ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US and allies threaten North Korea with sanctions and military attack

அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் வட கொரியாவை தடையாணைகள் மற்றும் இராணுவ தாக்குதலைக் கொண்டு அச்சுறுத்துகின்றன

By Peter Symonds
12 September 2016

கடந்த வெள்ளியன்று வட கொரியா ஐந்தாவது அணுகுண்டு சோதனை நடத்தியதை அடுத்து, ஏற்கனவே உலகின் மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட ஓர் ஆட்சியாக உள்ள அதன் மீது ஒபாமா நிர்வாகம் கடுமையான புதிய தடையாணைகளுக்கு அழுத்தமளித்து வருகிறது. ஏற்கனவே பதட்டமாக உள்ள கொரிய தீபகற்பத்தின் சூழலை, தண்டிக்கும் விதமான மற்றொரு சுற்று நடவடிக்கைகள் இன்னும் அதிகமாக தீவிரப்படுத்தும் என்பதோடு மோதல் அபாயத்தையும் உயர்த்தும்.

வட கொரியாவிற்கான அமெரிக்க சிறப்பு பிரதிநிதி சுங் கிம் (Sung Kim) நேற்று அறிவிக்கையில், ஐ.நா கொண்டு வரும் ஏதேனும் தடையாணைகளுக்குக் கூடுதலாக, அமெரிக்காவும் ஜப்பானும் தென் கொரியாவுடன் சேர்ந்து ஒருமித்த தடையாணைகளை பரிசீலித்து வருவதாக தெரிவித்தார். அவர் டோக்கியோவில் பேசுகையில், “வட கொரியாவின் சமீபத்திய நடவடிக்கைகளுக்கு எதிராக சாத்தியமான அளவிற்கு பலமான நடவடிக்கையைக் கொண்டு வர நாங்கள் [ஐ.நா] பாதுகாப்பு அவையிலும் அதற்கு அப்பாற்பட்டும் மிகவும் நெருங்கி பணியாற்றி வருகிறோம்,” என்றார்.

எவ்வாறிருப்பினும் வட கொரியா புதிய தடையாணைகளுக்கான அச்சுறுத்தலை "அர்த்தமற்றது" என்றும், “பெரிதும் நகைப்பிற்கிடமானது" என்றும் உதறித் தள்ளியதுடன், அதையொரு அணுஆயுத சக்தியாக அங்கீகரிக்குமாறு அமெரிக்காவிற்கு அழைப்புவிடுத்தது. ஆக்ரோஷமான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு எதிராக தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்வதற்கு அதற்கு அவசியப்படுவதாக கூறி, "எண்ணிக்கையிலும், தரத்திலும்" அதன் அணுஆயுதங்களை மேம்படுத்த அது வேலை செய்யுமென ஒரு வெளியுறவு அமைச்சக அறிக்கை அறிவித்தது.

எவ்வாறிருப்பினும் பியொங்யாங்கின் அணுஆயுத திட்டம் வட கொரியாவிலும் ஆசியா மற்றும் உலகெங்கிலுமான தொழிலாள வர்க்கம் முகங்கொடுக்கும் அபாயங்களை அதிகரிக்க மட்டுமே செய்கிறது. அதன் போர்நாடும் அச்சுறுத்தல்கள், வெறுமனே வட கொரியாவிற்கு எதிராக மட்டுமின்றி மாறாக சீனாவிற்கு எதிராகவும், வடகிழக்கு ஆசியாவில் வாஷிங்டன் அதன் இராணுவத்தை துரிதமாக கட்டமைக்க சாக்குபோக்கை வழங்குகிறது, அத்துடன் ஜப்பானும் தென் கொரியாவும் மேலும் இராணுவமயப்படுவதற்கான ஒரு நியாயப்பாட்டையும் வழங்குகிறது.

