ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Eighty years since the first Moscow Trial

முதல் மாஸ்கோ வழக்கிலிருந்து எண்பது ஆண்டுகள்

Fred Williams
1 September 2016

உலக வரலாற்றில் மிக கீழ்தரமான போலி புனைவு வழக்குகளில் ஒன்றான முதல் மாஸ்கோ வழக்கிலிருந்து எண்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. பதினாறு வழக்கு என்றும் கூறப்படும் "ட்ரொட்ஸ்கிச-சினோவியேவ்விச பயங்கரவாத மைய வழக்கு" 1936 ஆகஸ்ட் 19 இல் இருந்து ஆகஸ்ட் 24 வரை மாஸ்கோ இல் நடந்தது. மொத்தம் பதினாறு பிரதிவாதிகளுக்கும் சுட்டுக்கொல்லப்படும் மரண தண்டனை வழங்கப்பட்டு, அவர்களது தனிப்பட்ட சொத்து பறிமுதல் செய்யப்பட்டது.

வழக்கில் இழுக்கப்பட்டவர்களுக்கு அப்பாற்பட்டு, லெவ் டேவிடோவிச் ட்ரொட்ஸ்கி உம் அவர் மகன் லெவ் லெவோவிச் செடோவ் உம் விசாரணைக்கு ஆஜராகவில்லை என்றும், “உடனடியாக கைது செய்யப்பட்டு சோவியத் ஒன்றிய உச்ச நீதிமன்ற இராணுவ தீர்பாயத்தின் விசாரணைக்கு உட்படுத்தப்பட" வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டது, அதாவது அவர்கள் பிடிபட்டால் அவர்களும் மிக ஆரம்பநிலை நீதித்துறை நடைமுறைகளின் கேலிக்கூத்தில் வழக்கிற்குட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்கள்.

பதினாறு பிரதிவாதிகளில், பதினொரு பேர் 1917 க்கு முன்னரே கட்சியில் இணைந்த, அக்டோபர் புரட்சியை ஒழுங்கமைத்து தலைமை கொடுத்த, 1919 இல் கம்யூனிஸ்ட் அகிலத்தை ஸ்தாபித்த, உள்நாட்டு போரில் (1918-1921) சாகசத்துடன் போரிட்டு சோவியத் ஒன்றியத்தை உலகின் முதல் தொழிலாளர்களது அரசாக ஸ்தாபித்த முக்கியமான பழைய போல்ஷ்விக்குகளாவர். ஏனைய ஐந்து பிரதிவாதிகள், பிரதிவாதிகளின் மேசையில் அவர்களுக்குப் பின்னால் உட்கார்ந்திருந்த உண்மையான புரட்சியாளர்களுடன், நகைமுரணாக கலந்திருந்த சோவியத் இரகசிய பொலிஸ் ஏஜண்டுகளாவர்.

பாதிக்கப்பட்ட சிலரின் வாழ்க்கை சரிதத்தைக் குறித்து சிறிது சுருக்கமாக பார்ப்போம்.

கிரிகோரி சினோவியேவ் (Grigory Zinoviev), வயது 53, 1903 இல் இருந்து போல்ஷ்விக் ஆக இருந்த இவர் லெனினின் நெருக்கமான ஒத்துழைப்பாளர்களில் ஒருவராவார். இவர் சிம்மர்வால்ட் மற்றும் கீய்ன்தால் போர்-எதிர்ப்பு மாநாடுகளில் பங்கெடுத்தார். இவர் 1907-1927 இல் மத்திய குழு அங்கத்தவராகவும்; அக்டோபர் 1917 க்குப் பின்னர் பெட்ரோகிராட் சோவியத் தலைவராகவும்; 1919-1926 இல் கம்யூனிச அகிலத்தின் நிறைவேற்றுக் குழுவின் தலைவராகவும் இருந்தார். இவர் 1926-1927 இல் கூட்டு எதிர்ப்பில் (Joint Opposition) பங்கெடுத்தார்; 1927 இல் ஸ்ராலினிடம் நிபந்தனையின் பேரில் அடிபணிந்தார். டிசம்பர் 1, 1934 இல் சேர்ஜி கிரோவ் (Sergei Kirov) படுகொலைக்குப் பின்னர், சியோவியேவ் கைது செய்யப்பட்டு, வழக்கிற்குட்படுத்தப்பட்டு, ஜனவரி 16, 1935 இல் படுகொலைக்கு "தார்மீக பொறுப்பாளியாக" குற்றஞ்சாட்டப்பட்டார். அவருக்கு பத்தாண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, 1936 கண்துடைப்பு விசாரணை வரையில் அவர் சிறையில் இருந்தார்.

