ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Two months until the US elections: The political issues facing the working class

அமெரிக்க தேர்தல்களுக்கு இரண்டு மாதங்கள் இருக்கையில்: தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அரசியல் பிரச்சினைகள்

Joseph Kishore
9 September 2016

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களுக்கு இன்னும் இரண்டு மாதங்கள் உள்ளன என்றாலும், அதில் யார் ஜெயித்தாலுமே, அமெரிக்க மக்களும், உலக மக்களும் என்ன எதிர்கொள்ள போகிறார்கள் என்பதை முன்அனுமானிக்க நவம்பர் 8 வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டன் ஆகட்டும் அல்லது குடியரசு கட்சி டொனால்ட் ட்ரம்ப் ஆகட்டும் வெள்ளை மாளிகைக்கு யார் வந்தாலும், அடுத்த நிர்வாகமானது போர், பொருளாதார சிக்கனத் திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான வன்முறையான ஒடுக்குமுறையின் நிர்வாகமாக இருக்கும்.

பிரதான முதலாளித்துவ கட்சிகள் முன்னிறுத்தி இருக்கும் இவ்விரு வேட்பாளர்களும், அவரவர்களுக்குரிய விதத்தில், ஆழ்ந்த அமெரிக்க முதலாளித்துவ நெருக்கடியை எடுத்துக்காட்டுகின்றனர்.

ட்ரம்ப் இன் "அமெரிக்க கோட்டை" பிரச்சாரத்தில், ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு அதீத தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தின் அடிப்படையில் ஒரு பாசிசவாத சர்வாதிபத்திய இயக்கத்திற்கு அடித்தளம் அமைக்க விரும்புகிறது. கடந்த பல நாட்களாக, ட்ரம்ப் அமெரிக்க இராணுவ செலவினங்களைப் பாரியளவில் 90 பில்லியன் டாலருக்கு அதிகரிக்க அழைப்புவிடுத்துள்ளார். புதனன்று முன்னாள் இராணுவ சிப்பாய்களின் "முப்படை தலைவர்" கருத்தரங்கில் அவர் கூறுகையில், அமெரிக்கா மத்திய கிழக்கின் "எண்ணெய்யை எடுத்துக் கொள்ள" வேண்டும் என்றார் —இது அப்பிராந்தியத்தில் அமெரிக்க கொள்கையை இன்றியமையாத விதத்தில் ஊக்குவிப்பதற்கான குறிப்பாக அந்த வேட்பாளரின் குரூரமான வார்த்தைப் பிரயோகமாகும். அவர் சித்திரவதை மற்றும் ஏனைய குற்றகரமான கொள்கைகளை பகிரங்கமாக மீண்டும் பிரயோகிக்க தொடங்கவும் கோரியுள்ளார்.

ட்ரம்ப் சகல பெருநிறுவன நெறிமுறைகளை நீக்க மற்றும் பணக்காரர்கள் மீதான வரிகளைக் குறைக்க அழைப்புவிடுக்கிறார். இத்துடன் புலம்பெயர்வோரை இழிவுபடுத்தல், அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் "மாபெரும் சுவரை" எழுப்புவதற்கும் மற்றும் ஆவணமற்றவர்களைக் கைது செய்து வெளியேற்றுவதற்கு கொடுஞ்சிறை முகாம்களுக்கு ஒத்தவைகளை உருவாக்குவதற்குமான கோரிக்கை என தேசியவாத வாய்சவுடாலும் சேர்ந்துள்ளது.

