ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Suicide bombing kills 51 at wedding in Turkey

துருக்கியில் திருமண நிகழ்ச்சியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 51 பேர் பலியாகினர்

By Alex Lantier
22 August 2016

சனிக்கிழமையன்று துருக்கியில் சிரியாவின் எல்லை அருகே இருக்கும் Gaziantep நகரத்தில் ஒரு குர்து திருமண நிகழ்ச்சியில் நடந்த ஒரு படுபயங்கரமான தற்கொலைப்படைத் தாக்குதலில் 51 பேர் இறந்தனர் 69 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் குறைந்தபட்சம் 17 பேர் படுகாயத்துடன் உயிருக்குப் போராடி வருகிறார்கள்.

இந்த நிகழ்வில் தனது அங்கத்தவர்களில் ஒருவருக்கு திருமணம் நடக்கவிருந்தது என்பதை குர்து-ஆதரவு மக்கள் ஜனநாயகக் கட்சி (HDP) ஊர்ஜிதம் செய்துள்ளது. திருமண விருந்து முடிவடைந்து விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறத் தொடங்கியிருந்த சமயத்தில் தான் 12 முதல் 14 வயதுடைய தோற்றம் கொண்ட அந்த தற்கொலைப்படை சிறுவன் தனது இடுப்பில் இருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்திருந்தான். “கொண்டாட்டங்கள் முடிந்து கொண்டிருந்த சமயத்தில் ஒரு மிகப்பெரும் வெடிப்புச் சத்தம் கேட்டது” என்று விருந்தினர்களில் ஒருவர் தெரிவித்தார். “எங்கெங்கிலும் இரத்தமும் உடல் பாகங்களும் சிதறிக் கிடந்தன.”

பலியானவர்களில் பலரும் சிறுவர்கள். ஏனென்றால் அவர்கள் விருந்தில் நடந்த நாட்டுப்புற நடன நிகழ்ச்சியின் ஒரே பக்கமாகத் திரண்டிருந்ததால், அவர்கள் அந்த வெடிப்புக்கு மிக அருகில் இருந்திருந்தனர்.”

மணமகள் Besna மற்றும் மணமகன் Nurettin Akdogan ஆகியோரும் காயமடைந்தனர். “அவர்கள் எங்கள் திருமணத்தை இரத்தக் களமாக்கி விட்டார்கள்” என்று மணமகள் மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர் துருக்கியின் Anadolu செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

துருக்கியில், துருக்கி இராணுவத்திற்கும் குர்து இனப் போராளிப் படைக்கும் இடையில் நடைபெறும் சண்டையில் இருந்து தப்பிக்கும் பொருட்டே இந்தத் தம்பதி Siirt நகரத்தில் இருந்து Gaziantep நகரத்திற்கு ஓடிவந்ததாகக் கூறப்படுகிறது. சிரியாவின் எல்லைப் பகுதிகளில் இருக்கின்ற குர்து போராளிப் படைகள், அந்நாட்டில் நடைபெறுகின்ற போரில் மிகப்பெரும் ஒரு பாத்திரத்தை ஆற்றத் தொடங்கியிருந்த காரணத்தால் குர்து பிரிவினைவாதிகளுக்கு எதிரான அரசாங்கத் தாக்குதல் தீவிரப்பட்டிருந்தது.

நேற்று Gaziantep குண்டுவெடிப்புத் தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒரு பாரிய இறுதி ஊர்வலத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆயினும் இவர்களில் பலரது உடல்களும் சிதறி விட்டிருந்ததால் பலியானவர்கள் அனைவரையும் அடையாளம் காண்பதற்கு மேலதிக டிஎன்ஏ சோதனை அவசியமாக இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில் பல அரசாங்கத் தலைவர்கள் இந்த குண்டுவெடிப்பைக் கண்டனம் செய்தனர். இது “அதிர்ச்சியூட்டும் விதத்தில் கொடூரமானதாகவும் வெறுப்புணர்வைக் கொண்டதாகவும்” இருந்ததாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறினார். பிரான்சின் ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்ட்“இழிபுகழ்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல்” என்று கூறி இதனைக் கண்டனம் செய்தார். ஜேர்மன் சான்சலரான அங்கேலா மேர்கெல் துருக்கிய பிரதமரான Binali Yıldırım க்கு அனுப்பியிருந்த கடிதத்தில், “மீண்டும், அப்பாவி ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் கோழைத்தனமானதும் நம்பிக்கைத்துரோகமானதுமான ஒரு வன்முறைக்குப் பலியாகியிருக்கின்றனர்” என்று வருந்தினார்.