லெவ் காமெனேவ் (Lev Kamenev), வயது 53, இவர் 1901 இல் சமூக ஜனநாயகக் கட்சியில் சேர்ந்தார்; 1903 இல் இருந்து இவர் போல்ஷ்விக் ஆக இருந்தார். லெனினுடன் நெருக்கமாக இயங்கி வந்த இவர் ஏப்ரல் 1917 இல் இருந்து 1927 வரையில் மத்திய குழு உறுப்பினராக இருந்தார். 1918-1926 இல் மாஸ்கோ சோவியத் தலைவராக இருந்தார். 1926-27 இல் கூட்டு எதிர்ப்பின் அங்கத்தவராக இருந்தார். கிரொவ் படுகொலைக்காக ஜனவரி 1935 இல் குற்றஞ்சாட்டப்பட்டு, ஐந்தாண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டார். மீண்டும் ஜூலை 1935 இல் குற்றஞ்சாட்டப்பட்டு, பத்தாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

இவான் நிகிரிஷ் சிமிர்னோவ் (Ivan Nikitich Smirnov), வயது 55, இவர் 1899 இல் இருந்து கட்சியில் இருந்தார்; மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு, ஜார் இன் கீழ் நாடு கடத்தப்பட்டார். உள்நாட்டு போரின் போது சேர்பியாவில் கொல்சாக் (Kolchak) படைகளை நசுக்குவதில் செம்படைக்கு தலைமை வகித்தார். மத்திய குழு அங்கத்தவரான இவர் 1923 இல் இருந்து 1929 வரையில் இடது எதிர்ப்பில் இருந்தார். 1933 இல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சேர்ஜி மார்கோவ்ஷ்கி Sergei Mrachkovsky, வயது 53, யூரல் பகுதி தொழிலாளியான இவர் 1905 இல் இருந்து ஒரு போல்ஷிவிக் ஆவார்; உள்நாட்டு போரின் கதாநாயகர்களில் ஒருவரான இவர் 1923 இல் இருந்து 1929 வரையில் இடது எதிர்ப்பில் இருந்தார். 1933 இல் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார்.

வார்கஷாக் ரேர்-வாகானியான் (Vagarshak Ter-Vaganian), வயது 43, 1912 இல் இருந்து போல்ஷிவிக் ஆவார். 1922 இல் மார்க்சிச பதாகையின் கீழ் (Under the Banner of Marxism) என்ற சஞ்சிகையின் ஸ்தாபக பதிப்பாசிரியர் ஆவார்; பிளெக்கானோவ் குறித்து முதல் பிரதான படைப்பை எழுதியவர் (1924); 1923 இல் இருந்து 1929 வரையில் இடது எதிர்ப்பில் இருந்தார்.

கிரிகோரி ஜெவ்டோகிமோவ் (Grigory Yevdokimov -52), இவான் பாகாயேவ் (Ivan Bakaev -49), எஃவிம் டிரைட்சர் (Efim Dreitser -42), றிக்கார்ட் பிக்கல் (Rikhard Pikel -40), இஸாக் றைன்கோல்ட் (Isaak Reingold -39) மற்றும் எடுவார்ட் கோல்ட்ஸ்மான் (Eduard Goltsman -54) ஆகியோர் குறைந்தளவே பிரபலமாக இருந்திருந்தாலும், கட்சி வாழ்வில் இவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர்.