ட்ரம்ப் இன் எதிர்ப்பாளர், கிளிண்டன், பெருநிறுவன-நிதியியல் உயரடுக்கு மற்றும் இராணுவ-உளவுத்துறை எந்திரத்தின் மிகவும் சக்திவாய்ந்த பிரிவுகளது இசைவு பெற்ற வேட்பாளராக உள்ளார். கடந்த மாதத்தின் போது, அவரது நிஜமான ஆதரவு வட்டமாக உள்ள மிகப்பெரும் செல்வந்தர்களிடம் இருந்து பணம் வசூலிப்பதில் ஏறத்தாழ அவரின் எல்லா நேரத்தையும் செலவிட்டு, ஆகஸ்டில் 143 மில்லியன் டாலரை ஈர்த்திருத்தார், இது இதுவரையிலான பிரச்சாரத்திலேயே ஒரு சாதனை அளவாகும். அவர் புஷ் நிர்வாகத்தின் போர் குற்றவாளிகள் மற்றும் உயர்மட்ட இராணுவ தளபதிகள் உட்பட முக்கிய குடியரசு கட்சியினரை வெல்வதன் மீது அவர் பிரச்சாரத்தை மையப்படுத்தி உள்ளார்.

கிளிண்டன், புதன்கிழமை விவாத சந்திப்பிற்குப் பின்னர், ட்ரம்ப் ஐ ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினின் ஒரு கருவியாக குற்றஞ்சாட்டுவதைத் தீவிரப்படுத்தினார். “அமெரிக்க தளபதிகளைத் தாக்கும் மற்றும் ரஷ்ய ஜனாதிபதிக்குப் பாராட்டுக்களைக் குவித்துக் கொண்டிருக்கும் ஒரு குடியரசு வேட்பாளரைக் குறித்து ரோனால்ட் ரீகன் என்ன கூறியிருப்பார்? என்று வியாழனன்று அவர் கேள்வி எழுப்பினார். ட்ரம்ப் "தேசவிரோதி,” “பயந்தாங்கொள்ளி" மற்றும் "தேசிய பாதுகாப்புக்கு" அதாவது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் புவிசார் மூலோபாய நலன்களுக்கு ஓர் அபாயம் என்றவர் அறிவித்தார்.

கிளிண்டன் ரஷ்ய-விரோத போர்-ஆக்ரோஷத்தை அவர் பிரச்சாரத்தின் மைய கருத்துருவாக வைத்திருந்தார். கடந்த வாரம் ஒரு அமெரிக்க படையணி முன் அளித்த உரையில், அவர் முற்றிலும் ஆதாரமின்றி குற்றஞ்சாட்டிய ரஷ்யாவின் இணையவழி தாக்குதல்கள் மற்றும் இணைய ஊடுருவல்களை ஓர் இராணுவ விடையிறுப்பைக் கொண்டு சந்திக்க வேண்டுமென அச்சுறுத்தினார். “எதிர்கால அச்சுறுத்தல்களைச் சந்திக்க அமெரிக்காவின் அணுஆயுதங்களைத் தயாராக வைத்திருப்பதை உறுதிப்படுத்த" அணுஆயுத தோரணை மதிப்பீட்டிற்கு உத்தரவிடுவதே ஜனாதிபதியாக அவரது முதல் நடவடிக்கைகளில் ஒன்றாக இருக்கும் என்றவர் தெரிவித்தார்.

இந்த எல்லா சேறடிப்புகள் இருந்தாலும், அமெரிக்காவை கட்டுப்படுத்துகின்ற பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் தேசிய மற்றும் உலகளாவிய நலன்களை எவ்வாறு சிறப்பாக முன்னெடுக்கலாம் என்பதே கிளிண்டன் மற்றும் ட்ரம்ப் க்கு இடையே இருக்கும் வித்தியாசங்களாகும். ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள், இலக்கில் அல்ல, வழிவகையில் தான் வேறுபடுகிறார்கள். அவர்கள் ஒருவரையொருவர் குற்றஞ்சாட்டினாலும், அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கத்தை அவர்களின் ஒரு பொதுவான எதிரியாக பகிர்ந்து கொள்கிறார்கள். யார் ஜெயித்தாலும், புதிய நிர்வாகம் இரண்டு வேட்பாளர்களது மிகவும் மோசமான அம்சங்களை ஒன்று கலந்ததாக இருக்கும்.

