ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Divisions erupt at post-Brexit Bratislava summit as EU calls for military-police build-up

ஐரோப்பிய ஒன்றியம் இராணுவ-பொலிஸ் ஆயத்தப்படுத்தலுக்கு அழைப்புவிடுக்கையில், பிரிட்டன் வெளியேறும் முடிவுக்குப் பிந்தைய பிரடிஸ்லாவா உச்சி மாநாட்டில் பிளவுகள் வெடிக்கின்றன

By Johannes Stern and Alex Lantier
17 September 2016

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு உள்ளேயும், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலும் பதட்டங்கள் தீவிரமடைந்து வருவதற்கு இடையே, பிரிட்டன் நீங்கலாக, 27 ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாட்டு தலைவர்கள் ஸ்லோவக்கியா தலைநகர் பிரடிஸ்லாவா இல் பிரிட்டன் வெளியேறும் முடிவுக்குப் பிந்தைய முதல் உச்சி மாநாட்டில் சந்தித்தனர்.

உள்நாட்டின் பரந்த பொலிஸ் அதிகாரங்களுடன் சேர்ந்து, ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் இராணுவ கூட்டணியாக மறுஒழுங்கமைப்பதன் மூலமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு எதிர்வினையாற்ற உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய, ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு அதிகாரிகளது முன்மொழிவுகளை அந்த உச்சி மாநாடு மீளவலியுறுத்தியது. எவ்வாறிருப்பினும் ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட "பிரடிஸ்லாவா பிரகடனம்" எனப்படுவதில் விவரிக்கப்பட்ட இந்த பிற்போக்குத்தனமான திட்டத்தின் பரந்த விவரிப்புகளுக்கு அப்பாற்பட்டு, வேறெந்த திடமான முன்மொழிவுகள் மீதும் எஞ்சிய ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் உடன்படவில்லை. ஐரோப்பாவின் பொருளாதார நெருக்கடி மீதும், மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க போர்களில் இருந்து தப்பிவரும் மில்லியன் கணக்கான அகதிகள் குறித்தும் வெடிப்பார்ந்த மோதல்கள் வெடித்தது.

யூரோ மண்டலத்தின் மூன்றாவது மிகப் பெரிய பொருளாதாரத்தின் தலைவர் இத்தாலி பிரதம மந்திரி மரியோ ரென்சி, ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் மற்றும் பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹோலாண்ட் உடன் இறுதி பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். பிரிட்டன் வெளியேறும் முடிவுக்குப் பின்னர், சில வாரங்களுக்கு முன்னர் தான், ஐரோப்பிய ஒன்றிய ஐக்கியத்திற்கு அழைப்புவிடுக்கவும் மற்றும் பிரிட்டன் அமெரிக்காவின் ஆதரவுடன் இருந்த வரையில் தடுக்கப்பட்டிருந்த ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு இராணுவ கூட்டணியாக மாற்றுவதற்கான நீண்டகால திட்டங்களை மீட்டமைக்கவும் இத்தாலிய வென்ரொரேனே (Ventotene) தீவுக்கு அருகில் ஒரு விமானந்தாங்கி போர்க்கப்பலில் மேர்க்கெல், ஹோலாண்ட் உடன் ரென்சி இணைந்து நின்றார். இருப்பினும் நேற்று அவர் அந்த உச்சி மாநாட்டை தாக்கியதுடன், ஜேர்மன் மற்றும் பிரெஞ்சு கொள்கைகளுடன் அவர் உடன்படவில்லையென பகிரங்கமாக அறிவித்தார்.

“பொருளாதாரம் மற்றும் புலம்பெயர்வு குறித்த அவர்களின் தீர்மானங்களை என்னால் பகிர்ந்து கொள்ள முடியாதபோது, மேர்க்கெல் மற்றும் ஹோலாண்ட் உடன் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் என்னால் பங்கெடுக்க முடியாது,” என்று பிரடிஸ்லாவா அரண்மனை கூட்டத்திற்குப் பின்னர் ரென்சி செய்தியாளர்களிடம் அறிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், “இது கருத்து முரண்பாடு அல்ல, மற்றவர்கள் பார்க்கும் அதே விதத்தில் இத்தாலி பார்க்கவில்லை,” என்றார்.