இந்த குண்டுவீச்சு தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் மவுனம் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. சென்ற மாதத்தில் துருக்கிய ஜனாதிபதி ரெசிப் தையீப் எர்டோகனுக்கு எதிரான தோல்வியடைந்த இராணுவ சதிக்கு ஆதரவளித்ததாக அமெரிக்கா மீது எர்டோகன் பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்தது முதலாக அவருடனான ஒபாமாவின் உறவுகள் உருக்குலைந்து விட்டிருந்தன.

இந்தக் கட்டுரை எழுதப்படும் வரை Gaziantep குண்டுவெடிப்புக்கான பொறுப்பை எவரொருவரும் ஏற்றுக் கொண்டிருக்கவில்லை என்ற அதேநேரத்தில், சர்வதேச ஊடகங்களும் துருக்கியின் அதிகாரிகள் பலரும், தற்கொலைப் படையாக பயன்படுத்துவதற்கு சிறுவர்களை அமர்த்துவதாகக் கூறப்படுகின்ற ISIS இன் தான் இந்த அட்டூழியத்தை நிகழ்த்தியிருப்பதாகக் கூறினர்.

Gaziantep க்கு சென்று பார்த்த பின் எர்டோகன், “ஆரம்பகட்ட ஆதாரங்கள் இது ஒரு ISIS தாக்குதலாக இருக்கலாம் என்பதையே சூசகம் செய்கின்றன” என்று கூறினார். இது ஒரு “கொடூர” குற்றம் என்று அவர் அழைத்தார். தாக்குதல் நடத்தியவர்கள் “இன மற்றும் வகுப்புவாத உணர்வுகளை புண்படுத்தி மக்களைத் தூண்டிவிடுவதற்கு” நோக்கம் கொண்டிருப்பதாகக் கூறிய அவர், “நம் மீது தாக்குதல் நடத்துபவர்களுக்கு நமது நாடும் தேசமும் சொல்வதற்கு இருக்கும் ஒரே சேதி ’நீங்கள் வெற்றி பெறப்போவதில்லை’ என்பது தான்” என்று மேலும் சேர்த்துக் கொண்டார்.

அமெரிக்காவும் ஐரோப்பாவில் இருக்கக் கூடிய அதன் ஏகாதிபத்தியக் கூட்டாளிகளும் சிரியாவில் ஆட்சி-மாற்றத்திற்காக நடத்துகின்ற தமது பினாமிப் போரின் பகுதியாக இப்பிராந்தியத்தில் பல ஆண்டுகாலமாய் தூண்டி விட்ட இஸ்லாமிய பயங்கரவாத மற்றும் இனவாத இரத்தப்பாய்வின் விளைபொருளாகவே Gaziantep அட்டூழியச் சம்பவம் இருக்கிறது. 2011 முதலாக, நேட்டோ சக்திகளும் அவற்றின் மத்திய கிழக்குக் கூட்டாளிகளும் பில்லியன் கணக்கான டாலர்களையும் பெருமளவான ஆயுதங்களையும் சிரியாவில் போரிடுகின்ற இஸ்லாமிய மற்றும் குர்து தேசியவாதப் போராளிப் படைகளுக்குள் பாய்ச்சியுள்ளன. நூறாயிரக்கணக்கான சிரியர்கள் உயிரிழந்துள்ளனர், 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு ஓடி இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய மிகப்பெரிய உலகளாவிய அகதிகள் நெருக்கடியும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.

ஏகாதிபத்தியக் கொள்கையின் நெளிவுசுளிவுகளுக்குத் தக்கபடி பின்பற்றிச் செல்ல - அதிலும் குறிப்பாக 2014 இல் ISIS ஈராக்கிற்குள் ஊடுருவி அங்கிருந்த அமெரிக்க ஆதரவு கைப்பாவை ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு அச்சுறுத்திய பின், அதன் மீது அமெரிக்காவும் அதன் ஐரோப்பியக் கூட்டாளிகளும் தாக்குதல் நடத்தத் தொடங்கியதன் பின்னர் - எர்டோகன் செய்த முயற்சிகள் துருக்கிக்கு அழிவுகரமான பின்விளைவுகளையே கொண்டுவந்திருந்தது. ISIS துருக்கியில் ஒரு விரிவான தளவாட வலைப்பின்னலை உருவாக்கி வைத்திருந்தது என்பதோடு, சென்ற ஆண்டு முதலாக அது, துருக்கிக்குள்ளாக பயங்கரவாதக் குண்டுவெடிப்புகளின் ஒரு வரிசையைக் கொண்டும் பதில்தாக்குதல் நடத்தியது.

