்டில், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி செலவுகள் மற்றும் ஒவ்வொரு நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கும் அண்மித்து 200 அணுஆயுத குண்டுகளின் விலை, மற்றும் இவற்றுடன் சம்பந்தப்பட்ட நடைமுறை செலவுகள் ஆகியவை சேர்க்கப்படவில்லை.

இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும், ஆயிரக் கணக்கான மக்களுக்கு மருத்துவ சிகிச்சை வழங்கக்கூடிய ஒரு மிகப்பெரிய மருத்துவக் கல்லூரி கட்டுவதற்கான செலவை விட 5-10 மடங்கு அதிகமென மதிப்பிடப்படுகிறது.

அமெரிக்க அணுஆயுத தளவாடங்களின் வேகமான அதிகரிப்பானது, அதன் F-35 போர்விமான திட்டத்தின் விரிவாக்கம் உட்பட அதன் ஆயுதப் படைகளை வேகமாக நவீனப்படுத்துவதன் பாகமாகும். இந்த போர்விமானத் திட்டத்தின் செலவும், சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி 1.12 ட்ரில்லியன் டாலர், அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன் வசம் அணுஆயுதங்களைக் கொண்டு சென்று அதிக-நாசப்படுத்தும் தகைமையுடன் அடுத்த-தலைமுறை போர் விமானங்கள் இல்லை என அமெரிக்க விமானப்படை குறைப்பட்டுள்ளது. இதன் காரணமாக நவீன அமெரிக்க குண்டுவீசியான Northrop Grumman B-21 கொள்முதல் செய்யப்படுமென அறிவிப்பு வருகிறது, ஒவ்வொன்றும் ஓர் அரை பில்லியன் மதிப்பிலான இந்த குண்டுவீசியில் 100 ஐ வாங்க விமானப் படை திட்டமிட்டுள்ளது.

நேரடி லேசர்கதிர் துப்பாக்கிகள் (directed-energy beams), தொடர் குண்டு துப்பாக்கிகள் (rail guns) மற்றும் ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் (hypersonic missiles) உட்பட அடுத்த தலைமுறை ஆயுதங்கள் ஏற்கனவே களப்பரிசோதனையில் உள்ளன மற்றும் அடுத்த தசாப்தத்தில் அனேகமாக உற்பத்திக்கு வரக்கூடும். ஸ்ட்ராட்ஃபோர் குறிப்பிடுகையில், "ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவிற்கு இடையே" அடுத்த தலைமுறை ஆயுதங்களை "முதலில் நிலைநிறுத்துவதற்கான போட்டி சூடு பிடித்திருப்பதால்," "ஒவ்வொன்றும் மற்றவர்களை மிகவும் அதிக பாதிப்புடன் தாக்கக்கூடியதாக மாறும். பதட்டங்கள் அதிகரித்தால், அதேயளவிற்கு அந்த நீண்டகால போட்டியாளர்களிடையே முன்கூட்டிய தாக்குதல்களுக்கான அபாயமும் அதிகரிக்கும்," என்று குறிப்பிட்டது.

துல்லியமாக வழிநடத்தப்படும் ஹைப்பர்சோனிக் மற்றும் ஏனைய அடுத்த-தலைமுறை அணுஆயுதமில்லா ஆயுதங்களுடன் அணுகுண்டுகளை இணைத்து அபிவிருத்தி செய்வது மற்றும் அணுகுண்டுகளை ஏந்திச்செல்லும் துல்லியமாக வழிநடத்தப்படும் உபகரணங்களை அபிவிருத்தி செய்வது ஆகியவை அணுஆயுதமில்லா போருக்கும் அணுஆயுத போருக்கும் இடையிலான "தடுப்புசுவர்கள்" என்றழைக்கப்படுவதைத் தகர்த்து வருகின்றன என்று பல்வேறு அறிக்கைகள் எச்சரித்துள்ளன. இதன் விளைவாக, குறிப்பாக அமெரிக்க மூலோபாயவாதிகள் அணுஆயுதம் "ஜெயிக்கக்கூடியதா" என்று அதிகரித்தளவில் யோசிக்கிறார்கள்.

புவிசார் அரசியல் சூழல் மாற்றங்கள் மற்றும் தொழில்நுட்ப தகைமைகளின் மாற்றங்களுடன் சேர்ந்து, அமெரிக்க இராணுவம் மற்றும் அதற்கு இணக்கமாக இருக்கும் சிந்தனை குழாம்கள் அவற்றின் கோட்பாடுகள் மற்றும் வார்த்தை பிரயோகங்களை மாற்றி வருகின்றன.

போல் பிராக்கென் ஆசிரியரின் வார்த்தைகளில் கூறுவதானால், உலகம் "இரண்டாம் அணுஆயுத காலக்கட்டத்திற்குள்" நுழைந்துள்ளது. அட்மிரல் ஹாரி பி. ஹெரிஸ் இன் வார்த்தைகளில் கூறுவதானால் அமெரிக்கா "இன்றிரவு சண்டைக்கே" தயாராக இருக்க வேண்டும். ஹாரி அவர் பசிபிக் கடற்படை தலைவராக பொறுப்பேற்ற போது இதை தெரிவித்தார். அமெரிக்கா மற்றும் சீனா ஈடுபடும் "இரண்டாம் பசிபிக் போர்" குறித்து ஆராய்ச்சியாளர் கார்ல் ஹாஸ் எழுதி உள்ளார், அதில் அவர் "கப்பல்கள் மற்றும் போர்விமானங்கள், மாலுமிகள் மற்றும் போர் விமானிகளின் வலி நிறைந்த இழப்புகளை, இரண்டு தரப்பிலும் அனேகமாக வேகமாக அதிகரிக்கும் ஒரு நிகழ்வுபோக்காக எதிர்பார்க்கலாம்," என்றார்.

முதலாம் உலக போர் வெடித்ததற்கு முன்னதாக ஜேர்மனி, பிரிட்டன் மற்றும் ஏனைய ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையே dreadnoughts என்றறியப்படும் நவீன மற்றும் மிகப்பெரிய போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கும், அத்துடன் அவர்களது பாரம்பரிய இராணுவப் படைகளை விரிவாக்குவதற்கும் போட்டி நிலவியது என்பது நன்கறியப்பட்ட உண்மையாகும். 1908 மற்றும் 1913 க்கு இடையே ஐரோப்பிய சக்திகளின் இராணுவ செலவினங்கள் 50 சதவீத அளவுக்கு அதிகரித்திருந்தது.

இன்றைய ஆயுதப் போட்டி வேறுவிதமான விளைவுகளைக் கொண்டிருக்கும் என்று யாரும் நம்ப முடியாது. உலக செல்வவளத்தின் ஒரு கணிசமான பங்கை தனக்குள் கொண்டுள்ள இந்த ஆயுதங்களும் பிரயோகிக்கவே இருக்கின்றன. அவற்றை இன்னும் அதிகமாக பிரயோகிக்க போர் விதிமுறைகள் திருத்தப்பட்டு வருகின்ற நிலைமைகளின் கீழ், அணுஆயுதங்களைக் கொண்டிருக்கும் சக்திகளுக்கு இடையே, முதல் முறையாக, தொலைதூரத்தில் ஓர் உலக போர் தென்படுகிறது.

மனிதயினம் தன்னைத்தானே ஒரு அபாயகரமான நிலைமையில் காண்கிறது. ஏகாதிபத்தியம் சமூகத்தைப் பேரழிவுக்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதால், அதை புரட்சிகரமான வழிவகைகளைக் கொண்டு மட்டுமே தடுக்க முடியும்.