ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

A cabinet of billionaires

Trump forms a Wall Street government to attack health care and workers’ rights

பில்லியனர்களின் மந்திரிசபை

மருத்துவக் காப்பீடு மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளைத் தாக்க ட்ரம்ப் ஒரு வோல் ஸ்ட்ரீட் அரசாங்கத்தை அமைக்கிறார்

By Patrick Martin
30 November 2016

ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் டொனால்ட் ட்ரம்ப், பொருளாதார கொள்கை மீதும் மற்றும் உழைக்கும் மக்களின் வேலைகள், வாழ்க்கை நிலைமைகள் மீதும் மிகவும் மேலாளுமை கொண்ட மந்திரிசபை பதவியான அடுத்த நிதித்துறை செயலர் பதவிக்கு, அவரது பிரச்சாரக் குழுவிற்கான நிதி தலைவராக சேவையாற்றிய முன்னாள் வோல் ஸ்ட்ரீட் வங்கியாளர் ஸ்டீவன் டி. மினுசினைத் தேர்ந்தெடுத்திருப்பதாக பிரதான அமெரிக்க பத்திரிகைகள் செவ்வாயன்று இரவு அறிவித்தன. இந்த நியமனம் புதனன்று உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

முன்னணி வலதுசாரி குடியரசு கட்சியாளரும் மற்றும் மருத்துவ கவனிப்புக்கு (Medicare) எதிர்ப்பாளருமான ஜோர்ஜியாவின் பிரதிநிதி ரொம் பிரைஸ் ஐ மருத்துவ மற்றும் மனித சேவைகளுக்கான துறையின் தலைவராக நியமித்ததை பின்தொடர்ந்து இது வந்துள்ளது. சமூக பாதுகாப்பு, மருத்துவ கவனிப்பு மற்றும் மருத்துவ சிகிச்சை உதவிகளை (Medicaid) மேற்பார்வையிடும் இத்துறை, மத்திய அரசின் உள்நாட்டு சமூக செலவினங்களில் மிகப் பெரியளவிலான தொகையைக் கணக்கில் கொண்டுள்ளது.

வர்த்தகத்துறை செயலராக பில்லியனிய ஊகவணிகரான வில்பர் ரோஸின் (Wilbur Ross) நியமனம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது, மற்றும் செனட் பெரும்பான்மை தலைவர் மிட்ச் மெக்கொன்னல் இன் மனைவியும் ஜோர்ஜ் டபிள்யு. புஷ் நிர்வாகத்தின் மந்திரிசபை அங்கத்தவருமான எலைன் சாவொ (Elaine Chao) போக்குவரத்துத்துறைக்கான செயலராக பெயரிடப்படுவார் என்ற அதிக-வதந்திகளைத் தாங்கிய பத்திரிகை செய்திகளும் அங்கே உலவுகின்றன.

ட்ரம்ப் ஏற்கனவே மற்றொரு பில்லியனரும், ஆம்வே வாரிசான டிக் டிவொஸ் இன் மனைவியுமான, பள்ளிக்கூடங்களை தனியார்மயப்படுத்த அறிவுறுத்தும் பெட்சி டிவொஸ் ஐ கல்வித்துறை செயலராக ஆக்க பெயரிட்டுள்ளார்.

இத்தகைய நியமனங்களுடன், புதிய நிர்வாகத்தினது உள்நாட்டு கொள்கைகளின் பொதுவான புறவடிவம் தெளிவாகி உள்ளது. "தரிசு நிலங்களுக்கு நீர்பாய்ச்சும்" ட்ரம்ப் இன் வீராவேச கூற்றுகளில் இருந்து விலகி, வோல் ஸ்ட்ரீட் மற்றும் வாஷிங்டனுக்கு இடையிலான ஊழல் தொடர்பு முன்பினும் நெருக்கமாகி உள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம் பல வழிகளில் அவ்விரண்டுக்கும் இடையிலான தொடர்பைப் பிரதிநிதித்துவம் செய்கிறது, நிதியியல் பிரபுத்துவத்தின் முக்கிய பிரமுகர்களோடு சேர்ந்து, 500 அல்லது அந்தளவிலான அமெரிக்க பில்லியனர்களில் மூன்று பேர்—ட்ரம்ப், ரோஸ் மற்றும் டிவொஸ் ஆகியோர்—தேசிய தலைநகரின் முதன்மை பதவிகளை ஏற்றிருப்பதையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

