ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

US-South Korean war games inflame Asian tensions

அமெரிக்க-தென் கொரிய போர் பயிற்சிகள் ஆசியாவில் பதட்டங்களைத் தூண்டுகின்றன

By Peter Symonds
23 August 2016

ஆசியா எங்கிலும் அமெரிக்க இராணுவம் எரியூட்டிய பதட்டங்கள் அப்பிராந்தியத்தில் அதிகரித்து வருவதற்கு இடையே, வருடாந்தர அமெரிக்க-தென் கொரிய இராணுவக் கூட்டு பயிற்சிகளான Ulchi Freedom Guardian (UFG) என்ப்படுவது  நேற்று தொடங்கியது. வாஷிங்டன் சீனாவுடன் மோதலுக்கான தயாரிப்புகளைச் செய்து வருகின்ற நிலையில், இது பெயரளவிற்கு வட கொரியாவிற்கு எதிரானது என்றாலும், இந்த போர் பயிற்சிகளில் வாஷிங்டனின் இராணுவ கூட்டாளியான சியோலும் ஒருங்கிணைந்துள்ளது.

இந்த இராணுவ பயிற்சிகளில் சுமார் 25,000 அமெரிக்க இராணுவ சிப்பாய்களும் உள்ளடங்குவர், அவர்களில் 2,500 பேர் தென் கொரியாவிற்கு வெளியே இருந்து வந்து, 75,000 தென் கொரிய துருப்புகளுடன் இணைந்து நடவடிக்கையில் ஈடுபடுவார்கள். அமெரிக்கா தென் கொரியாவில் 28,500 துருப்புகளை நிரந்தரமாக நிறுத்தியுள்ளது மற்றும் ஆசிய பசிபிக்கில் அமெரிக்க இராணுவ படைகளது அதன் பரந்த மறுஒழுங்கமைப்பின் பாகமாக அந்நாட்டில் அதன் தளங்களைத் தற்போது மறுகட்டுமானம் செய்து வருகிறது.

“அவர்கள் ஆக்ரோஷமான ஒரு சிறிய சமிக்ஞை காட்டினாலும்" தென் கொரியா மற்றும் அமெரிக்கா மீது அணுஆயுத தாக்குதல்களை நடத்துவதற்கான இராணுவ அச்சுறுத்தல்களுடன் வட கொரியா விடையிறுப்பு காட்டியுள்ளது. இத்தகைய பொறுப்பற்ற மற்றும் ஆத்திரமான அச்சுறுத்தல்களுக்கும் வட கொரிய மக்களைப் பாதுகாப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்ற நிலையில், அவை, அப்பிராந்தியத்தில் வாஷிங்டன் அதன் சொந்த இராணுவத்தை விரிவாக்குவதற்கும் மற்றும் ஆத்திரமூட்டுவதற்கும் ஒரு போலிச்சாட்டை வழங்கி நேரடியாக வாஷிங்டனுக்கு சாதகமாக அமைகின்றன.  

அந்த UFG ஒத்திகைகள் "ஆத்திரமூட்டும் நோக்கமற்றவை" என்று வட கொரிய இராணுவத்திடம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க தலைமையிலான ஐ.நா. கட்டளையக இராணுவ போர் தடுப்பு குழு அறிவித்தது. இந்த கூட்டு போர் சாகசங்களை தற்காப்புக்கானது என்றும் அபாயமற்றவை என்றும் சித்தரிக்கும் இந்த முயற்சி பொய்யாகும். குறிப்பாக கடந்த ஐந்தாண்டுகளில் ஒபாமா நிர்வாகம் வட கிழக்கு ஆசியாவில் அச்சுறுத்தும் வகையில் படைபலத்தைக் காட்டுவதற்கு மீண்டும் மீண்டும் தென் கொரியா உடனான ஒத்திகைகளைச் பயன்படுத்திக் கொண்டுள்ளது.   

கடந்த நவம்பரில் அமெரிக்காவும் தென் கொரியாவும் உத்தியோகபூர்வமாக Operational Plans 5015 (OPLAN 5015) என்ற ஒரு புதிய இராணுவ செயல்திட்டத்தைக் கையாண்டன, அது வெளிப்படையாகவே அத்துமீறும் குணாம்சத்தைக் கொண்டிருந்தது. வட கொரியா உடனான ஒரு மோதலில், அணுஆயுத படைத்தளங்கள் உட்பட முக்கிய இலக்குகள் மீது அமெரிக்க மற்றும் தென் கொரிய படைகள் முன்கூட்டியே தாக்குதல்களை நடத்தும் நடவடிக்கைகளையும் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜொங்-உன் உட்பட உயர்மட்ட அதிகாரிகளைப் படுகொலை செய்வதற்கான "இல்லாதொழிக்கும்" நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்.  