அதன் சிக்கனத் திட்ட நடவடிக்கைகளுக்காக ஆழமாக மதிப்பிழந்துள்ள ரென்சியின் அரசாங்கம், குறிப்பாக இத்தாலியின் வங்கியியல் நெருக்கடிக்கு கடுமையான செலவின வெட்டுக்களைக் கொண்டு விடையிறுக்க பேர்லின் கோரியதால் அதை ரென்சி தாக்கினார். “பற்றாக்குறைக்காக நாடுகள் விதிமுறையை மதித்து நடப்பதைப் போல அதே விதத்தில், அவர்களும் வர்த்தக உபரி மீதான விதிமுறைகளை மதிக்க வேண்டியிருக்கும்,” என்று ரென்சி தெரிவித்தார். “சில நாடுகள் அவற்றை மதிப்பதில்லை; அதில் முக்கியமானது ஜேர்மனி,” என்றார்.

மத்திய தரைக்கடலைக் கடந்து நூறாயிரக் கணக்கான அகதிகள் இத்தாலி மற்றும் கிரீஸிற்கு வருகிறார்கள் என்பதால், மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் அகதிகளுக்கு இடமளிக்க வேண்டுமென்றும் அல்லது அகதிகளுக்கு இடமளிக்க நிதியுதவி வழங்க வேண்டுமென்றும் இந்நாடுகள் கோரியுள்ளன. இப்பிரச்சினையில் அந்த உச்சி மாநாடு எந்தவித அர்த்தமுள்ள உடன்பாடும் எட்ட தவறியதற்காக அதை அவர் தாக்கினார்.

"புலம்பெயர்வோர் குறித்த இன்றைய ஆவணத்தை ஒரு முன்னோக்கிய படியாக வர்ணிப்பதற்கு, [மதிப்பான] வார்த்தை ஜாலக்காரர்களின் கற்பனை அவசியப்படுவதாக,” அவர் அறிவித்தார். “வழமையான விடயங்களே மீண்டும் கூறப்பட்டன,” என்றார்.

மொத்த அகதிகளையும் வெளியே நிறுத்தும் ஒரு பிற்போக்குத்தனமான முயற்சியில் ஹங்கேரிய எல்லையில் முள்வேலி அமைத்த ஹங்கேரியின் புலம்பெயர்வோர்-விரோத பிரதமர் விக்டொர் ஓர்பன், புலம்பெயர்வோரை ஹங்கேரி ஏற்றுக் கொள்ள வேண்டுமென்ற ஐரோப்பிய ஒன்றிய கருத்துக்களைப் பகிரங்கமாக தாக்கினார்.

“ஐரோப்பிய நாடாளுமன்ற தலைவர் மார்ட்டீன் சுல்ஸ் உடனான எனது உரையாடலின் போது, ஹங்கேரிய மக்களை மதிக்குமாறு நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்,” என்று ஓர்பன் தெரிவித்தார். “இறையாண்மை தீர்மானங்கள் மற்றும் தேசிய அரசுகளது விருப்பங்களை முறிப்பதையும் மற்றும் அவர்களின் சட்டம்-உருவாக்கும் உத்திகளைப் பயன்படுத்துவதையும் நிறுத்துமாறு நான் அவரைக் கேட்டுக் கொண்டேன்,” என்றார்.

ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நிலவும் ஆழ்ந்த பிளவுகளை நடைமுறையளவில் ஒப்புக்கொள்ளும் விதத்தில், ஆணைக்குழு தலைவர் ஜோன் குளோட் ஜூங்கர் அறிவிக்கையில் இந்த உச்சி மாநாட்டுக்குப் பின்னர் தீர்மானங்களை எழுத்துபூர்வமாக வெளியிடுவது "பொருத்தமாக இருக்காது" என்றார்.