ட்ரம்ப் அறிவித்த பில்லியனர் அல்லாத ஒவ்வொரு மந்திரிசபை நியமனமும், ஒரு மில்லியனரோ அல்லது பல இலட்சங்களைக் கொண்ட இலட்சாதிபதியோ ஆவார். செனட்டர் ஜெஃப் செஸ்சன்ஸ், பிரதிநிதி டோம் பிரைஸ், எலைன் சாவொ மற்றும், நிச்சயமாக, 50 மில்லியன் டாலருக்கும் அதிக சொத்துக்களைக் கொண்டுள்ள கோல்டுமென் சாஸ்ச் இன் முன்னாள் பங்காளி முனுசின் ஆகியோரும் இதில் உள்ளடங்குவர்.

முனுசின், ட்ரம்ப் உயர்மட்ட பதவிக்குப் பெயரிட்டுள்ள கோல்டுமென் சாஸ்ச் இன் முதல் நபர் கிடையாது மற்றும் பிரச்சாரக் குழுவிற்கு உள்ளிருக்கும் முதல் நபரும் கிடையாது. பிரச்சாரக்குழு தலைமை நிர்வாகியும் அதிதீவிர வலது Breitbart News இன் முன்னாள் தலைவருமான ஸ்டீபன் பானன், வோல் ஸ்ட்ரீட் இன் பாசிசவாத பிரிவைப் பிரதிநிதித்துவம் செய்வாரென்று கூறினால், அதேவேளையில் முனுசின் அதன் மிகவும் பழமைவாத ஸ்தாபக அணியைப் பிரதிநிதித்துவம் செய்கிறார்.

ட்ரம்ப் அவரது நிதித்துறைக்கு தலைமை கொடுக்க கோல்டுமென் சாஸ்ச் இன் ஒரு முன்னாள் நிர்வாகியைத் தேர்ந்தெடுப்பதில், ஹென்றி பௌல்சனை நியமித்த ஜோர்ஜ் டபிள்யூ. புஷ் மற்றும் ரோபர்ட் ரூபினை நியமித்த பில் கிளிண்டனைப் பின்தொடர்கிறார். முனுசின் இன் தந்தையும் சகோதரரும் அந்நிறுவனத்தில் நீண்டகால தொழில்வாழ்வைக் கொண்டிருந்தனர், ஆனால் முனுசின் அதில் ஒரு பங்காளியாக ஆன பின்னர் வெகு விரைவிலேயே அதிலிருந்து வெளியேறி, முதலில் பில்லியனர் ஜோர்ஜ் சோரோஸ் க்காக (இவர் 2016 இல் ஒரு பிரதான கிளிண்டன் ஆதரவாளராக இருந்தவர்) வேலை செய்து, பின்னர் ஹாலிவுட் நிதியாளராக மில்லியன்களைச் சம்பாதிக்க மேற்கை நோக்கி சென்றார், அங்கே X-Men படத்தின் தனியுரிமை பெற்றது உட்பட, அவதார், கிரேவிட்டி மற்றும் இழிவார்ந்த அமெரிக்கன் ஸ்னிப்பர் உள்ளடங்கலாக பெரும் இலாபமீட்டிய சில சாகச படங்களுக்கு பக்கபலமாக இருந்தார்.

மேற்கு கரையில் அவரது மிகவும் சர்ச்சைக்குரிய நிதி செயல்பாடுகளில் ஒன்று, 2009 இல் தோல்வியடைந்த கலிபோர்னியா அடமான கடன்வழங்கும் IndyMac நிறுவனத்தை கையகப்படுத்தியதோடு சம்பந்தப்பட்டிருந்தது. அரசு நிதிபெறுபவர்களிடம் (government receivers) இருந்து IndyMac ஐ வாங்கிய ஒரு குழுவிற்குத் தலைமை கொடுத்த அவர், அதை OneWest என்று பெயர் மாற்றி, கடன் வாங்கியவர்களிடம் இருந்து இரக்கமின்றி பறித்துக் கொள்ளும் நடைமுறையை நடத்தி, அவ்விதத்தில் அதன் இருப்புநிலை கணக்கை உயர்த்திக் காட்டி, அந்நிறுவனத்தை அவர் வாங்கிய விலையை விட இரண்டு மடங்கு அதிகமாக 2014 இல் CIT க்கு விற்றார். அது குறிப்பிட்ட சிறுபான்மை பகுதிகளில் கடன் வழங்குவதை அல்லது மறுநிதியளிப்பை மறுப்பதற்காக OneWest க்கு எதிராக Fair housing குழுமம் பாரபட்சமாக நடப்பதாக குற்றஞ்சாட்டி வழக்கு தொடுத்தது.

