ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Sarkozy launches French presidential bid based on anti-Muslim hysteria

முஸ்லீம்-விரோத வெறுப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு சார்க்கோசி பிரெஞ்சு ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இறங்குகிறார்

By Kumaran Ira
29 August 2016

சென்ற வியாழக்கிழமை அன்று, குடியரசுக் கட்சியை (LR) சேர்ந்த முன்னாள் வலது-சாரி ஜனாதிபதியான நிக்கோலோ சார்க்கோசி, முஸ்லீம்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான முன்கண்டிராத தாக்குதல்களுடன், அடுத்த ஆண்டில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலுக்கு நவம்பரில் நடைபெறவிருக்கின்ற LR இன் முதனிலைத் தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதை அறிவித்தார். சார்க்கோசி 2007 முதல் 2012 வரையான காலத்தில் ஜனாதிபதி பதவியில் இருந்திருந்தார், 2012 இல் மீண்டும் போட்டியிட்டு நடப்பு ஜனாதிபதியான பிரான்சுவா ஹாலண்டிடம் தோற்றார்.

பிரான்ஸ் இன்னும் கூட ஒரு அவசரகாலநிலையின் கீழ் இருக்கின்ற நிலையில், சார்க்கோசி சந்தேகத்திற்கிடமில்லாத அரசியல் பண்பு கொண்ட ஆலோசனைகளை முன்வைத்தார்: அவை முஸ்லீம்களை அடிப்படை சமூக மற்றும் ஜனநாயக உரிமைகள் அற்ற இரண்டாம் நிலைக் குடிமக்களாய் ஆக்கிவிடும். இஸ்லாமிய பெண்கள் தமது மத சுதந்திரத்தை வெளிக்காட்டுவதற்குக் கொண்டுள்ள உரிமையை நசுக்குவதற்கும், வேலையிடங்களிலும் மற்றும் பல்கலைக்கழகங்களிலும் முக்காடு மற்றும் பர்தாவிற்கு தடை செய்யும் திட்டங்களின் மூலமாக அவர்கள் விரும்பியபடி உடையணிய இயலும் ஜனநாயக உரிமையை நசுக்குவதற்கும் அவர் அழைப்புவிடுத்தார். இதன் அர்த்தம் என்னவென்றால் இஸ்லாமியப் பெண்களுக்கு முன்னால் அவர்கள் சகிக்கவொண்ணாத ஒரு தெரிவு தான் இருக்கும்: ஒன்று அவர்கள் தங்கள் மதத்தைக் கைவிட வேண்டும், இல்லையேல் வேலைசெய்வதற்கும் கல்வி பெறுவதற்குமான உரிமையைக் கைவிட வேண்டும்.

இந்த விண்ணப்பத்தை, சென்ற பிராந்தியத் தேர்தல்களில் நவ-பாசிச தேசிய முன்னணி கணிசமான தேர்தல் வெற்றிகளைப் பெற்ற தெற்கு பிரான்சிலுள்ள Châteaurenard நகரத்தில் இருந்து விடுப்பதற்கு சார்க்கோசி தெரிவு செய்திருந்தார்.

சார்க்கோசியின் கருத்துகளில் பலவும், சென்ற வாரத்தில் வெளிவந்த அவரது அத்தனையும் பிரான்சுக்காக (Everything for France) என்ற புதிய புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டவையாகும். அப்புத்தகத்தில் அவர் தனது வேட்புமுடிவை அறிவிப்பதோடு, புலம்பெயர்ந்து பிரான்சில் வாழ்பவர்களின் வெளிநாட்டில் உள்ள குடும்பத்தினர், பிரான்சில் குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்கான உரிமையை நிறுத்திவைப்பதற்கும், குடியேறுவோர் எண்ணிக்கையைக் கணிசமாய்க் குறைப்பதற்கும், பிரெஞ்சுக் குடியுரிமை பெறுவதற்கு மிகக் கடுமையான நிபந்தனைகளைத் திணிப்பதற்கும், அத்துடன் குடியேற்ற மக்களுக்கு அரசின் மருத்துவ உதவியை இல்லாமல் செய்வதற்கும் அழைப்பு விடுக்கிறார்.