பகுப்பாய்வின் இறுதியில், ட்ரம்ப் மற்றும் கிளிண்டன் பிரச்சாரங்களை உந்துகின்ற மேலோங்கிய காரணியாக இருப்பது, போர் மற்றும் சமூக எதிர்-புரட்சியின் கொள்கைக்கு அர்ப்பணித்துள்ள ஒரு ஒட்டுண்ணித்தனமான நிதியியல்-பெருநிறுவன பிரபுத்துவத்தால் மேற்பார்வை செய்யப்பட்ட அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவ நெருக்கடியாகும்.

இங்கே இரண்டு முக்கிய எதிர்விரோதங்களைக் குறிப்பிடுவது மதிப்புடையதாக இருக்கும். இந்த வரவிருக்கும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 11, 2011 தாக்குதல்களில் இருந்து 15 ஆண்டுகள் ஆனதைக் குறிக்கிறது. சுதந்திரமான ஒரு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்படாத இந்த தாக்குதல்கள் மத்திய ஆசியாவில் மற்றும் மத்திய கிழக்கில் போர் மற்றும் வன்முறை நடவடிக்கையை நியாயப்படுத்தவும் மற்றும் உள்நாட்டில் பொலிஸ்-அரசு அதிகாரங்களை பாரியளவில் விரிவாக்கவும் பயன்படுத்தப்பட்டது.

“பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற கட்டமைப்பிற்குள், அமெரிக்க ஆளும் வர்க்கம், புஷ் மற்றும் ஒபாமாவின் கீழ், 1991 சோவியத் ஒன்றிய கலைப்பிற்கு 10 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி இருந்த ஒரு முடிவில்லா போர் கொள்கையை தீவிரப்படுத்தியது. படைகளைக் கொண்டு அமெரிக்க முதலாளித்துவத்தின் வீழ்ச்சியை மாற்றியமைக்கும் ஆளும் வர்க்கத்தின் முயற்சிகள், எவ்வாறிருந்த போதினும், தோல்வியடைந்துள்ளன என்பதோடு, பிராந்திய போர்களும் பினாமி மோதல்களும் இப்போது அமெரிக்காவிற்கும் ரஷ்யா மற்றும் சீன உட்பட அதன் மிகப்பெரிய எதிராளிகளுக்கும் இடையே ஒரு நேரடி மோதலுக்குள் அபிவிருத்தி அடைந்து வருகிறது.

இந்த வரவிருக்கும் வியாழக்கிழமை, ஒட்டுமொத்த நிதியியல் அமைப்புமுறையையும் அண்மித்து வீழ்ச்சிக்குக் கொண்டு வந்த 2008 பொறிவின் உச்சகட்டமான முதலீட்டு வங்கி லெஹ்மன் பிரதர்ஸ் இன் பொறிவினது 8 வது நினைவுதினமாகும். கடந்த எட்டாண்டுகளில், அமெரிக்க பெடரல் ரிசர்வ் தலைமையில் உலக மத்திய வங்கிகள் ட்ரில்லியன் கணக்கான டாலர்களை சந்தைகளுக்குள் பாய்ச்சி, புதிய சொத்து குமிழிகளை ஊதிப் பெருக்கச் செய்து, நிதியியல் பிரபுத்துவத்தின் செல்வ வளங்களை இன்னும் உயரத்திற்கு அனுப்பியுள்ளன. இதற்கிடையே உலக பொருளாதாரம் மந்தநிலைமைக்கு உள்ளாகி உள்ளது, சமூக சமத்துவமின்மை சாதனையளவிற்கு உயர்ந்துள்ளது மற்றும் சர்வதேச அளவில் வர்க்க போராட்டம் மீளெழுச்சி பெறுவதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் பாரிய பெருந்திரளான உழைக்கும் மக்கள் இடத்திற்கு நகர்ந்து வருகிறார்கள். ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு தேர்தல்களில் வெர்மாண்ட் செனட்டர் பேர்ணி சாண்டர்ஸை ஒரு சோசலிசவாதியாக கருதி வாக்களித்த மில்லியன் கணக்கானவர்கள் அவர்களின் கண்ணோட்டங்களை மாற்றிவிடவில்லை. அவரது "அரசியல் புரட்சியை" பரிதாபகரமாக கைவிட்டு கிளிண்டனை அவர் ஆதரித்த போதினும், பாரிய அரசியல் தீவிரப்படல் நடைமுறை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

2016 தேர்தல்கள், இப்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறையின் கட்டமைப்பிற்குள் ஒரு தீர்வைக் காணும் முயற்சியான "குறைந்த தீமை" (lesser-evilism) வாதத்தின் திவால்நிலைக்கு ஒரு புறநிலைரீதியிலான படிப்பினையை வழங்குகிறது.

