ஏனைய மொழிகளில்

Print Version|Feedback

Russian ambassador to Turkey assassinated in Ankara

துருக்கிக்கான ரஷ்ய தூதர் அங்காராவில் கொல்லப்பட்டார்

By Bill Van Auken
20 December 2016

திங்களன்று அங்காராவின் ஒரு புகைப்பட கண்காட்சி அரங்கில், துருக்கிக்கான ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லொவ் ஐ (Andrei Karlov) பணியில் இல்லாத துருக்கிய பொலிஸ்காரர் ஒருவர், அதிர்ச்சிகரமாக பார்வையாளர்களின் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்றார்.

22 வயது நிரம்பிய அந்த துப்பாக்கிதாரி அங்காரா கலக தடுப்பு பொலிஸின் (Mevlüt Mert Altintaş) பழைய உறுப்பினர் என்று அடையாளம் காணப்பட்டார். கறுப்பு உடையில், அவரது பொலிஸ் அடையாள அட்டை வைத்திருந்த அவர், கார்லொவுக்கு காண்பிப்பதற்காக “துருக்கியர்களின் பார்வையில் ரஷ்யா" என்று தலைப்பிட்ட ஒரு கண்காட்சி கலை அரங்கினுள் நுழைந்தார். அவர் ஒரு துப்பாக்கியை எடுத்து, அத்தூதரின் முதுகில் மீண்டும் மீண்டும் சுட்டார், பின்னர் அவர் இஸ்லாமிய சுலோகங்களுடன் சேர்ந்து, "அலெப்போவை குறித்து மறந்துவிட வேண்டாம், சிரியாவைக் குறித்து மறந்துவிட வேண்டாம்,” என்று துருக்கிய மற்றும் அரேபிய மொழிகளில் கூட்டத்தை நோக்கி கத்த தொடங்கினார்.

பின்னர் கனரக ஆயுதமேந்திய துருக்கிய பொலிஸ் அந்த அரங்கை முற்றுகையிட்டு, துப்பாக்கிதாரியை சுட்டு வீழ்த்தியது. அச்சம்பவத்தில் குறைந்தபட்சம் மூன்று பேர் காயமடைந்தனர்.

அந்த தூதரின் உறையவைக்கும் படுகொலையின் புகைப்படங்களும், அதற்குப் பின்னர் அவரை படுகொலை செய்தவரின் வசை மொழிகளும் காணொளியாக படம் பிடிக்கப்பட்டு, பரவலாக பரப்பப்பட்டன.

ஒபாமா நிர்வாகம் மற்றும் அமெரிக்க ஊடகங்களால் ஒரு மூர்க்கமான ரஷ்ய-விரோத பிரச்சாரம் நடத்தப்பட்டு வரும் சூழலில் இப்படுகொலை நடந்துள்ளது. இந்த பிரச்சாரத்தில், மேற்கத்திய ஆதரவிலான இஸ்லாமிய போராளிகள் குழுக்களிடமிருந்து அலெப்போ நகரை மீண்டும் கைப்பற்றுவதில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் இன் சிரிய அரசாங்கத்திற்கு இராணுவ உதவி வழங்குவதில் ரஷ்யா வகித்த பாத்திரம் ஒரு முக்கிய பங்கு வகித்தது.

நடப்பிலுள்ள போர் நிறுத்தம் குறித்தும் மற்றும் முன்னர் எதிர்ப்பாளர் வசமிருந்த அலெப்போவிலிருந்து வெளியேற்றுதல் ஆகியவை குறித்தும், அத்துடன் ஐந்தரை ஆண்டுகால சிரிய போரை இன்னும் பரந்த விதத்தில் தீர்ப்பதற்கான முன்மொழிவுகள் குறித்தும் விவாதிப்பதற்காக, துருக்கிய வெளியுறவு மந்திரி Mevlüt Çavuşoğlu மற்றும் அவரது ரஷ்ய மற்றும் ஈரானிய சமதரப்பான சேர்ஜி லாவ்ரொவ் மற்றும் மொஹம்மத் ஜாவித் ஜரீஃப் ஆகியோருக்கு இடையே மாஸ்கோவில் ஒரு திட்டமிட்ட சந்திப்புக்கு முன்னதாக, தூதரின் இந்த படுகொலை நடந்துள்ளது.

அங்காரா, மாஸ்கோ மற்றும் தெஹ்ரான் இன் கூட்டுழைப்பால், ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்கா முடுக்கிவிட்ட போரின் ஒரு மூலோபாய தோல்வியாக, அல் கொய்தா தொடர்புபட்ட போராளிகள் குழுக்களது இந்த கடைசி நகர்புற கோட்டையை இழந்ததன் மீதான மேற்கின் கோபம் தீவிரமடைந்துள்ளது. இன்றைய இந்த பேச்சுவார்த்தைகளில் வாஷிங்டன் தவிர்க்கப்பட்டுள்ளது.