Châteaurenard இல் பேசிய சார்க்கோசி, “பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், பொதுச் சேவைகள் மற்றும் வேலையிடங்கள்” உள்ளிட்ட இடங்களில் பர்தா அணிவதற்கு தடைவிதிக்க அழைப்பு விடுத்தார். இத்தகைய பழக்கவழக்கங்கள் பிரான்சின் அடையாளத்திற்கு அச்சுறுத்தலாய் இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், கூச்சமின்றி அறிவித்தார்: “எங்களது அடையாளமாக ஒருபோதும் இருக்கப் போகாத ஒரு வாழ்க்கைமுறையை எங்கள் மீது திணிப்பதற்கு சிறுபான்மையினரை நாம் அனுமதித்தால், நமது அடையாளம் அச்சுறுத்தலுக்கு ஆளாகிறது.” அவர் மேலும் கூறினார், “குடியரசின் ஒவ்வொரு சதுர செண்டிமீட்டரின் மீதும் அரசின் அதிகாரத்தை மீண்டும் நிறுவுகின்ற ஒரு ஜனாதிபதியாக நான் இருக்க விரும்புகிறேன்.”

அரசின் முன்னாள் தலைவர் ஒருவரிடம் இருந்தான இத்தகைய கருத்துகள் பிரெஞ்சு முதலாளித்துவ ஜனநாயகம் திகைக்க வைக்கும் அளவுக்கு சிதைந்து கிடப்பதற்கு சாட்சியமளிக்கிறது. முதலாளித்துவ அமைப்புமுறையின் அதிகரித்துச் செல்லும் பொருளாதார மற்றும் இராணுவ நெருக்கடிக்கு மத்தியில், முஸ்லீம்-விரோத மனோநிலைக்கான விண்ணப்பங்களைக் கொண்டு தொழிலாள வர்க்கத்தை இனரீதியாக பிளவுபடுத்துகின்ற பிரெஞ்சு ஆளும் வர்க்கத்தின் பல தசாப்தகால மூலோபாயமானது பரந்த புதிய பரிமாணங்களை எடுத்துக் கொண்டிருக்கிறது என்பது மேலும் மேலும் தெளிவாகி வருகிறது.

பெரும்பாலும் பிரான்சில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் மிகவும் ஒடுக்கப்பட்ட பிரிவுகளில் இருந்து வரக் கூடிய இன சிறுபான்மையினரைக் கொண்ட மில்லியன் கணக்கான மக்களைக் கொண்ட ஒரு ஒட்டுமொத்த மத சமூகமும் கிட்டத்தட்ட தேசதுரோகத்திற்கு நிகராய் குற்றம் சாட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது. பிரான்சில் மில்லியன் கணக்கான மக்கள் பகிர்ந்து கொள்கின்ற ஒரு மதத்தை அமைதியாக பின்பற்றும் ஒரு சாதாரண நடவடிக்கை கூட, அரசின் அதிகாரத்தை மீறுவதாகவும், பிரெஞ்சு இனத்தின் அடையாளத்திற்கு நம்பிக்கைதுரோகம் இழைத்ததாகவும் கருதப்படும் என்பதே, சார்க்கோசியின் கருத்துகள் கொண்டுவரக்கூடிய தாக்கம் ஆகும். 

இனவாதக் கொள்கைகளின் மறுஎழுச்சியானது, அதிகரித்துச் செல்லும் வர்க்கப் பதட்டங்களுக்கு மத்தியில் ஐரோப்பாவில் முதலாளித்துவ ஆட்சி ஆழ்ந்த நெருக்கடிக்குள் சென்றிருப்பதையே அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ஐரோப்பாவெங்கிலும் நவ-பாசிச இயக்கங்களின் வளர்ச்சியால் —பிரான்சில் தேசிய முன்னணி முதல் உக்ரேனில் நேட்டோவின் கைப்பாவை ஆட்சியில் அதி-வலது ஸ்வோபோடா கட்சி வரை, அல்லது ஏதென்ஸில் சிரிசா அரசாங்கத்தில் அதி-வலது சுதந்திர கிரேக்கர் கட்சி சேர்க்கப்பட்டுள்ளது வரை— தெளிவாக்கப்பட்டிருப்பதைப் போல, ஐரோப்பிய முதலாளித்துவமானது பாசிச ஆட்சி முறைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

வேலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் இருந்து முஸ்லீம் பெண்களைத் தடை செய்யும் சார்க்கோசியின் முன்மொழிவுகள் இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் நாஜி-ஒத்துழைப்புவாத விச்சி ஆட்சியின் ஆரம்பகட்ட யூத-விரோத சட்டங்கள் பலவற்றையும் நினைவுக்குக் கொண்டுவருகின்றன. அச்சமயத்தில் விச்சி ஆட்சி, யூதர்களை மருத்துவம் மற்றும் அரசு வேலைகள் உள்ளிட்ட முக்கிய வேலைகளில் இருந்து தடை செய்ததுடன், பல்கலைக்கழக பதவிகளிலும் அவர்களது அணுகலை மட்டுப்படுத்தியது. விச்சி இறுதியாக யூதர்களிடம் இருந்து பிரெஞ்சு குடியுரிமையை பறிப்பதற்கும் பிரான்சில் இருந்து யூதர்களை வெளியேற்றி ஐரோப்பாவெங்கிலும் இருந்த மரணவதை முகாம்களுக்கு பாரிய அளவில் அனுப்பி வைப்பதற்கும் இது வழியமைத்து கொடுத்தது.

அப்போதும் இப்போது போலவே, அரசு ஒட்டுமொத்த இன மற்றும் மதக் குழுக்களை துன்புறுத்துவதற்கு இலக்கு வைத்தமையானது அதிகரித்துச் சென்ற வர்க்கப் பதட்டங்களுடனும் ஒரு உலகளாவிய மட்டத்தில் ஏகாதிபத்தியப் போரின் வெடிப்புடனும் பிணைந்ததாய் இருந்தது.

உழைக்கும் மக்களுக்கான அடிப்படையான சமூகப் பாதுகாப்புகளை இல்லாதொழிக்கும் PS இன் பிற்போக்குத்தனமான தொழிலாளர் சட்டத்திற்கு தொழிலாள வர்க்கத்தில் எழுந்த வெடிப்பான எதிர்ப்பிற்கும், அத்துடன் இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கண்டிராத ஒரு உலகப் போரின் அபாயத்திற்கும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கம் முகம்கொடுக்கின்ற நிலையில் தான், சார்க்கோசியின் Châteaurenard பேச்சு அமைந்திருக்கிறது. மத்திய கிழக்கில் சிரியாவுக்கு எதிராகவும் ஐரோப்பாவில் ரஷ்யாவுக்கு எதிராகவும் நேட்டோ முன்னெடுத்து வருகின்ற போர்த் தயாரிப்புகளிலும், அத்துடன் சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் “ஆசியாவை நோக்கிய முன்னிலை”யிலும்  பிரான்ஸ் ஆழமாய் தன்னை பிணைத்துக் கொண்டுள்ளது.

இந்த உள்ளடக்கத்தில், வேலைவாய்ப்பற்று அல்லது முழு-நேர கல்வியில் இருக்கும் 18 வயது நிறைந்த இளைஞர்களுக்கு கட்டாய இராணுவ சேவையை அறிமுகம் செய்வதற்கு சார்க்கோசி Châteaurenard இல் சூளுரைத்தார். பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதில் ஹாலண்ட் தோல்வியடைந்ததாகக் குற்றம்சாட்டிய சார்க்கோசி பயங்கரவாதத்திற்கு எதிரான போரை தான் தீவிரப்படுத்தவிருப்பதாக அறிவித்தார்: “பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு முகம்கொடுக்கின்ற நேரத்தில், பிரெஞ்சு மக்கள் தாங்கள் பாதுகாப்புடன் இருப்பதாக உணர வேண்டுமே அல்லாமல் ஆட்சி செய்ய வேண்டியவர்கள் ஏன் பலவீனமாய் எதிர்வினையாற்றுகிறார்கள் என்று தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ளும் நிலை இருக்கக் கூடாது என நான் விரும்புகிறேன்.”

