ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

German Chancellor Merkel announces NATO intervention in Aegean Sea

ஜேர்மன் சான்சிலர் மேர்க்கெல் ஏகியன் கடலில் நேட்டோ தலையீட்டை அறிவிக்கிறார்

By Ulrich Rippert
11 February 2016

இந்தாண்டு தொடங்கியதற்குப் பின்னர் துருக்கிக்கான பல விஜயங்களில் சமீபத்தியதாக, திங்களன்று ஜேர்மன் சான்சிலர் அங்கேலா மேர்க்கெல் அன்காராவுக்கு திரும்பினார். அங்கே அவர் பிரதம மந்திரி அஹ்மெட் தாவ்டோக் மற்றும் ஜனாதிபதி ரெசிப் தாயிப் எர்டோகனைச் சந்தித்தார். அகதிகள் வரவைத் தடுப்பது மற்றும் எல்லை பாதுகாப்பு ஆகியவை மீண்டும் நிகழ்ச்சி நிரலில் இருந்தன என்றாலும், இந்த முறை ரஷ்யாவுக்கு எதிராக அரசியல் மற்றும் இராணுவ ஒத்துழைப்பு குறித்த பேச்சுக்களே இதயதானத்தில் இருந்தன.

மேர்க்கெல் மற்றும் தாவ்டோக் இருவருமே அலெப்போவில் அப்பாவி பொது மக்கள் மீதான ரஷ்ய குண்டுவீச்சுக்குக் கண்டனம் தெரிவித்ததுடன், ஒரு "மனிதாபிமான பேரழிவு" குறித்து எச்சரித்தனர். அவர்கள் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவிக்கையில், “நாங்கள் அந்த துயரைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளோம், அது அனைத்திற்கும் மேலாக ரஷ்ய தரப்பிலிருந்து குண்டுவீச்சின் காரணமாக மக்களுக்கு ஏற்பட்டுள்ளது" என்றனர். தற்போது பத்தாயிரக் கணக்கானவர்கள் வெளியேறி வருகின்ற துருக்கிய-சிரிய எல்லை பிராந்தியம், “நிஜமான அளவிலான அவலத்தை" காட்டுகிறது.

அலெப்போவை திரும்ப கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவதற்காக, ரஷ்ய வான்வழி தாக்குதல்களின் ஒத்துழைப்புடன் சிரிய அரசாங்க துருப்புகளின் ஒரு பிரதான தாக்குதலை இதற்கு முந்தைய வாரம் கண்டிருந்தது. போருக்கு முன்னதாக 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வந்த சிரியாவின் மிகப்பெரிய மற்றும் அப்பிராந்தியத்தின் மிகப்பழமையான நகரமான அலெப்போ, மத்தியத் தரைக்கடல் மற்றும் யூப்ரரேடஸ் ஆறுக்கு இடையே மூலோபாயரீதியில் முக்கிய இடத்தில் அமைந்துள்ளது.

அசாத்-விரோத கிளர்ச்சியாளர்கள் என்றழைக்கப்படுபவர்கள் சில காலமாக அந்நகரின் பாகத்தைக் கட்டுப்பாட்டில் கொண்டுள்ளனர். டமாஸ்கஸ் அரசாங்கத்திற்கு எதிரான அவர்களின் போரைத் தொடுக்க அதை அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ரஷ்ய ஆதரவுடன், அரசாங்க துருப்புகள் இப்போது இந்த பிராந்தியத்தைத் திரும்ப மீட்க தொடங்குகிற அதேநேரத்தில் அந்த இஸ்லாமிய போராளிகள் குழுக்களைத் துருக்கியுடன் இணைக்கும் ஒரு முக்கிய பாதையும் சிக்கலுக்குள்ளாகிறது.

அமெரிக்க அரசாங்கமும் மற்றும் அப்பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளிகளும், குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் துருக்கி, கோபமாக பிரதிபலிப்பை காட்டியுள்ளனர். பிரதான பாத்திரம் வகிக்கும் அல்-நுஸ்ரா முன்னணி போன்ற இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்குள் உள்ள கிளர்ச்சியாளர்களுக்கு அங்காராவும் மற்றும் வாஷிங்டனும் ஆயுதங்கள், பணம் மற்றும் ஆயுத தளவாட உதவிகளை நீண்டகாலமாக அளித்துள்ளன.