நவம்பர் 2015 இல் துருக்கிய விமானப்படை சிரிய-துருக்கிய எல்லைக்கு அருகில் வான்வழி தாக்குதல்கள் நடத்தி கொண்டிருந்த ஒரு ரஷ்ய போர்விமானத்தை வழிமறித்து சுட்டுவீழ்த்தியபோது, இந்த சிரிய ஆட்சி மாற்ற நடவடிக்கையானது ரஷ்யா மற்றும் துருக்கியை போரின் விளிம்பிற்குக் கொண்டு வந்தது. இச்சம்பவம் மாஸ்கோ மற்றும் அங்காராவிற்கு இடையிலான உறவுகளை உறைய செய்வதிலும் மற்றும் துருக்கிக்கு எதிராக ரஷ்யா பொருளாதார தடைகளை விதிப்பதிலும் போய் முடிந்தது.

கடந்த ஜூனில் துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தயிப் எர்டோகன் ரஷ்ய விமானத்தை சுட்டுவீழ்த்தியதற்கு வருத்தம் தெரிவித்து, மாஸ்கோ உடன் சமரசம் கோரினார். இதை தொடர்ந்து ஒரு மாதத்திற்குப் பின்னர் ஒரு தோல்வியுற்ற இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பு சதி நடந்தது, இதற்கு எர்டோகனின் ஆதரவாளர்கள் அமெரிக்காவையும், பென்சில்வேனியாவில் வசிக்கும் எதிர்ப்பு மதகுரு பெத்துல்லா கூலன் தலைமையிலான இயக்கத்தையும் குற்றஞ்சாட்டினர். அந்த ஆட்சிக்கவிழ்ப்பு சதியை தொடர்ந்து மாஸ்கோ மற்றும் அங்காராவுக்கு இடையிலான உறவுகள் நெருக்கமானதுடன், கிழக்கு அலெப்போவில் இருந்து வெளியேற்றுவதற்கான திட்டத்தை மத்தியஸ்தம் செய்யும் இந்த சமீபத்திய கூட்டுறவுக்கு இட்டுச் சென்றுள்ளது.

ரஷ்ய மற்றும் துருக்கிய அரசாங்கங்கள் இரண்டுமே, அவ்விரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை தொந்தரவுக்கு உள்ளாக்கும் நோக்கில் கார்லொவ் இன் படுகொலையை ஒரு "ஆத்திரமூட்டலாக" கண்டித்தன. இதற்கு யார் பொறுப்பு என்பது மீதான அவற்றின் மதிப்பீட்டில் அவை கருத்து வேறுபட்டிருப்பதாக தெரிந்தாலும், இரண்டு அரசாங்கங்களும் ஒருமாதிரியே அந்த படுகொலையை ஒரு பயங்கரவாத தாக்குதலாக வர்ணித்தன.

“ஒரு குற்றம் நடத்தப்பட்டுள்ளது, அது சந்தேகத்திற்கிடமின்றி ரஷ்ய-துருக்கிய உறவுகள் இயல்பாவதைத் தடுக்கும் நோக்கத்திலான மற்றும் ரஷ்யா, துருக்கி, ஈரான் மற்றும் ஏனையவர்களால் செயலூக்கத்துடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சிரிய சமாதான நிகழ்வுபோக்கை கெடுக்கும் நோக்கத்திலான ஒரு ஆத்திரமூட்டலாகும்,” என்று ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின் கிரெம்ளினில் ஒரு தொலைக்காட்சி சந்திப்பில் தெரிவித்தார். இக்கூட்டத்தில் பேசுகையில், “இந்த கொலையாளியின் கரங்களை வழிநடத்தியவர்கள் யார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்,” என்பதையும் புட்டின் சேர்த்துக் கொண்டார். வெளியுறவுத்துறை மந்திரி சேர்ஜி லாவ்ரொவ், SVR வெளிநாட்டு உளவுத்துறை சேவையின் தலைவர் சேர்ஜி நாரிஷ்கின் (Sergei Naryshkin), உள்நாட்டு FSB பாதுகாப்பு சேவைகளின் தலைவர் அலெக்சாண்டர் போர்ட்னிகொவ் (Alexander Bortnikov) ஆகியோரும் பங்கெடுத்திருந்தனர்.