அந்த வழக்கின் குற்றச்சாட்டுக்கள் நம்பமுடியாதவை: கிரொவ் ஐ கொன்றமை தவிர, இந்த பிரதிவாதிகள் ஸ்ராலினை, காஹானோவிஷ் வோராஷிலோவ் ஷாடானோவ் ஒர்தோஇக்கிட்ஷ (Kaganovich, Voroshilov, Zhdanov, Ordzhonikidze) இன்னும் ஏனைய பல சோவியத் தலைவர்களையும் படுகொலை செய்ய முயற்சித்தனர் (ஆனால் தோல்வியடைந்தனர்) என்று கூறப்பட்டது. அவர்கள் இந்த படுகொலை திட்டங்களை அபிவிருத்தி செய்வதில் நாஜி கெஸ்டாபோ உடன் வேலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது.

இதற்கு என்ன ஆதாரம்? குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் சுயஒப்புதல்கள் அன்றி வேறொன்றுமில்லை. சற்றே விமர்சனபூர்வ தீர்ப்புடன் அந்த வழக்கை அணுகியவர்களுக்கு, அந்த சுயஒப்புதல்களுமே கூட அந்த விசாரணைகளின் சட்டபூர்வத்தன்மை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியது. ஆனால் பல இதழாளர்களும் அரசியல் பிரமுகர்களும் (நியூ யோர்க் டைம்ஸ் இதழாளர் வால்டர் டுராண்டி; அமெரிக்க தூதர் ஜோசப் டேவிஸ்; பிரிட்டிஷ் சட்ட வல்லுனர் டி. என். ப்ரீட், இவர் அந்த விசாரணைகளை “ஒட்டுமொத்த உலகிற்கும் ஒரு எடுத்துக்காட்டு” என்று குறிப்பிட்டார்) அந்த போலி புனைவு வழக்கின் செல்லுபடித்தன்மையை உறுதி செய்தனர். எவ்வாறிருப்பினும் அங்கே அதிருப்தி குரல்களும் இருந்தன: தோமஸ் மான், ஸ்ரெபான் ஸ்வைக் மற்றும் ஏனையவர்களும் அதை தொடர்ந்து டுவே ஆணைக்குழுவுக்கு (Dewey Commission) உதவினர், இது 1937 இல் மெக்சிகோவில் விரிவாக சாட்சிகளை விசாரித்து, சகல குற்றச்சாட்டுகளிலும் ட்ரொட்ஸ்கியை நிரபராதியாக கண்டு, அந்த கண்துடைப்பு விசாரணையை ஒரு ஜோடிப்பாக அறிவித்தது.

அதற்குப் பிந்தைய ஆண்டுகளில், அந்த சுயஒப்புதல்கள் பெறப்பட்ட விதம் குறித்து அந்த விசாரணை தயாரிப்பில் பங்குபற்றிய பல்வேறு சாட்சிகள் மூலமாக வெளியானது. சினோவியேவ் மற்றும் காமெனேவ் பல வாரங்களாக சுயஒப்புதல்களுக்கு மறுத்திருந்தனர். இறுதியில் அவர்கள் பொலிட்பீரோ உறுப்பினர்களை வரக் கோரினர். பொலிட்பீரோவின் ஒரு "ஆளுனராக" ஸ்ராலின் மற்றும் வொரோஷிலொவ் அவர்களை சந்தித்து, சினோவியேவ் மற்றும் காமெனேவ் ஒத்துழைத்தால், அவர்கள் உயிர் தப்பிக்கும், அவர்கள் குடும்பம் மீது கை வைக்கப்படாது, வேறெந்த முன்னாள் எதிர்ப்பாளர்களும் கொல்லப்படமாட்டார்கள் என்று உறுதியளித்தனர். சினோவியேவும் காமெனேவும் அதற்கு ஒப்புக் கொண்ட போதிலும் கூட, அவர்கள் ஆகஸ்ட் 25, 1936 இல் மரண தண்டனையில் கொல்லப்பட்டனர்.