பிரடிஸ்லாவா உச்சி மாநாடு தெளிவுபடுத்தி உள்ளதைப் போல, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராஜ்ஜியம் வெளியேறுவதற்கான வாக்கு, ஐரோப்பா தழுவிய பிளவுகள் மற்றும் மோதல்களைப் பிரதிபலித்ததுடன், மொத்தமாக ஐரோப்பிய ஒன்றியத்தையே கலைக்க அச்சுறுத்துகிறது. சோவியத் ஒன்றியத்தின் ஸ்ராலினிச கலைப்புக்கு ஓராண்டுக்கு பின்னர் 1992 இல் அது நிறுவப்பட்டதில் இருந்து, ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்க-தலைமையிலான போர்களுடன் தன்னைத்தானே அணி சேர்த்து கொண்டுள்ளது, வணிக-சார்பிலான மறுசீர்திருத்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தியது மற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீது தாக்குதலை தொடுத்தது. எவ்வாறிருப்பினும் குறிப்பாக 2008 பொருளாதார நெருக்கடி வெடித்ததில் இருந்தும், லிபியா மற்றும் சிரியாவில் 2011 போர்களுக்குப் பின்னர் இருந்தும், இத்தகைய வர்க்க மற்றும் சர்வதேச மோதல்கள் ஐரோப்பிய ஒன்றியத்தினது பொதுவான கொள்கைகளை அழகுபடுத்திக் காட்டும் முயற்சிகளை கீழறுத்துள்ளன.

ஜேர்மன் தலைமையிலான ஐரோப்பிய ஒன்றியம் மீது, பிரிட்டிஷ் ஆளும் வர்க்கத்தின் ஆழ்ந்த மனக்கசப்புகளுக்கு இடையே ஒழுங்கமைக்கப்பட்ட பிரிட்டன் வெளியேறுவது மீதான வாக்கெடுப்புக்கு விடையிறுப்பாக, ஜேர்மனியும் பிரான்ஸூம் ஐரோப்பிய ஒன்றியத்தை ஓர் இராணுவ கூட்டணியாக ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுக்க நகர்ந்து வருகின்றன, முன்பு இதை வாஷிங்டனினது முறையீட்டின் பேரில் பிரிட்டன் தடுத்து வந்தது.

ஐரோப்பிய ஒன்றிய சக்திகள், அமெரிக்கா உடனான வணிக பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டு வர அழைப்பு விடுத்ததை அடுத்து, மிகப் பெரிய அமெரிக்க பெருநிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அயர்லாந்தில் வரிகளைச் செலுத்தாததற்காக அதன் மீது 13 பில்லியன் டாலர் அபராதம் விதித்ததை அடுத்து, ஐரோப்பிய-அமெரிக்க பதட்டங்களும் மேற்புறத்திற்கு வந்துள்ளன. பிரடிஸ்லாவாவில் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் சந்தித்தபோதே, 2008 வோல் ஸ்ட்ரீட் பொறிவுக்கு முன்னதாக அமெரிக்க அடமானக்கடன் பத்திரங்கள் சம்பந்தப்பட்ட மோசடி குற்றச்சாட்டுக்கள் மீது அமெரிக்க ஆணையங்கள் ஜேர்மனியின் முன்னணி வங்கியான டோச்ச வங்கியின் மீது 14 பில்லியன் டாலர் அபராதம் விதித்தன.

“உரிமையியல் முறையீடுகளாக இருக்கக்கூடிய இந்த குறிப்பிட்ட தொகையில் சிறியளவை கூட டோச்ச வங்கி வழங்க உத்தேசிக்கவில்லை,” என்று அந்த வங்கி ஓர் அறிக்கையில் தெரிவித்தது. “பேரம்பேசல்கள் இப்போது தான் தொடங்கி இருக்கின்றன. சக வங்கிகளது இதேபோன்ற விவகாரங்கள் பொருள்ரீதியில் குறைந்த தொகைகளைக் கொண்டு தீர்க்கப்பட்டதை போலவே இதுவும் ஒரு முடிவுக்கு கொண்டு வரப்படுமென வங்கி எதிர்பார்க்கிறது,” என்று குறிப்பிட்டது.