துருக்கிய ஜனாதிபதி எர்டோகன் திங்களன்று இரவு ஒரு தொலைக்காட்சி உரையில் பேசுகையில், “அலெப்போ சம்பந்தமாக எங்களிடையே நல்லிணக்கம் நிலவுகின்ற நிலையில்" இந்த படுகொலை ஓர் "அத்திரமூட்டலாகும்" என்று கூறியதுடன், அவர் புட்டினுடன் பேசுகையில் "நாம் ரஷ்யாவுடன் நமது உறவுகளைப் பேண தீர்மானகரமாக உள்ளோம்,” என்பதை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

மாஸ்கோ இல் ரஷ்யா, துருக்கிய மற்றும் ஈரானிய மந்திரிகளுக்கு இடையிலான திட்டமிட்ட முத்தரப்பு சந்திப்பு செவ்வாயன்று தொடர்ந்து நடக்கும் என்பதை இருதரப்பும் தெளிவுபடுத்தின.

அலெப்போ மற்றும் சிரியா குறித்த துப்பாக்கிதாரியின் குறிப்புகளும், ஜிஹாத் குறித்து அரபிக்கில் அவர் கூச்சலிட்டமையும், அவர் கடந்த பல வாரங்களாக அலெப்போவின் மலைப்பூட்டும் பின்னடைவுகளால் பாதிக்கப்பட்டுள்ள இஸ்லாமிய போராளிகள் குழுக்களுக்கு ஆதரவாகவோ அல்லது ஒருமித்தோ செயல்பட்டு வந்தார் என்பதை பலமாக எடுத்துக்காட்டின.

இஸ்லாமிய அரசு (ISIS) அந்த படுகொலை உடனான எந்தவொரு தொடர்பையும் மறுப்பதாகவும், அதேவேளையில் அலெப்போவில் அமெரிக்க ஆதரவிலான படைகளது முதுகெலும்பாக இருந்துள்ள சிரிய அல் கொய்தா இணைப்பு அமைப்பான அல் நுஸ்ரா முன்னணியுடன் தொடர்புபட்ட வலைத் தளங்கள் அப்படுகொலையை வரவேற்பதாகவும் சில செய்திகள் குறிப்பிட்டன.

எவ்வாறிருப்பினும் கலகம் தடுப்பு பிரிவின் அந்த பொலிஸ்காரர் உண்மையில் கடந்த ஜூலை ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்குப் பின்புலத்தில் இருந்ததாக அரசாங்கம் குற்றஞ்சாட்டிய கூலனிய இயக்கத்தின் (Gulenist movement) ஓர் அங்கத்தவர் என்பதை நிரூபிக்கும் நோக்கில், துருக்கிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள் என்பதை அவர்கள் எடுத்துரைத்தனர். கூலனிஸ்டுகளுடன் தொடர்புபட்டவர்களாக குற்றஞ்சாட்டும் ஆயிரக் கணக்கான படைத்துறைசாரா ஊழியர்கள், ஆசிரியர்கள், பொலிஸ் மற்றும் இராணுவ உறுப்பினர்களை துருக்கிய அரசாங்கம் கடந்த பல மாதங்களாக களையெடுத்துள்ளது.

துப்பாக்கியால் சுட்ட பின்னர் அந்த துப்பாக்கிதாரி கூச்சலிட்ட சுலோகங்கள் வெறுமனே அவரது உண்மையான தொடர்புகளை மூடிமறைக்கும் நோக்கில் செய்யப்பட்ட திசைதிருப்பல்கள் என்பதாக அரசு அதிகாரிகள் கூறுகின்றனர். அந்த படுகொலையை கூலன் கண்டித்திருப்பதாக கூறிய அந்த மதகுருவின் ஒரு செய்தி தொடர்பாளர், அவர்தான் இதற்கு பொறுப்பு என்ற கருத்துக்களை "நகைப்பிற்கிடமானது" என்றார்.

உயரடுக்கு பொலிஸ் பிரிவின் ஓர் அங்கத்தவர் சிரிய அல் கொய்தா அங்கத்தின் ஒரு அனுதாபி அல்லது நடவடிக்கையாளர் என்பதை மறுப்பதற்கு, துருக்கிய அரசாங்கம் வெளிப்படையாக நோக்கம் கொண்டுள்ளது. சிரியாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் வெளிநாட்டு போராளிகளை அனுப்புவதில் அங்காரா அதன் பாதுகாப்பு படைகளது ஒத்துழைப்புடன், மறைமுகமாக அல் நுஸ்ரா முன்னணிக்கும் மற்றும் அதுபோன்ற இஸ்லாமிய போராளிகள் குழுவிற்கும் நிறைய ஆதரவளித்திருந்தது.

இந்த படுகொலைக்கான உடனடி பொறுப்பு யாருடையது என்பதில் எந்தவொரு உடன்பாடின்மைகள் இருந்தாலும், மாஸ்கோ மற்றும் அங்காராவின் முன்னணி அரசியல் பிரமுகர்கள் அந்த படுகொலைக்கு அமெரிக்கா மற்றும் மேற்கின் மீது பழிசுமத்தினர்.