ட்ரம்பின் நிதி-திரட்டும் நடவடிக்கைக்குத் தலைமை வகிக்க முனுசின் கடந்த கோடையில் ஒப்புக் கொண்ட போது, அவர் ஹாலிவுட் மற்றும் வோல் ஸ்ட்ரீட் வட்டாரங்களில் பரவலாக விமர்சிக்கப்பட்டார், அவை பெரிதும் ஜனநாயக கட்சியின் ஹிலாரி கிளிண்டனை ஆதரித்திருந்தன. முனுசின் அவரே கூட பிரதானமாக ஜனநாயக கட்சி வேட்பாளர்களுக்கு நன்கொடை வழங்கியவர் தான், ஆனால் ட்ரம்பை முன்னர் வியாபாரம் சம்பந்தமாக அறிந்திருந்தார். அந்நேரத்தில் அவர் Bloomberg Businessweek க்கு கூறுகையில், "அந்த நிர்வாகத்தில் சேர்ந்தால், 'அவர் ஏன் இதை செய்தார்?' என்று இதுபோல என்னைக் யாரும் கேட்கப் போவதில்லை,” என்றார்.

2010 Dodd-Frank வங்கியியல் சட்டமசோதாவை நிறைவேற்றியதன் மூலமாக ஒபாமா நிர்வாகம் மற்றும் ஜனநாயக கட்சியினர் செய்திருந்த வோல் ஸ்ட்ரீட் ஐ நெறிப்படுத்துவது போன்ற பாசாங்குத்தனத்தை முனுசின் நிதித்துறை உடைத்தெறியும் என்பது நடைமுறையளவில் நிச்சயமாக உள்ளது. Dodd-Frank இல் உள்ளடங்கியிருந்த ஒரேயொரு ஒரு சிறிய அமைப்புரீதியிலான மாற்றமான, நுகர்வோர் நிதி பாதுகாப்பு ஆணையத்தை ஸ்தாபிப்பதென்பது அனேகமாக எதிர்விதமாக மாற்றப்பட்டலாம்.

ட்ரம்ப் நிர்வாகம் வோல் ஸ்ட்ரீட் க்கு சுதந்திர அதிகாரத்தை வழங்குகின்ற அதேவேளையில், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் ஏற்கனவே ஒரு புதிய மட்டங்களை எட்டியுள்ள உழைக்கும் மக்களின் மருத்துவக் காப்பீடு மீதான தாக்குதல்களை ஆழப்படுத்தும். இது தான் பிரதிநிதி பிரஸை மருத்துவ மற்றும் மனித சேவைகளுக்கான செயலராக நியமித்ததன் முக்கியத்துவம்.

ஒரு தலைப்பு கூறுவதைப் போல, “ஒபாமாகேரை வெட்டுவதென்பது டோம் பிரைஸின் மருத்துவக் காப்பீட்டு திட்டநிரலில் சர்ச்சைக்குரிய பகுதியாக இருக்காது.” முன்னாள் மூட்டு அறுவைசிகிச்சை நிபுணரும், Newt Gingrich ஐ தேர்ந்தெடுத்த அதே செல்வவளமான அட்லாண்டா பெருநகர்புறத்திலிருந்து ஆறு முறை பிரதிநிதிகள் சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிரைஸ், முழுமையாக சந்தை அடிப்படையில் அமைந்த ஒரு மருத்துவக் காப்பீட்டு முறையை ஆதரிக்கிறார், இதன்படி முற்றிலும் போதுமானளவிற்கு இல்லாத அரசு உதவித்தொகை கணக்குகளோடு சேர்ந்து, மருத்துவக் காப்பீட்டுக்கு பணம் இருந்தால் ஒழிய ஒருவருக்கு, அவர் ஆணோ பெண்ணோ, மருத்துவக் காப்பீட்டில் "தகுதி உடையவராக" இருக்க மாட்டார்.