கடந்த வாரம் ஐ.நா. சபையின் சிரிய தூதர் சமாதான பேச்சுவார்த்தைகள் தொடங்கி தனது கருத்துக்களை தெரிவித்த சிறிது நேரத்திலேயே அதிலிருந்து வெளியேறினார், ரியாத்தில் சவூதி அரேபியா அதன் தரைப்படை துருப்புகளை சிரியாவில் எநிலைநிறுத்த தயாராக இருப்பதை அறிவித்துள்ளது.

அப்போதிருந்து, வெள்ளமென அகதிகள் சிரியாவிலிருந்து வெளியேறி வருகின்றனர். துருக்கிய எல்லையை அன்காரா மூடியதை அடுத்து அவர்கள் அங்கே நிறுத்தப்பட்டுள்ளனர், இது ரஷ்யாவுக்கு எதிரான ஒரு முழுமையான பிரச்சாரத்திற்காகக் கைப்பற்றப்பட்டுள்ளது. வார்த்தைஜால செய்தி ஊடகங்கள் 20 ஆண்டுக்கு முந்தைய செசென்யா போர் காலத்திய புகைப்படங்களுடன், இப்போதைய அலெப்போ படங்களையும் கலந்து வெளியிடுகின்றன. ரஷ்யாவுடன் நேரடியான மோதலுக்கு இட்டுச் செல்லக்கூடிய ஓர் இராணுவ தலையீட்டுக்கான அழைப்பு, ஒரு மிரட்டும் தொனியை ஏற்று வருகிறது.

அலெப்போ மீதான தாக்குதலைக் கொண்டு "துருக்கியர்கள் மற்றும் ஜேர்மானியர்களை... பழிவாங்குவதாக" ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டினைத் திங்களன்று குற்றஞ்சாட்டிய Die Welt பத்திரிகை, "பலவீனத்தின் காரணமாக புட்டின் போன்றவொரு போர்விருப்புள்ளவருடன் போர் புரியாமல் இருப்பது விரைவிலேயே பின்விளைவுகளை ஏற்படுத்தும்" என்று அப்பட்டமாக அச்சுறுத்தியது.

அலெப்போவிலிருந்து வெளியேறும் அகதிகளின் பரிதாபகரமான நிலையை இந்த பிரச்சாரத்திற்கான சாக்குபோக்காக கைப்பற்றிக் கொள்வது முற்றிலும் பாசாங்குத்தனமானது. அமெரிக்காவும் மற்றும் அதன் கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக சிரியாவில் உள்நாட்டு போரை ஊக்குவித்து, மில்லியன் கணக்கானவர்களை அகதிகளாக்கி உள்ளன. துருக்கிய அரசாங்கம் தற்போது அதன் குர்திஷ் சிறுபான்மையினருக்கு எதிராக போர் நடத்துகிறது, அவற்றின் காட்டுமிராண்டித்தனத்தை அலெப்போ சம்பவங்களுடன் ஒப்பிடக் கூடியதே.

Diyarbakir, Cizre மற்றும் இதர பிற வரலாற்று வர்த்தக நிலையங்களை போன்ற குர்திஷ் நகரங்கள் போர்களங்களாக மாற்றப்பட்டுள்ளன. ஆறு வாரகாலம் 24 மணிநேர ஊரடங்கு உத்தரவால் 1.3 மில்லியன் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜனவரி இறுதியில் மனித உரிமைகளுக்கான அமைப்புகள் 200 பேர் கொல்லப்பட்டதாகவும் மற்றும் 200,000 க்கும் அதிகமானவர்கள் அகதிகள் ஆக்கப்பட்டதாகவும் எண்ணிக்கை வெளியிட்டது.

“மனிதாபிமானமற்ற" ரஷ்ய தாக்குதல்களை மேர்க்கெல் அன்காராவில் கண்டித்ததுடன் பொதுமக்கள் மீது மாஸ்கோவ் குண்டுவீசுவதை அவர் குற்றஞ்சாட்டிய போதினும், அவர் துருக்கியின் கிழக்கில் நடக்கும் போரைக் குறித்து குறிப்பிடவில்லை. அவர் சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போர்களில் பாதிக்கப்பட்டவர்கள் ஐரோப்பாவிற்குத் தப்பியோடி வருவதைத் தடுப்பதற்காக எர்டோகன் அரசாங்கத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறார்.