பெயர் வெளியிட விரும்பாத தென் கொரிய இராணுவ அதிகாரி ஒருவர் நேற்று Yonhap செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், வட கொரியா ஓர் அணுஆயுத தாக்குதல் திட்டத்திற்கான ஏதேனும் அறிகுறியைக் காட்டினால், பியொங்யாங்கை அழிக்கும் நோக்கில், “கொரியாவிற்கான பாரிய தண்டனை மற்றும் பழிவாங்குதல்" என்றறியப்படும் திட்டங்களை இராணுவ அமைச்சகம் கொண்டிருப்பதாக அறிவித்தார்.

“வடக்கு ஓர் அணுஆயுத பிரயோகத்திற்கான ஏதேனும் ஒரு அறிகுறியைக் காட்டிய உடனேயே, ஒவ்வொரு பியொங்யாங் மாவட்டமும், குறிப்பாக வட கொரிய தலைவர்கள் மறைந்திருக்கக் கூடியவை, தொலைதூர ஏவுகணைகள் மற்றும் மிகப்பெரிய வெடிப்பார்ந்த குண்டுகளைக் கொண்டு முழுமையாக அழிக்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், வடக்கின் தலைநகரம் நில வரைபடத்திலிருந்தே அழிக்கப்படும் அளவிற்கு குறைக்கப்படும்,” என்று அந்த ஆதார நபர் தெரிவித்தார்.

இரத்தம் கொதிக்க செய்யும் இந்த அச்சுறுத்தல், அமெரிக்கா மற்றும் தென் கொரியாவிற்கு இடையே OPLAN 5015 எனப்பட்ட கடந்த ஆண்டின் புதிய நடவடிக்கை திட்டங்களின் வரிசையில் உள்ளது, இத்திட்டம் வட கொரியா மீதான ஒரு முன்கூட்டிய தாக்குதல் மற்றும் கிம் ஜொன்ங்-உன் உட்பட அதன் உயர்மட்ட தலைவர்களை நிர்மூலமாக்கும் "படுகொலை" நடவடிக்கைகளை உள்ளடக்கியதாகும். அமெரிக்கா 28,500 துருப்புகளை தென் கொரியாவில் கொண்டுள்ளது, வட கொரியாவுடனான போர் சம்பவத்தில், 3 மில்லியனுக்கும் அதிகமான சிப்பாய்களையும், படை தளவாடங்களையும் கொண்ட தென் கொரிய படைகளுக்கான நடவடிக்கை கட்டளையகத்திற்கும் அது பொறுப்பேற்கும்.

ஜனவரியில் நடத்தப்பட்ட வட கொரியாவின் நான்காவது அணுஆயுத சோதனையைத் தொடர்ந்து, அமெரிக்கா வட கொரியாவின் தங்கம், டைட்டானிய உலோக தாது மற்றும் அரிய உலோகங்களின் ஏற்றுமதிகள் உட்பட இதுவரையில் இல்லாதளவிலான கடுமையான ஐ.நா தடையாணைகளுக்கு உடன்படுமாறு சீனாவிற்கு அழுத்தமளித்தது. பியொங்யாங் இப்போது வரையில் இராணுவத்திற்காக அல்லாமல், “வாழ்வாதார தேவைகளுக்கு" என்றால் எண்ணெய் வாங்கிக் கொள்ளலாம் மற்றும் நிலக்கரிகளை விற்க முடியும். இதை விட சீனா, வட கொரியாவின் மிகப் பெரிய வர்த்தக பங்காளியாகும், மொத்த வர்த்தகத்தில் 90 சதவீதம் வரையில் அதன் கணக்கில் வருகிறது.

சீனா அதன் கூட்டாளியைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமானதைச் செய்யவில்லை என்று அமெரிக்கா அதன் புதிய குற்றச்சாட்டுக்களில் சீனாவை மையப்படுத்தி உள்ளதுடன், கடுமையான நடவடிக்கைகளைக் கோரி வருகிறது. சமீபத்திய அணுகுண்டு சோதனையை விமர்சித்த சீனா, வட கொரியாவை அணுஆயுத குறைப்பிற்கு வலியுறுத்தியது. ஆனால் பியொங்யாங் ஆட்சியே கலைந்து அங்கே அமெரிக்காவிற்கு சாதகமான ஓர் ஐக்கிய கொரியா ஏற்படும் அளவிற்கு தடையாணைகளைத் திணிக்க அது விரும்பவில்லை.