எர்டோகனின் தலைமை ஜனாதிபதி ஆலோசகர் Ilnur Cevik திங்களன்று கூறுகையில், “துருக்கி மற்றும் ரஷ்யாவிற்கு இடையே எல்லா துறைகளிலும் அதிகரித்துவரும் உறவுகள் மற்றும் ஆழ்ந்த கூட்டுறவானது, மேற்கில், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜேர்மனியில் கோபத்தை உருவாக்கி உள்ளது. அலெப்போவின் அப்பாவி மக்களைக் காப்பாற்றுவதற்கான அவ்விரு நாடுகளது கூட்டு முயற்சிகள் சமீபத்திய சான்றுகளாகும். இந்த உறவுகளை சீர்குலைக்க மேற்கு முயலும் என்பது தவிர்க்கவியலாதது. தூதரைப் படுகொலை செய்ய பெத்துல்லா கூலனின் பயங்கரவாத அமைப்புடன் இணைப்பு கொண்ட ஒரு பொலிஸ்காரரை அவர்கள் பயன்படுத்தியது வருந்தத்தக்கதாகும்,” என்றார்.

ரஷ்ய சட்டமன்றமான டூமாவின் ஓர் அங்கத்தவரும், அதன் வெளியுறவு விவகாரங்கள் குழுவின் முன்னாள் தலைவருமான அலெக்சி புஷ்கோவ் (Alexei Pushkov), ரஷ்யா அலெப்போவில் "படுகொலைகள்" மற்றும் "இனப்படுகொலைகளை" ஒழுங்கமைத்து வருகிறது என்ற மேற்கின் பிரச்சாரம் இத்தாக்குதலை தூண்டுவதற்கு உதவியதாக மாஸ்கோவிலிருந்து குற்றஞ்சாட்டினார்.

புஷ்கோவ் ரஷ்ய தொலைக்காட்சியில் கூறுகையில், “மேற்கத்திய ஊடகங்களால் முன்னெடுக்கப்படும் அலெப்போவைக் குறித்த விஷமப் பிரச்சாரத்தின் விளைவுகளாகும்,” என்றார். “துல்லியமாக இந்த படுகொலையானது, ரஷ்யா செய்திராத பாவங்கள் மற்றும் குற்றங்கள் அனைத்திற்கும் அந்நாட்டின் மீது பழிசுமத்துவதற்கான முயற்சிகளைக் கொண்டு வந்துள்ளது. இவை அலெப்போ போராளிகளது குற்றங்களை முற்றிலுமாக உதறிவிடுவதுடன், இந்நகரில் என்ன நடந்து கொண்டிருக்கிறதோ அதுதான் பயங்கரவாத நடவடிக்கைக்கு பங்களிப்பு செய்தது என்ற நிலையில், அதை குறித்து ஒரு சிதைந்த மற்றும் பொய்யான சித்திரத்தை உருவாக்குகிறது,” என்றார்.

ரஷ்ய மேல் சபையின் இராணுவம் மற்றும் பாதுகாப்புக் குழு துணை தலைவர், செனட்டர் Frantz Klintsevich, அந்த படுகொலை "ஒரு திட்டமிட்ட நடவடிக்கை" என்று குற்றஞ்சாட்டி இன்னும் ஒருபடி மேலே சென்றார்.

“அவர் இந்த புகைப்பட கண்காட்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரியும். அது ISIS ஆக இருக்கலாம், அல்லது எர்டோகனை தொந்தரவுக்குள்ளாக்குவதற்கு முயலும் குர்திஷ் இராணுவமாக இருக்கலாம்,” என்றார். “ஆனால் [அதில்] அதற்குப் பின்னால் வெளிநாட்டு நேட்டோ இரகசிய சேவைகளின் பிரதிநிதிகள் இருந்திருக்கலாம்—மற்றும் பெரிதும் அதற்கான சாத்தியக்கூறு உள்ளது,” என்றார்.

அந்த படுகொலையை முன்னெடுத்தவரின் நிலைப்பாடு என்னவாக இருந்தாலும், ரஷ்யா மற்றும் துருக்கிக்கு இடையிலான உறவுகள் மேற்கொண்டு உறுதிப்படுவதற்கான சாத்தியக்கூறு வாஷிங்டன் உடனான பதட்டங்களை அதிகரிக்க மட்டுமே சேவையாற்றும். வரவிருக்கின்ற நிர்வாக மாற்றங்கள் என்னவாக இருந்தாலும், மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்கத்தைப் பலப்படுத்துவதற்கே வாஷிங்டன் பொறுப்பேற்றுள்ளது.