பிரதிநிதிகள் சபையின் வரவுசெலவு திட்டக்கணக்கு குழுவின் தலைவர் பதவிக்கு பிரைஸ் யாரை வென்றிருந்தாரோ அந்த நெருக்கமான கூட்டாளியும் குடியரசு கட்சியின் பிரதிநிதிகள் சபை தலைவருமான பௌல் ரெயன் போலவே, பிரைஸூம், வயதானவர்கள், ஏழைகள் மற்றும் மோசமான நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் உட்பட 130 மில்லியன் பேருக்கு மருத்துவ காப்பீடு வழங்கும் பெடரலின் சகல மருத்துவக் காப்பீட்டு திட்டங்கள் மீது, குறிப்பாக மருத்துவ கவனிப்பு (Medicare) மற்றும் மருத்துவ சிகிச்சை உதவி (Medicaid) மீது, ஒரு பிரதான தாக்குதலைத் தொடங்க, ஒபாமாகேரின் மக்கள்விரோத மற்றும் பிற்போக்குத்தனமான குணாம்சத்தின் சாதகமான அம்சங்களைக் கையிலெடுக்க விரும்புகிறார்.

குடியரசு கட்சி கட்டுப்பாட்டில் உள்ள காங்கிரஸ் சபை நிறைவேற்றக் கூடிய, ட்ரம்ப் சட்டமாக கையெழுத்திடக் கூடிய, மற்றும் பிரைஸ் நிர்வகிக்கக் கூடிய ஒரு வேலைத்திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சை உதவியானது (Medicaid) ஒரு பெடரல் உதவி திட்டம் என்பதிலிருந்து கைவிடப்பட்டு, 50 மாநிலங்களுக்கும் தனித்தனியான மானியங்கள் வழங்கும் திட்டமாக மாற்றப்படலாம், அது உதவிகள் மற்றும் தரமுறைகளை முற்றிலும் சுதந்திரமாக குறைப்பதாக இருக்கும். தனியார் காப்பீடு பெறுவதில் பெடரலின் பங்களிப்பு அதிகபட்சம் 3,000 டாலராக மட்டுப்படுத்தப்பட்டு மருத்துவக் காப்பீட்டு செலவுகளில் பெரும்பகுதி முதியவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், பல தொழில் வழங்குனர்களால் வழங்கப்படும் மருத்துவ சேமிப்பு கணக்குகளைப் போல, மருத்துவக் கவனிப்பானது (Medicare) ஒரு கணக்குவழக்கு திட்டமாக (voucher program) மாற்றப்படலாம்.

திட்டமிட்ட பெற்றோர் பராமரிப்பு (planned parenthood), பெண்கள் உரிமை குழுக்கள், ஆண் மற்றும் பெண் ஓரினசேர்க்கையாளர் குழுக்கள் அனைத்தும் பிரின்ஸ் நியமனத்தை ட்ரம்ப் நிர்வாகத்தின் பிற்போக்குத்தனமான திசையின் ஒரு அறிகுறியாக கண்டித்தன. இது குடும்ப கட்டுப்பாடு, கருக்கலைப்பு உரிமைகள் மற்றும் ஏனைய சமூக பிரச்சினைகளைத் தசாப்த காலங்களுக்கு அல்லது ஓர் அரை நூற்றாண்டுக்கு பின்னோக்கி கொண்டு செல்ல முன்மொழிவதாக அவை எச்சரித்தன.

பிரைஸ், எந்த சூழ்நிலையிலும் கருக்கலைப்புக்கு ஒரு விடாப்பிடியான எதிர்ப்பாளராவார். அவர் திட்டமிட்ட பெற்றோர் பராமரிப்பு திட்டத்திற்கான நிதியைக் குறைக்கும் சட்டமசோதாவையும் மற்றும் அத்துடன் ஓரின திருமணத்தை சட்டவிரோதமாக்க ஒரு அரசியலமைப்பு திருத்தத்தையும் அறிமுகப்படுத்தினார். குழந்தைப் பிறப்பைத் தடுக்க செலவிட முடியாமல் போராடும் "ஒரு பெண்ணை என்னிடம் காட்டுங்கள்" என்றவர் ஒரு செய்தியாளரிடம் சவால்விடுக்கும் அளவிற்கு, குழந்தை பிறப்பைத் தடுப்பதற்கு சில பெண்களுக்கு உதவித்தொகை அவசியப்படுகிறது என்ற கருத்திற்கு மிகவும் எதிராக இருப்பதாக ஒரு செய்தி குறிப்பிட்டது.