அங்காராவில் 2015 அக்டோபரில் நடந்த தாக்குதலில் 105 பேர் கொல்லப்பட்டது, 2016 மார்ச்சில் இஸ்தான்புல்லில் Istiqlal Avenue வில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு ஆகியவையும் இதில் அடங்கும், இவை இரண்டுமே Gaziantep இல் இருந்த ISIS படைகளால் திட்டமிடப்பட்டவையாக இருந்தன.

சமீபத்திய தாக்குதலானது, எர்டோகன் அரசாங்கத்திற்கும் ISISக்கும் இடையிலான மோதலைத் தீவிரப்படுத்துகின்ற வகையில் சிரியப் போரில் படைகளின் அணிவகுப்பில் ஏற்பட்டிருக்கக் கூடிய ஒரு மிகப் பரந்த மாற்றத்திற்கான பதிலடியாக இருக்கிறது. சென்ற ஆண்டிலான ரஷ்ய இராணுவத்தின் தலையீடு சிரிய ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்திற்கு ஆதரவான ஒரு போரின் மட்டங்களைத் தொட்டதில் இருந்தே, துருக்கிய அரசாங்கமானது தனது கொள்கையை தொடர்ந்து மாற்றி வந்திருக்கிறது. துருக்கி சென்ற இலையுதிர் காலத்தில் சிரியா மீதான ஒரு ரஷ்ய குண்டுவீச்சு விமானத்தை பொறுப்பற்ற வகையில் சுட்டுவீழ்த்தியதன் பின்னர் தனிமைப்பட நேர்ந்ததைக் கண்டதுடன், சிரியாவில் அமெரிக்க-ஆதரவுப் படைகள் தோற்கடிக்கப்படும் சாத்தியத்திற்கும் முகம்கொடுத்த நிலையில், அது ரஷ்யா மற்றும் அசாத்தின் ஆட்சியை நோக்கி தனது கொள்கையை நோக்குநிலை மாற்றியமைத்துக் கொண்டது.

சிரியா மற்றும் ஈராக் மீதான அமெரிக்கா மற்றும் நேட்டோவின் வான் தாக்குதல்களுக்கான ஒரு இன்றியமையாத மேடையாக இருக்கும் துருக்கியின் Incirlik வான் தளத்தில் இருந்து செயல்படுகின்ற துருக்கி அதிகாரிகள் எர்டோகனுக்கு எதிரான ஒரு சதிநடவடிக்கை தயாரிப்பில் இறங்கியிருப்பதாக சென்ற மாதத்தில் எர்டோகனை ரஷ்யா எச்சரித்ததன் பின்னர் இந்த மறுநோக்குநிலை மேலும் வேகமடைந்தது.

துருக்கி, சிரியா, ரஷ்யா மற்றும் இப்போது சீனா - அசாத் ஆட்சிக்கான தனது உதவியை விரிவுபடுத்தத் தொடங்க இது சென்ற வாரத்தில் வாக்குறுதியளித்தது - இடையிலான உறவுகள் அபிவிருத்தியடைவதில் அமெரிக்கா மற்றும் ISIS இரண்டுமே பெரும் கோபாவேசம் கொண்டுள்ளன.

சனிக்கிழமையன்று Gaziantep குண்டுவெடிப்புக்கு சற்று முன்னதாக, துருக்கியின் பிரதமரான Binali Yıldırım, ISIS மீது குண்டுவீசுவதற்கு Incirlik விமானத் தளத்தை ரஷ்யா பயன்படுத்த அனுமதிக்கும் ஒரு முன்கண்டிராத நடவடிக்கையை எடுப்பதற்கு தனது அரசாங்கம் பரிசீலித்துக் கொண்டிருப்பதை தெளிவாக்கி விட்டிருந்தார். இந்த விமானத் தளம் வரலாற்றுரீதியாக ரஷ்யாவுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பயன்படுத்த அனுமதிக்கப்பட்டிருந்த இடமாகும். “Incirlik இல் இருக்கும் நேட்டோ தளத்தை நமது பிரதான வான் தளமாகப் பயன்படுத்துவதற்கு எர்டோகனுடன் ஒரு உடன்பாட்டை” ரஷ்யா மேற்கொள்ள வேண்டும் என்று ரஷ்யாவின் மேலவையின் ஒரு உறுப்பினரான இகோர் மோரோஸோவ் அழைப்பு விடுத்தது முதலாகவே வலம்வருகின்ற ஊகங்களை Yıldırım இன் கருத்துகள் ஊர்ஜிதப்படுத்தின.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் Yıldırım தெரிவித்தார்: “ISIS பயங்கரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக துருக்கி Incirlik வான்தளத்தைத் திறந்தது. இது அமெரிக்கா மற்றும் கட்டார் ஆகிய நாடுகளால் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இப்போது ஜேர்மானியர்களும் கூட பயன்படுத்திக் கொண்டிருக்கும் இந்தத் தளத்தை மற்ற நாடுகளும் கூட பயன்படுத்துவதற்கு விரும்பலாம்.” ரஷ்யாவும் கூட Incirlik வான் தளத்தைப் பயன்படுத்த முடியுமா என்று குறிப்பிட்டுக் கேட்டபோது, “அவசியமானால், Incirlik வான் தளத்தைப் பயன்படுத்த முடியும்” என்று Yıldırım பதிலளித்தார்.