தேர்தல்களுக்குப் பின்னர் எழுச்சி பெறவிருக்கும் போராட்டங்களுக்கு தயாரிப்பு செய்வதே அடிப்படையான மற்றும் அத்தியாவசியமான பணியாகும். சோசலிச சமத்துவக் கட்சி, ஜெர்ரி வையிட் மற்றும் நைல்ஸ் நிமுத் ஐ கொண்டு தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியது வாக்குகளைப் பெறுவதற்காக அல்ல, மாறாக தொழிலாள வர்க்கத்தின் பாரிய சோசலிச இயக்கத்திற்கு அடித்தளம் அமைப்பதற்காக ஆகும். சோசலிச சமத்துவக் கட்சி மக்கள்தொகையின் பெரும்பான்மையினரான அடிமட்டத்தில் உள்ளவர்களும், அரசியல் வாழ்வில் இருந்து நடைமுறையளவில் ஒதுக்கப்பட்டுள்ளவர்களுமான 90 சதவீதத்தினரை அரசியல்ரீதியில் ஒழுங்கமைக்க போராடுகின்றது.

நமது பிரச்சாரம் பின்வரும் கோரிக்கைகளை முன்னெடுக்கிறது:

1) அமெரிக்க இராணுவவாதத்தை எதிர்ப்போம்! மூன்றாம் உலக போர் உந்துதலை நிறுத்துவோம்!!!

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவுடன் அரசியல் ஐக்கியம் கொண்ட சோசலிச சமத்துவக் கட்சி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அடிப்படையில் ஒரு பாரிய போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க போராடி வருகிறது. அமெரிக்க போர் முனைவின் பயங்கர விளைவுகள், இது அணுஆயுதங்களுடன் நடத்தப்படும் ஒரு மூன்றாம் உலக போரைக் கட்டவிழ்த்துவிட அச்சுறுத்துகின்ற நிலையில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தலையீட்டின் மூலமாக மட்டுமே இதை தடுக்க முடியும். போருக்கு எதிரான போராட்டம் இல்லாமல் சோசலிசத்திற்கான போராட்டம் இருக்க முடியாது, சோசலிசத்திற்கான போராட்டம் இல்லாமல் போருக்கு எதிரான போராட்டம் இருக்க முடியாதென நாம் வலியுறுத்துகிறோம்.

2) வறுமை மற்றும் சமத்துவமின்மைக்கு முடிவு கட்டுவோம்!

ஏகாதிபத்திய போரை உருவாக்கும் அதே நெருக்கடியானது, அதிகரித்துவரும் சமூக எதிர்ப்பு மற்றும் வர்க்க போராட்டத்தின் வடிவத்தில் சோசலிச புரட்சிக்கான புறநிலை அடித்தளத்தையும் உருவாக்குகிறது. மில்லியன் கணக்கான அமெரிக்க மக்களும், உலகெங்கிலுமான பில்லியன் கணக்கான மக்களும், வறுமை, வேலைவாய்ப்பின்மை மற்றும் பொருளாதார பாதுகாப்பின்மையின் எதிர்காலத்தை முகங்கொடுக்கிறார்கள். கண்ணியமான சம்பளத்தில் வேலை, வீட்டுவசதி மற்றும் கல்வி, மருத்துவ கவனிப்பு மற்றும் பாதுகாப்பான வேலை-ஓய்வூ ஆகிய தொழிலாள வர்க்கத்தின் அடிப்படை சமூக உரிமைகளை உத்தரவாதப்படுத்த, பெருநிறுவன மற்றும் நிதியியல் உயரடுக்கின் செல்வவளம் பறிமுதல் செய்யப்பட்டு, மிக பிரமாண்டமான உற்பத்தி சக்திகள் தனியார் இலாபத்திற்காக அல்லாமல் சேவைகளுக்காக ஏற்படுத்தப்பட வேண்டும்.