துருக்கியில் அகதிகள் முகாம்கள் கட்டமைப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் நவம்பரில் ஒப்புக்கொண்ட 3 பில்லியன் யூரோவை விரைவாக கிடைக்கச் செய்ய மேர்க்கெல் உறுதியளித்தார். தொழில்நுட்ப உதவி மையம் (THW) அகதிகளுக்கு வகைமுறைகளைச் செய்வதில் துருக்கியின் பேரிடர் மீட்பு அமைப்பு Afad க்கு எதிர்காலத்தில் உதவி செய்ய இருக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய எல்லை பாதுகாப்பு அமைப்பு ஃப்ரொன்டெக்ஸ் (Frontex) க்கும் கூடுதல் இராணுவ தளவாடங்கள் வழங்கப்பட உள்ளன.

ஆனால், துருக்கிக்கும் கிரீஸிற்கும் இடையிலான கடல் பாதையை வரவிருக்கும் நாட்களில் நேட்டோ பாதுகாக்கும் என்பதே மேர்க்கெலின் மிக முக்கிய அறிவிப்பாகும். Tagesspiegel பத்திரிகை செய்தியின்படி, அவர் ஏனைய நேட்டோ அங்கத்தவர்களுடோ அல்லது நேட்டோ பொது செயலர் ஜென்ஸ் ஸ்டொல்டென்பேர்க் உடனோ முன்கூட்டி விவாதிக்காமலேயே அவரது துருக்கிய ஜனாதிபதியான தாவ்டோக் உடன் இதை ஒப்புக் கொண்டார்.

“இந்த முறை, அங்கேலா மேர்க்கெல் நேட்டோவை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்,” என்று Tagesspiegel எழுதியது. ஆனால் அங்கே நேட்டோவிற்குள் "அகதிகள் நெருக்கடியைக் கையாள்வதற்கு கூட்டணியை ஒருங்கிணைப்பதில் குறிப்பிட்ட ஆதரவு" இருந்தது. சான்றாக, புரூசெல்ஸில் நேட்டோ வட்டாரங்களின் கருத்துப்படி, பல அகதிகள் படகுகளின் இலக்கிடமாக உள்ள இத்தாலி எந்தவொரு ஆதரவுக்கும் நன்றிக் கடன்பட்டிருக்கும்.

“கடத்தல்காரர்களை" எதிர்கொள்வதற்கான முயற்சி தீவிரமாக பரிசீலிக்கப்படுமென செவ்வாயன்று ஸ்டொல்டென்பேர்க் தெரிவித்தார். அவர் ஏற்கனவே ஜேர்மன் பாதுகாப்பு மந்திரி ஊர்சுலா வொன் டெர் லயென் (கிறிஸ்தவ ஜனநாயக கட்சி) மற்றும் அவரது துருக்கிய பாதுகாப்பு அமைச்சரான Mehmet Fatih Ceylan உடன் தொலைபேசியில் திட்டத்தை விவாதித்திருந்தார். இன்று நேட்டோ பாதுகாப்பு மந்திரிகள் புரூசெல்ஸின் ஒரு உச்சிமாநாட்டில் அந்த பரிந்துரையை உறுதிப்படுத்த முயல்கின்றனர்.

ஏகியன் கடலில் நேட்டோ தலையீட்டுக்கான அவர்களது திட்டத்துடன், மேர்க்கெல் மற்றும் தாவ்டோக் நேட்டோ கூட்டணியின் லிஸ்பன் மாநாட்டில் 2010 இல் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு மூலோபாய கருதுகோளை தமக்கு அடித்தளமாக கொள்கின்றனர். மக்களை இடம் நகர்த்திக் கொடுக்கும் கடத்தல் வேலைகளை (human trafficking) எதிர்கொள்ளவது நேட்டோவின் கடமையாக வரையறுக்கப்பட்டது. இந்த வாதத்தைப் பயன்படுத்தி, ஏகியன் கடலில் நேட்டோவின் நடவடிக்கையானது கடத்தல்காரர்களுக்கு எதிரான ஒரு மனிதாபிமான நடவடிக்கையாக முன்வைக்கப்பட உள்ளது. ஆனால் ரஷ்யாவுடன் அதிகரித்துவரும் பதட்டங்களின் உள்ளடக்கத்தில், அது விரைவிலேயே சிரிய போரில் நேட்டோ நேரடியாக தலையிடுவதற்கு முன்நடவடிக்கையாகவும் மாறக்கூடும்.