ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Obama and the US secret war in Laos

ஒபாமாவும், லாவோஸில் அமெரிக்காவின் இரகசிய போரும்

Peter Symonds
6 September 2016

பராக் ஒபாமாவின் நிர்வாகம் இன்னும் பரந்தளவில் புதிய போர்களுக்குத் தயாரிப்பு செய்து வருகையில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தினது இரத்தந்தோய்ந்த குற்றக் களங்கள் ஒன்றுக்கு திரும்பிய முதல் அமெரிக்க ஜனாதிபதியாக, அவர் லாவோஸ் தலைநகரம் வியன்டைன் (Vientiane) இற்கு திங்களன்று இரவு வந்தடைந்தார்.

ஒபாமா, கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டில் கலந்து கொள்ளவிருக்கிறார். சீனாவின் கடல்எல்லை உரிமைகோரல்களுக்கு எதிராக அமெரிக்க ஆதரவுடன் பிலிப்பைன்ஸ் விடுத்த சவாலுக்கு சார்பாக மத்தியஸ்தத்துக்கான ஐ.நா நிரந்தர நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதை தொடர்ந்து, இந்த உச்சிமாநாட்டில் தென் சீனக்கடல் சம்பந்தமாக சீனாவுடன் அதிகரித்துவரும் பதட்டங்கள் ஆதிக்கம் செலுத்தும்.

ஞாயிறன்று ஒளிபரப்பான முன்-பதிவு செய்யப்பட்ட CNN நேர்காணலில், ஒபாமா நீதிமன்றத்தினது தீர்ப்புக்கு கீழ்படியுமாறு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு ஒரு வெளிப்படையான தகவலை வழங்க அவர் உத்தேசித்திருப்பதாக சமிக்ஞை காட்டினார். “தென் சீனக் கடலின் சில விவகாரங்களில், அல்லது பொருளாதார கொள்கை என்று வரும்போது அவர்களது சில நடவடிக்கைகளில் நாம் பார்த்துள்ளதைப் போல, சர்வதேச விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளை அவர்கள் மீறுவதை பார்க்கையில், நாம் மிகவும் தீர்மானகரமாக இருக்க வேண்டியுள்ளது,” என்றார். “விளைவுகள் ஏற்படும் என்பதை நாம் அவர்களுக்கு சுட்டிக்காட்டி உள்ளோம்,” என்றவர் எச்சரித்தார்.

என்னவொரு முழுமையான பாசாங்குத்தனம்! ஏனைய ஒவ்வொரு சர்வதேச விதிமுறைகள் மற்றும் வழிமுறைகளில் செய்வதைப் போலவே, அமெரிக்கா அதுவே ஒப்புக் கொண்டிருக்காத கடல்சார் சட்டத்திற்கான ஐ.நா தீர்மானத்தின் (UNCLOS) கீழ் மற்ற நாடுகள் விதிமுறைகளுக்குக் கீழ்படிய வேண்டுமென வலியுறுத்துகிறது. ஒபாமா அவரது இரண்டு பதவிகாலத்தினூடாக, நீண்டகால தென் சீனக் கடலின் பிராந்திய சச்சரவுகளை போரைத் தூண்டிவிட அச்சுறுத்தும் ஓர் அபாயகரமான சர்வதேச வெடிப்பு புள்ளியாக மாற்றியுள்ளார்.

"சர்வதேச விதிமுறைகளின் அடிப்படையிலான ஒழுங்கமைப்புக்கு" —அதாவது உலகளவில் அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்திய மற்றும் மற்றவர்களுக்கு விதிமுறைகளை எழுத வாஷிங்டனுக்கு அதிகாரமளித்த இரண்டாம் உலக போருக்குப் பிந்தைய ஒழுங்கமைப்புக்கு, சீனா கீழ்படிய வேண்டும் என்று ஒபாமா வழமையாக அறிவித்து வருகிறார். ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவ பலமே "சமாதானத்தை" உறுதிப்படுத்தியதாகவும், கடந்த 40 ஆண்டுகளாக அப்பிராந்தியத்தில் பாரிய பொருளாதார விரிவாக்கத்திற்கு உத்தரவாதம் அளித்ததாகவும் அவர் பெருமை பீற்றுகிறார்.

எவ்வாறிருப்பினும் ஆசியாவில் அமெரிக்க மேலாதிக்கமானது தொடர்ச்சியான பல குற்றகரமான நவ-காலனித்துவ போர்களினூடாக, குறிப்பாக கொரியா மற்றும் இந்தோசீனா போர்களால் மட்டுமே ஸ்தாபிக்கப்பட்டது, அவற்றில் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கை விலையாக கொடுக்கப்பட்டதுடன், எண்ணற்ற இராஜாங்க சூழ்ச்சிகளும் மற்றும் சிஐஏ ஆதரவிலான ஆட்சிக்கவிழ்ப்பு சதிகளும் நடந்தன. 1965-66 இல் இரத்தந்தோய்ந்த இந்தோனேஷிய ஆட்சிக்கவிழ்ப்பு சதி, குறைந்தபட்சம் அரை மில்லியன் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி (PKI) அங்கத்தவர்களின் படுகொலையை உள்ளடக்கியதாகும்.