3) ஜனநாயக உரிமைகளைப் பாதுகாப்போம்! அரசாங்க உளவுபார்ப்பு மற்றும் பொலிஸ் வன்முறை வேண்டாம்!

முதலாளித்துவ ஜனநாயகத்தின் நெருக்கடியானது பிரிக்க முடியாதவாறு முடிவில்லாத போர் கொள்கை மற்றும் சமூக பிற்போக்குத்தன கொள்கையுடன் பிணைந்துள்ளது. வன்முறை மற்றும் பயங்கரவாதத்திற்கான கருவிகளாக உள்நாட்டு உளவுபார்ப்பு எந்திரத்தைக் கட்டமைத்தும் மற்றும் நாடெங்கிலும் உள்ளூர் பொலிஸ் படைகளை அதிகரித்தும், ஆளும் வர்க்கம் சமூக கிளர்ச்சிகளுக்கு தயாரிப்பு செய்து வருகின்றது. மக்களின் ஒரு சிறிய பிரிவினது நலன்களுக்காக மற்றும் பரந்த பெரும்பான்மையினரை மூர்க்கமாக சுரண்டுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சமூக அமைப்புமுறையை தொடர்வதுடன் உண்மையான ஜனநாயகம் பொருந்தி இருக்காது.

இந்த நோக்கங்களை அடைவதற்கு, சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கம் ஒரு சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தின் அடிப்படையில் அரசியல்ரீதியில் ஐக்கியப்பட வேண்டும்.

இந்த போராட்டத்தை உங்களின் சொந்த போராட்டமாக முன்னெடுக்க நாம் நமது வாசர்களுக்கு அழைப்புவிடுக்கிறோம். சோசலிச சமத்துவக் கட்சி ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்திற்கான அரசியல் கட்டமைப்பை அமைத்துள்ளது, ஆனால் நீங்கள் தான் அதை கட்டமைக்க வேண்டும். சோசலிச சமத்துவக் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தை ஆதரித்து சாத்தியமானளவிற்கு அதை வெற்றிகரமாக ஆக்க உதவ நன்கொடை வழங்குங்கள். நாடெங்கிலுமான நகரங்களில் நடத்தப்பட்டு வருகின்றன தேர்தல் கூட்டத்தில் ஒன்றிலாவது கலந்து கொள்ள திட்டமிடுங்கள்.

கடந்த ஆண்டின் அனுபவங்களை மீளாய்வு செய்து, வரவிருக்கும் காலக்கட்டத்திற்கான வேலைகள் மற்றும் நிகழ்ச்சிநிரல்களை வடிவமைக்க, இந்த கூட்டங்கள் நவம்பர் 5 இல் மிச்சிகனின் டெட்ராய்டில் ஒரு சிறப்பு ஒருநாள் கருத்தரங்கத்தை ஏற்படுத்தும். இன்றே நீங்கள் sep2016.com/conference இல் பதிவு செய்யலாம்.

அனைத்திற்கும் மேலாக சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பில் இணைய முடிவெடுக்குமாறு நாம் நமது வாசகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அனைவருக்கும் அழைப்புவிடுக்கிறோம். ஒரு பாரிய சோசலிச இயக்கம் அவசியம் என்பது மட்டுமல்ல, அத்தகையவொரு இயக்கத்திற்கான புறநிலை அடித்தளங்கள் மிகவும் முன்னேறிய நிலையில் உள்ளன. எவ்வாறிருப்பினும் இந்த சாத்தியக்கூறு, உலகெங்கிலும் உள்ள தொழிலாளர்களும் இளைஞர்களும் தங்களின் அனுபவங்களில் இருந்து ஓர் அவசரமான தீர்மானத்தை வரைந்து அரசியல் தலைமையைக் கட்டியெழுப்ப முடிவெடுப்பதன் மூலமாக மட்டுமே அடையப்பட முடியும்.