மற்ற பிரதிவாதிகள் மீது சித்திரவதை பிரயோகிக்கப்பட்டது. சான்றாக பல வாரங்களில் பல முறை தொடர்ந்து 90 மணி நேரம் மார்க்கோவ்ஸ்கி (Mrachkovsky) விசாரிக்கப்பட்டார். யார் மீதெல்லாம் வழக்கு தொடுக்கப்பட்டிருந்ததோ அவர்களில் பலர் விசாரணையின் முன் வரவில்லை; சித்திரவதையின் கீழ் அனேகமாக பலர் இறந்திருக்கலாம் அல்லது இணங்காமைக்காக அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று லெவ் செடோவ் குறிப்பிட்டார்.

ஸ்ராலின் விரும்பிய தண்டனைகளை அந்த விசாரணை உருவாக்கிய போதினும், சாட்சிகளின் மோசடியான இயல்பை அம்பலப்படுத்திய சங்கடமான தருணங்களும் இருந்தன. சான்றாக கோல்ட்ஸ்மன் (Goltsman) 1932 இல் ஹோட்டல் பிரிஸ்டலில் ட்ரொட்ஸ்கி மற்றும் செடோவ் ஐ சந்திக்க அவர் கோபன்ஹகென் (Copenhagen) க்கு பயணித்ததாக சாட்சியளித்தார். ஆனால் அது பொய்யென நிரூபணமானது, அந்த ஹோட்டல் 1917 இல் அழிக்கப்பட்டு 1936 இல் தான் மீண்டும் கட்டப்பட்டது. அதுபோன்ற எந்தவொரு சந்திப்பும் நிகழ்ந்திருக்கவில்லை.

“ஸ்ராலினை நீக்க” ஒரு பகிரங்க கடிதத்தில் ட்ரொட்ஸ்கி அழைப்புவிடுத்தமை அரசியல் வழிவகைகளைக் கொண்டு அவரை நீக்குவதற்காக அல்ல அவரை கொல்வதற்காக ஆகும் என்றும் கோல்ட்ஸ்மன் சாட்சியளித்தார். ஒரு மார்க்சிஸ்டாக, ட்ரொட்ஸ்கி தனிநபர் பயங்கரவாதத்தின் வாழ்நாள் எதிர்ப்பாளராக இருந்துள்ளார்; தனிநபர் நடவடிக்கைகள், என்னதான் சாகசமாக தெரிந்தாலும், அவை ஒரு புரட்சிகர கட்சி தலைமையில் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர நடவடிக்கைக்கு ஒரு மாற்றீடு ஆகாது என்று எடுத்துரைத்துள்ளார். 1930 களில் ட்ரொட்ஸ்கி தனிநபர் பயங்கரவாதத்தை அரவணைத்திருந்தார் என்று கூறுவது, ட்ரொட்ஸ்கி விளங்கப்படுத்தியவாறு, “சர்வாதிபத்திய முட்டாள்தனத்தின்" (totalitarian idiotism) ஒரு அறிகுறியாக இருந்தது.

முதல் மாஸ்கோ விசாரணை தொடங்கிய போது, ட்ரொட்ஸ்கி நோர்வே இல் நடைமுறையளவில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார். சோவியத் ஒன்றியத்தின் அழுத்தத்தின் கீழ், நோர்வே தொழிற் கட்சி அந்த விசாரணையின் அவதூறுகளுக்கு பதிலளிப்பதிலிருந்து ட்ரொட்ஸ்கியை வாய்மூடி இருக்க செய்ய முயன்று வந்தது. எவ்வாறிருப்பினும் விரைவிலேயே ஒரு புதிய குரல் எழுந்தது; ட்ரொட்ஸ்கியின் மகன் லெவ் செடோவ் Bulletin of the Opposition இல் பிரசுரித்தமை மாஸ்கோ விசாரணை மீதான செந்நூல் ஆக (The Red Book on the Moscow Trial ) ஆகவிருந்தது. செடோவ் அந்த விசாரணை மீதான விபரங்களை மிக கவனமாக ஆராய்ந்து, அவை உண்மையான புரட்சியாளர்கள் மீதான ஒரு மோசடி தாக்குதல் என்பதை அம்பலப்படுத்தினார்.