உண்மையில் பார்த்தால், பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் நடந்த வரிசையான பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு PS பலவீனமாய் எதிர்வினையாற்றியது என்றால், அதற்குக் காரணம், அந்தத் தாக்குதல்கள் மத்திய கிழக்கில் நேட்டோவின் போர்களில் பங்குபெற்றவர்களாகவும், பிரெஞ்சு மற்றும் நேட்டோ வெளியுறவுக் கொள்கையின் கருவிகளாக உத்தியோகபூர்வமற்ற பாதுகாப்பை தொடர்ந்து அனுபவித்து வருபவர்களாகவும் இருக்கின்ற இஸ்லாமியவாதிகளால் நடத்தப்பட்டவை என்பதால் தான்.

இந்த நிலைமைக்கு சார்க்கோசியும் கூட கணிசமான அரசியல் பொறுப்புடையவரே ஆவார். அவரது ஜனாதிபதி பதவிக் காலத்தின் கீழ் தான் 2011 இல் லிபியாவில் கேர்னல் மும்மார் கடாபியின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கு - இஸ்லாமிய பினாமிப் போராளிகளுக்கு ஆயுதங்களும் நிதியும் அளித்த - ஒரு நேட்டோவின் போருக்கு அழுத்தமளிப்பதில் பிரான்ஸ் ஒரு முக்கிய பாத்திரத்தை ஆற்றியது. இதே மூலோபாயத்தையே தொடர்ந்த ஹாலண்ட், சிரியாவில் ஒரு போரைத் தூண்டியதோடு, ஜனாதிபதி பஷார் அல்-ஆசாத்தின் சிரிய ஆட்சிக்கு எதிராய் அல்-கெய்தாவுடன் தொடர்புடைய இஸ்லாமியப் போராளிப் படைகளுக்கு ஆதரவளித்தார்.

பிரான்சின் வரலாற்றில் மக்களிடையே பெரும் அவப்பெயர் சம்பாதித்த ஜனாதிபதிகளில் ஒருவராய் இருந்திருந்த சார்க்கோசி, மீண்டும் ஜனாதிபதி பதவிக்கான போட்டியில் இறங்க முடிகிறது என்றால், அதற்கு அனைத்துக்கும் முதல் PS அரசாங்கத்தின் மற்றும் அதன் போலி-இடது கூட்டாளிகளின் அழுக்கடைந்த பாத்திரமே காரணமாகும். அவர்களின் கொள்கைகள், சிக்கன நடவடிக்கை, போர் மற்றும் சட்டம்-ஒழுங்கு வெறிக்கூச்சல்கள் பிரெஞ்சு அரசியலின் ஒரு முக்கியமான அம்சமாக, இன மற்றும் மத பேதங்கள் மீண்டும் எழுவதற்கான பாதையை அமைத்துத் தந்திருந்தது.

சென்ற ஆண்டில் சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல் மற்றும் பாரிஸில் நவம்பர் 13 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர் —இவை இரண்டுமே ஐரோப்பிய உளவு அமைப்புகளுக்கு நன்கு அறியப்பட்டிருந்த இஸ்லாமியவாதிகளால் நடத்தப்பட்டவையாக இருந்தன— பயங்கரவாதத்திற்கு எதிரான “தேசிய ஒற்றுமை”யை ஸ்தாபிப்பதற்கு FN தலைவரான மரின் லு பென்னை, ஹாலண்ட் தொடர்ந்து எலிஸே ஜனாதிபதி மாளிகைக்கு அழைத்துக் கொண்டிருந்தார்.