வடகிழக்கு ஆசியாவில் அமெரிக்க இராணுவ கட்டமைப்பு, சீனாவை இராணுவரீதியில் சுற்றி வளைக்கும் மற்றும் போருக்கு தயாரிப்பு செய்யும் அமெரிக்காவினது பரந்த முயற்சிகளின் பாகமாக இருப்பதை சீனா நன்கு அறியும். சீனாவின் அணுசக்தி ஆற்றலைப் பலவீனப்படுத்தும் வகையில் தென் கொரியாவில் Terminal High Altitude Area Defence (THAAD) எனும் ஏவுகணை-தடுப்பு அமைப்புமுறையை நிறுவுவதற்கான அமெரிக்காவின் முடிவை பெய்ஜிங் கூர்மையாக விமர்சித்தது.

அந்த அணுகுண்டு சோதனைக்கு ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனின் விடையிறுப்பானது, அமெரிக்க இராணுவமும் உளவுத்துறை எந்திரமும் வட கொரியாவிற்கு எதிராக மிகவும் ஆக்ரோஷமான நடவடிக்கைகளுக்குத் தயாரிப்பு செய்து வருவதற்கான தெளிவான அறிகுறியாக இருந்தது. ஜனநாயகக் கட்சியினது மற்றும் குடியரசுக் கட்சியினது இரண்டு தரப்பு நிர்வாகங்களிலும் இருந்த முன்னாள் தேசிய பாதுகாப்பு அதிகாரிகளைச் சந்தித்த பின்னர் கடந்த வெள்ளியன்று CNN உடனான நேரடி ஒளிபரப்பு அல்லாத ஒரு நேர்காணலில், அவர் தடையாணைகள் தோல்வியடைந்துவிட்டதாகவும், ஏனைய குறிப்பிடப்படாத நடவடிக்கைகள் அவசியப்படுவதாகவும் அறிவுறுத்தினார். இந்த நேர்காணல் நேற்று ஒளிபரப்பானது.

தாம் ஜனாதிபதியாக பதவியேற்றால், “ஏவக்கூடிய ஒரு அணுஆயுதத்தை வட கொரியா வைத்திருக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்,” என்று கிளிண்டன் அறிவித்தார். அவர் என்ன செய்வார் என்று வினவிய போது, வட கொரியாவுடன் வர்த்தகத்தை நிறுத்த சீனாவிற்கு அவர் அழுத்தமளிக்க இருப்பதாக முதலில் கிளிண்டன் குறிப்பிட்டார். “சீனாவுடனான எங்களின் விவாதங்களைத் தீவிரப்படுத்த வேண்டியிருக்கும், ஏனென்றால் அவர்களின் கதவருகில் இந்த பெரிய பிரச்சினையை அனேகமாக அவர் விரும்ப மாட்டார்கள்,” என்றவர் தெரிவித்தார்.

அப்பிரச்சினை மீது அழுத்தமளித்தபோது, கிளிண்டன் அறிவித்தார்: “எங்களால் எல்லா விபரங்களையும் தர முடியாது,” என்று கூறிய பின்னர் அவர் நிர்வாகம் என்ன செய்யும் என்பதற்கு ஒரு அறிகுறியாக ஈரானைச் சுட்டிக்காட்டினார். “கூடுதல் தடையாணைகள், மற்றும் அதை செய்கையில் … அவற்றைத்தான் ஈரானுடன் எனது தலைமையில் தான் செய்தேன், அவை  பலனளித்ததால் பெரிய தாக்கம் ஏற்பட்டது,” என்று கூறியதுடன், “ஆகவே [வட கொரியா மீது] நிறைய தடையாணைகளை நாங்கள் விதிப்போம், ஏனென்றால் அவை ஓர் ஒட்டுமொத்த மூலோபாயத்தின் பாகமாகும், ஆனாலும் அது மட்டுமே போதாது,” என்றார்.