லாவோசில் சிஐஏ இன் இரகசிய போர் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மிக மோசமான போர் குற்றங்களில் உள்ளடங்கும். 1964 மற்றும் 1973 க்கு இடையே, அமெரிக்கா 580,000 நடவடிக்கைகளை மேற்கொண்டதோடு, நியூசிலாந்தை விட அளவில் சிறிய ஒரு நாட்டின் மீது இரண்டு மில்லியனுக்கும் அதிகமான குண்டுகளை வீசியது. அது ஒரு நாளின் 24 மணி நேரத்தில் ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும் ஒரு விமானம் நிறைய குண்டுகளை வீசுவதற்கு சமமாகும் அல்லது அப்போது லாவோசில் இருந்த ஒவ்வொரு ஆண், பெண் மற்றும் குழந்தை மீது சுமார் ஒரு டன் குண்டுகளை வீசுவதற்குச் சமம். வரலாற்றில் தனிநபர் மீது மிக அதிகளவில் குண்டுவீசப்பட்ட நாடாக லாவோஸ் விளங்குகிறது.

ஸ்ராலினிச கட்சிகளது மேலாதிக்கத்தில் இருந்ததும், சோவியத் ஒன்றியம் மற்றும் சீனாவால் ஆதரிக்கப்பட்டதுமான இந்தோசீனா —வியட்நாம் மற்றும் கம்போடியா அத்துடன் லாவோஸ்— எங்கிலுமான காலனித்துவ-எதிர்ப்பு இயக்கத்தை ஒடுக்கும் முயற்சியில் அதை பிரெஞ்சிடம் இருந்து அமெரிக்கா கைப்பற்றியது. லாவோ மன்னராட்சி அரசுக்கு முட்டுக்கொடுக்கவும் மற்றும் வடக்கு வியட்நாம் சிப்பாய்களும் விநியோகங்களும், லாவோஸின் ஹோ சி மின் (Ho Chi Minh) பாதை என்றழைக்கப்பட்டதன் ஊடாகவும் மற்றும் கம்போடியாவிலிருந்தும் தெற்கு வியட்நாமிற்குள் வருவதைத் தடுக்கவும் சிஐஏ அதற்கு தெரிந்த எல்லா இழிந்த உத்திகளையும் பிரயோகித்தது.

அந்த போருக்கு காங்கிரஸ் இன் ஒப்புதல் கிடையாது என்பதாலும் அமெரிக்க அரசியல் மற்றும் ஊடக ஸ்தாபகத்தின் இரகசியமான மூடிமறைப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்ததாலும், சிஐஏ தான் அதில் மத்தியமாக சம்பந்தப்பட்டிருந்தது. லாவோசிய அரச இராணுவம் முடங்கியதும், சிஐஏ நடவடிக்கையாளர்கள் மலைவாழ் பழங்குடியினத்தவர்களில், பெரிதும் ஹமாங் (Hmong) மக்களில் மதிப்பீட்டின்படி 30,000 பேர் கொண்ட ஒரு கம்யூனிச-விரோத கெரில்லா படையை அணிதிரட்டி, ஆயுதமளித்து, பயிற்றுவித்தது. இவர்களுக்கு தாய்லாந்திலிருந்து வந்த இரகசிய கூலிப்படை இராணுவத்தாலும் மற்றும் தெற்கு வியட்நாம், தாய்வான், தென் கொரியா மற்றும் பிலிப்பைன்ஸ் இல் இருந்து வந்த அமெரிக்க-பயிற்சி அளிக்கப்பட்ட சிப்பாய்களாலும் ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

சுமார் 350,000 ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் அந்த மனித படுகொலைகளில் கொல்லப்பட்டனர், அந்நாட்டின் மக்கள்தொகையில் பத்தில் ஒரு பங்கினர் அந்த சண்டைகளால் இடம்பெயர்ந்தனர். சிஐஏ இன் ஹமாங் கூட்டாளிகள் எட்டு வயது சிறு குழந்தைகளைக் கூட பலவந்தமாக சிப்பாய்களாக அணிதிரட்டும் அளவிற்கு பல போராளிகளை இழந்திருந்தனர். சிஐஏ உதவி பெற்ற ஹமாங், போருக்கு நிதியளிக்க, கஞ்சா போதைப்பொருளை வளர்த்து விற்பனை செய்தது, இது உலகளவில் ஹெராயின் தொற்றுநோய்க்கு எரியூட்ட உதவியது. சிஐஏ நிறுவனமான ஏர் அமெரிக்கா, லாவோஸ் நிலப்பகுதியில் இருந்து அந்த போதைப் பொருட்களை ஏற்றிச் சென்றது.