ஏப்ரல் 1937 அளவில், ட்ரொட்ஸ்கி நோர்வே இல் இருந்து வெளியேற்றப்பட்டு அப்போது தங்கியிருந்த மெக்சிகோவில் டுவே ஆணைக்குழு வடிவத்தில் ஒரு எதிர்-விசாரணையை ஒழுங்கமைத்தார். முதல் இரண்டு மாஸ்கோ கண்துடைப்பு விசாரணைகளின் பலமான நிராகரிப்பு (இரண்டாவது விசாரணை ஜனவரி 1937 இல் நடந்தது) குற்றவாளிகள் கிடையாது (Not Guilty) என்ற நூலில் முன்வைக்கப்பட்டது. இரண்டு முடிவுரை புள்ளிகள் அதில் குறிப்பிடுகின்றன: (22) “ஆகவே மாஸ்கோ விசாரணைகள் போலி புனைவுகள் என்ற முடிவுக்கு நாம் வருகிறோம். (23) ஆகவே ட்ரொட்ஸ்கி மற்றும் செடோவ் குற்றவாளிகள் கிடையாது என்பதை நாம் காண்கிறோம்.”

இத்தகைய விசாரணைகளை நடத்தியதன் மூலம், ஜோசப் ஸ்ராலின் வெற்றிகரமான முதல் சோசலிச புரட்சியின் மரபார்ந்த மற்றும் உண்மையான தலைவர்கள் மீது தாக்குதலைத் தொடுத்திருந்தார். ஸ்டாலின் அதிகரித்தளவில் எதிர்புரட்சிகரமாகிவரும் ஒரு சமூக அடுக்கான சோவியத் அதிகாரத்துவத்தின்  போனபார்ட்டிச தலைவராக இருந்தார். பழைய போல்ஷிவிக்குகளைக் கட்சியிலிருந்து நீக்கி அவர்களை நாடு கடத்தி அல்லது சிறையில் அடைத்து துன்புறுத்துவது ஸ்ராலினுக்கு போதுமானதாக இருக்கவில்லை.

பொறுப்பற்ற மற்றும் திட்டமிடாத விவசாய கூட்டு உற்பத்தி முறை, கண்மூடித்தனமான தொழில்துறைமயமாக்கம், 1933 இல் ஜேர்மனியில் ஹிட்லர் அதிகாரத்திற்கு வருதல், ஆளும் சோவியத் மற்றும் கட்சி அதிகாரத்திற்கு நியாயப்படுத்த முடியாதளவிலான தனிச்சலுகைகளில் வெளிப்பட்ட அதிகரித்த சமூக வேறுபாடு ஆகியவற்றால் 1930 கள் எங்கிலும் ஸ்ராலின் ஆட்சிக்கு எதிர்ப்பு ஒரேசீராக அதிகரித்து வந்தது. இவை சர்வதேச சோசலிசத்தை ஸ்ராலின் நிராகரித்ததன் மற்றும் "தனியொரு நாட்டில் சோசலிசம்" என்ற தேசியவாத மற்றும் மார்க்சிச-விரோத வேலைத்திட்டத்தை ஏற்றதன் பேரழிவுகரமான சில விளைவுகளாக இருந்தன.