UFG போர் சாகசங்களுக்கான கட்டுமானத்தை மட்டும் OPLAN 5015 வழங்கவில்லை, மாறாக சுமார் 60 இராணுவ விமானங்கள் மற்றும் 530 துருப்புகள் பங்குபற்றும் தென் கொரிய விமானப்படை தற்போது நடத்தி வரும் Soaring Eagle ஒத்திகைகளுக்கும் கட்டமைப்பை வழங்குகிறது. Korea Times பத்திரிகை செய்தியின்படி, "ஏவுகணைகள் மற்றும் அவை வரும் பாதையை ஆத்திரமூட்டும் விதத்தில் முடக்குவதன் மூலமாக வட கொரியாவின் தொலைதூர ஏவுகணை அச்சுறுத்தல்களை முன்கூட்டியே தடுக்க" விமானப்படை பயிற்சி மேற்கொண்டு வருகிறது.    

UFG ஒத்திகைகளின் போதும் மற்றும் அதற்குப் பின்னரும் "பியொங்யாங் இராணுவ ஆத்திரமூட்டல்களை நடத்துவதற்கான வாய்ப்புகள் மீது" தென் கொரிய அதிகாரிகள் "கவனம் செலுத்தி வருவதாகவும்" Korea Times குறிப்பிட்டது. யதார்த்தத்தில் வட கொரியா உடனான ஒரு போரை அனுமானமாக கொண்ட இத்தகைய மிகப்பெரும் ஒத்திகைகள், எப்போதுமே கொரிய தீபகற்பத்தில் பதட்டங்களை அதிகரித்துள்ளன. கடந்த ஆண்டு பயிற்சிகளின் போது, அமெரிக்கா மேற்கு பசிபிக்கில் உள்ள அதன் குவாம் தளத்தில் அணுஆயுதம் தாங்கிய கண்டறியவியலா B-2 குண்டுவீசிகளை நிலைநிறுத்துவதற்கு அந்த சூழலைச் சாதகமாக்கிக் கொண்டது.

பியொங்யாங்கில் ஸ்திரமின்மைக்கான அறிகுறிகள் அதிகரித்து வருவதால் குறிப்பாக இப்போதைய போர் பயிற்சிகள் பொறுப்பற்ற தன்மையானவை. உயர்மட்ட வட கொரிய அதிகாரியாக அதன் இலண்டன் தூதரகத்தில் இரண்டாம் உயர்பதவியில் இருக்கும் ஒருவரின் கட்சி தாவல் குறித்து கடந்த வாரம் சியோல் அறிவித்திருந்தது. வாஷிங்டன் வட கொரியாவை தண்டிக்கும் விதமான தடையாணைகள் மூலமாகவும் மற்றும் அந்நாட்டை இராஜாங்கரீதியில் தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தை முடமாக்குவதன் மூலமாகவும் திட்டமிட்டு வட கொரிய ஆட்சியை நிலைகுலைக்க முயன்று வருகிறது.

அமெரிக்கா அதன் "ஆசிய முன்னிலை" மற்றும் சீனாவிற்கு எதிரான போர் முனைவின் பாகமாக தென் கொரியாவுடன் அதன் பாதுகாப்பு உறவுகளை அதிகரித்து வருகிறது. ஒபாமா நிர்வாகம் தென் கொரியாவின் கொரிய GPS வழிகாட்டி குண்டுவீசியின் திறனை அதிகரிப்பதற்காக தென் கொரியாவிற்கு இராணுவ GPS உபகரண முறையை விற்க இம்மாத தொடக்கத்தில் ஒப்புதல் வழங்கியது. வட கொரிய இராணுவ தளங்களையும் மொத்தத்தையும் ஒரேநேரத்தில் அழிக்க தகைமை கொண்ட அதன் தொலைதூர ஏவுகணை தளவாடங்களைத் தென் கொரியா விரிவாக்குமென கூறிய சியோலின் ஒரு மூத்த அதிகாரியை Yonhap செய்தி நிறுவனம் ஆகஸ்ட் 14 அன்று மேற்கோளிட்டுக் காட்டியது.

எவ்வாறிருப்பினும் மேற்கு பசிபிக்கில் உள்ள அதன் தொலைதூர ஏவுகணை தகர்ப்பு வலையத்தின் பாகமாக அமெரிக்கா அதன் Terminal High Altitude Area Defence (THAAD) உபகரண அமைப்பை தென் கொரியாவில் நிலைநிறுத்தும் என்று கடந்த மாதம் அறிவித்தது தான் மிக முக்கிய நகர்வாகும். தொலைதூர ஏவுகணைகளை ஊடுருவி அழிக்கும் THAAD உபகரண அமைப்பு பிரதானமாக பியொங்யாங்கிற்கு எதிராக அல்ல, மாறாக பெய்ஜிங்கிற்கு எதிராக நோக்கம் கொண்டதாகும். THAAD அமைப்புமுறையை எதிர்த்துள்ள சீனா உடனான அணுஆயுத போருக்கான அமெரிக்க தயாரிப்புகளின் பாகமாக அது அமைகிறது. 