அமெரிக்காவிடமிருந்து சுதந்திரமான இராணுவ கொள்கையை நெறிப்படுத்தும் ஐரோப்பிய முயற்சிகளால், வாஷிங்டனுக்கும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையிலான மூலோபாய மோதல்களுடன் சேர்ந்து இந்த நிதியியல் பிரச்சினைகள் பிணைந்து வருகின்றன. இந்த உச்சி மாநாட்டுக்கு முன்னதாக, இராணுவ ஆயத்தப்படுத்தல், சிக்கனத் திட்டம் மற்றும் பிரான்சில் தொடர்ந்து கொண்டிருக்கும் அவசரகால நிலையை முன்னுதாரணமாக கொண்ட சர்வாதிகார ஆட்சி வடிவங்கள் ஆகியவற்றிற்கு பிற்போக்குத்தனமாக அழுத்தமளிப்பதை பாரீஸூம் மற்றும் குறிப்பாக பேர்லினும் முன்னெடுத்தன.

ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லெயென் மற்றும் அவரது பிரெஞ்சு சமபலமான ஜோன்-ஈவ் லு திரியோன் ஆல் எழுதப்பட்ட ஆறு-பக்க முன்மொழிவு ஒன்று பத்திரிகையில் கசிந்தது. “நமது எல்லைகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களை நடைமுறையில் இன்னும் அதிகமாக பாதுகாப்பதற்காக நமது ஐக்கியத்தையும் ஐரோப்பிய பாதுகாப்பு தகைமைகளையும் மீளபலப்படுத்துவதற்கு இதுவே சரியான தருணமாகும்,” என்று அது அறிவித்தது. “ஐக்கிய இராஜ்ஜியம் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற முடிவெடுத்துள்ள நிலையில், [எஞ்சிய] 27 அங்கத்துவ நாடுகளுடன் நாம் இப்போது செயல்பட வேண்டியுள்ளது.” அது வான்வழி எரிபொருள் நிரப்பும் தகைமைகள், செயற்கைகோள் உளவுபார்ப்பு, இணையவழி போர்முறை மற்றும் டிரோன்களை அபிவிருத்தி செய்ய இராணுவ செலவினங்களைக் கூடுதலாக அதிகரிக்க அழைப்புவிடுத்தது.

பிரிட்டன் வெளியேறும் முடிவுக்குப் பின்னர், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் மீள்ஆயுதமயமாதல் என்பதே அந்த உச்சி மாநாட்டு விவாதங்களின் மையத்தில் இருந்ததை பிரடிஸ்லாவாவில் நேற்றைய அவர்களது கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில், மேர்க்கெல் மற்றும் ஹோலாண்ட் உறுதிப்படுத்தினர். “பாதுகாப்பு, புலம்பெயர்வு மற்றும் எல்லை பாதுகாப்பு" ஆகியவையும் விவாதிக்கப்பட்ட கருத்துக்களில் உள்ளடங்கி இருந்ததாக மேர்க்கெல் தெரிவித்தார். அகதிகள் பெருக்கெடுத்து வருவதைக் குறைக்கவும் மற்றும் "பாதுகாப்பிற்கான அதிக கூட்டு ஒத்துழைப்பிற்கும்" ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் உடன்பட்டதாக அவர் தெரிவித்தார்.

“ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளி எல்லைகள் மீதான கட்டுப்பாட்டை பாதுகாக்க" வேண்டியிருப்பதை பிரடிஸ்லாவாவில் இருந்து முக்கிய சேதியாக ஹோலாண்ட் வலியுறுத்தினார்.

ஐரோப்பிய கவுன்சில் வெளியிட்ட சிறிய "பிரடிஸ்லாவா பிரகடனத்தின்" முக்கிய குறிப்புகள், ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வேலை செய்து வரும் பிற்போக்குத்தனமான திட்டங்கள் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறது. “புலம்பெயர்வு மற்றும் வெளி எல்லைகள்" என்ற தலைப்பிலான பகுதி, ஐரோப்பிய கோட்டையைப் பலப்படுத்துவதற்கும், போரில் இருந்து தப்பி வரும் அகதிகளுக்கு தஞ்சம் வழங்கும் உரிமையை மறுக்கவும், மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்காவிலிருந்து வரும் பாரியளவிலான அகதிகளை திருப்பி அனுப்புவதற்கும் அழைப்புவிடுக்கிறது. "கடந்த ஆண்டு கட்டுப்பாடின்றி [அகதிகள்] பெருக்கெடுத்து உள்நுழைய அனுமதித்தைப் போல" ஐரோப்பிய ஒன்றியம் "மீண்டும் இனி ஒருபோதும் அவ்வாறு அனுமதிக்க கூடாது, புலம்பெயர்வோர் எண்ணிக்கையை விதிக்குப்புறம்பாக இன்னும் குறைக்க வேண்டும். நமது வெளி எல்லைகள் மீது முழுமையாக கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தி வைக்க வேண்டும்,” என்று அந்த ஆவணம் கோரியது.

செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் அமெரிக்க ஆளும் வர்க்கம் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்" என்ற மூடிமறைப்பில் நடைமுறைப்படுத்திய கொள்கைகளின் மாதிரியே, அது “உள்நாட்டு பாதுகாப்பிற்காக" ஓர் ஒருங்கிணைந்த ஐரோப்பிய ஒன்றிய பொலிஸ் அரசைக் கட்டமைக்க கருதுகிறது. "அங்கத்துவ நாடுகளது பாதுகாப்பு சேவைகளுக்கு இடையே தீவிர கூட்டு-ஒத்துழைப்பு மற்றும் தகவல் பரிமாற்றத்திற்கும்" மற்றும் "ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளின் குடிமக்கள் உட்பட ஒன்றியத்தின் வெளி எல்லையைக் கடந்து வரும் எல்லோரையும் பரிசோதிக்க தரவுத்தளங்களை ஒன்றோடொன்று இணைக்கும் அவசியமான நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும்" அது அழைப்பு விடுக்கிறது.

அதன் போட்டியாளர்களுக்கு எதிராக ஐரோப்பாவின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார நலன்களை இராணுவரீதியில் பாதுகாப்பதற்கு தயாரிப்பு செய்யவும் அது "திடமான நடவடிக்கைகளைக்" கோருகிறது. “ஒரு சவாலான புவிசார் அரசியல் சூழலில்" “ஐரோப்பிய கவுன்சில் பாதுகாப்பு மற்றும் இராணுவம் குறித்த திடமான நடைமுறை திட்டத்தை இந்த டிசம்பரில் முடிவெடுக்க [வேண்டும்],” என்று அந்த ஆவணம் அறிவிக்கிறது.

இது ஐரோப்பிய ஆணைக்குழு தலைவர் ஜோன் குளோட் ஜூங்கரின் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான புதன்கிழமை உரையில் எதிரொலிக்கிறது. “நமது அக்கம்பக்கத்தில் அபாயம் அதிகரிப்பதால் மென்மையான பலம் போதாது,” என்று தெரிவித்த அவர், ஐரோப்பா "இனியும்" அமெரிக்காவின் "இராணுவ பலத்தின் மீது சவாரி செய்து கொண்டிருக்க முடியாது" மற்றும் "நமது நலன்களைப் பாதுகாப்பற்கான பொறுப்புறுதியை எடுத்தாக" வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த முன்மொழிவுகள், பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரச்சாரத்தின் போது பிரிட்டிஷ் அரசியல் கட்சிகள் காட்டிய புலம்பெயர்வுக்கு-எதிரான பேரினவாதம் மற்றும் தேசியவாதத்திற்கு எதிராக நாகரீகப்படுத்தலை பிரதிநிதித்துவம் செய்வதற்கான மற்றும் சுதந்திரம், சமாதானத்திற்கான ஐரோப்பிய ஒன்றிய கூற்றுகளின் பொய்மையையும் பாசாங்குத்தனத்தையும் எடுத்துக்காட்டுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் ஒரு பிற்போக்குத்தனமான புலம்பெயர்வோர்-விரோத கொள்கையை பின்தொடர்ந்து தன்னைத்தானே இராணுவம் மற்றும் பொலிஸ் ஆட்சியாக மாற்ற முயலுகையில், சமாதானம் மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான ஒரே ஆதரவு தளத்தை ஆங்கில கால்வாய்க்கு (English Channel) இரண்டு புறமும் உள்ள தொழிலாள வர்க்கத்திடமே காண முடியும்.