1936 அளவில், பிரான்ஸ் மற்றும் ஸ்பெயினில் புரட்சிகர நிலைமைகள் மேலெழும்பி வந்தன, (ஸ்பெயின் உள்நாட்டு போர் ஜூன் 18 இல் வெடித்தது), அவை சோவியத் ஒன்றிய தொழிலாள வர்க்கத்திடையே நீண்டகாலமாக அடங்கி கிடந்த விருப்பங்களை மீண்டெழ வைத்தன. முதல் மாஸ்கோ விசாரணை மற்றும் அதை தொடர்ந்து நடத்தப்பட்ட பாரிய பயங்கரங்கள் (Great Terror) பொதுவாக வெறுமனே பழைய போல்ஷிவிக்குகளுக்கு எதிரான ஒரு முன்கூட்டிய தாக்குதல் மட்டுமின்றி, குறிப்பாக லியோன் ட்ரொட்ஸ்கி தலைமையிலான இடது எதிர்ப்புடன் தொடர்பு வைத்திருந்த எவரொருவருக்கும் எதிரானதாக இருந்தன.

ஸ்ராலின் டிசம்பர் 1927 பதினைந்தாவது கட்சி காங்கிரஸ் இல் இடது எதிர்ப்பை அமைப்புரீதியில் தோற்கடித்தார். அந்த காங்கிரஸ் க்கு பின்னர் உடனடியாக சில எதிர்ப்பாளர்கள் அடிபணிந்தார்கள் என்றாலும் ஆயிரக் கணக்கானவர்கள் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு சோவியத் ஒன்றியத்தின் தொலைதூர பிரதேசங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். 1928 இல் ட்ரொட்ஸ்கி தொலைதூர அல்மா ஆட்டாவிற்கு அனுப்பப்பட்டார், பின்னர் 1929 இல் சோவியத் ஒன்றியத்தில் இருந்தே வெளியேற்றப்பட்டார். ஓர் கட்டமைப்பு இல்லாமல் ஒரு சில பொருள் வளங்களுடன் ட்ரொட்ஸ்கியின் செல்வாக்கு விரைவிலேயே மங்கிவிடுமென ஸ்ராலின் நம்பினார். இதை விட மிக ஆழமான ஒரு பிழையை அவர் செய்திருக்க முடியாது.

சோவியத் அதிகாரத்துவம் உத்தரவிட்ட மற்றும் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை நடைமுறைப்படுத்திய சந்தர்ப்பவாத, தேசியவாத கொள்கைகளின் விளைவாக 1933 இல் ஹிட்லர் அதிகாரத்திற்கு வந்ததால், ஜேர்மன் தொழிலாள வர்க்கத்தின் பேரழிவுகரமான தோல்வி குறிக்கப்பட்ட நிலையில், ஸ்ராலின் தலைமையின் கீழ் மூன்றாம் அகிலம் ஒரு புரட்சிகர அமைப்பு என்பதிலிருந்து இறந்துவிட்டதென ட்ரொட்ஸ்கி அறிவித்தார். அவர் ஒரு புதிய நான்காம் அகிலம் அமைக்க அழைப்புவிடுத்தார், அது செப்டம்பர் 1938 இல் ஸ்தாபிக்கப்பட்டது.

1938 க்கு முந்தைய ஐந்தாண்டுகளில், ஒரு புதிய அகிலத்திற்காக அவர் செய்து வரும் தயாரிப்புகளை அவர் ஒட்டுமொத்த வாழ்வில் மிக முக்கியமானதாக ட்ரொட்ஸ்கி ஏற்றிருந்தார். ஒரு தொடர் கட்டுரைகளில், அவர் தொழிலாள வர்க்கத்தின் முற்போக்கான அடுக்குகளை கல்வியூட்டுவதற்கு ஸ்ராலினிச ஆட்சியின் திவால்தன்மையை அம்பலப்படுத்தினார்.