பாதிப்பில் உயிர்பிழைத்தவர்களுக்கான உதவிகளை சமூக பாதுகாப்பின் கீழ் யாரெல்லாம் பெறலாம், Plan B போன்ற மருந்துகளை கடைகளில் விற்கலாமா, பிறப்பு தடுப்பு மற்றும் கருக்கலைப்பு சேவைகளை மருத்துவக் காப்பீட்டு கொள்கை உள்ளடக்கி இருக்கலாமா என்பது போன்ற பிரச்சினைகளில் கொள்கைகளைத் தீர்மானிக்கும் ஒரு துறைக்கு அவர் பொறுப்பேற்க இருக்கிறார்.

இத்தகைய மந்திரிசபை நியமனங்கள், ட்ரம்ப் க்கு நல்ல நிறமளிக்க முயலும் ஜனநாயக கட்சியினரது சகல முயற்சிகளின் அபத்தத்தையும் எடுத்துக்காட்டுகிறது. வெளியுறவு கொள்கையில் அதீத இராணுவவாதத்திலிருந்து, உள்நாட்டில் வேலைகள், வாழ்க்கை தரங்கள், சமூக திட்டங்கள் மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான கடுமையான தாக்குதல்கள் வரையில், முழு நிலைப்பாட்டிலும், பிற்போக்குத்தனத்தின் ஒரு அரசாங்கமாக அது இருக்கப் போகிறது.

ட்ரம்பை நோக்கிய ஜனநாயக கட்சி விடையிறுப்பின் இரட்டை வேஷத்தன்மைக்கு, வரவிருக்கும் செனட் சிறுபான்மையினர் தலைவர் சார்லஸ் ஸ்கூமரின் (Charles Schumer) கருத்துக்களே முன்மாதிரியாக இருந்தன. மருத்துவ மற்றும் மனித சேவைகளை நிர்வகிக்க பிரதிநிதி பிரைஸைப் பெயரிட்டதைக் கண்டித்த அவர், “மருத்துவக் கவனிப்பு, கட்டுப்படியாகிற காப்பீட்டு சட்டம் மற்றும் திட்டமிட்ட பெற்றோர் பராமரிப்பு என்று வரும் போது அமெரிக்கர்கள் பிரதானமாக என்ன விரும்புகிறார்களோ அதிலிருந்து வெகுதூரம் விலகி இருக்கக்கூடியவர் என்பதை" பிரைஸ் "நிரூபித்துள்ளதாக" தெரிவித்தார். அதேநேரத்தில் "நம் நாட்டிற்கு நீண்டகால வரலாற்று சேவையை" வழங்கியவர் என்று Elaine Chao ஐ புகழ்ந்து, போக்குவரத்துத் துறையை நிர்வகிக்க அவரை தேர்ந்தெடுத்ததை அவர் பாராட்டினார்.

“ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ட்ரம்ப், வெறுமனே வரி வருவாய்களோடு இல்லாமல், மருத்துவக் காப்பீடு மற்றும் கல்வித்துறை போன்ற ஏனைய திட்டங்களை வெட்டுவதும் இல்லாமல் நிஜமான டாலர்களால் ஆதரிக்கப்பட்டிருக்கும் ஒரு பிரதான உள்கட்டமைப்பு சட்டமசோதா குறித்து தீவிரமாக இருக்கிறார் என்றால், அவரது நிர்வாகத்துடன் சேர்ந்து வேலை செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று செனட் ஜனநாயக கட்சியினர் தெரிவித்துள்ளனர்,” என்பதையும் ஸ்கூமர் சேர்த்துக் கொண்டார். உண்மையில் ஜனநாயக கட்சியினர் எல்லா சூழ்நிலைகளிலும் ட்ரம்ப் உடன் சேர்ந்து வேலை செய்ய தயாராக உள்ளனர், மேலும் அவருக்கு ஆதரவளிப்பதற்கு அவர்களால் "நேர்மறையான" எதுவொன்றையும் காண முடியவில்லை என்றாலும் கூட, அதை அவர்கள் உருவாக்குவார்கள்.