இந்த பயங்கரவாதத் தாக்குதல்களை சாக்காகப் பிடித்துக் கொண்டு FN ஐ அங்கீகரித்த ஹாலண்ட், அதேசமயத்தில் பிரான்சில் ஒரு நிரந்தர அவசரகாலநிலையையும் திணித்தார். PS, அடிப்படை ஜனநாயக உரிமைகளை ஒழிக்கும் ஒரு அவசரகாலநிலையைத் திணித்ததோடு, குடியுரிமை பறிப்புக் கோட்பாட்டை பிரெஞ்சு அரசியல்சட்டத்தில் சேர்ப்பதற்கும் ஆலோசனை முன்வைத்தது.

சார்க்கோசியின் பேச்சுக்குப் பின்னர், பிரதமர் மானுவல் வால்ஸ் அவரது ஒரு எதிரி போலக் காட்டிக் கொண்டார். “அவரது முன்மொழிவுகளின் மிருகத்தனத்தை” அவர் கண்டனம் செய்தார். வால்ஸ் மேலும் கூறினார்: “அவர் அதி வலதைப் பின்பற்றுகிறார், ஜனநாயக வலதையும் அதன் முகாமுக்குள் அவர் கொண்டுவருகிறார், அத்துடன் முதனிலைத் தேர்தலில் அலென் ஜூப்பே உள்ளிட்ட மற்ற வேட்பாளர்களையும் அவர் இதே திசையில், இதே பாதையில் இழுக்கிறார், அது எனக்கு கவலையளிக்கிறது.”

வால்ஸின் கருத்துகள் பாசாங்குத்தனமாக இருக்கின்றன, ஏனென்றால் அவரேயும் ஜனநாயக-விரோதக் கொள்கைகளின் மற்றும் முஸ்லீம்-விரோத மனோநிலையைத் தூண்டுவதின் —முக்காடுக்கு தடை கோரிய அழைப்புகளை ஆதரித்ததன் மூலம்— பக்கம் நிற்பவராவார். வசந்த காலத்தின் சமயத்தில் மற்றும் கோடையின் ஆரம்பகாலத்தின் போது PS இன் தொழிலாளர் சட்டத்திற்கு எதிரான சமூகப் போராட்டங்களை ஒடுக்குவதிலும் அவர் மையமான பாத்திரத்தை வகித்திருந்தார்.

மிகப் பரந்த வகையில், ஒரு தசாப்தத்திற்கும் அதிகமானதொரு காலத்தில் முஸ்லீம்-விரோத மனோநிலையைத் தூண்டிவிடுவதில் ஒட்டுமொத்த பிரெஞ்சு அரசியல் ஸ்தாபகமும் சம்பந்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஜாக் சிராக்கின் வலது-சாரி அரசாங்கம் 2004 இல் அரசுப் பள்ளிகளில் முக்காடு அணிவதற்கான ஒரு தடையைத் திணித்தது, அதனைத் தொடர்ந்து சார்க்கோசி மற்றும் ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சியின் மூலமாக 2010 இல் பர்தாவுக்கான ஒரு தடை அறிமுகமானது.

தொழிலாளர் போராட்டம் (LO) மற்றும் புதிய முதலாளித்துவ-எதிர்ப்புக் கட்சி (NPA) ஆகியவை உள்ளிட்ட போலி-இடது குழுக்கள், முக்காடு மற்றும் பர்தாவுக்கான தடையை ஆதரித்தன. பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதை நோக்கமாய்க் கொண்ட ஒரு “மதச்சார்பற்ற” நடவடிக்கை என்று அவை இதனை மோசடியாக சித்தரித்தன. முஸ்லீம்-விரோத வெறுப்புகளை ஆதரித்த அதேவேளையில், லிபியா மற்றும் சிரியா உள்ளிட்ட இடங்களில் “மனிதாபிமான” அடிப்படையில் தொடுக்கப்பட்ட ஏகாதிபத்திய போர்களையும் அவை ஆதரித்தன. முன்கண்டிராத அளவுக்கான மத பேத நடவடிக்கைகளுக்கு அழைப்பு விடுக்கின்ற ஒரு அதி-வலது பிரச்சாரத்தை சார்க்கோசி நடத்த இயலுகின்ற நிலைமைகளை உருவாக்கியதற்கான அரசியல் பொறுப்பு அவற்றுக்குரியதாகும்.