1936 இல், முதல் மாஸ்கோ விசாரணைக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர் தான், அவர் காட்டிக்கொடுக்கப்பட்ட புரட்சி எனும் அவரது தலைசிறந்த நூலை முடித்திருந்தார், அது சோவியத் சமூகத்தின் முரண்பாடுகளைக் குறித்த மிக முக்கிய மார்க்சிச பகுப்பாய்வாக விளங்குகிறது. அதில் அவர் விளக்குகையில், சோவியத் ஒன்றியம் சோசலிசத்தை நோக்கி முன்னேற வேண்டுமானால், தொழிலாள வர்க்கம் சோவியத் அதிகாரத்துவத்தை ஓர் அரசியல் புரட்சியின் மூலம் தூக்கியெறிந்து, உலக சோசலிச புரட்சியை மீட்டமைக்க வேண்டியிருக்கும். அதிகாரத்துவம், ஆட்சியில் தங்கியிருந்தால், அது தொழிலாள வர்க்கத்தை தசாப்தங்களுக்கு பின்னோக்கி தள்ளி, முதலாளித்துவம் மீட்சி செய்யப்படுவதே தவிர்க்கவியலாத விளைவாக இருக்கும். அனைத்திற்கும் மேலாக இத்தகைய போராட்டங்கள், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் பாரிய போராட்டங்கள் உலக அரங்கில் நடத்தப்பட வேண்டும் என விளக்கியிருந்தார். வரவிருந்த உலக போரைத் தொடர்ந்து எழக்கூடிய புரட்சிகர மேலெழுச்சியை முன்கணித்து, ட்ரொட்ஸ்கி, ஸ்ராலினிசத்தை வெற்றிகொண்டு விடலாம் என்பதில் நம்பிக்கையோடு இருந்தார்.

மாஸ்கோ விசாரணைகளும், மற்றும் அதை தொடர்ந்து நடந்த இரத்தந்தோய்ந்த களையெடுப்பும், பேரழிவுகரமான பாதிப்பைக் கொண்டிருந்தன, தொழிலாள வர்க்கத்தினதும் புத்திஜீவிகளினதும் சோசலிச கூறுபாடுகளை ஏறத்தாழ அழித்தொழித்து விட்டிருந்தன. அதை தொடர்ந்து காட்டிக்கொடுப்புகள் மற்றும் தோல்விகளுக்கு அந்த விசாரணைகள் வழி வகுத்தன. பிரெஞ்சு பொது வேலைநிறுத்தத்தின் ஒடுக்குமுறை, ஸ்பானிய புரட்சியின் தோல்வி, ஸ்ராலின்-ஹிட்லர் உடன்படிக்கை, போருக்குப் பிந்தைய புரட்சிகர எழுச்சி ஒடுக்கப்பட்டமை ஆகியவை ஸ்ராலினிசத்தின் இறுதி காட்டிக்கொடுப்பாக 1991 இல் சோவியத் ஒன்றியத்தின் கலைப்பு மற்றும் முதலாளித்துவ மீட்சியில் போய் முடிந்தது. 

இன்று 1917 அக்டோபர் புரட்சிக்கு இட்டுச் சென்ற தீர்க்கப்படாத சகல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளும் உலகளாவிய அளவில் மீண்டும் எழுந்துள்ளன. ஸ்ராலினிசம் அக்டோபர் புரட்சியின் தொடர்ச்சி அல்ல, அதற்கு எதிரான ஒரு எதிர்புரட்சிகர எதிர்விளைவு என்ற புரிதல்தான் வரவிருக்கின்ற புரட்சிகர போராட்டங்களுக்கான தயாரிப்புகளுக்கு அத்தியாவசியமானவை.

மாஸ்கோ விசாரணைகளைக் குறித்து படிக்க, இதன் எழுத்தாளர் பின்வரும் நூல்களைப் பரிந்துரைக்கிறார்: லியோன் செடோவ், The Red Book on the Moscow Trial (1936/1980); மக்ஸ் சாச்ட்மன், Behind the Moscow Trial (1936/1971); வாடிம் ரோகோவின், 1937: Stalin’s Year of Terror (1996/1998); வாடிம் ரோகோவின், Stalin’s Terror of 1937-1938: Political Genocide in the USSR (1997/2009) மற்றும் டேவிட் நோர்த் இன் The Russian Revolution and the Unfinished Twentieth Century (2014).