துருக்கியை நேட்டோ கூட்டணியில் இருந்து பிரிப்பதுடன் யூரோஆசியாவில் அமெரிக்காவுக்கு எதிராக முக்கிய சக்திகளின் ஒரு பரந்த மறுஒழுங்கமைப்பு உருவாகவும் அச்சுறுத்துகின்ற இந்த நகர்வுகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் செய்வதறியாமல் திகைக்கின்றனர். அதற்குப் பதிலிறுப்பாக ஒரு உலகப் போரை தூண்டும் அபாயத்துடன், ரஷ்ய மற்றும் சிரிய அரசாங்கப் படைகளுக்கு எதிரான பொறுப்பற்ற இராணுவ நடவடிக்கை மிரட்டல்களை அவர்கள் அதிகரித்துச் செல்கின்றனர்.

சென்ற வாரத்தில், அசாத்தின் விமானப் படை, குர்து போராளிகள் மீது - இவர்களுடன் சிரியாவுக்குள் சட்டத்திற்குப் புறம்பாக இயங்குகின்ற “உடனிணைந்த” அமெரிக்க சிறப்புப் படைகளும் இருக்கின்றன - குண்டுவீசியதற்குப் பின்னர், பென்டகனின் செய்தித்தொடர்பாளர் எச்சரிக்கை விடுக்கையில், தனது துருப்புகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கக் கூடிய எவரொருவர் மீதும் தாக்குதல் நடத்த, அமெரிக்கா தயாரிப்புடன் இருப்பதாகக் கூறி, ரஷ்யா, ஈரான் அல்லது சிரியப் படைகளுடனான ஒரு நேரடி மோதலை கண்முன் நிறுத்திக் காட்டினார்.

சனிக்கிழமையன்று, ஈராக் மற்றும் சிரியாவிலான அமெரிக்கப் படைகளின் தளபதி, லெப்டினன் ஸ்டீபன் டவுன்செண்ட், சிரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் எதிராய் இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு கூடுதல் உத்தியோகபூர்வமான அச்சுறுத்தல் ஒன்றை விடுத்தார். அவர் CNN இடம் தெரிவித்தார், “நாங்கள் எங்கே நிற்கிறோம் என்பதை ரஷ்யர்களுக்கு நாங்கள் தெரிவித்தாகி விட்டது... அவர்கள் சிரியர்களிடம் தெரிவித்து விட்டதாக கூறுகிறார்கள், அச்சுறுத்தப்படுவதாக நாங்கள் உணர்வோமேயானால் எங்களை நாங்கள் பாதுகாத்துக் கொள்வோம் என்பதை மட்டுமே என்னால் சொல்ல முடியும்.”

“சிரியாவினர் இதை மீண்டும் முயற்சித்தால், அவர்கள் ஒரு விமானத்தை இழக்கும் பெரும் ஆபத்தை எதிர்கொள்வார்கள்” என்று பெயர் கூற விரும்பாத அமெரிக்காவின் மூத்த இராணுவ அதிகாரி ஒருவர் CNN இடம் தெரிவித்தார்.

சூழ்நிலையானது ஒருபுறம் அமெரிக்கப் படைகளுக்கும் மறுபுறத்தில் ரஷ்ய மற்றும் சிரியப் படைகளுக்கும் இடையிலான “நேரடி மோதலின் சாத்தியத்தை அதிகப்படுத்தியிருப்பதாக” CNN வருணனையாளர்கள் மேலும் கூறினர்.