ஈரான் குறித்த கிளிண்டனின் குறிப்பு முக்கியமானது. ஈரானிய மக்களை கடுமையாக பாதித்த பொருளாதாரரீதியில் முடமாக்கும் தடையாணைகளையும் மற்றும் ஈரானிய அணு உலைகளுக்கு எதிராக மட்டுமின்றி மாறாக அதன் இராணுவம் மற்றும் பொருளாதாரத்திற்கு எதிராகவும் பேரழிவுகரமான இராணுவ தாக்குதல்களின் தொடர்ச்சியான அச்சுறுத்தலையும் சேர்த்திருந்தமை, தெஹ்ரானை நோக்கிய ஒபாமா நிர்வாகத்தின் மூலோபாயமாக இருந்தது. இராணுவ வாய்ப்புகள் உட்பட, “எல்லா வாய்ப்புகளும் மேசையில் முன்வைக்கப்பட்டிருப்பதாக" வெள்ளை மாளிகை அதிகாரிகள் மீண்டும் மீண்டும் அறிவித்துள்ளனர்.

வட கொரியாவை நோக்கிய கிளிண்டனின் "ஒட்டுமொத்த மூலோபாயம்" அதே மாதிரியானது தான்: வட கொரியா மீது பொருளாதார அழுத்தத்தைத் தீவிரப்படுத்துதல், அது பியொங்யாங் ஐ அதன் பாதங்களுக்கு அடியில் கொண்டுவரத் தவறினால், ஒரு பரந்த போரை வேகப்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்ட இராணுவ நடவடிக்கை. ஈரானிய அணுசக்தி விஞ்ஞானிகளைப் படுகொலை செய்ய மற்றும் அதன் அணுஉலைகளை வீணடிக்க இஸ்ரேலின் ஒத்துழைப்புடன் ஒரு நீடித்த இரகசிய நடவடிக்கையாக ஈரானுக்கு எதிராக எடுக்கப்பட்ட அமெரிக்க நடவடிக்கைகளின் மிகவும் ஆத்திரமூட்டும் அம்சம், ஐயத்திற்கிடமின்றி வட கொரியா சம்பந்தமான விவாதத்திலும் நடக்கிறது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷின் கீழ் தேசிய உளவுத்துறையின் முன்னாள் இயக்குனர் ஜோன் நெக்ரோபாண்ட் (John Negroponte) நேற்று அறிவிக்கையில், வட கொரியா "அடுத்த நிர்வாகம் முகம் கொடுக்க இருக்கின்ற ஒரு மிக முக்கிய அபாயமாகும்" என்றும் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணை திட்டங்கள் குறித்து ஏதாவது செய்தாக வேண்டும் என்றும் தெரிவித்தார். அவரும் கிளிண்டனை போலவே, “நிஜமான தீர்வு" என்பது மற்றொரு ஐ.நா தீர்மானம் அல்லது கூடுதல் தடையாணைகள் என்பதை விட அதிகமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தினார்.

கிளிண்டன் மற்றும் நெக்ரோபாண்ட் இன் கருத்துக்கள், ஏறத்தாழ நிச்சயமாக பெண்டன், அமெரிக்க உளவுத்துறை முகமைகள் மற்றும் வெள்ளை மாளிகையின் மூடிய கதவுக்குப் பின்னால் இப்போது நடந்து வரும் ஆழ்ந்த விவாதங்களைப் பிரதிபலிக்கிறது. கூடுதல் தடையாணைகள் குறித்து பகிரங்கமாக பேசப்படுகின்ற அதேவேளையில், அதிக அபாயகரமான மற்றும் இன்னும் ஆத்திரமூட்டும் ஏனைய திட்டங்களும் வரையப்பட்டு, அதற்கான தயாரிப்பும் செய்யப்பட்டு வருகிறது, இவை அனேகமாக அடுத்த நிர்வாகத்தில் அல்ல, இப்போதைய நிர்வாகத்திலேயே கூட நடைமுறைப்படுத்தப்படலாம்.