அந்நாட்டை அந்த இரகசிய போர் சீரழித்தது. ஒரு விபரங்களின்படி, “ஒரு கிராமம் மாற்றி ஒரு கிராமம் தரைமட்டமாக்கப்பட்டன, எண்ணற்றவர்கள் பயங்கர வெடிகுண்டுகளால் அல்லது இரசாயன குண்டுகள் மற்றும் வெள்ளை பாஸ்பரஸால் உயிருடன் எரிந்து போனார்கள் அல்லது மக்களைத் துளைக்கும் சிறுசிறு குண்டுகளால் துளைக்கப்பட்டார்கள்.” பரந்தளவிலான வெடிக்கப்படாமல் வைத்திருந்த வெடிபொருட்களே அந்நாட்டின் மூன்றில் ஒரு பங்கு இருந்தன, அவை அப்போர் முடிந்த பின்னர் குறைந்தபட்சம் 20,000 பேரை கொன்றன அல்லது ஊனமாக்கின. உயிர்பிழைத்திருந்த 12,000 க்கும் அதிகமானவர்களுக்கு தொடர்ச்சியான மருத்துவ கவனிப்பு மற்றும் மறுவாழ்வு அவசியப்பட்டது.

வெடிக்கப்படாத குண்டுகளைக் கையாள அமெரிக்காவின் அற்ப உதவியாக வெறும் 118 மில்லியன் டாலர் வழங்கப்பட்டது. சீரழிந்த அந்த நிலத்தில் 1 சதவீதமென மதிப்பிடப்பட்ட இடம் மட்டுமே சுத்தப்படுத்தப்பட்டது. 2010 இல் 5 மில்லியனில் இருந்த அந்த தொகையை ஒபாமா நிர்வாகம் இந்தாண்டு 19.5 மில்லியன் டாலராக உயர்த்தி உள்ளது, அதுவும் லாவோசிய மக்கள் மீதான அக்கறையினால் கிடையாது, மாறாக பெய்ஜிங் உடனான வியட்டைன் ஆட்சியின் உறவுகளைத் தளர்த்தி வாஷிங்டனை நோக்கி மறுஒழுங்கமைப்பதற்காக மிரட்டும் மற்றும் இலஞ்சம் கொடுக்கும் அதன் முயற்சியின் பாகமாக இருந்தது.

சோவியத் ஒன்றியத்தின் கலைப்பும் பனிப்போரின் முடிவும் சமாதானத்திற்கு இட்டுச் செல்லவில்லை, மாறாக, கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்க முதலாளித்துவம் அதன் வீழ்ச்சியை இராணுவ பலத்தைக் கொண்டு ஈடுகட்ட முனைந்துள்ள நிலையில், அது தீவிரமடைந்து வரும் அடுத்தடுத்த போர்களுக்கு இட்டுச் சென்றுள்ளது. லாவோஸ் விடயத்திலும் மற்றும் மிக பரந்தளவில் இந்தோசீனா மற்றும் கொரியா விடயத்திலும் போல, ஆப்கானிஸ்தான், ஈராக், சிரியா மற்றும் லிபியா என இந்த ஒட்டுமொத்த நாடுகளும் உலகளாவிய அமெரிக்க மேலாதிக்கத்தைப் பலப்படுத்தும் முயற்சியில் சீரழிக்கப்பட்டுள்ளன.

உலகளாவிய பொருளாதார உடைவு மோசமடைந்து வருகையில், அமெரிக்கா ஆக்ரோஷமாகவும், தீர்க்கமாகவும் பிரதான சக்திகளுக்கு எதிராக, அனைத்திற்கும் மேலாக சீனா மற்றும் ரஷ்யாவிற்கு எதிராக, போருக்குத் தயாரிப்பு செய்து வருகிறது. வியன்டைனில் வாஷிங்டனின் இராஜாங்க முயற்சிகளானது சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைத்து, பலவீனப்படுத்தி, குழிபறிக்கும் நோக்கில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு அதிகமான காலத்திய ஒபாமாவின் மிக பரந்த "ஆசியாவின் முன்னிலை" பாகமாகும். அதன் விளைவாக, ஒபாமாவினால் திட்டமிட்டு தூண்டிவிடப்பட்டதும், இரண்டு அணுஆயுத சக்திகளுக்கு இடையே ஒரு மோதலைத் தொடங்கி வைக்கக்கூடியதுமான தென் சீனக் கடல் பிரச்சினை ஆசியாவில் ஒரேயொரு வெடிப்புப்புள்ளி தான்.

மற்றொரு பேரழிவுகரமான உலக போருக்குள் மூழ்குவதை தொழிலாள வர்க்கத்தால் மட்டுமே தடுக்க முடியும். இது முதலாளித்துவத்தை முடிவுக்குக் கொண்டு வந்து சோசலிச அடித்தளங்களில் சமூகத்தை மறுகட்டமைக்க, அமெரிக்கா, சீனா, ஆசியா மற்றும் உலகெங்கிலும் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்தும் ஒரு சர்வதேச போர்-எதிர்ப்பு இயக்கத்தைக் கட்டமைக்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு தொடுத்துவரும் அரசியல் போராட்டத்தின் இன்றியமையாதன்மையை எடுத்துக்காட்டுகிறது.