தென் கொரியா அதிகரித்தளவில் அமெரிக்க போர் திட்டங்களுக்குள் ஒருங்கிணைந்துள்ள நிலையில், சியோல் மற்றும் பெய்ஜிங்கிற்கு இடையிலான உறவுகள் சீர்குலைந்துள்ளன. சீன அதிகாரிகள் அமெரிக்க-தென் கொரிய போர் சாகசங்களைக் கண்டிப்பதில் அவர்களின் வட கொரிய சமதரப்புடன் இணைந்தனர். அரசு செய்தி நிறுவனமான சின்ஹூவா, அமெரிக்கா "புஜங்களை முறுக்குவதை" விமர்சித்ததுடன், அந்நடவடிக்கை சண்டையை தூண்டும் விதத்தில் "ஒரு நச்சுசுழற்சிபோல் வன்முறை மற்றும் எதிர்வன்முறைக்கு இட்டுச் செல்லும்" என்று அது எச்சரித்துள்ளது.  

கடற்படையின் நடவடிக்கை குழு மீதான ஒரு குண்டுவீச்சு தாக்குதல் போன்ற ஒரு செயற்கையான ஒத்திகையில் சீன இராணுவம் அதன் சொந்த பயிற்சிகளை கடந்த வாரம் ஜப்பான் கடலில் நடத்தியது. சீனா மற்றும் தென் கொரியாவின் வான் பாதுகாப்பு அடையாள மண்டலங்கள் ஒன்றோடொன்று சந்திக்கும் இடத்தில் மூன்று சீன இராணுவ விமானங்கள் கடந்த வாரம் சிறிது நேரம் பறந்த போது, ஒரு தவறோ அல்லது சிறிய சம்பவமோ கூட பரந்தளவிலான ஒரு மோதலைத் தூண்டிவிடக்கூடிய சாத்தியக்கூறை அதிகரித்தது. தென் கொரிய விமானப்படை அப்பகுதியிலிருந்து "ஊடுருவல்காரர்களை" விரட்ட அதன் போர்விமானங்களை அனுப்பியது.

தென் கொரியா அமெரிக்காவுடன் மட்டுமல்ல ஜப்பானுடனும் இராணுவ உறவுகளைப் பலப்படுத்தி வருவதைக் குறித்து பெய்ஜிங் கவலைக் கொண்டுள்ளது. கொரிய தீபகற்பம் மீதான டோக்கியோவின் காட்டுமிராண்டித்தனமான 1945 க்கு முந்தைய காலனித்துவ வரலாறு உள்ளதால், சமீபத்தில் வரையில் ஜப்பானுடன் மிக நெருக்கமாக ஒருங்கிணைந்திருப்பதற்கான அமெரிக்காவின் அழுத்தத்தை சியோல் எதிர்த்தது. அமெரிக்கா அதன் வட ஆசிய கூட்டாளிகள் இரண்டையும் ஒருங்கிணைக்க தீவிரமாக உள்ளது, முதல் விடயமாக நெருக்கமான உளவுத்தகவல்களைப் பகிர்ந்து கொள்ள அழுத்தமளித்து வருகிறது, இது ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் அமெரிக்க தொலைதூர ஏவுகணை தடுப்பு அமைப்புமுறையை ஒருங்கிணைக்க அவசியமாகும்.

அமெரிக்காவால் ஊக்குவிக்கப்பட்ட பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் கீழ், ஜப்பான் மீள்இராணுவமயமாக மற்றும் சீனாவிற்கு எதிரான கிழக்கு சீனக் கடலின் சர்ச்சைக்குரிய சென்காயு/தியாவு தீவுத்திட்டுக்கள் மீது மட்டுமல்ல அப்பிராந்தியம் எங்கிலும் இன்னும் ஆக்ரோஷமான நிலைப்பாட்டை எடுக்க நகர்ந்துள்ளது. மற்றொரு வெடிப்புள்ளியாக உள்ள தென் சீனக் கடலில் சீன எல்லை உரிமைகோரல்களுக்குச் சவால்விடுக்கும் வகையில் ஆத்திரமூட்டும் "கடற்போக்குவரத்து சுதந்திர" நடவடிக்கைகளில் இணைய ஜப்பான் அதன் இராணுவ படைகளை அனுப்ப வேண்டாமென சீனா ஜப்பானை எச்சரித்திருப்பதாக வாரயிறுதியில் Japan Times குறிப்பிட்டது. ஜப்பானின் அதுபோன்ற ஒரு நடவடிக்கை ஒரு "சிவப்பு கோட்டை" வரையும்—வேறு வார்த்தைகளில் கூறுவதானால் சீனாவின் பதில் நடவடிக்கைக்கு இட்டுச் செல்லும்.

ஜனாதிபதி பராக் ஒபாமா "ஆசிய முன்னிலை" அறிவித்து ஐந்தாண்டுகளுக்கு பின்னர், வாஷிங்டனின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் ஆசிய பசிபிக் எங்கிலும் புவிசார் அரசியல் பதட்டங்களை அபாயகரமான உயரத்திற்கு இட்டுச் சென்றுள்ளன. கொரிய தீபகற்பத்தில் மோசமடைந்து வரும் நீண்டகால மோதல், அப்பிராந்தியத்தையும் மற்றும் உலகையும் வேகமாக சுற்றிசூழக்கூடிய அணுஆயுத சக்திகள் சம்பந்தப்பட்ட ஒரு சாத்தியமான போர் தூண்டுதல்களில் ஒன்று தான்.